இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.11.10
திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்கு கூறுங்கள்?
நான் களுத்துரை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையை பிறப்பிடமாகவும், மாவனல்லை கிரிங்கதெனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டுள்ளேன். துந்துவையைச் சேர்ந்த காலம் சென்ற அப்துல் சமி, காலம் சென்ற தர்காநகர் உம்மு தமீமா ஆகியோரின் மகளாக பிறந்த எனக்கு ஐந்து உடன் பிறப்புக்கள். முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அன்வர், முஹம்மது மஃரூப், நூருல் ஐன் (ஆசிரியை) சித்தி நிலோபா ஆகியோரே அவர்களாவார்கள். ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரை தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் (தற்போது தேசிய கல்லூரி) கற்றேன். பின்னர் அதே பாடசாலையில் சில வருடங்கள் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளேன்.
இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?
1977 ஆம் ஆண்டு எனது பதினேழாவது வயதில் தினகரன் பத்திரிகையூடாக எனது எழுத்துப் பயணம் ஆரம்பமானது. அதே காலகட்டத்தில் ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய சஞ்சிகைகளிலும் என் ஆக்கங்கள் வெளிவந்தன. அன்று தொடக்கம் இன்று வரை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
1984 தொடக்கம் 1996 வரையிலான பத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வந்த நெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கான பிரதி தயாரிப்பாளராக இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதி வந்துள்ளேன். இந்நிகழ்ச்சி மூலம் எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் எனது அபிமான நேயர்களாக இருந்தமை என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்திய விடயமாகும்.
இலங்கையின் பெண் எழுத்தளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி நீங்கள் யாது கூறுவீர்கள்?
இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வரவும், வளர்ச்சியும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாவல் துறையிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.
இலக்கியப் பணி சார்ந்த உங்களது கொள்கை என்ன?
எனது இலக்கியப்பணி இஸ்லாமிய வரையரைகளுக்கு உட்பட்டு அதன் வரம்புகளை மீறாது சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய செய்திகளை, விழிப்புணர்வை எனது எழுத்துக்களினூடாக தெரிவிப்பதாகும்.
இலக்கியப் பணியினூடாக எதை சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
எனது இலக்கியப் பணிகளினூடாக எதைச் சாதிக்க விரும்புகிறேன் என்பதைவிட எதைச் சாதித்துள்ளேன் என்பது மிகவும் பொருந்தும். ஏனெனில் எனது எழுத்தினூடாக பல சந்தர்ப்பங்களில் பல சாதனைகளை அடையக் கண்டுள்ளேன். எனது பல கதைகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிவேன். இன்னும் எனது எழுத்தினூடாக சமூகத்தில் விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என விரும்புகின்றேன். அதிகமாக நாவல்கள் எழுத வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
நாவல், சிறுகதை துறைகளில் சிறந்த பங்களிப்புக்களைச் செய்து வருகின்றீர்கள். அவற்றிற்காக நீங்கள் பெற்ற பரிசுகள், விருதுகளைப் பட்டியற்படுத்திக் கூறுங்கள்?
எழுத்து வன்மைக்காக மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சுமார் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் பரிசுகளும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளேன். 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்தளை மாவட்ட மத்திய குழு தேசிய ரீதியில் தமிழ், முஸ்லிம் படைப்பிலக்கிய வாதிகளுக்கிடையில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இதைத்தவிர 2006 ஆம் ஆண்டு அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் உண்டியல் என்ற எனது சிறுகதை தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு ஆக்கம்; எனும் கருத்திட்டத்தில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், கவிதைப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டேன்.
மேலும் 2007 ஆம் ஆண்டிற்கான சப்ரகமுவ மாகாண சாகித்திய கலை நிர்மாணப் போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி இரண்டாம் இடத்தையும், 2008 இல் இதே போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 2011 ஆம் ஆண்டிற்கான இதே போட்டியில் மற்றும் சிறுகதைகள் அடங்கிய பிரதி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 2012 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மாகாண அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தையும், கவிதை, பாடல் இயற்றல், சிறுவர் கதை ஆகிய போட்டிகளில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டேன்.
இதைத் தவிர 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் எனது ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்து கொண்ட சகோதரி ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களின் இது ஒரு ராட்சஷியின் கதை என்ற நாவலுக்கும் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. இதே அமைப்புக்கள் 2009 ஆம் ஆண்டு சர்வதேசிய ரீதியில் நடத்திய சிறுகதை, கவிதை போட்டிகளிலும் எனது படைப்புக்களுக்குப் பரிசு கிடைத்தது. மேலும் 2009 ஆண்டு வெளிவந்த படைப்பிலக்கியங்களுக்கான அரச சாகித்திய தெரிவில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று நாவல்களில் ஒன்றான ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
அதே போல் புதிய சிறகுகள் என்ற அமைப்பின் நாவல் தெரிவிலும் விருதுக்காக இதே நாவல் சிபாரிசு செய்யப்பட்டது. இன்னும் 2011 ஆம் ஆண்டு இறுதியில் பாணந்துறையில் இயங்கும் ஜனசங்கதய என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு நடாத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசையும், அதே ஆண்டு மலையக தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளேன். 2011 ஆம் ஆண்டு அல்ஹஸனாத் இஸ்லாமிய சஞ்சிகை நடத்திய நாடளாவிய சிறுகதைப் போட்டியிலும் எனக்கு பரிசு கிடைத்துள்ளது.
இவை தவிர களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, பம்பலப்பிட்டி இஸ்லாமிய செயலகம், தேசிய இளைஞர் சேவை மன்றம், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம், கல்வி அமைச்சு, அரசாங்க கலாச்சார திணைக்களம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளேன். 2002 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையும், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் இணைந்து நடத்திய குறிஞ்சித் தென்னவன் நினைவு இலக்கிய விழாவில் அன்றைய மத்திய மாகாண கல்வி அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டேன். 2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மகாநாட்டில் இஸ்லாமிய இலக்கிய பங்களிப்புக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். அகில இன நல்லுறவு ஒன்றியம் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான பாராட்டு விழாவில் சாமஸ்ரீ கலாஜோதி பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.
இப்படி பரிசுகளும், பாராட்டுக்களும் கிடைத்த நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தன?
உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் எனது படைப்புக்களுக்கு பரிசு கிடைத்தபோது என் உணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. இந்தப் பரிசுகளும், பாராட்டுக்களும் எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்றே நான் கருதுகின்றேன்.
இதுவரை நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988), திசை மாறிய தீர்மானங்கள் (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், ஊற்றை மறந்த நதிகள் (2009) என்ற சமூக நாவலையும் வெளியிட்டுள்ளேன். இந்த அத்தனை வெளியீடுகளும் எனக்கு வெற்றியையே தந்தன. திசை மாறிய தீர்மானங்கள் என்ற சிறுகதைத் தொகுதி மத்திய மாகாண கல்வி அமைச்சினால் சிறந்த நூலுக்காக விருதையும் பொற்கிழியையும் பெற்றுத்தந்ததோடு மேல் மாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கவென முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், இன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நூறு புத்தகங்களும், மிலேனியம் கல்வி ஸ்தாபன தவைலர் எஸ்.எச் மௌலானா அவர்களினால் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் கொள்வனவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய புதிய எழுத்தாளர்களின் இலக்கியப் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதிகமான எழுத்தாளர்கள் காதல் என்ற கருப் பொருளையே பெரும்பாலும் கையாள்கிறார்கள். சமூகத்தில் எம்மைச் சுற்றி எழுதுவதற்கான நிகழ்வுகள் நிறையவே இருந்தும் காதலை மட்டும் சுற்றிச் சுற்றி வருவது அவ்வளவு ஆரோக்கிமானதல்ல.
உங்கள் கணவர் ஏ.சீ.எம். இக்பால் மௌலவி அவர்கள் தங்களின் இலக்கியப் பணிக்கு எவ்வகையில் உதவி செய்கிறார் என்பதை குறிப்பிடுவீர்களா?
திருமணத்தின் பின் ஒரு பெண் எழுத்துத் துறையில் நீடித்து நிற்பதென்பது கேள்விக்குரிய விடயம்தான். பல பெண் எழுத்தாளர்கள் திருமண வாழ்வில் நுழைந்த பின் எழுதுவதையே நிறுத்திவிடுவதுண்டு. ஆனால் என் நிலை இதற்கு மாறாக அமைந்துவிட்டது. என்னை மென்மேலும் எழுதத் தூண்டுவதும், உற்சாகப்படுத்துவதும், என் வெற்றிக்கு துணை நின்று உழைப்பதும் என் கணவர்தான். எனது எழுத்து முயற்சிகளில் அவரது பங்களிப்புப் பற்றி கூறியாக வேண்டும். எனக்காகவே எக்மி பதிப்பகம் எனும் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல நூல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
உங்கள் மகளான இன்ஷிரா இக்பால் அவர்கள் இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டி வருவது பற்றி?
எனது மகள் இன்ஷிரா இக்பால் சிறு வயதிலிருந்தே இலக்கியத் துறையில் மிகவும் ஆர்வமுடையவள். பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ளார். பூ முகத்தில் புன்னகை என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். இதைத்தவிர அண்மையில் ஒரு சமூக நாவலையும் எழுதியுள்ளார். இவரின் இலக்கியத்துறை ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தந்துள்ளது. இவரைப் போன்றே எனது மற்றொரு மகளான இன்ஷிபா இக்பாலும் எழுத்தார்வம் உள்ளவர். பல கதைகளையும் எழுதியுள்ளார். எனது மகன் அஷ்பாக் அஹமத் சிறந்த ஓவியராவார். அற்புதமாக ஓவியங்களை வரையும் ஆற்றல் உள்ளவர்.
இலக்கியப் படைப்புக்களுக்கு கிடைகின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து?
இலக்கியப் படைப்புக்களுக்கு விமர்சனங்கள் நிச்சயம் தேவை. அந்த விமர்சனங்கள் தான் ஒரு படைப்பாளியை சிறந்த படைப்பாளியாக உருவாக்க உதவும். விமர்சனங்கள் என்ற பெயரில் ஒரு படைப்பாளியை, படைப்பை மட்டம் தட்டி எழுதக்கூடாது.
விருதுகளைப்பற்றி சொல்வதானால், விருதுகள் என்பது ஒரு படைப்பாளிக்கு கிடைக்கின்ற மிகப்பெரிய அங்கீகாரமாகும். இருந்தாலும் இன்று (சில இடங்களில்) வழங்கப்படுகின்ற விருதுகளும், பட்டங்களும் தகுதியானவர்களுக்கு, பொறுத்தமானவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரியவில்லை. ஆள் பார்த்து, முகம் பார்த்து பணத்தைப் பெற்றுக் கொண்டும், பொன்னாடைகளை உரியவர்களிடமிருந்து வாங்கியும் வழங்கப்படுவது ஒரு கேலிக்கூத்தாகும்.
நீங்கள் இனங்களுக்கிடையில் உறவைப் பேணும் வகையில் பல கதைகளையும், வலது குறைந்தோர் சம்பந்தமான பல கதைகளையும் எழுதியிருப்பதாக அறிகிறோம். அது பற்றிக் கூறுங்கள்?
எமது நாட்டைப் பொறுத்தவரை பல்லின மக்களும் வாழும் நாடு இது. இனங்களுக்கிடையே நல்லுறவும், புரிந்துணர்வும் இருந்தால்தான் நாடும், மக்களும் நன்றாக இருக்க முடியும். எனவே தான் இனங்களை இணைக்கின்ற சிறுகதைகளையும் எழுதி வருகிறேன். அவற்றிற்காக பரிசுகளும் பெற்றுள்ளேன்.
மேலும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் விழிப்புலன் இழந்த மாணவர்களுக்கு ஆசிரியப்பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த நிலையத்தின் ஸ்தாபகரும், அர்ப்பணிப்போடு பணி புரியும் ஆயுட்காலத் தலைவருமான சகோதரர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹனிபா அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். அந்த மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய என்னால் அவர்களின் உணர்வுகள், மனக்காயங்கள், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் என்பவற்றை இலகுவில் புரிந்து கொள்ள முடிந்தது. அவற்றை வைத்து பல சிறுகதைகளையும் எழுதியுள்ளேன்.
இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவங்கள் இருப்பின் குறிப்பிடுங்கள்?
மறக்க முடியாத சம்பவங்கள் சில இருந்த போதும் ஓரிரண்டைக் குறிப்பிடலாம். 1983 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவை மன்றம் களுத்துறை மாவட்டத்தில் நடத்திய ஹஜ் விழா போட்டிகள் நான்கில் (இஸ்லாமிய கீதம், கவிதை, அறபு எழுத்தணி, கட்டுரை) நானும் கலந்து கொண்டேன். அந்த நான்கு போட்டிகளிலுமே எனக்கு முதலிடம் கிடைத்தது. மேடையில் பரிசு வாங்கிவிட்டு கீழே இறங்க முன் அடுத்த பரிசுக்காக அழைக்கப்பட்டேன். இப்படி நான்கு தடவைகளும் அழைக்கப்பட்ட போது அந்தப் பரிசுகளை பார்வையாளரின் கரகோசத்துக்கு மத்தியில் வாங்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தேன். இது மறக்க முடியாத அனுபவம். 2003 ஆம் ஆண்டில் திசை மாறிய தீர்மானங்கள் வெளியீட்டு விழாவிற்கு தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். என் அழைப்பை மதித்து என்னை கௌரவப்படுத்திய அன்றைய நிகழ்வை என்றும் மறக்க மடியாது.
ஏற்கனகவே நான் கூறிய முஸ்லிம் காங்கிரஸ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசாக தங்கப் பதக்கம் கிடைத்தது. இரண்டரைப் பவுண் எடையுள்ள தங்கப் பதக்கத்தை அன்றைய நிகழ்வில் தலைவர் அஷ்ரப் அவர்களின் கரங்களால் பெற்றுக் கொண்டேன். இந்த பரிசை, கௌரவத்தை என்றும் மறக்க முடியாது. இவை தவிர நான் பல போட்டிகளில் கலந்து பரிசு பெற்ற போதும் 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தென் இந்தியாவில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட சர்வதேச நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசு கிடைத்தமை மறக்க முடியாத அனுபவமாகும்.
பூங்காவனம் இதழ் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பூங்காவனத்தின் பன்னிரண்டாவது இதழ் இது. தொடர்ந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான். இதழ் ஆசிரியருக்கும், ஆசிரிய குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். பூங்காவனத்தில் பூத்திருக்கின்ற ஆக்கங்கள் அனைத்தும் தரம் வாய்ந்தவைகளாக உள்ளன. இதற்கு முன்னும் பெண்களால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள், இலக்கிய இதழ்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இருப்பினும் அவற்றோடு ஒப்பிடும் போது பூங்காவனம் தரமானதொரு இலக்கிய இதழாக இருக்கிறது!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment