பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, April 7, 2020

46. ராஹிலா ஹலாம் உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.08.27

ராஹிலா ஹலாம் உடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது இயற்பெயர் திருமதி. ராஹிலா ஹலாம். நான் இணைய வானொலி அறிவிப்பாளினியாக தொழில் புரிகின்றேன். நான் பிறந்து வளர்ந்தது சென் செபஸ்தியன் வீதி, கொழும்பு – 12. தற்போது புதுக்கடையில் வசித்து வருகிறேன். எனது ஆரம்ப கல்வியை மிஹிந்து மாவத்தை முஸ்லிம் வித்தியாலயத்திலும் (தற்போதைய அல் ஹிக்மா கல்லூரி), எனது உயர் கல்வியை கொழும்பு அல் ஹிதாயாவிலும் கற்றேன். எனது கணவர் கணக்காளராக தொழில் புரிகின்றார். எனது மூத்த மகன் ரகீப் அல் ஹாதி, கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் (2017) தரம் மூன்றில் கல்வி கற்கின்றார். இளைய மகன் ரஷPத் அல் ஹாமி. அவருக்கு 03 வயது. எனது பெற்றோர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். எனக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர். அவர்கள் திருமணம் முடித்து வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.


02. நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது? உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வெளிவந்தது?

சரியாக சொல்வதென்றால் நான் தரம் எட்டில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும்போது மூன்று சிறுகதைகள் எழுதினேன். அவைதான் நான் எழுதிய முதலாவது ஆக்கங்கள். ஆனால் அவை எப்படியோ தொலைந்து விட்டன. அதேநேரம் அவற்றைப் பாதுகாப்பதற்கும் போதியளவு அறிவும் வழிக்காட்டுதலும் இருக்கவில்லை. பின்னர் 1997 ஆம் ஆண்டு 'பாவம் பாட்டி' என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதையை எனது தமிழ் மொழிப்பாட ஆசிரியை திருமதி. அன்வர்தீன் அவர்களின் தூண்டுதலின் பேரில் எழுதினேன். அதுதான் நான் எழுதிய முதற் கவிதை. அப்பொழுது அது ஞாயிறு வீரகேசரியில் சிறுவர் பகுதியில் பிரசுரமானது. அதுவே பத்திரிகையில் வெளிவந்த எனது முதலாவது ஆக்கமாகும். அவ்வாக்கம் என்னுடைய இயற்பெயரிலேயே வெளிவந்தது. பிற்காலத்தில் 'ஆஷிகா' என்ற புனைப்பெயரிலேயே எழுத ஆரம்பித்தேன்.


03. இதுவரை எழுதிய உங்கள் ஆக்கங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை நான் எழுதிய ஆக்கங்களில் அதிகமானவை கவிதைகளே. ஏனெனில், வானொலி நிகழ்ச்சிக்காகவும் நான் கவிதைகள் எழுதி சக அறிவிப்பாளர்களுக்கு கொடுத்துள்ளேன். அதேநேரம் கவிதையில் உள்ள ஈடுபாடும், அவை அதிகமாக எழுத காரணமாகும். சில சிறுகதைகளும், கட்டுரைகளும், ஒரு சில நூல் விமர்சனங்களும் எழுதியுள்ளேன். அண்மைக்காலமாக சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாட்டினைக் காட்டி வருகின்றேன்.


04. படைப்பாக்கங்களுக்கு முன்வைக்கப்படும் விமர்சனங்கள், எதிர்மறைக் கருத்துக்களை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

எனது திறமையை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமாகவே நான் அதனை எடுத்துக்கொள்கின்றேன். பலர் உண்மையான அக்கறையோடும் அன்போடும் ஆக்கங்களை விமர்சிப்பார்கள். ஒரு சிலர் எதிர்மறையாக விமர்சிப்பார்கள். ஆனாலும் அவற்றை நான் எனது பயணத்துக்கு துடுப்பாகவே பயன்படுத்துகின்றேன். விக்கிரமாதித்தன் போன்று மனந்தளராது தொடர்ந்தும் எழுதுகின்றேன். ஆரம்பத்தில் இப்படியான மன தைரியம் எனக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் வாழ்க்கைக் கற்றுத் தந்தப் பாடம், மனஉறுதி ஆகியவற்றை எனக்குள் வாங்கிக்கொண்டேன்.



05. உங்களுக்குக் கிடைத்த கருவை எப்படி படைப்பாக்குகிறீர்கள்?

முதலில் கவிதையாக வடிப்பேன். சில காட்சிகள் சட்டென மனதில் தோன்றி கவி வரிகளை எழுதிவிடும். பின்னரே அது ஏட்டுக்குள் ஏறுகிறது. இன்னும் சில சம்பவங்கள், கண்முன் நடப்பவை, ஒருவர் மூலம் கேட்டவை என்பன சிறுகதைகளாகவும் கட்டுரைகளாகவும் உருவெடுக்கின்றன. மிக அண்மைக்காலமாக நாவல் ஒன்று எழுத வேண்டும் என்ற ஆவலும் என்னுள் எழுந்துள்ளது. இறைவன் நாடினால், எமது நாவலாசிரியர்களின் அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு எழுதலாம் என எண்ணியுள்ளேன்.


06. பெண்ணியக் குரல் பற்றிய உங்கள் கருத்து எப்படியுள்ளது?

பெண்ணியம் என்பது பெண்களைச் சாடாது அவர்களின் உரிமைகளை முழங்குவதாய் இருக்க வேண்டும். பெண்ணியம் பேசிக்கொண்டே அவர்களை அடக்குவதாக இருக்கக் கூடாது. பெண்களுக்கு சமஉரிமை வழங்காவிடினும் அவர்களை மதிக்கத் தெரியாதவர்களும் இன்னும் இருக்கின்றனர்.


07. உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்களின் பங்களிப்பு எந்தளவில் உள்ளது?

நிறையவே உள்ளது. அன்று தொட்டு இன்று வரை ஒரு எழுத்தாளன் எவ்வளவுதான் எழுதினாலும் இலக்கிய உலகுக்கு அவனை அடையாளப்படுத்துவது ஊடகங்கள்தான். அது இலத்திரனியல் ஊடகமாக இருக்கலாம். அல்லது அச்சு ஊடகங்களாகக்கூட இருக்கலாம். அதே போன்றே நான் பல வருட காலங்கள் எழுதி வந்தாலும் என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியதும், மூத்த அனுவமிக்க எழுத்தாளர்கள் பலரை அறிந்துகொள்ள ஏதுவாயிருந்ததும் ஊடகங்கள்தான். உங்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் இந்த ஊடகம்தான். இன்று வரையும் எனது எழுத்துக்களை பிரசுரித்துக்கொண்டும் பதிவேற்றிக்கொண்டும் இருப்பவை ஊடகங்கள்தான். எனவே எப்பொழுதும் ஊடகங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.


08. யாருடைய படைப்புக்களை மிகவும் ஆர்வமாக வாசிப்பீர்கள்?

அவ்வாறு குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. எனது சிறுவயது முதல் என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. யார் எழுதிய புத்தகம் என்று பார்க்க மாட்டேன். வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிப்பேன். அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. யாருடைய எழுத்து சாயலும் என்னிடம் வரக்கூடாது என்பதால் இப்பொழுது அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன். இதையேதான் நான் என்னுடைய அறிவிப்புத் துறையிலும் கடைப்பிடிக்கின்றேன். எனக்கென்ற ஒரு தனிப்பாணியில் அறிவிப்பு செய்கின்றேன். யாருடைய எழுத்தையும் பின்பற்றாது எழுதுகின்றேன்.


09. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யாவர்?

தென்னிந்திய எழுத்தாளர்கள் அகிலன், ரமணிச்சந்திரன், சுஜாதா, பாலகுமாரன், இந்திரா சௌந்திரராஜன் போன்றவர்கள். கல்கியில் அகிலன் எழுதிய தொடர்கதையை சேர்த்து எனது தந்தை புத்தகமாக செய்து வைத்திருந்தார். அவற்றை வாசிப்பதற்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவை 60களில் வெளிவந்தவை என நினைக்கின்றேன்.


10. புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்கள் குறித்து?

புலம் பெயர் எழுத்தாளர்கள் பலர் இப்பொழுது பரவலாகக் காணப்படுகின்றனர். அவர்களின் எழுத்துக்கள் அதிகமாக யுத்த சூழலை மையமாகவே வைத்தே வருகின்றன. அதையும் தாண்டி அவர்களது இரசனைமிக்க பல படைப்புகளையும் காணலாம்.


11.  உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?

எனக்கு மறக்க முடியாத முதல் அனுபவம், 'தட்டி தட்டி' என்ற கவிதை பத்திரிகையில் வெளிவந்தபோது நான் முகமறியாத பலர் என்னைப் பாராட்டி இன்னும் எழுத ஊக்குவித்தார்கள். பின்னர் முகநூலில் பதிவேற்றிய என்னுடைய கவிதைகளைப் பார்த்து எனக்கு மூத்த எழுத்தாளர்கள் பலரின் பாராட்டு கிடைத்தமை மற்றும் 2012 ஆம் ஆண்டளவில் எனது கவிதைகள் சிலவற்றை வாசித்து கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர் கபிலன் வைரமுத்து அவர்கள் என்னைப் பாராட்டி, மேலும் நான் எழுத ஊக்குவித்தமை மறக்க முடியாத அனுபவங்களாகும். மேலும் மிக அண்மையில், கடந்த டிசெம்பர் மாதம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாட்டில் என்னுடைய இலக்கிய பணிக்காக விருது வழங்கி கௌரவித்தனர். இது நான் மேடையேறிப் பெறும் முதல் விருதாகும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.


12.  இலக்கியத் துறை சார்ந்த உங்களது எதிர்பார்ப்புக்கள் அல்லது இலட்சியங்கள் எவை?

இலக்கியத்துறை சார்ந்த எனது இலட்சியங்கள் என்றால் கவிதை நூல் வெளியிட ஆர்வமாய் உள்ளேன். என்னுடைய எண்ணம் என்னவென்றால் எழுதப் படிக்கத் தெரியாத மற்றும் எழுத்துக் கூட்டி வாசிக்கும் ஒரு சாதாரண நபர் அல்லது ஒரு கூலித் தொழிலாளி பத்திரிகை எடுத்து வாசித்தால் புரிந்துக் கொள்ளக்கூடியதாக என்னுடைய படைப்பு இருக்க வேண்டும். அவ்வாறான சாதாரண மொழி நடையிலும் இலகு சொற்களைக் கொண்டே எனது ஆக்கங்களைப் படைக்கிறேன். அதனை வாசிப்பதைக் கொண்டு மற்றவர்கள் ஏதேனுமொரு விதத்தில் பயன்பெற வேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கின்றேன்.

13. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அன்பென்ற ஒன்றாலே
அடிபணிவீர்..
பிறரை அதிகாரத்தாலே
ஆளாதீர்..
உற்றாரும் உறவினரும்
ஒன்றென்பீர்..
அயலாரை ஊராரை
ஒதுக்காதீர்..
சமத்துவமும் சகோதரத்துவமும்
ஊற்றாவீர்..
பகைகொள்ளும் வஞ்சகத்தை
புதைத்திடுவீர்..
வன்சொல்லும் கடும்போக்கும்
வேண்டாதீர்..
இன்சொல்லும் நல்லுளமும்
கொண்டிடுவீர்..

என்றுகூறி, உங்களுக்கு எனது உளம்நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன்!!!

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்





45. எழுத்தாளர் த. எலிசபெத் (ராஜ் சுகா) அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2016.11.13

எழுத்தாளர் த. எலிசபெத் (ராஜ் சுகா) அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் தலவாக்கலையை பிறப்பிடமாக கொண்டவள். எனது  கல்லூரி வாழ்க்கை கா.பொ.த சா/த வரை புனித பத்திரிசியார் கல்லூரியிலும் க.பொ.த உ/த தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கழிந்தது. தற்போது கொழும்பு யசோதரா வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

தொழில் அனுபவம் எனும்போது தினம் தினம் பல நல்ல அனுபவங்களினூடாக கடந்து செல்ல முடிகின்றது. நான் இரண்டாம் மொழி தமிழ் கற்பிப்பவள். சகோதரமொழி பேசுபவர்களுடனேயே அதிகமான நேரத்தைக் கழிக்கின்றேன். இனம் மதம் மொழி ரீதியிலான வேறுபாடுகளை காணும்போதெல்லாம் எனக்குள் கோபமும் ஆத்திரமும் மேலெழும். ஏன் இவர்களுக்குள் இத்தனை பேதமை, வேற்றுமை, குரோதம் என மனங் கசந்து போகும். உண்மையில் இதற்கொரு முக்கிய காரணியாக என்னால் காணமுடிந்தது ஒருவர் பேசும் மொழி மற்றவருக்கு புரிந்துகொள்ளா முடியாத நிலையே.

பல்லின சமூகம் வாழும் இத்தேசத்தில் பிரதான இரு  மொழிகளும் சரளமாக காணப்படுமிடத்து பல பிரச்சனைகள்  எமைவிட்டு கடந்து போயிருக்கும். ஒருவரின்  மனம் உணர்வுகள் பிரச்சனைகள் மற்றவருக்கு புரியும். அந்த வகையில் இன்று  ஷஷஇரண்டாம் மொழி|| எனும் விடயம் தமிழ் சிங்கள மொழிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சிங்கள சகோதரர்களிடம் தமிழ்மொழி ஆர்வமும் ஆசையும் அதிகரித்து காணப்படுகின்றது. தமிழ் மொழியுடன் தமிழர்களின் கலை கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், பிரச்சனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை பல புத்திஜீவிகள் மத்தியில் மாற்றங்களாக நிகழ்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இதில் ஒரு சிறு பங்களிப்பை என்னாலும் வழங்க முடிந்ததையிட்டு  பெருமிதமடைகின்றேன்.


02. உங்களது படைப்புலகப் பிரவேசம் குறித்து கூறுங்கள்?

படைப்புலக பிரவேசத்திற்கு அடித்தளமிட்டது எனது சிறுவயது வாசிப்பு பழக்கமே. வாசிப்பு..  வாசிப்பு..  என்று எனது எல்லா ஓய்வு நேரத்தையும் பத்திரிகை புத்தகங்களுக்குள் புதைத்து விட்டிருப்பேன். பிற்பட்ட  காலங்களில் எனது அப்பப்பா தந்த ஊக்குவிப்பும் வழிகாட்டலையும் கூறலாம். அதாவது வானொலியின் சிறுவர் நிகழ்ச்சி, தொடர் நாடகங்கள், போட்டி  நிகழ்ச்சிகள், செய்தி என எல்லாவற்றையும் நேரத்திற்கு  கூப்பிட்டு கேட்கச் செய்வார். அவ்வாறு பத்திரிகை, வானொலி, புத்தகங்களென பழக்கப்பட்ட என் கண்களும் செவிகளும் எனது விரல்களுக்கு வலிமை சேர்த்தது.

பள்ளிக்காலத்தில் பல வானொலி நிகழ்ச்சிகளுக்கு ஆக்கங்களை எழுதி அனுப்பினேன். 2003 இல் அதே விதமாக பத்திரிகைக்கும் எழுதினேன். ஆனால் கவிதைப் பிரவேசமாக 2004 இல் வீரகேசரி  வாரவெளியீட்டில் 'வரமாட்டாயா?|| என்ற கவிதையினூடாக உதயமானது.


03. இலங்கிய உலகில் உங்களது பங்களிப்புக்கள் பற்றிக் கூற முடியுமா?

கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள், சிறுகதை மற்றும் படைப்பாளிகளை இணங்கண்டு அவர்களின் நேர்காணலை கல்குடா நேசன் இணையத்திலும் மித்திரன் வார இதழிலும் (ஏலவே துருவம் இணையத்திலும்) பிரசுரித்து வருகின்றேன்.


04. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் நீங்கள் உங்களது நூல்களை எப்போது வெளியிட உத்தேசித்திருக்கிறீர்கள்?

இறைவனுக்கு சித்தமென்றால் இவ்வருட இறுதிக்குள்.


05. கவிதைத் துறையில் உங்களது பிரவேசம் நிகழ உந்து சக்தியாக எது இருந்தது?

தனிமை என்று சொல்லலாம். அதிகம் பேச பயப்படும், கூச்சப்படும் எனக்கு பேனை சிறந்த கருவியாக இருந்தது. என் நாவினால் பேச முடியாததை பேனாவினால் பேசிக்கொண்டேன். எல்லா உணர்வுகள், சொந்த அனுபங்கள், சமூக அவலங்கள், பிரச்சனைகள் என எழுதிக் கொண்டேயிருப்பேன். இவ்வாறு எழுதத்; தொடங்கியதே நாளடைவில் கவிப் பிரவேசத்திற்கு உறுதுணையாக இருந்தது.


06. ஒரு சிறந்த கவிதை எப்படி இருக்க வேண்டும்? கவிதையின் முக்கிய கூறுகள் பற்றிக் கூறுங்கள்?

கவிதை வாசகனுக்கு புரியவேண்டும். அத்துடன் இரத்தினச் சுருக்கமாக கவித்துவத்துடன் இருப்பதே சிறப்பு. வெறுமனே வார்த்தைகளைக் கோர்த்து கட்டுரைபோல நீளுமாயின் அது கவித்தன்மையை இழந்துவிடும். நீளும் கவியிலும் கவித்துவம் வேண்டும். இதுபோன்ற கவிதைகளே புதுக்கவிதையென வெற்றியடைகின்றது. கவிதையானது உடைத்து சுவைக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென்பதே என்  அபிப்பிராயம். அழகும் சுவையும் மிக்க மாதுளையைப்போல.


07. புதிதாக கவிதை எழுதுபவர்களுக்கு மரபுக் கவிதை குறித்த தேடல் அவசியமில்லை என்று நினைக்கின்றீர்களா?

நிச்சயமாக இல்லை. கட்டாயமாக தேடல் வேண்டும். பொதுவாக கவிதையுலகில் பிரவேசிக்கும் பலர் தமிழ்ப் புலமையோடு உள் நுழைவதில்லை. தமது தாய் மொழி பரீச்சயத்தையும் உணர்வுகளையும் கலந்து  படைப்பதே  கவிதையாகின்றது. இவை பட்டைத் தீட்டப்பட்டு பல விமர்சனங்களுக்கு உட்பட்டு நல்ல படைப்பாக பிரவசமாகிறது. ஆக எமது படைப்பின் முதிர்ச்சி, அழகு, காத்திரம் மேலோங்க, வழிகாட்டியாக அமைய  வேண்டுமாயின் மரபுக்கவிதை குறித்த தேடலும் அவசியமாகின்றது.


08. இதுவரை சுமார் எத்தனை சிறுகதைகளை எழுதியிருக்கிறீர்கள்? அக்கதைகளுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக் கொள்கின்றீர்கள்?

சிறுகதைகள் எண்ணிக்கையில் மிகக்குறைவே. 20 சிறுகதைகளுக்குள் மட்டுப்பட்டே  காணப்படுகின்றது. கவிதைபோல சிறுகதையினை தொடுவதில் சிறு அச்சம். எனது கதையின் கருவை நான் அறிந்தவர்களின் அநுபவங்களைக் கொண்டும், சந்திக்கும் பல சம்பவங்களினூடாகவுமே பெற்றுக்கொள்கின்றேன்.


09. இன்றைய இலக்கிய உலகில் பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது?

பெண்ணியக் கருத்துக்கள் மிக அதிகமாக பரவலாக பேசப்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது. பெண்களின் பிரச்சனைகள் அவற்றுக்கெதிரான குரல் கொடுப்புக்களுக்கு இன்னும் அதிகமாக  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வெறுமனே பெண்ணுடல் பற்றியும் கலாச்சார  சீர்கேடுகளுக்கு வித்திடும் விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவற்றுக்காக வாதாடுவதை விடுத்து சமூகத்தில் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறைகள், கொடுமைகள், அடிமைப்படுத்தல்கள் போன்றவற்றுக்கு எதிரான குரல்கொடுப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்தலுமே பெண்ணியம் என்ற பதத்திற்கு வலிமை சேர்க்கும். அதன் நோக்கம் நிறைவேறும் என நினைக்கின்றேன்.


10. பல்வேறு இலக்கியத் துறைகளில் ஆர்வம் காட்டி வரும் நீங்கள் சவாலான துறையாக எதை நோக்குகிறீர்கள்?

சவாலாக சிறுகதைகளையே கூறலாம். எத்தனையோ பல நல்ல சமூகம் சார்ந்த, பெண்ணியம் சார்ந்த கருக்களை  என்னகத்தே  வைத்திருப்பினும் அவற்றை கவிதைகளாக வடித்தெடுக்கும் லாவகம் சிறுகதைகளில் புகுத்த முடியவில்லையென்பதில் சிறு மனவருத்தம். அதாவது சிறுகதை வடிவத்துக்குரிய  பண்புகளை நான் பெரிதாக பார்க்கின்றேன். சொல்லவருகின்ற விடயம், பாத்திர அமைப்பு, சம்பவ நகர்வு என்பவற்றில் சிதைவு ஏற்படுமிடத்து அதன் தரம் கெட்டு சலிப்புத் தன்மை வந்துவிடும் அதனால் இதனை சவாலாக நினைக்கின்றேன்.


11. வாசகர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமானது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றிய உங்கள் கருத்து யாது?

சிலநேரங்களில் எனக்கும் சலித்துவிடும் ஒரு விடயமிது. வார்த்தைகளை ஒடித்தும் நீட்டியும் ஒழுங்கின்மையில் சிதறிக்கிடக்கும்  படைப்பை  வாசிக்கும்போது வாசகனுக்கு எரிச்சலேற்படும். படைப்பின் புலமை வாசகனாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு நல்ல வாசகன்  நிராகரிக்குமிடத்து அந்த படைப்பு செயலிழந்து போகின்றது என்பதனை பலர்  உணர்வதில்லை. அத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டுமிடத்து அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெருந்தன்மை இல்லாமையே இதற்கான காரணம் என நினைக்கின்றேன். 'விளக்கமில்லா இலக்கியம் விழலுக்கிறைத்த நீர்தான்'.


12. படைப்புகளுக்குக் கிடைக்கும் விமர்சனங்களை, விருதுகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

விமர்சனமில்லா படைப்பு வெறும் கானல்நீரைப் போன்றது. எவ்வித சுவையோ சுவாரஸ்யமோ  தேவையோ பயனோ இல்லாத ஒன்றாகிவிடும். நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு படைப்பு விமர்சிக்கப்படும்போது அது  வெற்றிபெற்ற படைப்பாகின்றது. படைப்பாளி கவனிக்கப்படுகின்றான் என்பது எனது கருத்தாகும்.

அத்துடன் விருதைக் குறித்து கூறுவதாயின் ஆரம்ப காலங்களில் காத்திரமான படைப்புக்கள் விருதை பெற்றுக்கொண்டன. அதற்கு ஒரு மதிப்பும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் காணப்பட்டது. ஆனால் இன்றுகளில் யார் வேண்டுமானாலும் விருது வழங்கலாம், வாங்கலாம் என்ற நிலைமை வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக விருதினை குறைகூறவில்லை. படைப்பாளனை தட்டிக்கொடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அவன் வளர்ச்சியிலும் விருதும் பங்குவகிக்கின்றது. நல்ல திறமைசாலிகள் விருதுகளால் கௌரவிக்கப்படுவது மகிழ்ச்சியே. ஆனால் அவை மலிந்துபோகும்போது அதன் பெறுமதியும் மதிப்பும் குன்றிப் போய்விடுகின்றது.


13. இதுவரை உங்களுக்கு கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

* 2012ல் தேசிய கவிஞர்கள் சம்மேளனம் நடாத்திய விருது வழங்கலில் 'காவ்ய சிறீ' என்ற நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* 2013ல் தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 'கவித்தீபம்' எனும் நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* 2015ல் தடாகம் கலை இலக்கிய வட்டமும் கனடா படைப்பாளிகள் உலகமும் இணைந்து நடாத்திய  விருது வழங்கள் விழாவில் 'கவியருவி' எனும் நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* 2016ல் புதுமைத்தென்றல் முகநூல் குழும கவிதைப் போட்டியில் 03ம் இடம் கிடைத்தது.
* 2016ல் தமிழ்மிரர் பத்திரிகை நடாத்திய கவிதைப் போட்டியில் பணப் பரிசும் கிடைத்தது.


14. இலக்கியத் துறையில் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எவை?

இலக்கியம் காலத்தின் கண்ணாடி எனப்படுகின்றது. எமது படைப்புக்களை எதிர்கால சந்ததியினர் புரட்டிப் பார்க்கும்போது உபயோகமாக எதையாவது நாம் விட்டுச்செல்ல வேண்டும். அப்படி ஒரு படைப்பென்றாலும் காத்திரமாக வெளியிட்டுவிட வேண்டும் என்பதே எனது திட்டமும் விருப்பமும்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

44. இராகலை தயானியுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2016.12.11

இராகலை தயானியுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? 

முதலில் இந்நேர்காணலுக்கு என்னை அழைத்ததற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வனப்புமிகு மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில், வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட இராகலை நகருக்கு அண்மித்த புறூக்சைட் எனும் சிற்றூரினை வசிப்பிடமாகக்கொண்டுள்ளேன்.  ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த என் பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளை நான். இலக்கிய உலகிற்கு தயானி விஜயகுமார், இராகலை தயானி, மலைமகள் எனும் பெயர்களில் ஆக்கங்களை எழுதி வருகின்றேன். எழுத்துலகிற்கு தத்தித் தத்தி தவழ்ந்து வரும் சிறு குழந்தை நான்.


02. உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்? 

ஆரம்ப மற்றும் கனிஷ்ட பிரிவிற்கான  கல்வியை  பது/கனவரல்லை தமிழ் வித்தியாலயத்திலும், பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் கற்றதோடு சாதாரண மற்றும் உயர்தர கல்வியை நு/வ/இராகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன். சாதாரண மற்றும் உயர்தர பிரிவில் பாடசாலை மட்டத்தில் முதல்தர சித்தியினைப் பெற்றுக்கொண்டதோடு மாத்திரமின்றி உயர் தரத்தில் மாவட்ட மட்டத்தில் நான்காவது நிலையினை பெற்றுக்கொண்டேன். என் பாடசாலை வாழ்க்கைப் பயணத்தில் வறுமையும் என்னுடன் சேர்ந்து பயணித்தது. மின்சார வசதிகள் கூட இல்லாத குப்பி லாம்புகளோடு போராடி கல்வி கற்றேன். நிலா வெளிச்சத்தில் கற்ற நாட்களும் நினைவில் உண்டு. நான் வாழ்ந்த வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் 'மாடமாளிகை' என்ற கவிதையை எழுதினேன். (என் கவிதைத் தொகுப்பில் அக்கவிதை இடம்பெற்றுள்ளது)

2010ஆம் ஆண்டு பேரதானைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து அரசறிவில் சிறப்புக் கலை மாணி பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்து தற்போது முதுமாணி பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருகின்றேன். அத்துடன்  பேராதனை பல்கலைக்கழக்கத்திலே மனித உரிமைகள் டிப்ளோமா கற்கை நெறியினையும் பூர்த்தி செய்துள்ளேன். இவை மாத்திரமின்றி பல்கலைக்கழககத்தில் கற்ற காலத்தில் இருபத்தியைந்துக்கு மேற்பட்ட குறுங்கால கற்கை நெறிகளை மேற்கொண்டு  சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன். (மனித வள முகாமைத்துவம், தலைமைத்துவம்  உள்ளடங்களாக)


03. இலக்கியத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்த சூழ்நிலைகள் எவை?

இலக்கிய தடத்தில் பாதம் பதிக்க முதல் காரணமாக இருந்தது நான் வாழும் சூழல் தான். தூரத்துப் பச்சை பார்ப்பதற்கு அழகாகத்தான்; தெரியும். அருகில் வந்து பார்த்தால் தான் மக்கள் அனுபவிக்கும் அவலங்களும் வேதனைகளும் கண்ணுக்குத் தென்படும். அட்டைக்கடியும், கொழுந்து கொய்து வெடித்துப் போன விரலிடுக்கு வேதனையும் புரியும். நான் பச்சை பூமியை பக்கத்தில் இருந்து பார்த்தவள். ஆகையால் கற்பனை வளங்களுக்கு அப்பால் மலையக மண்ணவர் படும் துன்பங்களை இலக்கியமாக படைக்க முயல்கின்றேன். அத்துடன் வாசிப்பின் மீதிருந்த நேசமும் தமிழ் மீதுக்கொண்ட மோகத்தின் காரணமாகவும்  இலக்கிய உலகத்திற்கு தானாக ஈர்த்துவரப்பட்டேன்.


04. எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?

எழுதுவதையும் வாசிப்பதையும் சிறு வயதிலிருந்தே பழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆனால் என் எழுத்துக்களை என்னைத்தவிர யாரும் வாசிக்க அனுமதி கொடுத்ததில்லை. இதற்கு முக்கிய காரணம் எனக்குள் இருந்து கறையானாக அரித்துக் கொண்டிருந்த தாழ்வு மனப்பாங்குதான். இத்தாழ்வு மனப்பாங்கு காரணமாக பல வருட இலக்கியப் பயணத்தை இருளுக்குள் தள்ளிவிட்டேன். விரல்விட்டு எண்ணக்கூடிய இலக்கியங்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தேன். ஆனால் பெரும்பாலான இலக்கியங்களை வெளியிடாமலே தாழிட்டு வைத்திருந்தேன். இவ்வாறான நிலையில் எனக்குள் இருந்த எழுத்தாற்றலை வெளியுலகிற்கு கொண்டுவர முயற்சி செய்தவர் கால்நடை வைத்தியர் கிருபானந்தகுமாரன் அவர்கள்தான். என்னை அதிகளவு ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டியதோடு மட்டுமல்லாமல் பத்திரிகைகளில் என் படைப்புக்கள் வெளிவர களம் அமைத்துக்கொடுத்தார். அவர் மாத்திரமின்றி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி எஸ். பாஸ்கரன் அவர்களும் என்னை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டியவர். இவர்கள் இருவரும் இல்லையென்றால் என் எழுத்துலக வாழ்வு என்று ஒன்று இருந்திருக்காது என்று கூறலாம்.


05. கவிதைகள் எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

கவிதை எழுதுவதில் நாட்டம் ஏற்பட முக்கிய காரணம் எனது நண்பி சிவதர்ஷினி தான். அவள் மிகச்சிறப்பாக கவிதை எழுதுவாள். அவளைப் போல நானும் ஏன் கவிதைகள் எழுதக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியபோது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை சொற்களாக கோர்த்து எழுதத் தொடங்கினேன். அவ்வாறு எழுதத் தொடங்கிய காலத்தில் பாடசாலை மட்டங்களில் நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் கவிதை எழுதுவதற்கு என் பெயர் பரிந்துரைக்கப்படும். போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவும் கவிதை எழுத முயற்சித்தேன்.

அத்தோடு உணர்வுகள் கொதித்தெழும் போது பேனைக்கு பசியேற்றி ஏடுகளை தின்னும் வகையில் எழுத்துக்கள் தானாக பிரசவிக்கத் தொடங்கின. பொதுவாக புரட்சிகர கவிதைகளை எழுதுவதற்காகவே என் பேனை முனை அதிகமாக தலைகுனியும். நான் அனுபவித்த, பார்த்த, பிறர் பகிர்ந்த உணர்வுகளை கவிதையாக வடிப்பதிலே ஆர்வம் அதிகம்.


06. மரபுக் கவிதைகளை எப்படி நோக்குகின்றீர்கள்?

இலக்கண வரம்பினுள் நின்று இலக்கியம் படைப்பதை மரபுக கவிதைகள் தன்னகத்தே கொண்டுள்ளன. யாப்பு எனும் சட்டகத்தினுள் நின்று மொழியை திணித்து கவி படைப்பது மரபுக் கவிதையின் சிறப்புப் பண்பு. ஆனால் இத்தகைய மரபுக் கவிதைகளை படித்தோர் கூட கையகராதியைக் கொண்டு பொருள் தேடிக்கொள்ள வேண்டிய சிரமம் இருக்கின்றது. ஓசை, யாப்பு, அணிகள், எதுகை, மோனை என்பவற்றுக்கு முதன்மை கொடுத்து தமிழின் சிறப்பை எடுத்தியம்பினாலும் இலக்கியம் என்பது படைப்போருக்கும் அதனை படிப்போரும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பது  நல்லது எனும் வகையில் மரபுக் கவிதைகளை காலம் கடந்த இலக்கியம் என்று சில தமிழறிஞர்கள் கூறுகின்றனர். ஆனாலும் சொற் சுருக்கம், பொருட் பெருக்கம் கொண்ட மரபுக் கவிகள் பற்றிய அறிவு புதுக் கவிதை படைக்கும் படைப்பாளிக்கு இருந்தால் தனது கவியாற்றலை வளர்த்துக்கொள்ள உந்துசக்தியாக அமையும்.


07. அண்மையில் நீங்கள் வெளியிட்ட நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

தாயாக முன்பே தமிழை பேனையில் சுமந்து பெற்றெடுத்த என் பிஞ்சுக் குழந்தைக்குப் பெயர்தான் 'அக்கினியாய் வெளியே வா'. இவ் அக்கினியாய் வெளியா வா கவிதைத் தொகுதி மொத்தமாக 57 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலான கவிதைகள் மலையகச் சமூகம் சார்பாக எழுதப்பட்டது. மாற்றம் கொண்ட மலையகத்திற்கான ஆணிவேர்களைக்கூட கவிதை வடிவில் கூறியுள்ளேன். அத்துடன் அடிப்பட்ட மக்களின் அவலங்களுக்கு வரிவடிவம் கொடுத்துள்ளேன். இக்கவிதைத் தொகுதியில் காதல், வர்ணனை என்பவற்றைவிட சமூக அவலங்களுக்கே முதல் இடம் கொடுத்துள்ளேன்.

எனது கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள்தான். இலைமறைக்காயாக இருக்கும் படைப்பாளிகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் உன்னதமான சேவையை செய்து வருகின்றார். பணம் படைத்தவர்கள் எல்லாம் தானுண்டு தன் வேலையுண்டு என்று சமூகப் பணியின் பக்கம் கண் பார்க்காத இந்த இயந்திர உலகில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் ஒரு மகத்தான மனிதர்தான். அவ்வகையில் புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக என் 'அக்கினியாய் வெளியே வா' அகில வாசலுக்குள் நுழைந்தது.

வளர்ந்து வரும் ஒரு இளம் படைப்பாளியை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்ற விடயத்தின் இலக்கணத்தைக் கொண்டவர்களாக மேமன்கவி மற்றும் தென்னிந்திய வளரி இதழரசிரியர் அருணா சுந்தரராசன் ஆகியோர் விளங்குகின்றனர். என் கவி நூல் வெளிவருவதற்கு முன்னின்று உழைத்தவர்களும் இவர்களே. இந்த மூன்று மாமனிதர்களின் உதவியால்தான் என் கன்னிக் கவி நூல் வெளிவந்தது. இம்மூவருக்கும் இவ்விடத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்தும் கவிதை எழுத என்னை ஊக்கப்படுத்திய, ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர்களான யோ. புரட்சி, முல்லைத்தீபன், ராஜ்சுகா, காவியா, ரிம்ஸா முஹம்மத் ஆகியோருக்கும் இவ்விடத்தில் நன்றிகூற கடமைபட்டுள்ளதோடு என் கவிதைகளை தொடர்ந்து பிரசுரித்துவரும் அச்சு ஊடகங்களுக்கும் என்னை ஊக்கப்படுத்தி ஒரு நூலை வெளியிடுமளவுக்கு துணையாக இருந்த முகப் புத்தக நண்பர்களுக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன்.


08. கவிதை தவிர்த்து வேறு எவற்றையெல்லாம் எழுதுகிறீர்கள்?

கவிதைகளைத் தவிர்த்து ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் மலையக சமூகம் சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுகின்றேன். அண்மையில் சிறுகதை எழுதவும் தொடங்கியுள்ளேன்.


09. படைப்புக்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

செய்யுளுக்கு பொருள் என்பதைப்போல படைப்புக்கு விமர்சனம் இன்றியமையாதது ஆகும். விமர்சனம் இல்லையென்றால் படைப்பாளியின் படைக்கும் ஆற்றல் சூனியப் பிரதேசத்திற்குள் சென்றுவிடும். இருப்பினும் சொல்லப்படும் விமர்சனங்கள் படைப்பாளியை அதிகம் புகழ்வதாகவோ அதிகம் இகழ்வதாகவோ இல்லாமல் நடுநிலைமை அடிப்படையில் நோக்கப்பட வேண்டும். ஒரு நூலை அல்லது ஒரு படைப்பினை விமர்சனம் செய்பவன் நடுநிலையில் இருந்து படைப்பினை நோக்க வேண்டியது அவசியம்.

சிலரின் விமர்சனங்கள் படைப்பாளியை கீழ்த்தரமாக சாடுவதாகவும் அமைகின்றது. அவ்வாறான நிலையில் அந்த படைப்பாளி அடுத்த கட்ட இலக்கிய நகர்வினை நோக்கிச் செல்வது சிரமமாக இருக்கும். படைப்புக்களை விமர்சிக்கும் போது படைப்பாளி குறிப்பிட்ட விடயத்தை எவ்வாறு அணுகினான் என்ற அவன் பக்க சார்பு கருத்துக்களையும் விமர்சனத்தின் போது கவனம் எடுக்க வேண்டியதும் அவசியமாகும். சமகாலத்தில் மூத்த படைப்பாளிகள் வளர்ந்துவரும் படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கியங்களே இல்லை என மறைமுகமாக சாடுகின்றார்கள். அவ்வாறு சாடுகின்றவர்கள் சாடுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல் இளைய படைப்பாளிகளை கரம்பற்றி எழுப்பிவிடும் முயற்சிகளை செய்ய வேண்டியதும் அவசியம் என்பது என் கருத்து.


10. உங்களுடைய அடுத்தகட்ட இலக்கிய முயற்சிகள் யாவை?

காத்திரமான இலக்கியப் படைப்புக்களை படைக்க முயற்சி செய்கின்றேன். கவிதையோடு மாத்திரம் நின்றுவிடாமல் சிறுகதை, ஆய்வுக் கட்டுரைகள் என்பவற்றையும் எழுதி நூல் வடிவில் வெளியிட வேண்டும் என எண்ணுகின்றேன். அத்துடன் இலக்கியம் படைப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் சமூக நலன் சார் செயற்பாடுகள், சமூக விழிப்புணர்வு சார் செயற்பாடுகள் என்பவற்றினையும் மேற்கொள்ள வேண்டுமென எண்ணுகிறேன்.


11. பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது பற்றிக் குறிப்பிடுங்கள்? 

நான் அரசறிவியலை விசேட பாடமாக கற்றதால் இலக்கிய உலகிற்கும் எனக்குமான இடைவெளி அதிகமாக காணப்பட்டாலும் அவ்வப்போது பல்கலைக்கழக சஞ்சிகைகளுக்கு ஆக்கங்களை எழுதுவேன். கவியரங்கம், வானொலி நிகழ்ச்சிகளிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பங்குபற்றியிருக்கின்றேன். 2013 ஆம் ஆண்டு கண்டி தமிழ்ச் சங்கத்தில் 'ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு' என்ற தலைப்பில் பாடிய கவியரங்க கவிதை அதிக வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அத்துடன் பல்கலைக்கழக 'இளங்கதிர்' சஞ்சிகைக்கு எழுதிய 'சபிக்கப்பட்ட சனங்கள் நாங்கள்' என்ற கவிதையும் அதிக பாராட்டினை பெற்றுக்கொடுத்தது. இவை மாத்திரமின்றி பல்கலைக்கழக மட்டத்தில் நடக்கும் இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி பல சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறேன். இருப்பினும் பல்கலைக்கழக வாழ்வில் என் இலக்கியப் பயணம் என்பது மிகவும் மந்தமானதொரு வேகத்திலே நகர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


12. நீங்கள் இதுவரை வாசித்த நூல்களில் உங்களைக் கவர்ந்த நூல் எது? ஏன்?

வாசித்ததோடு புத்தகத்தை மூடிவைக்காது மறுபடி வாசிக்க வாசிக்க தூண்டக்கூடிய பல நூல்களை என் மனதில் விருப்பக் கோடிட்டு வைத்துள்ளேன். ஆனால் நான் உயர் தரம் படிக்கும் போது முதல் முதலாக படித்த கவிப்பேரரசின் 'தண்ணீர் தேசம்' நாவல் தான் அடிமனதை வருடிப்போன நாவல். இந்நாவலுக்கு நான் அடிமையாக முதல் காரணம் கவிநயம் கொண்ட கதை நடை தான். அத்தோடு காதல் ஜோடிகளான கலை வண்ணம், தமிழ் போன்றோரின் காதல் லயத்தை வாசகர்கள் லயித்துவிடும் சொற்களை கோர்த்து நூல் மாலை கட்டியுள்ளதோடு பல அறிவியல் கருத்துக்களை கூறி விஞ்ஞானக் காவியமாகவும் தண்ணீர் தேசத்தை வடிவமைத்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் வாசித்த இந்நாவல் இன்று வரை கடலுக்குள் தத்தளித்த அந்த காதல் ஜோடிகளின் கதையை ஓயாத அலையாக இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.


13. இலக்கியப் பணிகளினூடாக எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?

இலக்கியப் பயணத்தினூடாக ஒரு சமுதாய விடியலை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன். குறிப்பாக மலையக சமுதாயத்தின் எதிர்காலத்தை இலக்கியம் படைப்பதன் மூலமாக மாற்றியமைக்க முடியும் என்பது என் கணிப்பு. குறிப்பாக மாணவ பருவத்திலிருந்து மாற்றம் கொண்ட மலையகத்திற்கான விதையினை விதைக்க முடியும். ஏட்டில் இலக்கியங்களை படைப்பதோhடு மாத்திரமின்றி நடைமுறை உலகிற்கு அதனை எடுத்துக்கூறி சமுதாய விடியலை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன். எதிர்கால மாற்றங்களை நிகழ்காலத்தில் விதைக்க இலக்கியம் எனும் ஊடகத்தையும் பயன்படுத்த முடியும் என்பது எனது கருத்து.


14. உங்களைப் போன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு என்ன கூறப் போகிறீர்கள்?

வளர்ந்து வரும் படைப்பாளிகள் முதலில் தன்னிடம் எத்துறையில் திறமை காணப்படுகின்றது என்பதை அடையாளம் காண வேண்டும். அவ்வாறு அடையாளம் கண்ட பிறகு அதற்கான வழிவகைகளை சிறப்பாக அமைத்து இலட்சிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். வறுமை உட்பட பிற காரணங்களைக் கூறி இலட்சியப் பாதையை காய் நகர்த்தல் தவறு. என்னைப் பொறுத்தவரை வறுமைதான் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற சிறந்த களம். அத்துடன் தாழ்வு மனப்பாங்கை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கை விதையினை விதைக்க வேண்டும். எம் எண்ணங்களுக்கு சக்தி உண்டு அதனால் உயர்ந்த, ஆக்கப்பூர்வமான எண்ணங்களை மனதில் புகுத்த வேண்டும்.

'முடியாதென்ற மடைமையை முடிச்சிட்டுக் கொளுத்துவோம்
முடியுமென்ற நம்பிக்கையை நெஞ்சினில் விதைப்போம்
எழுவோம் எழுதுவோம் பிறரை எழுப்புவோம்
வளர்வோம் வாழ்வோம் பிறரை வளர்ப்போம்'

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

43. இன்ஷிராஹ் இக்பால் உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.03.05

இன்ஷிராஹ் இக்பால் உடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



1. உங்கள் பிறப்பிடம், குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடுங்கள்?

சப்ரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத்தில் மலைநாட்டின் நுழைவாயில் என்றழைக்கப்படும் எழில் மிகு மாவனல்லை நகரில்தான் நான் பிறந்தேன். நான்; பிறந்தது ஒரு இலக்கியச் சூழலில்தான் என்று கூற வேண்டும். எனது தந்தை மௌலவி. அலஹாஜ் ஏ.சீ.எம். இக்பாhல் மாவனல்லையைச் சேர்ந்தவர். அவர் ஒரு இலக்கிய ஆர்வலர். எனது தாயார் தர்காநகரைச் சேர்ந்த சுலைமா சமி இக்பால். இவர் இது வரை ஐந்து இலக்கிய நூல்களைத் தந்த சிறுகதை, நாவலாசிரியர். இவர்களின் சிரேஷ்ட புதல்வியான எனக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள்.


2. உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வந்தது?

சிறு வயதிலேயே தினகரன் வாரமஞ்சரியில் சிறுவர் பகுதியில் எனது சிறு ஆக்கங்கள் வந்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி எனது ஷமலையை அசைத்த மலர்| என்ற சிறுகதை நவமணியில் பிரசுரமானது. அப்போது எனக்குப் பதினான்கு வயது. அந்தச் சிறுகதை 2004 ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் போட்டியில் முதலிடம் பெற்ற கதையாகும்.


3. இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை நான் 02 நூல்களை வெளியிட்டிருக்கிறேன். எனது முதலாவது நூலான 'பூ முகத்தில் புன்னகை' என்னும் சிறுகதைத் தொகுதி 2009 இல் வெளியானது. அப்போது நான் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்றுக் கொண்டிருந்தேன். அந்த நூலில் அதுவரை தேசிய, மாகாண ரீதியில் பரிசு பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருந்தேன். எனது இரண்டாவது படைப்பான 'நிழலைத் தேடி' சமூக நாவல் 2014 இல் எனது பல்கலைக்கழகக் காலத்தில் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளியானது. இந்நாவல் உயர் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட கவிதா டெலன்ட் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடமும் விருதும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


4. புதிதாக கவிதை எழுத வருபவர்களுக்கு மரபுக்கவிதை பற்றிய அறிவு அவசியம் என்று நினைக்கின்றீர்களா?

மரபுக் கவிதை எழுதுவதற்கு மொழிப் பயிற்சி அவசியம். ஏனென்றால் அது பொதுவாக ஒரு இலக்கணக் கட்டமைப்புக்குள் அமைந்தது. மொழியில் தனக்கிருக்கும் தேர்ச்சி, மொழிப்புலமை, மொழியின் அழகியல், ஓசை நயம் என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தே மரபுக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. ஆனால் நவீன கவிதை என்னும் போது அது ஒரு கட்டமைப்புக்குள் அடங்காதது. கவிதை என்பது ஒரு தூய கலை. அதனை தர்க்க ரீதியாக அணுக முடியாது. நவீன கவிதைகளின் பேசுபொருள் பொதுவாக நவீன வாழ்வியல் ஏற்படுத்திய சிக்கல்கள், பிரச்சினைகள், தாக்கங்கள் என்பவை சார்ந்த உணர்வின் வெளிப்பாடுகளாகவே நோக்கப்படுகின்றன. எனவே புதிதாக கவிதை எழுத வருபவர்கள் மரபுக் கவிதைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றே நான் கருதுகின்றேன்.


5. இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள்? சிறுகதைகள் பற்றிய உங்கள் எண்ணப்பாடு எவ்வாறு உள்ளது?

நான் இதுவரை ஏறத்தாழ 30 சிறுகதைகள் எழுதியிருப்பேன். சிறுவயதிலிருந்தே எனக்கு கதை கேட்பதிலும் கதை சொல்வதிலும் நிறைய ஆர்வம் இருந்தது. எனது தாயார் ஒரு சிறுகதை எழுத்தாளர் என்பதால் என் கதைப் பசிக்கு வீட்டிலேயே நல்ல தீனி இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏராளமான சிறுகதை நூல்களை வாசித்திருக்கிறேன். சிறுகதை பற்றிக் கூறப் போனால் அது இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்திற்கு வழங்கிய கொடை என்றுதான் கூற வேண்டும். சிறுகதைகளுக்கு கதைக்கரு என்பது முக்கியம். இந்தக் கதைக்கரு எங்கேயிருந்து உருவாகின்றது என்று நோக்கினால் அது மனித வாழ்விலிருந்தே உருவாகின்றது. மனிதர்களின் அனுபவமும், எண்ணங்களும் சுதந்திரமாக வெளிப்படும் போது தோன்றும் படைப்பிலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என்பவற்றுள் மனித வாழ்க்கைக்கு மிக நெருங்கிய வடிவமாக நான் சிறுகதையைக் கருதுவேன். சிறுகதைகள் எதிலிருந்தும் தோன்றலாம். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், சம்பவங்கள், அனுபவங்கள், கற்பனைகள் சிறுகதைகளாக மலரலாம். ஒரு சிறுகதையானது முடிவடையும் போது அதனைப் பற்றிய சிந்தனைகள் முடிந்து விடுவதில்லை. கதை முடிந்த பிறகும் அதன் சிந்தனைகள் நீண்டு கொண்டு சென்றால் அதை நான் ஒரு வெற்றிகரமான சிறுகதையாகக் கருதுவேன்.


06. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

எழுத்தாளர்களைவிட எழுத்துக்களை அதிகமாக வாசிப்பவள் நான். எனது வாசிப்பில் சிறுகதை, நாவல் என்பவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருந்தேன். நான் முதன் முதலில் வாசித்த படைப்புக்கள் எனது தாயாரின் படைப்புக்கள். தாயின் வழியிலிருந்தே எனக்குள் இலக்கிய ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக எனக்கு அறிமுகமான படைப்புக்கள் தென்னிந்திய எழுத்தாளர் ஹிமானா செய்யத் அவர்களுடையது. அவரின் சிறுகதை நாவல்களைப் படித்த பின்புதான் எனக்குள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. சாதாரண ஒரு விடயத்தை சுவாரஷ்யமாக சொல்லும் பாணி அவருடையது. அதன் பின்பு எனது வாசிப்புத் தளம் விரிந்து கொண்டே சென்றது. என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் என்று சொல்வதானால் ஒரு பெரிய பட்டியல் இருக்கின்றது. எல்லோரையும் இங்கே குறிப்பிட முடியாது என்பதால் நான் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை.


07. ஒப்பீட்டளவில் அதிக நேரகாலத்தை எடுத்து நாவல் எழுதுவது சிரமமாகத் தோன்றவில்லையா?

நாவல் எழுதுவதற்கு ஒப்பீட்டளவில் அதிக நேரகாலம் எடுத்தாலும் உண்மையில் அது எனக்குச் சிரமமாகத் தோன்றவில்லை. இதுவரை 02 நாவல்கள் எழுதியிருக்கின்றேன். (ஒன்று இன்னும் வெளியிடப்படவில்லை) அந்த அனுபவத்தில் சொல்கிறேன். நாவல் எழுதும் போது அதை நான் ஒரு எழுத்துப் பணியாகவே எண்ணவில்லை. அது என் வாழ்வுடன் ஐக்கியமாகி விடுகின்றது. அந்த நாவலைப் படைக்கும் காலகட்டத்தில் நான் அளவளாவுவது, பழகுவது, பேசுவது எல்லாம் அதில் வரும் கதாபாத்திரங்களுடனேயே.

ஒரு நாவல் வாசகனின் மனதில் பல்வேறுபட்ட உணர்ச்சிப் பேரலைகளை உண்டாக்கி விடும். ஒரு இடத்தில் மெல்லிய புன்னகையையும், இன்னொரு இடத்தில் மனதிற்குள் பேரிடரின் தாக்கமொன்றையும் உருவாக்கிவிடும். அதே போன்றதே நாவல் எழுதும் என் மனநிலையும். எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நாவலுடன் நானும் நகர்ந்து கொண்டிருப்பேன். அதன் பாத்திரங்களாகவும், பாத்திரங்களுடன் வாழ்ந்தும் விடுவேன். அதனால் எனக்கு நாவல் எழுதுவதென்பது மனதுக்கு நேசமான ஒரு விடயமாகவே இருக்கின்றது. சிரமத்தைத் தரவில்லை. எனது ஆசையெல்லாம் காலத்தின் நகர்வுடன் பல ஆண்டுகள் எடுத்தேனும் ஒரு நல்ல நாவலைப்படைக்க வேண்டும் என்பதே.


08. ஈழத்து இலக்கியப் போக்கு பற்றி என்ன சொல்வீர்கள்?

இன்று இலங்கையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நிறைய இளம் படைப்பாளிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான விடயமே. ஆனால் தம்மை ஒரு தரமான படைப்பாளியாக அடையாளப்படுத்துபவர்கள் இலங்கையின் இலக்கியப் போக்கில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றார்கள் என்பதே முக்கியமானது. இவர்களின் படைப்புக்கள் பெரும்பாலும் சமகாலப் பிரச்சினைகள் அல்லது புனையப்பட்ட கற்பனை வடிவங்களாக பல்வேறு தரநிலைகளில் வெளிப்படுகின்றது. இவ்வாறு ஒரே பாணியிலான படைப்புக்களை வெளியிடும் ஈழத்து இலக்கிய உலகம் அதன் பாரம்பரியக் கட்டுக்களை உடைத்துக் கொண்டு புதிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புக்களைத் தர வேண்டும்.


09. புதிதாக எழுத ஆரம்பிப்பவர்கள் பொதுவாக கவிதைத் துறையிலேயே ஈடுபாடு காட்டுவார்கள். நீங்கள் விதிவிலக்காக சிறுகதை, நாவல் துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்கள். இதற்கான விஷேட காரணங்கள் ஏதும் உண்டா?

நான் ஏற்கனவே கூறிய காரணம்தான். சிறுவயதிலிருந்தே கதைகளின் மீது நான் கொண்ட காதல்தான் காரணம். என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் எனக்குள் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குகின்றார்கள். ஒரே பாத்திரம் பல வகையான கதைகளை உருவாக்கும். நிஜ வாழ்க்கையைவிட கற்பனையில் வாழும் போது மகிழ்ந்து போகிறேன் நான். கற்பனையில் எனக்குப் பிடித்த பாத்திரமாக பல கதைகளில் உலாவுவேன் நான். இதுவே காரணம்.


10. வாசகர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமானது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து யாது?

இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. உண்மையிலேயே தனது மொழிப் புலமையையும், ஆற்றலையும் வெளிக்காட்ட மற்றவர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவதே வித்துவத்தனமானது என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்கள். இரண்டாவது படைப்பாளியின் படைப்பிற்கும் வாசகனின் புரிந்துணர்வுக்கும் இடையிலான முரண்பாடுகள்.

முதலாவது வகையான படைப்புக்கள் உண்மையில் இலக்கியத்திற்கு எந்த விதமான பிரயோசனமும் அற்றவை. ஏனென்றால் இந்த வகைப் படைப்புக்கள் இலக்கியத்தின் நோக்கத்தைத் திருப்தி செய்வதில்லை. இரண்டாவது வகையை எடுத்தால், படைப்பாளி என்பவன் சுதந்திரமானவன். அவனின் சிந்தனைகளைச் சிறைப்படுத்த முடியாது. குறிப்பாக கவிதையை எடுத்துக் கொண்டால் அது கட்டுரை, சிறுகதை, நாவல் போல நேரடியான இலக்கிய வகையல்ல. கவிதையில் உருவகங்கள், உவமைகள் முக்கியமானவை. அவை கவிஞனின் சூழலைப் பொறுத்து வேறுபடும். வாசகனுக்கு வாசிப்பு போதாத போது, புரிதலில் குறைபாடுகள் இருக்கும் போது அப்படைப்பு ஒரு விளங்காத தன்மையை ஏற்படுத்தும் இது படைப்பாளியின் பிழையல்ல.


11. தொண்ணூறுகளுக்குப் பின் தோன்றிய பெண் எழுத்தாளர்கள் குறிப்பாக நாவல் எழுதும் முயற்சிகளில் ஈடுபடுவது மிக மிக அரிது. இதற்கு என்ன காரணம் கூறுவீர்கள்?

முக்கியமாகக் கூறப்போனால் நாவல் எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவை. ஒரு சீரான நீரோட்டம் போல நகர வேண்டும் என்றால் அதைப் படைக்க நேரமெடுக்கும். இன்றைய அவசரச் சூழலின் வேலைப் பளுக்கள் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்ததாக இன்றைய இலத்திரனியல் சூழலில் நிறைய வாசகர்கள் காட்சி இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு விட்டார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.


12. பெண்ணியம் சார்ந்த உங்கள் கொள்கை என்னவென்று கூறுங்கள்?

இன்று உலகில் மிகவும் தவறாக விளங்கப்பட்ட வார்த்தை பெண்ணியம். என்னைப் பொருத்தவரையில் எல்லா விடயங்களிலும் பெண்கள் சம உரிமை கோருவது பொருத்தமில்லை. ஏனென்றால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உடலியல், உளவியல் ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் சில விடயங்களில் சம உரிமை வேண்டும் என்றே கருதுவேன்.

பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் தரப்பட வேண்டும். ஒரு தவறு செய்யும் போது பெண்ணின் தவறு பாரதூரமானதாகவும் ஆணின் அதே தவறு சாதாரணமானதாகவும் கருதப்படும் நிலை மாற வேண்டும். யார் செய்தாலும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். பெண்ணானவள் திருமணத்திற்குப் பின்பு எதையும் சாதிக்க முடியாது. ஆணானவன் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்ற சமூகத்தின் கட்டுக்கோப்புக்கள் உடைத்தெறியப்பட வேண்டும்.


13. உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலையில் கற்கும் போதே நான் நிறைய தமிழ்த்தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகள், மீலாத்தினப் போட்டிகள், சாகித்திய விழாப் போட்டிகள், இதர போட்டிகளில் கலந்து கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை, விவாதம் போன்ற பிரிவுகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்வதானால் எட்டாந் தரத்தில் கல்வி பயின்ற போது பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நடாத்திய தேசிய ரீதியான சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடமும், 2006 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகம் நடாத்திய உலக சிறுவர் தின சிறுகதைப் போட்டியில் முதலாமிடமும், 2008 இல் சாகித்திய விழாப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடமும், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய தேசிய மீலாத் போட்டிகளில் முதலாமிடமும் பெற்றேன். அதுமட்டுமில்லாமல் உயர் கல்வி அமைச்சு 2012 ஆம் ஆண்டு நடாத்திய கவிதா டெலன்ட் போட்டியில் எனது ஷநிழலைத் தேடி| நாவல் முதலிடமும் விருதும் பெற்றது எனக்கு மறக்க முடியாத நிகழ்வு. 2014 இல் அதே நிகழ்வில் எனது சிறுகதைத் தொகுப்புக்கு ஆறுதல் பரிசும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


14. இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

பலரும் சொல்வது போல ஒரு படைப்பாளியின் சிந்தனை பரந்ததாக இருக்க வேண்டும். பேசப்படாத நிறைய விடயங்கள் பேசப்பட வேண்டும். எழுதப்பட வேண்டும். வாசிப்புத்தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும். 'நிறைய வாசியுங்கள். குறைவாக எழுதுங்கள்'!!!


நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்

42. வஸீலா ஸாஹிர் உடனான நேர்காணல்

வஸீலா ஸாஹிர் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் பிறந்தது மாத்தளை, வாழ்ந்தது மினுவாங்கொடை. இப்போது வசிப்பதோ நீர்கொழும்பு. அழகின் அரங்கம் என் மகள் அஸ்ரிகா, அன்பின் அவதாரங்கள் ஆசிக், ஆதில், அசீம். இறைவன் எனக்களித்த பெரும் செல்வங்கள் இவர்கள்.

உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் படித்தது கல்லொளுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தான். எனது பாடசாலைக் காலத்திலேயே நான் வாசிப்பில் தீவிர ஆர்வம் காட்டி வந்தேன். பல கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அந்தப் பாடசாலை நாட்களிலேயே நான் பல நூல்களை வாசித்தேன். இந்தப் பாடசாலைக் காலம் எனக்கு ஒரு பொற்காலமாகும்.


நீங்கள் எப்போது, எந்த வயதில் எழுத்துத் துறைக்குள் நுழைந்தீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக ஆரம்பித்தது?


ஒவ்வொரு நாட்களும் நான் காத்திருந்தேன். என்னில் என் எழுத்துகள் எந்த வடிவத்தை செதுக்கப் போகின்றது என்று. என் எதிர்பார்ப்புகளின் கனவுகள் உறங்கிக் கொண்டுதான் இருந்தது. இப்படியாக காலம் நகர்கையில் முதன் முதலாக 1986 இல் எழுத்துத் துறையில் கால் பதித்தேன். என் எழுத்துக்கள் சிந்தாமணி வார ஏட்டில், 'சங்கீதா' என்ற புனைப் பெயரில் களம் கண்டன. என் கன்னிக் கதையான அந்த நிலவுக்குள் சில ரணங்கள், சங்கீதாவைத் தேட வைத்தது. அதன் பின்னர் நான் வஸீலா அபூபக்கர் என்று பயணித்தேன். தொடர்ந்து இன்றுவரை வஸீலா ஸாஹிர் ஆக, வலம் வருகின்றேன்.


நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதத் தூண்டப்பட்ட சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் வௌ;வேறு மொழிகளைப் பேசினாலும் அவர்களுடைய இதயம் ஒரே மொழியில் தான் பேசுகிறது. அது கண்ணீராலும் புன்னகையாலும் ஆன மொழி. எல்லோருக்கும் பொது மொழி. திணிக்கப்படும் மொழி அல்ல. சுவாசத்தை போல் காதலைப் போல் சுயமாகச் சுரக்கும் மொழி. இந்தக் கண்ணீர் காயங்களின் இரத்தம். இந்த புன்னகை நம் பொது வெற்றிகளின் திருவிழாத் தீபம். இந்த தீபங்கள் என்னுள் தீயாக காயங்கள் பலவற்றை ஏற்படுத்தியது. நான் தூண்டப்பட்டேன். இருட்டில் ஒற்றை விண்மீன் போல் எத்தனை உள்ளங்கள் சோக விஷக் கண்களால் சுட்டெரிக்கப்படுகிறார்கள் என்பதனை நன்கு உணர்ந்தேன். அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே என் ஊக்கங்கள் ஆக்கங்களாக, கொண்டு வரப்பட்டது.


உங்களது சிறுகதைகளின் தனித்துவம் பற்றிக் குறிப்பிட முடியுமா?


தனித்துவம் என்று சொல்ல முடியாது. உணர்வுச் சுரத்தில் அவை கனமான கதைகள். வெளி உலகை பார்க்கும் கண்களை தேட வைக்கிறது. ஒரு விரத வேதனையை, சாதனை செய்யச் தூண்டுகிறது.

இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

01. நிலவுக்கு சில ரணங்கள் (2016 ஜுன்)
02. மொழியின் மரணம் (2016 டிசம்பர்)

ஆகிய 02 சிறுகதைத் தொகுதிகளையே நான் இதுவரை வெளியிட்டுள்ளேன். மொழியின் மரணம் என்ற சிறுகதை நூல் சென்னை பூவரசி வெளியீட்டகத்தினால் வெளிவந்தது குறிப்படத்தக்கது.


உங்கள் ''நிலவுக்குள் சில ரணங்கள்'' என்ற சிறுகதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? இந்த நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

விண் மேகங்கள் மழை பொழியத்தான். என் கண் மேகங்கள், பொழிந்த முதல் மழை நிலவுக்குள் சில ரணங்கள். மொழி சமூகம் வளர்த்த நந்தவனம். ஒவ்வொரு சொல்லும் ஒரு மலர் - நிலவுதான். கவிதையை தூண்டும். ஆனால் அந்த நிலவுக்குள்ளே ரணங்கள் என்றால் - நிலவு தான் கவிதையை புனைய வேண்டும். தன்னையும் தான் மறந்து தாழ்போட்டுக் கொண்டு உறங்கும் அபலைகள். இன்பங்கள் இன்றி அன்றிலைப் போல் துணையை பிரிந்து அறுந்த நூல் போல் அவதிப்படும். அவலங்கள் பனி சுமந்து சோகத்தில் தலையசைக்கும் தாரகைகளின் தாபங்கள். பல்வேறு வேடங்களில், தங்களை ஒப்பனை செய்து வாழப் பழகிக் கொள்ளும். இதயங்களின் ஒப்பனையை நீக்கி, உண்மை நிலையை உணர்த்தும் சக்தி வலிமை என் எழுத்துக்களில் உண்டு.


உங்களது இரண்டாவது சிறுகதை நூலான ''மொழியின் மரணம்'' பற்றி என்ன சொல்வீர்கள்? ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்த நூலினூடாக நீங்கள் இலக்கிய உலகுக்கு குறிப்பாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

தண்ணீர் இரும்பை விட கனமானது. ஆனால் இரகசியமோ தண்ணீரை விடக் கனமானது. அது நெஞ்சுகுள்ளேயே இருக்கும் வரை நிம்மதி கிட்டாது. என் கதாபாத்திரத்தின் மனதின் சுமைகள், மரணமானது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

எனது மொழியின் மரணம் சிறுகதைத் தொகுதி கடந்த 2016.12.03 இந்தியாவில் பூவரசி பதிப்பகத்தினால் கவிஞர் சல்மா அவர்களினால் வெளியிடப்பட்டது. முதல் பிரதி பேரா. கோவை மு.சரளா பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் அமிர்தம் சூர்யா வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் கவிதாயினி ஈழவாணி அவர்கள் இந்த நிகழ்வை நடத்த எனக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

இந்த கதையை நாவலாக விரித்து எழுத வேண்டும் என்று இருக்கையில் இது சிறுகதையாக முடிந்தது. கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அவசரம் போல என் காலங்களும் என்னை அவசரப்படுத்தியது. அதன்பின் இந்தக் கதை என் தோழி எழுத்தாளர் நஸீமா மூலம் எழுத்தாளர் ஜின்னா சார் மூலம் படைப்புக் குழு அமீரக வாசகர் வட்டத்தில் மகளிர் தின சிறப்பு தேர்வாக என்னுடைய மொழியின் மரணம் சிறுகதை தெரிவு செய்யப்பட்டது. பின் அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த நூலுக்கான விருதில் என்னுடைய சிறுகதை நூல் மொழியின் மரணம் தெரிவு செய்யப்பட்டது. 2017.03.18 ஆம் திகதி சென்னை மியூசிக் அகடமியில் இடம்பெற்ற விருது விழாவில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என். வள்ளி நாயகம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக வேந்தர் கெல்வின் குமார் சிறப்புரை ஆற்றினார். சென்னை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கினார். இலக்கிய உலகம் அது ஒரு பெரும் சமுத்திரம். நான் ஒரு குட்டி மீன். சமுத்திரம் குட்டி மீனான என்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவா.


உங்கள் சிறுகதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?


நிச்சயமாக. துள்ளித் திரியும் பருவத்தில் துவண்டு போகும் துயரத்தில் துணையின்றி தூக்கமின்றி கண்ணீரை அருவியாக பொழிந்து கலங்கிய நெஞ்சோடும், பிசைந்த கைகளோடு திக்குத் தெரியா செல்லா காசுகளாக சொல்லால் கொல்லப்பட்டு துரத்தப்படும் அபலையான உங்களை நான் வடிக்கின்றேன். அவர்களின் துடிப்புக்களை கனவுகள் இமைபோல் வசிக்கும் கல்யாண கனவுகள் கைப்பிடி அளவு தானியம் விதைத்தால் தாரகை அளவு கதிர்கள் விளையாதோ? என்று பல தாரகைகளின் கனவுகள் தவிடுபொடியாக்கிய தசாப்தங்களை தட்டி எழுப்பும் என் எழுத்து. ஸ
எல்லோருடைய கண்ணீரும் நம் கண்ணீரில் இருக்கிறது. எல்லோருடைய புன்னகையும் நம் புன்னகையில் இருக்கிறது. இதை உணர்ந்து சமூகத்தில் சுமூகமாக எழுதுவதால் பல மாற்றங்களை நான் காண்கின்றேன். ஒரு வேதனை என்னுள் இருந்தது. அமைதியாக அதை உணர்கின்றேன். வெறும் வானத்தில் வானவில்லின் விலாசம் மேகத்தில் இல்லை. அதன் கண்ணீர்ச் சுமையில் தான் இருக்கிறது. நான் விலாசம் கொடுக்கின்றேன். சுமைகளை சுகமாகுகின்றேன். இருட்டில் அச்சத்திற்கு ஆறுதலாகவும் தனிமைக்குத் துணையாகவும் என் எழுத்துக்கள் மாற்றங்களை தருகின்றன.


சிறுகதைகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும்? ஒரு சிறந்த சிறுகதை எவற்றைப் பிரதிபலிக்க வேண்டும்?

ஒவ்வொரு சிறுகதைகளுக்கும் தனித்தனி முகவரி வேண்டும். நான் எதைக் கூற வருகின்றேன் என்று என்னிடம் கதை கேட்பவருக்கு நன்கு புரிய வேண்டும். சமூகத்தைப் பொருத்தவரை பெண் என்பவள் ஓர் ஏழை, நடிகை. வாழ்க்கை நாடகத்தில் அவளுக்கு எந்தப் பாத்திரம் தரப்படுகிறதோ அதை அவள் முனுமுனுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பாத்திரத்தை அவள் வெறுமனே நடிக்கக் கூடாது. அவள் அந்தப் பாத்திரமாகவே மாற வேண்டும். கடைசிவரை கதை, வசனம், இயக்குதல் ஒப்பனை எல்லாமே சமூகம் தான். அவருடைய சொந்த விருப்பு வெறுப்புக்கு அதில் இடமில்லை. சமூகத்தின் கவலை எல்லாம் நாடகம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதுதான். பொதுவாக என்னுடைய கதைகள் பெண்கள் படும் அவலங்களையும் அவமானங்களையும் தான் பிரதிபலிக்கின்றது. நான் கதை கூறும் பாங்கு அப்படித்தான். இருப்பினும் கதைகள் யாவும் யதார்த்தங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதே முக்கியமான விடயமாகும்.


ஆரம்ப காலத்தில் கவிதைகளை எழுதிய நீங்கள் முதலில் சிறுகதை நூலை வெளியிடக் காரணம் என்ன?

அவனியில் அன்னையின் வயிற்றில் இருந்து அவதரிக்கும் முன்னே 4 மாத கருவாக இருந்த பொழுதே, என் அன்புத் தந்தை அபூபக்கர் காலமானார். தந்தையின் கரம் பற்றி நடைபோட நாட்டமில்லை. இருப்பினும் அந்த உன்னதமான உயர்ந்த மனிதனின் மகள் நான் என்று சொல்லிக்கொள்ள பெருமைபடுகின்றேன். காரணம் என் தந்தையும் ஒரு எழுத்தாளர். அந்த விருட்சத்தின் சிறு துளியே இந்த வஸீலா அபூபக்கர். கவிஞர், எழுத்தாளர் இந்தப் பெருமை என்னைப் பெற்றவர்கள் தந்தது. அன்பு உம்மா செகீனா, வாப்பா அபூபக்கர். காரணமும் அதுதான் கவிதைகள் என் மூச்சு என்றால் கதைகள் என் பேச்சு.


ஆரம்பத்தில் வானொலிக்கு பல்வேறு ஆக்கங்களை எழுதிய நீங்கள் பத்திரிகைத் துறையில் உங்களது ஆக்கங்களைக் களப்படுத்தி வந்ததற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா?

என்னுடைய கவிதைகளை கவர வைத்த, காலஞ்சென்ற இராசையா ஆசிரியர் மற்றும் பலகத்துறை ஜெலீல் ஆசிரியர் இவர்களின் ஊடே ஊடுருவிய கவிதைகள் பிறர் மத்தியில் பாராட்டப்பட்டது. ஷஷஉன்னால் முடியும்' என்ற வாசகத்தின் வரப்பிரசாதமாக என் தமிழ்ப் பாட ஆசிரியை ஜெஸ்மினா கலீல் (புத்தளம்) என்னை கதை எழுத ஊக்குவித்தார். எழுதிய கதைகளை பிற மாணவர்களுக்கு வாசித்துக் காட்டி என்னை உயரப் பறக்கவிட்டார். இன்னும் என் நெஞ்சில் இவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பது உண்மை என் முயற்சியின் பயிற்சியாளர்கள் இவர்கள். இவ்வாறு எழுதிய படைப்புக்களை பத்திரிகையிலும் கலப்படுத்துவது காலத்தின் தேவையாகிவிட்டது.


இலக்கிய வடிவங்களில் கவிதைக்கும் சிறுகதைக்கும் இடையில் எந்த மாதிரியான வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

இறைவனின் அருட்கொடைகளில் எழுத்தும் ஒரு கொடை வரம் தான். கவிஞன், எழுத்தாளன், படைப்பாளிகள் ஒரு அபூர்வ சக்திகள் புதிய தரிசனங்களை தருகிறது. கவிதை வாழ்க்கையின் அகல நீளங்களை அளந்து சொல்கிறது, கதைகள். கவிதைகள் நம்மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்பும் கதைகள் உலகை பார்க்கும் கண்களாய் கதை சொல்லும். இரண்டும் இரண்டு வகையானது.


இலக்கிய இரசனையுள்ளவர்கள் நூல்களை வெளியிடுவது வழமை. உங்களது நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் யார்?

என்னுடைய எழுத்துக்களின் தந்தை, மூத்த எழுத்தாளரும் இருதுறை (சிறுகதை, கவிதை) விற்பனரும் எனது மதிப்புக்குரிய ஆசான் கலாபூஷணம் மூ. பஷீர், லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்கள் உபதலைவர் எம்.ஏ.எம். நிலாம், பிரதம ஆசிரியர் நவமணி தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அல். என்.எம். அமீன், மனித நேயன் இர்ஷாத், ஏ.காதர், கிண்ணியா அமீர் அலி, காவ்யாபிமானி கலைவாதி கலீல், சாய்ந்தமருது எம்.எஸ்.எம். ஷாகிர், மதனி உவைஸ், செயற்திட்ட உத்தியோகஸ்தர் ஹிஷாம் சுஹைல். என்னுடைய அருமை மகள் அஸ்ரிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம். எனக்கு முதல் எழுத தொடங்கியவர் என் சகோதரி ஜெமீலா அபூபக்கர். அவள் எழுதுவதைப் பார்த்து எழுதியவள் நான் இன்று என்னை பார்த்து பெருமைப்படுகின்றாள் என் சகோதரி ஜெமீலா.


பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய நீங்கள் மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியைத் தூண்ட என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

என் ஆசிரியர் வட்டத்துக்குள் பல வண்ணங்கள் இலக்கிய தாகத்துடன் என்னை வட்டமிட்டது உண்மை. அவர்களுக்கு அதிகளவு வாசிப்பை பழக்கியதுடன் நல்ல பல நூல்களை வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தினேன். மாணவிகளில் ஒரு சிலர் கதை, கவிதைப் போட்டிகளில் பங்குபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தேன். அதன் வெற்றிகளைக் கொண்டாட என்று அவர்களுக்கு மேடை அமைத்து பரிசுகளையும் பாராட்டுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த மாணவிகள் இன்றும் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் ஆக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரித்து அவர்களை உற்சாகபடுத்தினேன். பல சிறுகதைகள் எழுதி அதை புத்தகமாக வெளியிட அந்த உள்ளங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


பெண் படைப்பாளிகளின் வருகைபற்றி என்ன சொல்வீர்கள்?

இறைவன் தனது படைப்புகளைப் பற்றி கூறும் பொழுது தான் சகல படைப்புகளையும் சோடி சோடியாக படைத்துள்ளதாக இறைவன் கூறுகின்றான். இவ்வுலகை கட்டியாழும் படைப்பினங்களின் மனிதனே முதலிடம் பெறுகின்றான். அதே தோரணையில் மனிதனும் ஆண், பெண் எனும் சோடிகளாக படைக்கப்பட்டுள்ளான். மனிதன் இப்பூவுலகில் வியாபித்து வாழ்வதுடன் தனது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றான். இதில் புதுப்புது விஞ்ஞான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அறிவு, விஞ்ஞானம், களஞ்சியம், விண்ணியல், மருத்துவம், கலை கலாசாரம், மொழி ஊடகம், தொலை தொடர்பாடல் போன்ற அனைத்தும் நாளுக்கு நாள் முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைந்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனி போல இவ் அபிவிருத்திகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் ஊடகமானது சமூக மாற்றத்திற்கும் சமூக அபிவிருத்திக்கும் இதன் பங்குதாரிகளாக ஆண், பெண் இரு பாலருக்கும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஊடகம் எனும் பொழுது. சமூக ஊடகங்களே முதல் இடம் வகிக்கின்றது. சமூக ஊடகம் எனும் பொழுது. ஊடகங்களை மாறுபட்டதாகவும் இலகுவாக கையாளக்ககூடியதாகவும் சகலரையும் சென்றடைய கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை பெண் படைப்பாளிகள் சகல துறைகளிலும் ஈடுபடுவதற்கு பங்களிப்பை செய்வதற்கும் உறுதுணையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. முன்னைய காலங்களில் போன்றல்லாது தற்காலத்தில் அதிகமான பெண் படைப்பாளிகளும் கலைஞர்களும் பெண் ஊடகவியலாளர்களும் ஊடகம் எனும் களத்தில் அதிக ஈடுபாடையும் பங்களிப்புகளையும் செய்து வருகின்றார்கள். இந்நிலைமையானது மிகவும் வரவேற்கத்தக்கதாக இன்றைய காலகட்டங்களில் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது. பெண்கள் தமது சேவையை இப்பணிக்கு மிகவும் நிதானமாகவும் சூட்சுமமாக அவதானத்துடனும் நுட்பத்துடனும் பங்காற்ற வாய்ப்பு பெற்றுள்ளமை இதற்கான காரணங்களாகக் கூற முடியும். எனவே இன்றைய நவீன காலத்தில் இவ்வாறான சாதகமான சூழ்நிலைகளில்  பெண்கள் சிரமமின்றி இலக்கியம் படைக்க முடிகின்றது. இது வரவேற்கத்தக்கதாக அமைகிறது.


பொதுவாக கலைஞர்கள், பிரபலமானவர்கள் மக்கள் மத்தியில் பேசப்படுபவர்கள். ஆனால் அவர்களது நிஜ வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் சோகம் நிறைந்திருக்கும். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

எல்லாக் கலைஞர்களும் தங்களுடைய அனுபவங்களின் ஊடாக தங்களுடைய வலியைக் கொண்டு படைப்புகளை உருவாக்குபவர்கள். தங்களுடைய அனுபவங்களின் ஊடாக மக்களுக்கு புதிய படிப்பினையும் புதிய பாதையையும் உருவாக்குபவர்கள் இவர்கள். கலைஞர்கள் அடிப்படையில் மென் உணர்வு கொண்டவர்கள். அவ் மென் உணர்வு என்பது கதை, கவிதை, கட்டுரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்கும். அவ் மென் உணர்வு வளமானதாக இருக்கும். அவ் மென் உணர்வு என்பது தியாகம், துரோகம், வன்மம் இவைகளை விட்டுக்கொடுத்தல் மூலம் கலைஞர்கள் உருவாகிறார்கள்.

அடுத்து கலை உணர்வு மிக்கவர்கள் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதாந்த வருமானம் இருப்பதில்லை. அதனால்தான் 50 வீதம் சந்தோசம் 50 வீதம் சோகமாக இருக்கிறது. இன்னும் சில மேன்மை குணம் படைத்தவர்கள், சால்ஸ் இஸ்டைல், பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். பண்ணைக்கு சொந்தக்காரர். ஆனால் இவர் பிறருடைய சோகங்களை எழுதி இருக்கிறார். நிஜ வாழ்க்கையில் சந்தோசமாக இருந்தவர் ஆனால் எழுதுவது எல்லாமே சோகமாக இருக்கும்.


இளையவர்களிடையே இணையப் பாவணை அதிகரித்து வாசிப்புத்திறன் அருகிவரும் இந்தக் காலகட்டத்தில் வாசிப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்?

வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். இதை இன்றைய இளம் சமுதாயம் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அல்லது அவர்கள் இதுதொடர்பில் மறக்கடிக்கப்பட்டு உள்ளனர். புத்தகங்களைச் சுமந்த கைகள் இன்று மொபைல்களை சுமக்கிறது. உலக செய்திகளை வானொலி, பத்திரிகை என்று பார்த்த கண்கள் சிந்தித்து செயற்பட்ட சமுதாயம் போய் இன்று சீக்கிரம் என்று செயல்படுகின்ற சமுதாயம் ஆரம்பித்துள்ளது. வாசிப்பதற்கோ நேரமில்லை, நேசிப்பதோ மொபைல், இதில் யோசிக்க எங்கே அவர்களுக்கு நேரம்.


பல தசாப்த இலக்கிய வாழ்வில் கிடைத்த வரவேற்புகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் கூற முடியுமா?

எனக்கு பல்வேறு வரவேற்புக்கள், பரிசுகள், விருதுகள் கிடைத்துள்ளன. அதில் அமெரிக்க பல்கலைக்கழக விருது, இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக விருது ஆகியவற்றையே நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய எழுத்துக்களில் நேசிக்கும் மக்களை அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் புத்தகங்களை வெளியிட வேண்டும். அண்மையில் குவைத் போக இருக்கின்றேன். தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் என்னுடைய நாவல் 'ஊசி முனை காயங்கள்|| ஆகும். இதனை விரைவில் வெளியிட இறைவன் அருள்புரிய வேண்டும். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.

வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு தாங்கள் கூறும் செய்தி என்ன?
இருள் ஒளியை அனுமதிக்க வேண்டும். அல்லது இருள் இருளாகவே இருக்கும். கற்கள் விழுந்து கொண்டேயிருக்கும், குளம் கலங்கிக் கொண்டே இருக்கும். சேறாகி நாற்றம் எடுக்கும். உண்மையாக முயற்சி செய் உயர்வடைவாய். உன்னை நீ அறிந்தால் உலகம் தானே உன்னை அறிந்து கொள்ளும்.

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்

41. இஸ்மத் பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

பஸ்யால கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஒரு அதிபர்;, கவிஞர், எழுத்தாளர். இலக்கிய கலை கற்றல் பிரதேச மட்ட போட்டி நிகழ்வில் ஒரே தடவையில் தமிழ், ஆங்கில மொழிகளில் 09 போட்டிகளில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்தவர். அத்தோடு 'இரண்டும் ஒன்று', 'புதையல் தேடி' ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு பிரபல்யமானவர். மும்மொழித் தேர்ச்சியும் சிறந்த நிருவாகத் திறனும் கொண்டவர். அவருடனான நேர்காணலை தினக்குரல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். 

'நம்மவர்களின் இலக்கிய இரசனை பெரிதாக செறிவை அடைந்துள்ளதாக எண்ணத் தோன்றவில்லை'


உங்களுடைய குடும்பப் பின்னணி, பாடசாலை வாழ்க்கை, தொழில் அநுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

குருனாகல், பானகமுவயைப் பிறப்பிடமாகக் கொண்டு திருமணத்தின் பின் பஸ்யாலையை வசிப்பிடமாகக் கொண்டு ஆங்கில ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக அதன் பின் தற்போது பஸ்யாலை மே.மா/மினு/ எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றுகின்றேன். 
நான் ஓய்வு பெற்ற அதிபரும் சமாதான நீதிவானுமான அல்ஹாஜ் ஏ.சீ. செய்யது அஹமது அவர்களதும் மர்ஹூமா ரஹ்மா உம்மா அவர்களதும் ஏழு பிள்ளைகளில் நான் 6 ஆவது புதல்வியாகவும் இருக்கின்றேன். எனது அன்புக் கணவர் என்னைப் போலவே களுத்துறை பஸ்துன்ரட்ட கல்விக் கல்லூரியில் கல்வி பயின்று விசேட சித்தி எய்தி ஆங்கில ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராகக் கடமையாற்றியவர். தற்போது தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தில் முகாமையாளராகக் கடமையாற்றுகின்றார். எங்களுக்கு ஒரே மகன் எம்.ஆர். அகீல் அஹமத், தரம் 6 இல் மே.மா/மினு/ பாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றார். 

பாடசாலை வாழ்க்கை எனும் போது எனக்கு பல பாடசாலைகளில் பல மாவட்டங்களில் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தரம் 01 தொடக்கம் 04 வரை எனது பிறப்பிடமான பானகமுவையில் வ.மே.மா.கு.இப். அந்நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்றேன். தரம் நான்கு வரை ஊர்ப் பாடசாலையிலேயே கல்வி கற்று விட்டு தரம் ஐந்தில் பஸ்யாலை மே.மா/மினு/ நாம்புளுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் (தற்போது பாபுஸ் ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது) கல்வி பயின்றேன். 

இங்கு அல்லி கம்பனியின் உரிமையாளரும் ஆசிரியர் அல்ஹாஜ் மர்ஹூம் எம்.ஆர்.எம். ரில்வான் அவர்களது தனியார் பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலத்தை கற்றுக் கொண்டேன். இங்குதான் ஆங்கிலக் கல்வியின் அத்திவாரம் சரியாக கற்க வாய்ப்புக் கிடைத்தது எனலாம். இங்கு தரம் ஏழு வரையே கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பின்னர் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் வரை எனது ஊர்ப் பாடசாலையான வ.மே.மா/கு/இப்/ அந்நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலேயே கற்றேன். அப்போது க.பொ.த. (சா/த) பரீட்சையில் 08 பாடங்களே இருந்தன. ஆங்கிலத்தில் விசேட சித்தியும் மற்றைய 07 பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றேன். உயர் தரக் கல்வியை வணிகத் துறையில் தொடர ம.மா/க/ மடவளை மதீனா தேசிய பாடசாலைக்குச் சென்றேன். உயர் தரத்தில் ஒரு A சித்தியும் 3C சித்தியும் பெற்றேன். 
அதனைத் தொடர்ந்து களுத்துறை பஸ்துன்ரட்ட கல்விக் கல்லூரியில் அனுமதி பெற்று அங்கே ஆங்கிலக் கல்வி கற்று அதில் விசேட சித்தி பெற்று ஆங்கில ஆசிரியராக குருனாகல் பரகஹதெனிய தேசியப் பாடசாலையில் முதல் நியமனத்தைப் பெற்றேன். திருமணத்தின் பின்னர் மே.மா/கம்/ நாம்புளுவ பாபுஸ் ஸலாம் மஹா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தேன். அதன் பின்னர் ஆசிரிய ஆலோசகர் போட்டிப் பரீட்சையில் தெரிவாகி கம்பஹா மினுவாங்கொட வலயங்களில் ஆசிரிய ஆலோசகராக சேவையாற்றினேன். அதனைத் தொடர்ந்து அதிபர் போட்டிப் பரீட்சையையும் எழுதி அதில் தெரிவாகி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் சிறந்த ஒரு பிரதி அதிபராகக் கடமையாற்றினேன். 
அதனைத் தொடர்ந்து 1000 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு புதியதொரு பாடசாலையாக தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை என ஆரம்பிக்க கடும் போட்டிக்கு மத்தியில் அதிபர் எனும் தலைமைத்துவத்தை ஏற்று நடாத்தும் பாக்கியம் எனக்குத்தான் கிடைத்தது. அதன் பின்னர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் உள்வாரியாகச் சென்று 03 வருடங்கள் ஆங்கில மொழி மூலம்  கற்று பட்டதாரியாகும் பாக்கியம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சேவையின் தேவையின் நிமித்தம் அப்போது பெண் அதிபர்கள் இல்லாததனால் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்திற்கு அதிபராக செல்ல வேண்டி ஏற்பட்டது. அந்தப் பாடசாலையில் மிகவும் விருப்புடனும் சகலரதும் ஒத்துழைப்புடனும் பணி புரிந்ததில் குறுகிய காலத்திலேயே சிறந்த பெறுபேறு பெற்று சாதாரண தரத்தோடு இருந்த பாடசாலையை உயர் தரத்திற்கு மாற்றும் பாக்கியம் கிட்டியது. இந்த விடயத்தில் நிறையவே பல போராட்டங்கள் மேற்கொண்டு வெற்றி வாகை சூடியதில் மகிழ்ச்சி. இருப்பினும் பல கண்களுக்கும் உள்ளங்களுக்கும் வருத்தம் ஆதலால் மனக் கசப்புக்களுடன் அப்பாடசாலையில் இருந்தும் வெளியேறி எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்ற இணைந்து கொண்டேன். இங்கு தான் எனது முதல் கவிதை நூல் இரண்டு ஒன்றினை வெளியிட்டேன். இங்கு சேவை செய்யும் காலகட்டத்தில் எனக்கு அதிபர் தர உயர்வு (SLPS-2) பெற்றேன். இங்கு கடமை புரியும் காலப் பகுதியில்தான் இ.ஒ.கூ.தா. முஸ்லிம் சேவை செய்தி மஞ்சரியில் பல உரைகளை ஆற்றும் சந்தர்ப்பம் கிட்டியது. இங்கிருந்து எனது சொந்த விருப்பிலேயே களுத்துறை மாவட்டம் சீனன் கோட்டை ஆரம்பப் பிரிவு பாடசாலையின் அதிபராக இணைந்து குறுகிய காலப் பகுதியில் சிறந்த சேவையாற்றி பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி அலிகார் மகா வித்தியாலயத்தில் சேவை செய்ய இணைந்து கொண்டேன். இங்கு தான் எனது இரண்டாவது கவிதை நூல் 'புதையல் தேடி'யை வெளியிட்டேன். 
அதன்பின் சேவையின் தேவையின் நிமித்தம் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக 20.02.2020  முதல் எனக்குப் பதவி உயர்வு கிடைத்து சேவையாற்றி வருகிறேன்.

பாடசாலை அதிபராகக் கடமையாற்றும் நீங்கள், கவிதைத் துறைக்குள் எவ்வாறான சூழ்நிலையில் பிரவேசித்தீர்கள்?

பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் நான் கவிதைத் துறைக்குள் திடீரென பிரவேசிக்கவில்லை. நான் படிக்கும் காலங்களிலிருந்தே எனக்கு கவிதையை இரசிப்பதிலும் லயிப்பதிலும் படைப்பதிலும் பெருத்த ஈடுபாடு இருந்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் என்னைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்ப, பிரசுரிக்க அதற்கான வழிகாட்டுதல்கள் தூண்டுதல்கள் கிடைக்கவில்லை. 

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைத்த பொழுது மாணவர்களின் அடைவுகளை நவமணியின் பிரதம செய்தியாசிரியர் சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஸாஜஹான் அவர்கள் உடனுக்குடன் பிரசுரித்துத் தருவார்கள். இதில் பெரிய உற்சாகம் எம் எல்லோருக்கும். ஒரு நாள் எனது ஊரைச் சேர்ந்த வேறு பாடசாலை மாணவி ஒருவரின் வெற்றியினை பத்திரிகையில் பிரசுரித்து தருமாறு எழுதிய வரிகளே எனது முதல் கவிதை 'இடங்கொடுங்கள் இலைமறை காய்களுக்கு' இக் கவிதையில் அந்த மாணவியின் வெற்றியைப் பிரசுரித்து தருமாறு தான் எழுதிக் கேட்டிருந்தேன். இதனை படித்த பின் நவமணியின் பிரதம ஆசிரியரான சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஸாஜஹான் அவர்கள்  ''இது அழகான கவிதை ஒன்று.. பத்திரிகையில் பிரசுரிக்கவ?'' என்று கேட்டார்கள். நானும் "சரி" என்றதும் அடுத்த நாளே 27.03.2017 புதன் கிழமை நவமணிப் பத்திரிகையில் அந்தக் கவிதை பிரசுரமானது. சொல்ல முடியாத மகிழ்ச்சி எனக்கு. 

ஒரு அதிபரின் உள் உறங்கியிருந்த திறமையை இனங்கண்டவர் ஒரு பத்திரிகையின் செய்தியாசிரியர். பிறகு வாராந்தம் எனது கவிதைகள் - பாடசாலையைப் பற்றி, இயற்கையைப் பற்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் அனர்த்தங்கள் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தேன். அத்தோடு படிப்படியாக தினகரன், விடிவெள்ளி, சுடர் ஒளி, மெட்ரோ நியூஸ் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளான பூங்காவனம், அல்ஹஸனாத், ஞானம், அகரம், இந்திய சஞ்சிகை, உதயம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை, முகநூல், இணையத்தளம் போன்ற பல ஊடகங்களிலும் எனது கவிதை விரிவாக்கம் பெற்றது. கனதியானகவும் யதார்த்தமானதாகவும் பேசப்படுபவையாகவும் எனது கவிதைகள் திகழ்ந்தன. இன்னும் திகழ்ந்து கொண்டு இருக்கின்றது. 


உங்கள் நூல் வெளியீடுகள் பற்றி என்ன கூறுவீர்கள்?

நான் எனது முதலாவது கவிதையை வெளியிட்ட நாளில் இருந்தே கவிதைகள் பிரசுரமான பிரதிகளை அழகாகக் கோவைப்படுத்தி சேகரித்து வைத்து வந்திருந்தேன். ஒரு தடவை அதிபர்களின் விருதிற்காக விண்ணப்பப் படிவம் நிரப்பும் போது ஒரு விடயம் என்னை விளிப்படையச் செய்தது. 'நீங்கள் வெளியிட்ட நூல்கள்...?' எனவே அதனை நிரப்பும் போது நூல்கள் எதுவும் நான் வெளியிட்டிருக்கவில்லை. இதுவே எனக்கு நூல் வெளியிடும் ஆவலைத் தூண்டியது. அத்தோடு 27.09.2017 இல் திடீரென எனது தாயார் இவ்வுலகை விட்டும் விடை பெற்றதையடுத்து தந்தையின் முன் எனது நூலை வெளியிட்டு அவர்களை மகிழ்விக்க வேண்டும், இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என தீராத அவாவில் மிகவும் வேகமாக விவேகமாக எனது முதலாவது படைப்பாக 'இரண்டும் ஒன்று' என்ற நூலை 84 சிறியதும் பெரியதுமான கவிதைகளாக 132 பக்கங்களைக் கொண்ட புத்தகமாக அதனை வெளியிட்டேன். இறைவனின் அருளால் நான் செய்த முயற்சியின் படியே தந்தைக்கு அந்தப் புத்தக வெளியீட்டு சந்தோசத்தைக் கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும். 

எனக்கு ஏற்கனவே புத்தகம் வெளியிட்ட அனுபவங்கள் ஏதும் இல்லாததனால் ISBN இலக்கம் எடுத்தல் மற்றும் இன்னோரன்ன வேலைகளைச் செய்ய எனக்கு வழிகாட்டியவர் கிண்ணியா - 07 ஐச் சேர்ந்த கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் அவர்கள். எனது இந்த முதலாவது நூல் முதலாவது கவிதை பத்திரிகையில் வெளியிட்டு எட்டே மாதங்களில் வெளியிட்ட நூலாகும். எட்டு மாதக் குழந்தை என்பது குறை மாதமாக இருந்தாலும் 'இரண்டும் ஒன்று' பிரசவத்தில் எந்தக் குறையுமில்லாமல் அங்க சம்பூரணமாகவே இருந்தது. 

இரண்டாவது நூல் 'புதையல் தேடி' என்பது தேடிப் பெற்ற புதையலாகவே எனக்குத் தெரிகிறது. அறிவையும் நிறைய மனித உறவுகளையும் இந்த நூல் மூலம் புதையலாகப் பெற்றுக் கொண்டேன். நான் பெற்ற அறிவு அநுபவம், ஆளுமையை 'புதையல் தேடி' எனும் வடிவத்தில் நூலாக சமூகத்தின் கரங்களில் சேர்த்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நூல் வெளியீடு என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. அந்தக் கஷ்டத்தைத் தாங்கி முழுமையாகப் போராடியே வெற்றியைப் பெற்றுக் கொண்டேன். ஆண்டுகள் பல கவிதை எழுதுவோர்களுக்கு மத்தியில் குறுகிய ஒரு காலப் பகுதியில் இரண்டு கவிதைப் புத்தகங்களை வெளியிடக் கிடைத்தமை பெரிய பாக்கியமாகும். இது எனது முயற்சிக்குக் கிடைத்த தக்க பலன் எனக் கருதுகிறேன். இதில் எனக்கு அளவேயில்லா ஆனந்தம். எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒரு அதிபராக கடமையாற்றிக் கொண்டு இவ்வாறு கலையோடு தொடர்பு பட்டிருப்பதானது எதிர்கால சந்ததியினரும் இலக்கியத் துறையில் பயணிக்க ஒரு சிறந்த வழியாகக் கருதுகிறேன். 


'இரண்டும் ஒன்று' கவிதைத் தொகுதி குறித்தும் இந்தப் பெயரைத் தெரிவு செய்வதற்கான காரணத்தையும் குறிப்பிட முடியுமா?

'இரண்டும் ஒன்று' என்பது இந்த நூலில் வரும் ஒரு கவிதையின் தலைப்பாகும். இந்தத் தலைப்பு மிகவும் சுருக்கமாகவும் மிகவும் வித்தியாசமாகவும் இருந்தது. இது எனக்குப் பிடித்திருந்தது. இந்தத் தலைப்பைச் சொல்லும் போதே மனதில் பதிவதாகவும் மிகவும் குறுகியதாகவும் தோன்றியது. 'இரண்டும் ஒன்று' என்றால் என்ன, எதைப் பற்றி அந்தப் புத்தகம் உள்ளது, அதில் உள்ள கவிதைகள் என்ன சொல்கின்றன என்ற வகையில் பல கேள்விகள் வாசகர்கள் மனதில் எழும்புகின்றன. அதனால் தான் இந்தத் தலைப்பினைத் தெரிவு செய்தேன். 


'புதையல் தேடி' கவிதை நூலின் கருப்பொருட்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

புதையல் தேடி கவிதை நூலின் கருப்பொருட்களாக சமூகப் பிரச்சினைகள், இயற்கை, பெண்ணியம், யதார்த்த நிகழ்வுகள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், மனதை உறுத்தும் சமூக நிகழ்வுகள், உண்மைச் சம்பவங்கள், இழப்புகள், பாசம், பிரிவினைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்கியுள்ளன.

கவிதைகளினூடாக நல்ல மனித பண்புகளை மக்கள் மனதில் விதைக்கலாம். இயற்கையோடு ஒன்றித்து வாழும் இரசனையை சமூக மாற்ற சீர்திருத்தங்களை மாத்திரமன்று எதை எல்லாம் மாற்ற வேண்டுமோ அந்த விடயங்களையெல்லாம் ஒரு சிறந்த கவிதையூடாக மாற்றலாம். நல்ல மனித பண்புகளை மனித மனங்களில் அன்பாக பண்பாக விதைக்கலாம். ஆதலால் தான் அன்பும் பண்பும் குறைந்து செல்லும் கால ஓட்டத்தில் அதிகளவு மனித பண்புகளை, நாகரிகத்தை வளர்க்கும் வகையில் எனது கவிதைகள் அமைந்துள்ளன. 


உங்களது கவிதை நூலின் ஊடாக வாசகர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்திகள் என்ன?

கவிதை நூலில் உள்ள கவிதைகளை வாசித்து அதன் கருத்துக்களை தலைமேற்கொண்டு ஒழுகினால் சிறந்ததொரு சமூகம் உருவாகும். சிறந்த தேசத்தை அதன் ஊடாக கட்டியெழுப்பலாம். வாசிப்பதானது எப்போதும் மனித நேசிப்பை உண்டு பண்ணும். இதனால் ஒரு ஐக்கியமான சூழலும் சமூகமும் உருவாகும் என்பதனையே சமூகத்திற்கு வாசகர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். 


கவிதைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கருகின்றீர்கள்?

கவிதைகள் கவிதைகளாக இருக்க வேண்டும். அவை எப்போதும் சுருக்கமாகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்டதாகவும் முக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நல்ல கவிதை எனும் போது உணர்ந்து அனுபவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கவிதையானது மனிதனின் உணர்வலை. எனவே அதனை வாசிக்கும் போது அபூர்வமான சிந்தனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். கவிதைக்கே உரிய உயரிய சோடிக்கும் தன்மை கொண்ட உவமை, உருவகம், படிமம், குறியீடு என்பன தேவைக்கு ஏற்ப இடம், பொருள், ஏவல் அறிந்து பயன்படுத்தப்படுவதாக வாழ்வின் உலகின் இயற்கையின் மறைந்திருக்கும் புதிர்களை அவிழ்த்து விடுவிப்பதாகவும் உள்ளத்தை உள்ளபடி சொல்வதாயும் கவிதை என்பது கருத்துச் செரிந்ததாக இருக்க வேண்டும். மொத்தத்தில் கவிதைகள் கவிதைகளாக இருக்க வேண்டும்.  

ஒரு படைப்பாளன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு படைப்பாளன் தனது எழுத்துக்கள், கருத்துக்கள், செயல்கள் யாவும் ஒன்றித்த மனிதனாக இருக்க வேண்டும். ஒரு படைப்பாளன் என்பவன் நல்லவனாக திறந்த மனதுடன் பழகுபவனாக பலருக்கும் பல விதத்திலும் உதவக் கூடிய பரந்த மனம் கொண்டவனாக இருக்க வேண்டும். தனக்கு அருளாக வழங்கப்பட்டிருக்கும் அறிவு, ஆற்றல் என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியவனாகவும் மற்றவர்களுடைய படைப்புக்களைப் பாராட்டத்தக்கவனாக பெருந்தன்மை கொண்டவனாகவும் இலக்கியப் படைப்புக்களை எந்தப் பாகுபாடுமின்றி வளர்க்கக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். சகல விதத்திலும் திறமைசாலியாகவும் இருத்தல் வரவேற்கத்தக்கது. 

சமகால இலக்கியவுலகு, இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய ஆளுமைகள், இலக்கியங்களின் வருகை பற்றி தங்களுடைய பார்வை எப்படி?

சமகால இலக்கியவுலகில் இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய ஆளுமைகள், இலக்கியங்களின் வருகை என்பன அன்றாடம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஒவ்வொருவரும் அவரவர்களது திறமைகளுக்கு ஏற்றாற் போல் இலக்கியம் படைக்கின்றனர். இலக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் இலக்கியம் பேசப்பட வேண்டும். பலராலும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு கருத்துக்கள் பயன்பட வேண்டும். ஆதலால் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அதேநேரம் இலக்கியப் படைப்பாளிகள் சமூகத்தில் நின்று நிலைக்க அர்ப்பணிப்புடனான சேவையின் தேவை முக்கியமாகும். 

தமிழில் கவிதை நூல் வெளியிட்ட நீங்கள் உங்களது ஆங்கில மொழிப்புலமை காரணமாக வேறு என்ன செய்ய உத்தேசம்?

தமிழில் கவிதை நூல் வெளியிட்ட நான் எனது ஆங்கில மொழிப் புலமையை வைத்து சமூகத்திற்கு கற்பித்தல் பணியினைச் செய்தாலும் ஆங்கில சிறுவர் கதைகள், ஆங்கில கவிதைத் தொகுப்பு, நூல்கள் மொழிபெயர்ப்பு, பாடசாலைக் கல்விப் புலத்துடன் தொடர்புபட்ட பயிற்சிப் புத்தகங்கள் போன்றன அச்சிட்டு மாணவர் சமூகத்திடம் கரம் சேர்க்க வேண்டும் என்பது எனது அவா.  


தாங்கள் அதிபராகக் கடமையேற்றதும் கல்லூரியில் நடந்த முன்னேற்றங்கள் அபிவிருத்திகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் பல பாடசாலைகளில் அதிபராகக் கடமையேற்று சேவை செய்துள்ளேன். அந்த வகையில் எனது சேவையில் முதற் தடவையாக அதிபராகவும், திஹாரிய மே.மாÆகம்Æ தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் முதலாவது அதிபராகவும் பொறுப்பேற்று நடாத்தினேன். ஒரு சிறிய காலப் பகுதிக்குள்ளேயே முதற் தடவையாக 18 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார்கள். அந்தப் பதிவு இன்னும் முறியடிக்கப்படவில்லை. 

அடுத்து கஹட்டோவிட்ட மே.மா/கம்/ கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் அதிபராகப் பொறுப்பேற்று உயர்தர வகுப்புக்களை பெறும் இலக்கோடு உயரிய எண்ணத்தோடு செயல்பட்டேன். எனது இலட்சியம் போன்றே கணித பாடத்தோடு 74 வீதமான மாணவர்கள் சித்தி எய்தி உயர்தரம் செய்ய தகுதி பெற்றனர். எனவே அதே வருடம் க.பொ.த உயர் தரத்தை (கலை) பெற்றுக் கொடுத்த திருப்தியும் மகிழ்ச்சியும் எனக்கு நிறையவே உண்டு. 

அடுத்ததாக மே.மா/களு/ சீனக்கோட்டை ஆரம்ப பாடசாலையில் மிகவும் குறுகிய காலமாக 10½ மாதங்கள் சேவை செய்ததில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்தி எய்தினார். அத்தோடு, பாடசாலை கல்வி, கலை, இணைப்பாட விதான செயற்பாடுகள் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் பாடசாலைக்கு நேர காலத்தோடு மாணவர்கள் வருதல், பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகளது ஒழுத்துழைப்பு என்பன மிகைத்துக் காணப்பட்டது. ஒரு குறுகிய காலப் பகுதியில் பாடசாலை அனைத்து விடயங்களிலும் அழகு பெற்றது. உயர் நிலையை அடைந்தது. அந்தத் திருப்தியும் மனமகிழ்ச்சியும் நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கிறது. 

அதே நேரம் பிரதி அதிபராக: திஹாரிய மே.மா/கம்/ அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மற்றும் கல்எளிய மே.மா/மினு/ அலிகார் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் மாணவர்களது கல்வி கலை இணைப் பாடவிதான செயற்பாடுகளின் வளர்ச்சி ஒழுக்கம் போன்றவற்றிற்காகவும் பெரிதும் சேவையாற்றியுள்ளேன். 

தற்போது அதிபர் சேவையின் தேவை கருதி மே.மா/மினு/ எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடந்த 20.02.2020 அன்று கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டேன். தற்போது சேவையாற்றும் இந்தப் பாடசாலைக்கும் உயர் தரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் அவாவுடன சேவை செய்கிறேன். இத்தகைய வெற்றிகளுக்கு என்னோடு ஒன்றித்து நின்று கடமை புரிந்த ஆசிரிய ஆசிரியைகளுக்கும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரியப்படுத்துகின்றேன். அதேவேளை கலைத் துறையில் எனக்கு நிறையவே ஈடுபாடு இருப்பதனால் எனது ஆசிரியர் குழாம், மாணவர்கள் யாவரும் கவிதை இரசனையில் ஈர்க்கப்பட்டார்கள். மாணவர்களுக்கு குறிப்பாக கவிதைத் துறையில் ஊக்குவிப்பை நிறையவே கொடுத்து மாணவர் மன்றங்களில் காலைக் கூட்ட நிகழ்வுகளில் கவி பாட களமமைத்துக் கொடுத்ததுண்டு. பல போட்டி நிகழ்வுகளில் பங்கு கொள்ள வழி அமைத்துக் கொடுத்ததுண்டு. அத்துடன் பாடசாலை காட்சிப் பலகையிலும் மாணவர்களது ஆக்கங்களான கவிதை, கதை, கட்டுரை, சித்திரங்களை காட்சிப்படுத்தி ஊக்குவிப்பதுண்டு. இதனால் மாணவர்கள் எனக்கு மிகுந்த அன்பும் மதிப்பும் மரியாதையும் நிறையவே தருவார்கள். இதனால் எனக்கு எப்போதுமே சந்தோசம் தான். 

உங்களது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள் எனும் பட்டியலில் பலரை நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். முதலில் எனது கவிதையை நவமணியின் பக்கங்களில் நவமணியின் பிரதம செய்தியாசிரியர் சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஸாஜஹான் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அவர் எனது கவித் திறமையை இனங்கண்டு பத்திரிகையில் பிரசுரித்ததனால் தான் இன்று இலக்கியத்திற்கு இரண்டு படைப்புக்களைச் சேர்க்க முடிந்தது. 

அடுத்ததாக எனது அன்புக் கணவரும் தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளருமான எம்.ஏ.எம். றிப்தி அவர்கள் எனது கவிதை பிரசுரமாகும் பிரதிகளை மிகவும் விருப்போடு வாங்கிக் கொடுப்பவர். அடுத்து எனது அன்பு மகன் எம்.ஆர். அகீல் அஹமத் எனது கவிதைகள் தாங்கி வரும் பிரதிகளை பத்திரமாக எடுத்து வைப்பவர். மேலும் குடும்ப அங்கத்தவர்கள் மேலும் எனது இரண்டு நூல்களும் நூலுருப் பெறுவதற்கு மிகவும் ஒத்துழைப்பு நல்கியவர் கிண்ணியா - 07 ஐச் சேர்ந்த கலாபுஷணம் பீ.ரீ. அஸீஸ் அவர்கள். மேலும் சகல பத்திரிகை உதவியாசிரியர்கள் கலாபூஷணம் நூருல் ஐன் நஜ்முல் ஹூஸைன், கொழும்பு வகவம் அங்கத்துவ கலைஞர்கள், தர்கா நகர் ஓய்வு பெற்ற அதிபர் அரும்பு ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீன் மற்றும் எனது வாசகர்கள், ரசிகர்கள், ஆசிரியர்கள், எனக்கு ஊக்கம் தருபவர்களே எனது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள். இவர்கள் யாவருக்கும் எனது அன்பு கலந்த நன்றியினைத் தெரியப்படுத்துகின்றேன்.  


ஆரம்ப காலக் கவிதைகளுக்கும் தற்காலக் கவிதைகளுக்குமிடையே எவ்வகையான வேறுபாட்டை உணர்கிறீர்கள்? 

ஆரம்ப காலக் கவிதை 'கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' எனும் வரையறை இருந்தது. ஆனால் தற்காலக் கவிதை 'புதுக் கவிதை' என புது வடிவம் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் இலக்கியப் படைப்பாளிகள் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் தற்போது புதுக் கவிதை எனும் அங்கீகாரம் இருப்பதனால் கவிதை நவீன யுகத்தில் உயிரோட்டம் பெற்றுள்ளது. பெறுகிறது. அதேவேளை ஒவ்வொரு கலைஞரும் அவரவருக்கே உரிய இரசனையில் பாணியில் கவிதைகளை யாத்து வருகிறார்கள். இது இலக்கியத்தை மெருகூட்டுவதனால் வரவேற்கத் தக்க விடயமாகக் கருதலாம்.

நம்மவர்களின் இலக்கிய இரசனை எந்த அளவு செறிவை அடைந்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மவர்களின் இலக்கிய இரசனை பெரிதாக செறிவை அடைந்துள்ளதாக எண்ணத் தோன்றவில்லை. ஏனென்றால் நம் மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தின் தன்மை மிகவும் குறைந்து கொண்டே போகின்றது. யாரைப் பார்த்தாலும் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஓர் உணர்வு எனக்குள் எழுகிறது. ஏனென்றால் இருக்கும் இலக்கியத்தை படித்துச் சுவைத்து அதன் செறிவை அனுபவிக்க அதன் அழகைக் கண்டு மகிழ்வதற்கோ நேர காலம் இல்லாமல் அனைவரும் திண்டாடுவதை உணரக் கூடியதாகவும் பார்க்கக் கூடியதாகவும் உள்ளது. 

இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர் என்பவற்றில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளம் சமுதாயத்தினர் மத்தியில் இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கின்றீர்களா?

மாணவப் பருவத்தில் புத்தகங்களை; இலக்கிய ரசனைக்காக வாசிக்காதவர்கள், புரட்டாதவர்கள் நவீன ரக வாசிப்புக்கள் மூலம் இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நவீன ரக வாசிப்புக்களைப் பயன்படுத்தி நீண்ட நேரம் வாசிக்க முடியாது. அத்தோடு ஏதாவது ஒரு காரணத்தால் இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர் என்பன செயல் இழந்தால் இலக்கியம் என்ற பக்கங்களையே புரட்ட முடியாமல் போய்விடும்.  ஏனென்றால் இவற்றைப் பார்த்து வாசிக்கும் பொழுது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் புத்தகத்தில் வாசிப்பதானது மிகுந்த உற்சாகத்தையும் மனதில் பதியும் தன்மையையும் ஆறுதலையும் இரசனைப் பெருக்கெடுப்பையும் தருகிறது. புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசித்து இலக்கிய மாற்றம் கொண்டு வர முடியுமான அளவிற்கு நவீன உத்திகளால் இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பது எனது எண்ணம்.
 

விருதுகள் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

வெற்றிகளும் பாராட்டுக்களும் யாவரும் விரும்பும் ஒன்று. இதில் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. எனவே விருதுகள் வழங்குவதனால் எழுத்தாளன் அல்லது கவிஞன் ஊக்குவிக்கப்படுகின்றான். அவ்வாறு ஊக்குவிக்கப்படும் போது மேலும் நல்ல பல இலக்கிய படைப்புக்கள் வெளிவரும் என்பது உறுதி. எனவே விருதுகள் உண்மையாகவே சேர வேண்டியவர்களுக்கு கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியே. 


இன்று நிறையப் பெண்கள் எழுதுகிறார்கள். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இவர்கள் கவனிக்கப்படுகிறார்களா?

எழுத்துப் பணியில் இயங்கும் பெண்கள் உண்மையில் பாரிய பணியாற்றுபவர்கள். அவர்கள் தமது வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு சிலர் தனது கணவனுக்கு சமனான தொழிலையும் செய்து கொண்டு எழுத்துப் பணியிலும் ஈடுபடுவது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம்;. அப்படியான பெண்களைப் பாராட்டி, வாழ்த்தி கௌரவிக்க வேண்டும். உற்சாகம் வழங்க வேண்டும். ஆனால் சில கணவன்மார்கள் தம் மனைவியர் எழுத்துத் துறையில் பயணிக்க அணுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் இருந்த இடம் தெரியாலே மறைந்து போய்விடுகிறார்கள். அதேநேரம் எழுத்துலகில் ஆண் வர்க்கத்தினரோடு சமமாகப் போராடுவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன. மற்றும் பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான இன்னோரன்ன காரணங்கள் பெண்களை முன்னேறவிடாமல் தடுக்கின்றது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பெண் எழுத்தாளர்கள் ஆணாதிக்க சமுதாயத்தில் கவணிக்கப்படாமலேயே போவது கவலைக்குரிய விடயமாகும். 

'ஒருவருக்கு தாரமும் குருவும் அமைவது தலை விதிப்படி' என்பார்கள். சிலருக்கு தலைவிதி நன்றாக அமைந்ததாயில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. சிலருக்கு உண்மையிலேயே உரிய கவனிப்பும் உற்சாகமும் பாராட்டும் வீட்டுக்குள்ளேயே கிடைப்பதானது திருப்தியடையக் கூடியது. அத்தகையவர்களுக்கு சமூகத்திலும் கவனிப்புக் கிடைக்கிறது.


அடுத்ததாக தாங்கள் எதனை வெளியிடப் போகிறீர்கள்?

அடுத்த வெளியீடு சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டு கவிதை நூல்களை வெளியிட்ட நான் மூன்றாவதாக இளைய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு அவர்களது உள்ளத்தில் நல்ல விதைகளை எண்ணங்களை சிந்தனைகளை சிறுவர் கதைகளாக ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரண்டிலும் சேர்த்து வெளியிடலாம் என உத்தேசித்துள்ளேன். 

இறுதியாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

'இயற்கையை நேசியுங்கள். இயற்கையோடு கலந்து வாழும் அனைத்து உயிரினங்களையும் நேசியுங்கள். கவிதைகளை வாசியுங்கள். அவற்றில் வரும் கருத்துக்களை யோசியுங்கள் என்று சொல்வதோடு அடுத்த மனிதர்களுக்கு உதவுங்கள். உடலால், பணத்தால், பொருளால், எண்ணத்தால் உதவப் பெரும் இன்பம் அளப்பரியது. எனவே ஒருவருக்கொருவர் உதவி உலகை உயிர்ப்பிப்போம்' என்று கூறவே விரும்புகிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்