பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

03. திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களுடனான நேர்காணல்

திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பப் பின்னனி, வாழ்வுச் சூழல் பற்றியும் கூறுங்கள்?

நான் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை என்ற இடத்தில் பிரம்மஸ்ரீP ஏ. பஞ்சாதீஸ்வர குருக்கள் அமிர்தம்மாவின் நான்காவது மகளாகப் பிறந்தேன். எமக்கெல்லாம் மூத்தவர் எமது அண்ணா. அவருக்குப் பின் இரு பெண்களோடு நானும் எனது தங்கையுமாக நாம் ஐந்து சகோதரர்களாவோம். நாம் ஆரம்பக் கல்வியை கற்றுக்கொண்டிருக்கும் போதே கற்றலில் சூடிகையாக இருந்தாலும், ஐயர் அம்மாவுக்குக் கல்வி அவசியமா என்ற எதிர்ப்பின் மத்தியில்தான் பள்ளி சென்றோம். பள்ளியிலும் ஆசிரியர்கள் எம்மை நன்கு வரவேற்று உயர்மதிப்பு வைத்தே நடத்தினர். அது ஏன் என்றதொரு கேள்வி மனதில் எழுந்தபடியே இருந்தது.

நாம் கல்வி கற்ற காலத்தில் பெண்கல்வி பெரிதாக மதிக்கப்படவில்லை. அதிலும் சாதியில் உயர்ந்தவர்களான பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சாதரணமாக பிள்ளைகளோடு சமமாக இருந்து கற்பதா என்ற எதிர்ப்பும் இருக்கவே செய்தது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில்தான் நானும் எனது சகோதரிகளும் பள்ளிக்கூடம் சென்றோம்.


உங்கள் குடும்பத்தினருக்கும் கலைத் துறையில் ஈடுபாடு உண்டா?

ஆம். நானும் எனது சகோதரிகளும் சுமாராகப் பாடுவோம். மூத்த சகோதரி தேவமணி பத்திரிகையாளர் மங்களம்மாவின் மகள் மகேஸ்வரி கலைப்புலவர் நவரத்தினம் அவர்களிடம் வீணை கற்றவர். நானும் இளைய சகோதரி விமலாவும் வாய்ப்பாட்டு இசையோடு நடனம் கற்று வந்தோம். நடனம் கற்பதற்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து இசை வித்துவான் ஏ.எஸ். நாராயணனிடம் இசை கற்றோம். ஆனாலும் முற்றுப்பெற்றதாக கூறமுடியாது.


எழுத்துத் துறைக்கு நீங்கள் வந்தது பற்றி?

சிறுமியாய் இருக்கும்போதே கல்கி, பாலர் மலர் வாசிப்பதிலும் வீட்டில் வாங்கும் ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளை வாசிப்பதிலும் துணுக்குகள் கேலிச் சித்திரங்களில் கண்ணோட்டம் செலுத்துவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. விகடனில் கோபுவின் சித்திரங்களும் கேலிகளும் மனதை பெரிதும் ஈர்க்கும். இத்தகைய ஒரு நிலை வாசிப்பையும் தூண்டிவிட்டது எனலாம்.

சிலவிடயங்களை வாசிக்கும் போது எமது மனதிலும் சில எண்ணங்கள் தோன்றும். அப்படியே நாமும் அவற்றை எழுத்தில் வடித்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை என்னை எழுதத் தூண்டியது. சுதந்திரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது முதல் கதைக்கே பரிசும் பச்சை லைட்டும் காட்டப்பட்டுவிட்டதால் இன்று வரை இப்பயணம் தொடர்கிறது. அத்தோடு தினக்குரலில் சாதனைப் பெண் பகுதியில் தொடர்ந்து எழுதி வருவதோடு அவ்வப்போது ஏனைய பத்திரிகைகளில் கதை, கட்டுரை என எழுதுவதும் உண்டு. இவற்றைவிட காலாண்டிதழாக வெளிவந்த பெண்ணின் குரல் என்ற பத்திரிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். அவ்வப்போது சொல் என்ற சஞ்சிகையின் ஆசிரியராவும் தொழிற்பட்டுள்ளேன்.


உங்கள் படைப்புக்கள் பெண்ணிய கருத்துக்களை அதிகம் பிரதிபலிப்பதற்கான காரணம் என்ன?

நான் எழுத ஆரம்பித்த காலங்களிலே பெண்கல்வி தேவையா? பெண் வீட்டைவிட்டு வெளியே போய் வேலை பார்க்கலாமா? பெண்ணை கொடுமைக்குள் ஆழ்த்தும் சீதனப்பேய், வறுமை, கணவன் குடியால் சிதறும் குடும்பங்கள், ஒழுக்கயீனங்கள் என்பனவே சமுதாயத்தைக் கௌவி கபளீகரமிடும் முதன்மைப் பிரச்சினைகளாக என் மனதில் உருவெடுத்தன. அதனால் இத்தகைய பின்னணியைக் கொண்டே எமது எழுத்துக்களும், கற்பனைகளும் முகிழ்ந்தன.

இவற்றில் ஊறிய அனுபவத்தில் நாம் வளர வளர குடும்பத்திலும், சமூக தளத்திலும் ஆண் பெண் என்ற வேற்றுமைகள் உணரப்படுவதையும், பெண்கள் சக்தி, காளி, லக்ஷ்மி, துர்க்கை, சரஸ்வதி என கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டாலும் மானிட நிலையில் தாழ்வாக, இரண்டாம் பட்சமாக மதிப்பிடுவது மனதில் சுரீர் எனத் தைத்தது.


இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றி சொல்லுங்கள்?

பெண்களுடைய ஆற்றல் திறமைகள் முடக்கிவைக்கப்பட்டது போலவே அவர்களைப் பற்றிய செய்திகளும் ஆளுமைகளும் பலரால் அறியப்படுவதில்லை. இதனை மனதில் கொண்டே ஈழத்து மாண்புறுமகளிர் என்ற நூலில் ஒவ்வொரு துறையிலும் முதன்மை நிலை வகிக்கும் 24 பெண்கள் பற்றி எழுதியுள்ளேன்.

இதுதவிர மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு, சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியீடு செய்துள்ளேன். இன்னும் பாராமுகங்கள் சில பார்வைகள், நெஞ்சுக்கு நிம்மதி பதில் தருகிறார் பத்மா என்று இளைஞர் யுவதிகளுக்கான ஆலோசனை கூறும் நூல்களையும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் இரு சிறுகதைத் தொகுதிகளுக்கான கதைகள் கைவசம் உண்டு. கூடிய விரைவில் அவையும் நூலுருப்பெறும்.


உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறுங்கள்?

இலங்கையிலே முதன்முதல் சிறுகதைப் போட்டியை நடாத்திய பெருமை சுதந்திரன் பத்திரிகைக்கே உரியதாகும். முதலில் கூறியது போல இப்போட்டியில் நானும் கலந்துகொண்டேன். நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. 2ம், 3ம் பரிசுகள் முறையே பிரபல நாவலாசிரியர் டானியலுக்கும், மல்லிகை ஆசிரியர் ஜீவாவுக்கும் கிடைத்ததாக மல்லிகை கேள்வி பகுதியில் டொமினிக் ஜீவா ஒரு தடவை கூறியிருந்தது ஞாபகத்திலுண்டு. இதற்கு முன்னரும் நான் சிறுவர் பகுதியில் எழுதிருக்கிறேன். அத்துடன் கடவுளின் பூக்கள் என்ற நூலுக்கு இந்து பத்திரிகையில் சிலாகித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

புதிய வார்ப்புகள் என்ற நூலுக்கு லில்லி தேவசிகாமணி பரிசு கிடைத்தது. வேள்வி மலர்கள் என்ற நூலுக்கு சார்க் பெண்கள் அமைப்பின் பரிசும், பிரான்சில் வைத்து புதைகுழி சிறுகதைக்கான பாராட்டும், கல்கியில் காற்றில் கலந்த சோகம் எனும் சிறுகதைக்கு பரிசும் பாராட்டும் கிடைத்தது.


இதுகால வரை நீங்கள் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அதில் மறக்க முடியாத நிகழ்வாக எதைக் கருதுகிறீர்கள்?

தலை நகரில் நடக்கும் பெரும்பாலான விழாக்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். அத்துடன் கனடாவிலும் பல இலக்கிய கூட்டங்களில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அங்கு வைத்துத்தான் எனக்கும் எனது கணவர் சோமகாந்தன் அவர்களுக்கும் இலக்கிய தம்பதியர் என்ற பட்டத்தைத்தந்து கௌரவித்தார்கள். அது என்னால் மறக்க முடியாத இனிய சம்பவமாகும்.


இன்றைய இலக்கிய உலகில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

மரபுவழி சமூகமானது பெண்களின் ஆற்றலை, திறமையை வெளிப்படுத்துவதை ஆதறிப்பதற்கு மாறாக முடக்கியே வைத்துள்ளது. திருமணமான பிறகு பெண்கள் எழுத்துத் துறையில் காலூன்றி நிற்பது சிரமம் என்றதொரு கருத்தும் நிலவி வருகிறது. பெண்கள் மேடையில் பேசித்தான் சமுதாயம் திருந்தப் போகிறதா என்ற கருத்து நிலையும் பரவலாயிருக்கிறது. பெண்களின் முன்னேற்றத்தை சமூகம் வரவேற்பதில்லை. எழுத்துத் துறையை தவிர்த்து நோக்கினாலும் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் ஏராளம் என்றே சொல்லலாம். பெண்கள் ஒன்றிணைந்துதான் சமத்துவத்தை கட்டிக்காக்கலாம் என்பது எனது கருத்தாகும்.


ஆண்களின் எழுத்தாற்றலைவிட பெண்களின் எழுத்தாற்றல் குறைவானது என்று கூறப்படுகிறதே. அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பெண்களுக்கு காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்டிருந்த நிலைமாறி தற்போதுதான் பெண்கள் கல்வி கற்று முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். எனவே எழுத்துத் துறையில் ஈடுபடும் எல்லா பெண்களும் திடீர் பாய்ச்சலாக ஆண்களுக்கு சமமாக வளர்ந்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் முன்பும் கூட சந்தர்ப்பம், சூழ்நிலை, வாய்ப்புக்கள்தான் பெண்களை வளரவிடவில்லையே தவிர பெண்களே தகுதியற்றவர்கள் என்ற கருத்து தவறானது.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

திறமை குறைவாக இருந்தால் ஒழிய பெண் என்ற காரணத்தால் பெண்கள் ஒதுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மானிட வாழ்வில் ஆண் பெண் தோற்றங்கள் இயற்கையாகவே படைக்கப்பட்டன. இரு இனமும் சமநிலையில் உரிமைகளைப் பொறுத்தவரையில் சமத்துவமாக வாழ்ந்தால்தான் இப்பூவுலக வாழ்வு செழிப்புறும் என்பது எல்லா சிந்தனையாளர்களாலும், சீர்திருத்தக்காரர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனவே இந்த உண்மையை நோக்கியே எமது சிந்தனை, செயல், எழுத்து, பேச்சு என யாவும் அமைய வேண்டும் என்பது எனது தீராத ஆசையும் நோக்கமும் ஆகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment