பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, August 26, 2026

61. ஓய்வு பெற்ற அதிபர், கதாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்

 ஓய்வு பெற்ற அதிபர், கதாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்குக் கூறுங்கள்?

யாழ்ப்பாண மாவட்டம், திருநெல்வேலி எனது பிறப்பிடம். திரு. கதிரவேலு, திருமதி. தில்லைநாயகி தம்பதியினரின் மூத்த மகளான எனக்கு மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன். எனது தந்தை அரச நிர்வாக சேவையில் பணியாற்றியதால் நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும், பயிலும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எனது கணவர் சிவகுமாரன் ஒரு தொழிலதிபர். முதுகலைமாணி விஞ்ஞானப் பட்டதாரியான எனது மகள் கீர்த்தனா, தன் கணவருடன் அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.



02. உங்கள் ஆரம்பகால இலக்கிய அறிமுகம் மற்றும் அன்றைய கால சூழல் எவ்வாறு இருந்தது?

எனது தாயார் ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இந்திய இதழ்களையும், அந்நாட்களில் வெளிவந்த வீராகேசரிப் பிரசுரங்களையும் வாசிக்கும் பழக்கமுடையவர். இதனால் வீட்டில் புத்தகங்களிற்குக் குறைவில்லை. இதனால் வாசிப்பு நாளின் ஒரு பாகமாகவே மாறிப் போனது.


03. நீங்கள் எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?


எழுத்துத் துறைக்குள் தற்செயலாகத் தான் நுழைந்தேன். நான் பயிலுனர் ஆசிரியராகப் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயின்ற காலத்தில் அங்கு தமிழ்ச் சங்கத்தினரால் நாடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பங்குபற்றினேன். இரண்டாம் பரிசு கிடைத்தது.


04. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

எனது தந்தை நிர்வாகத் துறையில் பணியாற்றினாலும், அவர் ஒரு தமிழ் பண்டிதர், கவிஞர். முருகன் பிள்ளைத் தமிழ் நூலொன்றையும் இயற்றியுள்ளார்.


05. நீங்கள் வாசித்த முதல் கதை எது? நீங்கள் எழுதிய முதல் கதை அனுபவத்தையும் சொல்லுங்கள்?

நான் வாசித்த முதல் கதை எனது ஞாபகத்தில் இல்லை. ஏனென்றால் நான் ஏழு வயதிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். ஆரம்பத்தில் சித்திரக் கதைகள் வாசித்ததாக ஞாபகம்.

முன்பு சொன்னது போல் பலாலி ஆசிரியர் கலாசாலையில் வகுப்புகள் நிறைவடைந்த பின் மாலை ஐந்து மணிக்குத்தான் போட்டிகள் ஆரம்பமாகும். அதற்கு முன் மதிய இடைவேளையின் போது ஒரு வரியைத் தந்திருந்தார்கள். அந்த வரி கதையில் எங்கேனும் ஓரிடத்தில் வர வேண்டும் என்பது விதி. தலையங்கம் நாம் தான் தர வேண்டும். நேரக் கட்டுப்பாடு இருந்தது. கடைசி நிமிடம் வரை நான் போட்டியில் பங்குபற்றுவதா, விடுவதா என்ற குழப்ப நிலையில் இருந்தேன். காரணம் என் பத்து மாதக் குழந்தை. வழமையாக காலை ஏழு முப்பதிற்கு வீட்டிலிருந்து புறப்படும் நான் மாலை ஐந்து முப்பதின் பின்பே வீடு செல்வேன். 

இருந்தாலும் கதையை எழுதினேன். வேகமாக எழுதி முடித்து விட்டு, மண்டபத்தை விட்டு முதல் ஆளாக வெளியேறினேன். 'பார்வைகள்!? மனிதர்கள்!?' என்ற அக்கதை இரண்டாம் பரிசைப் பெற்றுத் தந்தது. 


06. உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக, எப்போது வெளிவந்தது?

1993 இல் முதலாவது ஆக்கத்திற்கு களம் அமைத்துத் தந்தது பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை தமிழ்ச் சங்கம்தான்.


07. உங்களைக் கதாசிரியராக வளர்த்த பின்னணி என்ன?


நான் குறிப்பிட்டது போல் எனது முதல் சிறுகதைக்குப் பரிசு கிடைத்தது. அப்போது நிலவிய போர்ச் சூழலில் அதுபற்றி நான் உட்பட எவருமே அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. பன்னிரு வருடங்களின் பின் வீரகேசரி பவளவிழாப் போட்டியில் பங்குபற்றினேன். அதற்கும் பரிசு கிடைத்தது. இவை தந்த உற்சாகமும், அங்கீகாரமும் மூன்றாவதாக உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 'பூபாள ராகங்கள்' போட்டியில் பங்கேற்க உந்தின. முதற் பரிசு கிட்டியது. கதாசிரியராகப் புது பரிமாணம் முளைவிட்டது.


08. நீங்கள் எப்படிப்பட்ட மனநிலையில் சிறுகதைகளை எழுதுகின்றீர்கள்?

நான் பார்த்த, கேள்வியுற்ற சம்பவங்கள் மனத்தைத் தொடும், கோபமூட்டும், வேதனைப்படுத்தும் வேளைகளில் அதுவே கற்பனை கலந்து கதையாக உருமாறும். சிலர் கூறுவது போல் அமைதியான சூழல், பூங்கா, நூலகம் என்று தேடிப் போய் எழுதுவதில்லை. ஓடும் ரெயிலில், இரைச்சல் நடுவே கூட எழுதுவதுண்டு. உண்மையில் நான் என் மகள் சாதாரண, உயர் தரங்களில் கற்கும் போது தான் அதிகம் எழுதினேன். காரணம் அவர் தனியார் வகுப்பில் படிக்கும் வேளை, வகுப்பு முடியும் வரை பின்னாலிருந்து எழுத எனக்கு நிறையவே நேரம் கிடைத்தது.


09. இதுவரை வெளிவந்த உங்கள் நூல்கள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். முதலாவது நூல் 'மரம் வைத்தவன்'. அது 2007 இல் அரச சாகித்திய விருதைப் பெற்றுத் தந்தது. இரண்டாவது நூல் 'தேடலே வாழ்க்கையாய்'. அதன் பின் 'நிஜங்களின் தரிசனம்'. இந்த வருடம் (2026) வெளியானது 'விடியல் தூரமில்லை'.


10. அண்மையில் வெளியிட்ட 'விடியல் தூரமில்லை' சிறுகதை நூல் குறித்து விசேடமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எனது மூன்றாவது நூலிற்கும், 'விடியல் தூரமில்லை' க்கும் இடையே பதினைந்து வருட இடைவெளி. சேவை ஓய்வின் பின்னர் வெளியானது. இதுவும் அரசியல், சமூகவியல், சமகாலப் பிரச்சனைகளை முன் வைத்து புனையப்பட்ட கதைகளை ஏந்தி நிற்கிறது.


11. உங்கள் எழுத்துக்களை வாசகர்களால் சீக்கிரமாக வாசித்துவிட முடிகிறது. இதற்கு என்ன காரணம்?

மிகச் சிறிய வசனங்கள், எளிமையான சொல்லாடல்கள், சமகால நடப்புகள், பிரதேச வழக்கிலமைந்த உரையாடல்கள், சொல்ல வந்ததை சுருக்கமாக, சுவாரஸ்யமாகக் கூறல் போன்றன காரணமாக இருக்கலாம்.


12. உங்களது ஒட்டுமொத்த சிறுகதைகளை அவதானித்த வகையில் உங்கள் பெரும்பாலான சிறுகதைகள் உரையாடல் பாங்கில் அமைந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்?

எப்போதும் பிரதேச வழக்கிற்கு - அது வடக்கோ, கிழக்கோ, மலையகமோ - ஒரு தனியான ஈர்ப்பு உண்டு. அதுதவிர நாம் பந்தி, பந்தியாக எழுதிப் புரிய வைப்பதை ஒரு உரையாடலில் எளிதாக உணர்த்தி விடலாம். உதாரணமாக ஒரு திருவிழாவில் ஒரு குழந்தை வளையல்கள் வாங்க ஆசைப்படுகிறது. தாயிடம் கேட்கப் பயம். இதை உரையாடலில் இவ்வாறு வெளிப்படுத்தலாம்.

'அம்மா.. ஆ அந்தச் சிவப்பு காப்பு வடிவா?'

'ம்'

'அது நிஷாக்கு (தனக்கு) வடிவா இருக்குமா?'

'ம்'

'நிஷால அம்மாக்கு விருப்பமா?'

'ம்'

'ஐ லவ் யூ டா அம்மா செல்லம்'

'......'

'நிஷா காப்பு கேட்டா அம்மாக்கு கோவம் வருமா?'

குழந்தையின் ஆசை, பயம் கலந்த மனநிலையை விபரிக்க இது போதுமானது.


13. வாசிப்பின் தொடக்கத்தில் உங்களை பாதித்த எழுத்தாளர்கள் யார்? உங்களின் ஆதர்சன எழுத்தாளர்கள் பற்றியும் கூறுங்கள்?

ஆரம்பத்தில் நான் அதிகம் வாசித்தது தென் இந்திய எழுத்தாளர்களின் கதைகளை. அதுவும் பெண் எழுத்தாளர்கள் சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றோரின் கதைகள், கல்கியின் சரித்திரக் கதைகள் பிடிக்கும். இவர்களைத் தவிர ஜெயகாந்தன், பாலகுமாரன், சுஜாதா போன்ற எழுத்தாளர்களினதும் செங்கை ஆழியான், பாலமனோகரன் போன்ற ஈழத்து எழுத்தாளர்களினதும் எழுத்துகள் என்னைக் கவர்ந்தன.


14. நீங்கள் இப்போதுகளில் தொடர்ந்து வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்? உங்களை மிகவும் கவர்ந்த சிறுகதை நூல் எது?

நான் இப்போது கையில் கிடைக்கும் சகல கதைகளையும் வாசிக்கிறேன். ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. நான் விரும்பி வாசிக்கும் எழுத்துக்குரியவர்கள் பலர் இப்போது இல்லை. இருப்பவர்களும் எழுதுவதில்லை. தொடர்ந்து வாசிப்பதற்கு எழுதுபவர்களும் தொடர்ந்து எழுத வேண்டுமே.


15. எழுத்து உங்களுக்கு என்னவாக இருக்கிறது? எதற்காக எழுதுகிறீர்கள்?

சாதாரண ஆசிரியராக இருந்த என்னை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது என் எழுத்துத்தான். நெருங்குவதற்கரிய ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது. இலக்கியக் கூட்டங்களில், பொது மேடைகளில் பேசுவதற்கும் வாய்ப்புகள் கிட்டின. எழுத்து என் சுவாசமானது. ஏதோவொரு விடயம் புதியதாய், வித்தியாசமாய் தோன்றும் போது, எங்கேயோ மனதின் ஓரிடத்தில் தொடும் போதெல்லாம் அவற்றை எழுத்தில் கொண்டு வருகிறேன்.


16.  வாழ்வில் இடம்பெறுகின்ற அல்லது அவதானிக்கின்ற பலநூறு சம்பவங்களில் கதையாகும் விடயம் ஒன்றை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?

சமகாலத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்களே பெரும்பாலும் கதைகளாக உருப்பெறுகின்றன. இதில் தேர்வு என்பதில்லை. உரிமை மீறல்கள், மனிதாபிமானமற்ற செயல்கள், அடக்குமுறைகள், அவலங்கள் எங்கெல்லாம் அறியக் கிடக்கிறதோ அங்கெல்லாம் எழுத்தாளர்கட்கு கதைகள் முளைவிடுகின்றன. தெரிந்தும், தெரியாமலும் என் கதைகளில் மகாபாரதம், மூதுரை, கொன்றை வேந்தன், கூத்துப் பாடல்கள், நாட்டார் பாடல்களின் ஓரிரு வரிகள் வந்து போயுள்ளன. இது தற்செயலே ஆயினும் இவை வாசகர்கட்கு செய்த ஒரு பெரிய விடயமாகக் கருதுகிறேன்.


17. மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் வாசிப்பதுண்டா?

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவற்றின் வரவு மிகக் குறைவு. இவை பெரும்பாலும் அந்நிய நாடுகளிலிருந்து வருவதால் வேறுபட்ட வாழ்வியல், காலநிலை, கலாசாரம், இலக்கியம், களங்கள் போன்றவற்றிற்கான சாளரங்கள் எமக்குத் திறக்கப்படுகின்றன. இலக்கியத்திற்குப் புதிய பரிமாணம் கிட்டுகிறது.


18. ஐம்பது சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள நீங்கள் ஏன் இதுவரை நாவல் ஒன்றையேனும் வெளியிடவில்லை?

ஒரு நாவலை வாசிக்கும் அளவிற்கு இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை இருக்கிறதா என்கின்ற கேள்வி எனக்குண்டு. எனக்கு நாவல் எழுதும் அளவிற்குப் பொறுமையில்லை என்பதும் மற்றொரு விடயம். ஒரு நாவலை எழுதும் நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கதைகளை எழுதி விடலாம் என்பதும் உண்மை. இருந்தும் எனது அடுத்த வெளியீடு ஒரு நாவலாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.


19. இன்றைய இலக்கியப் போக்கு குறித்த உங்கள் பார்வை அல்லது விமர்சனம் என்ன? உங்களுக்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார், யார்?

இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு குறைவு. மிகச் சிறிய தொகையினரே எழுதுகின்றனர். இவர்கள் புதிய விடயங்களைக் கையாள்கிறார்கள். பார்வைகள் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து எழுதுவதில்லை. இவர்கள் தொடர்ந்து எழுதினால் தான் இவர்களை, இவர்களது எழுத்தை இனங்கண்டு கொள்ள முடியும்.


20. வேறு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதால் இளம் தலைமுறையினரின் இலக்கிய ரசனை, எழுத்தாற்றல், தேடிக் கற்றல் போன்றவற்றில் மட்டுமல்ல நூல்களின் வெளியீடு, புத்தக விற்பனை, இவை சார்ந்த நிகழ்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்துகிறது. சிறு வயதிலிருந்தே புத்தகங்களை வாங்கிக் கொடுத்துப் பிள்ளைகட்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை. இது கணனி யுகம். AI யுகம். இளம் தலைமுறை பலவிதமான போட்டிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இசை, வாசிப்பு, நட்பு இவற்றைக் களைவதற்குக் கைகொடுக்கும். புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment