பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை 08


பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்

- எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை.



பூங்காவனத்தின் 08ஆவது இதழ் பூத்து வாசகர்கள் கைகளில் தவழும் இவ்வேளையில் அதனைப் பற்றிய சில கருத்துக்களை இங்கு பதியலாம் என நினைக்கிறேன். தரமான பெண் படைப்பாளிகள் வரிசையில் இம்முறை இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவராகத் திகழும் திருமதி நூருல் ஐன் பூங்காவனத்தின் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறார். நீண்டதொரு பேட்டியினை திருமதி நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன் அவர்கன் வழங்கியிருக்கிறார். வழமைபோல் இளம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும், இளம் பெண் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் நேர்காணல் செய்திருக்கிறார்கள். இலங்கையிலே ஊடகத்துறை முஸ்லிம் பெண் ஊடக, மற்றும் தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகத் திகழும் நூருல் ஐன் அவர்கள் நீண்ட எழுத்தனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். மகளிர் தினச் செய்தியாகவும், புத்தாண்டுச் செய்தியாகவும் ஆசிரியர் குழு தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. நாகரிகம்தான் பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணிய சிந்தனை வாதிகள் பெண்ணியம் என்றால் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அர்த்தம் பொதிந்தவை.

குடும்பத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோர் தவறான வழியில் நடப்பதனால் பிள்ளைகளும் தவறான வழிக்குப் போவார்கள் என்பதற்கு உதாரணமாக இக்ராம் எம். தாஹா எழுதியுள்ள 'வழிகாட்டி' என்ற சிறுகதையும், தங்கைப் பாசத்தினால் தங்கைக்காக ஒரு தங்கச் சங்கிலியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிழாக்காண அம்மா கொடுத்த பணத்தை ஒரு சதமேனும் வீணாக்காமல் மின்னும் சங்கிலி ஒன்றை வாங்கிய கோபு, ஏனைய தனது நண்பர்கள் தமது காசை வீணாகச் செலவழித்ததன் பின், தான் மாத்திரம் காரியவாதி என்பதை நிரூபித்துவிட்டான் என்பதை சூசை எட்வட்டின் 'காரியவாதி' என்ற சிறுகதையும், காதலுக்காக பெற்றோரின் மனதைப் புண்படுத்திவிடும் பிள்ளைகள் அதன் உண்மை நிலையை அறிந்ததும் தவறை நினைத்து மனம் வருந்த நேரும் என்பதை விளக்கும் எஸ். ஆர். பாலச்சந்திரனின் 'சரசு ஏன் அழுகிறாள்?' என்ற சிறுகதையும், தப்பான சில காரியங்களால் நட்பானது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உயிருக்கு உயிரான நண்பர்கள் வாழ்விலும்கூட அது புகுந்து விளையாடும். ஆரம்பத்திலேயே அதற்குத் தடை போட்டுவிட்டாள் பிரச்சினைகளுக்கு வழிகாணலாம் என்ற உண்மையை 'சமூகமே நீ உணர்வாயா?' என்ற ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதியுள்ள சிறுகதையுமாகச் சேர்ந்து நான்கு சிறுகதைகள் பூங்காவனத்தில் இடம்பிடித்துள்ளன.

பதுளை பாஹிரா, கவிமலர், குறிஞ்சி நிலா, பி.ரி. அஸீஸ், கலைமகன் பைரூஸ் ஆகியோரின் கவிதைகள் இதழைச் சிறப்பிக்கின்றன. இதிலே மறைந்த பல்கலை நாயகன் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் நினைவாக அண்ணாவுக்கொரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார் குறிஞ்சி நிலா.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (லண்டன்) தொல்காப்பியரின் காலத்தை உறுதி செய்யும் கட்டுரை ஒன்றினையும் தந்துள்ளார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இந்தக் காலத்தில் எழுதப்படும் கவிதைகள் எந்த ரகத்தைச் சேர்ந்தன என்பதை இனங்காண முடியாதபடி வாசகனை மயக்கத்துக்கு உள்ளாக்குகிறது என்பதை 'கவிதை ஒரு மறுவாசிப்பு' என்ற கட்டுரையின் வாயிலாக நாச்சியாதீவு பர்வின் விளக்கியிருக்கிறார்.

இறுதியில் விமர்சகரும், திறனாய்வாளருமான 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/ மதிப்பீடுகள் சில' என்ற நூலைப் பற்றிய ரசனைக் குறிப்பை எச்.எப். ரிஸ்னா தந்து பூங்காவனத்தை சிறப்பித்திருக்கிறார். சிறுகதை, கட்டுரை, கவிதை, கருத்துக்கள், ரசனைக் குறிப்புகள் என இன்னோரன்ன இலக்கியச் சிறப்பியல்புகள் கொண்டதாக இம்முறை பூங்காவனம் பூத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது!!!

நூல் - பூங்காவனம் (காலாண்டு சஞ்சிகை)
ஆசிரியர் குழு - ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி - 077 5009222, 0719 200580.
மின்னஞ்சல் - bestqueen12@yahoo.com
விலை - 80 ரூபாய்

இந்த விமர்சனத்தை பதிவுகள் வலைத்தளத்தில் பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=738:2012-04-15-00-14-46&catid=14:2011-03-03-17-27-43

No comments:

Post a Comment