பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Monday, September 12, 2016

25. மைதிலி தயாபரன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2016.08.07

மைதிலி தயாபரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் வவுனியா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது அன்னை பாடசாலையின் அதிபராக இருந்தார். தந்தை மலேரியாத் தடை இயக்கத்தில் வெளிக்கரும உதவியாளராக இருந்தார். இருவரும் வெகு காலத்திற்கு முன்னால் அமரத்துவம் அடைந்துவிட்டனர். அண்ணா, தங்கை, தம்பி என சகோதரர்கள் மூவர்.

எனது கணவர் ஒரு சட்டத்தரணியாக வவுனியாவில் பணிபுரிகின்றார். ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் இருக்கின்றார்கள்.


02. உங்கள் பாடசாலை வாழ்க்கை மற்றும் தொழில் புரியும் துறை அனுபவங்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையில் கல்வி பயின்றேன். 1996 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டு மின் பொறியியலாளராக 2001 இல் பட்டம் பெற்றேன். இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளர்களில் ஒருவர் நான். தற்போது வவுனியா பிரதேசத்தின் பிரதம பொறியியலாளராகவும், வடக்கின் வசந்தம் என்ற செயற்றிட்டத்தின் திட்ட முகாமையாளராகவும் பணியாற்றிக் கொண்டு வருகின்றேன்.



03. இலக்கியத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்த சூழ்நிலைகள் எவை? எழுதத் தூண்டியவர்கள் யார்? 

பாடசாலையில் மேற் பிரிவிற் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இருந்தே, கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், குழுப்பாடல் என்பவற்றில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. பாடசாலை மட்டத்தில் மட்டுமல்லாமல் கோட்ட, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருந்தேன். தொடர்ந்து பல்கலைக்கழகமும் வாய்ப்புகளை அள்ளி வழங்கிய ஒரு இடமாக இருந்தது. என்னோடு பயின்றவர்களும் எனக்கு சிரேஷ்டராக விளங்கியவர்களும் எழுதத்  தூண்டினார்கள்.



04. வாசிப்பு ஆற்றல் கொண்ட அனைவராலும் எழுத்து முயற்சியில் ஈடுபடலாம் என்று நினைக்கின்றீர்களா?

எழுத்துத் துறையில் பிரகாசிப்பதற்கு தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் அவசியமாகின்றது. எந்தவொரு வரையறையுமின்றி அனைத்து விடயங்களையும் வாசித்துத் தெரிந்து கொள்பவன் அறிவில்; பிரகாசிக்க முடியும்.

ஆனாலும் எழுத்தும் வாசிப்பும் ஒரேயடியாக வந்துவிடாது என்று நினைப்பவர்கள், வாசகர்களுக்குள்ளாகவும் ஏன் இலக்கிய வாதிகளுக்குள்ளாகவும் இருக்கின்றார்கள். ஆனால், என்னுடைய அபிப்பிராயம் முறையான திட்டமிடலும் ஒரு விடயத்தில் உள்ளே நுழைந்து ஆராயும் திறனும் இருக்குமாயின் எதுவும் சாத்தியமே.


05. ஓர் எழுத்தாளன் எதிர்நோக்கும் சிரமங்களைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?


எழுத்தாளன் என்பவன் உருவாகின்றானா அல்லது பிறக்கின்றானா எனும் சர்ச்சை தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றது. பிரசவத்தின் போது ஒரு பெண் மறுபடி பிறக்கின்றாள் என்று சொல்வதை அறிந்திருக்கின்றேன். படைப்பைப் பிரசவித்து தன் எண்ணங்களால் ஒரு தோற்றத்தைப் பெற்றுக் கொள்ளும் எந்தவொரு படைப்பாளியும், ஒவ்வொரு படைப்பின் போதும் ஜனனிக்கிறான். எனவே ஒரு ஜனனத்தின்போதும் படும் அத்தனை துன்பங்களையும் எழுதும்போதும் பட்டுக் கொள்வார்கள்.

இது எல்லாக் காலத்திலும் காணப்பட்டாலும், தற்பொழுது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்துடன் போட்டி போடும்போது தனித்தனி மனிதர்களின் படைப்புகள் இடம்தெரியாமற் போய்விடுகின்றன. படைப்புக்களுக்காகச் செலவழிக்கும் தொகையும் அவர்களுடைய பிரயாசையும் அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தந்துவிடுவதில்லை. வாசகர்களை அண்மித்துவிடவேண்டிய சந்தர்ப்பத்தில் போட்டிபோட முடியாதவர்களாக இருக்கின்றார்கள். அங்கீகாரம் என்ற விடயத்தில் அளவு கடந்த இன்னல்களைச் சந்தித்துக் கொள்கின்றனர்.


06. மரபுக்கவிதை, புதுக்கவிதை, நாவல், ஆய்வு ஆகிய துறைகளில் ஈடுபாடு காட்டிவரும் நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

2014 செப்ரம்பர் 21 ஆம் திகதி இரு நாவல்களை ஒரே நாளில் வெளியிட்டேன். ஷஷவாழும் காலம் யாவிலும்|| மற்றும் ''சொந்தங்களை வாழ்த்தி'' என்பன அவற்றின் பெயர்கள். மூன்றாவதாக ''விஞ்சிடுமோ விஞ்ஞானம்!'' என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன்.

அடுத்து, 2015 இல், வட பகுதியில் பல காரணங்களுக்காகவும் அநாதையாக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தை சிந்திப்பதாக ''அநாதை எனப்படுவோன்'' என்ற நாவலையும், ''சீதைக்கோர் இராமன்'', ''தவறுகள் தொடர்கின்றன'' என்ற இரு கவிதை நூல்களையும், மின்சக்தி சேமிப்பை செயற்படுத்தும் முகமாக ''வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்'' என்ற புத்தகத்தையும் ஒரே நாளில் வெளியிட்டேன்.


07. உங்கள் படைப்புக்களின் கருப்பொருட்களாக எவற்றை எடுத்துக் கொள்கின்றீர்கள்?

ஒரே பொருளை எடுத்துக் கொள்வதில்லை. நாவல்கள் நீண்ட நேர வாசிப்பிற்குரியதால், பெண்ணியம், போருக்குப் பிந்திய அவலங்கள் மற்றும் அநாதையாக்கப்படும் நிலை என்பவற்றை எடுத்துக் கொண்டேன்.

''விஞ்சிடுமோ விஞ்ஞானம்!'' என்ற கவிதைத் தொகுப்பில். மனிதனுடைய வாழ்வை மேலும் வேகமாக்கிய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதத்தைப் பேணுவது சாத்தியமா? மரணத்தை வென்றுவிட முடியுமா? மனித குலத்தின் உயரிய விழுமியங்களை உறுதிப்படுத்துமா? என்ற பல்வேறு வினாக்களைக் கேட்டு அவற்றுக்குப் பதிலளிப்பதுபோல அந்தப் புத்தகத்தை உருவாக்கினேன்.

''தவறுகள் தொடர்கின்றன'' என்ற கவிதைத் தொகுதியில், மும்மூன்று வரிகளில் உருவான தொடர் கவிதைகள் மூலம் கருவறையில் இருந்து கல்லறை வரையிலும் ஒருவன் அறியாமற் செய்யும் ஒரு சில விடயங்களையும், ''சீதைக்கோர் இராமன்'' என்ற மரபுக் கவிதைத் தொகுதியில் பெண்ணின் அதாவது சீதையின் பார்வையில் அக்கினிப் பிரவேசத்தையும் குறிப்பிட்டேன்.


08. நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்துக்கும் இப்போதைய சூழ்நிலைக்கும் இடையிலுள்ள வேறுபாடாக எதைச் சொல்வீர்கள்?


பெரிதாக ஒன்றும் வித்தியாசம் புரியவில்லை. படைப்புகளின் நோக்கத்தையும் படைப்பின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளாமல் வெளியே இருந்து அபிப்பிராயம் சொல்லும் இக்கால கட்டத்தில் இத்துறையில் நுழைந்து விட்டேனோ என்றும் அவ்வப்போது எண்ணுவதுண்டு. இது விஞ்ஞான முன்னேற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள். அனைவருக்கும் பொதுவான சவால்கள். அவற்றை தனிப்பட நினைத்து வருந்தாது சமுதாயத்தின்பால் பழியைப் போட்டுவிடத் தோன்றுகின்றது.


09. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளில் ஒரு சிலரால் குழப்பங்கள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகின்றதே. இது பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

பெண்ணியம் மட்டுமல்ல. சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களும் சமுதாயத்தின் பார்வையில் விழுந்து அலசி ஆராயப்படும். ஆனாலும் பெண்ணியக் கருத்துக்கள் வெகுவாகச் சென்று சேர்ந்துவிடும். பெண்ணுக்கு வேலியைப் போடும் எமது சமுதாயத்தினரிடையே அது கடும் குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.

ஓன்றை மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்ளுவது முக்கியமானது. இத்தகைய பெண்களின் அழுகையையும் அவலங்களையும் தாங்கிக் கொண்டு இந்தப் பூமி பன்னெடுங்காலமாக சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. பூமாதேவி என்று சொல்லி அங்கும் பாரத்தையும் கொடுத்து பெண்ணுக்கு பல வரைமுறைகளை ஏற்படுத்தியது. ஆனால் மாறாக ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல குழப்பம் எழுமானால் அவற்றை எத்தனை காலத்திற்குத் தாங்கப் போகின்றது என்பது சொல்ல முடியாது. இதனால் எப்பொழுதுமே சமுதாயத்தைக் குழப்பாத, கலாசாரத்தை குழிதோண்டிப் புதைக்காத பெண்ணியமே ஏற்றுக் கொள்ளத்தக்கது.


10. எழுத்துத் துறையில் தங்களால் மறக்கமுடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

எதையும் படித்துத் தெரிந்து கொள்ளாமல் அனுபவங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து ஆரம்பித்த எனது எழுத்து வாழ்க்கை உண்மையில் ஆச்சரியத்தையே கொண்டு வருகின்றது. அனுபவம் அறிவுறுத்தும் பாடம் ஆசிரியரிலும் மேலானது என்பதைப் பல தடவைகள் உணர்ந்திருக்கின்றேன். எழுத்தையும் எண்ணையும் கற்றறிந்திராத முனிவர்களும் இருடிகளும் ஞானிகளும் ஏன் புலவர்களும் படைத்த அக்காலப் படைப்புக்களை அலசி ஆராய்வதற்கேனும் கற்றவர்களின் அறிவு போதாததாகத் தெரிகின்றபோது, இலக்கியங்களையும் வகுத்து அவற்றுக்கு இலக்கணத்தையும் வைத்துச் சென்ற எம் முன்னோரின் முயற்சிகள் ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்துகின்றன.


11. எந்தெந்த எழுத்தாளர்களது நூல்களை வாசிக்கிறீர்கள்?

ஆரம்ப காலத்தில் கல்கி, லக்சுமி, வாசந்தி போன்றோரின் நாவல்களுடன், கவிஞர் வைரமுத்து, மு. மேத்தா அவர்களின் கவிதைகளையும் வாசித்த அனுபவம் உண்டு. தற்போது இலங்கை எழுத்தாளர்களாகிய செங்கை ஆழியான், வவுனியூர் உதயணன், அகளங்கள், அருணா செல்லத்துரை, நீ.பீ. அருளானந்தம் ஆகியோரின் புத்தகங்களை வாசிப்பதுண்டு. அண்மையில் வெளிவந்து எனது கைவரையிலும் வந்த அனைத்துப் புத்தகங்களையும் வாசித்திருக்கின்றேன்.


12. எழுத்தாளர்களது நூல்களை வாசிக்கும் போது அவர்களின் தாக்கம் உங்களுக்குள்ளும் வந்துவிடுமா?

நிச்சயமாக. அந்தக் காலத்தில் பொன்னியின் செல்வன், பார்த்தீபனின் கனவு ஆகிய நாவல்களை வாசித்துபோது கதையின் ஆழத்திலும் கவர்ச்சியிலும் கதையோட்டத்திலும் பாத்திரமாக மாறிவிட்டதைப் போல தோன்றும். அவர்களின் சரித்திரங்களைப் படிக்கும்போது பூரிப்பும் சந்தோசமும் எழுந்து கொள்ளும். ஆனால் தற்பொழுது அப்படியல்ல. வாழ்க்கை நதியின் பல திருப்பங்களையும், வாழ்வின் யதார்த்தங்களையும் உணர்ந்த பின்பு, கதைக்குக் கொடுக்கும் மரியாதையைத்தான் வாழ்க்கைக்கும் கொடுக்க வேண்டியதாகின்றது. ஆனால் அனுமானித்த முடிவுகளில் மாற்றம் வரும்போது எம்மைவிட திறமைசாலியான கடவுளின் முடிவுகளுக்குத் தலை வணங்குகின்றது.


13. யுத்தத்துக்கு முற்பட்ட இலக்கிய முயற்சிக ளுக்கும் யுத்தத்துக்குப் பிற்பட்ட இலக்கிய முயற்சிகளுக்கும் இடைப்பட்ட வேறுபாடுகளாக எதைக் கூறலாம்?

யுத்தத்துக்கு முற்பட்ட காலம் அறத்தையும் அன்பையும் சொல்லியபோது பிற்பட்ட காலம் அவலங்களையும் அழுகைகையும் சொல்லியது. அவை ரணத்தை ஆற்றுவதற்கு உதவியபோதும் கவர்ச்சியை இழந்ததால், ஆபரணத்தை அணியாததால் அழகுகுறைந்த மங்கையைப் போல காட்சி தந்தது. மொழியிலும் படைப்பிலும் எதையோ தொலைத்துவிட்டதைப் போன்ற மனக்குறையை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றது. இது எப்போது மாறும்? போரையும் அதன் வடுக்களையும் மாற்ற இன்னும் இரண்டு தலைமுறைகள் கடக்கவேண்டும் என்று சொல்கின்றார்களே. அப்படியானால் இவற்றுக்கும் மேலும் இரு தலைமுறை தேவைப்படுமா என்றே எண்ணத் தோன்றுகின்றது.


14. இலக்கியப் படைப்பாளிகளுக்கு  தற்போது வழங்கப்படுகின்ற                விருதுகள், பட்டங்கள் குறித்த உங்கள் பார்வை எப்படி இருக்கிறது?

இந்நாளில் விருதுகள் பட்டங்களை வழங்கும்;போது அங்கீகாரம் என்பதில் பிரபல்யம் என்பது மட்டும் கணிப்பிடப்படுகின்றதா என்ற சந்தேகம் ஒரு சிலரைப் போலவே எனக்கும் எழுந்தது.  வெற்றியைத் தயாராக்கி வைத்துக் கொண்டே புத்தகங்களை வெளியிடுகின்றார்களா என்றும் ஒரு எண்ணம் எழுந்தது. ஆனால் துருவி ஆராய்ந்து கொண்டு செல்லும்போது, ஏதோ ஒரு மிகச்சிறப்பான விடயம் அவற்றில் இருப்பது புரிந்தது. முறையாக வாசித்துச் செல்லும்போது உலுக்கிவிடுவதைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே அப்புத்தகங்கள் திகழ்கின்றன. அது உரிய நேரத்தில் உரியவரிடம் செல்கின்றது என்பது புரிந்தது.


15. இதுவரை தாங்கள் பெற்ற விருதுகள், பட்டங்கள் பற்றிக் கூறுங்கள்?

1992 இல் அகில இலங்கை ரீதியாக புராண நாடகத்தில், முதலாம் இடத்தை எனது பாடசாலை பெற்றிருந்தது. 'குரு தட்சணை' என்ற அந்த நாடகத்தில் குரு துரோணர் வேடத்தில் நான் நடித்திருந்தேன். அதற்குப் பின்னால் பல்கலைக்கழகத்தில் 1998 இல் அகில இலங்கை ரீதியாகப் பல்கலைக்கழக மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் நான் முதற்பரிசு பெற்றேன். வேறும் பரிசுகளுடன் எனது இலக்கியப் பயணம் தொடர்ந்தது.

பின்பு தொழில், குடும்பம் காரணமாக பெரிய இடைவெளியை எடுத்துவிட்டு 2013 இல் இருந்து மறுபடியும் தொடங்கினேன். பிரதேச ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் நடாத்தப்பட்ட போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றேன். ஞானம் சஞ்சிகையால் நடத்தப்படும் சிறுகதைப் போட்டியில் தொடர்ந்து இருமுறை பரிசு பெற்றேன். 2015 இல் கலாசார திணைக்களத்தால் நடாத்தப்பட்ட கையெழுத்துப் பிரதிப்போட்டியில் 'என் செல்வ மகளே' என்ற நாவலுக்குப் பரிசு கிடைத்தது.


16. எதிர்கால இலக்கிய முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எழுத்தைப் பொறுத்தவரையில் எனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் வேலை காரணமாகவும் குடும்பம் காரணமாகவும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. கவிதை, ஆய்வு, சிறுகதை மற்றும் ஒரு சில நூல்கள் தயாராக இருக்கும் போதிலும் அவற்றை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது புரியவில்லை. குழந்தை பூரண வளர்ச்சியைப் பெற்றதும் தானாக வெளியே வருவதைப் போல இவற்றையும் வெளிக்கொணரும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.


17. எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டிவரும் இளையவர்களுக்கு என்ன கூறுவீர்கள்?

நாம் மிகவும் மோசமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது மொழிக்கும் இருப்பிற்கும் படைப்பிற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலைக் கொண்டுதரும் பல சவால்களை அன்றாடம் எதிர்நோக்கியவாறு வாழ்க்கைப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

எமது பாதையில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அதை அறிந்து கொள்வதற்கு நாம் நிறைய வாசிக்க வேண்டும். ஆராய்ந்தறிய வேண்டும். அறிவாளிகளை நாடவேண்டும். அவர்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொண்டதை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கருத்திற் கொண்டு எதிர்காலத்திற்கு ஏற்றவற்றை எமது வரையறைக்குள் நின்று கொண்டு இயம்பவேண்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment