எழுத்தாளர் பவானி சற்குணசெல்வம் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?
02. உங்களது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது ஆரம்பக் கல்வியைப் பதுளை கன்னியாஸ்திரியர் பாடசாலையில் கற்று, பின்னர் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் கற்றேன். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டேன். இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் பட்டம் பெற்று, அங்கு விரிவுரையாளராகவும் கடமையாற்றினேன்.
திருமணத்திற்குப் பின்னர் நெதர்லாந்திற்குப் புலம்பெயர்ந்தேன். அங்கு டச்சு மொழியைத் திறம்படக் கற்றுக்கொண்டேன். மேலும் உளவியல் மற்றும் சட்டத்துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றேன். நெதர்லாந்தில் அரச நிறுவனங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளேன். பின்னர் அகதிகளுக்கான உதவி அலுவலகத்திலும் பணியாற்றினேன். தற்போது அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறேன்.
தமிழில் மட்டுமன்றி டச்சு மொழியிலும் எனக்கு சிறப்பான திறமைகள் உள்ளன. புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர்களின் தமிழ் வளர்ச்சியில் அயராது பாடுபட்டு வருகிறேன். தமிழ் பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றி மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளேன். தமிழ் மாணவர்களுக்கு நாடகம், நாட்டியம், இசை போன்றவற்றைப் பயிற்றுவித்து அவர்களை முன்னேற்றியுள்ளேன். புலம்பெயர்ந்த மக்கள் தமிழையும் சமயத்தையும் இரு கண்களைப் போலப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.
03. உங்களை எழுத்தாளராக வளர்த்த பின்னணி என்ன? விசேடமாக உங்களது பல்கலைக்கழக வாழ்வு உங்களுடைய எழுத்தாற்றலை எவ்வகையில் மேம்படுத்தியது?
சிறு வயதிலிருந்தே தமிழ் மொழியிலும் கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. எனது பாடசாலை ஆண்டு மலர்களுக்கு தொடர்ச்சியாக எழுதி வந்தேன். பின்னர் பல்கலைக்கழக இந்து மாமன்றம் வெளியிட்ட 'இந்துநதி' பத்திரிகையின் உதவி இதழாசிரியராகவும் கடமையாற்றினேன்.
04. ஆரம்ப காலங்களில் உங்களை எழுத ஊக்கப்படுத்தியவர்கள் யார்?
சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது பள்ளிப் பருவத்தில் தமிழ் ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும் பாராட்டும் என்னை எழுதுவதற்கு மேலும் தூண்டியது. குறிப்பாக, நான் எழுதிய கவிதைகள், கட்டுரைகளை ஆசிரியர்கள் வாசித்து பாராட்டியபோது, தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் உருவானது. பாடசாலை ஆண்டு மலர்களில் எனது படைப்புகள் வெளிவந்ததும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. பின்னர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, நண்பர்களும், வாசகர்களும் என்னுடைய எழுத்தார்வத்தை மேலும் வளர்த்தனர். இவ்வாறு சிறிய வயதில் விதைக்கப்பட்ட எழுத்தார்வம், காலப்போக்கில் எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியது.
05. முதலாவது எழுத்து அனுபவம் எப்படி இருந்தது?
ஆரம்ப காலங்களில் பாடசாலை இதழ்களிலும் பல்கலைக்கழக இதழ்களிலும் மட்டுமே எழுதி வந்தேன். இலக்கிய எழுத்தாளராகத் தொடர்ந்து எழுதத் தொடங்கியது சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான். அதற்கு முன்னர் குடும்பம், குழந்தைகள், அவர்களுக்கான நேரம், உத்தியோகம் என வாழ்க்கைச் சூழல் அமைந்திருந்ததால் இலக்கியத் துறையில் முழுமையாக ஈடுபடுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. குழந்தைகள் வளர்ந்த பின்னரே மீண்டும் எழுதத் தொடங்கினேன்.
ஆரம்பத்தில் மீண்டும் எழுதுவது சற்றுச் சவாலாக இருந்தாலும், மிகக் குறுகிய காலத்திலேயே இலக்கிய உலகில் எனக்கென ஒரு இடத்தைப் பெற முடிந்தது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, நான் முதலில் கட்டுரை எழுத்தாளராகவே இலக்கிய உலகிற்கு அறிமுகமானேன்.
06. உங்களது முதலாவது படைப்பு எப்போது, எந்த ஊடகத்தில் வெளியானது?
எனது முதலாவது படைப்பு ஒரு கவிதை. அது 'நடு' இணைய இதழில் வெளியானது. அது எப்போது வெளியானது என்பது தற்போது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால், எனது படைப்பு முதன்முதலாக ஓர் இலக்கிய ஊடகத்தில் வெளிவந்த அந்தத் தருணம் எனது எழுத்துப் பயணத்தில் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அதன்பின்னர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், திறனாய்வுகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து எழுதி வருகின்றேன்.
07. உங்கள் படைப்புகளுக்கு தொடர்ந்து களம் தந்த ஊடகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது படைப்புகள் 'தாய்வீடு', 'பதிவுகள்', 'நடு', 'ஜீவநதி', 'ஞானம்', 'வெற்றிமணி', 'சிவஒலி', 'மகுடம்' ஆகிய இதழ்களிலும், 'தினக்குரல்', 'வீரகேசரி' ஆகிய பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இவற்றுள் 'பதிவுகள்' மற்றும் 'நடு' ஆகிய இணைய இலக்கியத் தளங்கள் எனது எழுத்துப் பயணத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. 'பதிவுகள்' ஊடாக எனது கதைகள், கட்டுரைகள் திறனாய்வுகள், உள்ளிட்ட பல படைப்புகள் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதேபோன்று, 'நடு' இதழில் எனது ஆரம்பகாலக் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. புதிய எழுத்தாளர்களுக்கும் பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்கும் களம் அமைத்துத் தரும் இவ்விரு தளங்களும், எனது எழுத்துப் பயணத்தை வளர்த்தெடுக்க முக்கியமான வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இவற்றுடன் ஏனைய இதழ்கள் மற்றும் பத்திரிகைகளும் எனது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு, எனது எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கி வருகின்றன.
08. இதுவரை வெளிவந்த உங்களது நூல் வெளியீடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
சேரனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை மொழிபெயர்த்து 'கடலின் கதை' எனும் நூலை தமிழ் மற்றும் டச்சு ஆகிய இருமொழிகளில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் நெதர்லாந்தில் வெளியிட்டேன்.
சேரனின் காதல் கவிதைகள் அடங்கிய 'அன்பு திகட்டாது' எனும் நூலை டச்சு மொழியில் மொழிபெயர்த்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தில் வெளியிட்டேன்.
'சிலகணங்கள்' எனும் இளையோருக்கான கவிதைத் தொகுதியை 2020 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிட்டேன்.
'மனச்சோலை' என்ற 26 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலை 2021 ஆம் ஆண்டு வெளியிட்டேன். இந்தப் புத்தகம் இலங்கைக் கல்வியமைச்சின் அங்கீகாரம் பெற்ற நூலாகும். பல பாடசாலைகளும் நலன்புரிச் சங்கங்களும் இந்த நூலைப் பயன்படுத்தி வருவதுடன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இந்நூல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், இந்தக் கட்டுரைகள் திருமதி ஆனந்தராணி பாலேந்திராவின் குரலில் லண்டன் எஸ்.ஆர்.எஸ். வானொலியில் 'கட்டுரைப்பூங்கா' என்ற நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டு, இணையத்தளத்திலும் பதிவாகியுள்ளன. இந்த நூல் மேலும் எட்டு கட்டுரைகளை உள்ளடக்கி 34 கட்டுரைகளுடன் இரண்டாவது பதிப்பாகவும் அண்மையில் வெளிவந்துள்ளது.
அண்மைக் காலங்களில் சிறுகதைகள், திறனாய்வுகள், விமர்சனங்கள் போன்றவற்றையும் எழுதி வருகிறேன். பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ளேன்.
நான் எழுதிய 'குழந்தைமொழி' எனும் முன்பள்ளி மாணவர்களுக்கான நூல் 2024 ஆம் ஆண்டு வெளிவந்தது. இளம் குழந்தைகள் பாடசாலைப் பாடங்களைக் கற்பதற்கு முன், பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் 'குழந்தைமொழி' என்ற இந்த நூலை வடிவமைத்துள்ளேன்.
இதில் கதைகள், பாடல்கள், எண்கள், நிறங்கள், உயிரினங்கள் போன்றவை தெளிவான வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகள் புத்தகத்தை விரும்பிப் படிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் எனது 'மௌனத்தின் மொழி' எனும் சிறுகதைத் தொகுப்பும், 'சிந்தனைச் சிறகுகள்' எனும் கட்டுரைத் தொகுப்பும், 'மனச்சோலை 2' எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
இந்தச் சிறுகதைத் தொகுதி, என் வாழ்வுப் பயணத்தில் பதிந்த அனுபவங்களின் செறிவூட்டிய வெளிப்பாடாகும். வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலும் கூட மனித மனத்தின் நுண்ணிய அலைகளை உணர்ந்து, அவற்றைச் சொற்களால் செதுக்கி வாசகர்களின் முன் நிறுத்த வேண்டும் என்ற என் முயற்சியாக இந்நூல் உருவாகியுள்ளது.
10. உங்கள் கதைகளுக்கான பாத்திரங்களையும் களங்களையும் எங்கிருந்து கண்டடைகிறீர்கள்? அவை நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பா அல்லது கற்பனையா?
இக்கதைகளில் தோன்றும் மனிதர்களும் நிகழ்வுகளும் வெறும் கற்பனையின் விளைவுகள் மட்டுமல்ல. அவை என் வாழ்வில் நான் கண்ட நிழல்களும் ஒளிகளும் கலந்த உண்மையின் பிரதிபலிப்புகளாகும். மனித உறவுகளின் நெகிழ்ச்சியும் சமூக வாழ்க்கையின் சிக்கல்களும் இக்கதைகளில் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.
11. 'மௌனத்தின் மொழி' தொகுதியில் உங்களுக்கு மிகவும் பிடித்த அல்லது எழுதும் போது உணர்வு ரீதியாக உங்களை அதிகம் பாதித்த கதை எது, ஏன்?
'மௌனத்தின் மொழி' சிறுகதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை 'கொக்கைச்சத்தகம்' ஆகும். நுண்ணிய உணர்வுகளால் பின்னப்பட்ட கதை என்பதே அதற்கான முதன்மைக் காரணம். பொதுவாக அதிகம் பேசப்படாத, பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய உடல் மற்றும் உளவியல் மாற்றங்களையும் சிக்கல்களையும் இக்கதை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. அதோடு, கதையின் முடிவும் வாசகர் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது.
'கொக்கைச்சத்தகம்' என்ற சொல்லுடன் எனது தனிப்பட்ட வாழ்வுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நான் பதுளையில் வளர்ந்தவள். யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது அங்கு கேட்ட 'கொக்கைச்சத்தகம்' எனக்குப் புதுமையாக இருந்தது. சிறுவயதில் செல்லமாக வளர்த்த ஆட்டுக்குட்டிக்குக் குளை வெட்டியபோது ஏற்பட்ட ஒரு சிறிய காயமும் அந்த நினைவுடன் என்னுள் பதிந்திருக்கிறது. எனவே, 'கொக்கைச்சத்தகம்' எனது வாழ்வனுபவத்துடனும் ஒரு வகையில் தொடர்புடையதாக அமைந்தது. அதனால் அந்தக் கதையைத் தொகுப்பில் இடம்பெறச் செய்ததுடன், நூலுக்கும் அதே பெயரைச் சூட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் நூலை இந்தியாவில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. 'கொக்கைச்சத்தகம்' என்ற சொல் அங்கு பரவலான பயன்பாட்டில் இல்லாத காரணத்தால், இறுதியில் நூலுக்கு 'மௌனத்தின் மொழி' எனப் பெயரிடப்பட்டது.
12. இன்றைய வேகமான சூழலில், சிறுகதை வடிவத்திற்கான முக்கியத்துவம் மற்றும் வாசகர்களின் வரவேற்பு எவ்வாறு உள்ளது என நினைக்கிறீர்கள்?
இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலிலும் சிறுகதை வடிவத்திற்கான முக்கியத்துவம் குறையவில்லை. காலத்திற்கேற்ப அதன் வடிவங்கள் மாறிவருகின்றன. சிறுகதைகள் மட்டுமன்றி குறுங்கதைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய வடிவங்களும் இன்று தோன்றியுள்ளன. வாசகர்களின் நேரத்தையும் இன்றைய வாழ்க்கை வேகத்தையும் கருத்தில் கொண்டு எழுத்தாளர்களும் தமது படைப்புகளின் வடிவத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு கொரோனா காலப்பகுதியில் சமூகச் சீரழிவு, தற்கொலைகள், போதைப்பொருள் பாவனை, மாணவர்களிடையேயான மன அழுத்தம், ஆளுமைக் கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தீவிரமாகத் தென்பட்டன. அந்தச் சூழலில் சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடிய வகையில் 'மனச்சோலை' என்ற கட்டுரைத் தொகுதியை வெளியிட்டேன். வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் வெளியிடப்பட்ட அந்த நூலை சமூக நிறுவனங்கள், நலன்புரிச் சங்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு இலவசமாக வழங்கினேன். அந்த நூல் இலங்கை கல்வி அமைச்சினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் பதிப்பில் 28 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் பாலியல் கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல சமூக, உளவியல் விடயங்கள் பேசப்பட்டிருந்தன. இந்நூலின் இரண்டாம் பதிப்பு இவ்வாண்டு 34 கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'சிந்தனைச் சிறகுகள்' என்ற நூலை உருவாக்கினேன். இதில் சமூகப் பிரச்சினைகள், உளவியல், சமூக உளவியல், கல்வி, பாலியல் விழிப்புணர்வு, பொது அறிவு, நீர்வளம் போன்ற பல்வேறு தளங்களைச் சேர்ந்த 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தனித்தனி பிரிவுகளாகப் பிரிப்பதைவிட, பல்வேறு சிந்தனைகளை ஒருங்கிணைத்த ஒரு தொகுதியாக வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்நூலை உருவாக்கினேன்.
எதிர்காலத்தில் தற்போதைய சமூக மாற்றங்கள், அவற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சமூக உளவியல் கட்டுரைத் தொகுதி ஒன்றையும் வெளியிடும் எண்ணம் உள்ளது. இலங்கையின் சமகாலப் பிரச்சினைகளை மையப்படுத்துவதுடன், அவற்றை உலக நாடுகள் எவ்வாறு பார்க்கின்றன என்பதையும் அதில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
14. கட்டுரைத் தொகுதிக்கான உள்ளடக்கங்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?
எனது கட்டுரைகளுக்கான உள்ளடக்கங்களைப் பொதுவாக நானே தேர்ந்தெடுத்துக்கொள்வேன். இலங்கையில் காணப்படும் சமூகப் பிரச்சினைகள் என்ன, அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம், சமூகத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொண்டே தலைப்புகளைத் தெரிவு செய்கிறேன். மனித உரிமைத் துறையுடன் தொடர்புடைய பணிச்சூழல் இருப்பதால், இலங்கை தொடர்பான பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு உள்ளது. அவற்றை அடிப்படையாகக் கொண்டும் சில கட்டுரைகளை எழுதுகிறேன். அதேவேளை, இலங்கையில் உள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து, அவை தொடர்பாக எழுதுமாறு என்னைக் கேட்டுக்கொள்வார்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் தேவைகளையும் கருத்தில் கொண்டு பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.
15. கட்டுரைகளை எழுதும் போது அல்லது தொகுத்த போது உங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் எது?
கட்டுரைகளை எழுதுவது எனக்குத் தொடர்ச்சியான செயற்பாடாக இருந்தாலும், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடுவது உண்மையில் சவாலான பணிதான். ஒரு கட்டுரை எந்தத் தொகுப்பில் இடம்பெற வேண்டும், எந்தத் தலைப்பின் கீழ் அதனை வகைப்படுத்த வேண்டும் என்பதில் சில நேரங்களில் குழப்பம் ஏற்படும்.
மனச்சோலை தொகுதியில் சமூக மாற்றங்கள், அவற்றின் உளவியல் காரணங்கள், ஆளுமைக் கோளாறுகள், போருக்குப் பின்னான மனவடுக்கள் போன்ற பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னர் எஞ்சியிருந்த பல்வேறு தலைப்புகளைச் சேர்ந்த கட்டுரைகளைத் தொகுத்து 'சிந்தனைச் சிறகுகள்' என்ற நூலை உருவாக்கினேன்.
எதிர்காலத்தில் சமூக உளவியல் சார்ந்த கட்டுரைகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு தனித்தொகுப்பை வெளியிடும் எண்ணமும் உள்ளது. கட்டுரைகளை எழுதுவதைவிட அவற்றைத் தொகுத்து ஒரு குறிப்பிட்ட கருத்தியல் அடிப்படையில் நூலாக்குவது சவாலானதுதான்.
16. நீங்கள் எழுதிய கட்டுரைகளில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான அல்லது எழுதச் சிரமமாக இருந்த கட்டுரை எது, ஏன்?
நான் எழுதிய கட்டுரைகளில் அதிக நேரத்தையும் உழைப்பையும் பெற்றுக்கொண்டது, 'நடந்தாய் வாழி வழுக்கையாறு' என்ற கட்டுரை. வழுக்கையாறு எனது பெற்றோரின் பூர்வீகக் கிராமமான அளவெட்டியின் ஊடாகப் பாய்கிறது. எனவே, அந்த ஆற்றைப் பேணிப் பாதுகாப்பதில் அளவெட்டி மக்களுக்கும் முக்கியமான பொறுப்பு இருப்பதாக நான் கருதினேன்.
விவசாயத் துறையில் கல்வி கற்றிருந்ததால், வழுக்கையாற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்ப விடயங்களை ஆராய்வதற்கும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பெரும்பாலும் ஆங்கில மொழியில் இருந்தன. அவற்றைத் தேடி வாசித்து, முதலில் அவற்றைத் தமிழில் புரிந்துகொண்ட பின்னர், ஆற்றின் வரலாறு, அதன் பயன்பாடு, தொழில்நுட்பம், எதிர்காலத்தில் அதனை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பன குறித்து ஆராய்ந்தேன். அத்துடன், வழுக்கையாற்றுடன் தொடர்புடைய இலக்கியச் செய்திகளையும் தேடிப் பதிவு செய்தேன். சின்னத்தம்பிப் புலவர் உள்ளிட்ட பலர் அதனைப் பற்றிப் பாடியிருப்பதும் தெரியவந்தது. அந்தப் பகுதியில் காணப்பட்ட பறவைகள், உயிரினங்கள், இயற்கைச் சூழல், மக்கள் வாழ்க்கை, வழிபாட்டு முறைகள் போன்ற பல விடயங்களையும் கட்டுரையில் இணைத்தேன்.
இதனால் வரலாறு, இலக்கியம், தொழில்நுட்பம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான கட்டுரையாக அது அமைந்தது. ஆங்கிலத்தில் வழுக்கையாறு தொடர்பாக பல ஆய்வுகள் இருந்த போதிலும், இம்மூன்று அம்சங்களையும் ஒருங்கிணைத்து தமிழில் எழுதப்பட்ட முதலாவது கட்டுரை இதுவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அது எனக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
17. இந்தக் கட்டுரைகள் சமூகத்தில் அல்லது வாசகர்களிடம் என்ன மாதிரியான உரையாடலை அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்?
'நடந்தாய் வாழி வழுக்கையாறு' என்ற கட்டுரை முதலில் பதிவுகள் இதழில் வெளியாகி வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. பின்னர் 'சிந்தனைச் சிறகுகள்' நூல் வெளியீட்டின்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் அந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விரிவாகப் பேசினார். குறிப்பாக, நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பான உரையாடல்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இன்று உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்து தீவிரமாகப் பேசப்படுகிறது. இலங்கையிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஒவ்வொருவருக்கும் இந்தப் பிரச்சினை குறித்த புரிதல் ஏற்பட்டு, அது அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளிலும் வெளிப்பட வேண்டும்.
குளங்களை ஆழப்படுத்துதல், புதிய குளங்களை அமைத்தல், சீரழிந்த நீர்நிலைகளைப் புனரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேபோல், வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான கால்வாய்களையும் முறையாக அமைக்க வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இத்தகைய பணிகள் அவசியமாக உள்ளன. இதற்குத் தேவையான வெளிநாட்டு உதவிகளைப் பெற்று, நீண்டகாலப் பயனளிக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது பேரவா.
மலைப் பகுதிகளின் இயற்கையான சூழலியலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். தேயிலைத் தோட்டங்களிலும் மலைச் சரிவுகளிலும் மண்ணரிப்பு ஏற்படாத வகையில், தாவரப் பாதுகாப்பு, நீர்வடிகால் அமைப்புகள், சரிவுகளை உறுதிப்படுத்தும் கட்டமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்துச் செயற்பட்டால்தான் மலையகத்தை எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களிலிருந்து பாதுகாக்க முடியும். அத்துடன், எனது சமூக, உளவியல் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரைகளும் பலராலும் வாசிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில கட்டுரைகள் வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பப்பட்டதன் மூலம், உலகளாவிய ரீதியில் பலரைச் சென்றடைந்துள்ளன. இதன் ஊடாக, உளவியல் சார்ந்த பல்வேறு விடயங்கள், ஆளுமைக் கோளாறுகள், குழந்தை வளர்ப்பு போன்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் பலரும் பயனுள்ள தகவல்களையும் விழிப்புணர்வையும் பெற்றுள்ளனர்.
அதேபோன்று, இக்கட்டுரைகளின் வாயிலாகப் பெற்ற கருத்துகளையும் அறிவையும் அடிப்படையாகக் கொண்டு, சிலர் பெண்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளையும் செயல்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். அவற்றின் மூலம் பலரும் பயனடைந்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கும் செய்திகள் கிடைத்துள்ளன. எனது எழுத்துகள் பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளன என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.
18. சிறுகதை, கட்டுரைத் துறை தவிர்ந்த வேறு எந்த இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?
சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளுக்கு அப்பால் சில நேரங்களில் கவிதைகளையும் எழுதுகிறேன். கவியரங்குகளிலும் பங்கேற்றிருக்கிறேன். எனினும், தொடர்ந்து கவிதை எழுதுவது எனது இயல்பல்ல. மனதை ஆழமாகத் தொடும் ஒரு துயரம், சம்பவம் அல்லது உணர்வு ஏற்பட்டால் மட்டுமே கவிதை எழுதத் தோன்றும். எனது எழுத்துகளில் கட்டுரைகளே அதிகம். அண்மைக் காலமாக சிறுகதைகளிலும் அதிகம் ஈடுபட்டு வருகிறேன்.
19. பல தசாப்த இலக்கிய வாழ்வில் உங்களது எழுத்துப் பங்களிப்புகளுக்காக இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுகள், கௌரவங்கள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?
'நான் ஒரு எழுத்தாளர்' என்று கூறுவதற்குப் பதிலாக, என்னை ஒரு எழுத்தாளராக உருவாக்கிக்கொண்டிருப்பவள் என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன். ஆரம்ப காலங்களில் எனது எழுத்துக்கள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக இதழ்களுக்குள் மட்டுமே இருந்தன. சுமார் பதினைந்து ஆண்டுகளாகவே இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வருகிறேன். நான் வசிக்கும் நாடு நெதர்லாந்து என்பதாலும், வெளிநாட்டில் வாழும் எழுத்தாளர் என்ற நிலையில் இருப்பதாலும் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இயல்பாகவே குறைவாக இருக்கலாம். அவற்றை நோக்கி நான் எழுதியதுமில்லை.
ஆனால் சிறுகதை எழுதத் தொடங்கியபோது, கட்டுரை எழுதுவதற்கும் சிறுகதை எழுதுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வதற்காகவும், எனது சிறுகதைகளை ஒரு குறிப்பிட்ட அளவுகோலில் மதிப்பிடுவதற்காகவும் பல போட்டிகளில் பங்கேற்றேன். குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற சில சிறுகதைப் போட்டிகள் எனக்கு நல்ல அனுபவத்தையும் வழிகாட்டலையும் வழங்கின. பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், படைப்பின் நிறை, குறைகள் குறித்து அவர்கள் விரிவான பின்னூட்டங்களை வழங்கினர். அது எனது சிறுகதைப் பயணத்தில் முக்கியமான வழிகாட்டியாக அமைந்தது.
எனது படைப்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் 'மனச்சோலை' கட்டுரைத் தொகுதியை இலங்கை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோல், நான் கல்வி கற்ற அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் எனது கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டபோது, எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்கள் அதிலுள்ள உளவியல் அம்சங்களைப் பாராட்டிப் பேசியிருந்தார்.
லண்டனில் வசிக்கும் நாடகக் கலைஞரும் அறிவிப்பாளருமான திருமதி ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் 'மனச்சோலை' நூலில் இடம்பெற்ற கட்டுரைகளை வாசித்து, அவற்றை எஸ்.ஆர்.எஸ். தமிழ் வானொலியில் நிகழ்ச்சியாக ஒலிபரப்பினார். பின்னர் 2025 ஆம் ஆண்டு என்னை அழைத்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்க அனுபவமாக அமைந்தது.
இந்தியாவில் சிறுகதைகளுக்காகப் பெற்ற பரிசுகளுடன், இலங்கையில் நடைபெற்ற பாலசுப்பிரமணியம் சிறுகதைப் போட்டியிலும் எனக்குப் பரிசு கிடைத்துள்ளது. இவை அனைத்தும் எனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த முக்கியமான ஊக்கங்களாக அமைந்துள்ளன.
20. வாசிப்பு என்பது இன்றைய சமுதாயத்தினரிடம் குறிப்பாக மாணவர்களிடம் மிகவும் அருகிவிட்ட ஒன்றாகக் காணப்படுகிறதே. இதுபற்றிய உங்கள் கருத்து யாது?
வாசிப்பு என்பது இன்றைய இளம் தலைமுறையினரிடையே குறைந்து வருவது கவலைக்குரிய விடயம். இலங்கையில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியிலும் சமூக வலைத்தளங்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களில் இளைஞர்கள் அதிக நேரத்தைச் செலவிடுவதால் வாசிப்புக்கான நேரம் குறைந்து வருகிறது.
கல்வியைப் பொறுத்தவரை இது ஆபத்தான நிலை. சிறுவயதிலிருந்தே பல்வேறு நூல்களை வாசித்து, தமக்குப் பொருத்தமான கல்வித் துறையைத் தாங்களே அடையாளம் காணும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வெறுமனே ஆசிரியர் வழங்கும் தகவல்களைப் பெற்றுக்கொண்டு, அதனை மனப்பாடம் செய்து பரீட்சையில் எழுதுவது அறிவின் விரிவாக்கத்திற்கு போதுமானதல்ல. வாசிப்பின் மூலமே சுயசிந்தனையும் பகுத்தறிவும் வளர்கின்றன. பல்கலைக்கழக மட்டத்திலும் பேராசிரியர்கள் இதுகுறித்து கவலை தெரிவிப்பதை நான் கேட்டிருக்கிறேன். வாசிப்பின் மூலமே ஒருவர் பரந்த அறிவையும் சிந்தனைத் திறனையும் பெற்றுக்கொள்ள முடியும். தாம் விரும்பிய நூல்களைத் தேடி வாசிக்கும் பழக்கமே கல்வியிலும் படைப்புலகிலும் முன்னேறுவதற்கான அடித்தளமாக அமைகிறது. எனவே, வாசிப்பின் வீழ்ச்சி ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கே பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது.
நன்றாக வாசிப்பவரால்தான் நன்றாக எழுதவும் முடியும். குறிப்பாக வழக்குரைஞர் போன்ற துறைகளில் விரைவாக வாசித்து, வாசித்ததைச் சரியாகப் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் அவசியமானது. எனவே, வாசித்தல், வாசித்துப் புரிந்துகொள்ளுதல், வாசித்ததை ஆய்வு செய்தல் ஆகியவை படிப்படியாக வளர்க்கப்பட வேண்டிய திறன்கள்.
இந்தப் பழக்கம் குழந்தைப் பருவத்திலேயே உருவாக்கப்பட வேண்டும். முன்பள்ளி வயதிலிருந்தே குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, வாசிப்பை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்ற வேண்டும். இல்லையெனில், வளர்ந்து வரும் சமுதாயம் அறிவிலும் கல்வியிலும் பலவீனமடைந்த சமூகமாக மாறும் அபாயம் உள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் இந்த நிலையில் புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து நாம் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
21. வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு தாங்கள் கூறும் செய்தி என்ன?
வளர்ந்து வரும் படைப்பாளிகள் காலத்திற்குத் தேவையான விடயங்களை எழுத வேண்டும். ஏற்கனவே பலரும் எழுதியவற்றையே மீண்டும் மீண்டும் எழுதுவதைத் தவிர்த்து, சமுதாயத்திற்குத் தேவையான புதிய சிந்தனைகளை முன்வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு தனித்துவமான எழுத்துப் பாணியை உருவாக்கி, அதில் பயணிக்க வேண்டும்.
அறிவியல் உள்ளிட்ட புதிய துறைகளில் காணப்படும் அறிவையும் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும். பிற மொழிகளில் உள்ள அறிவியல் தகவல்கள், தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து வழங்குவதன் மூலம் தமிழ் அறிவுலகை வளப்படுத்தலாம். அதேவேளை, நமது தாய்மொழியான தமிழைத் தூய்மையாகவும் செழுமையாகவும் பேணுவது படைப்பாளிகளின் முக்கியப் பொறுப்பாகும். தேவையற்ற வகையில் பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழின் இயல்பைச் சிதைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
22. இறுதியாக இந்த நேர்காணல் மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?
இறுதியாக நான் கூற விரும்புவது, ஒரு சமுதாயத்தில் மிகுதியான ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் வரை பிரச்சினைகள் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. பணக்காரர் - ஏழை, கல்வியறிவு பெற்றவர் - பெறாதவர், அதிகாரம் கொண்டவர் - அதிகாரமற்றவர் என்ற வேறுபாடுகள் குறைக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தமது திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற கல்வியைப் பெறக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். வசதிபடைத்தவர்கள் வசதியற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதருக்கும் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் வளரும் பருவத்திலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டும். கல்வி உரிமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சமமான வாய்ப்பை இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்படுத்துவது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், சமத்துவமானதும் அறிவார்ந்ததுமான ஒரு சமூகத்தை நிச்சயமாக உருவாக்க முடியும்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்







































