இராகலை தயானியுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
முதலில் இந்நேர்காணலுக்கு என்னை அழைத்ததற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வனப்புமிகு மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில், வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட இராகலை நகருக்கு அண்மித்த புறூக்சைட் எனும் சிற்றூரினை வசிப்பிடமாகக்கொண்டுள்ளேன். ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த என் பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளை நான். இலக்கிய உலகிற்கு தயானி விஜயகுமார், இராகலை தயானி, மலைமகள் எனும் பெயர்களில் ஆக்கங்களை எழுதி வருகின்றேன். எழுத்துலகிற்கு தத்தித் தத்தி தவழ்ந்து வரும் சிறு குழந்தை நான்.
02. உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?
ஆரம்ப மற்றும் கனிஷ்ட பிரிவிற்கான கல்வியை பது/கனவரல்லை தமிழ் வித்தியாலயத்திலும், பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் கற்றதோடு சாதாரண மற்றும் உயர்தர கல்வியை நு/வ/இராகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன். சாதாரண மற்றும் உயர்தர பிரிவில் பாடசாலை மட்டத்தில் முதல்தர சித்தியினைப் பெற்றுக்கொண்டதோடு மாத்திரமின்றி உயர் தரத்தில் மாவட்ட மட்டத்தில் நான்காவது நிலையினை பெற்றுக்கொண்டேன். என் பாடசாலை வாழ்க்கைப் பயணத்தில் வறுமையும் என்னுடன் சேர்ந்து பயணித்தது. மின்சார வசதிகள் கூட இல்லாத குப்பி லாம்புகளோடு போராடி கல்வி கற்றேன். நிலா வெளிச்சத்தில் கற்ற நாட்களும் நினைவில் உண்டு. நான் வாழ்ந்த வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் 'மாடமாளிகை' என்ற கவிதையை எழுதினேன். (என் கவிதைத் தொகுப்பில் அக்கவிதை இடம்பெற்றுள்ளது)
2010ஆம் ஆண்டு பேரதானைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து அரசறிவில் சிறப்புக் கலை மாணி பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்து தற்போது முதுமாணி பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருகின்றேன். அத்துடன் பேராதனை பல்கலைக்கழக்கத்திலே மனித உரிமைகள் டிப்ளோமா கற்கை நெறியினையும் பூர்த்தி செய்துள்ளேன். இவை மாத்திரமின்றி பல்கலைக்கழககத்தில் கற்ற காலத்தில் இருபத்தியைந்துக்கு மேற்பட்ட குறுங்கால கற்கை நெறிகளை மேற்கொண்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன். (மனித வள முகாமைத்துவம், தலைமைத்துவம் உள்ளடங்களாக)
03. இலக்கியத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்த சூழ்நிலைகள் எவை?
இலக்கிய தடத்தில் பாதம் பதிக்க முதல் காரணமாக இருந்தது நான் வாழும் சூழல் தான். தூரத்துப் பச்சை பார்ப்பதற்கு அழகாகத்தான்; தெரியும். அருகில் வந்து பார்த்தால் தான் மக்கள் அனுபவிக்கும் அவலங்களும் வேதனைகளும் கண்ணுக்குத் தென்படும். அட்டைக்கடியும், கொழுந்து கொய்து வெடித்துப் போன விரலிடுக்கு வேதனையும் புரியும். நான் பச்சை பூமியை பக்கத்தில் இருந்து பார்த்தவள். ஆகையால் கற்பனை வளங்களுக்கு அப்பால் மலையக மண்ணவர் படும் துன்பங்களை இலக்கியமாக படைக்க முயல்கின்றேன். அத்துடன் வாசிப்பின் மீதிருந்த நேசமும் தமிழ் மீதுக்கொண்ட மோகத்தின் காரணமாகவும் இலக்கிய உலகத்திற்கு தானாக ஈர்த்துவரப்பட்டேன்.
04. எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?
எழுதுவதையும் வாசிப்பதையும் சிறு வயதிலிருந்தே பழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆனால் என் எழுத்துக்களை என்னைத்தவிர யாரும் வாசிக்க அனுமதி கொடுத்ததில்லை. இதற்கு முக்கிய காரணம் எனக்குள் இருந்து கறையானாக அரித்துக் கொண்டிருந்த தாழ்வு மனப்பாங்குதான். இத்தாழ்வு மனப்பாங்கு காரணமாக பல வருட இலக்கியப் பயணத்தை இருளுக்குள் தள்ளிவிட்டேன். விரல்விட்டு எண்ணக்கூடிய இலக்கியங்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தேன். ஆனால் பெரும்பாலான இலக்கியங்களை வெளியிடாமலே தாழிட்டு வைத்திருந்தேன். இவ்வாறான நிலையில் எனக்குள் இருந்த எழுத்தாற்றலை வெளியுலகிற்கு கொண்டுவர முயற்சி செய்தவர் கால்நடை வைத்தியர் கிருபானந்தகுமாரன் அவர்கள்தான். என்னை அதிகளவு ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டியதோடு மட்டுமல்லாமல் பத்திரிகைகளில் என் படைப்புக்கள் வெளிவர களம் அமைத்துக்கொடுத்தார். அவர் மாத்திரமின்றி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி எஸ். பாஸ்கரன் அவர்களும் என்னை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டியவர். இவர்கள் இருவரும் இல்லையென்றால் என் எழுத்துலக வாழ்வு என்று ஒன்று இருந்திருக்காது என்று கூறலாம்.
05. கவிதைகள் எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?
கவிதை எழுதுவதில் நாட்டம் ஏற்பட முக்கிய காரணம் எனது நண்பி சிவதர்ஷினி தான். அவள் மிகச்சிறப்பாக கவிதை எழுதுவாள். அவளைப் போல நானும் ஏன் கவிதைகள் எழுதக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியபோது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை சொற்களாக கோர்த்து எழுதத் தொடங்கினேன். அவ்வாறு எழுதத் தொடங்கிய காலத்தில் பாடசாலை மட்டங்களில் நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் கவிதை எழுதுவதற்கு என் பெயர் பரிந்துரைக்கப்படும். போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவும் கவிதை எழுத முயற்சித்தேன்.
அத்தோடு உணர்வுகள் கொதித்தெழும் போது பேனைக்கு பசியேற்றி ஏடுகளை தின்னும் வகையில் எழுத்துக்கள் தானாக பிரசவிக்கத் தொடங்கின. பொதுவாக புரட்சிகர கவிதைகளை எழுதுவதற்காகவே என் பேனை முனை அதிகமாக தலைகுனியும். நான் அனுபவித்த, பார்த்த, பிறர் பகிர்ந்த உணர்வுகளை கவிதையாக வடிப்பதிலே ஆர்வம் அதிகம்.
06. மரபுக் கவிதைகளை எப்படி நோக்குகின்றீர்கள்?
இலக்கண வரம்பினுள் நின்று இலக்கியம் படைப்பதை மரபுக கவிதைகள் தன்னகத்தே கொண்டுள்ளன. யாப்பு எனும் சட்டகத்தினுள் நின்று மொழியை திணித்து கவி படைப்பது மரபுக் கவிதையின் சிறப்புப் பண்பு. ஆனால் இத்தகைய மரபுக் கவிதைகளை படித்தோர் கூட கையகராதியைக் கொண்டு பொருள் தேடிக்கொள்ள வேண்டிய சிரமம் இருக்கின்றது. ஓசை, யாப்பு, அணிகள், எதுகை, மோனை என்பவற்றுக்கு முதன்மை கொடுத்து தமிழின் சிறப்பை எடுத்தியம்பினாலும் இலக்கியம் என்பது படைப்போருக்கும் அதனை படிப்போரும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பது நல்லது எனும் வகையில் மரபுக் கவிதைகளை காலம் கடந்த இலக்கியம் என்று சில தமிழறிஞர்கள் கூறுகின்றனர். ஆனாலும் சொற் சுருக்கம், பொருட் பெருக்கம் கொண்ட மரபுக் கவிகள் பற்றிய அறிவு புதுக் கவிதை படைக்கும் படைப்பாளிக்கு இருந்தால் தனது கவியாற்றலை வளர்த்துக்கொள்ள உந்துசக்தியாக அமையும்.
07. அண்மையில் நீங்கள் வெளியிட்ட நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?
தாயாக முன்பே தமிழை பேனையில் சுமந்து பெற்றெடுத்த என் பிஞ்சுக் குழந்தைக்குப் பெயர்தான் 'அக்கினியாய் வெளியே வா'. இவ் அக்கினியாய் வெளியா வா கவிதைத் தொகுதி மொத்தமாக 57 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலான கவிதைகள் மலையகச் சமூகம் சார்பாக எழுதப்பட்டது. மாற்றம் கொண்ட மலையகத்திற்கான ஆணிவேர்களைக்கூட கவிதை வடிவில் கூறியுள்ளேன். அத்துடன் அடிப்பட்ட மக்களின் அவலங்களுக்கு வரிவடிவம் கொடுத்துள்ளேன். இக்கவிதைத் தொகுதியில் காதல், வர்ணனை என்பவற்றைவிட சமூக அவலங்களுக்கே முதல் இடம் கொடுத்துள்ளேன்.
எனது கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள்தான். இலைமறைக்காயாக இருக்கும் படைப்பாளிகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் உன்னதமான சேவையை செய்து வருகின்றார். பணம் படைத்தவர்கள் எல்லாம் தானுண்டு தன் வேலையுண்டு என்று சமூகப் பணியின் பக்கம் கண் பார்க்காத இந்த இயந்திர உலகில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் ஒரு மகத்தான மனிதர்தான். அவ்வகையில் புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக என் 'அக்கினியாய் வெளியே வா' அகில வாசலுக்குள் நுழைந்தது.
வளர்ந்து வரும் ஒரு இளம் படைப்பாளியை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்ற விடயத்தின் இலக்கணத்தைக் கொண்டவர்களாக மேமன்கவி மற்றும் தென்னிந்திய வளரி இதழரசிரியர் அருணா சுந்தரராசன் ஆகியோர் விளங்குகின்றனர். என் கவி நூல் வெளிவருவதற்கு முன்னின்று உழைத்தவர்களும் இவர்களே. இந்த மூன்று மாமனிதர்களின் உதவியால்தான் என் கன்னிக் கவி நூல் வெளிவந்தது. இம்மூவருக்கும் இவ்விடத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்தும் கவிதை எழுத என்னை ஊக்கப்படுத்திய, ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர்களான யோ. புரட்சி, முல்லைத்தீபன், ராஜ்சுகா, காவியா, ரிம்ஸா முஹம்மத் ஆகியோருக்கும் இவ்விடத்தில் நன்றிகூற கடமைபட்டுள்ளதோடு என் கவிதைகளை தொடர்ந்து பிரசுரித்துவரும் அச்சு ஊடகங்களுக்கும் என்னை ஊக்கப்படுத்தி ஒரு நூலை வெளியிடுமளவுக்கு துணையாக இருந்த முகப் புத்தக நண்பர்களுக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன்.
08. கவிதை தவிர்த்து வேறு எவற்றையெல்லாம் எழுதுகிறீர்கள்?
கவிதைகளைத் தவிர்த்து ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் மலையக சமூகம் சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுகின்றேன். அண்மையில் சிறுகதை எழுதவும் தொடங்கியுள்ளேன்.
09. படைப்புக்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
செய்யுளுக்கு பொருள் என்பதைப்போல படைப்புக்கு விமர்சனம் இன்றியமையாதது ஆகும். விமர்சனம் இல்லையென்றால் படைப்பாளியின் படைக்கும் ஆற்றல் சூனியப் பிரதேசத்திற்குள் சென்றுவிடும். இருப்பினும் சொல்லப்படும் விமர்சனங்கள் படைப்பாளியை அதிகம் புகழ்வதாகவோ அதிகம் இகழ்வதாகவோ இல்லாமல் நடுநிலைமை அடிப்படையில் நோக்கப்பட வேண்டும். ஒரு நூலை அல்லது ஒரு படைப்பினை விமர்சனம் செய்பவன் நடுநிலையில் இருந்து படைப்பினை நோக்க வேண்டியது அவசியம்.
சிலரின் விமர்சனங்கள் படைப்பாளியை கீழ்த்தரமாக சாடுவதாகவும் அமைகின்றது. அவ்வாறான நிலையில் அந்த படைப்பாளி அடுத்த கட்ட இலக்கிய நகர்வினை நோக்கிச் செல்வது சிரமமாக இருக்கும். படைப்புக்களை விமர்சிக்கும் போது படைப்பாளி குறிப்பிட்ட விடயத்தை எவ்வாறு அணுகினான் என்ற அவன் பக்க சார்பு கருத்துக்களையும் விமர்சனத்தின் போது கவனம் எடுக்க வேண்டியதும் அவசியமாகும். சமகாலத்தில் மூத்த படைப்பாளிகள் வளர்ந்துவரும் படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கியங்களே இல்லை என மறைமுகமாக சாடுகின்றார்கள். அவ்வாறு சாடுகின்றவர்கள் சாடுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல் இளைய படைப்பாளிகளை கரம்பற்றி எழுப்பிவிடும் முயற்சிகளை செய்ய வேண்டியதும் அவசியம் என்பது என் கருத்து.
10. உங்களுடைய அடுத்தகட்ட இலக்கிய முயற்சிகள் யாவை?
காத்திரமான இலக்கியப் படைப்புக்களை படைக்க முயற்சி செய்கின்றேன். கவிதையோடு மாத்திரம் நின்றுவிடாமல் சிறுகதை, ஆய்வுக் கட்டுரைகள் என்பவற்றையும் எழுதி நூல் வடிவில் வெளியிட வேண்டும் என எண்ணுகின்றேன். அத்துடன் இலக்கியம் படைப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் சமூக நலன் சார் செயற்பாடுகள், சமூக விழிப்புணர்வு சார் செயற்பாடுகள் என்பவற்றினையும் மேற்கொள்ள வேண்டுமென எண்ணுகிறேன்.
11. பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் அரசறிவியலை விசேட பாடமாக கற்றதால் இலக்கிய உலகிற்கும் எனக்குமான இடைவெளி அதிகமாக காணப்பட்டாலும் அவ்வப்போது பல்கலைக்கழக சஞ்சிகைகளுக்கு ஆக்கங்களை எழுதுவேன். கவியரங்கம், வானொலி நிகழ்ச்சிகளிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பங்குபற்றியிருக்கின்றேன். 2013 ஆம் ஆண்டு கண்டி தமிழ்ச் சங்கத்தில் 'ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு' என்ற தலைப்பில் பாடிய கவியரங்க கவிதை அதிக வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அத்துடன் பல்கலைக்கழக 'இளங்கதிர்' சஞ்சிகைக்கு எழுதிய 'சபிக்கப்பட்ட சனங்கள் நாங்கள்' என்ற கவிதையும் அதிக பாராட்டினை பெற்றுக்கொடுத்தது. இவை மாத்திரமின்றி பல்கலைக்கழக மட்டத்தில் நடக்கும் இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி பல சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறேன். இருப்பினும் பல்கலைக்கழக வாழ்வில் என் இலக்கியப் பயணம் என்பது மிகவும் மந்தமானதொரு வேகத்திலே நகர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
12. நீங்கள் இதுவரை வாசித்த நூல்களில் உங்களைக் கவர்ந்த நூல் எது? ஏன்?
வாசித்ததோடு புத்தகத்தை மூடிவைக்காது மறுபடி வாசிக்க வாசிக்க தூண்டக்கூடிய பல நூல்களை என் மனதில் விருப்பக் கோடிட்டு வைத்துள்ளேன். ஆனால் நான் உயர் தரம் படிக்கும் போது முதல் முதலாக படித்த கவிப்பேரரசின் 'தண்ணீர் தேசம்' நாவல் தான் அடிமனதை வருடிப்போன நாவல். இந்நாவலுக்கு நான் அடிமையாக முதல் காரணம் கவிநயம் கொண்ட கதை நடை தான். அத்தோடு காதல் ஜோடிகளான கலை வண்ணம், தமிழ் போன்றோரின் காதல் லயத்தை வாசகர்கள் லயித்துவிடும் சொற்களை கோர்த்து நூல் மாலை கட்டியுள்ளதோடு பல அறிவியல் கருத்துக்களை கூறி விஞ்ஞானக் காவியமாகவும் தண்ணீர் தேசத்தை வடிவமைத்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் வாசித்த இந்நாவல் இன்று வரை கடலுக்குள் தத்தளித்த அந்த காதல் ஜோடிகளின் கதையை ஓயாத அலையாக இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
13. இலக்கியப் பணிகளினூடாக எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?
இலக்கியப் பயணத்தினூடாக ஒரு சமுதாய விடியலை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன். குறிப்பாக மலையக சமுதாயத்தின் எதிர்காலத்தை இலக்கியம் படைப்பதன் மூலமாக மாற்றியமைக்க முடியும் என்பது என் கணிப்பு. குறிப்பாக மாணவ பருவத்திலிருந்து மாற்றம் கொண்ட மலையகத்திற்கான விதையினை விதைக்க முடியும். ஏட்டில் இலக்கியங்களை படைப்பதோhடு மாத்திரமின்றி நடைமுறை உலகிற்கு அதனை எடுத்துக்கூறி சமுதாய விடியலை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன். எதிர்கால மாற்றங்களை நிகழ்காலத்தில் விதைக்க இலக்கியம் எனும் ஊடகத்தையும் பயன்படுத்த முடியும் என்பது எனது கருத்து.
14. உங்களைப் போன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு என்ன கூறப் போகிறீர்கள்?
வளர்ந்து வரும் படைப்பாளிகள் முதலில் தன்னிடம் எத்துறையில் திறமை காணப்படுகின்றது என்பதை அடையாளம் காண வேண்டும். அவ்வாறு அடையாளம் கண்ட பிறகு அதற்கான வழிவகைகளை சிறப்பாக அமைத்து இலட்சிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். வறுமை உட்பட பிற காரணங்களைக் கூறி இலட்சியப் பாதையை காய் நகர்த்தல் தவறு. என்னைப் பொறுத்தவரை வறுமைதான் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற சிறந்த களம். அத்துடன் தாழ்வு மனப்பாங்கை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கை விதையினை விதைக்க வேண்டும். எம் எண்ணங்களுக்கு சக்தி உண்டு அதனால் உயர்ந்த, ஆக்கப்பூர்வமான எண்ணங்களை மனதில் புகுத்த வேண்டும்.
'முடியாதென்ற மடைமையை முடிச்சிட்டுக் கொளுத்துவோம்
முடியுமென்ற நம்பிக்கையை நெஞ்சினில் விதைப்போம்
எழுவோம் எழுதுவோம் பிறரை எழுப்புவோம்
வளர்வோம் வாழ்வோம் பிறரை வளர்ப்போம்'
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment