பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

10 திருமதி. ஸக்கியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.04.06

திருமதி. ஸக்கியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மாவனல்லை தெல்கஹகொடயை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பீ.ஏ பட்டதாரியாவார். இதுவரை 04 நூல்களை வெளியிட்டுள்ள இவர் அகில இலங்கை சமாதான நீதிவான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூங்காவனம் பத்தாவது இதழுக்காக அவரை நேர்கண்டபோது பகிர்ந்துகொண்ட விடயங்களை வாசகர்களுக்கு தருகிறோம்.



உங்கள் இலக்கியப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

எனது தந்தை தினமும் பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ளவர். சிறு வயதிலிருக்கும் போதே என்னையும் பத்திரிகை வாசிக்கத் தூண்டினார். விடுமுறை நாட்களில் தந்தையின் முன்னால் இருந்து பத்திரிகை வாசித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. தினகரன் வார இறுதியில் வெளியாகும் சிறுவர் மலர் என்ற பகுதியை விரும்பி வாசிப்பேன். அதிலுள்ள ஆக்கங்களை வாசிக்கும்போது எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

வெண்ணிலாவே என்று தலைப்பிட்டு ஒரு சிறு பாடலையும், கிராமக் காட்சி என்ற ஆக்கத்தையும் எழுதினேன். அதனை தபாலில் சேர்க்க தந்தை உதவினார். அடுத்தடுத்த சிறுவர் மலர்களில் அவை வெளிவந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தேன். எனது தந்தை என்னைப் பாராட்டி ஒரு பேனையை பரிசாக தந்தார். அதுவரை பென்சிலால் எழுதிய எனக்கு பேனாவால் எழுதக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. இதனையே எனது இலக்கியப் பிரவேசமாகக் கருதுகிறேன்.


உங்களது முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள்?

எனது பெற்றோருக்குப் பின் மத்ரஸாவில் எனக்கு குர்ஆனைக் கற்றுத் தந்த ஹிங்குலோயாவைச் சேர்ந்த முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் மிகவும் அழகான முறையில் தலைப் பாத்திஹா, மவ்லூது, பைத்களைச் சொல்லித் தந்தார். அல்குர்ஆனில் காணப்படும் எதுகை, மோனை, சந்தம் என்பன என்னைக் கவர்ந்தன. அத்தோடு எனது கல்விக் கண்களைத் திறந்துவிட்ட எல்லா ஆசான்களும் ஏதோ ஒரு வகையில் எனது முன்னோடிகளாகின்றனர்.


உங்களது இலக்கியப் பணி, எழுத்துப் பணிகளின் வளர்ச்சிப் போக்கு எத்தகையது?

நான் சிறு வயதிலிருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தேன். படிக்கும் காலத்தில் மாணவர் மன்றத்தில் பாடுவேன். பேசுவேன். கதை சொல்வேன். போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளேன். உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்கும் காலத்தில் கலா மன்றத்தால் வெளியிடப்பட்ட தேனருவி என்ற கையெழுத்து சிற்றிதழை எழுத கல்லூரியில் பணிபுரிந்த பண்டிதர் சிவசம்பு என்ற ஆசான் என்னை வழிப்படுத்தினார். ஏனைய ஆசான்களினதும் நெறிப்படுத்தலின் கீழ் எழுதுவதற்கு களமமைத்துக் கொண்டேன்.

1985 களுக்குப்பின் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு பிரதிகள் எழுதவும், பங்கு பற்றவும் சந்தர்ப்பம் கிட்டியது. கொழும்புப் பல்கழைக் கழகத்தில் நான் டிப்ளோமா பட்டப்பின் படிப்பு நெறியை மேற்கொள்ளும்போது சமூகவியல்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்த மதிப்புக்குரிய பூமணி குலசிங்கம் அவர்கள் இன ஐக்கியம் சம்பந்தமான கலந்துரையாடல்களுக்கு என்னை இலங்கை வானொலிக்கு அழைத்துச் சென்றார். அப்போது நிகழ்ச்சிக்கான பிரதிகளையும் எழுதிப் பங்கு பற்றினேன்.

அத்துடன் இலங்கை வானாலி முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் பகுதிக்கு பல வருடங்களாக பிரதிகள் எழுதியதுடன் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியும் வந்தேன். முன்னைய நாள் முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர்களாகப் பணிபுரிந்த எனது அன்புக்குரிய மாணவன் நூராணியா ஹசன், அல்ஹாஜ் எம்.இஸட். அஹமட் முனவ்வர் அவர்களும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சகோதரி புர்கான் பீ. இப்திகார் அவர்களும் இதற்கான சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்தனர். அவர்களை நன்றியோடு ஞாபகப்படுத்துகிறேன்.


இதுவரை நீங்கள் எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள். அதுபற்றி கூறுங்கள்?

இதுவரை 04 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். நான் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில் விழிப்பு என்ற சிற்றிதழை மாணவர் ஆக்கங்களைக் கொண்டதாக வெளியிட்டேன். 


நான் எழுதிய முதலாவது நூல் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற தலைப்பில் எழுதிய ஓர் ஆவண நூலாகும். இந்நூல் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இந்நூலை எழுதுவதற்கு என்னை ஆர்வப்படுத்தியவர் அன்று ஸாஹிராவின் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களாவார். இந்நூலை எனது அறிவுக் கண்களை திறந்துவிட்ட ஆலிம் முஹம்மது லெப்பை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

எனது இரண்டாவது நூல் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், கஷ்டங்களைப் பிரதிபலிக்கும் 16 சிறுகதைகளைத் தொகுத்துள்ளேன். இச் சிறுகதைகளுக்கான கருக்கள் அனைத்தும் யதார்த்தமானவையாகும். இந்நூலை எனது அருமைப் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

மூன்றாவதாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுப்பில் தம்பிக்கு, தங்கைக்கு, தோழிக்கு போன்ற தலைப்பிட்ட சில கவிதைகளோடு சமாதானம், தாலாட்டு, அகதி, தேயிலைத் தோட்டப் பெண் என்ற தலைப்பில் கவிதைகளும், மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கு ஓர் அஞ்சலிக் கவிதையும், எனது அன்புக்குரியதொரு மாணவனுக்கு ஓர் அஞ்சலிக் கவிதையுமாக எழுதி இத்தொகுப்பை பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முதலாவது அதிபர் ஆயிஷா ரவூப் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். 

முதிசம் என்ற தலைப்பிட்ட எனது நான்காவது நூல் நான் கணவனை இழந்து இத்தா அனுஷ்டிக்கும் காலப் பகுதியில் எழுதியதாகும். இது 2500க்கும் மேற்பட்ட மொன்மொழிகளை உள்ளடக்கியதொரு தொகுப்பாகும். இதனை எனது அன்புக் கணவர் அப்துர் ரஸாக் பரீத் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.

ஐந்தாவது நூலாக பொது அறிவுக் களஞ்சியம் என்ற தலைப்பில் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது. 


நூல்களை வெளியிடும்போது நீங்கள் சந்தித்த சவால்கள்?

எல்லோரும் சொல்வார்கள் ஒரு நூலை வெளியிடுதல் என்பது, ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போன்று கஷ்டமானது என்று. அதைத்தான் நானும் சொல்ல வேண்டும். நான் ஒரே மேடையில் மூன்று நூல்களை வெளியிட்டு வேலையை இலகுவாக்கிக் கொண்டேன். எனது முதலாவது நூல் வெளியீடு கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் 2004ல் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழ்தின விழாவின் ஓர் அங்கமாக நிறைவேறியது. 


அன்று பிரதமராக இருந்த மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகவும், இந்தியாவிலிருந்து கவிக்கோ அப்துல் ரஹ்மான், பேராசிரியை பர்வீன் சுல்தானா போன்றோர் சிறப்பதிதிகளாகவும், நாடறிந்த தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் பார்வையாளர்களாகவும் வருகை தந்திருந்த அச்சிறப்பான விழாவில் எனது முதலாவது நூலை வெளியிடக் கிடைத்தமையை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்நூல் மூலம் என்னை மிகவும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஸாஹிராக் கல்லூரிக்கு நன்றி பாராட்டுவது எனது கடமையாகும்.

அடுத்த மூன்று நூல்களையும் வெளியிடுவதற்கு நான்z பலரிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது. பெண்களைப் பொறுத்தவரை நூல்களை எழுதலாம். ஆனால் வெளியீடு என்பதில் அலைந்து திரிவது சிரமமான காரியம் என்று நினைக்கிறேன். இறைவனின் கிருபையால் எனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ யின் தலைமைப் பீடம் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஞாபகார்த்த மண்டபத்தை வழங்கி உதவி செய்தது. ஏ.எல்.எம். இப்றாஹிம், என்.எம். அமீன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வை வை.எம்.எம்.ஏ. யின் மாதர் பிரிவாகிய வை.டப்ளியு.எம்.ஏ. யின் தலைவி மக்கியா முஸம்மில், திருமதி ஸித்தீக், பவாஸா தாஹா மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்பாடு செய்து தந்தார்கள்.

இலங்கை முற்போக்கு இஸ்லாமிய இலக்கியச் சங்கத் தலைவர் மருதூர் ஏ. மஜீத், செயலாளர் டாக்டர். தாஸிம் அஹமத், ஊடகவியலாளர் எம்ஏ.எம். நிலாம், கலைவாதி கலீல் போன்ற சகோதரர்கள் விழாவை சிறப்பாக நடாத்தி நூல்களை வெளியீடு செய்து, எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமும் தந்தார்கள் என்பதை நன்றியோடு கூறுகிறேன். மண்டபம் நிறைந்த எனது அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் இப்போதும் என் கண்முன்னே தோன்றுகிறார்கள்.


படைப்புகளுக்கான விமர்சனங்களை எப்படி நோக்குகிறீர்கள்?

விமர்சனங்கள் கட்டாயம் அவசியமானது. விமர்சனங்கள் இருந்தால்தான் படைப்பாளிகளால் முன்னேற முடியும். ஆனால் விமர்சனங்கள் குறை கூறுவதாக மட்டும் இருக்கக் கூடாது. குறைகளோடு நிறைகளும் பேசப்பட வேண்டும். அப்போதுதான் படைப்பாளிகள் மேலும் ஊக்கமடைவார்கள். உதாரணத்துக்கு ஒரு புறாவைப் பறக்கவிட்டு கைகளைப் பலமாக தட்டும் போது புறா மேலே மேலே உயர்ந்து பறப்பதைப் போல கலைஞர்களையும் பாராட்டப் பாராட்ட அவர்கள் உயர் நிலைக்குச் சென்று சமூகத்திற்குப் பயனுள்ள படைப்புக்களை வழங்குவார்கள். அத்தோடு படைப்பாளிகளைப் பொறுத்தவரை போட்டி போட்டு முன்னேறலாம். ஆனால் மற்றொருவரை வீழ்த்துவதற்கு எத்தனிப்பதும், பொறாமைப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டியவைகளாகும்.


எதிர்காலத்தில் எத்தகைய இலக்கிய பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ளீர்கள்? 

சிறுவர் இலக்கியங்களின் வளர்ச்சி போதாது என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் பெண்கள் சம்பந்தமான வலுவூட்டல், சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கப் பணிகளோடு சிறுவர் இலக்கியம் சம்மந்தமாகவும் கவனத்தைத் திருப்ப நினைத்துள்ளேன்.


நீங்கள் பல வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளீர்கள். இன்றைய மாணவர்களின் இலக்கியப் போக்கு? எழுத்துத்துறை பற்றி என்ன கூறுவீர்கள்?

இன்றைய மாணவர்களின் இலக்கியம், எழுத்து, வாசிப்புத் துறைகள் கவலைக்கு இடமானதாகவே காணப்படுகின்றது. வாசிப்பு என்பது மாணவர்களைவிட்டு வெகு தூரமாகி விட்டது. மாணவர்கள் தொலைக்காட்சி, மின்னஞ்சல், சினிமா என்று வீண் பொழுது போக்குகளில் நேரத்தை வீணடிப்பதைக் காண்கிறோம். இலக்கியம் எழுத்துத் துறை வளர்ச்சிக்குப் பதிலாக இன்றைய மாணவர்களிடையே விரும்பத்தகாத மாற்றங்களும், துர்நடத்தைகளும் மலிந்துவிட்டன.

மாணவியர் ஓரளவு இலக்கியம், எழுத்துத் துறைகளில் ஈடுபாடு காட்டினார்கள். அண்மைக் காலங்களில் அவர்களும் கையடக்கத் தொலைபேசிகளோடும், டியூஷன் கலாச்சாரத்தோடும் தமது காலநேரத்தை வீணடிக்கும் போக்கைக் காண முடிகிறது.

பன்முக ஆளுமை கொண்டவர்களாக மாணவ சமுதாயத்தை மாற்ற பெற்றோரும், ஆசான்களும், சமூகமும் முன் வரவேண்டியது அவசரமும் அவசியமுமாகும் எனக் கருதுகிறேன்.


இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?

* நான் பாடசாலையில் கற்கும் காலத்தில் மாகாண, மாவட்ட மட்டப் பரிசில்கள் பெற்றுள்ளேன். நான் கல்வி கற்ற, கற்பித்த உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலய மண்டபத்தில் உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் கீழ் இயங்கும் ப்ரியநிலா இலக்கிய வட்டம் 2005 இல் எனக்கு இலக்கியத் தாரகை என்ற பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.

* 2009 இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய கலை இலக்கிய மகோற்சவத்தின் நிமித்தம் நடாத்திய கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும், நற்சான்றிதழும் கிடைத்தது.

*  இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டிணம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் அனைத்திலும் பங்கு பற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.

* 2006 இல் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆளுனர் சபை நல்லாசிரியர் விருது வழங்கி என்னை கௌரவித்தது. எனது 28 வருடகால ஆசிரியப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அதனைக் கருதி மனத்திருப்தி கொள்கின்றேன்.

* இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தில் தொடர்ந்து 30 வருடங்கள் சேவை புரிந்த என்னை அச்சங்க உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

* 2011 இலங்கை அரசாங்கத்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற கலாபூஷண விருது கலாச்சார அமைச்சால் எனக்கு வழங்கப்பட்டது.

* 2011 இல் அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் மூலம் சாமஸ்ரீ, தேசமான்ய விருதுகள் கிடைத்தன.

* 2012ல் அகில இலங்கை மனித உரிமை அமைப்பின் நான்காவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் சேவைக்கான விருதும், தங்கப் பதக்கமும், நற்சான்றிதழும் கிடைத்தன.

என்னைப் பொறுத்தவரை பட்டம், பதவிகள், கௌரவங்களை விட மேலும் என்னைத் தகுதியாக்கிக் கொள்வதும், சமூகத்திற்குச் சேவை செய்வதுமே எனது நோக்கமாகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

09. திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களுடனான நேர்காணல்

திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களின் குடும்பச் சூழல், வாழ்வுநிலை பற்றி கூறுங்கள்?

எனது தந்தையாரின் பெயர் சின்னத்துரை. தாயாரின் பெயர் கமலாம்பிகை. நான் மலேசியாவில் 1948 ஆம் ஆண்டு பிறந்தேன்;. எனக்கு இரு மகள்மாரும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணமாகி இரு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். நான் மக்கள் வங்கியில் முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன்.


எழுத்துத்துறைக்குள் தாங்கள் காலடி எடுத்து வைக்க முன்னோடியாக இருந்தவர்கள் பற்றி?


சிறு வயதில் கதைகள் கூறி அதில் ஒன்றவைத்த என் பேரனாரைத்தான் முதல் காரணகர்த்தாவாகச் சொல்வேன். அடுத்துப் பல சஞ்சிகைகளை வாங்கி தானும் வாசித்து, என்னையும் வாசிக்கப் பழக்கிய என் தாயார். தமிழில் ஆர்வங்கொள்ள வைத்த எனது தமிழாசிரியர் வித்துவான் நவரத்தினம் அவர்கள். எனது ஆரம்பகால எழுத்துகளை வெளிவரச்செய்து ஊக்கமளித்த திரு. வ.இராசையா, திரு. மனோகரன் மயில்வாகனம், திரு. இ.சங்கர் முதலியோரைக் குறிப்பிடலாம்.


சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

சிறுகதைகளை வாசித்து வந்த எனக்கு நானும் எழுதினால் என்ன என்றோர் எண்ணம் இயல்பாகவே ஏற்பட்டது. வேறு குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நடந்ததாக நினைவில்லை.


சிறுகதைத் துறையில் ஈடுபட்டுவரும் நீங்கள் இதுவரை எத்தனை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள்? அவை யாவை?

இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். தற்போது 'இன்னும் பேசவேண்டும்' என்னும் ஒரு தொகுதியை வெளியிட ஆவன செய்துகொண்டிருக்கிறேன். ஏற்கனவே வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகள் உணர்வின் நிழல்கள் (1997), ஈன்ற பொழுதில் (1999), கணநேர நினைவலைகள், மனம் விந்தையானதுதான் (2006) ஆகியனவாகும்.
இவற்றைவிட அரை நிமிட நேரம் என்னும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி, உனக்கொன்றுரைப்பேன் (2009) என்னும் பெண்களுக்கு அறிவுரை கூறும் கடித இலக்கியம், நடைச்சித்திரத் தொகுப்பான எண்ணிலாக்குணமுடையோர் (2010), சமயம் சார்ந்த முன்னோர் சொன்ன கதைகள் (2011) ஆகிய எனது ஆக்கங்களையும் இருபாலைச் சேனாதிராய முதலியாரின் ஆக்கங்களின் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளேன்.

தாங்களின் ஆரம்பகாலப் படைப்புகளுக்கும், தற்போதைய படைப்புகளுக்கும் இடையில் எவ்வகையான வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?


அதிகமான வித்தியாசங்களை அவதானிக்கிறேன். ஆரம்பகாலக் கதைகளில் சிறுபிள்ளைத்தனமான எழுத்து, வாழ்வின் அனுபவங்கள் குறைவாகப் பிரதிபலிப்பது எனப் பல குறைகளைக் கூறலாம். இன்றைய எனது எழுத்திலும் எனக்கு முழுமையான திருப்தியில்லை. மேலும் சிறப்பாக எழுதியிருக்கலாமே என்றே எண்ணுவேன்.


இதுவரை கிடைத்த விருதுகள் பற்றி?

பெற்ற விருதுகளாக - சார்க் மகளிர் அமைப்பு (ஸ்ரீ லங்கா) சிறுகதை (தமிழ்) முதற்பரிசு

கனகசெந்தில் கதாவிருது, சிரித்திரன் சுந்தர் விருது, தகவம் பரிசு, பூபாள ராகங்கள் பரிசு போன்றவற்றைக் கூறலாம்.


சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள்; உள்ளடக்கப்படுகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என எண்ணுகின்றீர்களா?

நடைபெறுகின்ற நிகழ்வுகள் கருவாக அமையும் வேளையில் யதார்த்தமாக இருக்கவேண்டும் எனக் கூறினாலும் சில அதீத கற்பனைகள் கதைகளாகும் போது அங்கு யதார்த்தத்தைக் காண்பது இயலாது. உதாரணமாக எனது காத்திருப்பு என்ற கதை, இங்கு போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது எழுதப்பட்டது. அதில் போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் வேகமாகப் புனரமைக்கப்படுவதைக் கற்பனை செய்திருக்கிறேன்.

வெளிநாடு சென்றவர்கள் போட்டியிட்டு மீள வருவதாகக் கற்பனை செய்திருக்கிறேன். கற்பனை மெய்ப்படவேண்டும் என்ற கதையிலும் 2000ஆம் ஆண்டிலேயே அற்புதமான ஒரு யாழ்ப்பாணத்தைக் கற்பனை செய்தேன். இன்னும் அவை யதார்த்தமாகவில்லை. எனவே நான் உங்கள் கூற்றை ஒப்புக்கொள்ள முடியாதல்லவா? இதே போன்று விஞ்ஞான ரீதியாக எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வு ஒன்றைக் கருவாகக் கொண்டு எழுதப்படும் கதைகளையும் கூறலாம்.


சிறுகதைகளுக்கான கருப்பொருளை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றீர்கள்?

நாளும் பொழுதும் வாழ்க்கையில் சந்திக்கும் ஏதோ ஒன்று அடிமனதைத் தொட்டு மறக்கமுடியாத ஒன்றாகிப்போய் அதை எழுதித்தானாகவேண்டும் என்ற உந்துதலோடு கதையாகிறது. இப்படியில்லாமல் எழுதிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக எழுதுபவை கனதியற்றுப் போவதாய் நான் உணர்வதுண்டு.


சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?

நான் எழுதும்போதுகூட இந்தக் கதைக்கு இந்த இந்த அம்சங்கள் அமையவேண்டுமென எதையும் வரையறுத்துக்கொள்வதில்லை. இலக்கணத்தின்படி இலக்கியம் அமையவேண்டுமென வரையறுக்கக் கூடாதென்றே நான் நினைக்கிறேன்.



சிறுகதைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்கள் கருத்து யாது?


பல நல்ல சிறுகதைகள் வெளிவருகின்றன. ஆனால் பல்வேறு காரணங்களால் போதிய முதிர்வடையாதவையும் இடம்பிடித்துக் கொள்கின்றன. தேக்க நிலையைவிடப் பின்னோக்கிச் செல்கின்றோமோ என்ற அச்சமும் சிலவேளைகளில் தலை நீட்டுகின்றது.


எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக நீங்கள் வாசிக்கிறீர்கள்? ஏன்?

தற்போது நான் சமய நூல்களையே விரும்புகின்றேன். வயோதிபம் காரணமாகவிருக்கலாம்.



வளர்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

எல்லோரும் கூறும் ஒன்றுதான். முதலில் நிறைய வாசியுங்கள். உங்கள் கதையைப் பட்டை தீட்டி ஒளிரச் செய்யுங்கள். பத்திரிகை பிரசுரிக்காது விடுவதால் உங்கள் கதை தரமற்றது என்றெண்ணி நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். அவர்களாலும் வரும் கதைகள் எல்லாவற்றையும் வெளியிடவியலாதுதானே. தொடர்ந்து முயலுங்கள். வெற்றியடைவீர்கள்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

தாங்கள் என்னைப் பேட்டி காண எண்ணியது எனக்கு வியப்பைத் தந்தது. இச்சந்தர்ப்பத்திற்கு முதலில் நான் நன்றி கூறுகிறேன். அடுத்து சஞ்சிகை நடத்துவது சவால்மிக்கதாக இருக்கும்போது அதில் காலூன்றி இலக்கியப்பணி புரியும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

08. திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.02.16

திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கலாபூசணம் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்

அறிமுகம்

1975 முதல் இலக்கிய உலகில் செல்வி ரஷீத் நூருல் அயின் என்ற பெயரோடு அறிமுகமான இந்த பெண் எழுத்தாளர் நாமெல்லாம் நன்கு அறிந்த பிரபல சிரேஷ்ட பெண் பத்திரிகையாளர், எழுத்தாளர். ஊடகத்துறையில் விரல்விட்டு குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர். மலையகம் தந்த கலை அகம் என்றும் இவரைக் குறிப்பிடலாம்.

ஆம்! இவர்தான் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களாவர்.

மலையகத்தைச் சேர்ந்த உடுதெனிய என்பது இவர் பிறந்த கிராமமாகும். மர்ஹும் அல்ஹாஜ் எம்.எம். ரஷீத், திருமதி உம்மு ஸல்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியான இவர் உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயம், மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றதோடு, கொழும்பு திறந்த பல்கலைக் கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார். கணணித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் பிரதி தயாரிப்பாளராக பல ஆண்டு காலமாக எழுதி வந்த இவர் வானொலி சிறப்புக் கவியரங்கங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கு பற்றி வருகிறார்.

1980 இலிருந்து 1990 வரை 'தினபதி - சிந்தாமணி' ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி' என்ற ஜனரஞ்சக பத்திரிகையிலும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் 'திங்கள்' என்ற மாதாந்த சஞ்சிகையிலும் இணை ஆசிரியராகவும் திகழ்ந்தார். திணைக்களத்தின் 'தெசதிய' என்ற சிங்கள சஞ்சிகையின் சிறப்புக் கட்டுரை எழுத்தாளராகவும் திகழ்ந்து சிங்களத்திலும் இலக்கியம் படைக்கிறார்.

தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer)பணிபுரிந்து வரும் இவர் 'கொழம்ப புவத்' (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரிலான சிங்களமொழி மூல காலாண்டுப் பத்திரிகையின் பிரதம ஆசிரியையாகவும் கடமையாற்றி வருகிறார். 'பண் பாடும் பெண்' என்ற நூலின் ஆசிரியையான இவர், இன்னும் பல நூற்களை வெளியிட காத்திருக்கிறார்.

அகில இலங்கை சமாதான நீதவானாகவும் ,கொழும்பு உயர் நீதிமன்ற ஜூரர் சபை உறுப்பினராகவும் இருக்கும் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், அண்மையில் நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அரச மொழிப்பெயர்ப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகைத்துறையில் வெள்ளி விழாவைக் கடந்திருக்கும் இவர், இலங்கையிலேயே ஊடகத்துறையில் முஸ்லிம் பெண் ஊடக அதிகாரியாக மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக பணியாற்றி வரும் ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரியவர்.
பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட இந்தப் பெண் படைப்பாளியை இம்முறை எமது வாசகர்களுக்காக மகளிர் தினத்தில் பூங்காவனத்துக்கு அழைத்து வந்துள்ளோம்.



இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

உடுதெனிச்செல்வி, பின்த் ரஷீத், பின்த் ஸல்மா, கண்ணொளி ஆகிய புனைப்பெயர்களில் எழுதி வந்த நான், இலக்கிய உலகில் மட்டுமல்ல ஊடகத்துறையிலும் கரடுமுரடான பாதையைத்தான் கடந்து வந்திருக்கிறேன். இத்துறையில் கடந்து வந்த பாதை காபட் பாதையல்ல. கற்களும், முட்களும் நிறைந்த பாதை. இன்றைய எழுத்தாளர்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் எதுவுமே அன்று இருக்கவில்லை. இன்று ஒரு பத்திரிகை இல்லையென்றால் இன்னும் எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. ஒரு வானொலி அலை வரிசையில் ஒலிபரப்பாகாவிட்டால் இன்னும் எத்தனையோ வானொலி அலைவரிசைகள். ஆனால் அன்று அப்படியல்ல. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே பத்திரிகைகள், வானொலி அலைவரிசைகள் இருந்தன.

வானொலியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே. எனவே ஓர் ஆக்கத்தை எழுதி அனுப்பிவிட்டு அது பிரசுரமாக, ஒலிபரப்பாக பல வாரங்கள் ஏன் மாதங்கள்கூட பொறுமை காக்க வேண்டும். அனுப்பிய ஆக்கம் பிரசுரமாகவில்லை, ஒலிபரப்பாகவில்லை என நாம் சோர்ந்து போயிருந்தால் இன்று நாமெல்லாம் முகவரி இல்லாத எழுத்தாளர்களாய் எங்கோ ஒதுங்கிப் போயிருப்போம்.

எழுத்தாளர்களை பொறுத்தவரை விடாமுயற்சி மிகவும் முக்கியம். பத்திரிகை அலுவலகத்திற்கு காலடி எடுத்துவைத்த முதல் மாதத்திலேயே ஒரு சகோதரர், சிஸ்டர், கழுத்தறுப்புக்கள், குத்துவெட்டுக்கள் நிறைந்த பொல்லாத இடத்துக்கே வந்துள்ளீர்கள். ஓரிரு மாதங்களாவது இங்கு நீடிப்பீர்களோ தெரியாது என்றார்.

ஆனால், அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எழுத்துத் துறையிலும், ஊடகத் துறையிலும் பல சவால்களை முறியடித்து வெள்ளி விழாவையும் தாண்டி இன்று பொன்விழா நோக்கி நகர்கின்றேன் என்ற நற்செய்தியைக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கிராமப்புரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நகர வாழ்க்கை புதிய அனுபவம்தான். கொழும்புக் கோட்டைக்கும், புறக்கோட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் நான் பட்ட பாடு பெரும்பாடுதான். அந்த ஆரம்ப கால அனுபவங்களை மீட்டிப் பார்த்தால் ஒரு புத்தகமே எழுதிவிடலாம்.

ஊடகத் துறையிலும், இலக்கியத் துறையிலும் இன்னோரன்ன சிரமங்கள் பட்டே படிப்படியாக முன்னேறினேன். இது இத்துறையில் காலடி வைக்கும் இளசுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்.



திருமணம் எழுத்தாளர் பலருக்கு (கை) விலங்கு போட்டது என்கிறார்கள். உங்களுக்கு எப்படி?

திருமணம் பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு தாழ்ப்பாள் போட்டது என்னவோ உண்மையாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை பூவிலங்கு போட்டது என்பேன். எனது திருமணம் எனது எழுத்துகளுக்கு நீர் வார்த்து உரமிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வெற்றியின் பெருமை முதலில் எனது பத்திரிகையுலகத் தந்தை எஸ்.டி. சிவநாயகம் ஐயா அவர்களையே சாரும்.

நான் இல்லறத்தில் நுழைந்த போது எனது கணவரை அலுவலகத்துக்கு அழைத்த ஐயா அவர்கள், ஷநண்பரே உங்கள் மனைவி ஊடகத் துறையில், எழுத்துத்துறையில் நன்கு ஜொலிப்பவர். இத்துறையில் அவருக்கு சிறந்ததோர் எதிர்காலமுண்டு. எனவே அவரை தொடர்ந்தும் அலுவலகம் அனுப்பி வையுங்கள் என்று கூறி ஆசியுரை பகர்ந்தார். அவரது எதிர்வு கூறலை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.


இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கிய போக்கு பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி என்று நோக்கும்போது பெரிதாக திருப்தியடைய முடியாதுள்ளது. நல்ல ஆளுமைமிக்க பெண் எழுத்தாளர்கள் பலர் இன்று தலைமறைவாகி விட்டார்கள் என்ற செய்தி ஜீரணிக்க முடியாததொன்று. வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்தகால சூழ்நிலையினால் பெண் படைப்பாளிகள் பலர் இடம்பெயர்ந்து சென்றனர். எனினும் 1985, 1990 களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகளில் பெண் எழுத்தாளர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தது. இக்காலப் பகுதியில் இடையிடையே பெண்கள் தொடர்பான காத்திரமான கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற்றன.

யோகா பாலச்சந்திரனின் கொழும்பு கலைக் கழகம், கலைமகள் ஹிதாயாவின் தடாகம், புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்டம், செல்வி திருச்சந்திரனின் பெண்கள் கல்வி ஆய்வு மையம், ஜெசீமா இஸ்மாயிலின் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்ணணி, ஜயந்தி வினோதனின் வினோதன் மன்றம், சூர்யா ஆய்வு மையம் போன்றவற்றின் அனுசரணையுடன் இந்தக் கருத்தரங்குகள் நடைபெற்றன.

மலையக பெண்களின் அவலங்கள் குறித்து கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் அடிக்கடி கருத்தரங்குகள் நடைபெற்றன. ஆனால் ஏனோ அவை யாவும் அருகிவிட்டமை கவலைக்குரிய விடயமே.

இன்று உங்களைப்போன்ற இளம் எழுத்தாளர்கள் பலர் சஞ்சிகைகளின் மூலமும், வலைப்பின்னலூடாகவும் வலம் வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த இலத்திரன் தொழில் நுட்பத்தைக் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்துவது இன்று காலத்தின் தேவையாகிவிட்டது.

எனவே தமிழ் - முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர்கள் அனைவரும் இந்த நவீன தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்தி தமது படைப்புக்களை உலகறியச் செய்ய வேண்டும். அத்தோடு பெண்கள் எழுத்தாளர்கள் வலைப்பின்னலினுடாக ஓர் அமைப்பை ஏற்படுத்தி ஓரணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

பலமான ஒரு பெண் படைப்பாளர் அமைப்பு ஒன்று உருவாக வேண்டும், பெண் எழுத்தாளர்களின் சுயவிபரங்கள்; ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பன எமது நீண்ட நாள் கனவாகும். இத்துறையில் தேர்ச்சி பெற்ற உங்களைப்போன்ற பெண் படைப்பாளிகள் முன்வருவார்களா?


ஊடகம் இலக்கியத்தில் வகிக்கும் பங்கு பற்றி யாது கூறுவீர்கள்?

ஊடகமும், இலக்கியமும் இரண்டறக் கலந்த ஓர் கலவை என்பேன். ஊடகம் இல்லாத இலக்கியம் இல்லை. இலக்கியத்தை, இலக்கியவாதிகளை வாழ வைப்பதே ஊடகங்கள்தானே. ஊடகங்கள் இல்லாவிட்டால் எழுத்தாளர்களின் ஆளுமைகள் அவர்களது உள்ளத்திலேயே உறங்கிக்கிடக்கும். எழுத்தாளர்களது உள்ளக் கிடக்கைக்கு உயிர் கொடுப்பதே ஊடகங்கள்தானே. எனவே இலக்கிய வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது.



தாங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் பல சவால்களைச் சமாளித்து ஆரம்பம் முதல் இன்று வரை ஊடகத்துறையை தொழிலாகக் கொண்டியங்குவதே ஒரு பெரிய சாதனை என்பேன். நான் தினபதி - சிந்தாமணி பத்திரிகையில் ஆசிரியபீடத்தில் கடமை புரிந்த காலப்பகுதி அது. அப்பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், எனது குருவுமான பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்கள் பத்திரிகைகளில் புதுமைகளைப் புகுத்துபவர். சிந்தாமணிப் பத்திரிகையிலும் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தவர்.

மாதர் பகுதியினை விவாத மேடையாக ஆக்குவோம் எனத் தீர்மானித்தார். பெண்கள் தொழில் புரிவதால் குடும்ப நிர்வாகம் பாதிக்கப்படைகிறதா? இல்லையா?, பிள்ளைகளின் வளர்ச்சியில் பிதாவுக்கும் பங்குண்டா? இல்லையா? போன்ற தலைப்புகளில் சுவையான விவாதப் பேட்டிகளை நடத்தியுள்ளேன். அவை வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அவ்வாறே பெண்கள் மத்தியில் அன்றாடம் ஏற்படும் தவறுகளை, நிகழ்வுகளை உரையாடல்களாகச் சித்திரித்து படிப்பினையூட்டும் வகையில் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு வழங்குவேன். பத்திரிகைகளுக்கும் எழுதுவேன். இதனால் நான் பழகிய பெண்களில் பெரும்பாலானோர் என்னிடம் பிறரைப் பற்றிய குறைகளை கதைக்கவே அஞ்சினார்கள். ஐயோ உங்களிடம் கதைக்க பயமாக இருக்கிறது. அப்புறம் நீங்க இதையெல்லாம் பேப்பர்ல, ரேடியோவில போட்டிடுவீங்க என்று வெளிப்படையாகச் சொல்லியதுமுண்டு.

சமகால பிரச்சினைகளையே கவிதையாக, கட்டுரையாக, கதையாக, உரைச்சித்திரமாக நான் வடிப்பதுண்டு. இவை வாசகர், நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதனை ஒரு சாதனையாக நான் கருதாவிட்டாலும் எனது எழுத்துகளுக்கு கிடைத்த பெருவெற்றியாகக் கருதுகிறேன். எமது எழுத்துக்களை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தினால் அவை கூட வல்ல அல்லாஹ்விடம் நற்கிரியைகளாகவே அங்கீகரிக்கப்படுகின்றன.

எனவே எமது பேனாக்களை நாம் நல்லவற்றுக்கே பயன் படுத்த வேண்டும் என்ற நற்செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வரம்பு மீறாமல் ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்தால் எல்லா கௌரவமும் தன்னாலே கிட்டும்.


பண்பாடும் பெண் என்ற நூலுக்கு பிறகு வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளீர்களா?

பண்பாடும் பெண் என்ற நூலுக்கு பிறகு இன்னும் இன்னொரு நூலை வெளியிட முடியவில்லையே என்ற ஏக்கம் எனது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் நான் ஏற்கனவே கூறிய வேலைப்பளுதான் காரணம். வானொலியில் நான் பாடிய கவிதைகள், நூல்; வெளியீட்டு விழாக்களில் நான் பாடிய கவிதைகள் அனைத்தையும் தொகுத்து ஷபூஞ்செண்டு| என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை வெளியிடவுள்ளேன். அவ்வாறே நான் பல்கலைக் கழக பத்திரிகைத் துறை டிப்ளோமா பாடநெறிக்காக சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான எய்ட்ஸ் நோயும் பெண்களும், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக எழுதப்பட்ட முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு என்ற ஆய்வுக் கட்டுரை மற்றும் ஏட்டிலிருந்து ஏற்றதோர் படிப்பினை, சஹாபாப் பெண்களின் சரித்திரப் பின்னணி போன்ற பல நூல்கள் பிரசுரத்திற்காக தயாராக உள்ளன.

எனது கணவருக்கோர் நப்பாசை. எம்மிருவரினதும் நூல் வெளியீட்டு விழாவும் ஒரே மேடையில் நடைபெற வேண்டும் என்று. ஆனால் இருவருமே காலையில் வேலைக்குப் போனால் மாலையிலேயே வீடு திரும்புபவர்கள். எங்களுக்குத் தெரியாமலேயே காலம் ஓடிவிடுகிறது. அதை எண்ணி தினம் தினம் மனம் கடிந்துகொள்கிறோம். கடிகாரம் ஓடுமுன் ஓடு என்பார்கள். ஆனால் நாமோ கடிகாரத்தின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டிலாவது நம் இருவரினதும் நூல்களின் பிரசவம் நிகழ வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும். நாமிருவர் மட்டுமல்ல நமது ஒரே மகள் நூருஸ் ஷப்னா கூட கவிதைத் துறையில் ஆர்வம் காட்டி வருபவர்தான். சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவியாகத் திகழும் எனது மகள் சட்டக் கல்லூரி இந்து மகா சபை நடாத்திய கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார்.


சிறுகதைகள், நாவல்கள் போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்களா?

சிறுகதைகள், குறுங்கதைகள் போன்றவற்றை அவ்வப்போது எழுதியுள்ளேன். எனது பல சிறுகதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. ஆனால் நாவல் துறையில் நாட்டம் செலுத்தவில்லை.

எனினும் எனது அபிமான அன்புச் சோதரிகளான நயீமா சித்தீக், மாத்தளை பர்வீன், சுலைமா சமி இக்பால், ஜரீனா முஸ்தபா ஆகிய நம் நாட்டு நாவலாசிரியைகளின் நாவல்களை விரும்பிப் படிப்பதுண்டு. அத்தகையோரின் இத்தகைய பணி நீடிக்க வேண்டும் என நித்தமும் ஆசிப்பதுண்டு. முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் நாவல்துறை பட்டியலில் மேலும் பலர் இணைய வேண்டும் என விரும்புகிறேன்.


தங்களுடைய தொழில்துறை, இலக்கிய வளர்ச்சிக்கு கை கொடுப்பதாய் அமைந்திருக்கிறதா?

எனது தொழில்துறை இலக்கிய வளர்ச்சிக்கு கை கொடுப்பதாய் அமைந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கு மிகவும் சங்கடமான பதிலைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. தொழில்துறை வேலைப்பளு காரணமாகவே எனது இலக்கிய முயற்சிகள் எல்லாம் முடங்கிப்போய்விட்டன என்றே சொல்ல வேண்டும்.

ஊடகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியில் இருப்பதால் காலத்தோடு போராடும் காரிகையாகி விட்டேன் என்றே சொல்லத் தோன்றுகிறது.

கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட 13 பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த 13 செயலகப் பிரிவுகளிலும் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்ந்து அச்சக மற்றும் இலத்திரன் ஊடகங்களுக்கு மட்டுமன்றி எமது திணைக்களத்தின் தகவல் வெப் தளத்திற்கும் செய்திகளைத் தொகுத்தளிப்பது, மாவட்ட வளங்கள் குறித்த தரவுகளை கணணி மயப்படுத்துவது, தேசிய, மாவட்ட, பிரதேச ரீதியான நிகழ்வுகளுக்கு ஊடக இணைப்பாளராகச் செயல்படுவது எல்லாம் எனது அன்றாட கடமைகளாகும். தினசரி இவற்றை நிறைவேற்றவே நேரமும் காலமும் சரியாகிவிடுகிறது. மாலையில் வீட்டுக்குப் போனால் வீட்டு நிர்வாகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் எனது தொழில்துறை எனது இலக்கிய பணிகளுக்கு இடையூறு இழைக்காவிட்டாலும், வளர்ச்சியில் படிக்கட்டாகவல்ல, தடைக்கல்லாகவே உள்ளது. சுருங்கக் கூறின் இலக்கிய பணிகளை மேற்கொள்ள நேரம் கிடைப்பதில்லையே என்ற ஆதங்கம் தான். உள்ளத்தில் நிறைந்துக் கிடக்கும் கற்பனை கருக்களுக்கு எழுத்து மூலம் எப்போதுதான் உருகொடுக்க கிடைக்குமோ? என்ற இலக்கியத் தாகம், தணியாத தாகமாக உள்ளது. உத்வேகம் உண்டு. அவற்றை வெளிப்படுத்த நேரம்தான் இல்லை.



உங்கள் கணவர் கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் உங்களது இலக்கிய வாழ்வில் உந்து சக்தியாக இருக்கிறார். இதைப் பற்றி என்ன சொல்வீர்கள்?



இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இல்லறத்திலும்கூட என் உந்து சக்தியும், என் உயிரும் உரமும் எனது கணவர்தான். எனது எழுத்துலக பிரவேசத்திற்கு திருமணத்துக்கு முன்னர் எனது சகோதரர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்தான் எனக்கு பக்கபலமாக திகழ்ந்தார். தினபதி - சிந்தாமணி ஆசிரியப் பீடத்துக்கு முதன் முதலாக என்னை அழைத்துச் சென்றது முதல் என் வளர்ச்சிப் படிக்கட்டுகள் அனைத்துக்கும் காரணமானவர் என் சகோதரர்;தான். திருமணத்துக்கு முன்னர் எனது முன்னேற்றங்களின் முதுகெலும்பு என்னுயிர் பெற்றோரும், எனது உடன்பிறப்புகளும் தான்.

ஆனால் திருமணத்திற்குப் பின்னர் எனது முன்னேற்றத்தின் முதுகெலும்பு எனது கணவர்தான். எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் எனக்கு ஏணியாக, தோணியாக, அச்சாணியாக, கொழுகொம்பாகத் திகழ்கிறார். அதனால்தான் எம். நஜ்முல் ஹுசைன் என்று பன்மையில் அழைக்கப்பட்ட அவரை நான் என். நஜ்முல் ஹுசைன் என்று உரிமையுடன் அழைத்தேன். இன்று அதுவே அவரது இனிஷியலாகிவிட்டது என்றால் பாருங்களேன் எங்களது இணக்கப்பாட்டினை. ஒரு ஆணின் வெற்றியின் பின்னணியில் பெண் இருக்கிறாள் என்பார்கள். அதுபோலவே எனது வெற்றியின் பின்னணியில் எனது கணவரும் இருக்கிறார் என்பதில் நான் பேருவகையடைகிறேன். அவரில்லாமல் நானில்லை.



சிங்கள மொழியிலும் நீங்கள் இலக்கியம் படைக்கிறீர்கள். அது பற்றி சற்று விளக்குவீர்களா?

சிங்கள மொழியில் நான் முத்திங்கள் வெளியீடு ஒன்றை பிரசுரிக்கிறேன் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 2007ம் ஆண்டு முதல் இன்றுவரை கொழம்ப புவத் (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரில் சிங்கள மொழி மூல காலாண்டு பத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றேன். கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கலை, கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வெளிவரும் இப் பத்திரிகையின் பிரதம ஆசிரியையாக நானே இருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் பத்திரிகையில் நான் எழுதும் ஆசிரியத் தலையங்கள்; கூட பலரது பாராட்டைப் பெற்றன. அதிலும் குறிப்பாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூட இந்த ஆசிரியத் தலையங்கத்தைப் பாராட்டியுள்ளார். அதற்காக எனது முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் எனக்கு பாராட்டுப் பத்திரங்களைத் தந்து கௌரவித்தமை சிங்கள மொழியுடனான எனது இலக்கியப் பணிக்;குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறேன்.

அது மாத்திரமின்றி எமது திணைக்களத்தின் தெசதிய என்ற சிங்கள சஞ்சிகைக்கு நான் வழங்கிய அரசியல் பேட்டித் தொடர் ஒன்றுக்கு அரச கரும மொழிகள் திணைக்களம் இன ஐக்கியத்துக்கான ஊடக பங்களிப்பு என்ற பெயரில் எனக்கு விருதும், பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது. சிங்கள மொழியிலும் எனது நூலொன்று வெளிவர வேண்டும் என்ற வேட்கையும் எனக்குண்டு. அத்தோடு எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் நான் சிங்களத்தில் மொழிபெயரப்புச் செய்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் நாடினால் அந்த சிங்கள மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப்பும் நூலாக வெளிவரும்.



இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?

இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள் காய்தல், உவத்தல் இன்றி இருக்க வேண்டும். எழுத்தாளர்களின் உணர்வுகளை மதித்து அவரை அத்துறையில் மேம்படுத்துவதாக விமர்சனங்கள் அமையவேண்டுமே தவிர, அந்த எழுத்தாளர்களை மட்டந்தட்டும் ஆயுதங்களாக அமையக்கூடாது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். குறித்த எழுத்தாளர்களிடம் குறைபாடுகள் இருந்தால் அவற்றை மிகவும் பக்குவமாக, பவ்வியமாக எடுத்துச் சொல்லும் வகையில் விமர்சனங்கள் அமைந்தால்தான் அந்த எழுத்தாளர் மேலும் வளர, வாழ வழி பிறக்கும்.

அவ்வாறே எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் சிறந்த டொனிக்காகத் திகழ்வதும் நல்ல விமர்சனங்களும், விருதுகளும்தான். ஒரு சிறந்த படைப்பாளியைப் பாராட்டி, விருது வழங்கிக் கௌரவித்தால் அவர் மென்மேலும் நல்ல படைப்புகளைத் தருவதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். எனவே வரப்புயர நீருயர்வது போல் விருதுகள், நல்ல விமர்சனங்களால் எழுத்தாளரும் வாழ்வர், வளருவர் என்பதே என் கருத்து. ஆனால் இன்று தடியெடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரர்களாகி விட்டனர். அவ்வாறே எடுத்ததற்கெல்லாம் இன்று பொன்னாடையும் பட்டங்களும் என்றாகிவிட்டமை தான் கவலைக்குரிய விடயம். பொருத்தமானவர்களுக்கு மட்டும் உரிய கௌரவத்தை கொடுத்தால் மட்டுமே அந்த கௌரவம் சிறப்புப் பெறும்.



இதுவரை தாங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி?

கலாசார அமைச்சினால் 2006ஆம் கலாபூஷணம் விருது பெற்றமையும், 2009ம் ஆண்டு மகளிர் விவகார அமைச்சின் சர்வதேச மகளிர் தின விழாவின் போது இலங்கையின் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவினால் கௌரவம் பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அவ்வாறே அகில இன நல்லுறவு ஒன்றியம், இலக்கியத் தாரகை என்றும் தகவல் ஜோதி என்றும் இசைக்கோ நூர்தீன் ஹாஜியின் முஸ்லிம் கலைஞர் முன்னணி ஊடகத் தாரகை என்றும், பட்டமளித்து என்னை கௌரவித்தன. மலையக கலை கலாசாரப் பேரவை, ரத்னதீபம் விருதும், அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவினர், இளம் படைப்பாளர் விருதும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் மாக்கான் மாக்கார் விருதும், மத்திய மாகாண கல்வி அமைச்சு எழுத்தாளர் விருதும், கொழும்பு கலை வட்டம், சாய்ந்தமருது தடாகம், சிந்தனை வட்டம், இலங்கை சமுர்த்தி அதிகார சபை ஆகியனவும் எனக்கு விருதுகளையும் பட்டங்களையும் வழங்கி என்னை கௌரவித்தன. இந்த அமைப்புக்களுக்கு என் நன்றிக் கடன் என்றுமுண்டு.


பூங்காவனம் சஞ்சிகை பற்றிய உங்கள் கருத்து யாது?

பல மலர்கள் மலர்ந்து மணம் பரப்பும் இடம்தான் பூங்காவனம். இங்கே பெரும்பான்மையான பெண் எழுத்தாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சிறந்த அரசி பவுண்டேஷன் (Best Queen Foundation) மூலம் மகுடம் சூட்டுவது போலவே நான் உங்களின் இந்த முயற்சியை இனம் காண்கிறேன். அதிலும் குறிப்பாக இரண்டு பெண் படைப்பாளிகளே இச் சஞ்சிகையின் இணை ஆசிரியைகளாக இருப்பதுவும் தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போல மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

ஒரு நூல் பிரசவம் ஒரு குழந்தை பிரசவத்தை ஒத்தது. இங்கே நீங்கள் சஞ்சிகை வெளியிடுகிறீர்கள். குழந்தை பத்து மாதச் சுமை. நீங்களோ மூன்று மாதங்களில் சஞ்சிகையை பிரசவிக்கிறீர்கள். அதனை தொடர்ச்சியாக பிரசுரிப்பது என்பது இலங்கையைப் பொறுத்தவரை இமாலயச் சாதனைதான். உங்கள் இருவரின் இந்தப் பெரு முயற்சிக்கு முதலில் ஒரு சபாஷ் போட வேண்டும்.


பூங்காவனம் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

பூங்காவனத்தின் நறுமணத்தைச் சுவைத்திடத் தவறாதீர்கள். மூத்த படைப்பாளிகளை மதித்து நடங்கள். அவர்களது படைப்புகளைத் தேடிப் படியுங்கள். தலை குனிந்து படிப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே என்ற தாரக மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். பணிவு, கனிவு நிறைந்த ஒருவரிடம் சமுதாயம் விரும்பும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கலாம். எனவே வாசகர்களாகிய நீங்களும் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக மிளிரலாம்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

07. திருமதி ராணி சீதரன் அவர்களுடனான நேர்காணல்

திருமதி ராணி சீதரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களது எழுத்துலக பிரவேசம் பற்றிக் கூறுங்கள்?

நான் 09 ஆம் வகுப்பில் படிக்கும் போது முதன் முதலில் வேதனை என்ற சிறுகதையை எழுதினேன். நிறைய கவிதைகள் எழுதுவதுடன் கவியரங்குகள், பேச்சுப் போட்டிகள், நாடகம், விவாதம் போன்றவற்றில் பங்குபற்றி இருக்கிறேன். இவற்றை விடவும் சிறுகதை, மர்ம நாவல், துப்பறியும் தொடர் என்பவற்றை விரும்பிப் படிப்பேன். இவற்றினால் எனது இலக்கியப் பிரவேசம் வித்திட்டதாக கூற முடியும்.


எழுத்துலக முன்னோடிகளாக நீங்கள் யாரைக் கொண்டுள்ளீர்கள்?

புதுமைப் பித்தனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயகாந்தன், மௌனி போன்றோரின் கதைகளையும் விரும்பிப் படிப்பேன்.


உங்களைக் கவர்ந்த படைப்பாளிகளின் தாக்கம் உங்களின் படைப்புக்களில் பிரதிபலிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட எனக்கு பிடித்த எழுத்தாளர்களுடன் இன்னும் ஜானகிராமன், அம்பை, வாசந்தி, தாமரைச் செல்வி, நந்தி என்போரின் மொழிநடையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் எனது பாணியில் எழுதவே விரும்புகின்றேன்.


இதுவரை நீங்கள் வெளியிட்டுள்ள நூல்களை பட்டியல் படுத்திக் கூறுவீர்களா?

01. மாங்கல்யம் தந்து நீயே - 1வது சிறுகதைத் தொகுதி (1999)

02. தேன் சிட்டு - சிறுவர் பாடல் (2000)

03. கன்னியாதானம் - 2வது சிறுகதைத் தொகுதி (2001)

04. நடுகல் - 3வது சிறுகதைத் தொகுதி (2002)

05. இலக்கியக் கட்டுரைகள் (2005)

06. நிலவும் சுடும் - 4வது சிறுகதைத் தொகுதி (2010)


இதுதவிர பாடசாலை மாணவர்களை முன்னோக்கியதாக தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், வினாவிடை, செய்யுள் இலக்கியம் போன்ற தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறேன்.


இத்தகைய புத்தகங்களை வெளியிட மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள். அச்சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஆதரவாய் இருந்தவர்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

எனது இலக்கிய முயற்சிகளில் எனக்கு உதவுவதிலும், ஊக்குவிப்பதிலும் முன் நிற்பவர் எனது கணவரே. எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் அவரே முகம் கொடுப்பார் என்று கூறலாம். அடுத்து இலக்கிய நண்பர்கள். அவர்களைத் தவிர எனது ஆக்கங்களை வாசித்து தட்டிக்கொடுக்கும் ஆசிரியர்கள் போன்றோரையும் குறிப்பிடலாம்.


ஆசிரிய பணிகளுக்கிடையில், குடும்பப் பொறுப்புக்களையும் வகித்துக் கொண்டு இலக்கியத்தில் ஈடுபடுவதை நீங்கள் என்றாவது சிரமமாக நினைத்திருக்கின்றீர்களா?

எனது பொறுப்புக்கள், கடமைகள் என்பவற்றோடு படைப்பு முயற்சிகளுக்கு நான் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கின்றேன். என்னை அழுத்தம் சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியாகவும் இலக்கியம் இருப்பதாக நான் உணர்ந்ததால் இந்த எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகின்றேன்.


உங்கள் மகளான கீர்த்தனி சீதரன், இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டி வருவது பற்றி யாது கூறுவீர்கள்?

நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். இவர் பல்கலைக்கழக சஞ்சிகைகளில் எழுதி வருவதோடு ஞானம் சஞ்சிகையிலும், தினக்குரல் பத்திரிகையிலும் கவிதைகளை எழுதி வருகின்றார். அவரது படைப்புக்களை என்னுடன் பகிர்ந்து சரிபார்த்துக்கொள்வார். தற்போது நிறைய கவிதைகளை எழுதியிருக்கும் அவர் கவிதை நூலொன்றை வெளியிடும் எண்ணத்திலிருக்கிறார்.


சிறுகதைகளுக்கான கருப்பொருளை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றீர்கள்?

எனது சூழலில் நடக்கின்ற நிகழ்வுகளை வைத்து நான் சிறுகதைகளை எழுதி வருகிறேன். எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மனதைப் பாதிக்கும் போதும் எனது கதைகளுக்கான கருப்பொருள்களை பெற்றுக்கொள்கிறேன்.


உங்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள் பற்றி சொல்லுங்கள்?

* அகில இலங்கை உலக ஆசிரியர் தினப் போட்டியில் கவிதைக்கான பரிசும், பாராட்டும்

* திருகோணமலை சாகித்திய விழா போட்டிகளில் சிறுகதை, கவிதை என்பன முதலாமிடம் பெற்றமை

* தகவம் அமைப்பின் சிறுகதைத் தெரிவில் பாராட்டு


சிறுகதைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்கள் கருத்து யாது?

பலர் சிறுகதை உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். சிறந்த எழுத்து ஆளுமை, கருப்பொருள் தேர்வு, படைப்பு நுட்பம், வாசிப்பு பயிற்சி போன்றவற்றில் கவனம் தேவை. காலமாற்றத்தைக் கருத்திற்கொண்டு பல புதிய கருப்பொருள்களோடு படைப்புக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளிவர வேண்டும்.


நாவல்கள் படைப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகின்றீர்களா?

நாவல்கள் இரண்டை நான் எழுதியிருக்கிறேன். இன்னும் வெளியிடவில்லை. சிறுகதையின் மூலம் ஏற்படுத்தும் தாக்கம் நாவலை விட அதிகமானது என்பதால் சிறுகதையிலேயே எனது கவனம் உள்ளது.


ஒரு படைப்பாளியின் திறமை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒரு படைப்பு உயிர்த்துடிப்பு பெற வேண்டுமானால் படைப்பாளியின் எழுத்து வாசகனோடு பேச வேண்டும். அவனைத் தனித்துவப்படுத்துவதும், வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதும் எழுத்தை ஆளும் தன்மை என்றுதான் கூற வேண்டும். படைப்புக்களில் சொற்கள் வீச்சாக வந்து விழுந்து உணர்வுகளைத் தட்டிவிடும் வல்லமை பெறும்போது அந்தப் படைப்பு நெஞ்சில் நிலைத்துவிடுகிறது.


நீங்கள் பெண் எழுத்தாளர் என்ற வகையில் பெண்ணியம், பெண் மொழி பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

பெண்களின் பிரச்சனைகள், அழுத்தங்கள் பற்றி பெண் படைப்பாளிகளால் வெளியுலகுக்கு கொண்டு வரப்படுவதோடு இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற தடுப்புச் சுவர்களுக்குள் நின்று சொல்வதை விடுத்து இயல்பு நிலையை யதார்த்தபூர்வமாக சித்தரிப்பது படைப்புக்களின் காத்திரத் தன்மையை பிரதிபலிப்பதாக அமையும்.


எழுத்துலகில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாக எனது சிறுகதையொன்று இலக்கியத் திருட்டுக்கு உள்ளானதைக் குறிப்பிடலாம். பிறந்த மண் என்ற எனது சிறுகதை பொன் - பரன் என்பவரின் பெயரில் 2004 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்தது. எனது கணவர் அதை வாசித்துவிட்டு, இந்தக் கதையை வாசித்துப் பாரும். உமது கதை அல்லவா? என்றார்.

நான் அதை வாசித்துவிட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒரு சொல் கூட மாற்றம் இல்லாமல் அப்படியே பொன் - பரன் என்ற பெயரில் எழுதியிருந்தார். அதன் பின் குறிப்பிட்ட பத்திரிகையோடு தொடர்புகொண்டு கேட்ட பொழுது தவறு நடந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.


உங்களுக்குக் கிடைத்த எழுத்துலக நண்பர்களில் மனசைத் தொட்ட நண்பர்கள் பற்றி கூற முடியுமா?

ஆம். ரூபாராணி ஜோசப் அவர்கள் சிறந்த பல்வகை ஆளுமையுள்ள எழுத்தாளர். பல துறைகளிலும் கால் பதித்தவர். இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் உள்ளவர். மாணவர்களையும் இலக்கியத் துறையில் ஊக்குவித்தவர். அவர் எனது ஆக்கங்களை விரும்பிப் படித்துவிட்டு விமர்சிப்பார். அது மட்டுமல்ல. கண்டியில் நடைபெற்ற கலை விழாவிலே என்னையும் அழைத்து கௌரவித்தார்.



இதெல்லாம் ஏன் செய்கிறீர்கள்? இது எனக்கு பொருத்தமற்றது என நான் மறுத்தபொழுது, 'ராணி பேசாமல் இரும். உமது பணி தொடர வேண்டும். உம்மைப் பலரும் பாராட்ட வேண்டும். இது உமக்கல்ல. இது உமது எழுத்துக்குரிய கௌரவம்' என்று சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அவர் மறைந்தாலும் அவரது வார்த்தைகள் என் காதுகளில் இன்னும் ஒலிக்கின்றன.


இலக்கிய விருதுகள் பற்றிய உங்கள் கருத்தினை பூங்காவனம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்?

விருதுகள் பற்றி எனக்கு உடன்பாடான கருத்து இல்லை. இந்த இடத்தில் கவிஞர் வில்வரத்தினம் அவர்களை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். ஷஷராணி நான் ஒருபோதும் சாகித்திய விருதுகளுக்காய் எழுதுபவன் அல்ல. அதற்கு ஆசைப்படுபவனும் அல்ல. நீங்களும் வீணாக புத்தகங்களை அனுப்பி சிரமப்படாதீர்கள். எல்லாம் எப்போதோ முடிந்த காரியம் என்று கூறுவார். அது உண்மை. அதற்காக விருது பெற்றவர்தான் சிறந்த எழுத்தாளர் என்பதில்லை. தெரிவு செய்யப்படாத எழுத்தாளர் தரமற்றவர் என்ற நிலையும் இல்லை.


எழுத்தாளர் - வாசகர் தொடர்பு ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை மெருகேற்றும். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

எழுத்தாளர் வாசகர்களின் திருப்தியை ஆர்வத்தை மையப்படுத்தி எழுத வேண்டும். புதிய சிந்தனைகளோடு புதிய உத்திகள் பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பது எழுத்தாளரின் திறமை. அதற்காக வாசகர்கள் விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமாகாது. வாசகர்களின் விமர்சனங்கள்தான் படைப்பாளியை தூக்கி நிறுத்தவல்லன. அந்த வகையில் நிறைகளைவிட குறைகளையே நான் வரவேற்கிறேன். அதை ஏற்றுக்கொள்வதனால்தான் சில கதைகளில் வாசகர்களின் கருத்தினை அனுசரித்து மாற்றங்களையும் செய்திருக்கிறேன்.


இளம் படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

அவர்கள் படைப்புலகம் பற்றியும், அதன் தேவை பற்றியும் சரியானதும் உறுதியானதுமான விளக்கங்களோடு படைப்புலகில் பிரவேசிக்க வேண்டும் என்பதையே முதலாவதாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கூறிக் கொள்கிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

06. திருமதி. நயீமா சித்தீக் அவர்களுடனான நேர்காண

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.07.28

திருமதி. நயீமா சித்தீக் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




இலங்கையின் மலையகத்தில் பதுளை - ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் பண்டாரவளை சாஹிராக் கல்லூரி, ஹப்புத்தளைத் தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி, பசறை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக் கலைமாணிப் பட்டத்தையும், கல்வித் துறை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

1960 களில் 7ஆம் வகுப்பிற் கற்கும்போது கல்வி எனும் தலைப்பில் இவர் எழுதிய முதல் ஆக்கத்தை தினகரன் பிரசுரித்தது. அதனைத் தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள், குட்டிக்கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டார்.

இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு நயீமா ஏ. பஷீர் என எழுதிவந்த இவர் திருமணத்தின் பின்பு நயீமா சித்தீக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். 1970 ஆம் ஆண்டில் ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ளார். அவரிடமிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களை பூங்காவனம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.


இலங்கையின் முன்னணி முஸ்லிம் பெண் சிறுகதை எழுத்தளரான உங்களின் குடும்பச்சூழல், வாழ்வுநிலை பற்றி கூறுங்கள்?

அழகிய இயற்கை எழில் கொஞ்சும் ஹப்புத்தளை என்ற பிரதேசமே எனது ஊராகும். எனது தாயார் தாஜ் பீபி. தந்தை அப்துல் பஷீர் மரிக்கார். கணவர் முஹம்மத் சித்தீக். பிள்ளைகள் பாத்திமா சியாமா, பாத்திமா ஷகீமா, பாத்திமா ஸஹ்ரானா. எனது பாட்டி, தாய் இருவருமே நிரம்பிய வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள். பாட்டியின் சேமிப்பாக இருந்தவை பல்வேறு வகைப்பட்ட இஸ்லாமிய இலக்கியங்கள். மிகவும் கவனமாகவும் பயபக்தியுடனும் அவர் அவற்றைப் பாதுகாத்தார். தாய், பாட்டி இருவருமே வாராந்த, மாதாந்த தமிழ் சஞ்சிகைகள் அனைத்தையும் வாங்கி, தவறாது வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

கல்கி, அகிலன், ந. பார்த்தசாரதி, லக்ஷ்மி, கி.வா. ஜகன்னாதன், சாண்டில்யன், ஜெயகாந்தன், மு.வ என்று எல்லோரது நாவல்களையும் வாசிப்பதோடு நின்றுவிடாமல் சிறந்த விமர்சகராவும் எனது தாய் இருந்ததை நினைத்து நான் வியப்பதுண்டு. ஏனென்றால் அதிகம் வெளியே செல்லாத, எட்டாம் வகுப்பு வரையே அதுவும் ஆங்கில மொழி மூலம் கற்ற அவரால் இவற்றை எப்படிச்செய்ய முடிந்தது என்பதுதான்.


எழுத்துத்துறைக்குள் தாங்கள் காலடி எடுத்து வைக்க முன்னோடியாக இருந்தவர்கள் பற்றி?

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நான் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றதும் தமிழ் மீதுள்ள ஆசை துளிர்க்க இறைவன் வழிவகுத்தான். (அல்ஹம்துலில்லாஹ்) தொடர்ந்து பசறை மத்திய கல்லூரியின் விடுதி வாழ்க்கை, அங்கே சிந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, நல்ல நூலகம் ஆகியனவும் என் எழுத்துத் துறையில் பாரிய பங்களிப்புச் செலுத்தியுள்ளன. அத்துடன் பசறை மத்திய கல்லூரியின் தமிழ் ஆசிரியர் மதிப்பிற்குரிய அமரர் ஐ.சாரங்கபாணி அவர்களும் என் எழுத்துத் துறையின் முன்னோடியாவார்.

அவரது சொந்த நூல்களை வாசிக்கக் கொண்டு வந்து தருவார். அடிக்கடி போட்டிகளை நடாத்தி அவரது சொந்தப் பணத்தில் பரிசுப் புத்தகங்களை வாங்கித்தருவார். அவரால் தரப்பட்ட ஏராளமான தரமான புத்தகங்கள் இன்றும் என்னிடம் உள்ளன.

இந்த உதவும் கரங்களையும், வழிகாட்டிகளையும் இறைவன் எனக்கு அளித்தான்.


சிறுகதைத் துறை, நாவல் துறைகளில் ஈடுபட்டுவரும் நீங்கள் இதுவரை எத்தனை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள்? அவை யாவை?

எனது சிறுகதைகளை பொதுவாக இலங்கையின் எல்லாத் தமிழ் வெளியீடுகளும் பிரசுரித்தன. கட்டுரைகள் பல நூற்றுக் கணக்காக வெளிவந்தன. அவ்வப்போது கவிதைகளையும் எழுதினேன். நான் இதுவரை எழுதிவெளியிட்ட நூல்கள் பின்வருமாறு:-

1. வாழ்க்கைப் பயணம் (1975) - நாவல்
(வீரகேசரி பிரசுர வெளியீடு)

2. வாழ்க்கைச் சுவடுகள் (1989) -
01 ஆவது சிறுகதைத் தொகுதி
(கல்ஹின்னை தமிழ் மன்ற வெளியீடு)

3. வாழ்க்கை வண்ணங்கள் (2004) -
02 ஆவது சிறுகதைத் தொகுதி
(உடதலவின்னை சிந்தனை வட்ட வெளியீடு)

4. வாழ்க்கை வளைவுகள் (2005) -
03 ஆவது சிறுகதைத் தொகுதி
(மணிமேகலைப் பிரசுரம்)

5. ஆயிரம் வினாக்களும் விடைகளும்
(தமிழ் பாட நூல்)

6. சீறாப்புராணம் நபி அவதாரப் படலம்
(தமிழ் பாட நூல்)


வானொலித் துறையில் உங்களது பங்களிப்பு பற்றி?

தரம் 9 படிக்கும் போது வானொலி கலைஞர் தேர்வில் தெரிவானேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினேன். பின்னர் பிரதிகளை எழுதினேன். மாதர் மஜ்லிஸ் உரைச் சித்திரங்கள், நாடகங்கள் என்பவற்றை எழுதினேன். பல வானொலி கவியரங்குகளில் பங்குபற்றினேன்.

சாதாரண தரம் படிக்கும்போது வானொலிக்காக நான் எழுதியனுப்பிய முதல் பேச்சுப் பிரதி பாத்திமா நாயகியின் அடிச்சுவட்டில் என்பது. அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பேசுவதற்கான நேரம், திகதி, கொடுப்பனவு என்பன குறிக்கப்பட்டு அழைப்புக் கடிதம் வந்ததையும் எனதுயிர் பாட்டியுடன் சென்று ஒலிப்பதிவு செய்ததையும் மறக்கத்தான் முடியுமா? அல்ஹாஜ் கபூர், இஸட்.எல்.எம். முஹம்மத், குத்தூஸ் போன்ற பெரியார்கள் எனக்கு வழிகாட்டியதை இப்போதும் நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன். தொடர்ந்து வானொலிக் கதவுகள் எனக்காகத் திறந்துவிடப்பட்டன.



சிறந்த மேடைப் பேச்சாளராக இருக்கும் நீங்கள் அந்த அனுபவங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பொது மேடைகளைப் பொறுத்தவரையில் எனது முதல் பேச்சு நான் ஆண்டு ஒன்று படிக்கும் போது ஒரு ஆசிரியரின் பிரியாவிடையின் போது ஒரு வாங்கின் மேல் ஏறி நின்று பேசியதுதான். நான் கற்ற பாடசாலைகள் மேடைகளை விசாலித்துத் தந்தன. பசறை மத்திய கல்லூரி மாதிரி பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவி என்ற பதவி எனக்கு நிறைய வாய்ப்பைத் தந்தது. அக்கல்லூரியில் அக்காலத்தில் வருடாந்தம் பெரிய அளவில் இயல், இசை, நாடகம் என மூன்று நாட்களுக்கு முத்தமிழ் விழா நடக்கும். எத்தனை பிரமாண்டம்? எத்தனை நிகழ்வுகள்? எத்தனை பெரியோர்களின் வரவுகள்? மர்ஹூம்களான ஈழமேகம் பகீர் தம்பி அ.ஸ. அப்துஸ்ஸமது ஆகியோர்கள் மேடையில் பேசியவை இன்னும் பசுமையான நினைவுகளே.


தாங்களின் ஆரம்பகாலப் படைப்புக்கள் பெருமளவு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை பிண்ணனியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதற்கான காரணம் யாது?

பதினாறாவது வயதில் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் அகில இலங்கை பெண்கள் பிரிவின் தலைவியானேன். பொதுவாக மத்திய மலை நாட்டில் நான் ஏறியிறங்காத தோட்டங்கள் இருக்கவே முடியாது. காங்கிரஸ் கூட்டங்கள் மாத்திரமல்லாது பல்வேறு மன்றங்களின் கூட்டங்களுக்கும் சென்று உரையாற்றி இருக்கிறேன். அரச பாடசாலையில் ஆசிரியராகுமுன் அசோகா கல்லூரி என்று ஒரு பாடசாலையை நானே ஆரம்பித்தேன். தோட்டப்புறத்து மாணவர்கள் இதில் கல்விகற்றனர். இவ்வாறான அனுபவங்கள்தான் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்வியலை படைப்புகளுக்கூடாக சொல்ல காரணமாக இருந்தது எனலாம்.



ஊடகத்துறையில் உங்களுக்கிருந்த தொடர்பு பற்றியும், இதுவரை உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றியும் குறிப்பிடுவீர்களா?

ஆரம்பத்தில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஹப்புத்தளை பிராந்திய நிருபராக கடமை புரிந்துள்ளேன்.

இதுவரை கிடைத்த விருதுகள்...

1. நஜ்முல் அதீப் (இலக்கியத் தாரகை)
1991 முஸ்லிம் சமயக் கலாசாரத் திணைக்களம்
2. சிறுகதை செம்மணி - 2004 சிந்தனை வட்டம்
3. கலாபூஷணம் - 2005 இலங்கை அரசு

அவ்வப்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு, அரசுசார்பற்ற அமைப்புக்களால் பொன்னாடை, பொற்கிழி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளேன்.



இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எமது பணி ஒரு அற்பத்துளியாக இருந்தாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதும், எழுத்தும் பேச்சும் எவ்வழிகளிலாவது மக்களுக்கு உதவ வேண்டுமென்பதுமே எனது நோக்கம். நமது எந்தச் செயல் சுயநலமில்லாததாக இருக்கிறதோ நிச்சயமாக அதற்கு சமூக அங்கீகாரம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நல்லது செய்தோம் என்ற மனநிறைவு கிடைக்கும்!!!



நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

05. திருமதி. எம்.எஸ். தேவகௌரி அவர்களுடனான ஒரு நேர்காணல்

திருமதி. எம்.எஸ். தேவகௌரி அவர்களுடனான ஒரு நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



பெயர் - எம்.எஸ். தேவகௌரி

பிறந்தது படித்தது - கிளிநொச்சி

பட்டப்படிப்பு - யாழ்ப்பாணப் பல்கலைகழகம் (தமிழ் சிறப்பு)
கொழும்பு பல்கலைக்கழகம் பத்திரிகையியல் டிப்ளோமா

முதல் தொழில் - கல்வித்திணைக்களம் - எழுதுவினைஞர்

ஆர்வத்துடன் இணைந்தது - வீரகேசரி - பத்திரிகையாளர் (1993)
தினக்குரல் - ஞாயிறு பதிலாசிரியர் (1997)

தற்போது - இலங்கை இதழியல் கல்லூரி விரிவுரையாளர் (2005 முதல்)

பிடித்தது - பயணங்கள்

நூலானது - பல்கலைக்கழக ஆய்வு - 80களில் மல்லிகை விமர்சனங்கள்

பங்களிப்பு - ஊடகத்துறை பால்நிலை சமத்துவம் பற்றி பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், நூல்களை செம்மைப்படுத்தல் ((Book Editing) கல்வித்திணைக்களம், பெண்கள் தொடர்பாக கூட்டமைப்பு

தனிப்பட்ட இணைய பக்கம் - www.paadini.blogspot.com

தொடர்புகட்கு - thevagowry@gmail.com


இலங்கை ஊடகவியல் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் நீங்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?

ஊடகத்துறையை நான் தேர்ந்தெடுத்ததே சிந்தனைச் சுதந்திரத்திற்கான வழியாக அது இருந்தததாலேயே. அதை கற்பிக்கும்போதும் மற்றவர்களிடையே சிந்தனையை விரிவுபடுத்தி ஆளுமையில் பல பரிமாணங்கள் ஏற்படுத்த முடியும். அதை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்த முடியும். இந்த வழியை நான் மற்றவர்களுக்கு முறைமைப்படுத்தப்பட்ட கல்வியினூடாக வழங்கும்போது தொழில் திருப்தி ஏற்படுகிறது.


ஏற்கனவே பத்திரிகைத்துறையில் கடமையாற்றிய நீங்கள், அந்த அனுபவம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அது எனக்கு ஒரு தொழிலாகத் தெரியவில்லை. வாழ்ந்ததே அதற்குள்தான். அதை வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு, தவறுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனம், பல ஊடகத்தொடர்பாளர்களை திருப்திப்படுத்த வேண்டிய கடமை எல்லாமே என்னைப் பட்டை தீட்டிக்கொள்ள சிறந்த அனுபவமாக இருந்தது.


நீங்கள் சிறுகதைத் துறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். தற்போதைய எழுத்து நிலை எவ்வாறு இருக்கிறது?

ஆம். உண்மைகளை மட்டுமே எழுதப் பழக்கிய பத்திரிகைத் துறையில் இணைந்த பின் கற்பனை பண்ண முடியவில்லை. இனி மீண்டும் முயற்சிக்க வேண்டும்.


ஊடக்கல்வியை கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

எதுவும் முறைமைப்படுத்தப்பட்ட கல்வி முறைக்குள்ளால் வரும்போது அதில் நேர்த்தி திறன் அதிகமாகவே இருக்கும். ஊடகத்துறையும் அவ்வாறானதே. பயிற்சியினூடாகத்தான் இதை நாம் வழங்குகின்றோம். இலகுவில் விரைவாக ஊடகத்துறை நுணுக்கங்களைப் பெற்றுக்கொள்ள இத்தகைய கல்வியைப் பெறுவதே சிறந்த வழி.


ஊடகக் கல்வியானது படப்பிடிப்பு, செய்தி சேகரித்தல் போன்றவற்றில் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?

ஊடகக்கல்வி என்பது எழுதுவதற்கோ, செய்தி வாசிப்பதற்கோ பழகுவது மட்டுமல்ல. ஒரு ஊடகவியலாளன் பத்திரிகையுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்றால் ஒரு செய்தியைக் கண்டுபிடிப்பது, அதை சரிவர பெற்றுக் கொள்வது, அதற்கான புகைப்படம் எடுப்பது, அதைக் கணினி மயப்படுத்துவது, சரி பிழை பார்ப்பது, பக்க வடிவமைப்புச் செய்வது என சகல துறைகளிலும் அறிவுறை, நடைமுறைப் பயிற்சியும் வழங்குகிறோம். இன்று நவீன ஊடகங்களின் வருகை ஊடக இணையத்தளங்களை உருவாக்கியுள்ளது. இது பல்லூடக செயற்பாட்டைக் கொண்டது. அதாவது பத்திரிகை வானொலி தொலைக்காட்சி மூன்றும் இணைந்த செயற்பாடு. எனவே ஒரு ஊடகவியலாளனும் பல்துறைத் திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும். எனவே மாணவர்களுக்கு வெளியில் சென்று செய்தி சேகரிக்கவும், அதை எப்படி எழுத வேண்டும் என்றும் அதற்கான படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்றும், பக்கத்தை எப்படி வடிவமைக்க வேண்டும் என்றும் பயிற்சியளிக்கிறோம். இவை இன்றைய நவீன யுகத்தில் மிக முக்கியமானவை.


இன்று இலங்கையில் எத்தனை ஊடகக்கல்வி நிறுவனங்கள் தொழிற்படுகின்றன? அதில் எத்தனை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்? எத்தகைய தகைமை கொண்டோர் இந்தத் துறைக்குள் சேர்க்கப்படுகின்றனர் என்று கூறுங்கள்? அது பற்றி விரிவாக குறிப்பிடுவீர்களா?

ஊடகக்கல்வி நிறுவனம் என்ற வகையில் முழுநேரக் கற்கை நெறியாக முதன் முதல் ஆரம்பித்ததும் தொடர்ந்து செல்வதும் இலங்கையின் ஊடகவியல் கல்லூரி மட்டுமே. இது இலங்கையிலுள்ள ஊடக நிறுவங்களின் தலைவர்களின் அமைப்பு, பத்திரிகையாசிரியர்களின் அமைப்பு, சுதந்திர ஊடகவியலாளர்கள் அமைப்பு, மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்த பல அமைப்புகள் இணைந்து உருவாக்கியதே இலங்கை ஊடகவியல் கல்லூரி. இதற்கு ஆலோசனையும் அனுசரனையும் வழங்கி வருவது சுவீடன் நாட்டின் போஜோ என்ற ஊடகவியற் கற்கைக்கான நிறுவனமும் சுவீடன் கல்மா பல்கலைகழகமுமாகும்.

இங்கே தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூலம் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகிய பிரிவுகளில் கற்பிக்கப்படுகிறது. இது ஒருவருட ஊடகவியல் டிப்ளோமா பயிற்சி நெறி. திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான முழுநேர கற்கை நெறி. க.பொ.த. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்திபெற்ற ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் பொதுப் பரீட்சை ஒன்றின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொரு மொழியிலும் ஒரு பிரிவில் பத்து மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர். பத்துப்பேருக்கும் சிறந்த பயிற்சி வழங்குவதே இதன் நோக்கம். நிரந்தர விரிவுரையாளர்களும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இங்கு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவர்.


ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். இலக்கியவாதிகள் ஊடகவியலாளராக இருக்கின்றனர் என்ற கருத்தோடு ஒன்றிக்கிறீர்களா? ஏன்?

ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். அதே போல் இலக்கியவாதிகளும் ஊடகவியலாளராக செயற்படுகின்றனர் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இலக்கியவாதிகளில் சிலர் ஊடகவியலாளர்களாக இணைந்து செயலாற்றுகின்றனர். ஊடகவியல் என்பது உண்மையை துல்லியமாக பக்கச்சார்பின்றி முன்வைத்தலாகும். இதற்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளின் சமூக ஆர்வம், மொழி ஆளுமை ஊடகவியல் துறைக்கு பெரிதும் கைகொடுக்கும். ஆரம்பத்தில் எழுதத் தெரிந்த இலக்கியவாதிகள்தான் ஊடகத்துறையில் இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கைலாசபதி ஒரு சிறந்த இலக்கியவாதி, விமர்சகர், ஆய்வாளர். அவர் தினகரன் ஆசிரியராக இருந்தவர்.


உங்களிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி ஊக்குவிக்கலாம் என நினைக்கிறீர்கள்?

ஒரு ஊடகவியலாளனுக்கு எல்லாத்துறையிலும் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இலங்கை எழுத்தாளர்கள், சிறந்த நூல்கள், விமர்சனங்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுவோம். மாணவர்களும் தமது ஆர்வத்தால் எமது நூலக வளங்களை நன்கே பயன்படுத்துவர்.


ஊடகத்துறையில் ஏற்படும் சவால்கள் என்று எதையேனும் குறிப்பிடலாமா?

உண்மையை மிகச்சரியாக பக்கச்சார்பின்றி முன்வைத்தலே ஊடகத் தொழிலின் அடிப்படை. அதுவே பெரிய சவால்தான். பிறரிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களை கையாள்வது தனிமனித ஆளுமையுடன் சம்பந்தப்பட்டது. ஒரு செய்தியை ஊடகவியலாளர்கள் இனம் கண்டாலும் அதை சரியாக ஊடகங்களில் முன்வைக்கும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எனவே ஊடகத்துறையே ஒரு சவால் மிக்க துறைதான். சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு வெளியிலிருந்தும் உள்ளுக்குள் இருந்தும் பல தடைகள் பல வடிவங்களில் வரும். அவற்றை கடப்பதும் லாவகமாக கையாள்வதும் எம் முன் உள்ள சவால்தான்.


இளம் ஊடகவியலாளர்களுக்கு அல்லது ஊடகத்துறை மாணவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

ஊடகத்தினூடாக வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் மக்களிடையே அதிக தாக்கத்தை விளைவிக்க வல்லன. மக்களிடையே கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள பாரியளவில் பங்களிப்பவை ஊடகங்களே. எனவே உண்மையான செய்திகளை துல்லியமாகவும் நியாயமாகவும் பக்கச்சார்பின்றியும் முன்வைக்க அதிகபட்சம் முயல வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருடைய தலையீட்டுக்காகவும் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாம். எப்போதும் ஊடகவியலாளருக்கான ஒழுக்க நியமங்களை கருத்தில் கொள்ளுங்கள்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதைப்போல் ஊடகவியலாளர் (Journalist) என்று சொல்லிப் பெருமைப் பட தொழில் வாண்மை (Professional) தொழிலாக இது மாறவேண்டும். அதற்காக தொழில் தகைமையை வளர்த்து உயர்தர ஊடக கலாச்சாரத்தை பேணிக்கொண்டு செயற்பட சகலரும் ஒத்துழைக்க வேண்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்