பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, March 29, 2020

40. காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2020.01.26

காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் பாத்திமா  முகம்மத். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் இலக்கிய உலகிற்குள் வந்தவள். எனது கணவர் ஏ.எம்.முகம்மத். இவர் ஓய்வு பெற்ற அதிபர். எனக்கு ஒரே மகன். இவர் டாக்டராகப் பணிபுரிகிறார்.


உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். பின் அரச முகாமைத்துவ உதவியாளராக கிட்டத்தட்ட முப்பத்து மூன்று வருடங்கள் கடமை  செய்து சென்ற வருடம் ஓய்வு பெற்றேன். சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவை எனது அரச பணிக்கான தளங்களாக அமைந்தன.


நீங்கள் எழுத்துத் துறைக்குள் காலடி வைத்த சந்தர்ப்பம் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக, எப்போது ஆரம்பித்தது?

நான் பாடசாலைக் காலத்திலேயே கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டேன். எனது தந்தை மர்{ஹம் காசீம் முகம்மத் வாழும் காலத்தில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள். அதேபோல எனது கல்லூரியின் தமிழ் ஆசிரியர்களான திருமதி அகஸ்டீன் ஜோசப், எம்.எஸ்.எஸ்.ஹமீட், மருதமைந்தன் ஆகியோர்கள் எனது திறமை கண்டு என்னை மென்மேலும் ஊக்குவித்தார்கள். கல்லூரியில் எட்டாம் ஆண்டு படிக்கும் போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றதொரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் பிரதான ஆசிரியராக நானே இருந்து திறம்பட நடாத்தி கல்லூரி மட்டத்திலும் கல்வித் திணைக்கள மட்டத்திலும்  பாராட்டப்பட்டேன். 1972ம் ஆண்டு மிகச் சிறிய வயதில் தேசிய பத்திரிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மற்றும் உள்ளுர் சஞ்சிகைகள் என்பவற்றில் நிறையவே எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன.


உங்களது சிறுகதைப் படைப்புக்கள் பற்றிக் கூற விரும்புவது? சிறுகதைகளை எழுதும் போது அவற்றுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?

நான் அடிக்கடி கூறுவேன் ஒரு எழுத்தாளன் என்பவன் கற்பனையில், ஆழமாய் சிந்திப்பதில், பரந்து சிந்திப்பதில், மற்றவர் துயரங்களில் அல்லது கஷ்டங்களில் தன்னையும் கற்பனை மூலம் ஆற்றுப்படுத்தி அதுபற்றி தனக்குள்ளே வினா எழுப்பி அதற்காக விடை காணத் துடிப்பதில் விளைவதுதான் கவிதை, அல்லது சிறுகதை. அந்தவகையில் நான் சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு காட்டுவதனால் பலரது துயரம், கஷ்ட நிலை என்பவற்றில் எனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்துவேன். அவர்களது கண்ணீர் களையப்படத்தக்கதாக கருவொன்றை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு சிறுகதைகளை உருவாக்குவேன். முற்போக்கான சீர்திருத்தங்களை இந்தச் சமூகத்தில் கொண்டுவரத் தக்கதாக எனது ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதையே எனது எதிர்பார்ப்பாகக் கொள்வேன்.


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? 

இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

01. அத்தனையும் முத்துக்கள் (சிறுகதை) 2003
02. பொய்த் தூக்கங்கள் (சிறுகதை) 2004
03. நா இடற வாய் தவறி (கவிதை) 2009

என்பனவே அவையாகும். இன்ஷா அல்லாஹ் நான்காவது நூல் விரைவில் வெளிவரலாம்.


உங்களது முதலாவது நூல் வெளியீட்டின் போது உங்களது மனநிலை எவ்வாறிருந்தது?

எனது சிறுகதைகளை நூலுருவாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம்  எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. எனினும் எனது கணவர், மகன், மற்றும் வாசகர்கள், இலக்கிய அன்பர்கள் இந்த எண்ணத்தை எனக்கு ஊட்டினார்கள். அதிலும் நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் பாவலர் சாந்திமுகைதீன்  ஹாஜியார் என் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸற். அஹ்மத் முனவ்வர் என் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பைச் செய்த என் அன்புச் சகோதரராவார். இந்த எனது முதலாவது நூல் வெளியீட்டில் பொருளாதாரத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆனால் வெளியீட்டின் வெற்றியைப் பற்றியே சிந்தித்தேன். நான் பிறந்தவூரான காத்தான்குடி, இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு ஊர். இஸ்லாமியப் பெண்ணான என்னை இந்தச் சமூகம் அங்கீகரிக்குமா எனப் பயந்தேன். இறை உதவியால் நான் எதிர்பார்த்ததை விடவும் பல மடங்கான வெற்றியாக எனது புத்தக வெளியீடு அமைந்தது. ஊர் முழுமையாக ஒத்துழைத்தது. அல்ஹமதுலில்லாஹ்.


'அத்தனையும் முத்துக்கள்' என்ற உங்களது சிறுகதை நூல் பற்றி என்ன சொல்வீர்கள்?

இது எனது முதலாவது நூற் பிரசவம். இதிலமைந்த பெரும்பாலான கதைகள் தேசிய மற்றும் பிரபல்யமான பத்திரிகைகளில் வெளிவந்தவை. பொதுவாக இதிலுள்ள அநேகமான சிறுகதைகள்  என் இளமைக் காலத்தில் அப்போதிருந்த மனநிலையில் எழுதப்பட்டவை. காதல் தோல்வி, பொதுவாக பெண்கள் சீதனத்தைக் காரணம் காட்டி ஏமாற்றப்படுதல், பலதார திருமணங்களில் சமூகத்தில் செய்யப்படும் துஷ்பிரயோகங்கள் என்பன போன்ற நிகழ்வுகள் எனது எண்ணக் கோப்பில் ஏற்படுத்திய தாக்கங்களினால் பிரசவமானவை. என் முழு உணர்வுகளையும் ஒன்றாய்த் திரட்டி எழுத்துருக்களைத் தாங்கிய நூல் இது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியை திருமதி றூபி வலன்ரீனா பிரான்ஸிஸ் இந்நூலைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். ஷஷபாத்திமாவின் சிறுகதைகள் சிறுகதை என்ற வரம்பிற்குள் சட்டமிட்டு மாட்ட முடியாதவை. மன உணர்வுகளால் ஆன வெளிப்பாடுகளே அவைகள்' என்று. அதேவேளை எனது இன்னுமொரு சிறுகதைத் தொகுப்பிற்கு வனப்புரை வழங்கிய பிரபல கல்விமானும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியும் நாடறிந்த எழுத்தாளருமான மர்கூம் ஏ.எல்.எம். பளீல் அவர்கள் தனது வனப்புரையில் ஷஷபாத்திமாவின் சிறுகதைகள் ஒரு கைதேர்ந்த திரைப்பட இயக்குனர் போல கதையின் ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகி பின்னர் கதையை விபரித்து முழுக்கதையும் விளங்கும் படியாகும் திரைப்படம் போல அமைந்துள்ளமை சிறுகதைத் துறையில் அவருக்குள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு சிறுகதைகளையும் விரிவாக்கினால் ஒவ்வொரு நாவலாகப் பரிணமிக்கும் சிறந்த கருப் பொருளைக் கொண்டிருக்கிறது' எனக் கூறியுள்ளார். எனவே ''அத்தனையும் முத்துக்கள்'' என்ற எனது முதலாவது நூல் என் உணர்வுகளைப் பொறுத்த வரையில் முத்துக்களே..


நீங்கள் இந்தத் துறையில் பெற்றுக்கொண்ட மறக்க முடியாத அனுபவமாக எதை முன் வைப்பீர்கள்?

பல அனுபவங்கள் உள்ளன. அவை இனிப்பாகவும் அமைந்திருக்கின்றன. கசப்பாகவும் அமைந்தன. ஒரு பெண் எழுத்துத் துறையில் அல்லது இலக்கியத் துறையில் நிமிர்ந்து நிற்பது என்றால் இலேசுப்பட்ட விடயமல்ல. சவால்கள் பல ரூபமாகவும் வரலாம். அவற்றைச் சமாளிக்கின்ற திறமை, விடா முயற்சி, தைரியம் என்பன ஒருங்கே அமைந்திருப்பது அதுவும் ஒரு பெண்ணிடம் என்பது இறையருள் என்றே நம்புகின்றேன். இவை என்னிடம் மிகுதமாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன. எனக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றை நான் வாசகர்களுக்குச் சொல்லித்தானாக வேண்டும்.

எனது முதலாவது புத்தக வெளியீட்டு விழாவுக்கு எமதூரிலுள்ள பிரபலமான இரண்டு இலக்கியவாதிகளிடம் எனது விழாவில் அதிதிகளாகக் கலந்து கொள்ளுமாறும் அவர்களது பெயர்களை அழைப்பிதழில் இடுவதற்கு சம்மதிக்குமாறும் கேட்டு நின்றேன். அதற்கு அவர்கள் என்னிடம் நேரடியாக எந்தப் பதிலும் சொல்லாது பிறிதொரு நபரிடம், ''பெண்கள் புத்தகம் வெளியீடு செய்வது வெற்றி பெறாது'' என்ற பொருட்படப் பேசி தங்களது விருப்பமின்மையை மறைமுகமாகத் தெரிவித்தனர். இது இவ்வாறிருக்க எனது புத்தக வெளியீட்டை அரசியல் கலப்பற்றதாக நடாத்த வேண்டுமென்ற என் விருப்பத்திற்கிணங்க எனது அழைப்பிதழைத் தயாரித்ததோடு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் அந்நாள் பணிப்பாளர் அஹ்மத் முனவ்வர் ஹாஜியாரையே நான் பிரதம அதிதியாகவும் அழைத்தேன். என் விழாவுக்கு வர மறுப்புத் தெரிவித்த எனதூர் இரண்டு இலக்கியவாதிகளும் வானொலியில் தங்களுக்கான களந்தேடி அலைபவர்கள், ஏங்கிக் கிடப்பவர்கள் என்பதும் எனக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். எனவே வானொலியோடு தொடர்புடைய ஒருவர் எனது விழாவுக்கு வருகிறார் என்பதனால் அந்த இலக்கியவாதிகள் இருவரும் என் வீடு தேடிவந்து என்னென்னவோ சொல்லி நின்றபோது நான் அழைப்பிதழும் அச்சிட்டாகிவிட்டது எனக்கூறியபோது அவர்கள் பரவாயில்லை எங்களுக்கு பேச ஒரு சந்தர்ப்பம் தந்தால் போதுமென்றார்கள். அவர்களது பரிதாபம் கண்டு அச்சந்தர்ப்பத்தை அவர்களுக்கே வழங்கவேண்டியதாயிற்று. இதுவே எனது எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். வெட்டுக்குத்தும், குழி பறிப்பும், காட்டிக்கொடுப்பும் நிறைந்த இலக்கிய உலகில் நானொரு பீனிக்ஸ் பறவையானேன்.


முற்போக்குச் சிந்தனை கொண்டு நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது? ஏன்?

என் கதைகளில் அநேகமாக எனக்கு எல்லாக் கதைகளும் பிடிக்கும். அதிலும் பெண்களுக்கு சமூகத்தில் இஸ்லாத்தைப் பிழையாக விளங்கிக்கொண்டு இஸ்லாத்தின் திருமணச் சட்டங்களைப் பிழையாக விளங்கி, அதனைத் துஷ்பிரயோகம் செய்கின்ற வகையில் ஒரு மனைவி குழந்தைகள் வாழவைக்கப்பட வேண்டியவர்களாக இருக்க அவர்களைக் கைவிட்டு மறுமணம் என்ற பெயரில் துரோகம் செய்கின்ற ஆண்கள், இதற்கு உடந்தையாக இருந்து செயற்படும் பள்ளிவாயல்களின் பரிபாலன சபைகள் என்பவற்றை என் கருத்துக்கள் மூலம் விளாசியிருக்கிறேன். அத்தோடு இளவயதில்  சந்தர்ப்ப வசத்தால் காதல் என்ற மாய வலையில் மாட்டிப் பின் முதுகெலும்பற்ற ஆண்களால் சீதனத்துக்காக ஏமாற்றும் ஆண்களையும் சாடியிருக்கிறேன். மட்டுமல்ல எனது சிறுகதைகளில் தமிழின் மூவகை நிலையான தன்மை, முன்னிலை, படர்க்கை என்பதில் எனது அநேக கதைகளில் பாதிக்கப்படும் பாத்திரமாக நானே மாறியிருக்கிறேன். அதாவது கதாபாத்திரமாக தமிழின் தன்மை நிலையாக நான், எனக்கு, என்னை என்றே கதைகளில் பேசியிருக்கிறேன். எனவே இந்த உணர்வுதான் எனது சிறுகதைகள். எனது பிரசவங்கள் எனக்கு மிகவும்; பிடிக்கும்.


உங்களது படைப்புக்கள் அதிகமாகவே பெண்களின் பிரச்சினைகளைத்தான் பேசியிருக்கின்றதா? என்ன காரணம்?

வாழ்க்கையின்  பல்தரப்பட்ட சுமைகளையும்  தூக்குவதற்கும்  கல்லடிபடுவதற்கும், துயரங்களை அனுபவிப்பதற்கும் என்று அகப்படுபவர்கள் பெண்களே. இது முஸ்லிம் சமுகத்தில் மட்டுமல்ல மற்ற எல்லாச் சமுகத்திலும் இந்த அவல நிலையுண்டு. எனவே என்னிடம் பல பெண்கள் வருவார்கள். அவர்கள் தங்களின் பிரச்சினைகளைச் சொல்லி அழுவார்கள். சுற்றுப்புறச் சூழலிலும் பெண்களின் வாழ்வின் துயரக் கதைகளை மிக அதிகமாகக் கண்டிருக்கிறேன். இதுபற்றி நன்கு சிந்தித்திருக்கிறேன். இந்தச் சிந்தனை எனக்கு சிறு வயதிலிருந்தே என்னோடு தொடர்ந்திருக்கிறது. இஸ்லாமிய திருமணச் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்தல், சட்டங்களைத் தங்களுக்கு சார்பாக வளைத்தல், பணப்பலம், செல்வாக்கு, ஆணாதிக்கம், சீதனக் கொடுமை, வறுமை போன்ற இத்தகைய நச்சு விதைகளின் முன்னெடுப்பு அநேகமான பெண்களின் திருமண வாழ்வைக் காவு கொள்வது என் சிந்தையில் சுழலும்போது பல சிறுகதைக் கருக்கள் உருவாகி இந்தச் சமுக ஒழுக்கக் கேடுகளை உரக்கக் கூவி ஆவேஷப்படுத்தும். இதனை எனது இரண்டாவது நூலான பொய்த் தூக்கங்கள் என்பதில் எனது கண்ணியத்துக்குரிய மர்கூம் பளீல் சேர் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


உங்களது சிறுகதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது படைப்புக்களுக்கு நிறைய வரவேற்புக்கள் கிடைத்திருக்கிறது. எனது கதைக் கருக்கள் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு இப்போதும் என்னால் மிகுந்த கரிசனையோடு பாதுகாத்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் வாசகர்களின் பாராட்டுக் கடிங்கள் சாட்சி. அத்தோடு எனது சிறுகதைகளுக்கு மிகவும் ஆதரவு தந்து ஊக்கப்படுத்திய பெரியார்களில் தினகரன் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற ஆர். சிவகுருநாதன் ஐயா முதன்மையானவர். அத்தோடு புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன், மன்னார் எச்.எம்.ஷரீப், எம்.எச்.எம்.ஸம்ஸ், எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோரின் பாராட்டுக்கள் எனக்கு உத்வேகம் தந்தவையாகும். கிடைத்த விருதுகளும், பரிசுகளும், பொன்னாடைகளும் எனது உற்சாகத்தின் ஊன்று கோல்களாயின.


''நா இடற வாய் தவறி'' என்ற உங்களது கவிதைத் தொகுதி குறித்து என்ன குறிப்பிடப் போகின்றீர்கள்?

அது கவிதைத் தொகுப்பு என்று சொல்வதைவிட என் மன உணர்வுகளின் குவியல்கள் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழை, உணர்வை, என் உள்ளத்தை, என் விருப்பு வெறுப்புக்களை, என் வேதனைகளை, வெற்றிகளை அந்தத் தொகுதியில் கொட்டியிருக்கிறேன். அது கவிதைத் தொகுப்பா அல்லது உணர்வுத் தொகுப்பா என்று வாசிக்கின்ற வாசகர்களையே பெயர் வைக்குமாறு நான் உரிமை வழங்கியிருக்கிறேன்.


பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறான சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எவ்வாறான முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இவ்வாறான காட்டுமிராண்டிச் சம்பவங்கள்தான் இன்று உலகைப் பிடித்துள்ள பெரும் பீடை. இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி தண்டனைகளை மிக மிகக் கடுமையாக்குவதுதான். தண்டனைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். காலதாமதமின்றி மிகக் குறுகிய காலத்திற்குள் தண்டனைகளை வழங்க வேண்டும். இக்குற்றங்களின் கொடுரத்தை சகல தரப்பாரும் உணர்ந்து தண்டனைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அத்துடன் பெண்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் ஊட்டப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்கள், அவற்றின் விளைவுகள், அவற்றுக்கான தண்டனைகள் பற்றி பாடசாலைக் கல்வியிலும் இளம் சந்ததியினருக்குப் பாடம் நடாத்தப்பட வேண்டும். இவை மூலம் நல்ல பயன் கிட்டுமென எண்ணுகின்றேன்.


உங்கள் எழுத்து முயற்சிகளின் இலக்குகள் என்னவாக இருக்கிறது?

நான் இதுவரை காலமும் எழுதிய ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு இலக்கை வைத்தே எழுதப்பட்டிருப்பதாக நம்புகின்றேன். பெண்களுக்கான நீதி வேண்டும். இஸ்லாமியத் திருமணச் சட்டங்கள் கொச்சைப்படுத்தப்படக் கூடாது, சமுகத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படக் கூடாது, சீதனம் இழிவானதாக்கப்பட வேண்டும் என்ற இலக்கோடு சமுக இடர்பாடுகள் என்பன களையப்பட வேண்டும் என்ற நோக்கோடு சிறுகதைகளில் நான் பயணிக்கின்றேன்.


சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு கணிசமாக குறைந்து வருகின்றது. அந்தவகையில் நீங்கள் நாவல்கள் எழுதுவதிலும் அக்கரை காட்டலாமே?

இதே கேள்வியை என்னிடம் பலர் கேட்கிறார்கள். எனக்கும் அதில் விருப்பம் உள்ளது. விரைவில் அந்த முயற்சியிலும் இறங்கலாமா என எனக்குள்ளே நான் கேள்வி கேட்கின்றேன். இன்னும் சில மாதங்களில் ''பொய்த் தூக்கங்கள்'' என்ற எனது சிறுகதை நாவலாக விரிவாகி வெளிவரலாம்.


சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

கலாபூஷண விருது அடங்கலாக எனக்கு முப்பது விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பாராட்டுகள், பொற்கிழிகள் என்பவையும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் நான் எனது எந்த ஆக்கத்தையும் போட்டிகளுக்கு அனுப்புவதில்லை. எனது ஒவ்வொரு ஆக்கமும் நான் பிரசவித்த குழந்தைகள். இவற்றைப் போட்டிக்கு உட்படுத்திப் பெறுமதியிட்டு கொச்சைப்படுத்துவதை நான் விரும்புவதில்லை.


எதிர்காலச் சந்ததிகளுக்கு நீங்கள் கூறும் அனுபவ மொழிகள் யாவை?

இளம் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் தடம் பதிக்க வேண்டுமானால் முதலில் தன்னம்பிக்கை அவசியம். தோல்விகளை, புறக்கணிப்புக்களைச் சகித்து மென்மேலும் முயற்சித்தல் அவசியம். தனது படைப்புக்களில் நம்பிக்கை வைக்க வேண்டும். பெரிய இலக்கியவாதிகளை மதித்து அவர்களின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஓரிரண்டு ஆக்கங்களை யாத்துவிட்டு புகழையும் மாலை மரியாதையையும் எதிர்பார்க்கக் கூடாது. கௌரவங்களை நாங்கள் தேடிப்போகக் கூடாது. இவையே எனது வாழ்வில் நான் கடைப்பிடித்த விடயங்கள். அதனையே இக்கால இளம் எழுத்தாளர்களுக்கும் ஆலோசனையாக வழங்குகின்றேன்.


இலக்கியங்களில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் வகிபங்கு எவ்வாறுள்ளது?

மிக மிகக் குறைவு. ஒன்றிரெண்று தோன்றினாலும் வந்த வேகத்தில் அவர்கள் மறைந்து கொள்கிறார்கள். காரணம் குடும்பச் சுமை, தைரியமின்மை, பெற்றோர்களின் உடன் பிறப்புக்களின் கட்டிய கணவர்மாரின் ஒத்துழைப்பின்மை, ஊக்குவிப்பின்னை, ஊடகங்களின் புறக்கணிப்புகள் இவையே காரணிகளாகலாம். எனினும் பாடசாலைகளில உயர் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகளில் இத்தகைய இலக்கிய உணர்வுகள் உள்ளவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். பெண்களின் வகிபாகம் குறைந்திருப்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் வேதனையான விடயம்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் தற்சமயம் சற்று சுகவீனமடைந்திருந்த போதிலும் இடைக்கிடை எனது சில ஆக்கங்களை பிரசுரத்திற்காக ஊடகங்களுக்கு அனுப்புகிறேன். இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன். என் எழுத்து முயற்சிகளுக்கு எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இறைவனின் உதவியால் இன்னும் எனது பல படைப்புக்களையும் இலக்கிய உலகிற்கு அவ்வப்போது வழங்கலாமென்ற நம்பிக்கையுடனுள்ளேன்.


இறுதியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?

இலக்கிய உலகமென்பது பரந்தது விரிந்தது. அங்கே பாசமும் உண்டு. பயங்கரமும் உண்டு. இதில் காலூன்ற நினைப்பவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும். வெல்லத் துணிந்துவிட்டால் அது வெல்லக் கிடங்காகிவிடும். நானறிந்தவரை எந்த எழுத்தாளனும் கவலைகளால் ஹார்ட் அட்டெக்கை அணைக்கவில்லை. கவலைகளைக் காகிதத்தில் இறக்கி வைத்தால் இதயத்தில் சுமைகள் தேங்குவதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கிய தங்கை ரிம்ஸா முஹம்மத் உட்பட தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் குலாம் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

39. மஸீதா புன்னியாமீன் அவர்களுடனான நேர்காணல்


இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.10.27

மஸீதா புன்னியாமீன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

இலங்கையில் தென்னகத் தலைநகர் காலியில் கட்டுக்கொடை கிராமம் எனது பிறப்பிடம். பாலர் கல்வி முதல் உயர்தரம் வரை கல்விப் பயணத்தில் தென்னகமே கைகொடுத்தது. வசதி வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் முன்னின்ற குடும்பமொன்றில் பத்துப் பேரில் நான் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தேன்.


உங்களது இலக்கியப் பின்னணி குறித்து கூறுங்கள்?

சிறுவயது முதல் வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவள். தந்தையார் வாங்கி வரும் புதினப் பத்திரிகைகளின் முதல் வாசகி நானே. வகுப்பறைக் கற்றலில் கட்டுரை எழுதி தமிழ்ப் பாட ஆசிரியரிடம் பாராட்டு பலமுறை பெற்றுள்ளேன். உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கற்கையில் கல்லூரி அதிபர் காலஞ்சென்ற எம்.எஸ்.ஏ. மஜீத் அவர்கள் என் எழுத்தாற்றலை இனங்கண்டு, 'தென்றல்' என்ற காலாண்டுச் சஞ்சிகைக்குப் பத்திராதிபராக்கினார். அவரது காலப் பிரிவிலேயே இலங்கை ஹிஜ்ரா கவுன்ஸில் பாடசாலை மாணவரிடையே அகில இலங்கை ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் எனக்குக் கிடைத்தது. எனது பௌதிகவியல் பாட ஆசிரியர், பிற்காலத்தில் தென்மாகாண விஞ்ஞானப் பிரிவின் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலஞ்சென்ற ஏ.ஆர்.எம்.எம். நாஸிம் அவர்கள் பத்திரிகைகளில் அவ்வப்போது பிரசுரமான எனது ஆக்கங்களைப் படித்துவிட்டு ஊக்கம் தந்தார்.


இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

1980 களில் இலக்கிய வானில் புதுக்கவிதை வடிவம் சிறகடித்துப் பறந்த காலம் எல்லோரையும் போல நானும் எழுதிய கிறுக்கல்களின் சில அச்சில் வராமலே போயின. என் இலக்கிய முயற்சிகளின் தொடர்ச்சி 1980 களில் தினகரன் பத்திரிகையின் கவிதைப் பூங்கா பகுதியில் 'பெருமூச்சு' என்ற தலைப்பில் என் புதுக் கவிதையைப் பிரசுரித்து ஆனந்தத்தில் ஆழ்த்தியது.  அதன்பிறகு சிந்தாமணியும் எனது புதுக் கவிதைகளை அங்கீகரித்து அரங்கேற்றியது. அந்நாளில் தினகரன் ஆசிரியர் பீடத்தை அலங்கரித்த சகோதரர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் எனது புதுக் கவிதைகளை மெருகூட்டி, பிரசுரமாகக் களமமைத்துத் தந்தவர் என்பதனை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். எனது தந்தையின் பெயர் ஹம்ஸா. எனது ஆரம்ப கால எழுத்துலகப் பிரவேசம் கட்டுகொடை மஸீதா ஹம்ஸா என்ற பெயரிலேயே நிகழ்ந்த வண்ணமிருந்தது. 


நீங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

சாதனை என்பது பிறர் பிரமிக்கத்தக்க வகையில், பயன்பெறும் வகையில் ஒருவரால் ஆற்றப்படும் ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடு அல்லது சேவை என்பதே என் கருத்து. என்னைப் பொருத்தமட்டில் இலக்கியத் துறையில் நான் சாதித்தது என்ன? என்னுடைய செயற்பாடுகள் எதனையும் நான் சாதனையாக கருதியதில்லை. 


ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் நூல்கள் பலதை வெளியிட்ட அனுபவம் பற்றிக் கூறுங்கள்?

நானும் என் துணைவர் புன்னியாமீனும் ஆசிரியர்கள். கணிதமும் விஞ்ஞானமும் என் துறையாக இருக்க, வரலாறும் அரசறிவியலும் அவர் துறையாக இருந்தது. கணவரது இலக்கிய நூல்களோடு, இளந்தலைமுறையினருக்கும் களமமைக்கும் நோக்கில் புதிய மொட்டுகள், அரும்புகள், பாலங்கள் என கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். கூடவே வரலாறு நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முனைந்தார். எனது முதல் நூல்கூட 'விஞ்ஞான வினாச் சரம்' என்று என் தொழிற்றுறை சார்பாகவே உருவாக்கப்பட்டது. 

ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே நாமிருவரும் தரம் ஐந்து மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை ஆரம்பித்தோம். 1994 ஆம் ஆண்டு வரை தமிழ், கணிதம் என்ற இரு பாடங்களோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 1995 ஆம் ஆண்டிலிருந்து பாட அறிவுடன் நுண்ணறிவு, பொது அறிவு என விரிவடைந்து இரு பாகங்களாக நடைபெறத் தொடங்கியது. அதன் பிற்பாடுதான் நாம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டோம். நாமே எதிர்பாராத அளவுக்கு அவை எமக்கு அமோக ஆதரவை வழங்கின. இதன் காரணமாக 93 நூல்கள் எம்மால் வெளியிடப்பட்டுள்ளன.


இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி யாது கூறுவீர்கள்?

ஒரு காலமிருந்தது. பெண் எழுத்தாளர்கள் புற்றீசல் போல பெருகி வந்து, அதில் பலர் காலப் போக்கில் காணாமற் போனோர் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். திருமணம், குடும்பச் சுமை, தொழில் வாய்ப்பு போன்ற இன்னோரன்ன காரணங்கள் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கலாம். முன்பெல்லாம் ஒரு ஆக்கத்தை எழுதி அதனை தபாலிட்டுவிட்டு பிரசுரமாகியிருக்குமோ எனக் காத்திருந்து ஏமாந்து, நாட்கள் கழிந்து பிரசுரமான பின் மிக்க மகிழ்ந்த அந்த சந்தர்ப்பங்கள்.. இப்போது அப்படியல்ல. இன்று இலத்திரனியல் யுகத்தில் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் வெளியுலகம் சென்றடைவதற்கு இருக்கின்ற தடைகள் மிகக் குறைவு. தரமான ஆக்கங்களை படைக்கும் பெண் எழுத்தாளர்கள் இன்னும் உருவாக வேண்டும்.


எழுத்துத் துறை சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

எழுத்தாற்றல் இறைவன் கொடுத்த வரம். போர்வாளின் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பார்கள். எழுதுவதற்கு விரும்பும் ஒருவர் முதலில் எழுத்தை நேசிக்க வேண்டும். சமூகத்தை நேசிக்க வேண்டும். எழுதப்படும் ஆக்கங்களின் கனதியும் காத்திரமும் ஏதேனும் வகையில் ஊடுருவி சமூகத்தின் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும்.


உங்கள் எழுத்துக்களினூடாக எதைச் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

எனது இலக்கியப் பயணத்தின் பின்னூட்டமாக என் துணைவர் புன்னியாமீன் இருந்தார். அவரது எழுத்துக்களும் சமூக நோக்கும் உலகின் பல பாகங்களிலும் பேசப்பட, நான் என்னால் இயன்றதைச் செய்துள்ளேன். நான் சாதிக்க நாடியதைவிட அவரது எழுத்துலக சாதனைகளால் நான் திருப்தியடைகிறேன். 


இன்றைய புதிய கவிஞர்களின் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முகநூல் - இலக்கியப் பிரியர்களுக்கு வரப்பிரசாதம். நூல்களை வாசிக்க விரும்பாதவர்கள்கூட முகநூலில் முகம் புதைக்கின்றார்கள். அதி இலகுவாக களமமைத்துக் கொடுப்பதனால் முகநூல் கவிஞர்களுக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இதனால் கவிதை என்று ஏதோ எழுதித் தலையைச் சுற்ற வைக்கும் கவிதைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. இப்படியும் இவர்களால் எழுத முடியுமா என்று உண்மையில் சிலருடைய கவிதைகள் பிரமிக்க வைக்கும்.



மரபுக்கவிதை, புதுக்கவிதை குறித்த உங்கள் பார்வை என்ன?

கவிதை எழுதுவது என்பது எளிமையான காரியமல்ல. நாலே வரிகளில் நல்லதைச சொல்வதற்கு எவ்வளவோ பிரயத்தனப்பட வேண்டும். அதிலும் மரபுக் கவிதை படைப்போரிடம் இலக்கிய ஆளுமை அதிகமாக இருக்க வேண்டும். நயம், நளினம் போன்றே அர்த்தமும் நிறைந்ததே மரபுக் கவிதை. வெறும் வார்த்தைக் கோலங்கள் புதுக்கவிதையாவதில்லை. மிகவும் எளிமையான வார்த்தைகளை மெல்லிய உணர்வுகளின் பின்னலாக வாசிப்போரைக் கவரும் வகையில் கோர்த்துக் கருத்துச் சிக்கனமாக முன்வைப்பது புதுக்கவிதை என்பது எனது கருத்து. 


நீங்கள் எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கின்றீர்கள்? என்ன காரணம்?

ஓர் எழுத்தாளன் உருவாவதே வாசிப்பில் காட்டும் தீவிர ஆர்வத்தினால்தான். நான் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பதில் நாட்டம் கொண்டிருக்கின்றேன். கற்கும் காலத்தில் பாடசாலை நூலகத்திலிருந்து நாவல்களை எடுத்துச் சென்று வாசிப்பேன். மு.வரதராசன், அகிலன், ரமணி சந்திரன் என்று இந்தப் பட்டியல் நீளும். இந்திய நாவலாசிரியர்களின் நூல்களுக்கு அமோக வரவேற்பு இருந்த காலமல்லவா? புதுக்கவிதையின் முன்னோடி மு.மேத்தா அவர்களின் கவிதைகள் என்னை வெகுவாக ஈர்த்தவை. திக்குவல்லைக் கமால், திக்குவல்லை ஸப்வான் இவர்களுடைய சிறுகதைகளை எப்போதும் விருப்புடன் வாசிக்கின்றேன். திக்குவல்லை கமால் அவர்களின் பிரதேசப் பேச்சுவழக்கு நடை எனக்கு மிகவும் பிடிக்கும். மலையகத்தில் வாழ்ந்தாலும் நான் தென்னகத்தைச் சேர்ந்தவளாயிருப்பது அந்த ஈர்ப்புக்குக் காரணமாகலாம். நான் எழுத ஆரம்பித்த காலங்களில் என் துணைவர் புன்னியாமீன் சிறுகதைககள் வாயிலாகத்தான் இலக்கியத்தில் இடம்பிடித்து வந்தார். அவரது சிறுகதை நடை என்னை மிகவும் கவர்ந்தது. பின்னாளில் அவரது சிறுகதைகளின் நடையே எனது சிறுகதைகளிலும் மருவியிருந்ததை மறுக்க முடியாது.


நீங்கள் இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

காலஞ்சென்ற புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்டத்தினால் நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் நூல்கள் அச்சுருப்பெற்றன. அதன் நூறாவது வெளியீடான 'ஒற்றைத்தாயின் இரட்டைக் குழந்தை' கவிநூல் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியினதும், எனதும் கவிதைகள் கலந்ததொரு கூட்டு முயற்சியாகியது. அதன் பின்னர் பாட ரீதியிலான 'விஞ்ஞான வினாச்சரம்' எனும் வினா விடைத் தொகுப்பு ஒன்று என்னால் உருவாக்கம் பெற்றது. துணைவருடன் இணைந்ததாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பாட விளக்கமாகவும், பயிற்சி நூல்களாகவும் 93 நூல்கள் வெளியிடப்பட்டன. 'மூடுதிரை' என்ற சிறுகதைத் தொகுதியே எனது தனியானதொரு இலக்கிய நூலாக அமைந்தது. அதனையடுத்து 'நல்லவனாவேன்' என்ற சிறுவர் பாடல் நூல் கல்வியமைச்சின் கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனை சபையின் அங்கீகாரத்துடன் அச்சுறுப் பெற்றது. 

மற்றுமொரு சிறுகதைத் தொகுதிக்கும், சிறுவர் இலக்கியத்துக்கும் ஆயத்தமான நிலையில்தான் என் துணைவரின் இழப்பு நேர்ந்தது. என் துணைவரின் கடைசி இரண்டரை மாத வாழ்க்கையினை என் அனுபவங்களை ஒரு நூலில் வடிக்க மனதில் சின்னதாயொரு தேக்கமும் குடிகொண்டிருக்கிறது.


இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?

பாராட்டு ஒரு மனிதனை பாராளும் அளவுக்கு இட்டுச் செல்லக் கூடியது. எந்தவொரு சராசரி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் எழுத்தாக்கத்திற்கு, நூலுக்கு, இலக்கிய முயற்சிக்கு பாரபட்சமின்றி செய்யப்படும் விமர்சனங்கள் அந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரனை வளம் படுத்த வேண்டும். குறைகளோடு நிறைகளும் சுட்டிக்காட்டப்படுவதன் மூலம் படைப்பாளி தன்னை புடம் போட்டுக்கொள்ள முடியும்.

விருதுகள் நம்மைத் தேடி வரவேண்டுமேயன்றி நாம் விருதுகளை தேடிப் போகக் கூடாது. ஒரு படைப்பாளியில் ஏதோவொரு திறமையை இனங்கண்டதால்தான் விருதுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. ஒரு விருதுக்காக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தொடர்பான அத்தனை விபரங்களையும் கொடுத்துதவுவது உரியவர் கடமை. அதற்காக தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளல், விருதினைக் கேட்டுப் பெறல் என்ற குற்றச்சாட்டுக்கள் உருவாகின்ற நிலைமை மாற வேண்டும்.


இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

கலாசார அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படும் அகில இலங்கை அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் 'மரிக்க மறுக்கும் மனிதம்' என்ற எனது சிறுகதைத் தொகுதிக்கு முதலாமிடம் கிடைத்தது. அதன் பரிசேற்பு வைபவத்திற்கு நானும் என் துணைவரும் சென்றிருந்தோம். அந்த வைபவத்தில் மாற்றமான ஒரு நிகழ்வு நடந்தேறியது. சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெவ்வேறாக நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற தமிழ் சிறுகதை சிங்களத்திலும், சிங்கள சிறுகதை தமிழிலும் விமர்சனம் செய்யப்பட்டது. மட்டுமன்றி ஒப்பிட்டும் நோக்கப்பட்டது. இந்த விமர்சனத்தை செய்தவர் வேறு யாருமல்ல. நாடறிந்த சிங்கள எழுத்தாளரும், தமிழை நன்றாகப் பேசி எழுதக்கூடிய விசேட ஆற்றல் கொண்டவருமான திருவாளர் மடுளுகிரிய விஜேரத்ன ஆவார். அவரும் எனது துணைவரும் நெருங்கிய நண்பர்கள். எனது 'முடுதிரை' நூல் வெளியீட்டு விழாவின் போது, கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டவர். புன்னியாமீனின் துணைவியார்தான் இந்தச் சிறுகதைக்குச் சொந்தக்காரர் என்ற விபரம் அவருக்குத் தெரியாது. விழாவின் இடைவேளையின் போதுதான் அவர்கள் சந்தித்து முகமன் கூறிக் கொண்டார்கள். அதன்பிறகுதான் அவருக்கு எனது சிறுகதை அது என்பது தெரியவர மிகவும் சந்தோஷப்பட்டார். எனது சிறுகதை மாற்றுமொழியில் விமர்சனம் செய்யப்பட்ட அந்த சம்பவம் எனக்குக் கிடைத்த விருதினையும், பொற்கிழியையும்விட மனதுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

வயது வித்தியாசமின்றி அலைபேசிகளை அணைத்துக் கொண்டு அலை பாயும் எண்ணங்களோடு மக்கள் அலையும் கவியுலகத்தில் நூல்களை வாசிப்போரின் எண்ணிக்கை அருகி வருவதை கண்கூடாகப் காண்கின்றோம். எதிர்காலத்தில் நூலகங்களில் பத்திரப்படுத்தப்பட்ட நூல்கள் வெறும் காட்சிப் பொருளாக மாறிவிடுமோ என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது. வாசிப்பு வாழ்க்கையின் மூச்சாக வேண்டும். விலைமதிப்பற்ற புத்தகங்கள் தூசுதட்டப்படாமல் தேக்கமடையும் நிலைமை மாற்றமடைய வேண்டும். எனவே நல்ல நூல்களை வாசியுங்கள். நல்ல விடயங்களை குறிப்பில் எடுங்கள். மனதிலும், அலைபேசியிலும் தரவேற்றம் செய்து பகிருங்கள். தமது தரம் உயர வேண்டுமென விரும்பும் பெண் எழுத்தாளர்கள் நல்ல நூல்களை அவசியம் வாசிக்க வேண்டும்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Wednesday, October 16, 2019

38. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா (லதா கந்தையா) உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2020.03.15

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா (லதா கந்தையா) உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்? உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது தந்தை கந்தையா. தாயார் நாகம்மா. அவர்களின் ஏக புத்திரியாக 1979.04.24 இல் பிறந்தேன். மகிழ்ச்சியான விவசாயக் குடும்பம் என்னுடையது. எனது ஆரம்பக் கல்வி கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியில் ஆரம்பமானது. இயற்கையின் வசந்தங்களும் வாய்க்கால் வரப்புகளையும் கொண்ட கரடிப்போக்கு எனது சொந்த ஊர். எங்கள் மகிழ்ச்சி, இலங்கையில் பிறந்த காரணத்தால் எனக்கு நீடித்துக் கிடைக்கவில்லை. இனப்போர் எனது பெற்றோர்களை 1986  இல் காவு கொண்டது. உற்றார் உறவினரற்று நான் அநாதை விடுதியில் வளர்ந்தேன்.

உயர் கல்வியை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கற்றேன். சட்டமும் பயின்றேன். கலைமானி பட்டமும் பெற்றேன். வாழ்க்கைத் துணையும் நன்றாக அமைந்தது. மூன்று பிள்ளைகளுக்கு தாயானேன். இறுதி 2009 யுத்தத்தில் எனது இரண்டரை வயது மகனையும் இழந்தேன். கடைசியில் கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். இரண்டு பிள்ளைகளோடும் பெருந்துயரை மறைத்து வாழக் கற்றுக்கொண்டேன். அதுபோலவே வாழ்கின்றேன்.

உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?

ஆசிரியராக நான் வளர்ந்த அநாதை விடுதியிலேயே பணியாற்றினேன். ஊடகத்திலும் எழுத்துத் துறையிலும் கால் பதித்தேன். ''விடுதலைக் கனல்'', என்ற கவிதை நூலை 15 வது வயதிலும் ''சுவாசம் மட்டுமே சுடுகலனாய்...'' என்ற கவிதை நூலை போர் முடிந்த பின்பு 2018 இலும் வெளியிட்டேன். பத்திரிகைகளுக்கு எழுதிய சிறுகதைகள், போர் அனுபவங்கள், குறுநாவல், கவிதைகள் நூலுருப்பெறக் காத்திருக்கின்றன. பெண் தலைமைக் குடும்ப பெண்ணான நான் பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்த்து நூல்களையும் வெளியிடுவதானது சாதாரணமான விடயமல்ல என்பதை தாங்களும் உணர முடியும் என நினைக்கிறேன்.

எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?

எனது வகுப்பாசியரான சௌபாக்கியலீலா ஆசிரியரே என்னுள் மறைந்திருந்த திறனைத் தட்டி ஊக்கப்படுத்திய முதல் நல்லுள்ளம். அவரோடு நான் வளர்ந்த அநாதை விடுதியில் வளர்த்த சிலரும், அங்கு வளர்ந்த சகோதரிகள் பலரும் எனக்கு ஆதரவாக இருந்து நல்ல ரசிகர்களாக இருந்தார்கள்.

''வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா'' என்பது உங்கள் புனைப் பெயர் என்று நினைக்கின்றேன். அந்தப் பெயரைப் புனைப் பெயராகத் தெரிவு செய்தமைக்கு விசேட காரணம் என்ன?

அது நான் வளர்ந்த அநாதை விடுதியில், அதைப் பராமரித்த தலைவர் பிரபாகரன் அவர்கள் எனக்கு வைத்த பெயர் அது. அவர் மேல் உள்ள பிரியத்தால் அந்தப் பெயரை கைவிடாது தொடர்ந்தும் வைத்திருக்கிறேன்.

உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

எல்லோருமே நன்றாக படித்தவர்கள். அம்மா 28 வயதிலும் அப்பா 30 வயதிலுமாக இறக்கும் போது எனக்கு 07 வயது. ஆனால் எனது பெற்றோர் மூன்று மொழிப் புலமை உள்ளவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

எத்தனை ஆண்டுகளாக கவிதைகளை எழுதி வருகின்றீர்கள்? நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது?

12 வயதில் இருந்து இன்றுவரை கவிதைகளை எழுதி வருகின்றேன். முதலாவது புத்தகத்தை வெளியிடும் போது சொல்லும்படி பரவசம் ஏதும் இருக்கவில்லை. பல வஞ்சனைகளையும் பொறாமைகளையும் கடந்து தான் அதை வெளியிட வேண்டியிருந்தது. அதன் பிறகு நான் சொல்லெனாத் துன்பங்களையும் அனுபவித்தேன். அதுபற்றி விரிவாக கூற விரும்பவில்லை.

இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. விடுதலைக்கனல் (1995)
02. சுவாசம் மட்டுமே சுடுகலனாய்... (2018)
ஆகிய இரண்டு கவிதை நூல்களை மட்டுமே இதுவரை வெளியிட்டுள்ளேன்.

நீங்கள் முதலாவதாக வெளியிட்ட ''விடுதலைக் கனல்'' என்ற கவிதை நூலின் பேசு பொருள் பற்றி யாது குறிப்பிடுவீர்கள்? ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

அது விடுதலைக்கான பாடல்களைக் கொண்ட கவிதைப் புத்தகம். அதனால் அவ்வாறான ஒரு பெயரைத் தெரிவு செய்தேன்.

''சுவாசம் மட்டுமே சுடுகலனாய்'' என்ற நூலின் ஊடாக வாசகர்களுக்கு விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

என் மன உணர்வுகளின் தொகுப்புத்தான் சுவாசம் மட்டுமே சுடுகலனாய்... என்ற கவிதைப் புத்தகம். அரசியல், காதல், விரக்தி, ஏளனம் போன்ற பல்வேறுபட்ட உணர்வுகளை உள்ளடக்கிய கவிதைகளைக் கொண்டது.

உங்களது நூல்களை வெளியிட ஊக்குவித்தவர்கள் யார்?

நண்பர்கள், நலன் விரும்பிகள், முகநூல் வாசகர்கள், என் பிள்ளைகள் எனப் பலருண்டு. நானாக முயன்றால் தவிர வேறேதும் அதிசயங்கள் நடக்கப் போவதில்லை.

நீங்கள் எழுதிய கவிதைகளில், நீங்கள் அதிகம் நேசிக்கும் கவிதை எது?

பல உண்டு. நேசிப்பதால் தானே என்னால் எழுத முடிகிறது. குறிப்பாக ஒன்றைச் சொன்னால், அண்மையில் சிம்மாசனம் என்ற தலைப்பில் எழுதிய பின்வரும் கவிதை மிகப் பிடிக்கும்.

நான் கேட்காமலே
அந்த சிம்மாசனத்தை
அவர்கள் எனக்குத் தந்தார்கள்..

அது இருளாக இருந்தது..
தண்ணீரால் நிறைந்திருந்தது..
தகதகப்பாக இருந்தது..

அந்த சிம்மாசனத்தை அவர்கள்
தங்களின் அன்பின் பரிசாக
எனக்குத் தந்தார்கள்..

சிம்மாசனத்தை தந்த அவர்களே
அதற்கு காவலர்களாயும்
இருந்தார்கள்..

வேடிக்கை என்ன என்றால்
அதைத் தந்தவர்களே,  நான்
அந்த சிம்மாசனத்தை விட்டு
விக்கினம் இன்றி
இறங்கி விட வேண்டும்
என்று தான் அடிக்கடி
வேண்டுதலும் செய்தார்கள்..

அந்தச் சிம்மாசனம் எனக்கு
தகதகப்பாக இருந்தது..
சோலைகள் அற்ற தீவு அது..
ஆனால் குளிர்ச்சி இருந்தது..
நீந்தினேன்..
ஒளியற்ற கருங்குகை அது
அதனால் வெளிச்சத்தை தேடி
சில சமயம் தவமிருந்தேன்..
வெறிகொண்ட பறவையின்
சிறகுதைப்பு போல சடசடத்தேன்..

ஒருநாள்,
அந்த கருங்கடல் தீவின்
சிம்மாசனத்தை எட்டி உதைத்து
வழிகண்டு வெளியேறினேன்..
வெளிச்சத்தை முதன் முதலாக
கண்டு திகைத்தேன்..
மலைத்தேன்..
வெளிச்சத்திலும் அழுதேன்..

மறுபடியும் அந்த சிம்மாசனம்
எனக்கு கிடைக்கப் போவதில்லை..
சிம்மாசனங்கள் நிரந்தரமற்றவை..
தேடலும் வெளிச்சமுமே
நிரந்தரம் என்பதை
கற்றுக் கொண்டேன்..
புதிதாய்ப் பிறந்தேன்..
பிறந்தபோது தான்
வெளிச்சத்தில்
இன்னும் விதம்விதமான
சிம்மாசனங்கள்
வழி முழுதும் காத்திருந்தன!

கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டி வரும் ஈழத்துப் பெண் கவிஞர்கள் பற்றிய உங்களது பார்வை எப்படி இருக்கிறது?

இலக்கிய கர்த்தாவின் வாழ்விட அமைவும் மனநிலையுமே அந்த அந்தப் படைப்பாளர்களது கருப்பொருளாகிறது. போர்க்காலப் பதிவுகள் தற்காலத்தில் அடிபட்டுப் போக வேறு வகையான கருப்பொருட்கள் பிறப்பெடுத்துள்ளன. அதற்கேற்ப ஈழத்துப் பெண்களும் தமது படைப்புக்களை படைத்து வருகிறார்கள். பெண்கள் படைப்புத் துறைக்கு வருதல் என்பது ஒப்பீட்டளவில் குறைவு. அதை உடைத்தெறிந்து வந்தோர் தம் படைப்பின் திறத்தால் பேசப்படுவோராக நிலைத்திருக்கிறார்கள். அதி புத்திசாலிப் படைப்பாளர்கள் பலரை வறுமை கவ்விக் கொண்டுள்ளது துரதிர்ஷ்டமே.

புதுக் கவிதைக்கும், மரபுக் கவிதைக்கும் என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?

மரபுக் கவிதைகள் இலக்கண வரம்புடையது. பொருள் கொள்ளல் கடினம். புதுக் கவிதை பாமரருக்கும் நன்கு விளங்கக்கூடியது. இலக்கியம் பாமரர் வரை சென்றாலே அது வெற்றியுடையது. அந்தக் காலத்தைப் போல மரத்தடியிலும் திண்ணைகளிலும் கூடியிருந்து மரபுக் கவிதைகளைப் பிரித்துப் போதிக்க தற்காலத்தில் யாருக்கும் நேரமும் இல்லை. அவற்றை சுவைபட கேட்கவும் இளையோருக்கு விருப்பில்லை. சுவை மாறுபட்டு விட்டது.

கவிதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக்கூடிய பல மாற்றங்களில் நீங்கள் எதை இலக்காகக் கொள்கிறீர்கள்?

புரிந்துணர்வையும் விடுதலையுணர்வையும் மனித சுதந்திரத்தையும்தான். கவிதைகள் எப்போதுமே பல்வேறு உத்திகளை தன்வசம் வைத்திருக்கும் அழகிய களஞ்சியம். அணிச் சிறப்புகளும் ஓசை நயமும் கொண்ட மனதைப் பிரதிபலிக்கும் வர்ணம். அந்த வர்ணத்தை காலத்துக்கு ஏற்ற வகையில் சமூகத்துக்குள் தீட்டக்கூடிய கூரிய ஞானத்தைக் கொண்டவரே கவிஞராகவும் இருக்க முடியும். அந்த காலமறிந்த உத்தியை எனது மனமும் எனது கவிதைகளிலே ஏந்திச் செல்கிறது. அது வாசிப்போரின் மனதில் வாசிப்பாளரின் மனநிலையைப் பொறுத்து மாற்றங்களை  ஏற்படுத்தும்.

வானொலியிலும் உங்களது பங்களிப்புக்களைச் செய்துள்ளீர்களா?

ஆம். இலங்கை வானொலியிலும் எனது பங்களிப்புக்களைச் செய்துள்ளேன். புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, அவுஸ்திரேலியா தமிழ் வானொலி, நோர்வே வானொலி, கனேடிய வானொலி என எனது ஆக்கங்கள், பேட்டிகள் வெளிவந்துள்ளன.

உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்கள் எந்த வகைகளில் உதவுகின்றன?

ஊடகங்கள் பெண்களின்; முன்னேற்றத்தைத் தட்டி உற்சாகப்படுத்துவது ஒப்பீட்டளவில் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அரிதிலும் அரிதான பெண்களே தம்மளவில் ஒளிர்கிறார்கள். வெளிக் கொண்டு வரப்படுகிறார்கள். வீட்டு நிர்வாகம், பிள்ளைகளைக் கவனித்தல், வேலைப் பொறுப்பு என பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து தம் திறமைகளை வெளிக்கொணரும் பெண் படைப்பாளர்களை ஊடகங்கள் வெளிக்கொணருதலே சமூக மறுமலர்ச்சி என்று சொல்ல முடியும். சமுகத்தின் அத்திவாரமாக பெண் உள்ளாள் என்பதை யாவரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அவ்வாறான பெண்ணை ஊடகங்கள் வெட்ட வெளிச்சமாக கொண்டுவர வேண்டும். அந்தவகையில் பல ஊடகங்கள் என்னை உற்சாகப்படுத்தி உதவியுள்ளன.

''நெருஞ்சிமுள்'' முழு நீளத் திரைப்படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் குறிப்பிட முடியுமா?

''நெருஞ்சி முள்'' முழு நீளத் திரைப்படம். காணாமல் போன கணவனைத் தேடும் பெண்ணுக்கு ஏற்படும் நெருக்கடிகள், சமூக அழுத்தங்கள், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி, இனமதமற்ற மனிதாபிமானம் போன்றவற்றை கூறும் படம். இந்த முழு நீளத் திரைப்படத்தில் நானே கதாநாயகி. இலங்கையின் 15 திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியிடப்பட்ட இலங்கைப் படைப்பும் இதுவே. தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களக் கலைஞர்களாலும் பாராட்டுப் பெற்ற படம் இது. இன வன்முறையைத் தூண்டி போரை மட்டுமே விரும்புவோருக்கு இந்தப் படம் விருப்பத்துக்கு உரியதாக இருக்காது என நினைக்கிறேன். இதில் விசேடமாக எனது இரண்டு பிள்ளைகளும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.

இலக்கிய உலகில் நீங்கள் கற்றுக்கொண்டவற்றில் இதுவரை உங்கள் நெஞ்சத்தைவிட்டு மறக்காத நிகழ்வொன்றைக் குறிப்பிடுங்கள்?

நான் தழைத்த போதே பிடுங்கி எறியப்பட்டவள். எறிந்த இடமெல்லாம் தழைக்கக் கற்றுக்கொண்டேன். என்னை எரிக்க நினைத்தவர்கள், என் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் தற்போது முகவரியற்று இருக்கிறார்கள். கடவுள் தன் கிருபையோடு என்னை கரம் பிடித்து வீழ்ந்து விடாது வழிநடத்துகிறார். 2019 இல் இந்தியாவில் பூவரசி அறக்கட்டளை என்னை அழைத்து ஷஷபாலுமகேந்திரா படைப்பூக்க விருது' தந்து கௌரவித்தது. நாடு கடந்து கௌரவம் பெற்ற அந்தப் பொழுது பேரின்பம் மிக்கது. விருதுகளுக்கு அப்பால் எனக்கு நல்ல ரசிகர்கள் இருப்பது பல மடங்கு விருதுகளுக்கு சமனானது.

உங்களுடைய எழுத்தாள நண்பர்களாக யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்? உள்ளுர், சர்வதேச எழுத்தாளர்களுடனான உங்களது தொடர்புகள், உறவுகள் எப்படியுள்ளது?

பலருள்ளனர். தனிப்பட பெயர் சுட்டி ஒருவரை ஒருவர் தவறவிட வேண்டாமென நினைக்கிறேன். புலத்திலும் புலம்பெயர் சமூகத்திலும் என்னோடு நெருக்கமான படைப்பாளர்கள் பலருள்ளார்கள். எல்லோருமே வஞ்சகம் சூதற்ற நல்ல மனமுடையவர்களாக நீடித்து நட்பாக இருக்க வேண்டுமென்பதே எனது வேண்டுதலாகும்.

கவிதைத் துறை, நடிப்புத் துறை தவிர வேறு எந்தத் துறையில் ஈடுபாடு காட்டுகிறீர்கள்?

ஊடகம். வரைதல். ஆசிரியத்துவம். ஆவணக் காணொளிகள் தயாரித்தல். அதாவது ஊடகத் துறையில் புகைப்பட ஆவணப்படுத்தல், வரைதல். காணொளி மூலமான ஆவணப்படுத்தல்களையும் செய்கிறேன். வெளிநாடு செல்லும் பெண்களுக்கு அடிப்படை ஆங்கிலத்தை படிப்பிக்கிறேன். ஓய்வுப் பொழுதுகளில் சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் எழுதுகிறேன்.

யுத்தத்துக்கு முற்பட்ட இலக்கிய முயற்சிகளுக்கும், யுத்தத்துக்கு பிற்பட்ட இலக்கிய முயற்சிகளுக்கும் இடைப்பட்ட வேறுபாடுகளாக எதனைக் காணலாம்?

யுத்தத்துக்கு முன்னராக இருந்தாலும் சரி, அதன் பின்னராக இருந்தாலும் சரி ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாக இருப்பது வழமை. ஆனால் யுத்த இலக்கியங்கள் பல ஒருபக்க நியாயத்தோடும் நிறுவலோடும் மறைப்புகளோடும் பதியப்படுவது துயரமானது. அவை காலப்போக்கில் ஒரு பக்கமாகவே கருதப்படும்.

எழுத்துலகில் நீங்கள் எதிர் நோக்கும் சவால்கள் என்ன?

உண்மையை உள்ளபடி யதார்த்தமாக எழுதுவதனால் பலரது அச்சுறுத்தலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளாகியுள்ளேன். அண்மையில் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டேன். இவை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிசிடம் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தொடர்கிறது. அச்சுறுத்தல் காரணமாக எனது எழுத்துத் துறை தன்னளவில் சுதந்திரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரிதிலும் அரிதாக உண்மையோடு எழுத்துலகை நேசிக்கும் பெண்களுக்கு இது மாபெரும் அச்சுறுத்தலே.

பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதுகாப்போடு போரட வேண்டிய தேவை மட்டுமன்றி அவள் தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் போராடிக்கொண்டு தான் இருக்கிறாள்.

இதுவரை உங்களுக்குக் கிடைத்த வரவேற்புக்கள், பாராட்டுக்கள், பரிசுகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது முதல் கவிதைக்கு உடனடியாகவே பாடசாலை ஒன்று கூடலில் பலத்த பாராட்டும் கரகோசமும் கிடைத்தது. பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், மாவட்ட மட்டமென பாடசாலைக் காலத்தில் பல முதலிடங்களை எனதாக்கியுள்ளேன். போட்டிக்கு வருவோர் தலைப்புக்கு ஏற்றது போல பெரியவர்களால் எழுதி மனனம் செய்து வந்தெழுதுவதை அவதானித்துள்ளேன். நான் அங்கு தான் என் மனதில் வந்ததை எழுதி முதலிடங்களைப் பெற்றுள்ளேன். தலைவர் வே. பிரபாகரன் அவர்களிடம் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். எனது படைப்புக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. பாலுமகேந்திரா படைப்பூக்க விருது இந்தியாவில் பெற்றேன். விருதுகள் இன்னும் என்னை நோக்கி குவியலாம். காலம் அதை பதிவு செய்யும்.

இப்போது பல அமைப்புக்களால் வழங்கப்படும் விருதுகள் தகுதியானவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றனவா?

இல்லை. பணம் கொடுத்து, முகமன் பார்த்து பகட்டுக்காக தகுதியற்ற பலருக்கும் விருது கொடுக்கும் இழிநிலைச் சமூகம் ஒன்று இன்று பரவலாகத் தோன்றியுள்ளது. அது மிகவும் வருந்தத்தக்கதே. சில இடங்களில் மட்டும் விருது என்பது தகுதி கேட்டு தானே கொடுக்கப்படுகிறது. உரிய தகுதி உடையவர்களுக்கு அது கிடைக்கிறது. பெரும்பாலும் தகுதியற்ற முறையில் செயற்பாடுகள் நடைபெறுவதாகவே பலரும் பேசிக்கொள்கிறார்கள். அது மிகவும் வருந்தத்தக்கதே.

இறுதியாக வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?

ஆயுதப் போரோடு பிறந்து, அதிலிருந்து மீண்டு, வாழ்க்கைப் போரோடும் போராடித் தழைத்து தலைநிமிர்ந்த என்னை நீங்கள் பேட்டி காண அழைத்தமைக்கு முதல்கண் நன்றிகள். என்னைப்போல நிறையவே திறமை மிக்க படைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் இனங்கண்டு ஊக்குவிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு வேண்டிய ஆரோக்கியத்தையும் வரத்தையும் கடவுள் நிறைய நிறையத் தரவேண்டுமென பிரார்த்திக்கிறேன். நன்றி!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Saturday, May 25, 2019

37. ஊவா சமூக வானொலியின் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான பாத்திமா றிஸ்வானா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.05.19

ஊவா சமூக வானொலியின் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான பாத்திமா றிஸ்வானா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்கள் குடும்பப் பின்னணி, பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் வெலிமடை தேர்தல் தொகுதியிலுள்ள குருத்தலாவவை மஹத்தன்னையில் வசித்து வருகின்றேன். என்னுடைய பெற்றோரை நேசத்தோடு அறிமுகம் செய்கின்றேன். தந்தை எம்.எம். மொஹம்மட் பாருக், தாய் சுவைரா பீபீ. தந்தை எம்மை விட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிறது. எனக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என்னுடைய கணவர் மொஹம்மட் றிஸ்வான். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மொஹம்மட் அஷ்பான், மொஹம்மட் ஹனான். நான் ஆரம்பக் கல்வி முதல் உயர் தரம் வரை குருத்தலாவவை ப/ முஸ்லிம் தேசிய பாடசாலையில் கல்வி பயின்றேன்.


02. உங்களுடைய முதலாவது படைப்பு எதனூடாக, எப்போது ஆரம்பித்தது?

என்னுடைய முதல் படைப்பு ஒரு கலப்பு நிகழ்ச்சி. அதாவது சிங்களம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி. 2002 ஆம் ஆண்டு கொத்மலை FM இல் ஒலிபரப்பப்பட்டது. ஊவா சமூக வானொலி ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இரண்டு வருடங்கள் ஊடகப் பயிற்சி வழங்கப்பட்டது. அக்காலத்தில்தான் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. நாம் நிகழ்ச்சியை தொகுத்தும் தயாரித்தும் வழங்கினோம்.


03. வானொலித் துறைக்குள் எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?

பாடசாலைக் காலங்களில் ஒரு ஆசிரியையாக வர வேண்டும் என்பது என்னுடைய இலட்சியமாக இருந்தது. கல்விப் பொ.த. உயர் தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்றேன். உயர் கல்வியைத் தொடர்வதற்கு எண்ணியிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தேன். அவ்வேளை ப/ அல் இல்மா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஜனாப் ஜே.எம். ஜவுபர் அவர்கள் அப்போது ஊவா மாகாணத்தில் அமைக்க இருக்கின்ற வானொலிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தோடு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அவர் தபால் செய்தார். 

வானொலித் துறை எனக்கு புதிய விடயமாக இருந்தது. ஆரம்ப காலங்களில் அறிமுகமில்லாத துறைக்குள் செல்வதற்குத் தயக்கம் இருந்தது. அத்தோடு நான் அதிக கூச்ச சுபாவமுடையவள். பாடசாலை நாட்களில் மேடை ஏறியது கிடையாது. ஆசிரியர்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்பதற்குக்கூட தயங்குவார்கள். இப்படியிருக்க எப்படி வானொலியில் பேசுவது? எல்லோருக்கும் போலவே அது எனக்கும் ஒரு கேள்வியாக இருந்தது. வானொலிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகப் பரீட்சை இரண்டு நாட்களாக நடைபெற்றது. நானும் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றினேன். தமிழ் மொழி ஒலிபரப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட ஏழு பேரில் நானும் ஒருத்தியாக இருந்தேன். அன்று முதல் வானொலி பற்றிய தேடல் அதிகமாக இருந்தது. அத்தோடு என்னுடைய பெற்றோரின் ஒத்துழைப்பு எனக்குப் பூரணமாகவே கிடைக்கப்பெற்றது.


04. ஓர் ஒலிபரப்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்னவென்று சொல்ல முடியுமா?

நம்முடைய தாய் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. அதுவும் இலங்கை தமிழுக்கென்று தனியிடம் உள்ளது. உலகின் தலைசிறந்த அறிவிப்பாளர்கள் பட்டியலில் நம் நாட்டு அறிவிப்பாளர்கள் முதன்மை நிலையில் உள்ளார்கள். இதை யாராலும் மறுக்க முடியாது. எனவே மொழி வளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் வாசிக்க வேண்டும். மொழியை நேசிக்க வேண்டும். தேடலில் ஆர்வமுடையவர்களாக இருக்க வேண்டும். நேர முகாமைத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உண்மைத் தன்மையும் நடுநிலையும் கடைப்பிடிக்க வேண்டும். 


05. ஆரம்ப காலத்தில் வானொலித் துறையில் களம் அமைத்து தந்தவர்கள் யார்?

வானொலி துறைக்கு வருவதற்கு முன்னர் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய அநுபவம் எனக்கு இல்லை. வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டதுமில்லை. இத்துறைக்கு உள்வாங்கப்பட்ட பின்னர் ஊவா மாகாண கல்வி அமைச்சு எனது திறமைக்கான களத்தினை அமைத்துத் தந்தது. ஊவா சமூக வானொலியின் முன்னாள் முகாமையாளர்கள் மற்றும் தற்போதைய முகாமையாளர் ஆகியோரும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருந்திருக்கின்றார்கள்.


06. 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற நிகழ்ச்சி தவிர நீங்கள் தயாரித்து வழங்கும் அல்லது தொகுத்து வழங்கும் ஏனைய நிகழ்ச்சிகள் யாவை?

பிரதி வியாழன் தோரும் இரவு 9.15 முதல் 10.00 மணி வரை ஒலிபரப்பாகும், 'நெஞ்சம் மறப்பதில்லை' நிகழ்ச்சி என்னை அடையாளப்படுத்திய நிகழ்ச்சி. இதுதவிர பூவையர்  பூங்கா (பெண்கள் நிகழ்ச்சி), சித்திர சிட்டுக்கள் (சிறுவர் நிகழ்ச்சி), இன்று வரை இணையத்தளம், இலக்கியப் பார்வை, சிறுதூரல் ஆகிய நிகழ்ச்சிகளை தாயாரித்தும் தொகுத்தும் வழங்கி வருகின்றேன்.


07. ஊவா சமூக வானொலிக்கு நீண்ட காலமாக பங்களிப்பை நல்கி வரும் உங்களின் தற்போதைய பணிகள் என்ன? 

ஆரம்பத்தில் சமூகத் தொடர்பாட்டாளராக இணைந்துகொண்டேன். இப்போது சிரேஷ்ட நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கின்றேன். இதுதவிர ஊவா சமூக வானொலியும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைலழகமும் இணைந்து நடாத்தும் ஊடக கற்கை நெறிக்கு வளவாளராகவும் இருக்கின்றேன். ஊவா சமூக வானொலியின் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் பெண்கள் சிறுவர் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகவும் இருக்கின்றேன். 2003 இல் ஆரம்பித்த இந்தப் பயணம் 2019 இலும் அதாவது சுமார் 16 வருட காலம் தொடர்ந்து செல்கின்றது என்பதில் உண்மையில் மிகுந்த மனநிறைவடைகின்றேன்.


08. நீங்கள் பாத்திரமேற்று நடித்த நாடகங்களின் பெயர்களைக் குறிப்பிட முடியுமா?

முதன் முதலில் வானொலி நாடகத்தில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவு வழங்கியது. வளர்பிறை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள் எனக்கு ஊக்கத்தை தந்ததோடு அவர் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சந்தர்ப்பத்தையும் வழங்கினார். என்னுடைய குரலை உலகரியச் செய்தவர்களில் இவரும் ஒருவர். நான் நடித்த நாடகங்கள் நிலைமாற வேண்டும்இ நெஞ்சுப் பொறுக்குதில்லையே ஆகியவையாகும். இந்த நாடகங்களை மரீனா இல்யாஸ் ஷாபி அவர்கள் எழுதியிருந்தார்.


09. ஓர் அறிவிப்பாளராகவும் நாடக நடிகராகவும் இரு வேறு பரிணாமங்களில் உங்களால் எவ்வாறு ஈடுபட முடிகிறது?

ஒரு அறிவிப்பாளர் என்ற வகையில் குறுகிய வட்டத்திற்குள் இருக்க விரும்பவில்லை. வானொலி நாடகத்தில் நடிப்பது ஒரு புதிய அநுபவம். அத்தோடு அது எனக்கு மிகவும் பிடித்த விடயம். எனக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டுடிருக்கின்றேன். இவ்விரு பரிணாமங்களும் என் வாழ்க்கையோடு ஒன்றிப்போயுள்ளது. 


10. உங்கள் வாழ்வில் நீங்கள் ஒலிபரப்புத் துறையில் எதிர் நோக்கிய சவால்கள் எவை?

பெண்ணாக இருப்பதே சவால்தான். ஊடகத் துறையிலும் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கின்றேன். உணர்கின்ற ஒவ்வொரு தருணமும் ஒரு படி முன்னேறுகின்றேன். 

சவால்கள் அத்தனையும் சாதிப்பதற்கே என்பது என்னுடைய தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரையில் என்னுடைய குடும்பத்தினர் விஷேடமாக காலஞ்சென்ற என்னுடைய தந்தை அதிக அன்பையும் ஆர்வத்தையும் ஊட்டி என்னை வளர்த்தவர். என்னுடைய தாய் எப்போதும் எனக்குப் பக்க பலமாக இருப்பவர்இ என் உடன் பிறப்புக்களின் பாசத்தால் பல வேளைகளில் அதிசயித்திருக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் என்னுடைய பிள்ளைகளின் அன்பும் ஒத்துழைப்பும் தாராளமாகவே கிடைக்கின்றது. ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் பல பெண்களுக்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு கிடைக்காததால் அவர்களுடைய திறமைகள், கனவுகள் புதைக்கப்படுகின்றது. அதுவே பெரிய சவாலாக இருக்கிறது. ஒரு பெண் ஊடகவியாலாளர் என்ற வகையில் இதனை நான் நன்கறிவேன்.


11. உங்கள் வானொலியில் ஒலிபரப்பப்படும் மெல்லிசைப் பாடல்கள் பற்றி?

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் போது பாடல் தெரிவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பேசும் விடயமும் பாடலும் பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் நேயர்களும் நம்முடன் இருப்பார்கள். ஊவா சமூக வானொலியின் பாடல் தெரிவுகள் அருமை என நேயர்கள் பாராட்டுகின்றார்கள். நாம் பாடல் தெரிவில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.


12. அந்தக் காலங்களில் போல் வானொலிகளில் உள்நாட்டுப் பாடலாசிரியர்களின் பாடல்களுக்குப் போதியளவு வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுகின்றதே அதுபற்றி?

நம் நாட்டுப் பாடல்களுக்கு மட்டுமல்ல நம் நாட்டின் ஏனைய படைப்புகளுக்கும் வானொலியில் களம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதில் இன்னுமொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். தென்னிந்திய பாடலாசிரியர்களுக்கு சவால் விடுமளவிற்கு திறமையான பாடலாசிரியர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். 

ஒரு பாடலுக்கு பாடல் வரிகள் மட்டும் போதுமானதா? வரிகளுடன் இசை, குரல் இவை மூன்றும் சரியாக அமையும் பட்சத்தில் பாடல் வெற்றி பெறும். அப்படிப்பட்ட சூழல் நமது நாட்டில் உள்ளனவா என்றும் யோசிக்க வேண்டும். அப்படியே பல போரட்டங்களுக்கு மத்தியில் பாடல்கள் வெளிவந்தாலும் தென்னிந்திய பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் நாட்டு பாடல்களுக்கு நேயர்கள் மத்தியில் வழங்கப்படுகிறதா? எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது? என்பதையும் கவனிக்க வேண்டும். 

உள்நாட்டு உற்பத்திப் பொருட்களைவிட வெளிநாட்டு உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதில் காட்டுகின்ற ஆர்வம் போல் தான் உள் நாட்டு படைப்புக்களுக்கும் நேர்ந்திருக்கிறது. இது ஒரு துரதிர்ஷ்டமான நிலை. 

ஊவா சமூக வானொலி தயாரிக்கும் பல நிகழ்ச்சிகளில் நம் நாட்டு படைப்பாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகின்றோம். நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியும் அவ்வாறானதொரு நிகழ்ச்சிதான். படைப்பாளர்களுக்குத் தொடர்ந்தும் நாம் சந்தர்ப்பத்தை வழங்குவோம். அத்தோடு களம் கிடைக்கவில்லை என்று சொல்பவர்கள் தமக்கு கிடைக்கின்ற களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கின்றோமா? என்று சிந்திக்க வேண்டும்.


13. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதிலிருந்து பெண்கள் மீண்டெழ வேண்டும் என்ற நோக்கில் ஓர் ஒலிபரப்பாளராக நீங்கள் முன்னெடுக்கும் விடயங்கள் எவை?

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன என்று ஆழமாய் தேடிப் பார்க்கும் போது பெண்களும் காரணமாக இருக்கின்றார்கள். எனவே பெண்களை மட்டுமல்ல இந்த விடயத்தில் சமூகத்தையும் விழிப்புணர்வூட்ட வேண்டும். பூவையர் பூங்கா பெண்கள் நிகழ்ச்சியில் இதற்காக நான் குரல் கொடுத்தும் இருக்கின்றேன். இதனை ஊவாவின் நேயர்கள் நன்கறிவார்கள். தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்.


14. வானொலித் துறையில் நீங்கள் இதுவரைக்கும் பெற்ற பட்டங்கள்இ விருதுகள் யாவை?

2005 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சர் (முன்னாள்) கௌரவ விஜித் விஜிமுனி சொய்சா அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார். 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். 2016 ஆம் ஆண்டு கிழக்கில் லக்ஸ்டோ மீடியா நிறுவனம் 'கலைச்சுடர்' என்ற பட்டத்தையும் விருதும் வழங்கி கௌரவித்தார்கள். 2019 ஆம் ஆண்டு இவ்வருடம் ஊடகத் துறைக்கான ஜனாதிபதி விருது முதல் முறையாக கிடைக்கப்பெற்றது. 2019 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் 2018 ஆம் ஆண்டில் ஒலிபரப்பான சிறந்த கல்வி நிகழ்ச்சிக்கான (தமிழ்) விருது கிடைக்கப் பெற்றது. இவற்றையெல்லாம் ஊடகத் துறையில் எனக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரமாகக் கருதுகின்றேன். இன்னும் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருக்கின்றது.


15. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களிப்புச் செய்த அநுபவம் உண்டா?

முகநூல்; தொலைக்காட்சியான தாருஸ் ஸபா தொலைக்காட்சியில் சாகரம் என்ற நிகழ்ச்சியில் என்னை நேர் கண்டார்கள். இதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியது இல்லை.


16. இணைய வானொலி, இணைய தொலைக்காட்சி இவற்றுக்கு தற்காலத்தில் போதியளவு நேயர்கள் உண்டா?

இல்லை என்று சொல்ல முடியாது. காலத்திற்கேற்ப ஊடகத்துறையில் ஏற்பட்ட மாற்றம் இணைய ஊடகங்கள் என்று சொல்லலாம். தமிழன் 24, தாய் டீவீ (தொலைக்காட்சி) ஆகிய இணையத்தள ஊடகங்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றேன். இந்த நிகழ்ச்சிகளுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் அதிக வரவேற்பு கிடைக்கின்றது.


17. இறுதியாக ஒலிபரப்பு துறையில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் ஊடகத் துறையில் பாண்டித்தியம் பெற்றவள் இல்லை என்று கருதுகின்றேன். இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. நான் பின்பற்றுகினற சில விடயங்களை குறிப்பிடுகின்றேன். மொழியை நேசியுங்கள், வாசியுங்கள், தேடுங்கள். குறகிய வட்டத்திற்குள் நிற்காமல் எல்லாத் துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். வானொலி நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

36. சுமைரா அன்வர் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.04.21

சுமைரா அன்வர் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்களைது பூர்வீகம், ஆரம்பக் கல்வி, பல்கலைக்கழக வாழ்வு பற்றிக் கூறுங்கள்?

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மல்லவப்பிட்டி என்னும் கிராமமே எனது பிறப்பிடமும் வாழிடமுமாகும். எனது தந்தை மர்ஹும் ஏ.எம். அன்வர் பரகஹதெனிய கதுருஅங்கவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனது தாய் மர்ஹுமா சுஹுதா அன்வர் தெலியாகொன்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனது பெற்றோர் ஆசிரியர்கள். எனக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

ஆரம்பக் கல்வி முதல் உயர் தரம் வரை குருநாகல், தெலியாகொன்னை, ஹிஸ்புல்லா மத்திய கல்லூரியிலேயே கல்வி கற்கும் பேறு எனக்குக் கிடைத்தது. ஆரம்ப காலத்தில் கல்லூரியில் சிறந்த பேச்சாளராக மிளிர்ந்த போதும் பின்னர் எழுத்துத் துறையிலேயே ஆர்வம் கூடியது. நான் க.பொ.த. உயர்தர கலைப்பிரிவு மாணவியாக இருக்கும் போது கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்ட வெளியீடான ''அரும்புகள்'' கவிதைத் தொகுப்பின் பங்காளியாகும் வாய்ப்பெனக்குக் கிடைத்தது. அத்தோடு இதேகால கட்டத்தில் பல போட்டிகளில் மாவட்ட/ தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றேன்.

* 1989 இல் முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சு நடாத்திய மீலாத் கட்டுரைப் போட்டியில் தேசிய ரீதியல் மூன்றாமிடம்
* 1990 ஆம் ஆண்டு வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாணத்துக்கு புகழீட்டித் தந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் பாராட்டும் சான்றிதழும்
* 1990 இல் பல்லேகலயில் நடைபெற்ற கிராமோதயம் நிகழ்ச்சித் திட்டத்தையொட்டி பாடசாலை மாணவரிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மாகாணத்தில் முதலாமிடம்/ தேசிய ரீதியில் இரண்டாமிடம்
* 1991 இல் நடைபெற்ற கிராமோதய கட்டுரைப் போட்டியில் மாகாணத்தில் முதலிடம்
* 1991 'மஹாபொல' நிதியத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு கட்டுரைப் போட்டி சிரேஷ்டப் பிரிவில் முதலாமிடம்
* 1991 உயர் கல்வி அமைச்சின் வடமேல் மாகாணம் (மாகாண கல்விப் பணிமனை) நடாத்திய தமிழ் மொழித் தினப் போட்டி கவிதை (தனி) - நான்காம் பிரிவு போட்டியில் மாகாணத்தில் முதலிடமும் இதே பிரிவில் கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடமும்
* 1991 இல் ஈரான் தூதரகத்தின் கலாசாரப் பிரிவு ஏற்பாடு செய்த கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்
* 1991 தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த கட்டுரைப் போட்டியில் சிறப்பு சான்றிதழ்

என உயர்தர கலைப் பிரிவு மாணவியாக இருந்த போதே ஆக்கத் துறையில் நிறைய ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. உயர் தரத்தில் பாடசாலையின் சாதனை பெறுபேறாக 3 ஏ, பீ பெற்று பேராதனைப் பல்கலைக்கழகம் நுழைந்தேன்.

1992 - 1993 கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பிரிவில் இணைந்த எனக்கு எங்கள் தமிழ் ஆசான் கலாநிதி துரை மனோகரன் அவர்களின் உற்சாகம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 'கவிஞர் சுமைரா' என்று ஆசான் அழைக்கும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். 'சங்கப் பலகையில்' காட்சிப்படுத்தப்படும் எனது கவிதைகள் எனக்குள் இன்னும் எழுச்சியை ஏற்படுத்தின. மேலும் எங்கள் பேராசான் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்களின் முன்னிலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 'கவிதை பற்றி கதைக்கலாம் வாருங்கள்' என்ற கள நிகழ்வு எனக்கு மிகவும் பயனுள்ள அனுபவமாகியது.

மேலும் இக்காலப் பகுதியில் மீண்டும் சிந்தனைவட்ட வெளியீடான 'பாலங்கள்' கவிதைத் தொகுப்பில் எனது கவிதைகளும் இடம்பெற்றன. அத்தோடு பேராசிரியர் கைலாசபதி நினைவாக பல்கலைக்கழக மாணவரிடையே நடாத்தப்பட்ட திறனாய்வுக் கட்டுரைப் போட்டியில் ஈழத்து மூத்த படைப்பாளர் மதிப்பு மிகு டொமினிக் ஜீவா ஐயா அவர்களின் 'தண்ணீரும் கண்ணீரும்' நூல் பற்றிய எனது திறனாய்வுக் கட்டுரை (பேராதனைப் பல்கலைக்கழகம்) இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

பல்கலைக்கழக 'முஸ்லிம் மஜ்லிஸ்' நிகழ்ச்சி, இளங்கதிர் சஞ்சிகை என் இலக்கியப் பணிக்கு களந்தந்தன. மேலும் தமிழ் பாட வேளையும், நூலகமும் உதவின. கல்வித் தகைமை எனும் போது குறிப்பாக கலைமாணி, பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, தொடர்பு சாதனத் துறை டிப்ளோமா ஆகியவற்றைப் பூரணப்படுத்தியுள்ளேன்.


02. கல்வித் துறையில் குறிப்பாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டமைக்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றனவா?

1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆந் திகதி நான் கல்வி கற்ற எனது கல்லூரிக்கே ஆசிரிய (முதல்) நியமனம் பெற்றேன். எனது பெற்றோருக்கும் எனது சகோதரிக்கும் எனக்கும் முதல் நியமனம் இதே பாடசாலை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வானொலி அறிவிப்பாளராக அல்லது பத்திரிகையாளராக வரவேண்டுமென்பதே எனது ஆசை. ஆனால், எனது பெற்றோரைப் போல் நானும் ஆசிரியப் பணியில் இணைய வேண்டுமென்பது அல்லாஹ்வின் நாட்டம் போலும். போட்டிப் பரீட்சைக்கு முகங்கொடுத்து, சித்தியடைந்து, நேர்முகத் தேர்வில் அதிகூடிய புள்ளி பெற்று ஆசிரியத்தில் இணைந்து 21 வருட சேவையைப் பூர்த்தி செய்து தற்போது (2018) ஓய்வும் பெற்றுவிட்டேன். இறை நாட்டமும் எனது வீட்டுச் சூழலும் என்னை ஆசிரியப் பணியில் இணைத்துவிட்டது. நான் 11 ஆம் ஆண்டில் கற்கும் போது எனது தமிழ் மொழிப்பாட ஆசானுக்கு மாற்றல் வந்தது. அப்போது அவர் 10 ஆம் ஆண்டு வகுப்புத் தலைவியை அழைத்து அவர் கரத்தை என் கரம் மீது வைத்து நான் சென்ற பின் சுமைராவிடம் தமிழ் படியுங்கள் என்றார்கள். ஆசிரியர் அன்றே என்னை இனங்கண்டார்கள் போலும். இன்று இசைக்கும் எமது கல்லூரி கீதத்தை இயற்றுவதில் எனக்கும் பங்காற்றக் கிடைத்ததை பெறும் பேறாக நினைக்கிறேன்.


03. உங்களது எழுத்துலக ஆரம்பம் பற்றிக் கூறுங்கள்?

நான் எட்டாந் தரத்தில் கற்கும் போது தமிழ் பாடவேளையில் எனது பேரன்புக்குரிய புவணேஸ்வரி நாகலிங்கம் ஆசிரியை (சுழிப்புரம் யாழ்ப்பாணம்) பறவையொன்றைப் பற்றிய கவிதையை வாசித்து பின் அதுபோல் எம்மிடமும் எழுதுமாறு கூறினார். அடுத்த நாள் கவிதையோடு வந்தவள் நான் மட்டுமே. அன்று ஆசிரியை என்னை மிகவும் பாராட்டியமை எனது எழுத்தார்வத்தைத் தூண்டியது. தொடர்ந்து எனது பெற்றோரும் எனது உயர்தர வகுப்பாசிரியை திருமதி நசீரா அஸீஸ் அவர்களும் எனை உற்சாகப்படுத்தினர். எனது முதலாவது ஆக்கம் 1986 ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரி 'சிறுவருலகம்' பகுதியில் 'யார் ஏழைகள்?' என்ற தலைப்பில் வெளிவந்தது.


04. படைப்பிலக்கியத் துறையில் சுமார் எத்தனை வருட காலம் பணியாற்றி வருகின்றீர்கள்? 

1986 ஆம் ஆண்டிலிருந்து இலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 33 வருடங்களாக இலக்கியத்தில் ஈடுபட்டு வருகின்றேன்.


05. உங்கள் எழுத்து முயற்சிகளுக்கு காரணமாக இருந்தவர்கள் பற்றி?

முதல் காரணம் அல்லாஹ்வின் அருள்தான். ஏனென்றால் அருமையான ஆசிரியப் பெற்றோரை எனக்கு அருட்கொடையாய்த் தந்தான். எனது தந்தை சிறந்த வாசகன். தாயாரோ வானொலி நாடகங்களில் (1971 / 1972) பங்கேற்றவர். அத்தோடு மொழிப்பாட ஆசிரியர். இலக்கிய ரசனை மிகுந்தவர். போட்டிகளுக்கு தயார்படுத்துவது, நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கத் தூண்டியது, சிறந்த வீட்டுச் சூழலை அமைத்துத் தந்தமையும் எனதன்பு மாமா 'தெங்குச் சோலையான்' மர்ஹும் அ.லெ.மு. ராஸிக், நவமணி பத்திரிகையின் ஆசிரியர் மதிப்பு மிகு என்.எம். அமீன் அவர்கள், கலாபூஷணம் மர்ஹும் பி.எம். புன்னியாமீன் அவர்கள், திருமணத்தின் பின் என் எழுத்துப் பணிகளுக்கு பக்க பலமாக விளங்கும் என் அன்புக் கணவர் ஏ.ஜே.எம். ரமீம், என் ஆக்கங்களை வாசிக்கக்கேட்டு கருத்துக்கூறி உற்சாகப்படுத்தும் அருமை மகன் எம்.ஆர்.எம். உஸ்மான் மற்றும் என் சகோதரர்களும் நண்பிகளும் என்னை எழுதத் தூண்டியவர்கள்.


06. இதுவரை நீங்கள் எழுதி வெளியிட்ட படைப்புக்கள் எவை?

01. எண்ணச் சிதறல்கள் (கவிதைத் தொகுதி) - 2003 சிந்தனை வட்டம்
02. விடியலில் ஓர் அஸ்தமனம் (நாவல்) - 2009 புரவலர் புத்தகப் பூங்கா
03. வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (நாவல்) - 2011 சிந்தனை வட்டம்


07. கவிதை எழுதும் ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

நிறைய வாசிப்பேன். அதுபோல் ஒவ்வோரு நிகழ்வையும் உன்னிப்பாய்க் கவனிப்பேன். உள்வாங்கிய விடயங்களை எழுத்தில் பதித்துக் கொள்வேன். மீண்டும் மீண்டும் வாசித்து செப்பனிடுவேன். பல கவிதைகள் எதுவித மாறுதலுமில்லாமல் இயல்பாய் அமைந்துவிடும். பேராதனைப் பல்கலைக்கழக சங்கப் பலகை என்னைப் புடம்போட்டது. வானொலி மங்கையர் மஞ்சரி, தினகரன் கவிதைப் பகுதி என்பனவும் என் கவியாற்றலை வளர்க்க களந்தந்தன.


08. உங்களது முதலாவது நூல் வெளியீடான 'எண்ணச் சிதறல்கள்' கவிதைத் தொகுதியின் பேசு பொருட்கள் எவை?

பொதுவாக தற்கால மனித மனங்களின் போக்கும் செயற்பாடுகளும் எனது கண்ணோட்டத்தில் பேசப்படுகிறது. பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் (பெண் பார்க்கும் படலம்), மலையக மக்களின் துயரம் (மலையக மைந்தர்களே, பார்வதி கொழுந்து பறிக்கிறாள்), தனி மனித உணர்வோடு அதிகம் தாக்கம் செலுத்தும் தாய், தந்தை, நட்பு (மேதினியின் புனிதம் அம்மா, தந்தையே ஆலமரமாக, நட்பு (பூ)) என்பன பற்றிப் பேசப்படுகிறது.


09. நீங்கள் இதுவரை எழுதிய கவிதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை எது? ஏன்?

எனது கவிதைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும்தான். எனினும் 'நவீனம்' என்ற கவிதையை மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் அக் கவிதை இன்றைய நவீன யுகத்தை அச்சொட்டாக வெளிப்படுத்துகிறது. இதில் சில வரிகளை இங்கே தருகிறேன்.

இரும்பு மனிதன்
இயந்திர வாழ்க்கை
கணனிப் பாஷை
செய்மதி உறவு
இருபதாம் நூற்றாண்டின்
நவீன யுகம்..
.............
சுவாசச் சேமிப்பில்
நச்சுக் காற்றுலவும்
உணவாய்க் கிடைப்பதுவும்
இரசாயனக் கூட்டேதான்..


10. சிறுகதைக்கும், நாவலுக்கும் இடையில் எவ்வகையான வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

சிறுகதை வாமனம் (குறுகிய வடிவம்) என்றால் நாவல் விசுவரூபம் எனலாம். இன்னும் எளிமையாகச் சொல்வதானால் சிறுகதை குறுந்தூர ஓட்டம். நாவல் நெடுந்தூர ஓட்டம். சிறுகதை எழுதுவது மிகவும் அவதானமான விடயம். கத்தியின் மேல் நடப்பது போன்றது. குறைவான பாத்திரம், மொழிச் செம்மை என்பன சிறப்பாக அமைய வேண்டும். பாத்திர வார்ப்பு இயல்பாக இருக்க வேண்டும். மொழியோ உயிர்ப்புள்ளதாக இருக்க வேண்டும். மொத்தத்தில் கட்டிறுக்கத் தன்மையுடன் விளங்க வேண்டும். எனவே, ஆரம்பம் முதல் முடிவு வரை (இறுதி வரை) இலக்கைவிட்டு நகராத போக்கு சிறுகதைக்கு வேண்டும். பிரசார வாடை அடிக்காமலும் கதைப் பின்னலில் தொய்வில்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த 'இறுக்கம்' நாவலில் இல்லை. நாவலுக்கென்று தனித்துவங்களிருந்தாலும் மிகவும் 'சுதந்திரமான' மன இறுக்கமற்ற உணர்வுடன் நாவல் படைக்கலாம். சிறுகதை போல் தனியொரு விடயமன்றி நாவலின் போக்கில் நிறைய விடயங்களை வெளிப்படுத்தலாம்.


11. இதுவரை வாசித்த படைப்புக்களில் உங்களை மிகவும் கவர்ந்த படைப்பு எது? உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

இதுவரை ஏறாளமான படைப்புக்களை வாசித்துள்ளேன். அவை யாவுமே ஏதோவோர் விதத்தில் என்னைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக இந்த எழுத்தாளருடைய படைப்புத்தான் என்னைக் கவர்ந்ததென வரையறுக்க முடியாது.


12. சமகால இலக்கியங்கள் மீதான உங்களது பார்வை எப்படி இருக்கிறது?

சமகால இலக்கியங்களைப் பார்த்து நான் பிரமித்துப் போகிறேன். யதார்த்தம், துணிவு, சிந்தனைத் தெளிவு நிறைந்தவையாக அவை விளங்குகின்றன.


13. உங்களுடைய நாவல்களுக்கான கருவை எப்படிப் பெற்றுக்கொள்கிறீர்கள்?

எனது நாவலுக்கான கருவை எமது சமூக சூழலிலிருந்தே பெற்றுக் கொள்கிறேன். எனது ஆசிரியப் பணியும் அதனோடு தொடர்புடைய தொடர்பாடல்களும் கூட இதற்குப் பலம் சேர்க்கின்றது.


14. இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுவரும் தற்கால முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய உங்களது கருத்து என்ன?

தற்போது முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் அதிகமதிகமாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கல்வித் தகைமை அதிகரித்தமையும் தொழிநுட்பப் பாவனை விரிவடைந்தமையும்  பக்கபலமான அனுசரணை கிடைக்கின்றமையும் ஊடகங்கள் வாய்ப்பின் வாசலைத் திறந்திருக்கின்றமையும் இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இதனால் தயக்கம் நீங்கி துணிவுடன் தமது கருத்தை ஆழமாகப் பதிக்கின்றனர். மேலும் வசதி வாய்ப்புள்ளவர்கள் தமது சொந்த செலவில் படைப்புக்களை நூலுருப்படுத்தி மிகவும் வெற்றிகரமாக வெளியீட்டு நிகழ்வுகளை நடாத்துவது சாதாரண நிகழ்வாகிவிட்டது. முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் தமத அபரிமிதமான திறமையால் தனி முத்திரை பதித்து வருகின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.


15. படைப்புகளுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

விமர்சனம் என்பது படைப்பாளனுக்கு ஊட்டச்சத்து போன்றது. சிறந்த விமர்சனம் படைப்பாளனை மென்மேலும் மெருகேற்றுகிறது. நியாயமான, நடுநிலைமையான விமர்சனங்களை நானும் வரவேற்கிறேன். ஆனால் எமது படைப்பெல்லாம் எமது ஷஷசொந்த அனுபவம்' என்ற கண்ணோட்டத்தில் விமர்சிக்கப்படும்போது அசௌகரியமாக இருக்கிறது.


16. எழுத்து என்பது தவம் என்கிறார்கள். அது உண்மையா?

ஆமாம். எழுத்து என்பது தவம்தான். பவித்திரமும் பக்குவமும் இருந்தாலேயே 'படைப்பு' புத்துயிர்ப்புடன் விளங்கும். எண்ணம், நோக்கு, இலக்கு எல்லாம் உயரியதாகவும் விழுமியங்களுக்கு உரமூட்டுவனவாகவும் இருக்க வேண்டும். 'எழுத்தாளன் சமூக வைத்தியன்'. அவனது எழுத்து சமூகத்துக்கு 'மருந்தாகவும்' உடல், உள வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான நல்ல சிந்தனைக்கும் வழி வகுப்பதாகவும் இருக்க வேண்டும்.


17. ஒரு ஆசிரியராக இளம் தலைமுறையினரின் எழுத்துக்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இன்றைய இளந்தலைமுறையினர் அதிநவீன தொழிநுட்ப வலைப்பின்னலின் ஆகர்ஷிப்பில் மூழ்கித் திளைக்கின்றனர். அதனால் அவர்கள் எழுத்துத் துறையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு பல்கிப் பெருகியுள்ளது. இச்சாதகமான நிலையை பலர் சிறப்பாகப் பயன்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஷஷஅவசரப்படும்' சிலர் தரமான இலக்கியங்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுமில்லை. மொழியாற்றலை விருத்தி செய்வதுமில்லை. தமது படைப்புக்களை மீள் வாசிப்பு செய்வதுமில்லை. ஊடகங்களில் தமதாக்கம் வெளிவருவதில் மட்டுமே குறியாக இருப்பதால் தமது வளர்ச்சியைத் தாமே தடுத்தும் விடுகின்றனர்.


18. இறுதியாக வெளிவந்த உங்கள் 'வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும்' என்ற நாவல் பற்றி என்ன சொல்வீர்கள்?

எனது இரண்டாவது நாவல் 'வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும்'. இந் நாவலினூடாக கணவன் - மனைவி ஆகியோருக்கிடையிலான கருத்து முரண்பாடுகளினூடாக சமூக அவலங்கள் பலவற்றை என்னாலியலுமான அளவு முன் வைத்துள்ளேன். குடும்பத்தில் (மூத்த) மகன் எதிர்நோக்கும் துயரங்கள், சீதனப் பிரச்சினை, தொழில் புரியும் பெண் எதிர் நோக்கும் சிக்கல், நட்பின் தாக்கம்.. என பல விடயங்களினூடாக வாழ்க்கைப் போராட்டத்தைப் பேசியுள்ளேன்.


19. இதுவரை கால இலக்கிய வாழ்வில் நீங்கள் சந்தித்த கசப்பான சம்பவம் ஏதும் உண்டா?

நிறையவே உண்டு. எனினும் அவற்றை நான் படிப்பினையாக எடுத்துக் கொண்டு எனது வாழ்க்கைப் பயணத்தில் எனக்குக் கிடைத்த புதிய சமிக்ஞையாக எண்ணுகிறேன். எடுத்துக் காட்டாக ஒரு சிறிய சம்பவத்தைக் கூறுகிறேன். ஒருமுறை எனது புத்தக வெளியீட்டின் போது அழைப்பிதழில் இருவரது பெயர்கள் விடுபட்டுப் போனது. இந்த விடயம் அழைப்பிதழ் பகிர்ந்த பின்னரே என் கவனத்திற்கு வந்தது. உடனே நான் உரியவர்களிடம் நிதானமாக எடுத்துரைத்து மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் படித்தவர்கள்தான். ஆனாலும் கடைசிவரை நான் திட்டமிட்டுச் செய்த பெருங்குற்றமாகவே இதனைக் கருதினர். இந்தச் சம்பவம் எனக்கு ஒரு எச்சரிக்கையாகிவிட்டது. எந்த விடயத்தையும் ஒன்றுக்குப் பத்தாக சரிபார்க்கப் பழகிக் கொண்டேன்.


20. உங்களுடைய அடுத்தகட்ட இலக்கிய முயற்சிகள் யாவை?

சிறுவர் இலக்கியத்தின் மீது எனக்கு அதீத ஆர்வமிருக்கிறது. சிறுவர்களுக்காக நிறைய கதைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளேன். வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் முதல் பரிசை வென்ற சிறுவர் பாடல் தொகுதியும் கதைகளும் நூலுருப்படுத்தி சின்னஞ் சிறார்களுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாளைய அவா. அத்தோடு என் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுத்துப் பிரதியாக இருக்கும் நாவலையும் நூலுருப்படுத்த ஆவலாயுள்ளேன். சிறுவர் பாடலை ஒலிநாடாவாக வெளியிடும் ஆசையுமுள்ளது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சிறந்த அனுசரணை கிடைத்தால் இப் படைப்புக்கள் யாவும் வெளிவரும். அதற்கான வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன்.


21. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாராட்டுக்கள் என்னும் போது ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரி - பாடசாலை கீதத்தை இயற்றுவதில் பங்களித்தமைக்காக அதிபர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மல்லவப்பிட்டியில் அமைந்துள்ள அல்ஹம்றா பாடசாலையின் பாடசாலை கீதத்தை இயற்றுவதிலும் பங்காற்றக் கிடைத்தை மகிச்சியாக எண்ணுகிறேன்.

2009 - கல்வித் திணைக்கம் ஏற்பாடு செய்த ஷஷமதர் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டத்திற்காக மாணவர் பங்குபற்றிய நாடகத்துக்கான நாடகப் பிரதியாக்கத்திற்கான பாராட்டுச் சான்றிதழ் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.

ஏராளமான போட்டிகளில் பரிசு பெறும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. சிலதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சிறுவர் இலக்கியத்திற்கான பரிசு:-
* 2004, 2005, 2008 வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டிகளில் முதலாமிடம்.
* 2008 கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமை அமைச்சினால் அரச ஊழியர்களுக்கிடையில் நடாத்தப் பட்ட ஆக்கத் திறன் போட்டியில் சிறுவர் கதைகள் ஆறுதல் பரிசு.

சிறுகதைக்கான பரிசு:-
* 2007 வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் முதலாமிடம்.
* 2008 தேசிய இலக்கியப் பெரு விழாவின் பொருட்டு நடைபெற்ற போட்டியில் மாகாணத்தில் முதலாமிடம் ஃ தேசிய ரீதியில் இரண்டாமிடம்.

கவிதைக்கான பரிசு:-
* 1993, 2003, 2007, 2008 - வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் மாகாண ரீதியில் முதலாமிடம்.
* 2008 தேசிய கலை இலக்கியப் போட்டியில் இரண்டாமிடம்.

கட்டுரைக்கான பரிசு:-
* 1990, 1997, 2003, 2007, 2008 வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் முதலிடம்.
* 2007 கலாசார அலவல்கள் திணைக்களம் நடாத்திய போட்டியில் தேசிய ரீதியில் - முதலாமிடம்.

பாடலாக்கம்:-
* 2008, 2009 - வடமேல் மாகாண இலக்கியப் போட்டியில் - மாவட்டத்தில் முதலாமிடம், மாகாணத்தில் இரண்டாமிடம்.

அச்சுப் புத்தகம்:-
* 2004 - வடமேல் மாகாண இலக்கிய போட்டியில் - சிறந்த கவிதை நூல் (எண்ணச் சிதறல்கள்)
* 2010 - வடமேல் மாகாண இலக்கிய போட்டியில் - சிறந்த நாவல் (விடியலில் ஓர் அஸ்தமனம்)


22. இறுதியாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

கலை இலக்கியத்துறையில் ஈடுபடக் கிடைப்பது உண்மையில் பெரும் பாக்கியமே. யாருடைய மனதையும் நோவிக்காது சமூகத்துக்கு பயனுள்ள செய்தியை முன் வைப்பதனூடாக எனது இலக்கியப் பணியை அர்த்தமுள்ளதாகவும் அமைதியாகவும் முன்னெடுத்துச் செல்லவே விரும்புகிறேன். இந்நேரத்தில் இதுவரை எனக்குக் களந்தந்து கொண்டிருக்கும் சகல ஊடகங்களுக்கும் நான் ஏற்கனவே பெயர் குறிப்பிட்டுள்ள 'இலக்கிய ஆளுமைகளுக்கும்' எனது முதலாவது நாவலை இலவசமாக வெளியீடு செய்து பேருபகாரம் புரிந்த கௌரவ, புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கும் மதிப்பு மிகு கலைஞர் கலைச் செல்வன் அவர்களுக்கும்; பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய ஜெயந்திலா மெடம் (வடமேல் மாகாண கல்வித் திணைக்களம்) அவர்களுக்கும், இந்த அருமையான நேர்காணல் மூலம் எனக்கு கவிதாயினி, பன்னூலாசிரியை சகோதரி ரிம்ஸா முஹம்மத்துக்கும் என் இதயபூர்வமான நன்றியைத தெரிவித்துக்கொள்கிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்