பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

11. திருமதி. வசந்தி தயாபரன் அவர்களுடனான நேர்காணல்

திருமதி. வசந்தி தயாபரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலர். இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவர். வங்கிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின்னர் இலக்கியப் பணிகளுடன் சமூக சேவைகள் பலவும் ஆற்றி வருகிறார். இவர் சில சிறந்த சிறுகதைகளையும், சஞ்சிகைகளுக்காக நிறைந்தளவு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சமகால இலக்கியம் மற்றும் கலைகளை திறம்பட விமர்சித்து வருபவர். தமிழ் ஆக்க எழுத்தாளர்களுடைய படைப்புகளைச் சுமந்து வருகின்ற தகவம் தமிழ் இலக்கிய இதழின் செயலாளர். தமிழும் இலக்கியமும் இசையும் இவரோடு குழந்தைப் பருவம் முதல் இணைந்து பயணித்து வருகின்றன. தகவம் இராசையா மாஸ்டரின் புதல்வியாக இருந்தமை இவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும். இவரது தாயார் அர்ப்பணிப்புடனும் ஒழுங்காகவும் பணியாற்றிய ஓர் ஆசிரியையாவார். சிறுவர் இலக்கியத்தில் இவரது பங்களிப்பு காத்திரமானதாகும். அவரிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களை பூங்காவனம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.


01. உங்களை  இலக்கியத் துறையில் ஈடுபட வைத்தது உங்கள் குடும்பப் பின்னணி என்று நினைக்கிறேன். உங்கள் குடும்பம் பற்றியும், இலக்கியத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்வீர்களா?

எனது பெற்றோர் ஆசிரியர்களாக இருந்தனர். எனது தந்தையார், வ. இராசையா அவர்கள் எப்போதும் நூல்களுடன் உறவாடுபவர். இரவிலும் நெடுநேரம் கண்விழித்து எழுதிக்கொண்டிருப்பவர். தன் மாணவர்களது பல்துறை ஆற்றல்களையும் ஊக்குவிப்பவர். வானொலி, கலை இலக்கியம், ஆசிரியப் பணி என அர்ப்பணிப்புடன் இயங்குபவர். அவரை அண்ணாந்து பார்த்து வளர்ந்தது என் சிறு பராயம்.

கடமை உணர்வும், சுறுசுறுப்பும் மிக்கதோர் ஆசிரியையாக பதுளை - திக்வல்லை - கொழும்பு ஆகிய இடங்களில் பணிபுரிந்தவர் எனது தாயார். இஸ்லாமிய பாடசாலைகளில் மிக நீண்டகாலம் சேவை புரிந்தார். இசை, நடனம், கூத்து முதலான கலைகளில் பரீச்சயமும் பற்றும் கொண்டவர். எமக்கும் அவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கினார். மொத்தத்தில் எனது தந்தையார் உட்பட எமது இலக்கியப் பயணத்திற்கு உகந்த சூழ்நிலையை இன்று வரை ஏற்படுத்தித் தருபவர் எனது தாயார்.

நாவிலே வந்து உரைவாய் சரஸ்வதி!|| என்று என்னை வாழ்த்தி வளர்த்த என் அம்மம்மா, நிறையவே வாசிப்பவரும் கதை சொல்லிச் சொல்லி கதைச் சுவையை ஊட்டி வளர்த்தவருமான என் பெரியம்மா இருவரும் கூட என் நினைவில் நிற்பவர்கள்.


என்னைச் சூழ இருந்த உறவுகளும், தந்தையாரின் இலக்கிய உறவுகளும், சந்தர்ப்பங்களும் என்னை இலக்கியத் துறைக்குள் இழுத்து வந்தன. பதின்ம வயதுகளில் வானொலிக்குச் சில எழுத்தாக்கங்களை வழங்கியதும், இலங்கை வங்கி இலக்கிய மன்றத்தில் இணைந்துகொண்டு கவிதையும், கட்டுரையும் எழுதி தமிழலை சஞ்சிகையில் அவை அச்சேறியதும் மூன்று தசாப்தங்களுக்கு முன்னைய கதை. தகவம் உறுப்பினராகி ஆக்க இலக்கியத்துள் நுழைந்ததும் கொழும்பு தமிழ் சங்கத்தில் இணைந்ததும் என அது இன்றுவரை வளர்கிறது.


02. சிறுவர் இலக்கியத்திற்காக நீங்கள் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். அதுபற்றி...

இதுவரை நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன. அவை:-

1. குடை நடை கடை
2. மண்புழு மாமா வேலை செய்கிறார்
3. அழகிய ஆட்டம்
4. பச்சை உலகம்

என்பனவாகும்.

இவை எனக்கு ஓரளவு திருப்தியைத் தந்தனவெனினும் சிறுவர் இலக்கியத்தில் நான் செல்ல வேண்டிய பாதை இன்னும் நீண்டு கிடக்கிறது. எனது தந்தையார் ஈழத்துச் சிறுவர் இலக்கிய கருத்தாக்களில் ஒருவராவார். ஷஷஒரு படைப்பாளி என்பவன் சிறுவர்களுக்கான இலக்கியங்களைப் படைத்தால் மட்டுமே அவனது படைத்தல் என்ற பொறுப்பு முழுமையடையும்|| என்ற அவரது அறிவுரை என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.


03. காலமாம் வனம் என்ற சிறுகதைத் தொகுதியை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். இந்தத் தலையங்கத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

''காலமாம் வனம்'' என்ற தலையங்கம் பாரதி என்ற மகாகவி தந்தது. என்னுள்ளே முணுமுணுப்பாக ஒலித்துக்கொண்டிருக்கும் அழகும் ஆழமும் பொதிந்த சொற்றொடர் அது.

வெற்றி தோல்விகளை காலமே தீர்மானிக்கிறது. எமக்கு முன்னே நீண்டு கிடக்கின்ற வனத்தினூடு ஆர்வமும் திகைப்பும் கலந்த மனதுடன் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். மாறுதல்கள், புதிய அநுபவங்கள் என்பன கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் கடந்து வந்த பாதையைப் பதிவு செய்கிறோம். ஓவியங்கள் சிற்பங்கள் போலவே, அவையும் தத்தமது காலத்தின் உருவத்தையும் சிறப்பையும் காலங்கடந்தும் பேசுமா இல்லையா என்பதைக் கூட, அதே காலம் தான் நிர்ணயிக்க முடியும்.


04. இன்றைய கால கட்டத்தில் நிறையப் பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் முழுமையாகக் கவனிக்கப்படுகிறார்களா?

சமூகம் தம்மைக் கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எழுதுபவர்கள் மிகக் குறைவு. மாறாக தமது எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றனவா என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கக் கூடும்.

போர்களும், வன்முறைகளும்,  மன வக்கிரங்களும் அதிகரிக்கும் தோறும் நீங்கள் கூறுவது போல் நிறையப் பெண்கள் எழுத வருவது இயல்பானதொன்றே. பெண்களைக் கவனிக்கும் அளவுக்கு அவர்களது எழுத்தின் உணர்வோட்டம் கவனிக்கப்படுகிறதா என்பது ஒரு வினாவே. சமூகத்தின் பார்வையில் ஏற்படவேண்டிய மாற்றங்களே பெண் எழுத்துக்கான பிரக்ஞையைத் தோற்றுவிக்கக் கூடியன.


05. பெண்ணிய சிந்தனைகளைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

பெண்ணியச் சிந்தனைகள் காலாதிகாலமாக உயிர்ப்புடன்தான் உள்ளன. இன்று அவை கூர்மை பெற்றுள்ளன. பண்பாட்டுப் போர்வைகளை சற்றே அகற்றி, திறந்த மனதோடு இவை அணுகப்படல் வேண்டும். அவற்றுக்கான வழிகளும், வெளிப்படுத்தும் முறைகளும் மனிதரிடையே மாறுபடக்கூடும்.


06. எதிர்காலத்தில் கவிதைகள், நாவல்கள் ஆகிய தொகுதிகளை வெளியிடும் எண்ணம் உண்டா?

இந்தக் கேள்விக்கு ஆம் என்பதே விடையாக அமைகிறது. ஆயினும் முதலில் நல்லதொரு வாசகியாக என்னை வளப்படுத்திக்கொண்டு, செம்மையான திருத்தமான படைப்புகளை வெளிக் கொண்டுவர விரும்புகிறேன்.




07. உங்கள் இலக்கிய முயற்சிகளுக்கு கரங்கொடுக்கும் உங்கள் துணைவர் திரு. மு. தயாபரன் அவர்களின் பங்களிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

தமிழ்தான் எங்களைப் பிணைத்தது. எனவே முதலில் அவர் எனது இழக்கியத் தோழர். அதனைத் தொடர்ந்து அன்புக் கணவராக, தந்தைக்குத் தந்தையாக, என்னை எனக்கறிவித்த என் குருவாக யாதுமாகி நிற்கிறார்.


08. பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றீர்கள். அந்த அனுபவம் பற்றி?



அனுபவப் பகிர்வுதான் கருத்துப் பகிர்வாக மலர்ச்சி பெறுகிறது. கொழும்பு தமிழ்ச்சங்கம் அதற்கான அடித்தளத்தை எனக்கு வழங்குகிறது. (கொண்டும், கொடுத்தும்) வளர்வதற்கு இவையெல்லாம் உதவுகின்றன.




09. இதுவரை நீங்கள் எழுதிய எல்லா படைப்புக்களும் அச்சில் வெளிவந்துள்ளனவா?

இல்லை. எனது எழுத்துக்களை நானே மீளவும் தரக்கணிப்புச் செய்துவிட்டு அச்சேற்ற விரும்புகிறேன்.



10. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?



'குடை நடை கடை' என்ற இனது சிறுவர் இலக்கியம் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் (தமிழியல்) விருதைப் பெற்றது. அதனைத் தவிர வேறெந்த விருதினையும் நான் பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் எழுதும்போதும், அதன் பின்பும் நான் பெறுகின்ற உள நிறைவு நான் மதிக்கின்ற ஒரு பரிசு. சமூகத்திற்கு எம்மை அடையாளப்படுத்தவும், அதன் அங்கீகாரத்தைப் பெறவும் விருதுகள் உதவுகின்றன. ஆனால் அவை தேடிப் பெறுவன அல்லவே.

11. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சமூக அக்கறை என்பதே எழுத்தின் உயிர்நாடி என்பது எனது முடிபு. மாறிவரும் மதிப்பீடுகளிடையே அர்ப்பணிப்பு, தனித்தன்மை என்ற பண்புகள்தாம் எழுத்தை வாழவைக்க வல்லன என்று நான் நம்புகின்றேன். பூங்காவனம் பூத்தக்குலுங்க வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment