பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை
எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை
மூத்த பெண் எழுத்தாளர்களில் முகப்புப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம்இ இம்முறையும் வழமை போல் தனது பத்தாவது இதழில் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி ஸகியா சித்தீக் பரீத் அவர்களின் புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்னர் வெளியிட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் பூங்காவனப் புகைப்படங்களை உள் அட்டையில் பதித்து இருக்கிறது.
இது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் காலமானபடியால் புகுமுக மாணவர்களுக்கு அறிவுரையாகப் பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர். பகிடிவதை என்றும், ஸ்ட்ரைக் என்றும் வீணான வெறும் காரியங்களில் ஈடுபட்டு தமது கல்விக் காலத்தை வீணே கழிக்கும் மாணவர்களுக்கு அவர்களது அறிவுரைகள் மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மூன்று சிறுகதைகளையும், ஒன்பது அருமையான கவிதைகளையும், இரண்டு கட்டுரைகளையும், நேர்காணல், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற சகல அம்சங்களையும் 10 ஆவது இதழ் தந்திருக்கிறது. இதில் முகப்புப்பட நாயகி திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இதழாசிரியர்கள் நேர்கண்டிருக்கிறார்கள். பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் மாவனல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஓர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார். கொழும்பு ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள், விடியலின் விழுதுகள், இதயத்தின் ஓசைகள், முதுசம் என்ற தலைப்புக்களில் 04 நூல்களை இவர் இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூல் சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, ஓர் ஆவண நூலாகவும் விளங்குகிறது.
தமது இலக்கியப் பிரவேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தைக் கைக்கொண்டதனால் தனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகவும், தந்தை முதற்கொண்டு பல ஆசான்களுக்கும் அவருக்கு எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடியலின் விழுதுகள் 16 சிறுகதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியாகும். இதயத்தின் ஓசைகள் ஒரு கவிதைத் தொகுப்பாகும். முதுசம் 2500 க்கும் மேற்பட்ட பொன்மொழிகளை உள்ளடக்கிய நூலாகவும் காணப்படுகிறது. பொது அறிவுக் களஞ்சியம் என்ற நூல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு பரீட்சை வழிகாட்டி நூலாகத் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே வேளை, நூல் வெளியீடு என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம் என்பதனால் தனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட்டதாகக் குறிப்பிடும் அவர், படைப்புகளுக்கான விமர்சனங்கள் அவசியம் தேவைப்படும் ஒன்று. அவை குறைகளை மாத்திரம் சுட்டிக் காட்டாமல் நிறைகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். தனது வானொலித் தொடர்பு 1985 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டப் பின் படிப்பை மேற்கொள்ளும் போது விரிவுரையாளர் திருமதி பூமணி குலசிங்கம் அவர்களின் தொடர்பு கிடைத்ததனால் ஏற்பட்டதாகக் கூறும் அவர், வானொலிக் கலந்துரையாடல்கள் உட்பட நிகழ்ச்சிப் பிரதிகள் மூலம் பங்களிப்புச் செய்ய முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயன்வத்தை நூராணியா மகாவித்தியாலயம், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றிலும் ஆசிரியையாகக் கடமையாற்றி 28 வருடங்கள் ஆசிரியப் பணிபுரிந்துள்ளார். இலக்கியத் தாரகை, கலாபூஷணம், சாமஸ்ரீ தேசமான்ய பட்டமும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளிலும் பங்குபற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ள ஒரு பெண் படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.
தம் சுகம் ஒன்றையே கருதி தவறான வழியை நாடும் ஒவ்வொரு காதலரும், தமக்குப் பிறக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாகி சமூக அந்தஸ்துடன் வாழ நேரும் போது தப்புக்கள் என்றோ ஒரு நாள் வெளியாகி தமது பிள்ளையை ஈட்டியால் குத்தும் என்பதை உணராது தவறுக்கு மேல் தவறு செய்கின்றனர். களவை நாடுமுன் அன்றே அந்தத் தவற்றைத் திருத்திக் கொண்டிருந்தால் பர்சான் போன்ற இபாதத்துடன் (மார்க்கப் பற்றுடன்) வாழும் நல்லவர்கள் வாழ்க்கை நாசமாகிவிடாது என்பதைப் புலப்படுத்துகிறது மருதமுனை றாபி எஸ். மப்ராஸ் எழுதிய என்றோ செய்த விணை என்ற சிறுகதை.
அதே போன்று சிறுபிள்ளைகள் மனதில் விதைக்கப்படுகின்ற எண்ணங்கள் உண்மையானவைகளாகவும், தெளிவானவைகளாகவும் இருக்க வேண்டும். சமாளிப்புக்களாக அவை இருக்கும் பட்சத்தில் அந்தப் பிள்ளையின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்றதொரு கருத்தினைத் தாட்சாயினியின் தொடராத சொந்தங்கள் என்ற சிறுகதை தெளிவுபடுத்துகிறது.
காதல் என்பது வயதின் தேவைதான். என்றாலும் காதலிக்கும் போது அளிக்கப்படும் வாக்குறுதிகள் பாதுகாக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகளை அளிப்பதனால் ஆணோ, பெண்ணோ இருவருமோ பாதிக்கப்பட நேருகிறது. முடிவில் ஏமாற்றம் ஒன்றே மிஞ்சும். அத்தகையதொரு காதல் ஜோடியைச் சிதையாத இதயம் தந்திருக்கிறது. கதையில் வரும் காதலி வீணா தன் மாஜிக் காதலன் பாபுவின் நிலை கண்டு இறுதி நேரத்திலும்இ அவனுக்கு உதவ முன்வந்தது அவளது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் அவளைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் போனது பாபுவின் துரதிஷ்டம்தான் என்பதைத் தனது கதையினூடே பொத்துவில் மனாப் எடுத்துக் காட்டுகிறார்.
கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இதிலே பலர் இரவலாகத் தன்னிடமிருந்து எடுத்துச் சென்ற பெருமதி வாய்ந்த புத்தகங்கள் திரும்பி வராததைப் பற்றி ஆதங்கித்து எழுதியிருக்கிறார். அவரது குருகுல சீடர்களில் ஒருவரான பதுளை பாஹிரா அழகான ஒரு கவிதையையும் தந்திருக்கிறார்.
பேரும் புகழும் தேடி அலையும் மனிதனைப் பற்றி லண்டனில் இருந்து நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் திருக்குறள்இ அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் போன்ற சங்க இலக்கிய நூல்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி சிறந்ததொரு கட்டுரையைத் தந்துள்ளார்.
நீலாவணை ம. புவிலக்ஷி, புத்தளம் ஜுமானா ஜுனைட், யோ. புரட்சி, மருதூர் ஜமால்தீன், பூனாகலை நித்தியஜோதி, கலைமகன் பைரூஸ், கிண்ணியா பி.ரி. அஸீஸ், நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரது கவிதைகளும் இதழில் இடம்பிடித்துள்ளன.
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலுக்கான மதிப்பீட்டை வெலிகம ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். இன்னும் இன்னும் அந்தக் குரலைக் கேட்கக் கூடாதா? என்ற ஆர்வத்தை அது தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு இலக்கியவாதியும், வாசகனும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர வாசகர் கருத்துக்கள், வரப்பெற்ற நூல்களின் விபரங்கள் உட்பட பூங்காவனம் துணையாசிரியர் செல்வி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூல்வெளியீட்டுப் புகைப்படங்கள் பின் அட்டையின் உட்பக்கத்தை அலங்கரித்து பூங்காவனத்தின் பத்தாவது இதழை மணம் கமழச் செய்கிறது!!!
இதழின் பெயர்- பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை
இதழாசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் பதிப்பகம்
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி – 0775009222
விலை - 80 ரூபாய்
No comments:
Post a Comment