பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

07. திருமதி ராணி சீதரன் அவர்களுடனான நேர்காணல்

திருமதி ராணி சீதரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களது எழுத்துலக பிரவேசம் பற்றிக் கூறுங்கள்?

நான் 09 ஆம் வகுப்பில் படிக்கும் போது முதன் முதலில் வேதனை என்ற சிறுகதையை எழுதினேன். நிறைய கவிதைகள் எழுதுவதுடன் கவியரங்குகள், பேச்சுப் போட்டிகள், நாடகம், விவாதம் போன்றவற்றில் பங்குபற்றி இருக்கிறேன். இவற்றை விடவும் சிறுகதை, மர்ம நாவல், துப்பறியும் தொடர் என்பவற்றை விரும்பிப் படிப்பேன். இவற்றினால் எனது இலக்கியப் பிரவேசம் வித்திட்டதாக கூற முடியும்.


எழுத்துலக முன்னோடிகளாக நீங்கள் யாரைக் கொண்டுள்ளீர்கள்?

புதுமைப் பித்தனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயகாந்தன், மௌனி போன்றோரின் கதைகளையும் விரும்பிப் படிப்பேன்.


உங்களைக் கவர்ந்த படைப்பாளிகளின் தாக்கம் உங்களின் படைப்புக்களில் பிரதிபலிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட எனக்கு பிடித்த எழுத்தாளர்களுடன் இன்னும் ஜானகிராமன், அம்பை, வாசந்தி, தாமரைச் செல்வி, நந்தி என்போரின் மொழிநடையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் எனது பாணியில் எழுதவே விரும்புகின்றேன்.


இதுவரை நீங்கள் வெளியிட்டுள்ள நூல்களை பட்டியல் படுத்திக் கூறுவீர்களா?

01. மாங்கல்யம் தந்து நீயே - 1வது சிறுகதைத் தொகுதி (1999)

02. தேன் சிட்டு - சிறுவர் பாடல் (2000)

03. கன்னியாதானம் - 2வது சிறுகதைத் தொகுதி (2001)

04. நடுகல் - 3வது சிறுகதைத் தொகுதி (2002)

05. இலக்கியக் கட்டுரைகள் (2005)

06. நிலவும் சுடும் - 4வது சிறுகதைத் தொகுதி (2010)


இதுதவிர பாடசாலை மாணவர்களை முன்னோக்கியதாக தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், வினாவிடை, செய்யுள் இலக்கியம் போன்ற தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறேன்.


இத்தகைய புத்தகங்களை வெளியிட மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள். அச்சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஆதரவாய் இருந்தவர்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

எனது இலக்கிய முயற்சிகளில் எனக்கு உதவுவதிலும், ஊக்குவிப்பதிலும் முன் நிற்பவர் எனது கணவரே. எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் அவரே முகம் கொடுப்பார் என்று கூறலாம். அடுத்து இலக்கிய நண்பர்கள். அவர்களைத் தவிர எனது ஆக்கங்களை வாசித்து தட்டிக்கொடுக்கும் ஆசிரியர்கள் போன்றோரையும் குறிப்பிடலாம்.


ஆசிரிய பணிகளுக்கிடையில், குடும்பப் பொறுப்புக்களையும் வகித்துக் கொண்டு இலக்கியத்தில் ஈடுபடுவதை நீங்கள் என்றாவது சிரமமாக நினைத்திருக்கின்றீர்களா?

எனது பொறுப்புக்கள், கடமைகள் என்பவற்றோடு படைப்பு முயற்சிகளுக்கு நான் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கின்றேன். என்னை அழுத்தம் சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியாகவும் இலக்கியம் இருப்பதாக நான் உணர்ந்ததால் இந்த எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகின்றேன்.


உங்கள் மகளான கீர்த்தனி சீதரன், இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டி வருவது பற்றி யாது கூறுவீர்கள்?

நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். இவர் பல்கலைக்கழக சஞ்சிகைகளில் எழுதி வருவதோடு ஞானம் சஞ்சிகையிலும், தினக்குரல் பத்திரிகையிலும் கவிதைகளை எழுதி வருகின்றார். அவரது படைப்புக்களை என்னுடன் பகிர்ந்து சரிபார்த்துக்கொள்வார். தற்போது நிறைய கவிதைகளை எழுதியிருக்கும் அவர் கவிதை நூலொன்றை வெளியிடும் எண்ணத்திலிருக்கிறார்.


சிறுகதைகளுக்கான கருப்பொருளை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றீர்கள்?

எனது சூழலில் நடக்கின்ற நிகழ்வுகளை வைத்து நான் சிறுகதைகளை எழுதி வருகிறேன். எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மனதைப் பாதிக்கும் போதும் எனது கதைகளுக்கான கருப்பொருள்களை பெற்றுக்கொள்கிறேன்.


உங்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள் பற்றி சொல்லுங்கள்?

* அகில இலங்கை உலக ஆசிரியர் தினப் போட்டியில் கவிதைக்கான பரிசும், பாராட்டும்

* திருகோணமலை சாகித்திய விழா போட்டிகளில் சிறுகதை, கவிதை என்பன முதலாமிடம் பெற்றமை

* தகவம் அமைப்பின் சிறுகதைத் தெரிவில் பாராட்டு


சிறுகதைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்கள் கருத்து யாது?

பலர் சிறுகதை உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். சிறந்த எழுத்து ஆளுமை, கருப்பொருள் தேர்வு, படைப்பு நுட்பம், வாசிப்பு பயிற்சி போன்றவற்றில் கவனம் தேவை. காலமாற்றத்தைக் கருத்திற்கொண்டு பல புதிய கருப்பொருள்களோடு படைப்புக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளிவர வேண்டும்.


நாவல்கள் படைப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகின்றீர்களா?

நாவல்கள் இரண்டை நான் எழுதியிருக்கிறேன். இன்னும் வெளியிடவில்லை. சிறுகதையின் மூலம் ஏற்படுத்தும் தாக்கம் நாவலை விட அதிகமானது என்பதால் சிறுகதையிலேயே எனது கவனம் உள்ளது.


ஒரு படைப்பாளியின் திறமை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒரு படைப்பு உயிர்த்துடிப்பு பெற வேண்டுமானால் படைப்பாளியின் எழுத்து வாசகனோடு பேச வேண்டும். அவனைத் தனித்துவப்படுத்துவதும், வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதும் எழுத்தை ஆளும் தன்மை என்றுதான் கூற வேண்டும். படைப்புக்களில் சொற்கள் வீச்சாக வந்து விழுந்து உணர்வுகளைத் தட்டிவிடும் வல்லமை பெறும்போது அந்தப் படைப்பு நெஞ்சில் நிலைத்துவிடுகிறது.


நீங்கள் பெண் எழுத்தாளர் என்ற வகையில் பெண்ணியம், பெண் மொழி பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

பெண்களின் பிரச்சனைகள், அழுத்தங்கள் பற்றி பெண் படைப்பாளிகளால் வெளியுலகுக்கு கொண்டு வரப்படுவதோடு இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற தடுப்புச் சுவர்களுக்குள் நின்று சொல்வதை விடுத்து இயல்பு நிலையை யதார்த்தபூர்வமாக சித்தரிப்பது படைப்புக்களின் காத்திரத் தன்மையை பிரதிபலிப்பதாக அமையும்.


எழுத்துலகில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாக எனது சிறுகதையொன்று இலக்கியத் திருட்டுக்கு உள்ளானதைக் குறிப்பிடலாம். பிறந்த மண் என்ற எனது சிறுகதை பொன் - பரன் என்பவரின் பெயரில் 2004 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்தது. எனது கணவர் அதை வாசித்துவிட்டு, இந்தக் கதையை வாசித்துப் பாரும். உமது கதை அல்லவா? என்றார்.

நான் அதை வாசித்துவிட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒரு சொல் கூட மாற்றம் இல்லாமல் அப்படியே பொன் - பரன் என்ற பெயரில் எழுதியிருந்தார். அதன் பின் குறிப்பிட்ட பத்திரிகையோடு தொடர்புகொண்டு கேட்ட பொழுது தவறு நடந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.


உங்களுக்குக் கிடைத்த எழுத்துலக நண்பர்களில் மனசைத் தொட்ட நண்பர்கள் பற்றி கூற முடியுமா?

ஆம். ரூபாராணி ஜோசப் அவர்கள் சிறந்த பல்வகை ஆளுமையுள்ள எழுத்தாளர். பல துறைகளிலும் கால் பதித்தவர். இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் உள்ளவர். மாணவர்களையும் இலக்கியத் துறையில் ஊக்குவித்தவர். அவர் எனது ஆக்கங்களை விரும்பிப் படித்துவிட்டு விமர்சிப்பார். அது மட்டுமல்ல. கண்டியில் நடைபெற்ற கலை விழாவிலே என்னையும் அழைத்து கௌரவித்தார்.



இதெல்லாம் ஏன் செய்கிறீர்கள்? இது எனக்கு பொருத்தமற்றது என நான் மறுத்தபொழுது, 'ராணி பேசாமல் இரும். உமது பணி தொடர வேண்டும். உம்மைப் பலரும் பாராட்ட வேண்டும். இது உமக்கல்ல. இது உமது எழுத்துக்குரிய கௌரவம்' என்று சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அவர் மறைந்தாலும் அவரது வார்த்தைகள் என் காதுகளில் இன்னும் ஒலிக்கின்றன.


இலக்கிய விருதுகள் பற்றிய உங்கள் கருத்தினை பூங்காவனம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்?

விருதுகள் பற்றி எனக்கு உடன்பாடான கருத்து இல்லை. இந்த இடத்தில் கவிஞர் வில்வரத்தினம் அவர்களை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். ஷஷராணி நான் ஒருபோதும் சாகித்திய விருதுகளுக்காய் எழுதுபவன் அல்ல. அதற்கு ஆசைப்படுபவனும் அல்ல. நீங்களும் வீணாக புத்தகங்களை அனுப்பி சிரமப்படாதீர்கள். எல்லாம் எப்போதோ முடிந்த காரியம் என்று கூறுவார். அது உண்மை. அதற்காக விருது பெற்றவர்தான் சிறந்த எழுத்தாளர் என்பதில்லை. தெரிவு செய்யப்படாத எழுத்தாளர் தரமற்றவர் என்ற நிலையும் இல்லை.


எழுத்தாளர் - வாசகர் தொடர்பு ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை மெருகேற்றும். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

எழுத்தாளர் வாசகர்களின் திருப்தியை ஆர்வத்தை மையப்படுத்தி எழுத வேண்டும். புதிய சிந்தனைகளோடு புதிய உத்திகள் பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பது எழுத்தாளரின் திறமை. அதற்காக வாசகர்கள் விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமாகாது. வாசகர்களின் விமர்சனங்கள்தான் படைப்பாளியை தூக்கி நிறுத்தவல்லன. அந்த வகையில் நிறைகளைவிட குறைகளையே நான் வரவேற்கிறேன். அதை ஏற்றுக்கொள்வதனால்தான் சில கதைகளில் வாசகர்களின் கருத்தினை அனுசரித்து மாற்றங்களையும் செய்திருக்கிறேன்.


இளம் படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

அவர்கள் படைப்புலகம் பற்றியும், அதன் தேவை பற்றியும் சரியானதும் உறுதியானதுமான விளக்கங்களோடு படைப்புலகில் பிரவேசிக்க வேண்டும் என்பதையே முதலாவதாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கூறிக் கொள்கிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment