பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, March 8, 2024

58. அஷ்வினி வையந்தி அவர்களுடனான நேர்காணல்

கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி விரிவுரையாளர் அஷ்வினி வையந்தி அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் சிவரூபினி. 'அஷ்வினி வையந்தி' என்ற புனைப் பெயரில் எழுதிக்கொண்டிருக்கும் நான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட உதவி விரிவுரையாளராக தமிழ்க் கற்கைகள் துறையில் கடமையாற்றி வருகின்றேன். என்னுடைய அம்மா என்னைப் படிக்க வைப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். சிறுவயதில் நானும், அண்ணாவும், அம்மாவும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தோம். ஆனாலும் அந்த வறுமை நிலையிலிருந்து மேலே வர வேண்டும் என்ற நோக்கோடு படிக்கத் தொடங்கினேன். படித்தால் மாத்திரம் போதாது. கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கின்ற அம்மாவையும், அண்ணாவையும் பெருமைப்படுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அதற்காக நான் தெரிவு செய்த துறைதான் இலக்கியம். இத்துறையில் நான் சாதிக்க வேண்டும் என்பதற்காக அஷ்வினி என்ற எனது வீட்டுப் பெயரையும், எனது அம்மாவின் பெயரையும் சேர்த்து அஷ்வினி வையந்தி என்ற புனைப் பெயரை வைத்துக்கொண்டு இலக்கியத் துறைக்குள் காலடி வைத்தேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை ஆகியன இலக்கிய ஈடுபாட்டுக்கு எந்தளவில் உதவியாக அமைந்தது?

சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் மீது எனக்கு அலாதி விருப்பம். ஆனால் புத்தகங்கள் வாங்கி படிப்பதற்கான வசதிகள் இருந்ததில்லை. குறிப்பிட்ட ஒரு வயதில் அதாவது நான் உயர் தரம் படித்த காலத்தில் திஃ கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் உள்ள நூல் நிலையத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். நான் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் நானும் ஒரு புத்தகம் எழுதினால் என்ன? என்ற எண்ணம் வரத் தொடங்கியது. அதன் ஆரம்ப கட்டமாக உயர் தரம் படித்துக்கொண்டிருக்கும்போது கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பின்னர் பல்கலைக்கழகம் சென்ற பின்னர் கற்றல் நடவடிக்கைகளோடு சேர்த்து இலக்கியத்திலும் எனது ஆர்வத்தைச் செலுத்தினேன். புத்தகங்கள் வாசித்தது மட்டுமன்றி புத்தகங்களை வாங்கிப் படிக்கவும் செய்தேன். எனது இலக்கிய ஆக்கங்களுக்கு எனது நண்பர்கள் ஆதரவினைத் தந்தார்கள். அதுமட்டுமன்றி எனது வீட்டிலும் பெரிய ஆதரவு இருந்தது. அத்தோடு எனது பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரும் என்னை வழிநடத்திச் சென்றார்கள். அவர்களின் வழிகாட்டுதல் என்னை ஒரு எழுத்தாளராக உருவாக்கியது எனலாம்.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

முதன்முதலாக உயர் தரம் படிக்கும்போது கவிதை எழுதத் தொடங்கினேன். அந்தக் கவிதைதான் என்னை எழுத்துத் துறைக்குள் அறிமுகம் செய்து வைத்தது. அத்துடன் நண்பர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. மட்டுமல்லாமல் எனது வீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. எனது வீட்டாரும், நண்பர்களும் தந்த உற்சாகம் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. 


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எப்படியிருந்தது?

எனக்கு எனது அம்மா மீது அளவுகடந்த பாசம் உண்டு. ஆனால் அதை அவரிடம் வெளிப்படுத்தியது கிடையாது. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் ஓடிய ஓட்டத்தில் பல துயரங்களை கடந்து வந்ததால் பாசத்தை வெளிப்படையாகக் கட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் அம்மா மீது கோபப்பட்டுக் கொண்டே இருப்பேன். ஆனாலும் என்றேனும் ஒருநாள் என் அம்மாவைப் பற்றி வெளியுலகம் பேச வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டே இருந்தேன். அந்த ஓட்டத்தின் ஆரம்பப் புள்ளிதான் எனது கவிதைக்கான அடித்தளமாக இருந்தது. முதன்முதலாக நான் எழுதிய கவிதை பாசத்தின் வெளிப்படாகத்தான் அமைந்தது. அதாவது முதன்முதலாக நான் எனது அம்மாவைப் பற்றித்தான் கவிதை எழுதினேன். இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் மனதில் தோன்றிய முறையில் எழுதிய கவிதைதான் அது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது? எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

எனது முதலாவது ஆக்கமாக கவிதைதான் வெளிவந்தது. அதாவது நான் உயர் தரம் படிக்கும்போது எனது முதலாவது கவிதை 2014 இல் பள்ளிக் கூடம் என்ற தலைப்பில் வானவில் என்ற சஞ்சிகையின் ஒக்டோபர் மாத இதழில் வெளிவந்தது.


இதுவரை எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்? அந்த நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை "யாவும் ஆனந்தமே" என்ற கவிதை நூலை மட்டுமே வெளியிட்டுள்ளேன். இந்நூலில் பாசம், தன்னுணர்வு போன்ற கருப்பொருட்களுடன் பொதுவான சில விடயங்கள் பற்றியும் கவிதைகளை எழுதியுள்ளேன். இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் எனக்குத் தோன்றிய வரையறைகளைக் கொண்டு கவிதையின் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய கவிதைகள்தான் இந்நூலில் காணப்படுகின்றன.


உங்களது முதல் பிரசவமான "யாவும் ஆனந்தமே" என்ற உங்களது கவிதைத் தொகுதியின் தலைப்பு குறித்துக் கூறுங்கள்?

உண்மையில் இந்தத் தலைப்பு பற்றி எங்கேனும் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அதற்கான சந்தர்ப்பத்தை இவ்விடத்தில் ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி. நாம் வாழும் உலகத்தில் நாம் காணுகின்ற எல்லாப் பொருட்களும் நமக்கு ஆனந்தத்தை தரத்தான் செய்கின்றன. ஆனால் நாம் அவை தருகின்ற கெட்ட விடயங்களை மாத்திரம் பேசிக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கின்றோம். அதனால் பல கெட்ட விளைவுகள் உருவாகின்றன. ஆனால் ஒரு விடயத்தில் இருக்கின்ற நல்ல விடயங்களை எடுத்து நோக்கினால் வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக அமையும். எனவே நாம் காணுகின்ற அனைத்திலும் ஆனந்தம் உண்டு. அதை நாம் பார்க்கத் தவறுகின்றோம். அவ்வளவுதான். எனவே எல்லாமே நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் செய்கின்றன. அதனால்தான் யாவும் ஆனந்தமே என்ற தலைப்பை எனது முதல் கவிதை நூலுக்கு வைத்துள்ளேன். அத்தோடு அத்தலைப்பில் கவிதை ஒன்றையும் எழுதியுள்ளேன். அக்கவிதை எனது கவிதைப் புத்தகத்தில் முதலாவது கவிதையாக இடம் பிடித்துள்ளது.


உங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

எனது கவிதை நூலில் தாய்ப் பாசம், பெண்களின் அடிமைத்தனம், தனிமை, மத நல்லிணக்கம், தனிமனிதனுக்கு நடைபெறுகின்ற சில விடயங்கள் போன்ற விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். இக்கவிதைகள் மூலம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் பேசியுள்ளேன். 

குறிப்பாக பெண்களுக்கு நடைபெறுகின்ற பிரச்சினைகளில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும். சமூகத்தில் நடக்கின்ற அடிமைத்தனங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் போன்ற சிந்தனைகளைப் பற்றிப் பேசியுள்ளேன். அத்தோடு மனிதர்களிடத்தில் நல்ல சிந்தனைகளை வலுப்படுத்த வேண்டியும் சில கவிதைகளை எழுதியுள்ளேன். 


மதம், இனம், மொழி போன்ற பாகுபாட்டை வைத்துக்கொண்டு மனிதன் தங்களுக்குள்ளே முரண்படும் நிலை இல்லாது போக வேண்டும், மனிதம் என்ற சொல்லால் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும், ஒரு கட்டுப்பாட்டிற்குள் நின்றுகொண்டு மனிதன் என்னும் பெயரில் அரக்கர்களாக வாழ்ந்தது போதும் எல்லோரையும் சக மனிதனாக மதித்து நடக்க வேண்டும் போன்ற கருத்துக்களை எனது கவிதைகளுக்கூடாக வலியுறுத்துகின்றேன்.


நீங்கள் இதுவரை அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள், இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

அப்படி சொல்வதற்கில்லை. நான் கவிதைகள் மாத்திரமில்லை. புத்தக விமர்சனம், சிறுகதை, அனுபவக் கட்டுரைகள் போன்ற இலக்கியத் துறைகளிலும் ஈடுபாடு காட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன். அத்தோடு பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்படும் ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து கொண்டும் இருக்கின்றேன். எனது சிறுகதைகள் பல "சிறுகதை மஞ்சரி" என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. 


மித்திரன், ஜீவநதி, எங்கட புத்தகங்கள் போன்ற சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் எனது புத்தக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இவைற்றையெல்லாம் சேர்த்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அவை எல்லாம் இதழ்களில் வந்த ஆக்கங்களாகவே உள்ளன. என்றேனும் ஒருநாள் இத்தகைய ஆக்கங்களும் புத்தகமாக வெளிவரும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கின்றேன்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

ஆரம்ப காலத்தில் அதாவது 80, 90 காலப் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் சிலர் குறிப்பிட்ட மரபுக்குள் கவிதை நின்றுவிட வேண்டும் எனவும் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படி எதிர்பார்ப்பவர்கள் எனது கவிதைகளைவிட புத்தக விமர்சனங்கள் நன்றாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ வித்தியாசமான முறையில் எழுதுகிறேன் எனவும் தொடர்ந்து எழுதுமாறும் குறிப்பிடுகின்றார். 


பேராசிரியர் யோகராசா, பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் போன்றோர் எனது கவிதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்கள்தான். பேராசிரியர் யோகராசா அவர்கள் வித்தியாசமான முறையில் எழுதுகிறேன் எனவும் தொடர்ந்து எழுதுமாறும் கூறி வருகின்றார். இதைத் தவிர்த்து இன்றைய கால கட்டத்தில் உள்ள பலர் எனது கவிதைகளை விரும்பிப் படிக்கின்றார்கள். நான் எனது வாசகர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளேன். அவர்களை நான் நேசிக்கின்றேன். அவர்களை திருப்திப்படுத்த வேண்டி எழுதிகொண்டிருக்கின்றேன். என் எழுத்துக்களும் அவர்களை திருப்திப்படுத்தும் என்றே நம்புகின்றேன். அதை நான் நேரடியாகக் கண்டும் இருக்கின்றேன்.


நீங்கள் எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வீர்களா? 

அவள் ஒரு சிறந்த தாய் என்ற தலைப்பில் அம்மாவிற்காக ஒரு கவிதை எழுதினேன். உண்மையில் அந்தக் கவிதையில், எனது அம்மா நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியே எடுத்துக்கூறியுள்ளேன். அந்தக் கவிதை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. இந்தக் கவிதையை எனது நூலில் வாசகர்கள் வாசித்துப் பார்க்கலாம்.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞரின் தாக்கம் காணப்படுகின்றது?

உண்மையைச் சொல்லப்போனால் நான் ஈழத்து படைப்புக்களைப் படிப்பதைவிட தென்னிந்திய படைப்புக்களையும், உலக படைப்புக்களையும் படிப்பது அதிகம். குறிப்பாக நா. முத்துக்குமார், யுகபாரதி, வைரமுத்து ஆகியோரின் கவிதைகளை நிறையவே படித்துள்ளேன். அவர்களுடைய கவிதைகளின் தாக்கம் என்னுடைய கவிதைகளில் இருக்கின்றது என்று சொல்வதற்கில்லை. எனக்குத் தோன்றிய விதத்தில் எனது கவிதைகளை எழுதுகிறேன். அவ்வளவுதான்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

ஆம் நிச்சயமாக. எனது கவிதைகளை வாசிக்கும் வாசகர்கள் பலரைப் பார்த்துள்ளேன். குறிப்பாக பெண் வாசகர்கள் பலர் என்னைப் போல் வர வேண்டும் எனவும், எனது கவிதைகள் தங்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் நேரடியாகவே என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். அது மாத்திரமின்றி சாதி, மத கட்டுக்கோப்புக்களில் இருந்து விடுபட்டு எல்லோரையும் சக மனிதனாக மதிக்கும் நிலையை எனது கவிதைகள் வற்புறுத்துகின்றன. எனவே என்னுடைய கவிதைகள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.


இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள்? உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது?

குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். எனது அம்மாவை வைத்து கற்பனையுடன் கூடிய சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளேன். அத்தோடு நடைமுறையில் நான் சந்தித்த பல மனிதர்களின் பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டும் சில சிறுகதைகளை எழுதியுள்ளேன்.


உங்களது இலக்கிய வாழ்வில் உங்களுக்கு உதவியவர்கள் அல்லது மறக்க முடியாதவர்கள் இருப்பின்?

நான் இலக்கிய உலகிற்கு வருவதற்கு பலர் உதவி செய்துள்ளார்கள். குறிப்பிட்டு இவர்தான் அந்த நபர் எனச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் எனக்கு உதவியவர்களாகப் பலர் இருக்கிறார்கள். 


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

நிச்சயமாக. பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பலதைப் பற்றியும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனவும் முடிந்தவரை குறிப்பிட்டுள்ளேன். 


கவியரங்குகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்கள்?

படிப்பில் கவனம் செலுத்திய காரணத்தால் கவியரங்குகளில் கலந்து கொண்ட நிகழ்வுகள் குறைவுதான். ஒரே ஒரு தடவை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித் தினத்தில் நடைபெற்ற கவியரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அந்தக் கவியரங்கு தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியதாக இருந்தது. அந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தார்கள். குறிப்பிட்ட கவியரங்கில் கலந்து கொண்டமையால் அவர்கள் முன்னிலையில் என்னைக் கவிதைத் துறையிலும் அடையாளப்படுத்திக்கொண்டேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவம் என்றால் எனது கவிதை நூல் வெளியீட்டு விழாதான். என்றேனும் ஒருநாள் புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கானக் களம் அமையவில்லை. திடீரென அதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. இருபத்தியெழு வருட ஆசை நிஜமாகப் போவதை எண்ணி மகிழ்ந்துகொண்டேன். அத்தோடு அன்றைய நிகழ்வுக்கு மட்டக்களப்பில் இருந்து பேராசிரியர் யோகராசா அவர்கள் மிகுந்த விருப்பத்தோடு வருகை தந்திருந்தார். அது எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியை அளித்திருந்தது. அன்றைய நாள் எனது அம்மாவும், எனது அண்ணாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. எத்தனை நாள் எதற்காக ஓடிக்கொண்டிருந்தேனோ அதை அடைந்த தருணம் அது. அன்றைய நாளை என்னால் மறக்கவே முடியாது.


இதுவரை நீங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் குறித்தும் குறிப்பிடுங்கள்?

நான் கட்டுரைகளைக் குறைவாகவே எழுதியுள்ளேன். நான் சேகரித்த புத்தகங்கள் பற்றி எங்கட புத்தகங்கள் என்ற சஞ்சிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதினேன். அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாட்டுக்காக 2022 ஆம் ஆண்டு எனது ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியை எழுதி அனுப்பினேன். அக்கட்டுரை மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. முகநூலில் எனது நூல் தொடர்பான விமர்சனங்களைப் பார்த்து பல எழுத்தாளர்கள் என்னை நூல் விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டு எனக்குப் புத்தகங்கள் பலவற்றை அனுப்பி வைத்துள்ளார்கள். ஈழத்து, தமிழக, புலம்பெயர் நாடுகளில் உள்ள பல எழுத்தாளர்களின் ஆதரவும் எனக்கு உள்ளது.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

தொடர்ந்து எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அத்தோடு சொந்தமாக எனக்கென்று ஒரு நூலகத்தையும் உருவாக்க வேண்டும். இந்தக் கனவுகளோடு சேர்த்து பல கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனம் என இலக்கிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன். அத்தோடு எனது அம்மாவின் வாழ்க்கை வரலாற்றினை நாவலாக எழுத வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.


உங்களது படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எங்கட புத்தகங்கள் நடத்திய இலக்கியப் போட்டியில் எனது சிறுகதை மூன்றாம் இடத்தையும், கட்டுரை முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்தோடு சிறுகதை மஞ்சரியில் மாதம் மாதம் வெளிவருகின்ற சிறுகதைகளில் இருந்து சிறந்த சிறுகதை ஒன்று தெரிவு செய்யப்படடு 1000 ரூபாய் பணப் பரிசு வழங்கப்படும். அவ்வாறு எனது சிறுகதை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. அச்சிறுகதையின் தலைப்பு ஷபிறகு சொல்கிறேன்| என்பதாகும். 

இதைத் தவிர்த்து எனக்கு அறிவுச் சுடர் விருது (2021), கலைஞருக்கான பாராட்டு விருது (2023) போன்ற சில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அறிவுச் சுடர் விருது 2021 இல் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறந்த மாணவராக செயல்பட்டமையைப் பாராட்டி அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தினால் (இந்தியா) வழங்கப்பட்டது. மற்றது கலைஞருக்கான பாராட்டு விருது அகத்தியர் கலைமா மன்றத்தினால் 2023 தை மாதம் 17 ஆம் திகதி வழங்கப்பட்டது.


சக இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன? 

நந்தினி சேவியர் என்னும் இலக்கியப் படைப்பாளி ஒரு நேர்காணலில் இளந்தலை முறையினருக்கு சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், சிறந்த நூல்களை வாசியுங்கள் அவற்றை பற்றி விமர்சனம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கருத்துக்களையே இளம் படைப்பாளிகளுக்கு நானும் முன்வைக்கின்றேன். நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். அவற்றைப் பற்றி கலந்துரையாடுங்கள். வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள். புதுப்புது விடயங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருங்கள். காலம் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே ஓரிடத்தில் தேங்கிக் கிடக்காமல் ஓடிக்கொண்டே இருங்கள். 

பிரச்சினைகள், சவால்கள் வாழ்வில் வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருங்கள். சவால்கள் உருவாகும்போதுதான் வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கும். எனவே தேங்கி நிற்காமல் உங்கள் திறமையின் மேல் நம்பிக்கை கொண்டு பயணித்துக்கொண்டே இருங்கள். என்றேனும் ஒரு நாள் வெற்றி என்னும் இலக்கை அடையலாம்.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

எனது ஓட்டத்தில் நான் பல வலிகளைக் கடந்து வந்தேன். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். எந்த இடத்தை அடைய வேண்டும் என நினைத்துக்கொண்டேனோ அந்த இடத்திற்கு வந்துவிட்டேன். வெற்றியின் சுவை எப்படி இருக்கும் என்பதை நுகர்ந்துவிட்டேன். ஆனாலும் இது வெற்றியில்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

வெற்றியை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டு வரும்போது விமர்சனங்களை முன்வைப்போர் ஏராளம். அவர்களை எதிர்த்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களை விட்டு விலகி முன்னோக்கி வாருங்கள். வாழ்வின் வெற்றி என்பது சக மனிதனை நேசித்தல், சக மனிதனோடு அன்புடன் நடத்தல் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே ஒவ்வொரு நபரைக் கடக்கும் போதும் புன்னகையோடு கடப்போம். என்னைப் பொறுத்தவரை இதுதான் வெற்றி. 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Saturday, July 15, 2023

57. கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பக் கல்வியை தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக மலேசியா சென்றேன். அதுதான் என் வெளிநாட்டு வாழ்க்கையின் தொடக்கப் புள்ளி. இப்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறேன்.


உங்களது குடும்பத்தவர்களுக்கும் இலக்கியத் துறையில் நாட்டம் உண்டா?

இலக்கியத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள் யாரும் என் குடும்பத்தில் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், என் வாசிப்பை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். என் எழுத்துப் பயணத்துக்கான பாதையைச் செப்பனிட்டுத் தந்தார்கள். என் தந்தை மர்ஹூம் இல்யாஸ் அவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். ஆனால் தமிழ் மொழியையும் காதலித்தார். என் எழுத்துக்களை நேசித்தார். நான் கேட்கும் புத்தகங்களை எனக்கு வாங்கித் தந்தார். எனது தாய் மாமனாரும், மத்ரஸத்துன்  நயீமியாவின் ஸ்தாபகருமான பிரபல சமூக சேவையாளர் மர்ஹூம் நயீம் ஹாஜியார் அவர்கள் என் ஆக்கங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்குப் பரிசுகள் வாங்கித் தந்து, என்னை மேலும் எழுதத் தூண்டினார். திருமணத்தின் பின்னர் என் கணவர் எம்.வை.எஸ். ஷாபி அவர்கள் என் இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.


நீங்கள் எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? 

1980 களில் தான் எனது இலக்கியப் பயணம் ஆரம்பமாகியது. நான் எட்டாம் ஆண்டில் கல்வி கற்கும் போது தினகரன் பத்திரிகையின் சிறுவர் உலகம் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். 1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எமது பாடசாலை என்ற தலைப்பிலேயே எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. அதன் பிறகு கவிதை, சிறுகதைத் துறையில் மெது மெதுவாகக் காலடி எடுத்து வைத்தேன். என் முதல் கவிதை, முதல் சிறுகதை எல்லாமே தினகரன் பத்திரிகையில் தான் வெளியாகின. 1982 இல் எனது முதலாவது சிறுகதை 'வெதும்புகின்ற ஊமைகள்' என்ற தலைப்பில் வெளிவந்ததாகவே எனக்கு நினைவு. 

அத்துடன் தினகரன், சிந்தாமணி, நவமணி, மித்திரன், வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களில் எல்லாம் எனது பல்வேறு வகையான ஆக்கங்கள் வெளியாகின. வானொலியிலும் நான் நிறையவே எழுதினேன். சஞ்சிகைகள் பலவற்றிலும் எனது பல படைப்புகள் வெளியாகி உள்ளன. 


சமூகம் சார்ந்த பிரச்சனைகளை உங்கள் படைப்புகளில் எப்படிக் கொண்டு வருகின்றீர்கள்? உங்கள் படைப்புகளை பொதுவாக எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்?

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆற்றலைக் கொடுத்துள்ளான். அதை சமூகத்துக்குப் பயனளிக்கும் விதத்தில் உபயோகிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அதனால் நான் பொழுது போக்குக்காக எதையும் எழுதுவதில்லை. அன்றாட வாழ்வில் எனக்குக் கிடைக்கின்ற அனுபவங்களும், அவதானிப்புகளும் என் படைப்புளின் கருவாகின்றன. கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு மாய உலகை உருவாக்குவதில் எனக்கு இஷ்டமில்லை. இரத்தமும் சதையும் கொண்ட அன்றாட மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்களைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதில் எனக்கு அதிக அக்கறை இருக்கிறது.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. குமுறுகின்ற எரிமலைகள் - சிறுகதைத் தொகுதி (1998)

02. தென்னிலங்கை முஸ்லிம்களின் தமிழ்ச் சிறுகதைகள் - ஓர் ஆய்வு (1998)

03. இரவைக் காக்கும் இமைகள் - கவிதைத் தொகுப்பு (2022)

04. என் சிறகில் சிக்கிய வானம் - பயணக் கட்டுரைகள் (2023)

ஆகிய 04 நூல்களையே இதுவரை நான் வெளியிட்டுள்ளேன்.


குமுறுகின்ற எரிமலைகள் என்ற உங்களது சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் மற்றும் அதன் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இந்தத் தொகுதியில் எனது ஆரம்ப கால 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அநேகமான சிறுகதைகள் நான் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது எழுதியவை. இந்த நூலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தே நான் அதிகம் பேசி இருக்கிறேன். 




உங்களது இரண்டாவது நூல் வெளியீடான தென்னிலங்கை முஸ்லிம்களின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு நூல் பற்றி என்ன சொல்வீர்கள்?


நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது எழுதிய ஆய்வு நூல் இது. எழுத்தாளர் திக்குவல்லை ஸும்ரியின் அறிமுகம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. அவரின் ஒத்துழைப்புடன் தான் இந்த நூலை எழுதினேன். தகவல் திரட்டுவதற்காக ஒரு தடவை திக்குவல்லைக்குச் சென்றேன். அப்போது அவர் திக்குவல்லையின் மூத்த எழுத்தாளர்கள் பலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். திக்குவல்லை ஷம்ஸ், திக்குவல்லை கமால், திக்குவல்லை ஸப்வான், திக்குவல்லை எஸ்.ஐ.எம். ஹம்ஸா என்று நிறையப் பேரிடம் தகவல் சேகரித்து வந்து இந்த ஆய்வை மேற்கொண்டேன். பின்னர் கல்ஹின்னை தமிழ் மன்றம் அதை வெளியிட முன்வந்த போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

என் சிறுகதைத் தொகுப்பையும் கல்ஹின்னை தமிழ் மன்றமே வெளியிட்டது. இதில் விசேடம் என்னவென்றால், இந்தப் புத்தகத்துக்கான அறிமுக விழாவும் கூட திக்குவல்லையில் தான் நடந்தது. என் பங்களிப்பு எதுவுமே இல்லாமல், திக்குவல்லைக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நான் ஒரு விருந்தாளியைப் போல விழாவுக்குப் போய் வந்தேன்.


நீங்கள் இதுவரை எழுதியுள்ள கவிதைகள் பற்றிக் குறிப்பிட முடியுமா? எவ்வகையான கருப்பொருட்களை மையமாக வைத்து உங்களது கவிதைகளை எழுதுகின்றீர்கள்?

நான் நியூஸிலாந்துக்குப் புலம் பெயர்ந்து வந்தபின் கொஞ்ச நாட்கள் எழுத்துலகில் இருந்து ஒதுங்கி இருந்தேன். ஒரு விபத்தில் சிக்குண்டு அப்போது நான் சக்கர நாட்காலியில் இருந்தேன். நண்பர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்னைத் தெரிந்தவர்கள் நான் யாரென்று கேட்டார்கள். அப்போது கோபத்திலும் விரக்தியிலும் பல கவிதைகள் எழுதிக் கிழித்துப் போட்டேன். என் உடல் நிலை தேறிய பின்புகூட எழுத்துத் துறையில் நான் ஈடுபடவில்லை. ஆனால், முகநூல் கணக்குத் திறந்த பிறகு, எழுதச்  சொல்லி என் பேனா அடம் பிடித்தது. 

முகநூல் மூலம் அவுஸ்திரேலியா வானொலி முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர் முஹம்மது முஹுசீன் அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. வானொலி நிகழ்ச்சிகளுக்காக அவர் என்னைத் எழுதத் தூண்டினார். என் இலக்கியப் பயணத்தில் ஏற்பட்ட இடைவெளியை அப்போது நிரப்ப ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் விளைவாகவே 'இரவைக் காக்கும் இமைகள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. இந்தத் தொகுப்பில் இருக்கும் பாதிக் கவிதைகள், ஓர் இளம் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு நான் ஆரம்ப காலத்தில் எழுதியவை. மீதிக் கவிதைகள் வானொலியிலும் முகநூலிலும் எழுதியவை. என் கவிதைக்கான கருவும் நடைமுறை வாழ்க்கையில் கிடைப்பதுதான். காதல், வீரம், துணிவு,  ஏமாற்றம், சவால்கள்,  அடக்குமுறைக்கு எதிரான குரல், யுத்த காலச் சூழல் என்று வெவ்வேறு கருப்பொருளில் என் பேனா பேசுகிறது.


சிலரை கவிதை எழுதத் தூண்டுவதே காதல் என்று சொல்கிறார்களே. இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

என்னைக் கவிதை எழுதத் தூண்டிய காரணிகள் பல. அதில் வாசிப்பும் ஒன்று. இரண்டாவது காரணி நான் வாழ்க்கையில் அனுபவித்த வலிகள், வேதனைகளை அனுபவித்து எழுதும் கவிதைகளில் வார்த்தைகள் வசப்பட்டு விடும். பிறரின் வலிகளை உணர்ந்த தருணங்களிலும் கவிதை எழுதுவேன். அதற்காக நான் காதல் கவிதைகள் எழுதவில்லை என்று சொல்ல வரவில்லை. இளமையில் காதலைப்  பாடினேன். அது ஒரு குறுகிய பார்வையில் தெரிந்த காதல் - ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்  இடையிலான காதல் அது. இப்போது காதல் என்ற சொல் வானத்தைப் போல விரிந்து தெரிகிறது. தந்தையை, தாயை, இயற்கையை, இலட்சியங்களை.. என்று எல்லாவற்றையும் நான் காதலிக்கிறேன். அந்த உணர்வுகளைக் கவிதையில் வடிக்கிறேன். அன்று எழுதிய காதல் கவிதைகளுக்கும் இன்று எழுதும் காதல் கவிதைகளுக்கும் வித்தியாசம் இதுதான்.


கடைசியாக வெளியிட்ட உங்களது என் சிறகில் சிக்கிய வானம் என்ற பயணக் கட்டுரைகளடங்கிய நூலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி என்ன கூறப் போகின்றீர்கள்?

இது என் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. 2019 டிசம்பர் 14 முதல் நியூசிலாந்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 2022 ஜனவரி 24 வரை 40 நாட்களாக ஆறு நாடுகளில் பயணித்த அனுபவங்களை இந்த நூலில் கட்டுரைகளாகப் பகிர்ந்திருக்கிறேன். கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களையும் புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.  

நான் பயணங்களை முடித்து விட்டு நாடு
திரும்பியபோது, கொரோனாத் தொற்று தலைகாட்ட ஆரம்பித்திருந்தது. சில வாரங்களுக்குள் நாடு முடக்கப்பட்டு வீட்டுக்குள் அடைபட்டிருந்த நிலையில், எனது பயண அனுபவங்களை முகநூலில் தொடராக எழுதி வந்தேன். இந்தக் கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றன என்பதற்கு அவர்களின்  பின்னூட்டங்கள் சாட்சியாயின. இந்தக் கட்டுரைகள் நூலுருப் பெறவேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் ஊக்கம் காரணமாகவே இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.


இத்தனை நூல்களையும் வெளியிடுவது எப்படி சாத்தியமானது? 

இத்தனை நூல்கள் என்று பெருமைப்படும் அளவுக்கு என்னிடம் நீண்ட பட்டியல் ஒன்றுமில்லை. மொத்தம் நான்கு நூல்கள்தான். முதல் இரண்டு நூல்களையும் வெளியிடும் போது ஒரு மாணவியாக இருந்தேன். 

என் புத்தகத்தை சிலர் வெளியிட வேண்டும் என்று வலிந்து வந்து கேட்கிறார்கள் என்று அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு பாரிய கடன் சுமை என் தோளில் ஏறப்போகிறது என்பதை உணராத அப்பாவியாக எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினேன். அந்த அனுபவம் தந்த பாடம்தான் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக புத்தக வெளியீடு பற்றிய சிந்தனையை என்னிலிருந்து தூக்கியெறிந்துவிட்டது. ஆனால், பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்த எனது கவிதைகள், சேர்த்து வைத்திருந்த  பத்திரிகை நறுக்குகள் எல்லாம் காலத்தால் அழிந்து போவதை நினைக்க மிகவும் கவலையாக இருந்தது. எஞ்சியிருந்த சில பத்திரிகைத் துண்டுகளை சேர்த்தெடுத்து இன்னும் கொஞ்சம்  முகநூல் கவிதைகளையும் சேர்த்து 'இரவைக் காக்கும் இமைகள்' என்ற எனது கவிதை நூலை வெளியிட்டேன். அப்போது, கொரோனாத் தொற்றில், பயணிக்க முடியாத நிலை, கூட்டங்கள் கூட முடியாத நிலையில் வெளியீட்டு விழா கூட இணைய வசதியுடன் ஸூம் (ZOOM) மூலமே நடைபெற்றது.


தற்போது நீங்கள் வெளி நாட்டில் வசித்து வருகின்றீர்கள். அங்கிருந்து கொண்டு உள் நாட்டில் நூல்களை வெளியிடுவது சிரமமாகத் தோன்றவில்லையா?

அது மிகவும் சிரமமான காரியம் என்பதால்த்தான் நூல் வெளியீட்டில் நான் அக்கறை காட்டாமல் இருந்தேன். வெளிநாட்டில் இருப்பதால் நியாயமான விலைக்கு புத்தகம் அடிப்பதுகூட கஷ்டமாக இருக்கிறது. 


ஏனைய எழுத்தாளர்களோடு உங்களுக்கு எவ்வகையான இலக்கிய நட்பு இருக்கிறது?

வெளிநாட்டில் வசிப்பதால் உள்நாட்டு எழுத்தாளர்களுடனான தொடர்பை முகநூல் வழியாக மட்டுமே பேண முடிகிறது. அதைத்தவிர, ஆற்றலுள்ள முஸ்லிம்  பெண்களின் அமைப்பான 'ஸ்ரீ லங்கா பென் கிளப்' அமைப்பின் போஷகராக இணைந்திருக்கிறேன். அதன் மூலம் பல எழுத்தாளர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.


கவிதை, சிறுகதைத் துறை தவிர வேறு எந்தெந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? அத்துறை பற்றியும் குறிப்பிடலாமே?

நாடகத் துறையில் எனக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களே, மக்கள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம். 

அண்மைக் காலமாக மொழிபெயர்ப்புத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன். 'ஸ்ரீ லங்கா பென் கிளப்' அமைப்பின் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிக்காக மாதம் ஒரு கவிதையை மொழிபெயர்த்து வருகிறேன். இதற்காக, 'பென் கிளப்' அமைப்பின் உறுப்பினர்களின் சிறந்த கவிதைகளைத்  தெரிவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். 

பத்தி எழுத்திலும் எனக்கு ஆர்வம் அதிகம். ஆங்கிலத்தில் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். ஒரு நாவலும் தயாராகி வருகிறது. மேடைப் பேச்சுக்களில் கலந்து கொள்வதும் எனக்குப் பிடிக்கும். தொடர்ச்சியாக வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. உலக சமாதான தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம், இன மத நல்லிணக்கக் கூட்டங்கள் போன்ற பல நிகழ்வுகளில் விசேட பேச்சாளராக கலந்து கொண்டுள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் உரையாற்றி இருக்கிறேன். 


நாடகத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நான் நிறைய நாடகங்கள் எழுதி உள்ளேன். அதில் பாறையில் பூத்த மலர் என்ற தொடர் நாடகமும் அடங்கும். அதன் பின்பு அவுஸ்திரேலியா வானொலியின் 'வளர்பிறை' முஸ்லிம் நிகழ்ச்சிக்காக நாடகங்களை எழுதி, நானே பல குரல்களில் நடித்தும் இருக்கிறேன். உரைச்சித்திரம் நிகழ்ச்சிகளிளும் நானே எழுதி நடித்திருக்கின்றேன்.


வானொலிக்கு ஆக்கங்களை எழுதிய காலத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

சமூக வலைத்தளங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், வானொலி நேயர்கள் தங்கள் கருத்துக்களையும், பாராட்டுக்களையும் கடிதங்கள் மூலமாவே பகிர்ந்து வந்தார்கள்.  வானொலியில் நாடகங்கள் ஒலிபரப்பாகினால், தொடர்ந்தும் இரண்டு, மூன்று வாரங்களுக்குக் கடிதங்கள்  வந்து கொண்டே இருக்கும். எங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றாலும் நாடகங்கள் பற்றிய பேச்சு கட்டாயமாக இருக்கும். 

என் தந்தையின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அவரைக் காணும் போதெல்லாம் உங்கள் மகளின் நாடகத்தைக் கேட்டு மகிழ்ந்தோம் என்று நாடகம் பற்றி கருத்துப் பரிமாறுவார்களாம். வாப்பா வீட்டுக்கு வந்து அந்தக் கருத்துக்களை என்னிடம் எத்திவைத்து விட்டு, என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து 'உங்கள் எழுத்துக்கள் நிறைய மக்களைச் சென்றடைகிறது. அதனால் எப்போதும் சமூகத்துக்கு பயனுள்ள விடயங்களையே எழுதுங்கள்' என்று சொல்வார். நாடகத்தைக் கேட்கத் தவறியவர்கள் நான் ஒலிப்பதிவு செய்து வைத்த, ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு வருவார்கள். அது கை மாறி மாறி எங்கெல்லாமோ போகும். ஆனால் அபூர்வமாகவே திரும்பி வரும்.

நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களை எல்லாவற்றையும் மிகவும் ஆசையுடன் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால், கறையானுக்குப் பொறுக்கவில்லை. என் நாடோடி வாழ்க்கையும் அதற்குக் கைகொடுக்கவில்லை. இப்போது அந்த இனிய நினைவுகள் மட்டுமே என்னிடம் மீதமிருக்கின்றன.


சிறுவர் படைப்புகளை வெளியீடு செய்வதில் உங்களுக்கு நாட்டம் இல்லையா?

சிறுவர்களுக்காக வானொலியில் உரைச் சித்திரங்கள் எழுதி உள்ளேன். சிறுவர்களின் உள நல மேம்பாட்டுக்கான நிகழ்ச்சிகளை நேரில் நடாத்தி வருகிறேன். சிறுவர் படைப்புக்களில் நாட்டமில்லை என்று சொல்வதற்கில்லை. அதற்கான நேரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


உங்களது இலக்கியப் பங்களிப்புகளுக்காக இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுக்கள், பட்டங்கள், கௌரவங்கள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

விருதுகள் விற்கப்படும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். பட்டங்கள் மலிந்து அதன் உண்மையான பெறுமதியை இழந்துவிட்டன. பணம் தந்தால் பாராட்டு விழா நடத்துவோம் என்று நிறைய இயக்கங்கள் கிளம்பி இருக்கின்றன. இவற்றை விட்டும் தூரப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி.

நான் முகநூலை என் எழுத்துக்களுக்கு சிறந்ததோர் களமாகப் பயன்படுத்தி வருகிறேன். என் எழுத்துக்கள் பரந்துபட்ட வாசகர்களைச் சென்றடைய முகநூல் உதவுகிறது. வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களை மிகவும் மதிக்கிறேன். அவைகள் தாம் என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த கௌரவங்கள். 

இதுதவிர, விரைவில் ஒரு சர்வதேச நிகழ்வொன்றில் நேர்மையான முறையில் கௌரவிக்கப் படவுள்ளேன் என்று மட்டும் இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?

நான் சிறுமியாக இருக்கும்போது எனக்குக் களம் தந்து கை கொடுத்தது தினகரன் பத்திரிகைதான். நான் புலம்பெயர்ந்த பின்பும், என் நேர்காணல்கள் பலமுறை தினகரனில் வெளியாகி இருக்கின்றன. தினகரன் ஆசிரியருக்கும், என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, May 14, 2023

56. டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்

எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியை

Dr. ஜலீலா முஸம்மில் (MBBS / SL)

ஏறாவூர்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

அருளாளன் அன்பாளன் எல்லாம் வல்ல இறையோன் எமை ஆளும் நல்லோன் வல்லோன் அல்லாஹுத்தஆலாவை முதற்கண் பணிந்தவளாக, அடுத்து தினகரன் செந்தூரம் இதழ் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தவளாக, நான் ஜலீலா முஸம்மில். இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் மர்ஹும் யூ.எச். முகம்மது (முன்னாள் அதிபர் மட்ஃஅலிகார் தேசிய பாடசாலை, ஏறாவூர்) சித்தி பௌசியா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக பணிபுரிகிறேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்வு, இலக்கிய ஈடுபாடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபா வித்தியாலயம் மற்றும் அல் முனீரா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் பயின்றேன். மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தேன். தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை அனுபவம் உண்டு.

சிறு பராயம் முதலே வாசிப்பிலே எனக்கு ஆர்வம் அதிகம். எப்போதும் வாசிப்பு, எதிலும் வாசிப்பு என்று தணியாத தாகமாய் தமிழிலே எனக்கு அப்படியொரு பற்று. வாசிப்போடு உறவு கொண்டிருந்ததாலேயே தமிழிலே விருப்பு வந்தது என்றால் அது மிகையாகாது. எனது தந்தை ஹயாத்து முஹம்மது அவர்கள் கணித ஆசிரியராக இருந்த போதிலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அத்துடன் மரபுக் கவிதை புதுக்கவிதை போன்றவற்றை இயற்றக் கூடியவர்களாகவும் இருந்தார். செய்யுள்களையும் காவியங்களையும் கதைகளையும் தமிழ் ஊற, தமிழ் சொட்டச் சொல்லித் தருவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். எனவே எனது தமிழின் ஆஸ்தான குரு தந்தை என்று தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.


எதை எழுதினாலும் அவரிடமே முதலில் அதைச் சமர்ப்பித்து, பாராட்டுக்கள் வாங்குவது எனது வழக்கமாய் இருந்தது. தமிழ்ப் பாடத்தைச் சுவைபடக் கற்பித்த தமிழ் ஆசான்களும் எனது தமிழ் வளரக் காரணமானவர்கள்தாம். இவ்விடத்தில் அவர்களை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன். 

கல்வியிலே திறமையைக் காட்டினாலும் எழுத்துலகம் எனது இன்னொரு கண்ணாகவே இருந்தது. எழுத்தும் வாசிப்பும் நான் மிகவும் நேசிக்கும் துறைகளாகும். கற்றலின் ஊடே கவிதை எழுதுவதையும் வாசிப்பதையும் விடாமல் தொடர்ந்தேன். அந்தக் காலங்களில் எனது தமிழ்ப் பசிக்கு பல்வேறுபட்ட நூல்களை வாசிப்பது தீனியாக அமைந்தது. இப்போதும் அதைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறேன். பள்ளிப் பருவத்திலே கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, பட்டிமன்றம், குறுக்கெழுத்துப் போட்டி போன்றவற்றைத் தயார் செய்வது மட்டும் அல்லாமல் அந்தப் போட்டிகளிலும் நான் பங்கு பற்றினேன். அதுமட்டுமல்லாது பாடசாலைக் கலை நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராகவும் பங்கேற்றுள்ளேன். பாடசாலைகளில் வெளியிடப்பட்ட நூல்களிலும் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன். இவ்வாறு தமிழோடு இழைந்து இணைந்து பயணித்தது எனது இலக்கியத் தாகத்திற்கு வித்திட்டது எனலாம். சொல்லோடிணைந்த பொருளாய் என்னோடு தமிழ் ஒட்டிக்கொண்டுவிட்டது என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். சிறுவயதில் ஆரம்பித்த எனது இலக்கிய மோகம் காலம் செல்லச் செல்ல வளர்ந்து கொண்டே இருந்தது. தொழில் வேறு துறையில் என்றாலும் அடிமனதில் ஆழப் பதிந்துவிட்ட தமிழை ஆராதிக்கும் வண்ணத்தில் சிறிது எழுத ஆரம்பித்துள்ளேன்.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அநுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

நீண்ட காலமாக எழுத்துத் துறைக்குள் வர வேண்டும் என்ற ஆசை மனதிலே இருந்து வந்தது. சிறுவயதிலே பள்ளிக் காலங்களில் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள், கதைகள் போன்றவற்றை எழுதி அனுப்புவேன். அவை வெளிவந்தனவா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. அந்தக் கனவு, அந்த ஆசை இவ்வளவு நாள்பட்டதன் பிறகு நிறைவேறி இருக்கிறது. பள்ளிக் காலம் தொட்டு எழுதத் தொடங்கி இருந்தாலும் அவை எனக்குள்ளே புதைந்துவிட்டன என்றும் சொல்லலாம். அப்போதுகளில் அதற்கான களமும் காலமும் அமையவில்லை என்றே நினைக்கிறேன். சிலவற்றைச் சேமித்து வைத்துள்ளேன். சில படைப்புகள் காலப்போக்கில் காணாமலே போய்விட்டன. நண்பி ஒருவர் மூலம் எழுத்துத் துறைக்குள் வருவதற்கான ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் புலனக் குழுமங்களில் எனது கவிதைகளைப் பதிவேற்றம் செய்து வந்தேன். அதன் பிறகு படிப்படியாக முகநூல் குழுமங்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளில் பங்குபற்றினேன். பத்திரிகைகளுக்கும் எனது ஆக்கங்களை எழுதத் தொடங்கினேன். இவ்வாறே எழுத்துத் துறைக்குள் எனது பயணம் சென்று கொண்டிருக்கிறது.


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எது?

முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் என்றால் 1995 இல் அதாவது தரம் நான் ஒன்பதில் கற்கும் போது எனது நண்பிக்காக நட்பு பாராட்டி எழுதியது என்று நினைக்கிறேன். அது மனதை வருடிய ஒரு சுகமான தென்றலாக என் நினைவில் இப்போதும் நிறைந்திருக்கிறது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

முதன் முதலாக எனது ஆக்கமான ஷஷநான் எழுதுகிறேன்' எனும் தலைப்பிலான கவிதையானது பிரான்சு நாட்டில் இருந்து வெளியாகும் தமிழ் நெஞ்சம் மின்னிதழில் 2021 அக்டோபர் முதலாம் திகதி வெளிவந்தது. அது எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமானதும் நெகிழ்ச்சியானதுமான ஒரு சம்பவமாக இருக்கிறது. அந்தத் தருணத்தில் மனதில் ஏற்பட்ட உவகைப் பட்டாம்பூச்சிகளை சொல்லில் வடிக்க முடியாது. என வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான தருணமாக அது இருக்கிறது.


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? அந்த நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிதைத் தொகுப்பு நூல்கள் பலவற்றில் எனது கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவிலும் இலங்கையிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. எனது தனிப்பட்ட படைப்பான ஷஷசிறகு முளைத்த மீன்' எனும் கவிதை நூலைக் கடந்த 2022 ஆம் வருடம் வெளியீடு செய்தமையிட்டு பெருமிதமும் பேருவகையும் அடைகிறேன். இக்கவிதைத் தொகுதி கடந்த 2022.02.27 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணிக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (YMCA, NANDANAM) எழிலினிப் பதிப்பகத்தால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. கன்னி வெளியீடான இந்நூலினை தமிழ் நாடு அரசு மாநில திட்டக் குழு உறுப்பினர், தமிழிசை நடனக் கலைஞர், முனைவர் பத்மசிறீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் வெளியிட்டு வைத்ததுடன் நூலின் முதற் பிரதியை முனைவர் கவிஞர் கூடல் தாரிக் அவர்கள் பெற்றுக்கொண்டார். அத்துடன் பேராசிரியரும் பிரபல பேச்சாளருமான முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களும் விழாவினை அலங்கரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கவிதை நூல் வெளியீடு இலங்கையிலும் கடந்த 2022.10.01 அன்று சனிக் கிழமை ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. 

எனது இரண்டாவது நூல் தொகுக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஹைக்கூ கவிதை நூலாக அது வெளிவரப் போகிறது. இன்ஷா அல்லாஹ் ஓரிரு மாதங்களில் வாசகர்களான உங்களின் கைகளில் தவழும் என்பதை மகிழ்வுடன் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்களுடைய முதல் பிரசவமான சிறகு முளைத்த மீன் என்ற கவிதைத் தொகுதியின் தலைப்பு குறித்துக் கூறுங்கள்?

கவிதை நூலுக்குள் இருக்கும் ஒரு நேச வெளிப்பாடாகும் கவிதை ஒன்றின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது. ஆழ்கடலில் அமிழ்ந்திருந்த மீன் ஒன்று கவிதைச்சிறகு முளைத்து வான் வெளியில் எம்பி உற்சாகத்தோடு, உத்வேகத்தோடு பறக்கத் தயாராகி விட்டதையும் அது குறிப்பிடுவதாக அமைகிறது. ஆழ்கடலுக்குள் யாருமே அறியாதிருந்த அந்த மீன் வான்வெளியெனும் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்க வந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


உங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

சிறகு முளைத்த மீன் பல்சுவை அம்சங்களோடு பல்வேறுபட்ட கவிப் பூக்களின் கதம்பமாக வெளிவந்து இருக்கிறது. அதிலே ஒரு வரிசைக் கிரமத்தை நீங்கள் அவதானிக்கலாம். இறைவன், நபிகளார், தந்தை, தாய், கணவன் மனைவி, மகள், நண்பர்கள், உழவர் போன்ற தலைப்பில் அமையக்கூடிய கவிதைகள் ஒவ்வொன்றாக இடம் பெறுவது இன்னூலின் சிறப்பம்சம் என்று நான் நினைக்கிறேன். அத்தோடு ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள், நாட்டார் பாடல், கிராமியக் கவிதைகள், காதல் கவிதைகள், ஊக்கக் கவிதைகள், இயற்கை சம்பந்தமான கவிதைகள் மற்றும் மகாத்மா காந்தி, பாரதி, ஆண் தேவதை போன்ற தலைப்பிலான கவிதைகளும் உள்ளடங்கலாக ஒரு கவிதைத் தொகுதியாக இருக்கிறது. 


இறைவனின் மகத்துவத்தையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் காதலின் இரசனையையும் இயற்கையின் வருடலையும் உலகில் வாழ்ந்து மறைந்த சில தலைவர்களைப் போற்றியும் புகழ்ந்தும் நேர்மறை சிந்தனைகளைத் தூண்டித் துவண்டவர்களைத் தூக்கி எழுப்பிவிடும் ஊக்கக் கவிதைகளுமென எனது கவிதை நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புளகாங்கிதத்தோடு உங்களிடம் தெரிவிக்கிறேன்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

இந்தியாவில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூல் சென்ற வருடம் வெளியீடு செய்த பின்னர் எப்போது இலங்கையில் வெளியிடப்படப் போகிறது என்று இலங்கை நண்பர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் இருந்தனர். அந்தவகையில் இலங்கையிலும் வெளியீடு செய்து அதனை நான் வாசகர்கள் கையில் தவழவிட்டிருந்தேன். அதிலிருந்து நான் எனது நூலுக்கான வரவேற்பை வாசகர்கள் எவ்வாறு வழங்கியிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். நிச்சயம் எனது கவிதைகள் வாசிப்பவரின் மனதில் புதுத் தெம்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வரவழைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என்றும் நினைக்கிறேன். அந்தவகையில் எல்லாம் வல்ல இறைவனுக்கே அனைத்துப் புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்.


நீங்கள் எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வீர்களா?

ஆமாம். நிச்சயமாக. நேயம் என்றொரு கவிதை என் நினைவுக்கு வருகின்றது. இயற்கையோடு ஒன்றி வாழும் உயிர்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழும் போது மனிதர்கள் மட்டும் வேற்றுமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வாழ்வதனைக் கோடிட்டுக் காட்டுகிறது அந்தக் கவிதை. ஆரம்ப காலத்தில் நான் எழுதிய ஒரு கவிதை அது. அக்கவிதையும் நூலாக்கத்திற்கு உட்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இது எனது மனதில் பதிந்த கவிதையாகவும் இருக்கிறது.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞரின் தாக்கம் காணப்படுகின்றது?

எல்லாக் கவிஞர்களும் எனக்குப் பிடித்த கவிஞர்கள்தான். கவிதைகளையே நான் கூடுதலாக விரும்பி படிப்பேன். சுப்ரமணிய பாரதி, மஹாகவி, அப்துல் ரகுமான், வைரமுத்து, மு. மேத்தா, நா. முத்துக்குமார் போன்றவர்களின் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. எனது கவிதைகளில் யாருடைய தாக்கம் அதிகமாக இருக்கின்றன என்பதை வாசகர்கள் தான் எனக்குக்கூற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

நிச்சயமாக. ஆயுதங்களின் முனையைவிட பேனா முனைக்கு சக்தி அதிகம் என்று நினைக்கிறேன். ஊக்கமிக்க கவிதைகளை வாசிப்பவர்கள் அதனால் தூண்டப்பட்டுப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். சிறு துளி விழுந்து பெருவெள்ளம் வருவது போல, சிறு அக்கினிக் குஞ்சொன்று ஒரு காட்டையே எரித்து விடுவது போல, சிறு கவிதையொன்று சமூக மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்பதற்கான சான்றுகள் நமது வரலாற்றில் நிறையவே உண்டு. அந்தவகையில் எனது கவிதைகளும் அவ்வகையான ஒரு மாற்றத்தைத் தரும் என்று உறுதியாக நம்புகின்றேன். 


இதுவரை எத்தனை சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள்? உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது? சிறுகதைகளுக்கான உங்களது பாத்திரப் படைப்பு எப்படிப்பட்டது?

சிறுகதை எழுதியது மிகக் குறைவு. அதற்கான காரணம் நேரமின்மை என்று நினைக்கிறேன். எழுதிய சிறுகதை ஒன்று பிரதேச செயலக இலக்கிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதை இவ்விடத்தில் நான் நினைவுகூர்கிறேன். சமூகத்தில் ஒரு பெண்ணின் கஷ்டங்கள் மற்றும் அவளுடைய துயரங்களின் பிரதிபலிப்பே பெரும்பாலும் என்னுடைய சிறுகதைகளில் இடம்பெறுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எம்மைத் தாக்குகின்ற, மனதில் சலனத்தை ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு விடயமும் சிறுகதைக்கான ஒரு கருவாகவே அமைந்து விடுகின்றது என்பது உண்மையான விடயம். எனது சிறுகதைகளும் இவ்வாறான கருக்களிலே துளிர்த்து உருவானது எனலாம்.


நீங்கள் அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள். இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

கவிதையே எனக்கு மிகவும் விருப்பமான ஒரு துறையாக இருக்கிறது. புதுக் கவிதை எனும் போது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இருப்பதில்லை. நினைத்த விடயத்தை நாம் வித்தியாசமாக சொல்கின்ற விதமே புதுக் கவிதைக்கான ஒரு பாணியாக இருக்கிறது. நிச்சயமாக இலக்கியத்தின் ஏனைய துறைகளிலும் ஈடுபாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆயினும் பணி நிமித்தமாகவும் நேரமின்மை காரணமாகவும் அதில் கூடுதலான கவனம் எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ளேன். இனிவரும் காலங்களில் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். வல்ல இறைவன் அதற்குத் துணை புரிய வேண்டும். இன்ஷா அல்லாஹ்.


உங்களது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாதவர்கள் யாவர்?

நான் இலக்கியத் துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் இன்று வரைக்கும் என்னோடு பயணித்து எனக்கு உதவி புரிந்தவர்கள் அனைவரும் எனது வாழ்வில் உண்மையிலேயே மறக்க முடியாதவர்கள்தான். அதற்கு முதற்கண் இறைவனையும் அதன் பிற்பாடு எனக்கு உபகாரம் புரிந்த அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

ஆமாம். ஒரு இலக்கியப் பெண் தனது படைப்புகளில் நிச்சயமாக பெண்களின் பிரச்சனைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசக்கூடியவளாகவே இருப்பாள். அவளது படைப்புகள் சமூகத்தை நோக்கி எழுப்பப்பட்ட ஒரு சுட்டு விரலாகவே காணப்படும். சமூகத்தைச் சாடி அவளுக்கு எதிரான பிரச்சினைகளைப் பேசக்கூடியனவாகவே அவளது ஆக்கங்கள், படைப்புகள் பரிணமிக்கின்றன. ஆம். அந்தச் சிங்கப் பெண்களின் கர்ஜனைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.


திருமணமான பெண்கள் எழுத்துத் துறையிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில், உங்களின் இலக்கியப் பயணத்திற்குப் பின்னணியானவர்களைக் கூற முடியுமா?

ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கை எனும் நாடகத்தில் நிறைய வேடங்கள் உண்டு. மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கல்வியிலே தேர்ந்து வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்வது அவளது முதல் வெற்றி என்று சொல்லலாம். திருமணம் என்ற ஒன்றில் அவள் காலடி எடுத்து வைக்கும் போது அவளின் பொறுப்புக்களும் சுமைகளும் இரண்டு மடங்காகிவிடுகின்றன என்பதே உண்மை. சிறந்த குடும்பத் தலைவி என்பவள் குடும்பத்தையும் வீட்டையும் மிகவும் சாமர்த்தியத்துடன் நிர்வகிப்பவளே. அவளது நிர்வாகம் ஒரே சீராகச் செல்ல வேண்டும். சூழ்நிலைக்கேற்ப வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒரே ஓட்டத்தில் செல்ல வேண்டும். 

வைத்தியத் தொழில் என்பது மிகவும் பொறுப்பு மிக்கதும் வேலைப் பளு மிக்கதுமான ஒரு தொழிலாகும். மிக அவதானத்துடனும் நோயாளர் நலனில் அக்கறை கொண்டும் செய்யக் கூடிய சமூக சேவையாக அது இருக்கிறது. ஒரு பெண் என்ற ரீதியில் வேலைக்குச் செல்லுதலும் குடும்பப் பொறுப்புகளும் இரட்டைச் சுமையாக அழுத்தினாலும் அதைத் திறம்படச் செய்வதில் நாள் மிகவும் கவனம் எடுக்கிறேன். 

இவ்விடத்தில் நேரமுகாமைத்துவம் என்பது மிக அத்தியாவசியமாகிறது. நேரத்தைச் சிக்கனப்படுத்திச் செலவழிப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது. அந்தவகையில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்துத் துறையில் செலவழிப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? தமிழ் என்பது எனக்கு ஒரு போதையாக இருக்கிறது. அதைத் தருவதிலும் சுகிப்பதிலும் ஆவலுடன் இருக்கிறேன். எனது எல்லா வகையான முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் எனது அன்புக் கணவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 

முற்கூட்டியே திட்டமிட்டு பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்யப் பழகிக் கொண்டேன். இவ்வாறான திட்டமிடலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் எனது தந்தையே. இவ்விடத்தில் இதைக் குறிப்பிடுவதில் பேரானந்தம் அடைகிறேன். நேர முகாமைத்துவமே எல்லா வகையான வெற்றிக்கும் அடிப்படையாக அமைவது என்பது அனைவரும் அறிந்த உண்மையாக இருக்கிறது. எனது இலக்கியப் பயணம் திருமணத்தின் பின்னரே ஆரம்பித்தது. அதற்குப் பின்னணியாக இருக்கின்ற அன்புக் கணவர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் கடந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுதான். உண்மையிலேயே எனக்கு அந்த வேளையில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த நிகழ்வு எனது வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக, மறக்க முடியாத ஒரு இன்ப அனுபவமாக இருக்கின்றது. அந்த மகிழ்ச்சியில் எனது மனம் இன்பச் சிறகுகளை கட்டிக்கொண்டு மேலெழுந்து பறந்ததென்றே சொல்லலாம். 

ஒரு படைப்பாளிக்கு சந்தோசம் என்பது என்ன? அவனுடைய ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவரும்போது அல்லது ஒரு நூலாக உயிர் பெறும்போது அவன் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லாது இருக்கிறது. அவன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இன்னும் இன்னும் நிறையக் கவிதைகளாய்ப் பூத்துக் கொண்டிருக்கிறான். படைப்புகளின் நந்தவனமாக மாறிக் கொண்டிருக்கிறான் என்பது நிதர்சனம்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது இரண்டாவது படைப்பான ஹைக்கூ கவிதை நூலென்று மிக விரைவில் வெளிவர இருக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் தன்முனைக் கவிதை நூல் ஒன்றை உருவாக்குவதற்கு எண்ணி உள்ளேன். மேலும் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவந்த ஊக்கப் பதிவுக் கட்டுரைகள் மற்றும் மருத்துவக் கட்டுரைகள் அனைத்தையும் தனித்தனியாக தொகுத்து இரு நூற்களாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் நிச்சயம் வெளியிட ஆசை. இன்ஷா அல்லாஹ் இறைவனின் அருளால் இவை அனைத்தும் ஈடேற வேண்டும் என்று அவனைப் பிரார்த்திக்கிறேன். அதற்குரிய எல்லா வகையான உதவிகளும்  கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1) 2021.03.26 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை) 

2) 2021.12.18 இலக்கியச் சேவைக்கான விருது - சிறீலங்கா பென் கிளப் - முதலாம் மாநாடு 

3) 2022.01.23 கவிச்சூரியன் விருது - தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் 

4) 2022.03.17 கவிச்சாரல் விருது - தமிழ்ச் சாரல் கலை இலக்கிய மன்றம் (இலங்கை) 

5) 2022.05.29 தமிழ் வேள் விருது - தமிழ்நாடு மதுரமொழிக் கவிச் சங்கம் 

6) 2022.07.15 செம்மொழிக் கவிமாமணி விருது - திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேஷன், குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி என்ட் பவுண்டேஷன்  

7) 2022.10.01 கவி முகில் விருது - தமிழ்ச் சாரல் கலை இலக்கிய மன்றம் (இலங்கை)  

8) 2022.11.29 கலைத்தாரகை விருது - ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதேசக் கலை இலக்கிய விழா 

9) 2022.12.24 அவிழ்தம் மருத்துவ சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருது மற்றும் இலக்கியச் சேவைக்கான விருது - சிறீலங்கா பென் கிளப் இரண்டாவது மாநாடு 

10) 2023.01.21 ழகரச் சிற்பி விருது - தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் 

இவைதவிர பல புத்தகப் பரிசுகள், பணப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் என்று இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காகக் கிடைத்துள்ளன என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.


புதிய படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன?

புதிய படைப்பாளிகளுக்கு நான் வழங்கும் ஆலோசனையானது நன்றாக வாசிப்பதுதான். உங்கள் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் போது உங்கள் மொழித் திறன் ஆளுமை அடைகிறது, வீரியமடைகிறது. ஆகவே நன்றாக வாசியுங்கள். கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்ற வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் எழுத்து இன்னும் வளம் பெறும். மனதில் தோன்றும் எண்ணக் கருக்களை அப்படியே எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். காலத்தின் போக்கினில் அதனை மெருகேற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்களும் நல்லதோர் படைப்பாளுமையாக மாறலாம்.

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் இறைவனின் திருப்பொருத்தத்திற்கு அமைவாக செய்யும்போது நிச்சயம் வெற்றி காணலாம். தொடர்முயற்சி ஒருபோதும் வீண் போவதில்லை. அது விஸ்வரூப வெற்றியை உங்கள் முன் கொண்டு வரும்.

"நான் இன்று எதையெல்லாம் என்னுடைய ஒரே இதயத்தால் சொல்கின்றேனோ அது நாளை ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தால் சொல்லப்படும்" என்ற கலில் ஜிப்ரானின் கூற்றை இங்கு கூற விளைகிறேன்.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

இந்த நேர்காணல் வாய்ப்பினை வழங்கிய தினகரன் செந்தூரம் இதழ் குழுவினருக்கும் என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் விசேட நன்றிகள் தெரிவித்தவளாக,


"தமிழ்

தமிழ் மொழியாய்

தமிழ்த் தாயாய் 

தமிழ் நாடாய்

நாட்டு மக்களாய்

மக்களின் வாழ்வாய்

வாழ்வின் மலர்ச்சியாய்


வழிந்து ஓட வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்" என்ற கா. அப்பாத்துரையின் தமிழ் வாழ்த்தோடு விடைபெறுகிறேன். மகிழ்வுடனான நன்றிகள். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, April 23, 2023

55. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுடனான நேர்காணல்

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

(ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர்)


தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும், பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா.


இலங்கையின் முன்னோடி பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தவறாது இடம்பிடித்த ஒரு பெயர் தான் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்ற பெயராகும். இவர் குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் தனது ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார். பாடசாலைக் காலம் தொட்டு இலக்கியத் துறையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், இதுவரை 11 நூல்களை வெளியிட்டு இலக்கியத்தின் பல துறைகளிலும் கால் பதித்துள்ளார். கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், மெல்லிசைப் பாடல், சிறுவர் இலக்கியம், நாவல் ஆகிய துறைகளில் தன் பங்களிப்பை நல்கியுள்ளார். இவருக்குள் காணப்படுகின்ற இலக்கிய ஆர்வத்தால் நூற்றுக் கணக்கான நூல்களை வாசித்து, அவற்றின் மூலம் தன்னை மென்மேலும் புடம் போட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பாடநெறியை சிறப்பாக நிறைவு செய்துள்ளதுடன், இலங்கைக் கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலும் பணியாற்றியுள்ளார். அத்தோடு காலாண்டு சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம் என்ற சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இவர் காணப்படுகிறார். தமிழ் நெஞ்சம் சஞ்சிகையின் ஊடாக அவரை நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.


தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


வாசிப்பு மீதான நாட்டம் உங்களுக்கு எந்த வயதில் ஏற்பட்டது?

எனது சிறுவயது பிராயத்திலேயே நான் வாசிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். தினமுரசு பத்திரிகையில் பாப்பா முரசு பகுதியைத் தரம் மூன்று கற்கும் காலம் தொடக்கம் சேகரித்து வைத்து, வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதுமட்டுமன்றி அந்தக் காலப் பகுதியில் வெளிவந்த பூங்கா, பிஞ்சு போன்ற சிறுவர் பத்திரிகைகளிலும் எனது ஆக்கங்கள் களம் கண்டுள்ளன.



இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பின்வரும் 11 நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். 

01. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை) 2012 - புரவலர் புத்தகப் பூங்கா

02. வைகறை (சிறுகதை) 2012 - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

03. காக்காக் குளிப்பு (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

04. வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

05. இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

06. மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) 2013 - ரூம் டு ரீட்

07. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (நூல் விமர்சனம்) 2013 - கொடகே பதிப்பகம்

08. நட்சத்திரம் (சிறுவர் பாடல்) 2014 - ஸ்பீட்மார்க் பதிப்பகம்

09. மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) 2015 - கொடகே பதிப்பகம்

10. மழையில் நனையும் மனசு (கவிதை) 2017 - பூங்காவனம் இலக்கிய வட்டம்

11. மான் குட்டி (சிறுவர் பாடல்) 2021 - பூங்காவனம் இலக்கிய வட்டம்





உங்களது இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூல் குறித்து விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

ஆரம்ப காலங்களில் நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்தே இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலை வெளியீடு செய்தேன். புரவலர் புத்தகப் பூங்கா மூலமாக வெளிவந்த இந்த நூலே இலக்கிய உலகில் என்னை எழுத்தாளராக முதன் முதலில் அடையாளப்படுத்தியது. அதுவரை காலமும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வந்த நான் ஒரு எழுத்தாளராக பரிணமித்த தருணம் இந்த நூல் வெளியீட்டின் மூலமே கிடைத்தது. இந்த நூலில் 56 கவிதைகள் காணப்படுகின்றன. காதலின் ஏக்கம், காதல் தந்த ஊக்கம் மற்றும் காதல் தோல்வி போன்ற இளம் பருவத்தினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை இந்தக் கவிதைத் தொகுதி அதிகமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவு சமூகக் கவிதைகளையும் இந்த நூலில் உள்ளடக்கியுள்ளேன். 2012 இல் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டை என்னால் மறக்கவே முடியாது. காரணம் எனது முதலாவது நூல் வெளியீட்டுக்கு ஊரிலிருந்து எனது பெற்றோர்களும் சகோதரர்களும் ஒரு சில உறவினர்களும் நண்பர்களும் கலந்து சிறப்பித்து, இந்த நிகழ்வின் மூலம் மறக்க முடியாத அலாதியான இன்பத்தைத் தந்தார்கள்.


மழையில் நனையும் மனசு என்ற உங்களது கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் குறித்தும், இந்தத் தலைப்பை நூலுக்குச் சூட்டியமைக்கான காரணி குறித்தும் கூறுங்கள்?

மழையில் நனையும் மனசு என்ற எனது கவிதை நூலில் 77 கவிதைகளுடன் ஒரு சில கவிதைத் துளிகளும் காணப்படுகின்றன. இதில் சமூக அக்கறை சார்ந்த கவிதைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு கவிதைத் தொகுதியைத் தொட்டுப் பிரித்து, அந்த நூல் வாசனையோடு கவிதைகளையும் வாசிக்கும் போது ஏற்படும் உணர்வு சொர்க்கமாகும். அது ஆன்மாவை ஈரமாக்கும். அந்த இன்பம் வாசித்து உணர்ந்தவர்களுக்கே புரியும். அத்தகைய ஒரு இன்பமான உணர்ச்சிக் கலவையை வார்த்தைகளில் வடிக்க முற்பட்டேன். அதனாலேயே என் கவிதைத் தொகுதிக்கு மழையில் நனையும் மனசு என்று பெயரிட்டேன். இத்தலைப்பு பெரும்பாலானவர்களைக் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் இருந்து விந்தை உலகம் (பக்கம் 23) என்ற கவிதையை வாசகர்களின் இரசனைக்காகத் தருகிறேன்.


விந்தை உலகம்


.....................

பசுக்களிடம் பால் கறந்து

பாலிலே நீர் கலந்து

வியாபாரம் செய்கின்ற

விந்தையான உலகமிது!


பாம்பிடம் நலம் கேட்டு

பன்றியிடம் கைகுலுக்கி

அப்பாவி முயல்களை

அறுக்கின்ற உலகமிது!


தீயவனின் தலை தடவி

குடிகாரனைக் கும்பிட்டு

ஏழைகளை மிதிக்கின்ற

ஏமாற்று உலகமிது!


காமுகனின் கால் பிடித்து


கயவனிடம் ஆசி பெற்று

கற்றவரை அவமதிக்கும்

கபடமான உலகமிது!


குயவனிடம் அரிசி கேட்டு

தச்சனிடம் பானை கேட்டு

விவசாயியை விலை பேசும்

விசித்திர உலகமிது!


அரசனிடம் அடிவாங்கி

அமைச்சரிடம் பல்லிளித்து

ஆங்கிலம் பேசித் திரியும்

அறிவற்ற உலகமிது!


மனைவியை விட்டு விட்டு

மதுவிடம் சரணடைந்து 

வேறு பெண்ணை தேடுகின்ற 

வேஷமான உலகமிது!


கற்பினை பறித்தெடுத்து

காதலியை சந்தேகித்து

புதுக் காதல் தேடுகின்ற

புனிதமற்ற உலகமிது!!!


இந்த நூலின் கவிதைத் தலைப்புகளையும் கவித்துவமாகவே கையாண்டு இருக்கிறேன். இந்த நூல் வெளியீட்டின் போது கவிஞர் தமிழ்த் தென்றல் அலி அக்பர் அவர்கள், உள்ளடக்கத்திலுள்ள கவிதைத் தலைப்புகள் அனைத்தையும் வாசித்துக் காட்டி, இந்தத் தலைப்புகளின் கோர்வையே ஒரு தனிக் கவிதையாக இருப்பதாக தனது உரையின் போது சிலாகித்துப் பேசினார்.


உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றன? உங்களது வைகறை என்ற சிறுகதை நூலின் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? 

அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழ்பவற்றைக் கூர்ந்து அவதானித்தாலே எமக்குத் தேவையான கதைக் கரு கிடைத்துவிடுகிறது. அல்லது சில பொழுதுகளில் நாம் செய்திகளின் ஊடாக கேட்கின்ற, வாசிக்கின்ற, நாம் அன்றாடம் கேள்விப்படுகின்ற விடயங்களில் கூட கதைக் கரு காணப்படலாம். அவற்றில் தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து அதை ஒரு சிறுகதையாக மாற்றுவதில் தான் எமது திறமை காணப்படுகிறது. எனது நூலில் காணப்படுகின்ற பல சிறுகதைகள் நான் கேள்வியுற்றவையும் வாசித்து அறிந்தவையும் பற்றியதான சம்பவங்களை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளன. ஓரிரு சிறுகதைகளில் மட்டுமே நேரில் கண்ட அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது வைகறை என்ற சிறுகதை நூலில் 21 சிறுகதைகள் காணப்படுகின்றன.

உதாரணமாக அழகன் என்ற சிறுகதையானது உண்மையில் மூன்று வயது நிரம்பிய ஒரு ஆண் குழந்தையைப் பற்றியதாகும். எனினும் நான் அதனை எனது நண்பர்களிடம் சொல்லும் போது ஒரு வாலிபனைப் போல சித்தரித்துச் சொன்னேன். இறுதியில்தான் அது ஒரு மூன்று வயதுக் குழந்தை என்று சொன்னபோது அவர்கள் செல்லமாகக் கோபித்து, என்னைக் கடிந்து கொண்டார்கள். அந்த அனுபவத்தையே எனது கதையில் பதிவு செய்துள்ளேன்.

மாற்றம் என்ற சிறுகதை ஒரு ஏழை மாணவன் பற்றியதாகும். தன் வகுப்பில் கற்ற ஏழைச் சிறுவனான முரளி என்ற மாணவனை சித்ரா டீச்சர் வார்த்தைகளால் துன்புறுத்துகிறார், அவமானப்படுத்துகிறார். நன்றாகக் கற்று பல்கலைக்கழகம் வரை சென்ற போதும் ஏழை என்ற காரணத்தால் முரளி ஏனைய மாணவர்களால் அங்கும் நிராகரிக்கப்படுகின்றான். அதையெல்லாம் தாண்டி அவன் நன்கு கற்று, சிறப்பாகச் சித்தியடைந்து, இறுதியில் ஒரு வைத்தியராக மிளிர்கின்றான். ஏழை முரளிதான் தற்போது வைத்தியர் முரளி என்று அறியாத சித்ரா டீச்சர் தன் மகளுக்கு முரளியை மணமகனாக்க எண்ணுகிறார். இறுதியல் என்ன நடந்தது என்பதே கதையின் சுவாரசியமான நகர்வாகும். 


உங்களுக்குப் பிடித்த சிறுகதையாசிரியர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் ஆகியோரின் படைப்புகள் குறித்து? 

சொல்ல வந்ததை பிசறின்றி சொல்லும் பாங்கும் பிரதேச வழக்கும் வட்டார மொழிகளும் சிறுகதையின் ஸ்தீரத் தன்மையைத் தீர்மானிக்கின்றன. திக்குவல்லை கமாலின் முட்டைக் கோப்பி, உ. நிசாரின் கால சர்ப்பம், பவானி சிவகுமாரனின் மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய், நிஜங்களின் தரிசனம், மரீனா இல்யாஸ் ஷாஃபியின் குமுறுகின்ற எரிமலைகள், நீர்வை பொன்னையனின் காலவெள்ளம், நிமிர்வு, நினைவுகள் அழிவதில்லை மற்றும் வந்தனா, திக்குவல்லை ஸப்வானின் உம்மாவுக்கு ஒரு சேலை, வாப்பாவுக்கு ஒரு சால்வை, சூசை எட்வேடின் இவன்தான் மனிதன் போன்ற சிறுகதை நூல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

அதேபோல நாவலைப் பற்றி சொல்வதானால் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உணர்வும் விறுவிறுப்பும் நாவலில் இருந்து மீள முடியாத தன்மையும் கொண்டனவாக அமைதல் வேண்டும். இந்தவகையில் நயீமா சித்தீக்கின் வாழ்க்கைப் பயணம், மல்லவப்பிட்டி சுமைரா அன்வரின் விடியலில் ஓர் அஸ்தமனம் மற்றும் வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும், ஸனீரா காலிதீனின் அலைகள் தேடும் கரை, இரா. சடகோபனின் கசந்த கோப்பி மற்றும் உழைப்பால் உயர்ந்தவர்கள், சுலைமா சமி இக்பாலின் ஊற்றை மறந்த நதிகள், மா.பா.சி. பாலசிங்கத்தின் தழும்பு (இரு குறுநாவல்கள்), திக்குவல்லை கமாலின் பாதை தெரியாத பயணம் மற்றும் வீடு, உ. நிசாரின் கோதுமைக்கனி, மைதிலி தயாபரனின் வாழும் காலம் யாவிலும் மற்றும் சொந்தங்களை வாழ்த்தி, ஆனந்தியின் இரு குறுநாவல்கள், கெக்கிறாவ ஸஹானாவின் ஒரு கூடும் இரு முட்டைகளும் ஆகிய நாவல்களை வாசித்த சுகானுபவம் இன்னும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.


ஒருவர் ஏன் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்?

வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதனூடாகத்தான் எமது சிந்தனைத் திறனை பரந்துபட்டதாக ஆக்கிக்கொள்ள முடியும். அன்றாட நிகழ்வுகள், உலகில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகள் அதேபோன்று மனித அவலங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். தற்போது பத்திரிகையை விடுத்து ஃபேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் தகவல்களை வாசித்து உடனுக்குடன் அறிந்துகொள்ளக் கூடிய வசதி காணப்படுகின்றது.


பாடல்களை எழுதும் போது பாடலாசிரியர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் என்ன?

பாடல்களை எழுதுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஓசை நயம், சந்தம், படிமம் ஆகியனவாகும். கற்பனைக் குதிரையில் அமர்ந்து பயணம் செய்கின்ற செயலை ஒத்ததே பாடல் எழுதும் கலையாகும். பாடல்களின் அருமையையும் பெருமையையும் அறிய வேண்டுமெனில் பழங்காலப் பாடல்களையும் தற்காலத்தின் ஒரு சில பாடல்களையும் உதாரணங்களாகக் கொள்ளலாம். பல பொழுதுகளில் பாடல் வரிகளைவிட இசை முதலிடம் பெறுவதால் பாடல் வெற்றி பெறும் சூழ்நிலையும் உருவாகின்றமை கண்கூடு.


உங்களது மெல்லிசைத் தூறல்கள் என்ற நூலில் உள்ள பாடல்கள் குறித்தும் கூறுங்கள்?

மெல்லிசைத் தூறல்கள் என்ற எனது நூலில் 36 பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருந்து இப்பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற எனது பாடல்; பிரபல இசை அமைப்பாளரும் பாடகருமான திரு. டோனி ஹஸன் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்டு ஒரு ஹஜ் பெருநாள் தினத்தில் நேத்ரா அலை வரிசையில் ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரபல பாடகர் கலைக்கமல் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்ட மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற எனது பாடல் மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற பெயரில் வெளிவந்த இறுவட்டிலும் சேர்கக்கப்பட்டுள்ளது. இந்த இறுவட்டு வெளியீட்டு நிகழ்வின் போது பாடகர் கலைக்கமல் அவர்கள் விருது வழங்கி என்னை கௌரவித்தார். மேலும் எனது நூல் வெளியீட்டின் போதும் இந்தப் பாடல் மேடையில் ஒலிபரப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


நீங்கள் சிறுவர் இலக்கியத் துறைக்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். அந்தவகையில் அண்மையில் வெளியிட்ட மான் குட்டி என்ற சிறுவர் பாடல் நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இந்நூல் தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் அனுசரணையில் வெளியிடப்பட்டது. இதில் 13 சிறுவர் பாடல்கள் காணப்படுகின்றன. பாலர் வகுப்பு மாணவர்களின் சிந்தனைக்கு விருந்தான பாடல்களும் கண்ணுக்கு விருந்தான சித்திரங்களும் இதில் உள்ளடக்கம் பெற்றுள்ளன. இந்நூலுக்கான அணிந்துரையை பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் வழங்கி இருக்கிறார். சிறுவர் இலக்கியப் படைப்பில் இது எனது ஆறாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த விரும்பும் பெற்றோர்கள் ஆரம்பத்தில் எவ்வாறான புத்தகங்களை தமது குழந்தைகளுக்கு தெரிவு செய்து கொடுக்க வேண்டும்?

தற்காலத்தில் சிறுவர் இலக்கிய நூல்கள் பல வெளிவந்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றது என்று தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் அனுமதிக்கப்பட்ட சிறுவர் நூல்கள் மற்றும் ஏனைய சிறுவர் நூல்களையும் பெற்றுக் கொடுப்பது மிகவும் சிறந்தது. பாடல்; பாணியிலான வாசிப்பை அல்லது சிறுகதைப் பாணியிலான வாசிப்பை விரும்பும் சிறுவர்களை இனங்கண்டு அவர்களது இரசனைக்கேற்ற நூல்களை அவர்களது பிறந்த நாள் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் பரிசாகக் கொடுக்கலாம். 


உங்கள் எழுத்துக்களில் எவ் ஆளுமையின் தாக்கம் காணப்படுகின்றது?

எனது படைப்புகளில் குறிப்பாக இன்னாரின் தாக்கம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. காரணம் நான் பல்வேறுபட்ட புத்தகங்களையும் வாசிப்பேன். இந்திய இலக்கியங்கள், இலங்கை இலக்கியங்கள், ஜனரஞ்சக படைப்புகள், கம்யூனிசம் சார்ந்த நூல்கள், இஸ்லாமிய வரலாற்று நூல்கள், சங்க கால செய்யுள்கள் போன்ற அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே எனது படைப்புகளில் இவற்றின் சாயல் எனக்குத் தெரியாமலேயே வந்துவிடக் கூடும். எனினும் நான் எனது பாணியில் தனித்துவமாக எழுதுவதிலேயே பேரவா கொண்டுள்ளேன்.


இலக்கியப் பணி சார்ந்த உங்கள் கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

இலக்கியப் பணி என்பது சமூகப் பணியாகும். படைப்புகளின் மூலம் வாசகர்கள் கொஞ்ச நேரமாவது திருப்தியாகவும் ஆசுவாசமாகவும் மனக் கவலைகளுக்கு ஒரு மருத்துவமாகவும் எமது எழுத்துகளைக் கொண்டால் அதனைவிட வேறு சிறப்பு கிடையாது. எழுத்து வாண்மையால் சரித்திரங்களை உருவாக்க முடியும். கல்வெட்டுகளைப் பதித்திட முடியும். பிளவுபட்ட குடும்பங்களை ஒன்று சேர்க்க முடியும். உறவுகளைப் பலப்படுத்த முடியும். ஊர் நிர்வாகத்தை திறம்பட உதவி செய்ய முடியும். பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவிட வழி செய்ய முடியும். இவ்வாறான பல விடயங்களை எழுத்துக்கள் மூலம் நடாத்த முடியும். எனவே எழுத்தாளர்கள் எல்லோரையும்; என் மரியாதைக்கும் கௌரவத்துக்கும் நேசத்திற்கும் உரியவர்களாகவே நான் பார்க்கிறேன்.


வாசிப்புக்கு உகந்த நேரம் எது? அதை எவ்வாறு திட்டமிட்டு வினைத்திறனான முறையில் பயன்படுத்திக் கொள்வது?

என்னைப் பொருத்தவரை வாசிப்பதற்கு உகந்த நேரம் இதுதான் என்று வரையறை செய்ய முடியாது. நம்மை நாம் சுதந்திரமாக உணர்ந்து கொள்ளக்கூடிய ஏதுவான தனிமையான சந்தர்ப்பங்களையெல்லாம் வாசிப்பதற்கு சிறந்த நேரங்களாகக் கொள்ளலாம். பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளைக் குறித்த நேரத்துக்குள் செய்வது போன்று இலக்கியம் படைக்க முடியாது. எப்போது தோன்றுகிறதோ அப்போது  வாசித்துவிட வேண்டும். எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதிவிட வேண்டும். ஜனரஞ்சக நூல்கள், செறிவான இலக்கிய நூல்கள் என்று எல்லா நூல்களையும் வாசித்து அறிந்தால் சிறந்த இலக்கிய நூல்களைப் படைக்க முடியும்.


மலையக முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி விசேடமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

மலையக முஸ்லிம்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களின் இலக்கிய பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் அமைந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதற்காக மலையக எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான முஸ்லிம் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் உருவாகி தொடராக இயங்க வேண்டும். முஸ்லிம் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவ் அமைப்பானது ஒன்றிணைத்து செயற்பட வேண்டும். குழு விவாதங்களை, இலக்கியக் கூட்டங்களை மலையகத்தில் தொடர்ந்து இடம்பெறச் செய்தால் எழுத்தாளர்களின் பங்களிப்பானது தொடரக் கூடிய நிலை ஏற்படும். 

கிழக்கு மாகாணத்தில் இலக்கிய அமைப்புகள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன. அவை எழுத்தாளர்களின் நூல்களைக் கொள்வனவு செய்கின்றன. எழுத்தாளர்களை அங்கீகரிக்கின்றன. நூல் வெளியீடுகளை செய்து கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துகின்றன. ஆளுமையான  பல எழுத்தாளர்களையும் கௌரவிக்கின்றன.

இதுபோன்று மலையகப் பிரதேசங்களிலும் அமைப்புகள் உருவாகி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆக்கபூர்வமான நிகழ்வுகள் இடம்பெறுமாயின் எழுத்தாளர்களின் பங்களிப்பும் அதிகமாகக் காணப்படும். 


இலக்கிய உலகில் கற்றுக்கொண்டவற்றில் நீங்கள் வாசகர்களுக்குக் கூற விரும்புவது என்ன?

இலக்கிய உலகம் என்பது நீச்சல் தடாகம் போன்றது. நீச்சல் தெரிந்தவர்கள் அழகாக நீந்தி கரையேற முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் எங்களை நாங்களே செதுக்கிக் கொள்ள வேண்டும். எங்களை நாங்களே பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் பெயர்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். கொஞ்ச நாட்கள் இயங்காவிட்டால் இலக்கிய உலகத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விடுவோம். எனவே எங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் செயற்பாடுகளை நாங்களே செய்து கொள்ள வேண்டும்.


பூங்காவனம் சஞ்சிகையின் துணையாசிரியராக என்ன சொல்வீர்கள்?

இதுவரை பூங்காவனம் சஞ்சிகையின் 38 இதழ்கள் வெளிவந்துள்ளன. இளையோரின் இலக்கியத் தாகத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கும் இந்தச் சஞ்சிகையின் முதலாவது இதழ் 2010 ஆம் ஆண்டு மே மாதம் வெளியீடு செய்யப்பட்டது. இந்தச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழிலும் பெண் ஆளுமைகள் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், மூத்த இலக்கியவாதிகள் என்ற பேதம் இன்றி அனைவரது ஆக்கங்களும் சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளiமை இதன் சிறப்பு எனலாம். ஆக்கங்களைத் திரட்டுதல், அதனை தரம் பிரித்தல், தட்டச்சு, அட்டை வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு போன்ற ஒவ்வொரு விடயத்தையும் துணை ஆசிரியர் என்ற வகையில் நானும் பிரதம ஆசிரியர் என்ற வகையில் எழுத்தாளர் ரிம்ஸா முஹம்மத் அவர்களும் செய்து வருகின்றோம். கொரோனாத் தொற்றின் போது ஏற்பட்ட நிதி முடக்கத்தால் சற்று தடுமாறினாலும் தொடர்ந்து சிறப்பாக வெளியிட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு ஆகும்.


இந்த தலைமுறையினர் வாசிகசாலைகளை சரியாகப் பயன்படுத்துகின்றனரா? வாசிப்புப் பழக்கமானது ஒர் எழுத்தாளர் என்ற வகையில் உங்களுக்கு எந்தளவு கை கொடுத்துள்ளது?

இன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் பெற்றோர்கள் வாசிகசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்து வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களும் வாசிகசாலையைப் பயன்படுத்துகிறார்கள். எனினும்  பொதுவாக நோக்கினால் ஸ்மார்ட் தொலைபேசிகள் இன்று பல இளந்தலைமுறையினரின் வாசிப்பு, வாசிகசாலை என்ற தேவையைப் பூர்த்தி செய்வதாகக் கருதப்படுகிறது. அதாவது வாசிகசாலைக்கு ஏன் நேரம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே வாசிகசாலைகள் இன்று வெறும் சாலைகளாக மாறி வருகின்ற ஒரு சோகம் நிலவுகின்றது. 

எனது எழுத்துத் துறைக்கான ஆரம்பமே வாசிப்பு மீது நான் கொண்ட ஆர்வம் எனலாம். புதிய சொல்லாடல்களை அறிந்துகொண்டது, மொழி வளத்தைப் பெற்றுக்கொண்டது, எதுகை மோனைகளை அறிந்து அதற்கேற்றாற் போல சந்தக் கவிகளை உருவாக்க முடிந்தது போன்ற அனைத்தையும் வாசிப்பின் மூலமாகவே சிறப்பாக நிறைவேற்றிக்கொள்ள முடியுமாக இருந்தது. வாசிப்பின் மீது கொண்ட காதல்தான் எனக்கு எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அடிக்கடி தோற்றுவித்தது. இன்றளவிலும் எனது எழுத்துத்துறை வற்றிப் போய்விடாமல் நீரூற்றிக்கொண்டிருப்பது வாசிப்புத்தான் என்பதே நிதர்சனமாகும்.


எதிர்கால இலக்கிய முயற்சிகள் குறித்து?

தட்டச்சு செய்த நிலையில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய 03 தொகுதிகள் என் கைவசம் இருக்கின்றன. அதனை அச்சிட்டு வெளியிடுவதற்கான சூழ்நிலை தற்போது கைகூடவில்லை. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட  விலைவாசியின் உச்சம், எல்லாத் துறைகளிலும் மந்தகதியை ஏற்படுத்தியிருக்கிறது. அச்சகச் செலவுகள், தபால் செலவுகள், மண்டபச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் என்று எல்லாமே வான் எட்டும் தூரத்தில் காணப்படுகின்றன. இப்படியான இப்போதைய சூழ்நிலையில் ஒரு புத்தகத்தை வெளியீடு செய்வது என்பது பகல் கனவாகவே இருக்கிறது. காலம் கனியட்டும், காத்திருக்கிறேன்.


இதுவரை உங்களுக்கு அல்லது உங்கள் இலக்கியப் பணிகளுக்குக் கிடைத்த விருதுகள் பற்றிக் கூறுங்கள்? 

எனது படைப்புகளுக்கு பல பரிசுகள், பாராட்டுப் பத்திரங்கள், விருதுகள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் எனக்குக் கிடைத்த பல விருதுகளில் பின்வரும் சில விருதுகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவையாகும்.


2013 இல் அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் - காவிய பிரதீப விருது (கவிச்சுடர் விருது) 

2015 இல் ஊவா மாகாண சாகித்திய விழா - ஆக்க இலக்கியவாதிக்கான எழுசுடர் விருது

2016 இல் இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய ஆய்வகம் - எழுத்தாளருக்கான கௌரவ விருது

2018 இல் பாணந்துறை இஸ்லாமியப் பேரவை மற்றும் இலக்கிய வட்டம் - கலையொளி விருது

2021 இல் புதிய அலை கலை வட்டம் - வெற்றியாளர் விருது


என் இலக்கியப் பணிகளுக்கான அங்கீகாரமாக இவ்வாறான விருதுகளைப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன்.

 தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகின்ற விருதுகளானது அவரவரது திறமைகளை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் உந்து சக்தியாகவும் அமைகின்றது. சர்ச்சையாக இருக்கக்கூடிய 'காசுக்கு விருது கொடுத்தல்|| என்ற விடயம், தகுதி இல்லாதவர்களின் தலைக்கனத்தை மென்மேலும் அதிகரிப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகின்றமை கோடிட்டுக் காட்டக்கூடியதாகும்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இலக்கியத்தின் மூலம் தன் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கும் என் சக நண்பர்களை எண்ணி பூரிப்படைகிறேன். ஏனெனில் உடலுக்கு நாம் கொடுக்கும் ஓய்வு போலத்தான் உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். மன நிம்மதிக்கான உற்று என்பது இலக்கியத்தின் மூலம் கிடைத்துவிடுகிறது. துக்கம் யாவும் தொலைந்து போவதற்கு இயற்கையின் அழகைப் பற்றிய ஒரு சிறு கவிதை போதுமாக இருக்கிறது. 

இறுதியாக தமிழ் நெஞ்சம் சஞ்சிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் குழுவினருக்கும் என்னை நேர்காணல் செய்த படைப்பாளி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்