இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2015.03.15
திருமதி ஆயிஷா இப்றாஹீம் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை என்பன பற்றிக் கூறுங்கள்?

1963 ஜனவரி 23 ஆம் திகதி ஆசிரியப் பயிற்சியை ஆரம்பித்து 1964 டிசம்பர் 31 ஆம் திகதியில் பயிற்சி முடிவடைய 1965.01.01 இல் அயலூரான கே/ கிரிங்கதெனிய பதுரியா பாடசாலைக்கு நியமனம் பெற்றேன். பின் தொடர்ந்தும் 1972.01.02 இல் கிரிங்கதெனிய அந்நூர் வித்தியாலயத்திலும், 1978 இல் கனேதன்னை முஸ்லிம் வித்தியாலயத்திலும் சேவையாற்றி அதன் பின் சொந்த கிராமமான ஹிங்குலோயா ஸாஹிரா பாடசாலையிலும் சேவை செய்து 2002 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். பாடசாலைகளில் 05 முதல் 11 வரையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டினேன். சொந்த ஊரில் பாலர் பகுதியைத் தெரிவு செய்தேன். திருப்தியான சேவை செய்தேன். பல வருடங்கள் உதவி பகுதி தலைவியாக திறம்பட செயலாற்றினேன்.

இன்றும் எனது மாணவர்கள் என்னை மிகவும் கௌரவிக்கின்றனர். அது எனக்கு பெருமிதத்தையும், மன நிம்மதியையும் தருகின்றது.

எனது உடன் பிறப்புக்கள் என்னுடன் சேர்த்து பத்துப் பேர். நான் நான்காவது பிள்ளை. மூன்று மூத்த சகோதரிகள் இளம் வயதிலே காலமாகி விட்டனர். என்னுடன் அடுத்த தங்கை ஒரு மனையியல் ஆசிரியை அவரும் ஓய்வு பெற்றுள்ளார். அடுத்த தங்கை O/L விஞ்ஞானப் பிரிவில் தேறியவர். அடுத்த தங்கைகள் இருவருமே O/L பரீட்சையில் தேறியவர்கள். தம்பிமார் இளமையிலே காலம் சென்றுவிட்டனர்.


எனக்கு பேரன்மார் இருவரும், பேத்திமார் நால்வரும் உள்ளனர். எனது பிள்ளைகளோடும், சகோதரிகளோடும் இணைந்து கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றேன். எனது பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடிய பங்காற்றியவர்கள் தாய் தந்தையருக்குப் பின் எனது சகோதரிகளே. இன்றும் அவர்கள் என்னையும், அவர்களை நானும் அனுசரித்தே வாழ்கின்றோம். எனது குடும்ப முன்னேற்றத்திற்கு கூடுதலான உதவிகளைப் புரிந்தவர் எனது கணவர்தான். 2000 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை முடித்து வந்து மூன்று மாதங்களுக்குள் காலமானார்.
03. பல வருடங்கள் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்றுள்ளீர்கள். உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
பல வருட ஆசிரிய சேவையின் போது பல வகையான குண இயல்புடைய ஆசிரிய ஆசிரியைகள், அதிபர்கள், பகுதித் தலைவர், வகை வகையான குணாதிசயங்களையுடைய மாணவர்களைச் சந்தித்தேன். ஆனால் எவ்வித சலனமுமின்றி சேவை செய்தேன். அவர்களும் துணையாகவே இருந்தனர். இன்றும் பாடசாலைக்குச் சென்று வரும் பழக்கம் எனக்குண்டு. வறிய மாணவர்களுக்கான சில தேவைகளை செய்து வருகிறேன். சேவைக் காலத்தில் 5,11,13 ஆம் ஆண்டு மாணவர்களின் பெறுபேற்றை கௌரவப்படுத்த தனவந்தர்களின் உதவியோடு பரிசில்கள் வழங்கும் முறையொன்றை ஏற்பாடு செய்து வந்தேன். இனியும் தொடர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
04. உங்கள் ஓய்வு நேரங்களில் எவ்வகையான அல்லது யாருடைய புத்தகங்களை வாசிக்கிறீர்கள்?
ஆரம்ப காலத்தில் கல்கி, விகடன் போன்றவற்றோடு இஸ்லாமிய புத்தகங்கள், இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் எந்தப் புத்தகங்களாயினும் சரி, கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றை வாசிப்பேன். சமூக சேவைகளுக்கு அழைக்கும் போது செல்வேன்.
05. பிறந்த ஊரின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக 'பொற்கலசம்' எனும் நூலை வெளியிட்டுள்ளீர்கள். அந்த நூல் வெளியீடு பற்றிக் கூறுங்கள்?
பொற்கலசம் என்ற நூலை வெளியிட முதல் ஆர்வம் ஊட்டிய எனது ஆங்கில ஆசிரியரும், வித்தியாதிபதியுமான னு.ஆ.ளு. மரிக்கார் அவர்களை பெருமையுடன் நினைவுகூரிக் கொள்கிறேன். அவர்தான் பள்ளிவாசல் சம்பந்தமான தகவல்களையும் வரலாற்றையும் சொன்னவர். மூத்த மத்திசமும் கொடையாளருமான அல்ஹாஜ் எம்.எல்.எம். சமின் (மூத்த மத்திசங்களில் ஒருவர் இன்றும் சுகமாக வாழ்கிறார். அவரது நீண்ட ஆயுளுக்காக ஏக நாயனைப் பிரார்த்திக்கின்றேன்)
அடிமனதில் ஸாஹிராவைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்ட போது, மரிக்கார் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் 1932ம் ஆண்டு பாடசாலையின் நான்காவது தலைமை ஆசிரியர் திரு. எட்வட் காலமது அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் அதில் மாணவ மாணவிகள் 11 பேரும் இருந்தனர். அந்த படத்தை அவரிடமிருந்து வாங்கி வரும்போது பாடசாலை அருகே சபுமல் இன்டஸட்ரீஸ் அல்ஹாஜ் முஸ்தபா கமால்தீன் அவர்களின் மகன் சிறுதொகை பணத்தைத் தந்து உதவி செய்தார். அப்போது புகைப்படத்தை ஸ்டூடியோவில் கொடுத்து சரிசெய்து கொண்டேன். அதன்பின் 2006 தொடக்கம் 2011 மே மாதம் வரை நண்பிகள், சகோதர ஆசிரியைகள், பழைய மாணவர்கள், ஊர்ப் பிரமுகர்கள், மூத்த தாய்மார்கள் ஆகியோரிடம் சென்று தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன்.
இந்நூலை எழுத ஆர்வமூட்டியதின் பங்கு 1999 இல் ஆரம்பித்து 2012 வரை இயங்கிய பழைய மாணவிகள் சங்கத்தையே சாரும். அதன் அங்கத்தவர்கள் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், பழைய மாணவ மாணவிகள், தனவந்தர்களின் பங்களிப்பும் எனக்கு பொற்கலசம் நூலை எழுத உதவியதெனலாம்.
06. பொற்கலசம் நூலை வெளியிட்ட போது நீங்கள் எதிர் கொண்ட சவால்கள் என்ன?
சவால்கள் இல்லாமல் சாதனை இல்லை. சுமுகமான முறையில் சமாளித்து புத்தகத்தை வெளியிட்டேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
07. நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?
ஆம். நான் எதிர்பார்த்ததைவிட பூரண வெற்றி எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது.
08. பொற்கலசம் நூல் வெளியீட்டுக்குப் பின், வேறு நூல் வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபடவில்லையா?
ஆர்வமுள்ளது. பொற்கலசம் நூல் போன்று இன்னொரு நூலை வெளியீடு செய்ய பல்வேறுபட்ட தகவல்களைச் சேகரிக்கிறேன். என்னால் எழுத முடியாது போனால் எழுதுவதற்கு யாரிடமாவது சேகரிக்கும் தகவல்களைக் கையளிக்கவுள்ளேன். அல்லாஹ்வின் நாட்டம் எப்படியோ அப்படியே நடக்கட்டும். அல்ஹம்துலில்லாஹ்.
இதுதவிர நான் எனது ஓய்வு நேரங்களை புத்தகங்கள் வாசிப்பதற்காகவும், பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாசிப்பதற்காகவும் பயன்படுத்துவேன். இந்தப் பழக்கத்தினால் ஏற்பட்ட அருட்டுணர்வினால் அவ்வப்போது ஒரு சில ஆக்கங்களையும் எழுதியுள்ளேன். எதிர்வரும் காலங்களில் முடிந்தால் அவற்றை ஒரு நூலாக வெளியிட முயற்சி எடுப்பேன்.
09. உங்கள் பல வருட ஆசிரியப் பணி அனுபவத்தின் அடிப்படையில்; இன்றைய மாணவர்களின் இலக்கியப் போக்கு, எழுத்துத் துறை பற்றி என்ன கூறப் போகிறீர்கள்?
இலக்கியத் துறையில் கல்லூரி மாணவ மாணவிகள் பல துறைகளிலும் கதை, கட்டுரை, கவிதைப் போட்டிகள் போன்றவற்றிலும் சிறுகதை எழுதுவதிலும் ஆர்வமுடையவர்களாக திகழ்வது போற்றக் கூடியது என்பதை உணர்கிறேன்.
10. படைப்புகளுக்கான விமர்சனங்களை எப்படி நோக்குகிறீர்கள்?
படைப்புக்களை ஏற்றுக் கொண்டு திறந்த மனத்துடன் விமர்சிப்போரின் விமர்சனங்களை வரவேற்கிறேன்.
11. எதிர்காலத்தில் எத்தகைய பணிகளில், சமூக சேவைகளில் ஈடுபட உத்தேசித்துள்ளீர்கள்?
எதிர்காலத்தில் வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு என்னால் இயன்ற உதவிகளை எனது ஊர் தனவந்தர்களின் உதவியோடு செய்யவுள்ளேன். எமது கிராமத்தில் பெண்களுக்கான நூல் நிலையமொன்றை யாரும் நிறுவித் தருவார்களா என்ற ஆதங்கம் என் உள்ளத்தில் நீண்டகாலமாக உள்ளது. வசதி படைத்தோரை அணுக வேண்டும் என்பதும் எனது திட்டம். தற்போதுள்ள ழு.பு.யு அதனை நிவர்த்தி செய்யுமென எதிர்பார்க்கிறேன்.
12. வளர்ந்துவரும் பெண் எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்பவது என்ன?
பல துறைகளில் ஈடுபடும் பெண்கள் நம்மத்தியில் உள்ளனர். அவரவர்களின் துறையில் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஊர் வரலாறு, கண்டுபிடிப்புக்கள் என்பனவற்றை வெளிப்படுத்த வேண்டுமென்பது எனது ஆசை.
13. திருமணம், பெண் எழுத்தாளர்கள் பலருக்கு கைவிலங்கு போட்டுள்ளது என்கிறார்களே. இதுபற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?
கணவர், பிள்ளைகளைக் கவனிப்பதோடு ஏனைய நேரங்களை திட்டமிட்டுக் கொண்டால் கைவிலங்கு தானாக அவிழ்ந்துவிடும். எதற்கும் முயற்சி தேவை.
14. படைப்பாளியின் திறமை எவ்வாறு கணிக்கப்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?
படைப்பாளிகளின் ஆக்கங்கள் எவ்வளவு தூரம் சமூகத்துக்கு பயன்படுகிறது என்பதைப் பொறுத்து அவர்களின் திறமையைக் கண்டுகொள்ளலாம்.
15. உங்கள் புத்தக வெளியீடுகளுக்கு உதவியாக அல்லது உந்து சக்தியாக இருந்தவர்கள் பற்றிக் கூற முடியுமா?
அல்ஹாஜ் எம்.எல்.எம் சமீன், டி.எம்.எஸ். மரிக்கார் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். அத்தோடு தனவந்தர்கள், அதிபர், பள்ளி பரிபாலன சபையினர், செரண்டீப் விளையாட்டுக் கழகம். புத்தக வெளியீட்டுக்கான செலவில் பாதியை தந்துதவியவர்கள் தனவந்தர்களே. அவர்களுடன் எம்.ஜே.எம். பிரிண்டர்ஸ் உரிமையாளரான எனது அன்பு மாணவன் எம்.ஜே.எம் முஸம்மில் மற்றும் மௌலவி அஸ்மி, மாணவன் அஸ்மத் ஆகியோர் கணனி வடிவமைப்பைச் சிறப்பாக செய்து தந்தனர்.
இந்நூல் வெளியீட்டின் வெற்றிக்கு உதவியவர்களில் அதிபர் ஜனாப் நிஸாருதீன், சகோதரி ஆயிஷா ஹாஷீம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புத்தக வடிவமைப்பை ஆயிஷா ஹாஷீம் அவர்கள் செய்து தந்தார்கள். புத்தகத்துக்குப் பெயர் சூட்டியது எனது உற்ற நண்பி வசீலா இப்றாஹிம் ஆசிரியை என்பதையும் மறக்க முடியாது. இவர்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
16. எதிர்காலத்தில் எவ்வாறான நூல்களை வெளியிட உத்தேசம் கொண்டுள்ளீர்கள்?
நூல்களை வெளியிட ஆசை நிறையவே இருக்கிறது. ஆனாலும் வயதும் கூடிக் கொண்டே செல்கிறது. இதன் பின்தான் சிந்தித்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
17. மறக்க முடியாத சம்பவம் ஏதாவது உண்டா?
பாடசாலையில் நான் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது வகுப்பு ஆசிரியையின் கவனக் குறைவால் அச்சம்பவம் ஏற்பட்டது. அதாவது எனது பெயரைக் கொண்ட இன்னும் ஒரு மாணவி எனது வகுப்பில் இருந்தார். அவரின் புள்ளிகளை எனது பெயருக்கு குறிப்பிட்டு என்னை பரீட்சையில் தவறவிட, நான் ஓடி வந்து பெற்றோரிடம் கூற, எனது தந்தை விடைத் தாள்களை ஒத்துப் பார்த்ததில் நானே சித்தியடைந்திருந்தேன். அதே நிலை நியமனக் கடித விடயத்திலும் ஏற்பட்டது. எனது நியமனக் கடிதம் அவரது வீட்டுக்கே சென்றது. அவர் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டவர் என்று எனது உறவினரான எம்.சீ.எம்.எஸ். மரிக்கார் என்பவர் தபால்காரனை எமது வீட்டுக்கு அழைத்து வந்து ஒப்படைக்க வைத்தார். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.
18. இதுவரை பெற்ற பரிசுகள், பட்டங்கள் விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
படிக்கும் காலங்களில் பல பரிசுகள் பெற்றுள்ளேன். பொற்கலசம் வெளியிட்டமைக்காக பாடசாலை சார்பில் பழைய மாணவர் சங்கச் செயலாளர், பழைய மாணவிகள் சங்க இரண்டாவது அங்குராப்பணக் கூட்டம் 2011.02.24 ஆம் திகதி நடை பெற்ற போது எனக்கு விருதொன்று அளிக்கப்பட்டது.
19. இறுதியாக என்ன சொல்லப் போகிறீர்கள்?
உங்களுக்கு எனது மனமான நன்றிகள். உங்கள் பூங்காவனத்தில் அறிவு மலர்கள் என்றென்றும் பூத்துக் குலுங்க வேண்டும். உங்களின் இச்சேவை நீண்ட காலம் தொடர வேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்