இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.07.20
கெக்கிறாவ சுலைஹா அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
பிறந்த இடம் கெகிறாவ பிரதேசம்தான். வடமத்திய மாகாணத்தில், அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ளது நம்மூர். தமிழ் மணக்க மணக்க செழித்த ஊர் ஒரு காலத்தில். நிறைய தமிழர்கள் வாழ்ந்தார்கள். இனக் கலவரங்களில் அவர்கள் இடம்பெயர்ந்து விட்டதில் பாரிய வெறுமை ஏற்பட்டுப் போயிற்று. தமிழ் ஆசான்களை நிறைய சந்தித்திருக்கிறோம். கெகிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற பின்னர் உயர்தர விஞ்ஞான நெறிக் கற்கைக்காக கண்டி பெண்கள் உயர் கல்லூரியில் சேர்ந்தேன்.
02. பாடசாலைக் காலம் முடிவுற்று நீங்கள் கால் பதித்த தொழிற் துறை பற்றிக் குறிப்பிடுவீர்களா?
ஊர் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியையாக 1992 இல் நியமனம் பெற்றேன். கூடவே, உயர்தரக் கலைப்பிரிவு பாடங்களையும் ஓய்வு கிடைக்கிற போதெல்லாம் கற்று பேராதனைப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவானேன். ஆங்கில முன்பயிற்சியில் (GELT) எனக்கு வாய்த்த திரு. எஸ். சோமபால இலங்கசிங்ஹ அவர்கள் என் ஆங்கில இலக்கண, இலக்கிய அறிவுக்கு அழகிய அடித்தளமிட்டார். துரதிர்ஷ்டவசமாக, பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர முடியாது போயிற்று. ஆங்கில ஆசிரியப் பயிற்சிக்காக பேராதனை விஷேட ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்தேன். தீராத என் வாசிப்புத் தேடலுக்கு அங்கிருந்த விசாலமான வாசிகசாலை நிறைய உதவிற்று. Anees Jung எழுதிய Unveiling India’> ‘Night of The New Moon மற்றும் கலீல் ஜிப்ரானின் Broken Wings, The Prophet உட்பட அவரது பெரும்பாலான நூல்களையும், இளவரசி டயானா பற்றி Andrew Hutson எழுதிய 'Diana - Her True Story' முதலிய நூல்களையும் அந்த வாசிகசாலையே எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.
03. உங்கள் இலக்கியத் துறைப் பிரவேசம் எப்போது நிகழ்ந்தது? எழுத்துத் துறையில் உங்களை ஊக்குவித்தவர்கள் பற்றிச் சொல்லுங்களேன்?
சகோதரி ஸஹானா சிறு வயதிலிருந்தே எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டி வந்தாள். மிகுந்த தயக்கங்களுடன் கூடியதே எனதான எழுத்துலகப் பிரவேசம். இந்தத் துறைக்குள் என்னை இழுத்தவர்களில் சகோதரி ஸஹானா, திரு. மேமன்கவி ஆகியோர் மிக முக்கியமானவர்கள். 1988, 1989 களில் என எண்ணுகிறேன். அவ்வப்போது எதை எதையோ எழுதி சகோதரி ஸஹானாவின் பார்வைக்குக் கொடுப்பேன். அவளே அதன் தகுதி கண்டு பிரசுரத்துக்கான வழிவகைகளைச் செய்வாள். அதிகபட்ச எனது நேரங்கள் ஒரு வாசகியாய் கழிந்தன. தேடித்தேடி வாசிக்கும் வாஞ்சை எப்போதும் இருந்தே வந்தது. வாசித்தவற்றில் மனசுள் நின்றவைகளை பதித்து வைத்துக்கொள்ளும் பழக்கமும் இருந்தது. மேமன்கவி அவர்கள் எனது தேர்ந்த வாசிப்புக்கு நிறைய தீனி போட்டார். படித்த குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற நாவல்கள், கவியரசர் பாடல்கள், இலங்கை வானொலி, பள்ளிக்கூடத்தே கிடைத்த உந்துதல்கள் எல்லாமும் எதையாவது எழுதலாம் என்ற நம்பிக்கையை ஊட்டின. ஷமல்லிகை| எனது முதல் மொழிபெயர்ப்புக் கவிதையான ஷஓ! ஆபிரிக்கா| வை 1989 இல் பிரசுரித்தது.
04. நூலுருப்பெற்ற உங்களது படைப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?
2009 இல் பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்| முதல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி பண்ணாமத்துக் கவிராயர் அவர்களின் அணிந்துரையுடன் வெளியானது. சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது என்பவற்றைப் பெற்றது.
2010 இல் அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு| முதல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுதி அன்பு ஜவஹர்ஷா அவர்களின் அணிந்துரையுடன் வெளியானது. இலங்கை கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றது.
2011இல் இந்த நிலம் எனது| மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி வெளியானது. அதுவும் இலங்கை கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றது. நூலக அனுசரணைக்கான போட்டிக்காக முன்வைக்கப்பட்டு முடிவை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது, மன்சூர் ஏ காதிர் அவர்களின் அணிந்துரை பெற்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி வானம்பாடியும் ரோஜாவும். பேராசிரியர் நுஹ்மான் அவர்களது அணிந்துரையோடு எனது மூன்றாவது மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி பூக்களின் கனவுகள்| விரைவில் அச்சுக்கு செல்லவுள்ளது.

மல்லிகையில் இதுவரை காலமும் என் ஆக்கங்கள் வந்தபடிதான் இருந்தன. ஜீவநதி, ஞானம், விடிவெள்ளி அலைகள் போன்ற சஞ்சிகைகளில் எழுதி வருகிறேன்.
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற எல்லா வகைகளும் என் ஆர்வத்துக்குரியன. குறிப்பாக, மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட அம்சங்கள், போர்ச் சூழலில் வதையுறும் ஆன்மாக்களின் துயரங்கள், பெண்களின் கண்ணீர் போன்ற கருக்களை சுமந்த எந்த படைப்பாயினும் அவை என் கவனத்தை வெகுவாக ஈர்ப்பன. மட்டுமன்றி, ஏழையின் அவல வாழ்வு, இயற்கை மீதில் மனிதனின் கோரத் தலையீடு, பள்ளிக்கூட அனுபவங்கள் இன்னபிறவும் என்னை அக்கறை கொள்ள வைப்பன.
06. மொழிபெயர்ப்புப் படைப்புகளை இலக்கிய உலகத்துக்கு அதிகம் வழங்கும் நீங்கள் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் நுட்பங்கள் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?
மனித சமூகத்தைவிட்டு நீங்கியிருந்து, அல்லது தொலைவுபட்டிருந்து கவி புனைபவன் கவிஞனேயல்லன் என்பார் வில்லியம் வேட்ஸ்வேர்த்;;. கவிஞன் என்பான் மனிதர்களோடு பேசும் சக மனிதனே என்பார் அவர். கவிதையென்பது மனுஷனை சக மனுஷனோடு இணைக்குமோர் தெய்வீகக் கலை என்றாகிறது. சக்திமிக்க உணர்ச்சிகளின் தன்னிச்சையான வழிந்தோடுகையே கவிதை எனவும், அதன் மொழி சாதாரண மனிதனின் மொழியே|| எனவும் அவர் சொல்வதற்கொப்ப, இலகு மொழிநடையில் பொருள் சிதையாது ஆங்கிலத்தில் அவர்கள் தந்ததை நாம் கொடுத்துவிட்டாலே போதும், நாம் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள்தாம். அவர்களது பண்பாட்டு கலாசார வேறுபாடுகள், அந்தப் பின்னணியில் அவர்களது உணர்வுக் கோலங்கள் போன்றவற்றை அதி தீவிரமான சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தித் தீண்டாமல் வைத்திருப்பதைவிட, அவற்றை நமக்குப் புரிந்த வண்ணம் மற்றவர்க்கும் புரிய வைக்கிற மாதிரி மொழிமாற்றினால், அந்தப் புதுச்சிந்தனைகளுக்கு கௌரவம் கொடுத்ததாக ஆகும். இலக்கணச் சுத்தத்தோடு எழுதும் பண்டிதர்கள் தேவையில்லை நமக்கு. அந்தப் புதுச் சிந்தனையின் வரவு அதையும்விட முக்கியமானது.
07. மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட விரும்பும் புது எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
புதிய விடயங்களை தேடிக் கற்றுத் தமிழுக்குத் தர முயலலாம். எழுதுவதற்கும் முன்னால் நிறைய வாசிக்க வேண்டும். தொழில்நுட்பச் சாதனங்களை மட்டுமே அதிகம் நம்பியிருக்க முடியாது. தேடல்கள், பரந்துபட்ட வாசிப்பு அத்தியாவசியமானவை.
08. இன்று மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டு வரும் ஏனைய படைப்பாளிகள் பற்றி யாது கூறுவீர்கள்?
அது பற்றிப் பேசுகிற அளவுக்கெல்லாம் நான் வளர்ந்துவிட்டதாகக் கருதவில்லை.
09. தரமான தமிழ்க் கவிதைகளை ஈழத்து இலக்கியத்திற்கு தந்தவர்கள் என யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?
தரமான கவிதைகளைத் தந்தவர்கள் என்று தரம் பிரித்துச் சொல்லுமளவுக்கெல்லாம் தகுதி பெற்றவளாக நான் என்னை இன்னும் காணவில்லை. எனக்குப் பிடித்த கவிஞர்;கள் என்று கேட்டால்; மஹா கவியையும், நீலாவணனையும் சொல்வேன்.
10. மொழிபெயர்ப்பு அன்றி உங்கள் சுய படைப்புகளை எழுதி வெளியீடு செய்யும் எண்ணம் உண்டா? அவ்வகையான படைப்புகளை வெளிக்கொணர தாங்கள் காட்டும் தாமதத்துக்கு ஏதும் விஷேட காரணங்கள் உள்ளதா?
சுயமான கவிதைகள், மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் இலக்கியத்தின் மீதில் அக்கறை கொண்ட பலர், என் சுயபடைப்பு ஒன்றின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. என் கவிதைத் தொகுதியொன்று பற்றிச் சிந்தித்து வருகிறேன்.
கவிதை ஒரு மேலான மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கு என்பார் ஆங்கிலக் கவி டி.எஸ். எலியட். தமிழிலே நாம் கண்டு கொள்ளாத பக்கங்களை அதிகம் தொட்ட பிறமொழிக் கவிதைகளை நிறைய தரிசித்தேன். நீண்டகால மரபு கொண்ட தமிழ்க் கவிப் பூந்தோப்பு விதவிமான மலர்களால் நிரம்பி அழகு காட்டி நின்றது. எனினும், ஆங்கிலத்தில் வித்தியாசமான கருக்கள் கூடி வந்தமை பெருந்திகைப்பை ஏற்படுத்திற்று. எனவே அவற்றை நான் புரிந்து கொண்ட விதமாய் மொழிமாற்றி தமிழ்க் கவிதைகளில் கலந்துவிடச் செய்வதென்பது முதன்மை நிலை நிற்பதெனக் கண்டு கொண்டேன். மேலும், பாடசாலைகளில் இரசனை இல்லாத வெற்று ஆங்கில ஆசிரியர்களால் கவிதைகள் தொடர்ச்சியாக கைவிடப்பட்டு வந்த நிலையும் இருந்து வந்தது. அவர்கள் கற்பிக்காது கைவிட்டுப்போகும் அத்தகு கவிதைகளை இந்தச் சிறார்கள் அறிய வழி ஏது என யோசித்தும் மொழிபெயர்ப்பை என் ஊடகமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன். இவையே எனது சுயபடைப்பு தாமதத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.

11. இலக்கிய மன்றங்கள் எதிலேனும் அங்கம் வகிக்கிறீர்களா? தற்கால இலக்கிய அமைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதிலும் அங்கம் வகிக்கவில்;லை. நமது பிரதேச இலக்கியச்சூழல் என்றால் வரட்சிதான் நிலவுகிறது. இலக்கிய அமைப்புகள் நிஜமாகவே இந்நிலையை மாற்ற தமது நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவிட்டு பெரும் எத்தனிப்பும் செய்து வருகின்றன. சகோதர இனத்தவர்கள் நாட்டியம், நாடகம், இசை என்றெல்லாம் கலையினது அடிவேர் வரைத் தொட்டுத் துழாவிக் கொண்டிருக்க, நாமோ இப்போதுதான் கண்விழித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்.
12. பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் நீங்கள் மாணவர்களின் இலக்கிய முயற்சி, வாசிப்பு ஆர்வம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
இன்றைய கல்வி நிறுவனங்கள் சமூக ஜீவிகளை அதிகபட்சம் உருவாக்குவதில் தோற்றுப்போய் இருக்கும் நிலையைக் காண்கிறோம். தன்னைச் சுற்றித் தீங்கே நடந்தாலும், குருட்டுக் கண்களுடன் அதைக் கடந்து போய் விடுகின்ற மாணவர் பரம்பரையை இன்றைய கல்விப் புலங்கள் காட்டித் தந்துள்ளன என உணர்கிறேன். மக்கள்பால் நிற்கின்ற, அவர்தம் துயரங்களை தம் துயரமாய் உணர்கின்ற, அன்பு வயப்படுகின்ற மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்கும் கனவு நெஞ்சு நிறைய உள்ளது. வெளியிலிருந்து வருகின்ற கெடுபிடிகள், அரசியல் தலையீடுகள் சங்கடத்துக்கு உள்ளாக்கி நிலைதடுமாறவும் செய்வதுண்டுதான். வாசிப்பு மூலமே மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதால் புத்தகங்களை வாங்கியும், நன்கொடையாகப் பெற்றும் மாணவர்களுக்கு விளக்கங்கள் வழங்கி வாசிக்கக் கொடுத்து வருகிறேன். கணிசமான மாணவர்கள் வாசிப்பில் மிக ஆர்வம் காட்டுகிறார்கள். மாலை நேரத்தில் வாசிப்புக்கு வசதிகள் செய்து கொடுக்கிறேன்.
கலை சிந்திக்கவும், சீர்திருத்தவும் உதவுகிற ஒரு வியத்தகு கருவி. பொழுதுபோக்குக்காக கண்டதை தேர்ந்தெடுக்கவிடாமல் மொழியாற்றலை உயர் மட்டத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய கலை நிகழ்ச்சிகளை, போட்டிகளை மாதந்தோறும் பாடசாலை மட்டத்தில் நடத்தலாம். நம் வாசிகசாலைகளை உயிர்ப்பூட்டலாம். அறியாமையின் பாதையில் வெகு வேகமாக நம் மாணாக்கரை இட்டுச் செல்கிற தொழில்நுட்பச் சாதனங்களின் மத்தியிலே இது ஒரு பகீரதப் பிரயத்தனம்தான்.
13. உங்கள் இலக்கிய முன்னோடி என்று யாரைச் சொல்வீர்கள்?
இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பண்ணாமத்துக் கவிராயர் எங்களின் ஆங்கில ஆசானாக வாய்க்கப் பெற்றமை எம் வாழ்க்கையில் அழகிய தாக்கத்தை விளைவித்துள்ளது என்று கருதுகிறேன்.
1979, 1980 களில் தரம் 06, 07 களில் நான் கற்றுக் கொண்டிருந்தபோது, கெகிறாவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்துக்கு வந்திருந்த ஆங்கில ஆசான் திரு. எஸ்.எம். பாரூக் அவர்களே பண்ணாமத்துக் கவிராயர் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. எமது வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த அவரது இல்லத்துக்கு மாலை நேரங்களில் டியூசன் வகுப்புக்கு அனுப்பப்பட்டாள் அக்கா. அக்காவோடு சில நேரங்களில் நானும் போனேன். அவரது வீட்டில் அவர் வாசிக்கின்ற புத்தகங்கள் இறாக்கைகளில் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நம் ஆங்கிலப் பாடநூல்களில் இருந்த கெகில்லே அரசனின் தீர்ப்பு, அக்பரின் அரசவையிலே பாடங்களையெல்லாம் அவர் சுவைபடக் கற்றுத் தந்த விதம் இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது.
சின்னச் சின்ன ஆங்கிலப் பாட்டுக்கள், கவிதைகள் போன்றவற்றையும் நமக்குக் கற்றுத் தந்தார். வேட்ஸ்வேர்த்| கவிதைகள் கூட அதிலடங்கும். நாம் சின்னப் பிள்ளைகளாக இருந்தபோதிலும் நம்மோடு ஷசங்கராபரணம்| போன்ற படங்கள் பற்றியெல்லாம் அவர் பேசினார். அவரை நெருங்கப் பயமிருந்தது. தொலைவில் இருந்தபடியே அவரது இலக்கிய கம்பீரத்தை நான் உறிஞ்சிக் கொண்டேனா? ஆமாம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். அவர் கொப்பிகளில் சரி|அடையாளமிடும் பாங்குகூட வித்தியாசமானது. கொஞ்ச காலத்தில் மாற்றலாகிச் சென்றுவிட்டாலும் மனசில் நிறைந்து நின்றார். அவரது கவிதைகளை பத்திரிகைகளில் கண்டால் தேடித்தேடி அவற்றைப் பெற்று டயறிகளில் ஒட்டிக் கொள்வேன். அவரிடம் தம்பட்டம் அடிக்கிற குணம் இல்லை. ஒரு நாளேனும் மேதாவித்தனம் பேசியதுமில்லை அவர். ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்த பேராசான் அவர். வாழ்வின் ஓட்டத்தே எத்தனையோ திருப்பங்கள். அவர் மீதான பிடிப்பு அவர் ஈர்க்கப்பட்ட துறையின்பால் என்னையும் ஈர்த்தது. அவரது ஷகாற்றின் மௌனம்| நூல் வெளியீட்டு விழாவுக்கு மாத்தளைக்குச் சென்று வந்தோம். தொலைவிலிருந்தே என் ஏகலைவக் கனாக்களை வழிநடத்திய துரோணாச்சாரியார் அவர்.

14. நினைவில் நீங்காத சம்பவம் ஏதும் இருக்கிறதா? இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?
2009 இல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய மண்டலப் பரிசினை எனது ஷபட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்| என்னும் முதல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு பெற்றுக் கொண்டமைபற்றி இங்கே பேசப் பிரியப்படுகிறேன் நான்.
மொழிமாற்றம் செய்த சுமார் எழுபது கவிதைகள் என் கைவசமிருக்க புத்தகமாய் அதைப் போட்டுவிட வேண்டுமென்ற ஆவல் ஆட்டிப்படைத்தது என்னை. 2003 களில் நூலக சபை மூலமாக அது வெளிவரட்டும் என்று மேமன்கவியவர்கள் அபிப்பிராயப்பட, அதை தட்டச்சிற் பதித்து, இரண்டு பிரதிகள் செய்து பண்ணாமத்துக் கவிராயரின் அணிந்துரையையும் எடுத்து 2004 இல் விண்ணப்பித்தேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அது அங்கு கிடப்பிற் கிடந்தது. பொறுமையிழந்து நான் நச்சரிக்கத் தொடங்க, தகுதியற்றது எனக் காரணம் சொல்லி அதைத் திருப்பி அனுப்பியிருந்தது நூலக சபை. பிரதிகள் இங்கும் அங்குமாக அலைந்ததில் பண்ணாமத்துக் கவியின் அணிந்துரையும் தொலைந்து போய்விட்டது. புகைப்படப் பிரதி எதுவும் எடுத்து வைத்திருக்கவும் இல்லை.
என் மதிப்பிற்குரிய ஆசிரியத் தந்தை அன்பு ஜவஹர்ஷா இக்கவிதைத் தொகுப்பு கட்டாயம் அச்சில் வரவேண்டும் மகள்|| என்று அடிக்கடி சொல்லி வந்தார். புத்தகங்களை அச்சிட்டு எழுத்தாளர்களுக்கு உதவுகின்ற பல ஆர்வலர்களிடமும் உதவுமாறு கேட்டுப் பார்த்தேன். பதிலில்லை. இறுதியாக நானே மறுபடியும் அதை ஒவ்வொன்றாய்க் கோர்த்தேன். மறுபடியும் அணிந்துரைக்காக பண்ணாமத்துக் கவியவர்களிடம் போய் நின்றேன். எவரும் செய்யாத உதவி. மறுபடி ஒரு புதிய அணிந்துரை தந்தார். 2009 இல் என் ஷபட்டுப்பூச்சியின் பின்னுகைபோலும்| முதற் குழந்தை முகம் பார்த்துச் சிரித்தாள். சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய மண்டலப் பரிசினை நான் 2010 செப்டம்பர் 30 அன்று அலரி மாளிகையில் பெற்ற கணத்தே என் கண்முன்னே முதற் தோற்றம் காட்டி நின்றார்கள் பண்ணாமத்துக் கவியவர்களும், அன்பு ஜவஹர்ஷா அவர்களும். அதே கவிதை நூலுக்கு அதே ஆண்டின் தமிழியல் விருதும் கிடைக்கப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியானது.
15. இறுதியாகச் சொல்ல விரும்பும் சேதி.....?
மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது ஒரு பெருந்தவம். மொழியின் விசாலித்த அறிவை அது வேண்டி நிற்கிறது. நிறைய வாசிக்கவும், வளப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. கூடவே தாய்மொழியில் நன்கு வளரவும் வேண்டும். ஒரு மொழியில் தேர்ந்த அறிவு இன்றி இன்னொரு மொழியின் சாகரத்துள் நினைத்தவாறு உள்நுழைய முடியாது. எனவே நிறைய தேடல் வேண்டும் என்பதே எனதான சேதியாகிறது!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment