பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, August 26, 2026

60. கவிஞர் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்

 கவிஞர் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்?


மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் கடந்த 15 வருடங்களாக வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்து வருகிறேன். தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பணி புரிகிறேன். தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை செய்த அனுபவம் உண்டு. அத்துடன் சுமார் ஐந்து வருடங்களாக இலக்கியத் துறையில் பயணித்து வருகிறேன்.


இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்பட காலாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?

எனக்கு சிறு பராயம் முதலே வாசிப்பில் மிகவும் விருப்பமாக இருந்தது. தமிழ் மொழியில் அப்படியொரு பற்று. வாசிப்போடு உறவு கொண்டிருந்ததாலேயே தமிழிலே விருப்பு வந்தது என்றால் அது மிகையாகாது. எனது தந்தை ஹயாத்து முஹம்மது அவர்கள் கணித ஆசிரியராக இருந்தபோதிலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். மரபுக் கவிதை புதுக்கவிதை போன்றவற்றை இயற்றக் கூடியவர்களாகவும் இருந்தார். செய்யுள்களையும் காவியங்களையும் கதைகளையும் தமிழ் ஊற தமிழ் சொட்டச் சொல்லித் தருவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட தூண்டுகோலாக இருந்தவர் தந்தை என்று தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் பாடத்தைச் சுவைபடக் கற்பித்த தமிழ் ஆசான்களும் எனது தமிழின்  வளர்ச்சிக்கு உரியவர்கள். அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.


உங்களுக்குள் கவிதைகள் எவ்வாறு கருக்கொண்டு உருப்பெறுகின்றன?

வாழ்வில் அனைத்து சம்பவங்களும் மனதின் ஒரு புள்ளியில் கீறிட்டுச் செல்லும் போது அது கவிதையாக உருமாற்றம் பெறுகிறது. உயிர் ஓவியமாகவே மாறிவிடுகிறது. வாழ்வில் சாதாரணமாக நடக்கின்ற சம்பவங்கள் கவிஞனின் கண்களுக்கு, கவிஞனின் இதயத்திற்கு வித்தியாசமான ஒரு கோணத்தில் புலப்படும் போது அங்கே கவிதை எனும் உயிர் பரிணமிக்கிறது. கவிதை உருப் பெறுகிறது. 

எழுத ஆரம்பிக்கும் போது எழுத ஒன்றுமே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் பேனாவை ஊன்றி வார்த்தைகளால் பாத்தி கட்டும் போது கவிச்சுனை மென்மேலும் ஊறிக் கொண்டே இருக்கும். தினமும் எழுத, எழுத கவிதை தனக்கே உரித்தான ஒரு பாங்கினைச் சுவீகரித்துக் கொள்ளும். சுவாரசியமாகவும் சிறப்பாகவும் மிக அழகாகவும் மாறும். கவிதை நடை தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்ளும். அங்கே உண்மை புனைவுகளாகும், புனைவுகள் உண்மைகளாகும். ஒரு படைப்பாளி என்பவன் மாபெரும் கலைஞன். அவனை தட்டிக் கொடுங்கள். தூண்டி விடுங்கள். சிறு ஊக்கங்கூட மாபெரும் வெற்றிப் பாதையில் அவனை வழி நடாத்திச் செல்லும். கவிஞன் என்பவன் உயிரிலே விளக்கேந்தி காத்துக் கிடப்பவன். பொருள் தேடி ஆவலோடு உணர்தல் வெளியில் வாசகனை அலைந்து குழந்தையாக ஏங்க வைக்கிறது உருப்பெற்ற ஒரு கவிதை.


உங்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் அல்லது கவிஞர் என்று யாரைக் கூறுவீர்கள்?

எழுத்துக்களை ருசிக்கத் தொடங்கியவனுக்கு குறிப்பிட்ட எழுத்தாளரை மட்டும் குறிப்பிட்டுக் குருவாகக் கொண்டுவிட முடியாது. அவன் தாகம் தீரும் வரைக்கும் எழுத்துக்களை குடித்துக் கொண்டே இருப்பான். உலகில் கரங்களில் தவழும் அனைத்துப் படைப்புகளும் அவனது இலக்கியப் பசிக்கான தீனிகளாகவே அமையும். இலக்கிய உலகின்  ஜாம்பவான்கள் அனைவரையும் எனக்குப் பிடிக்கும். அதிலும் முக்கியமாக நான் நேசிக்கின்ற எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக கல்கி, சாண்டில்யன், கவிக்கோ அப்துல் ரகுமான், வைரமுத்து, பாலகுமாரன், ஜெயமோகன் போன்றவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.


வைத்தியராகப் பணியாற்றும் உங்களை நீங்கள் எப்போது ஒரு கவிஞராக உணர்ந்தீர்கள்?

சிறு வயது முதலே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை அதிகமாக வாசித்து வந்ததால், அக்காலங்களில் கவிதை எழுதுவது வழக்கமாக இருந்தது. கல்வியிலான அடைவின் பின்னரும் எழுதுவது தொடர்ந்து கொண்டே இருந்தது. புலன, முகநூல் பக்கத்தில் எழுத்துப் பயணம் ஆரம்பித்த போதே எமது உண்மையான இலக்கியத் தாகம் வெளிப்படத் தொடங்கியது. இப்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.


இதுவரை வெளிவந்த உங்களது நூலாக்கங்கள் தொடர்பாகக் கூற விழைவது?

எனது கன்னி வெளியீடு "சிறகு முளைத்த மீன்" புதுக்கவிதை நூல் கடந்த வருடம் 2022 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இரண்டாவது சுய வெளியீடு "தூரிகை வரையும் மின்மினிகள் ஹைக்கூ" கவிதை நூல் 2023 இல் இலங்கையில் வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன் பதினைந்திற்கும் மேற்பட்ட இலங்கை, இந்திய கவிதைத் தொகுப்பு நூல்களில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.



உங்களது முதலாவது கவிதைத் தொகுதியான "சிறகு முளைத்த மீன்" கவிதை நூலின் உள்ளடக்கம் குறித்துக் கூறுங்கள்?

"சிறகு முளைத்த மீன்" பல்சுவை அம்சங்களோடு பல்வேறுபட்ட கவிப்பூக்களின் கதம்பமாக உங்களுக்காக வெளிவந்து இருக்கிறது. அதிலே ஒரு வரிசைக் கிரமத்தை நீங்கள் அவதானிக்கலாம். இறைவன், நபிகளார், தந்தை, தாய், கணவன் மனைவி, மகள், நண்பர்கள், உழவர் போன்ற தலைப்பில் அமையக்கூடிய கவிதைகள் ஒவ்வொன்றாக இடம் பெறுவது இன்னூலின் சிறப்பம்சம் என்று நான் நினைக்கிறேன். அத்தோடு ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள், நாட்டார் பாடல், கிராமியக் கவிதைகள், காதல் கவிதைகள், ஊக்கக் கவிதைகள், இயற்கை சம்பந்தமான கவிதைகள் மற்றும் மகாத்மா காந்தி, பாரதி, ஆண் தேவதை போன்ற தலைப்பிலான கவிதைகளும் உள்ளடங்கலாக ஒரு கவிதைத் தொகுதியாக இருக்கிறது. இறைவனின் மகத்துவத்தையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும், காதலின் இரசனையையும், இயற்கையின் வருடலையும், உலகில் வாழ்ந்து மறைந்த சில தலைவர்களைப் போற்றியும் புகழ்ந்தும் நேர்மறை சிந்தனைகளைத் தூண்டி, துவண்டவர்களைத் தூக்கி எழுப்பிவிடும் ஊக்கக் கவிதைகளுமென எனது கவிதை நூலாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புளகாங்கிதத்தோடு தெரிவிக்கிறேன்.


நீங்கள் வெளியிட்ட ஹைக்கூ நூலுக்கு "தூரிகை வரையும் மின்மினிகள்" எனும் நாமத்தினை ஏன் வைத்தீர்கள்?

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் "மின்மினிகளால் ஒரு கடிதம்" எனும் கவிதை நூல் 2002 இல் வெளிவந்தது. இது அரபி, உருது மொழிகளின் கஸல் என்னும் காதல் கவிதை வடிவத்தைத் தமிழில் அறிமுகம் செய்வதற்காகப் படைத்த அழகிய காதல் இலக்கியமாகும். அந்தக் கவிதைகளில் மயங்காத வாசகர்கள் எவருமில்லை என்றே கூறலாம். எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகள் தாங்கிய அந்த நூலின் பெயரால் ஈர்க்கப்பட்ட நான் எனது ஹைக்கூ நூலுக்கும் மின்மினிகளைத் தலைப்பாக்க வேண்டும் என்று ஆவல்கொண்டேன். அத்தோடு ஹைக்கூக்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்தவர்களும் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்தான். அதனால்தான் தூரிகை வரையும் மின்மினிகள் என்ற பெயர் உண்டானது.


உங்களது சிறு சிறு கவிதை வரிகள் ஆழமான அர்த்தங்களையும், காத்திரமான விடயங்களையும் வெளிப்படுத்துவதாகவுள்ளது. இதுபற்றி நீங்கள் கூற விழைவது?

அவ்வப்போது மனதில் தோன்றும் எண்ண அலைகளை கவியாக வடிப்பது எனது வழக்கம். அதன் அடிப்பொருள் நேசத்தை, வாழ்வின் தத்துவங்களை விவரிப்பதாகவே இருக்கும். பெரிய, நீளமான கவிதைகளைவிட சிறிய கவிதைகளே அனைவரையும் கவர்ந்து மனதைக் கொள்ளை கொள்ளக் கூடியதாக இருப்பது நிதர்சனம். வாழ்வின் தத்துவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சிறுகவிதைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரின் எண்ணங்களோடு, சந்தர்ப்பங்களோடு, வாழ்வின் ஒவ்வொரு விடயங்களோடும் ஒன்றுவதே இதற்குக் காரணமாகும். இவ்வாறான சிறு கவிதைகளிலும் எனக்கு மிகவும் பிரியம் உண்டு. அதை எழுதுவதில் மிகவும் திருப்தியாக உணர்கிறேன்.


ஈழத்துக் கவிதையுலக வரலாற்றில் உங்களது கவிதைகள் எவ்வாறான இடத்தினைப் பெறுவதாக நினைக்கின்றீர்கள்?

எமது நூல் வெளியீடுகள் மற்றும் எமது கவிதைப் பிரசுரங்கள் நிச்சயம் எதிர்காலத்தில் ஈழத்துக் கவிதை உலக வரலாற்றில் ஒரு இடத்தை பிடிக்கும் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ். அதற்கு இலக்கியவானில் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கிறது.


நீங்கள் எழுதுகின்ற கவிதைகளில் பொதிந்துள்ள விடயங்கள் சமூக மாற்றத்திற்கு வித்திட்டதுண்டா?

ஒரு கவிஞனின் எழுதுகோல் முனை ஒரு போர்வாளின் முனையைவிட கூர்மையானது என்று சும்மாவா சொன்னார்கள்? கவிஞன் கூற வருகின்ற அனைத்து விடயங்களும் ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்கு படிப்பினையாக அறிவுரையாக எதிர்வு கூறலாகவே அமைகின்றன. எனது கவிதைகளும் அவ்வாறான சமூக மாற்றத்திற்கு வழி கோலும் என்று நினைக்கிறேன்.


தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்களுள் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிஞர் ஒருவர் பற்றிக் கூற முடியுமா?

கவிப் பேரரசு வைரமுத்து அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய தமிழில் மயங்காத மனிதர்கள் இல்லை என்றே கூறலாம். அவருடைய கள்ளிக்காட்டு இதிகாசம், இன்னொரு தேசியகீதம், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல, சிகரங்களை நோக்கி, வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம் போன்ற நூல்கள் நான் மிகவும் விரும்பி வாசித்தவை.


எந்த வகையான ஊடகங்களை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தி உங்களது படைப்புகளைக் களப்படுத்தி வருகின்றீர்கள்?

சுமார் 40 க்கும் அதிகமான இதழ்களில் எனது கவிதைகள் கட்டுரைகள் ஊக்கப் பதிவுகள் வெளிவந்துள்ளன. சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிற்றேடுகள், மின்னிதழ்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் குழுமங்களில் கவிதைகள், கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், மருத்துவக் கட்டுரைகள், ஊக்கப் பதிவுகள் போன்றவற்றை எழுதி வருகிறேன். முகநூல், புலன இலக்கியக் குழுமங்களில் தொடர்ச்சியாக கவிதைகள், கட்டுரைகள் பதிவேற்றம் செய்து வருகிறேன்.

பல்வேறு கலை இலக்கிய மன்றங்களால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்குகொள்கின்றமை, சஞ்சிகை இதழாசிரியராகப் பல தடவைகள் பணியாற்றியமை, கவியரங்கங்களில் பங்குகொள்கின்றமை, கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களில் பங்கெடுத்தல், வலையொளிப் பதிவேற்றம், வானொலி ஒலிபரப்பு கவிதை நிகழ்ச்சிகள், பதிவு செய்யப்பட்ட பல்வேறு இலக்கிய அமைப்புகளில் உறுப்பினர், நிருவாக உறுப்பினர் என்ற வகையில் அதன் பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றல் இவ்வாறாக எமது படைப்புகள் களம் அடைகின்றன என்று குறிப்பிடுவதில் பெருமிதமடைகிறேன்.



பொதுவாக ஆக்க இலக்கியப் படைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டுமென கருதுகின்றீர்கள்?

நினைத்ததை மாத்திரம் சொல்லாக்கி விட்டுச் செல்வது இலக்கியம் அல்ல. அது தூரநோக்குடனும் வாழ்வியலின் இன்ப துன்ப மற்றும் இன்னோரன்ன உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். சாதாரண நிலையிலிருந்து அனைத்து நிலைகளிலையும் சாடிக் கேள்வி கேட்பதாக அமைதல் வேண்டும். மக்களின் வேதனைகளைப் படம் பிடித்துக் காட்டும் படைப்புகளே காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும். சமூகத்தின் மாற்றத்திற்கு வித்திடுவதாக அமையும். அந்தந்த காலங்களுக்குரிய சமூக பதிவுகள், வாழ்க்கை முறை, பிரச்சினைகள், மக்களின் அடைவுகள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகள் நித்தியமானவை.


ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் எதுவெனக் கூற முடியுமா?

தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் விரல்கள் எழுத்தாளனுடையவை. சமூகத்தின் நன்மைக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்து, பாமர மக்களின் ஆசாபாசங்கள், வாழ்க்கை முறைகள், அநுபவங்கள் எல்லாவற்றையும் கோடிட்டுக் காட்டுபவனே எழுத்தாளன். பேனா முனை அவ்வாறான வீரம் கொண்டது. அடிமட்டத்து வேதனையிலிருந்து மேல்மட்டம் வரை அனைவரது பிரச்சினைகளையும் அடிக்கோடிட்டு வெளியுலகத்துக்குக் காண்பிப்பதன் மூலம் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஒரு கருவியாக எழுத்தாளன் செயற்படுகிறான். அவனது அடிப்படைத் தகுதிகளாவன வெளிப்படைத் தன்மை, உண்மைத்துவம், நேர்மை, கூர் பார்வை, அனுபவம், வலி, ஆழ்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, தன்னம்பிக்கை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகிறது என்று சொல்ல முடியுமா?

அப்படிக் கூற முடியாது. பெண்கள் மீதான ஒடுக்கு முறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகின்றது என்ற கருத்து முற்றிலும் தவறானது. அவளது பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறுபட்ட சூழல், காலம், ஆண், பெண், தொழில், சமூகம், நாடு, இனம் போன்ற பல்வேறுபட்ட பிரிவுகளில் இருந்தும் ஒடுக்குமுறை எழலாம் என்பது எனது கருத்து.


கவிதை மாநாடுகளில் அல்லது கவியரங்குகளில் கலந்துகொண்டு எவ்வாறான பங்களிப்பினை ஆற்றியுள்ளீர்கள்?

நேரடி மற்றும் இணைய வழிக் கவியரங்கங்கள், உலக சாதனைக் கவியரங்கங்கள், மகளிர் தின கவியரங்குகள் மற்றும் தொடர் ரெங்கா சென்றியு போட்டி போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று கவிபாடி வெற்றி பெற்ற அனுபவமும் உண்டு.


உங்களது கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவுகள் பற்றி குறிப்பிட முடியுமா?

ஆமாம். முகநூலிலும் புலனத்திலும் கவிதை பதிவேற்றங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதைவேளை பத்திரிகை, சஞ்சிசைகளில் பிரசுரமாகிய கவிதைகளைப் பதிவு செய்யும் போது அதற்கும் வாசகர்களின் கருத்திடுகைகளும் பின்னூட்டங்களும் திருப்தியாக இருக்கிறது.

சென்ற வருடம் இந்தியாவில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூலை வெளியீடு செய்த பின்னர் எப்போது இலங்கையில் வெளியிடப் போகிறீர்கள் என்று இலங்கை நண்பர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் இருந்தனர். அந்தவகையில் இலங்கையிலும் வெளியீடு செய்து அதனை நான் வாசகர்கள் கையில் தவழவிட்டிருந்தேன். அதிலிருந்து நான் எனது நூலுக்கான வரவேற்பை வாசகர்கள் எவ்வாறு வழங்கியிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

அதேபோன்று எனது இரண்டாவது நூலான தூரிகை வரையும் மின்மினிகள் ஹைக்கூ நூலுக்கும் கூட நல்ல வரவேற்புகளும், சிறந்த விமர்சனங்களும் கிடைத்துள்ளன. நிச்சயம் எனது கவிதைகள் வாசிப்பவரின் மனதில் புதுத் தெம்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வரவழைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என்றும் நினைக்கிறேன். அந்தவகையில் எல்லாம் வல்ல இறைவனுக்கே அனைத்துப் புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்.


உங்களது அடுத்த படைப்பு எது பற்றியதாக அமையும் எப்போது வெளிவரும் என்று கூற முடியுமா?

தமிழ் தொண்டர் பைந்தமிழ் சங்கம் நிகழ்த்திய பத்தாயிரம் கவிதைகள் ஒரு நூல் தொகுப்பு உலக சாதனை நூலிற்கு எனது நூறு கவிதைகளும் தேர்வாகி நூலாக்கம் பெற்றுள்ளது. இது இந்திய 'நோபல் உலக சாதனையில்' பதிவாகி உள்ளது. "துயில் நதிப்பூக்கள்" எனப்படும் எனது புதுக்கவிதை நூல் "தமிழ்நாடு உலக சாதனைக் கவிஞர்கள் - 100" எனும் மாபெரும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பிடித்துள்ளது. நூறு கவிஞர்கள் பத்தாயிரம் கவிதைகள் உலக சாதனை தொகுப்பு நூலில் இடம்பெற்ற "துயில் நதிப் பூக்கள்" எனும் இக்கவிதை நூல் இலங்கையில் இந்த வருடம் (2024) வெளியீடு காணவிருக்கிறது.

மேலும்

01) மருத்துவக் கட்டுரைகளின் தொகுதி

02) தன்முனைக் கவிதை நூல்

03) நூருல் ஐன் நஜ்முன் ஹூசைன் தொகுக்கவிருக்கும் மின்னும் தாரகைகள் - 2 நூலிலும் எனது பதிவுகள் இடம்பெறவுள்ளது.

04) தன்முனை இயைபுக் கவிதை தொகுப்பு நூல் - கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜ் தமிழ்நாடு

05) ஹைபுன் கவிதை தொகுப்பு நூல் - கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜ் தமிழ்நாடு

06) கல்வெட்டு தமிழி மொழியில் தன்முனைக் கவிதைத் தொகுப்பு நூல் - கவிச்சுடர் கல்யாண சுந்தரம் - தமிழ் நாடு

07) திருக்குக்குறள் பொருட்பால் தொகுப்பு நூல் - தமிழ்நாடு கன்னிக்கோவில் ராஜா

08) லிமரைக்கூ தொகுப்பு நூல் - தமிழ் நாடு கன்னிக்கோவில் ராஜா

09) குறள் சாதனைத் தொகுப்பு நூல்

10) 100 கவிஞர்கள் 500 மழலைப் பாடல்கள் தொகுப்பு நூல்

11) ஹைக்கூ நூல் (சுய வெளியீடு) - நூலேணி பதிப்பகம், சென்னை, தமிழ் நாடு.

12) கல்வெட்டு தமிழி எழுத்தில் ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு நூல் - தமிழ் நாடு கன்னிக்கோவில் ராஜா

இந்த நூல்கள் எல்லாம் எதிர்காலத்தில் வெளிவர உள்ளன.


இறுதியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?

முதற்கண் தமிழன் பத்திரகைக்கும் நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் எனது மனந்திறந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு இலக்கிய உலகில் காலடி வைத்து அதில் மிளிர இதுவரையில் எனக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment