பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, December 9, 2022

52. கவிச்சுடர் சிவரமணி அவர்களுடனான நேர்காணல்

 கவிச்சுடர் சிவரமணி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

எனது பெயர் சிவரமணி, பிறந்த இடம் யாழ்ப்பாணம், வாழும் இடம் திருகோணமலை. எனது தாயார் சிவஞானவதி, தந்தை இராசரத்தினம். இருவரும் உயிருடன் இல்லை. இன்று இலக்கியத் துறையில் நான் சிறந்து விளங்கக் காரணம் எனது பெற்றோர்களே. என் தாய் மண் ஈழம். அது தந்த உதிரம் தமிழுக்காய் அதுவும் இலக்கியமாய் உயிருள்ளவரை உழைப்பேன். 


சிறுவயது முதல் வாசிப்பே என் நேசிப்பாய் இருந்தது. பாடசாலைக் காலமதில் கவிதை, பேச்சு என்று பல மேடைகளைக் கண்டேன். இன்று பல்துறைக் கலைஞராய் ஒரு படைப்பாளியாய் உங்கள் முன் நிற்கின்றேன். வாழ்க்கை வெள்ளோட்டத்தில் நானும் திக்கு திசைமாறி கவிச்சுடராய், ஒரு கலைப் படைப்பாளியாய் இன்னும் இன்னும் தேடலோடு இன்று நின்று நிதானித்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். தேடல் என்றுமே ஆரோக்கியமானது. அது என்னை செதுக்கும், சீர்படுத்தும். எதிர்காலங்களில் இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை உங்களுக்குத் தரக் காத்திருக்கிறேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அநுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலை வாழ்க்கை சுகமானது. ஆனால் நாம் அப்போது வாழ்ந்தது யாழில். இலங்கை இராணுவ மற்றும் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புகள் நிறைந்த போராட்டமான அந்தக் காலம், இடர்மிகு காலமாக இருந்தது. வலிகள் தந்த கடந்த காலம் ஏட்டுச் சுரக்காய் என்பது போல கல்வி கற்றவள் தான். நானும் உயர் தரம் கலைப் பிரிவில்தான் கற்றேன். பின்னர் எற்பட்ட வாழ்வியல் மாற்றம் காரணமாக உத்தியோகம் பார்க்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில் அதற்கு வீட்டில் அனுமதிக்கவும் இல்லை. அப்போதிலிருந்து இயலாய் இலக்கியம் மட்டும் தான் என் மூச்சாகி நின்றது.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அநுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

சிறுவயதில் கவிதை, கதை எழுதுவேன். அதனைத் தாண்டி முகநூல் தந்தது முதல் சுவாசம். எனது தாயார் 2012 இல் இறையடி சேர்ந்தார். அன்று ஆற்றாமையால் கொட்டத் தொடங்கிய உணர்வூற்று இன்று பரிணாமம் பெற்று நிற்கிறது. முகநூல் வழியாக ஊக்குவித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதன் ஆரம்பமே முதலாவது கவிதைத் தொகுப்பு புலம்பெயர் தேசமொன்றின் படைப்பாளிகள் உலகம் எனும் அமைப்பினால் 2015 இல் செய்து தரப்பட்டது. சிறுவயது அனுபவங்களுக்கு ஆவணமாக தற்சமயம் என்னிடம் எதுவுமே இல்லை. ஆகையால் எனது மறு உயிர்ப்பு கவிதைத் துறையேயாகும்.


உங்களைக் கவிஞராக வளர்த்த பின்னணி என்ன?

வாசிப்பை நேசித்ததால் என்னாலும் படைப்புகளைத் தரமுடியும் என்ற நம்பிக்கை. அதில் குறிப்பிடப்படுகின்ற பின்னணி பல இயலோடு ஒன்றிய தன்மை, வலிகள் மிகுந்த வாழ்க்கையாகும். பலரது செயல்களால் ஏற்படுகின்ற மனத்தாக்கமும் காரணமாகின. அதைவிட சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும், மக்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான். இதையும் தாண்டிக் கூறுவதாயின் தமிழ் தந்த வரம் என்று தான் சொல்ல முடியும்.


நீங்கள் இரசித்து வாசித்த சில கவிதைகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?

கவிதைகளை ஆழமான சிந்தனையோடு வாசிக்கும் பழக்கம் எனக்கு. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைகள் பலவும் எனக்குப் பிடிக்கும். 


ஊரெங்கும் உயர்ந்துள்ள கற்பக விருட்சங்களே!

கண் திறவுங்கள்

வீசும் காற்றுக்கெல்லாம் தலையசைத்து

தாளம் போடுவதை நிறுத்தி அமைதி பெறுக..

உரம் பெற்ற வைர உடல்வாகும்,

குனியோமெனும் வரலாறும்

உமக்குண்டு. 

பகைவனுக்கிதனை உணரச் செய்வீர்.


அத்துடன் மண் பற்றுடன் கூடிய போராட்ட காலக் கவிதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகளும் எனக்குப் பிடிக்கும். உதாரணமாக:-


போராளி

செத்தவனுக்காக

அழுதவன்

நீ

இவன்

அழுதவனுக்காக

செத்தவன்


**************



இயக்கம்

வைக்காதே சிலை

தொளிலாளிக்கு

எங்கும்

செயலற்று

நின்றதில்லை

இவன்

என்றும்!


**************



வல்லாண்மை

பயங்கரவாதி

என்கிறான்

துப்பாக்கி


வைத்திருப்பவனை

அணுகுண்டு

வைத்திருப்பவன்!


இவை சீண்டி சிந்திக்க வைக்கும் கவிதைகளாக இருக்கின்றன. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுமட்டுமில்லாமல் மன வலியை எடுத்தியம்பும் பொதுவானவர்களின் கவிதைகளும் எனக்குப் பிடிக்கும்.


மகாகவி பாரதியாரின் புதுக் கவிதைகளைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

நான் என்ன சொல்வேன் ஏகலைவன் போலத்தான் என் மானசீக குரு. ஆம்! அவரை நினைத்தாலே நினைவில் வருவது அச்சமில்லை அச்சமில்லை என்பதே..


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என் எழுத்துக்களுக்கும் அச்சமில்லை. அடுத்து மனதில் ஒரு எண்ணம் பதிவானது. துன்பம் வரும் போது அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்த்தை வெட்டும் வாளாகிவிடும். ஆம்! உண்மை அருமருந்தான உண்மைதான். இது அனுபவபூர்வமானது. இப்படியான உணர்வில் யதார்த்தத்தைப் புகுத்தி புதுமை எழுச்சி என விதைகளைத் தூவிச் செல்வது எனக்குப் பிடிக்கும். அவரின் சிந்தனை, செயல், இயல் எல்லாமே பாமரரையும் படித்துச் சுவைக்க வைக்கும், கலையை இரசிக்க வைக்கும். அந்தவகையில் அவர் மகா கவியே!


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? அவை பற்றிக் குறிப்பிடுங்கள்?

 இதுவரை 04 நூல்களையே என்னால் வெளியிட முடிந்தது. அவை:-

01. தொடுவானின் சிதறல்கள் (கவிதைத் தொகுதி) - 2015

02. அவள் ஒரு தனித்தீவு (நாவல்) - 2016 இந்த நாவலில் 21 பாகங்கள் உள்ளன. இது கதையும் கவிதையும் அடங்கிய தனிச் சிறப்புமிக்கது.

03. நவீன சீதை (சிறுகதைத் தொகுதி) - 2021 இது கிழக்கு மாகாணம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டது.

04. மனக்குவியல் (கவிதைத் தொகுதி) - 2022 இது இந்தியா தமிழகத்தில் அண்மையில் நிகழ் மீடியாவினால் வெளியிடப்பட்டது.


உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்து, உதவியவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

ஆம். எனது முதலாவது நூலான தொடுவானின் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியைப் படைப்பாளிகள் உலகம் வெளியிட்டுத் தந்தது. அவர்களே என்னை இலக்கிய உலகம் அறியச் செய்த நட்புறவுகள் ஆகும். இரண்டாவது நூலை வெளியிட என் சொந்த முயற்சியும் அத்தோடு சில நட்புறவுகளும் உதவின. சிலரை சொல்லும்போது சிலரின் பெயர் விடுபடலாம் என்பதால் அவர்களது பெயர்ப் பட்டியலை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. மூன்றாவது நூலை வெளியிட கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களம் மற்றும் அச்சகர் எனப் பலர் உதவினர். நான்காவது நூலை வெளியிட இந்திய திரைப்படத் துறையைச் சார்ந்தவரும் நிகழ் மீடியா நிறுவனரும் நாயன்மார் நற்றமிழ்ச் சங்கத் தலைவருமான சிறிகாந்த ராஜா அண்ணன் அவர்கள் உதவினார்.


நீங்கள் வெளியிட்ட நூல்களில் பொதுவாக உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

சிந்திக்க வேண்டியவற்றை எழுத்தாக்குகிறேன். வலிகளைப் பேசுகிறேன். முக்கியமாய் பெண்மையின் ஏக்கங்கள், தாக்கங்கள் போன்றவற்றை எனது எழுத்தில் வடிக்கிறேன். அதுமட்டுமின்றி அனைத்து விடயங்களையும் தொட்டுச் செல்வதே என் எழுத்து என்று சுருக்கமாகக் கூறலாம்.


தொடுவானின் சிதறல்கள் கவிதைத் தொகுதி பற்றி விசேடமாகக் குறிப்பிட விரும்பும் செய்தி என்ன?


எனக்கு முகவரி கொடுத்தது, என் எழுத்தை அச்சுருவாக்கியது, ஆவணப்படுத்தலில் முதன்மையானது, முகாந்திரமாய் வெளியீடு என்று சொல்லலாம். திருகோணமலை பத்ரகாளி ஆலய மண்டபத்தில் ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் ஆசியுடன், தமிழருவி சிவகுமார் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக இந்த நூல் வெளியீடு இடம்பெற்றமை என்னால் இன்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. அக்கவிதைத் தொகுதியானது பல விடயங்களைக் கருப்பொருட்களாக உள்ளடக்கி வகையில் வெளிவந்தது. அதிலும் குறிப்பாக இந்தக் கவிதைத் தொகுதியில் வாழ்வியலே பேசுபொருள் ஆக அமைந்தது.


உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது? 


யதார்த்தம் என்னை எழுதத் தூண்டுகிறது. சிறு பொறி தூண்டலும் கருவாகும், உணர்வால் எழுத்தாகும், உணர்வுகளால் அது பூர்த்தியாகும். எந்த ஒன்றை எடுத்தாலும் அதன் தொடக்கம், அதன் விரிப்பு காலத்தோடு ஒன்றியே முடிவு மட்டும், எனக்கே உரியதாய் மட்டும், அதுவே முத்திரையாய் அமைய முடிவெடுப்பேன். உணர்வே எனக்கு இலக்கியம், உலகமே பாடம்.


ஒரு சிறந்த சிறுகதை எப்படியிருக்க வேண்டும்? உங்களது பாத்திரப் படைப்பு எப்படிப்பட்டது?

ஒரு சிறுகதை வாசகர்களை அதனோடு ஒன்றி வாழ வைக்க வேண்டும். அதன் சம்பவங்கள் மனதோடு பேச வேண்டும். வாழ்க்கையைச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்ட வேண்டும். ஒவ்வொரு பாத்திரமும் தம்மை, தம் உறவுகளைக் காட்டுவதாய் அமைய வேண்டும். அதன் தொடக்கம், முடிவு போன்றவை சிறப்பாய் பெரிய விடயத்தையும் சுருக்கமாக விளக்கிச் சொல்ல வேண்டும் அதுதான் சிறுகதையாக அமையும்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் சிறுகதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

நிச்சயமாக நல்ல வரவேற்பைப் பெறும். நான் எழுதிய பல சிறுகதைகள் தொடராக பிரதேச, மாவட்ட சாகித்திய விழாப் போட்டிகளில் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 2021 சிறுவர் கதை அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால் வாசகர்களை எனது கதைகள் வெல்லும்.


அவள் ஒரு தனித்தீவு நாவல் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? 

2016 ஆம் ஆண்டில் இந்த நூலை நான் மலேசியாவில் வெளியீடு செய்தேன். மலேசிய எழுத்தாளர் சங்கம், இந்திய இனிய நந்தவனம் சந்திரசேகர் தலைமையில் இலங்கை தடாக கலை இலக்கிய வட்ட நிறுவனர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக எனது நூல் வெளியீடு நடந்தேறியது. அதன்பின்னர் நூல் அறிமுக விழாக்கள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. 

இந்நூலின் பேசு பொருள் வலி சுமந்த மண்ணிலிருந்து தடம் பதித்த சுவடுகளாக அமைந்தது. ஆம்! இது எம் மண்ணின் சிறு துளி அவலம். அதுமட்டுமல்லாமல் புது முயற்சியாக ஒரு நாவலைப் புனைந்து அது இருபத்தியொரு பாகமாக அமைத்து ஒவ்வொரு பாகத்தினையும் கவி வடிவில் யாத்திருப்பேன். இதுவும் இந்நூலின் சிறப்பம்சமாகும். அப்போதுகளில் பல பத்திரிகைகள் இந்த நூலுக்கான விமர்சனத்தைத் தாங்கி வெளிவந்தது. அத்தோடு அண்மையில் மறைந்த  ஆளுமையும் திறனாய்வாளருமான கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்கூட மிக அகமகிழ்ந்து, நயந்து  எழுதியமையும் குறிப்பிடத்தக்கது.


அதிகமான காலங்களைச் செலவிட்டு நாவல்களை எழுதுவது சிரமம் என்று நினைக்கவில்லையா?

சிரமம் என்று நினைத்தால் யாவும் சிரமமே. காலம் என்பது அவரவர் எண்ணப் பாங்கு. மனம்  ஒரு நிலையானால் சாத்தியப்படும். எழுத்தில் தளம்பல் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்களின் மனதில் தான் முதலில் தளம்பல் இருக்கக் கூடாது. ஆகவே காலம் பொருட்டல்ல. எந்தச் சிரமமும் அதில் இல்லை.


உங்கள் எழுத்துக்களில் எவ் ஆளுமையின் தாக்கம் காணப்படுகின்றது?

கவிதை என்றால் கண்ணதாசன், பாரதி ஆகியோரின் தாக்கமும் நாவல் என்றால் லட்சுமி, ரமணி சந்திரனின் தாக்கமும் காணப்படுகின்றது.


உங்களுக்குப் பிடித்த சிறுகதையாசிரியர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் ஆகியோவின் படைப்புகள் குறித்து? 

சிறுகதை ஆசிரியர்கள் பலரையும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக குமுதம், ஆனந்த விகடன் என்பவற்றில் எழுதிய எழுத்தாளர்கள் அனைவரினதும் படைப்புகள் யாவுமே என்னைக் கவர்ந்தவைதான். பெயர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் இப்போது என் நினைவுக்கு உடனே வரவில்லை. இன்னுமொரு எழுத்தாளரான பாலேஸ்வரியை எனக்குப் பிடிக்கும். இவர் இலங்கை எழுத்தாளர் என்பதில் எனக்கும் பெருமைதான். அத்துடன் நாவல்;களைப் பொருத்தமட்டில் சாண்டில்யனின் வரலாற்று நாவல்கள், லட்சுமியின் குடும்ப நாவல்கள், ரமணி சந்திரனின் யதார்த்த நாவல்கள் போன்றவற்றை விசேடமாகக் குறிப்பிடலாம். அத்துடன் இன்னும் பலரையும் சொல்லலாம்.


புதிதாக எழுத ஆரம்பிக்கும் இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்புவது என்ன?

தடைகளைத் தாண்டி முன்னேறுங்கள். உங்கள் எழுத்து உங்கள் உரிமை. யாருக்காகவும். எதற்காகவும் மாறாதீகள். ஆனால் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்குங்கள். தெளிவான  சிந்தனை ஆக்கபூர்வமாகும். யாரும் உங்களை தூக்கி நிறுத்தவில்லை என்று ஆதங்கப்படாதீர்கள். அந்த இடத்திற்கு உங்களைக் கொண்டு வாருங்கள். அது உங்கள் எழுத்துகளால் மட்டுமே சாத்தியமாகும். புதிய பரிணாமங்களை உருவாக்குங்கள். எழுத்தால் சிறகடித்து உலகாளுங்கள்.


மனக்குவியல் கவிதைத் தொகுதி பற்றிக் குறிப்பிட்டு, அந்தத் தலைப்பை நூலுக்குச் சூட்டியமைக்கான காரணத்தைக் குறிப்பிடவும்?

இதில் உள்ளடங்கியுள்ள பெரும்பாலான கவிதைகள் முகநூலில் பதிவிடப்பட்ட பொதுவான கருத்துக்களைக் கொண்ட கவிதைகளாகவே அமைந்துள்ளன. பல்;வேறு தலைப்புகளிலும் எழுதப்பட்டுள்ள கவிதைகள் இந்த நூலில் உள்ளடங்கும். ஆகவே என்மனதில் தோன்றியதையும் சில போட்டிகளுக்காக எழுதியதையும் சேர்த்துக் கொடுத்தேன். அது குவியலாய், நூலாய், என் மனக்குவியலாய் வெளிவந்தது. நிகழ் மீடியா நிறுவனர் சிறிகாந்த ராஜா அவர்கள் அதனை புத்தகமாக்கித் தந்தார். இத்தருணம் அவருக்கும் என் நன்றியைப் பகிர்கிறேன்.


உங்களது இலக்கிய வாழ்வில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்?

2016 இல் மலேசியா சென்றமையும், அங்கு எனது நூலொன்றை வெளியிட்டமையும் என்னால் இன்றும் மறக்க முடியாத நிகழ்வாகவே அமைகிறது. அத்துடன் மலேசியா தமிழ்ச் சங்க தலைவரும் மக்கள் ஓசை பத்திரிகை ஆசிரியருமான இராஜேந்திரப் பெருமாள் அவர்கள் பொன்னாடை போர்த்தி என்னை கௌரவப்படுத்தியமையும் அங்குள்ளவர்களின் தமிழ்ப் பற்றை அரிய முடிந்ததும் இன்றும் என்னால் மறக்க முடியாத தருணமாகவே இருக்கிறது.


எதிர்கால இலக்கிய முயற்சிகள் குறித்து?

நாவல் எழுத வேண்டும், சிறுவர் இலக்கியம் படைக்க வேண்டும். பல வளர்ந்து வரும் இளம் படைப்பாளர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் மிளிர வேண்டும். பெண்களின் ஆளுமை திறம்படுதல் மட்டுமின்றி மலினப்படுத்தப்படும் தன்மையிலிருந்து நீங்கி பூரண ஆதரவு வழங்க இந்த சமுதாயம் ஆவண செய்ய வேண்டும்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

விருதுகள் விற்பனைக்கல்ல. நான் விலை கொடுத்து வாங்குபவளும் இல்லை. விருதுகள் என்பது ஒரு சுயத்தை திறமையை அங்கீகரிப்பது மற்றும் ஊக்கத்தை வளர்க்க உந்துகோலாய் இருப்பதாகும். விருதுகளை வழங்கி வைக்க இப்படிப் பல காரணிகள் இருப்பினும் அவை எமக்கானது என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. இந்தவகையில் எனக்குக் கிடைத்த சில பட்டங்கள் மற்றும் விருதுகள் போன்றவற்றை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

2014 இல் இந்தியாவில் இயங்கிய கவிதைப் பட்டறை அமைப்பினரினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 230  பேர் உலகளவில் போட்டியிட, எனது கவிதை முதலாவதாக தெரிவு செய்யப்பட்டு எனக்கு கவியருவி விருதை அறிவித்தார்கள்.

2015 இல் இலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் கவித்தீபம் விருது பெற்றேன்.

2015 இல் மீண்டும் தடாகம் கலை இலக்கிய வட்டம் மலேசிய எழுத்தாளர்களுடன் இணைந்து திருகோணமலையில் நடத்திய விழாவில் கவியருவி விருது பெற்றேன்.

2016 இல் மலேசியா சென்ற போது மலேசிய எழுத்தாளர்கள் முன்னிலையில்; இனிய நந்தவனம் பதிப்பகம் மற்றும் மலேசியா ஸ்ரீ முகவரி அறவாரியமும் இணைந்து கவித்தென்றல் விருது தந்து என்னை கௌரவித்தார்கள்.

2017 இல் இந்திய குழுக்களில் கிடைத்த அமுத சுரபியின் ஈழக்குயில் சங்கத் தமிழ் கவிதைப் பூங்காவின் கவித்திலகம் விருது மற்றும் கவியுலக பூஞ்சோலயின் கவிச்சிகரம் விருது போன்றவற்றைப் பெற்றேன். இந்த விருதுகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு, அப்போது கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹாபிஸ் நசீர் அவர்களின் கரங்களால் எனக்கு வழங்கி வைக்கப்பட்டது.

2018 இல் இந்தியாவில் இருந்து வருகை தந்த நிகழ் மீடியா இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இந்திய இயங்கு நிலை கவிதைப் பட்டறையின் நாயன்மார் நற்றமிழ்ச் சங்கத்தின் நிருவனர் அவர்களால் தமிழ் ஆர்வலர் விருது பெற்றேன்.

2020 இல் இந்தியா நிகழ் மீடியா நடாத்திய விருது விழாவில் நாயன்மார்கள் நற்றமிழ்ச் சங்கத்தின் சாதனை மகளிர் விருதை எனக்கு அனுப்பி வைத்தார்கள்.

2021 இல் கிழக்கு மாகாணம். பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவில் இளங்கலைஞர் விருதும் பெற்றேன். இதற்குரிய பண முடிப்பும் எனக்குக் கிடைத்தது. 

இவற்றைவிடவும் பல முகநூல் குழுமங்கள் நடாத்தும் போட்டிகளில் பங்குபற்றி பல பாராட்டுகள், சான்றிதழ்களுடன் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளேன். அத்துடன் வருடந்தோறும் நடைபெறுகின்ற பிரதேச, மாவட்ட இலக்கியப் போட்டிகள் பலவற்றில் சான்றிதழ்களையும் நினைவுச் சின்னங்கள் பலவற்றையும் பெற்றுள்ளேன். யாழ் நூலக இணையப் போட்டியில் வென்ற ஒரு விருதும் வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்தும் கௌரவிப்பும் இன்னும் பலவும் உள்ளது. அடுத்த அங்கீகாரம் மக்களால் கிடைக்கும் வரை இன்னும் ஆவல் உண்டு.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

ஆம் ஊடகவியலாளரே!  ஊடகங்களின்  அக்கறை, இலக்கிவாதிகள் மீது பக்கசார்பின்றி இருக்க வேண்டும். பலரை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அதேபோல் மூத்த எழுத்தாளர்கள் மூத்தோரை மட்டுமே முன்னுதாரணமாகக் காட்டாமல் பலரையும் பக்குவமாய் எடுத்துக் காட்ட வேண்டும். முக்கியமாக அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்ணியம் பேசும் கண்ணியம் எல்லாம் உதட்டோடு நின்றுவிடாமல் உள்ளத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். இதன் பிரதிபலிப்பாய் அண்மையில் நான் எழுதிய கவிதையோடு விடைபெறுகின்றேன்.


பெண்ணியம் பேசினாள்


பெண் என்றால் இளக்காரமா

பெருமை பேசினால் மதீயீனமா

சாதனைகள் துச்சமா

சாணக்கியமாய் மிதிப்பீர்களா


குறை குடங்களாய் சிலரிங்கே

கூக்குரலிட்டு பார்க்கின்றனராம்

மறைமுகமாய் மறுதலித்து

மாற்றார் குறை சொல்லுவீர்களா


எட்டுப்படி ஏறிய பின்னும்

படிகளையே அகற்றிவிட

பலபேர் துடிக்கினமாம்

பாவம் பசுத்தோல் போர்த்தியவர்கள்


பகுத்தறிவு உள்ளவளையே

பாராத படித்த மேதாவிகளே

பாவம் குண்டுச் சட்டியில் 

குதிரையோடி உங்களைத்

தக்கவைத்துக் கொள்ளுங்கள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Thursday, November 24, 2022

51. கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் உடனான நேர்காணல்

'திதுலன தாரக்கா' என்ற சிங்கள மொழியிலான நூல் வெளியீட்டை முன்னிறுத்திய விசேட நேர்காணல்


அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஓய்வுநிலை தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


அரசாங்க தகவல் திணைக்கள ஓய்வு நிலை தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஹசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலான"மின்னும் தாரகைகள்" நூல் சிங்களத்தில் வெளிவந்துவிட்டது என்ற செய்தி இலங்கை வாழ் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஓர் இனிப்பான செய்தியாகும்.

இவரது "மின்னும் தாரகைகள்" ஆய்வு நூல் கடந்த 2018.11.11 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட ஒரு மாபெரும் வெற்றி விழாவாக இது பலராலும் பேசப்பட்டது. இந்த ஆய்வு நூல்தான் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி இலங்கையில் வெளிவந்த முதலாவதும் முக்கியமானதுமான நூல் என சான்றோர்களால், பேராசிரியர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வு நூலின் சிங்கள மொழி பெயர்ப்பும் நூலாசிரியர் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது. ஷஷதிதுலன தாரக்கா' (மின்னும் தாரகைகள்) என்ற பெயரிலேயே இந்த நூல் வெளிவந்துள்ளது. இலங்கை பெரும்பான்மை சமூகத்தினரிடையே இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் அரிய பெரிய நோக்கத்தோடு வெளிவரும் இந்த நூலும் இலங்கை இலக்கிய வரலாற்றில் தடம் பதிக்கும் ஒரு முக்கிய நூலாக இந்த நூலைக் கருத முடியும். ஏன் என்றால் இந்த நூலே இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் முதலாவது நூலாகக் காணப்படுவது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமாகும். அதேபோல் சிங்கள மொழியிலும் "திதுலன தாரக்கா" என்ற இந்த நூலே முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் முதலாவது சிங்கள மொழியிலான நூலாக அமைகிறது. 2021.12.04 ஆம் திகதி "திதுலன தாரக்கா" என்ற நூல் வெளிவர இருக்கும் இந்த நிலையில் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைனுடனான நேர்காணலை இனி பார்ப்போம்.

01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது புதிய வாசகர்களுக்காக மிகவும் சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் மலையகத்தைச் சேர்ந்தவள். கண்டி மாவட்டத்தின் ஹேவாஹெட்ட தொகுதியிலுள்ள உடுதெனிய என்ற சிற்றூரே நான் பிறந்த ஊர். அல்ஹாஜ் எம்.எம். ரஷீத் - உம்மு ஸல்மா ரஷீத் தம்பதிகளின் மூத்த புதல்வி. கல்வி கற்றது உடுதெனிய முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் மடவளை மதீனா தேசிய கல்லூரி. முதலாவது தொழில் பிரவேசமே ஊடக நிறுவனம்தான். அன்றைய ஜனரஞ்சக பத்திரிகையாக விளங்கிய தினபதி - சிந்தாமணி அலுவலக ஆசிரியபீட பயிற்சி பத்திரிகையாளராக 1980 ஆம் ஆண்டு நியமனம் பெற்றேன். பத்திரிகை உலக ஜாம்பவான் என்று போற்றப்படும் எஸ்.டி. சிவநாயகம் ஐயாவின் பாசறையில் பத்தாண்டுகள் பெற்ற பயிற்சியும் அனுபவமும் பக்குவமும்தான் இத்துறையில் நான் காலூன்றி நடை பயில வழிவகுத்தது. 1994 ஆம் ஆண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நியமனம் பெற்றேன். அங்கும் சுமார் 20 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றேன்.


கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக தமிழ் மொழி மூல இதழியல் டிப்ளோமா பாடநெறி  1997 ஆம் ஆண்டுதான் ஆரம்பமானது. அந்த இதழியல் டிப்ளோமா பாடநெறியை சிறந்த முறையில் பூர்த்தி செய்து நல்ல பெறுபேறு பெற்றேன். கொழும்பு திறந்த வெளி பல்கலைக்கழகத்திலும் பத்திரிகைத் துறை பாடநெறியில் சித்தி எய்தினேன். தொலைக்கல்வி நிறுவனத்தின் ஊடகத்துறை டிப்ளோமா பட்டம் பெற்றேன். கணணித் துறையிலும் பல பயிற்சி நெறிகளையும் நிறைவு செய்துள்ளேன்.


02. ஊடக அதிகாரியாகப் பணியாற்றிய நீங்கள் நூலாசிரியராக எப்படி பரிணமித்தீர்கள்? அதற்கான காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் யார்?

அரசாங்க தகவல் அதிகாரியாக நான் 1994 ஆம் ஆண்டு நியமனம் பெற்றேன். ஆனால் அதற்கு முன்னரே 1997 மார்ச் 16 ஆம் திகதி 'பண்பாடும் பெண்' என்ற பெயரில் எனது முதலாவது நூல் வெளிவந்தது. எனவே நான் நூலாசிரியரானது 1997 ஆம் ஆண்டில்தான். எனது முதலாவது நூல் வெளிவருவதற்கு முக்கிய காரண கர்த்தாவாகத் திகழ்ந்தவர் எனது பத்திரிகை உலக தந்தை எஸ்.டி. சிவநாயகம் ஐயாதான். தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளில் பிரசுரமான பெண்களைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளே இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்த நூலுக்கு சிறந்ததொரு அணிந்துரையை தந்தவரும் சிவநாயகம் ஐயாதான். 'இந்த அணிந்துரையில் எதை வேண்டுமானாலும் நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். என் மகளுக்கு ஒப்பான நூருல் அயின் என்று நான் எழுதியுள்ளேனே, அந்த வசனத்தை மட்டும் எடுத்து விடாதீர்கள்' என்று சிவநாயகம் ஐயா அன்று கூறிய அன்பார்ந்த வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ரீங்காரமிடுகின்றன. அன்னார் என் மேல் வைத்திருந்த அன்பு - பற்று எல்லாம் அலாதியானவை. 'ஊடகத் துறையில் இவள் ஜொலிப்பாள்'  என்று அன்றே எதிர்வு கூறி ஆசியுரை வழங்கியதும் அன்னார்தான். எனவே அன்னாரை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

அடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் முன்னணியின் தலைவரான சகோதரர் ஃபிஸூலி முஹம்மதும் எனது முதல் நூல் வெளியீட்டின் முக்கிய காரண கர்த்தாதான். அன்றைய வீடமைப்பு அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வாவின் ஆசியுரையையும் பெற்றுத் தந்து, நூல் வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்தி முடிக்க அன்னார் செய்த பங்களிப்பையும் இங்கு நன்றியுடன் நினைவு கூருகிறேன். அத்துடன் எனது கணவர் நஜ்முல் ஹுசைன், சகோதரர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், மற்றும் அந்த நூலின் அட்டைப் படத்தை வடிவமைத்த தம்பி ரஷீத் எம். ரியாழ் போன்றோரையும் இங்கு அன்புடன் நினைவு கூருகிறேன்.


03. இதுவரை வெளிவந்த உங்கள் நூல்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்?

எனது முதலாவது நூல் 'பண்பாடும் பெண்' - 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது. அடுத்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி என்னால் தொகுக்கப்பட்ட எனது கணவரின் கவிதை நூல் 'நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்' என்ற பெயரில் வெளிவந்தது. அதே ஆண்டு 2018.11.11 ஆம் திகதியன்று என்னால் எழுதப்பட்ட இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலான 'மின்னும் தாரகைகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. 2018 டிசம்பரில் எனது கவிதைத் தொகுப்பு நூல் 'பூஞ்செண்டு' என்ற பெயரில் வெளிவந்தது. எனது நான்காவது நூலாகத்தான் 'திதுலன தாரக்கா' என்ற சிங்கள நூல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெளிவரவிருக்கிறது.


04. வெளிவருகின்ற மின்னும் தாரகைகள் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் பற்றி விசேடமாகக் கூற விரும்பும் செய்தி என்ன? ஏன் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?

2018.11.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட எனது 'மின்னும் தாரகைகள்' என்ற ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பே இந்த 'திதுலன தாரக்கா' என்ற நூலாகும். ஆனால் ஒரு திருத்தம். 'மின்னும் தாரகைகள்' தமிழ் நூலில் 'நூல்களை வெளியிட்ட நூலாசிரியர்கள்' 87 பேரின் தகவல்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் எனது சிங்கள ஆய்வு நூலில், நூல்களை வெளியிட்ட நூலாசிரியர்கள் 124 பேரின் தகவல்களை உள்வாங்கியுள்ளேன். நூல்களை வெளியிடாவிட்டாலும் இலக்கியத்துக்கு பங்களிப்புச் செய்த முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள், வானொலிக்கு மட்டும் பங்களிப்புச் செய்த முஸ்லிம் வனிதையர்கள் என்ற இரு தலைப்புகளிலும் அத்தகையோரின் பெயர்ப் பட்டியலை மாத்திரமே இதில் பதிவு செய்துள்ளேன்.


பொருளாதார நெருக்கடி, புத்தகப் பிரசுரத்துக்கான தாள்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இத்தகையோரின் முழுமையான தகவல்களைத் தவிர்க்க வேண்டி ஏற்பட்டதையிட்டு வருந்துகிறேன். எனினும் அவர்களது பெயர்ப் பட்டியலையாவது பதிவு செய்ததையிட்டு மன ஆறுதலடைகிறேன்.


06. நூல்களை வெளியீடு செய்வதில் எவ்வகையான சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?

எனது 'பண்பாடும் பெண்', 'பூஞ்செண்டு' ஆகிய நூல்களுக்கு நான் பெரியளவில் சிரமங்களை எதிர் கொள்ளவில்லை. காரணம் அவை என் சொந்தப் படைப்புகள். ஆனால் 'மின்னும் தாரகைகள்' ஆய்வு நூலுக்கு நான் எதிர் கொண்ட சிரமங்கள் ஏராளம் - தாராளம். அவற்றை அந்த நூலிலேயே நான் பதிவு செய்துள்ளேன். ஒவ்வொரு ஆளுமையையும் நான் அணுகுவதற்கு பட்ட சிரமங்கள், ஒரு சில எழுத்தாளர்கள் தமது தகவல்களைத் தருவதற்கு போட்ட பீடிகைகள் அப்பப்பா... அவற்றை இப்போது நினைக்கும் போதும் நோகிறது எந்தன் நெஞ்சம். ஓரிரு இளம் எழுத்தாளர்களைத் தவிர இம்முறை பலர் மிகவும் ஆர்வத்துடன் தமது தகவல்களைத் தந்துதவினார்கள்.


ஆனால் இம்முறை எனது நூல் சிங்கள நூல் என்பதால் பக்க வடிவமைப்புச் (டுயலழரவ) செய்வதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. பக்க வடிவமைப்புச் செய்தவர் ஒரு சிங்கள சகோதரர். ஆனால் நான் தொகுத்த இந்த ஆய்வு நூலுக்குரிய படைப்பாளிகளின் நூல்கள் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன.  எனவே இது இன்னாரது நூல் என்று இனங்காண்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. சில நூல்களின் அட்டைப் படங்கள் புகைப்படங்கள் என்பன மாற்றி மாற்றிப் போடப்பட்டிருந்தன. இதனை சரி செய்ய பல முறை எனது துணைவர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவர் இல்லம் செல்ல வேண்டி ஏற்பட்டது. அதுமட்டுமல்ல கணினி மயப்படுத்தலில் கூட முஸ்லிம் பெயர்களில் பரிச்சயம் இல்லாததால் பலமுறை சீர் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இவ்வாறு எதிர்நோக்கிய சிரமங்கள் பல உள.


7. மொழிபெயர்ப்புத் துறையில் நீங்கள் செய்த செய்துவரும் ஏனைய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

சிங்கள மொழிபெயர்ப்புத் துறையில் நான் செய்த பங்களிப்புகள் பல உள்ளன. பலருக்கு இவை தெரியாமல் இருக்கலாம். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நான் பணி புரிந்த காலப் பகுதியில்தான் நான் எனது சிங்கள மொழி ஆளுமையை பெரிதும் வளர்த்துக்கொண்டேன். அரசகரும மொழித் திணைக்களம் நடத்திய சிங்கள மொழி உயர் பாடநெறியை வெற்றிகரமாக முடிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பயனாக சுயமாகவே ஒரு சிங்கள காலாண்டு பத்திரிகையை வெளியிடும் பாரிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது 'கொழம்ப புவத்' (கொழும்பு செய்திகள்) என்ற பெயரில் வெளிவந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நான் பணிபுரிந்தேன். அதே திணைக்களத்தின் சிங்கள சஞ்சிகையான 'தெசத்திய' சஞ்சிகையில் கூட சிறப்பு கட்டுரை ஆசிரியராக பல தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் நேர்காணல்களை தொடர்ந்து சிங்களத்தில் எழுதி வந்தேன். 'தொரதுரு',  'பொதுஜன' ஆகிய வாராந்த சிங்கள பத்திரிகைகளுக்கும் நிறையவே எழுதியுள்ளேன்.


அவ்வாறே கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய உடுவை தில்லை நடராஜாவின் மூன்று சிறுவர் கதைப் புத்தகங்களை சிங்களத்தில் மொழி பெயர்ப்புச் செய்துள்ளேன். கடற்கன்னி, பேசும் பேனா, மந்திர கண்ணாடி என்பன அந்த மூன்று நூல்கள் ஆகும். இவைத்தவிர எனது  கணவர் நஜ்முல் ஹுசைனின் கவிதைகளை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். இறைவன் நாடினால் - காலம் கனிந்தால் இந்த கவிதைகளும் நூலுருப் பெறலாம்.


8. மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கும் போது அவற்றின் மூல நூல்களை வாசிப்பது போன்ற இரசனை கிடைக்குமா ?

மொழிபெயர்ப்பாளர் அந்த நூலை மொழிபெயர்க்கும் பாணியில்தான் இது தங்கியுள்ளது. குறித்த நூலை நன்கு படித்து, கிரகித்து அதன் இரசனை குன்றாமல் மொழி பெயர்க்கும் மொழிபெயர்ப்பாளரின் திறமையில்தான் அது தங்கி இருக்கிறது. வரிக்கு வரி மொழிபெயர்ப்புச் செய்யாமல் விடயத்தை நன்கு கிரகித்து எழுதினால் அந்த நூலின் இரசனை குன்றாது என்பது எனது கருத்தாகும். 


9. சமகால இலக்கியம் மீதான உங்கள் பார்வை எப்படி இருக்கிறது?

மூத்த இலக்கியவாதிகளின் இலக்கியங்கள் என்றும் கனதியாகவே இருக்கின்றன. 'ஓல்ட் இஸ் கோல்ட்' என்பார்களே அதுபோல. அத்தகையோரின் இலக்கியங்கள் இன்றும் சுவை குன்றாத அமிர்தமே. ஆனால் சமகால இலக்கியங்களை நோக்கும் போது இன்றைய இளைய படைப்பாளிகளின் படைப்புகளில் சில மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்தாலும் மேலும் சிலரின் எழுத்துகளை ஜீரணிக்கவே முடியாதுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாகக் கூறுவதாயின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை விட சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாக நடமாடும் எமது இளைய தலைமுறையினர் இதனை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதுதான் கேள்விக்குறி. 

ஆளுமைகளின் சிறந்த நூல்களைத் தேடி எடுத்து வாசிப்பதன் மூலம் இளைய சந்ததியினருக்கு நல்ல இலக்கியங்களை படைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இளைய எழுத்தாளர்களுக்கு சிறப்பாக வழிகாட்டும் பொறுப்பு மூத்த எழுத்தாளர்களுக்கும் இருக்கின்றது என்பதையும் மறந்து விடக்கூடாது. இளைய எழுத்தாளர்களை தட்டிக் கொடுப்பதன் மூலமும் அவர்களது பிழைகளை மென்மையாக திருத்துவதன் மூலமும் நாளை அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக உருவாக்கலாம் என்பது எனது நம்பிக்கை.


10. இலக்கியப் பணி சார்ந்த உங்கள் கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

இலக்கிய உலகில் பல குத்து வெட்டுக்கள், சுயநலம், காழ்ப்புணர்ச்சிகள், காலை வாருதல் போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை கண்டும், கேட்டும், பார்த்தும் வந்துள்ளேன். ஆனால் என்னைப் பொருத்தவரை இலக்கியம் சார்ந்த எனது கொள்கை என்ன என்பதை நீங்கள் எனது 'மின்னும் தாரகைகள்'; ஆய்வு நூலை முழுமையாக வாசித்தால் புரிந்து கொள்வீர்கள். எந்த ஒரு சுயநலமும் கருதாது பொது நலத்துடன் அனைத்து படைப்பாளிகளையும் நோக்கியுள்ளேன். இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த இலங்கையின் அனைத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களையும் இலக்கிய வானில் 'மின்னும் தாரகைகளாக' மகுடம் சூடி மகிழ்ந்துள்ளேன். 

மூத்த ஆளுமைகளை நாம் மதிக்க வேண்டும். அவ்வாறு வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு வளர வழி விட வேண்டும். அவர்களும் இத்துறையில் உயர நாம் ஏணியாக இருக்க வேண்டும். அவர்களை தட்டி விடாது தட்டிக் கொடுக்க வேண்டும். நாம் பிறரையும் நம்மைப் போலவே மதித்தால் பிறரால் நாம் மதிக்கப்படுவோம். இலக்கியப் பணி சார்ந்த எனது கொள்கை இதுதான்.


11. மலையக முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி விசேடமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

மலையக இலக்கியத்தின் சின்னங்களாக அறிஞர் சித்திலெப்பை போன்ற பலர் உள்ளனர். விசேடமாக கூறுவதாயின் வித்வதீபம் அருள்வாக்கி அப்துல் காதர் பிறந்த மண் மலையகம்தான். பாட்டால் விளக்கேற்றி, பாட்டால் விளக்கணைத்த இந்த மாபெரும் புலவரின் ஞாபகார்த்தமாக ஒரு முத்திரை வெளியிடுவதற்கு கூட திராணியற்றவர்களாகத் தவிக்கிறோம்.  இந்த நிலையில் மலையக முஸ்லிம்களின் இலக்கிய பங்களிப்புப் பற்றி மேலும் கூறி என்ன பயன் என எண்ணத் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல நான் கூட மலையகத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆனால் தொழில் நிமித்தம் தலைநகரை வசிப்பிடமாகக் கொண்டதனால் மலையக இலக்கிய அமைப்புகள் கூட எமது இலக்கியப் பங்களிப்புகளைக் கண்டுகொள்வதில்லை. அதுகூட வேதனைக்குரிய விடயமே. ஒரு கை தட்டினால் ஓசை கிளம்பாது. எனவே மலையகத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே இலக்கியத்தை, எழுத்தை நேசிக்கும் எனது வேணவாவாகும்.


12. இலக்கிய உலகில் மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டா?

ஆமாம். எனது நான்கு தசாப்த ஊடக மற்றும் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத பல சம்பவங்கள் உண்டு. குறிப்பாக சொல்வதாயின் 2016 ஆம் ஆண்டு எமது இந்திய சுற்றுலாவின் போது நானும் எனது துணைவரும் தமிழ்நாடு பனையூரில் உள்ள கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அந்த மாபெரும் கவிஞரை நேரில் சந்தித்து உரையாடியது, அன்னார் எவ்வித மமதையும் இன்றி எம்மோடு பழகியது, நூல்களைப் பரிமாறிக்கொண்டமை போன்ற விடயங்கள் எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத பசுமை நினைவுகளே.


13. புலம்பெயர் இலக்கியங்கள் குறித்து உங்களது கணிப்பு யாது?

புலம்பெயர் இலக்கியவாதிகளின் இலக்கியச் செயற்பாடுகள் குறித்து அறியும் போது உள்ளம் புளகாங்கிதம் அடைகிறது. எங்கு சென்றாலும் இலக்கியத்தில் அவர்களுக்கு உள்ள ஈடுபாடுகள், தமிழ் மொழியின் மீது அவர்கள் காட்டும் பற்றுக் குறித்து நான் உண்மையிலேயே ஆச்சரியம் அடைவதுண்டு. ஞானம் சஞ்சிகையினால் மாதா மாதம் நடாத்தப்படும் இணையவழி கலந்துரையாடல்கள் மூலமாகவும் இதனை நான், நன்கு அவதானித்துள்ளேன். தமிழ் மெல்லச் சாகும் என்ற வாசகத்தை பொய்யாக்கி தமிழை வளர்க்கும் இந்த நல்ல இலக்கிய உள்ளங்களை மெச்சுகின்றேன்.


14. இலக்கியத் துறையில் உங்களின் பங்களிப்புகளுக்கு கிடைத்த விருதுகள், பட்டங்கள் பற்றி?

அரச மட்ட விருதான கலாபூசணம் விருது உட்பட பல்வேறு அமைப்புகளினால் இலக்கியத் தாரகை, ஊடகத் தாரகை, தகவல் ஜோதி, விவேக விண்மீன், கலா ஜோதி, கலையருவி, கவி தீபம் என எனக்கு கிடைத்த பட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டங்களுடன் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி எனது மின்னும் தாரகைகள் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவின் போது இலங்கையின் மூத்த இலக்கிய ஆளுமையும் நிந்தவூரின் முதல் முஸ்லிம் பெண் அதிபருமான பண்டிதர் மைமூனா ஸெயினுலாப்தீன் அவர்களால் அந்த விழாவின்போது 'தாரகைகளின் தண்மதி' என்று பட்டம் சூட்டி என்னை கௌரவப்படுத்தியமை என் நெஞ்சை நெகிழச் செய்த தருணமாகும்.


15. விருதுகள் தகுதியானவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றனவா?

விருதுகளும் பட்டங்களும் கொச்சைப்படுத்தப்படுவதைத்தான் இன்று நம்மால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. படித்தவர்களுக்கு கௌரவமாக வழங்கப்படும் 'கலாநிதி' பட்டங்கள் கூட நிதிக்காக கல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதாக முறைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் சான்றோர் பலர். ஒரு சில அமைப்புகள் பணம் கொடுத்தால் பட்டம் வழங்கும் வியாபாரத்தை மிகவும் கச்சிதமாக நடத்தி வருகின்றன. இந்த கைங்கரியத்தை இன்று முகநூலில் ஊடாக இயங்கும் சில குழுமங்களும் செய்து வருகின்றன. ஒருசில கவி வரிகளை எழுதுபவர்களுக்கெல்லாம் 'பாவேந்தர்', 'கவிவேந்தர்', 'கவிப்பேரரசி' என்றெல்லாம் உயர் பட்டங்களைச் சூட்டினால் மூத்த ஆளுமைகளுக்கு இவை அகௌரவம் ஆகாதா? எனவே இந்த பொன்னாடைகள் பட்டங்கள் எல்லாம் இன்று செல்லாக் காசாய் போய்விட்டன என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


16. இறுதியாக சொல்ல விரும்புவது?

'திதுலன தாரக்கா' (மின்னும் தாரகைகள்) என்ற எனது சிங்கள ஆய்வு நூலின் வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி சனிக்கிழமை (2021.12.04) காலை 10 மணிக்கு கொழும்பு அல் ஹிதாயா தேசிய கல்லூரி அல்ஹாஜ் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. கொரோனா கால நெருக்கடியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கே இவ் விழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே என்னையும் என் எழுத்தையும் நேசிக்கும் அத்தனை அன்பு உள்ளங்களையும் மொத்தமாக இந்த விழாவுக்கு அழைக்க முடியாமைக்கு வருந்துகிறேன். நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எனது விழா சிறப்பாக நடைபெற பலரும் மனதார வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக எனது இந்த விழாவில் ஒரு புதுமையைப் புகுத்த உள்ளேன். நானறிந்த வகையில் கொழும்பில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது முதல் பிரதியைப் பெறுவது இதுவரை காலமும் ஓர் ஆண் மகனாகத்தான் இருந்தது. ஆனால் இந்த நிலையை மாற்றி ஒரு பெண் பிரமுகர் ஒருவரை எனது விழாவில் அறிமுகம் செய்து வைப்பதில் அக மிக மகிழ்கிறேன். ஆமாம் அக்கரைப்பற்றில் இருந்து அக்கறையுடன் வந்து எனது திதுலன தாரக்கா சிங்கள நூலின் முதல் பிரதியைப் பெற இருப்பவர் நூலாசிரியரும் ஓய்வு பெற்ற ஆசிரியையும் கவிதாயினியுமான மதீனா உம்மா என்ற என் மனதைக் கவர்ந்த சகோதரி என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனது வரலாற்று சிறப்புமிக்க சிங்கள நூலும் வரலாறு படைக்க வாழ்த்துங்களேன் என்ற கோரிக்கையுடன், இந்த நேர்காணலைச் செய்த சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மதுக்கும், 'தினக்குரல்' ஆசிரியருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Wednesday, November 23, 2022

50. கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபீ அவர்களுடனான நேர்காணல்

 கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபீ அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

நான் மலையகத்தில் பிறந்து வளர்ந்தேன். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், இஸ்லாமிய கற்கைத்துறைத் தலைவராகவும் பணியாற்றிய எம்.வை. ஷாபீ அவர்களைத் திருமணம் செய்தேன். தற்போது என் கணவருடன் நியூஸிலாந்தில் வசித்து வருகிறேன்.


தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, இளமைப் பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்?


நான் கடந்து வந்த பாதையை நினைத்தத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நான் தெஹிதெனிய மடிகே என்ற ஒரு குக்கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தேன். இது சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் உள்ள ஒரு சிறிய பிரதேசம். இலக்கித் துறையில் முன்மாதிரிகளோ வழிகாட்டல்களோ எனக்கு இருக்கவில்லை. குறைந்தபட்சம் எங்கள் ஊரில் ஒரு நூலகம்கூட இருக்கவில்லை. என் தந்தை மர்ஹூம் இல்யாஸ் அவர்கள் சிங்கள மொழியில் கல்வி பயின்றவர். ஆனால், என்னில் வாசிப்புப் பழக்கத்தை விதைத்தவர் அவர்தான். நான் விரும்பும் பத்திரிகைகளையும் நூல்களையும் வாங்கித் தந்தார். வானொலி, பத்திகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவந்த போதெல்லாம் பரிசில்கள் வாங்கித்தந்து என்னை உற்சாகப்படுத்தினார். ஆதனால்தான், நான் தொடர்ந்தும் எழுதி வந்தேன்.


நீங்கள் உங்களுடைய ஆரம்பக் கல்வியை எங்கு கற்றீர்கள் என்று கூற முடியுமா?

ஆரம்பக் கல்வியை எனது ஊர் பாடசாலையான தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றேன். பின்னர் மாவனல்ல சாஹிரா கல்லூரியில் என் கல்வியை தொடர்ந்தேன். படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர் மன்றம் நிகழ்ச்சிகளில் தலைமை ஏற்று நடாத்தி உள்ளேன். மீலாத் விழா, தமிழ்த்தின விழா என்று எல்லா வகையான கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று என் திறமையை வளர்த்துக்கொண்டேன். மேடைப் பேச்சுகளிலும் விவாத அரங்குகளிலும் பங்கு பற்றினேன். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழிக் கற்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு  காட்டினேன்.


தங்களது பல்கலைக்கழக வாழ்வு, பார்த்த தொழில்கள் பற்றிக் கூறுங்கள்?

நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றேன். ஆங்கில ஆசிரியையாக சிறிதுகாலம் பணியாற்றினேன். மலேசியாவில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றபின், தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் ஆங்கில விரிவுரையாளராக சிறிது காலம் பணியாற்றினேன். நியூஸிலாந்தில் விக்டோரியாப் பல்கலைக்கழத்திலும் மேற்படிப்பைத் தொடர்ந்தேன். இன்று கல்வி ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறேன். 


தங்களது முதற் படைப்பு எப்போது எதில் வெளியானது? இலங்கையில் இருந்த காலத்தில் எந்தெந்தப் பத்திரிகைகளில் எழுதினீர்கள்?

எனது முதலாவது கட்டுரை, முதல் சிறுகதை, முதல் கவிதை எல்லாமே தினகரனில்தான்  வெளியானது. 1980 களின் ஆரம்பத்தில் தினகரன் சிறுவர் பகுதியில் நிறைய எழுதினேன். பின்னர் தினகரன், சிந்தாமணி, நவமணி, மித்திரன், வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களில் எல்லாம் என் ஆக்கங்கள் வெளியாகின. வானொலியிலும் நிறையவே எழுதினேன். சஞ்சிகைகளிலும் என் படைப்புகள் வெளியாகி உள்ளன. 


ஏன் புலம்பெயர்ந்து செல்லவேண்டி ஏற்பட்டது?

உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்தே எனக்கிருந்தது. திருமணத்தின் பின்னர் என் கணவரும் அதே எண்ணத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் ஆனபின் ஒரு வாரத்துக்கும் குறைவாகவே இலங்கையில் இருந்தோம். பின்பு மேற்படிப்புக்காக இருவரும் சேர்ந்து மலேசியாவுக்குச் சென்றோம். நாங்கள் சர்வதேச பல்கலைக்கழகத்தில் படித்ததால், வெளிநாட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நிறையவே கிடைத்தது. அங்கு படிக்கும்போதே, பகுதி நேர தொழிலும் செய்தேன். நமது நாட்டின் கல்விமுறை, வேலைத்தளம் என்பன வித்தியாசமாக இருந்தன. கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றங்களை அவதானித்தேன். வெளியுலகம் பற்றிய என் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. குறுகிய மனப்பான்மையில் இருந்து விடுபட்டு பரந்த மனதுடன் சிந்திக்க ஆரம்பித்தேன். சமூக செயற்பாடுகளில் அக்கறை ஏற்படாத தொடங்கியது. இந்த மாற்றங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. வேறு நாட்டில் வேறு சூழ்நிலைகளிலும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. மேலும் படிக்க வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டோம். உயர் கல்விக்கான வாய்ப்புகளும் சூழலும் இருவருக்குமே தேவைப்பட்டன. அதற்கான  சந்தர்ப்பம் கிடைத்ததும் புலம் பெயர்ந்தோம்.


இதுவரை வெளிவந்த தங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

01. குமுறுகின்ற எரிமலைகள் - சிறுகதைத் தொகுப்பு

02. தென்னிலங்கை முஸ்லிம்களின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு 

03. இரவைக் காக்கும் இமைகள் - கவிதைத் தொகுப்பு 

ஆகிய மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளேன். அதாவது "குமுறுகின்ற எரிமலைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பும் "தென்னிலங்கை முஸ்லிம்களின்  தமிழ்ச் சிறுகதைகள் - ஓர் ஆய்வு" நூலும் 1998 ஆம் ஆண்டு கல்ஹின்னை தமிழ் மன்றம் மூலமாக வெளியிடப்பட்டன. ஷஷகுமுறுகின்ற எரிமலைகள்' சிறுகதைத் தொகுப்பில் எனது ஆரம்ப கால 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.


"இரவைக் காக்கும் இமைகள்" - கவிதைத் தொகுப்பு 2020 இல் வெள்ளாப்புவெளி  பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மேமன் கவி அவர்களின் தலைமையில் இணையத்தில் வெளியீட்டு விழா நடந்தது. புரவலர் ஹாஷிம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்கள். உள்நாட்டு இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், துபாய், இந்தியா, ஜப்பான்  போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் பலர் இணையம் மூலமாக எங்களோடு இணைந்து கொண்டனர். கொரோனா சூழ்நிலையில் இணையவெளியில் வெளியீட்டு விழா நடாத்தப்பட்ட முதலாவது  நூல் இதுவாகும். 


கடைசியாக வெளியிட்ட உங்களது "இரவைக் காக்கும் இமைகள்" கவிதை நூலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி என்ன கூறப் போகின்றீர்கள்?

நான் ஆரம்ப காலத்தில் எழுதிவந்த கவிதைகள் பலவற்றின் பிரதிகளைத் தொலைத்துவிட்டேன். சேமிப்பில் இருந்த ஆரம்ப காலகட கவிதைதைகள் சிலவற்றுடன் சேர்த்து அண்மைக் காலப் கவிதைகளையும் ஒன்று திரட்டி 30 கவிதைகளைத் தாங்கி "இரவைக் காக்கும் இமைகள்" கவிதை நூல் வெளிவந்திருக்கிறது.


கிட்டத்தட்டட இரண்டு தசாப்தங்களைக் கடந்து கவிதை நூலை வெளியிட்டமைக்கான காரணம் என்ன?

இரண்டு தசாப்தங்களாக வெளிநாட்டில் வசித்து வருவதுதான். காரணம் நூல் வெளியீட்டை முழுவதுமாகப் பொறுப் பேற்றுச் செய்ய நம்பிக்கைக்குரிய ஒருவரின் தேடலில் இருந்தேன் என்றே சொல்லலாம்.


மலையக இலக்கிய வளர்ச்சி பற்றி என்ன சொல்வீர்கள்?

மலையகத்தில் இலக்கியவாதிகள் தனித்தனியாக  இயங்கி வருவதாக நினைக்கிறேன். தலை  நகரிலும் கிழக்கிலங்கையிலும் இலக்கியம் சம்பந்தமான நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் பற்றி அடிக்கடி  கேள்விப்படுகிறேன். ஆனால், மலையகத்தில் இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய செய்திகள் வெளியுலகத்துக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. அல்லது அத்தகைய செய்திகள் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


எழுத்துத் துறை தவிர்ந்த வேறு எவ்வகையான செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?

நானும் என் கணவரும் சமூக சேவையில்  மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். இதுபற்றிய விளம்பரங்களோ, புகைப்படங்களோ எங்கும் வெளிவரக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறோம். அகதிகளாக வந்து குடியேறிய குடும்பங்களின் நலனிலும் கவனம் செலுத்தி வருகிறோம். உற்சாகமூட்டும் பேச்சாளராகவும் நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை சமூகத்துக்கு சொல்லி வருகிறேன். உளவியல் துறையிலும் ஈடுபாடு உண்டு. இன, மத நல்லிணக்க செயற்பாடுகளில் என் கணவருடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.


எழுத்துத் துறையில் உங்களை வியப்பில் ஆழ்த்தியவர்கள் யார்? ஏன்?

ஒரு படைப்புக்கு வாசகர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருக்குமானால் அதுவே ஓர் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. மூத்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்றைய சூழலில் நிறைய இளம் எழுத்தாளர்களும் காத்திரமான படைப்புக்களை முன்வைக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஒருசிலரை மட்டும் பெயர்ப் பட்டியல் போட்டுக்காட்ட விரும்பவில்லை.


நீங்கள் எழுதி, நடித்த நாடகங்கள் பற்றிக் கூறுங்கள்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஏராளமான நாடகங்கள் எழுதியுள்ளேன். இதில் ஷஷபாறையில் பூத்த மலர்' என்ற தொடர் நாடகமும் அடங்கும். நான் முதன் முதலில் குரல் கொடுக்க ஆரம்பித்தது ஆவுஸ்திரேலியா வானொலி வளர்பிறை முஸ்லிம் நிகழ்ச்சியில்தான். இதற்கான சந்தர்ப்பத்தை நிகழ்ச்சித்  தயாரிப்பாளர் முஹம்மது முஹுசீன் அவர்கள் எனக்கு வழங்கினார்கள். பின்னர் ஒரே நாடகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குரலில் பேசி நடித்த அனுபவமும் உண்டு. ஷஷஇலையுதிர் காலம்' என்ற நாடகத்தில் - ஓர் இளம் பெண், நடுத்தர வயதுப் பெண், ஒரு மூதாட்டி என்று மூன்று வேடங்களில் நடித்தேன். நான் இரட்டை வேடமேற்று நடித்த ஷஷபெருநாள் சட்டை' என்ற நாடகம் நேயர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றதால் பல தடவை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 


உங்களது எழுத்துக்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக சமூகத்தில் எவ்வகையான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே அநேகமாக படைப்புகளை முன்வைக்கிறேன். வாழ்க்கையில் சரிந்து விழுந்து, நம்பிக்கையைத் தொலைத்து வாடுவோருக்கு ஊக்கமூட்டும் ஊன்றுகோலாக என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். 


உளவியல் துறையில் உங்களுக்குள்ள ஈடுபாடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

மேலைத்தேய உளவியல் ஆலோசனை முறைகள் முழுக்க முழுக்க தனிமனிதனை முன்னிறுத்தியே வழங்கப்படுகின்றன. சமயங்களில் அவர்களது ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் எங்கள் சமயக் கோட்பாடுகளுடன் முரண்படுகின்றன. இதற்காகவே, நானும் என்  கணவரும் சேர்ந்து இஸ்லாத்தை வழிகாட்டியாகக் கொண்ட உளவியல் வழிகாட்டல் முறையை ஆரம்பித்தோம்.

கணவன் - மனைவிக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படும்போதும், பெற்றோர் - பிள்ளைகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படும்போதும் மறுமை வாழ்க்கையை முன்னிறுத்தி, அல்லாஹ்வின் அளப்பரிய கருணையையும் மன்னிக்கும் மனப்பான்மையையும் நினைவூட்டி அவர்களுக்கு வழிகாட்டுவதே எங்கள் நோக்கமாகும்.


முகநூலை அதிகமான இலக்கியவாதிகள் பயன்படுத்துகின்றார்களே. இதுபற்றி நீங்கள் நினைப்பது என்ன? காத்திரமான இலக்கியப் பங்களிப்புக்களை முகநூலினுடாக செய்ய முடியுமா?

முகநூல் என்பது ஓர் ஊடகம் மட்டுமே. அதனை பாவிக்கும் விதத்திலேயே அதன் பயன்பாடு அடங்கி இருக்கிறது. முகநூல் மூலமும் காத்திரமான இலக்கிய பங்களிப்பு செய்யலாம். நம் படைப்புக்கள் எல்லை தாண்டிப் பயணிக்கும் வாய்ப்பு முகநூலில் கிடைக்கிறது. முகநூல் மூலமே நான் இலக்கிய உலகில் மறு பிறவி எடுத்தேன் என்றால் அது மிகையாகாது.


முகநூல் மூலம் வாசிப்பு அதிகரிப்பதாகக் கருத முடியுமா?

இன்றைய தலைமுறையினர் இணையத்தில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், நீளமான பதிவுகளை பலர் கடந்து செல்வதையும் பார்க்கிறோம். இது ஆரோக்கியமான வாசிப்பின் அடையாளம் அல்ல.


இலக்கிய உலகில் கற்றுக்கொண்டவற்றில் நீங்கள் வாசகர்களுக்குக் கூற விரும்புவது என்ன?

நல்ல எழுத்தாளராக வேண்டுமானால் பரந்த வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் இருந்துகொண்டு வாசிக்காமல் பல்வேறுபட்ட எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாசிக்க வேண்டும். படைப்புகளை விமர்சனப் பார்வையுடன் நோக்கும் திறனையும் இதன்மூலம் வளர்த்துக்கொள்ளலாம்.


உள்நாட்டு இலக்கியப் படைப்புக்கள், வெளிநாட்டு இலக்கியப் படைப்புக்கள் ஆகியவற்றில் தாங்கள் அவதானிக்கும் பிரதான வேற்றுமைகள் எவை?

இலக்கியங்கள் தான் வாழும் சூழலையும் அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் உள்ளடக்கியே  படைக்கப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலக்கியப் படைப்புக்களில் வேற்றுமைகளைவிட ஒற்றுமைகள்தான் மேலோங்கி இருக்கின்றன.


நீங்கள் நேசித்து வாசித்த படைப்பைப் பற்றியும் அதன் சுவாரஷியத் தன்மை பற்றியும் குறிப்பிட முடியுமா?

நான் அண்மையில் வாசித்து முடித்த நூல், ஷஷஹுஸ்னாவின் கதை'. 2019 இல் நியூஸிலாந்து பள்ளிவாசல்கள் இரண்டில் நடந்த மிலேச்சத்தனமான மனித வேட்டைத் தாக்குதலில் உயிரிழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை சரிதையை அவர் கணவர் எழுதியிருக்கிறார். 

வாழ்வியல் பண்புகளும் வரலாறும் கலந்த ஒரு சிறந்த நூலாக, "ஹுஸ்னாவின் கதை" வெளிவந்திருக்கிறது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது - அன்பால்தான் அது சாத்தியம் என்ற சுலோகத்தோடு வெளிவந்திருக்கும் இந்த ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்க்கும் ஆவலில் இருக்கிறேன்.


சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு கணிசமாக குறைந்து வருகின்றது. அந்தவகையில் நீங்கள் நாவல்கள் வெளியிட ஆர்வம் காட்டவில்லையா?

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் சூழலை மையமாக வைத்து இதுவரை எந்த நாவலும் வெளியிடப்படவில்லை என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட என்னைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறேன். மனதுக்குள் சில நாவல்கள் கருக்கட்டி இருக்கின்றன. காலமும் நேரமும் சாதகமாக வந்தால் எழுதி முடிக்கும் எண்ணமுண்டு. 


உங்களுக்கு அல்லது உங்களுடைய படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், கௌரவங்கள் ஏதும் இருப்பின்?

படிக்கும்போது  பாடசாலை மட்டத்திலும், மாவட்ட, மாகாண, தேசிய ரீதியிலும் பல பரிசுகள் வாங்கியுள்ளேன். பல்கலைக்கழக மட்டத்தில் பீடங்களுக்கிடையிலான இலக்கியப் போட்டிகளிலும் வெற்றியீட்டி உள்ளேன்.  

1999 இல் மத்திய மாகாண முஸ்லிம் கலைஞர் கௌரவிப்பில் 'கலைச்சுடர்' பட்டம் வழங்கி  கௌரவிக்கப்பட்டேன். அதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து வந்துவிட்டேன்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

இந்த வருடம் பயணக் கட்டுரைத் தொகுப்பொன்றை வெளியிட ஆர்வமாக இருந்தேன். ஆனால், டிசம்பர் மாதம் கொரோனா சூழ்நிலையில் நான் வெளியிட்ட ஷஷஇரவைக் காக்கும் இமைகள்' நூல் இன்னும் மக்களை சென்றடையவில்லை. இலங்கை நாட்டின் பல பகுதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நாட்டில் நிலைமை சீராகும் வரையில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துள்ளேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Saturday, January 30, 2021

49. UTV தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பேச்சாளர் (ஊக்குவிப்புப் பேச்சாளர்) ரினோஸா நவ்சாத் அவர்களுடனான நேர்காணல்

 UTV தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பேச்சாளர் (ஊக்குவிப்புப் பேச்சாளர்) ரினோஸா நவ்சாத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, குடும்பப் பின்னணி பற்றி எமது வாசகர்களுக்கு சுருக்கமாகக் கூறுங்கள்?


தற்பொழுது நான் தலைநகரத்தில் வசித்து வந்தாலும், என் பிறந்த ஊர் ராகமை. என் சிறுவயதிலிருந்து நினைவு தெரிந்தவரை கொழும்பில் மாபோலை எனும் நகரத்தில் என் உறவினர்கள் வசித்து வந்தனர். சிறுவயதிலிருந்து என் உம்மம்மாவிடமே வளர்ந்தேன். என் உம்மம்மாவிற்கு 10 பிள்ளைகள். ஆதலால் என் மாமா மற்றும் சித்திமார்களிடமே அதிகமாக இருக்க வேண்டியேற்பட்டது. 



எனக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுதே என் உம்மம்மா மற்றும் உறவினர்கள் அனுராதபுரம் நாச்சியாதீவு எனும் கிராமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர். பின்னர் என் பாலர் பாடசாலையைத் தவிர்த்து முதலாம் தரம் தொடக்கம் க.பொ.த. உயர் தரம் வரை நாச்சியாதீவு மு.ம. வித்தியாலயத்தில் கற்றேன். என் தாய் அவர்களின் ஏனைய சகோதரர்களை கவனிக்க மற்றும் பராமரிப்பதற்காகவும் குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாகவும் வெளிநாட்டுக்கு செல்லவேண்டியேற்பட்டது. தாய் சிறுவயதில் வெளிநாடு சென்றதன் காரணமாக என்னை என் உம்மம்மாவே பராமரித்தார். ஆரம்ப காலங்களில் தாய்க்கும் என் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக எனது தாயார் என் தந்தையை விவாகரத்து செய்துவிட தந்தை என்ற ஸ்தானத்தை என் தாயின் தம்பிமார்களே எனக்கு வழங்கி முழு ஒத்துழைப்பையும் தந்தனர். எனவே என் உயர் தரம் வரை என் மாமாமார் மற்றும் பாட்டியின் கட்டுப்பாட்டிலேயே வளர வேண்டிய சூழ்நிலை எனக்கு இருந்தது. அத்துடன் என் தாய்க்கு நான் ஒரே பிள்ளை என்பதால் எல்லோரும் மிகுந்த பாசத்துடனேயே என்னை வளர்த்து ஆளாக்கினர்.


02. நீங்கள் மாணவப்; பருவத்தில் இருந்த பொழுது பிற்காலத்தில் தொலைக்காட்சித் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆவலையோ அல்லது இலட்சியத்தையோ கொண்டிருந்தீர்களா? தொலைக்காட்சித் துறை மீது எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

நிச்சயமாக எனக்கு நினைவு தெரிந்தவரை அவ்வாறான ஒரு எண்ணம் இருக்கவில்லை. ஆனால் தமிழ் மொழியின் மீது அதீத பற்று இருந்தது. நான் அதிகமாக  படிப்பதைத் தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதிலும், நகைச்சுவை பட்டி மன்றங்கள் பார்ப்பதிலும் அதிக நேரத்தை செலவிட்டேன். அத்துடன் என் கல்விக்கான முழு ஒத்துழைப்பும் பரந்தளவிலான சுதந்திரமும் என் வீட்டில் எனக்கு மிகையாகவே கிடைத்தது. தாய் என்னருகில் இல்லையெனினும் தாயின் கடமைகள் அனைத்தையும் உம்மம்மா மற்றும் மாமாமார், சித்திமார் என பலரும் தொடர்ந்து எனக்கு அளித்து வந்தனர். எனவே நான் அளவு கடந்து தொலைக்காட்சி பார்ப்பதையும் இணைப்பாட விதானங்களில் கவனம் செலுத்துவதையும் யாரும் தடுக்கவில்லை. அந்த அபரிமித சுதந்திரமே என்னை தொலைக்காட்சிப் பக்கம் திருப்ப மிகப்பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. காலம் செல்லச் செல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நிகழ்ச்சி வழங்குநர்களாக நானும் மாரி அவர்களைப் போன்று கண்ணாடி முன்னின்றும் தனியாகப் பேசியும் எனக்குள்ளேயே பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதன்பின்பு தரம் 9 இல் கல்வி கற்கும் பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் துறை மீது ஒரு பாரிய ஈர்ப்பு ஏற்பட்டது. எதிர்காலத்தில் என் துறை ஊடகத் துறையாகத்தான் இருக்குமென்று பின்புதான் நானாகவே உணர்ந்துகொண்டேன்.


03. நீங்கள் எப்போது, எந்த வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குள் நுழைந்தீர்கள்?

நான் தரம் பதினொன்றில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பொழுது இலங்கையின் தேசிய தமிழ் தொலைக்காட்சியான நேத்ரா ரீவியில் "ராக மேடை" எனும் இசை நிகழ்ச்சி நடந்தேறியது. சுருதி, சங்கீதம் என்று ஒன்றும் தெரிந்திருக்காவிடினும் அன்றைய நாட்களில் பாடல்கள் பாடவேண்டும் என்று ஆசை இருந்ததால் "ராக மேடை" நிகழ்ச்சியில் பங்குகொண்டேன். மற்றும் இலங்கையின் தனியார் தொலைக்காட்சியான சக்தி ரீவி நடாத்திய "Grand Master" எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். அப்பொழுது என் அகவை பதினேழு இருக்கும். அங்கு சென்று வந்தவுடன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகத்தான் நான் வரவேண்டும் என்று என் முழு உழைப்பையும் ஊடகத் துறைக்குள் நுழைந்து விடுவதற்கே செலவிட்டேன். பின் உயர் தரம் முடித்த கையோடு இலங்கை தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் (SLTTI) ஒரு வருடம் கல்வி கற்றுவிட்டு என் இருபத்து மூன்றாவது வயதில் தொலைக்காட்சிக்குள் நுழைந்தேன்.


04. தொலைக்காட்சியில் எவ்வாறு அறிமுகமாகினீர்கள்?

தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பொழுது என் வசதி கருதி மல்வானையிலுள்ள என் பெரியப்பா வீட்டிலேயே தங்கியிருந்தேன். அக்கால கட்டங்களில் கவிதை எழுதவும், புத்தகங்கள் வாசிப்பதற்கும், நூல் வெளியீட்டு விழாக்களுக்கு செல்லவும் அதிகமான வாய்ப்புக்கள் கிடைத்தன, எனவே கவிதைகள் எழுதி மாதாந்தம் பௌர்ணமி தினத்தில் நடக்கும் கவியரங்கிற்கு சென்று கவிதை பாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது என் கவிதைகளைப் பாராட்டிய கிண்ணியா அமீர் அலி மற்றும் கவிஞர் மேமன் கவி ஆகியோர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஹஜ் பெருநாள் சிறப்பு கவியரங்கில் கவிதை வாசிக்க என்னையும் அழைத்தனர். ஊடகத் துறையில் டிப்ளோமா முடித்த கையயோடு அந்த வாய்ப்பும் கடந்த 2013 ஆம்  ஆண்டு கிடைக்க DAN  எனும் பிராந்திய தொலைக்காட்சியில் பகுதி நேர இஸ்லாமிய பிரிவாக செரண்டிப் எனும் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அங்கு நான் கவிதை வசித்து முடித்த கையோடு  எனக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க அன்றய நாட்களில் செரண்டிப் அலைவரிசை பிரதானியாக இருந்த பஹத் ஏ. மஜீத் அவர்களினால் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது தான் தொலைக்காட்சி என்ற ஒன்றுக்குள் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக  காலடி எடுத்து வைத்தேன்.


05. இத்துறையில் உங்களுக்கு ஈடுபாடு காட்ட ஊக்குவித்தவர்கள் யார்?

உண்மையில் ஊக்குவித்தவர்கள் பற்றிக் கூறும்பொழுது என் குடும்பத்தினருக்கே முதலிடத்தைக் கொடுப்பேன். என் தாய், உம்மம்மா, மாமாமார், மாமி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா மற்றும் என் ஆசிரியர்களும் என்னை அதிகப்படியாக ஊக்குவித்தார்கள்.


06. பல்வேறு தொலைக்காட்சிகளில் தொழில் புரிந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாமே?

ஆம். முதல் காலடி செரண்டிப் தொலைக்காட்சியில் பணிபுரிந்த 5 மாத காலப் பகுதிகள் தான். அலைவரிசை பிரதானியான பஹத் ஏ. மஜீத் மற்றும் நிகழ்ச்சி முகாமையாளராக கடமையாற்றிய இஹ்ஸான் முஹம்மத் மற்றும் இன்னும் இருவருடன் சேர்த்து மொத்தமாக நான்கு பேர்களே அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்தோம். பின்னர் ஒரு சில உயர் தலையீடு காரணமாக செரண்டிப் ரீவியிலிருந்து பஹத் ஏ. மஜீத் தவிர்ந்து ஏனையோர் அனைவரும் உதயம் ரீவிக்கு மாற்றம் பெற்றோம். 2015 முதல் 2019 வரை நான்கு வருடங்களாக ஏ.எல். இர்பான் என்பவர் அலைவரிசை பிரதானியாக கடமையாற்றினார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, பிரதியாக்கம் என ஆழ்ந்த அறிவும் திறமையும் என்னிடம் இருக்கவில்லை. ஆனாலும் இன்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்க முன்னாள் அலைவரிசை பிரதானி ஏ.எல். இர்பான் அவர்களின் கண்டிப்பும் வழிகாட்டலும் ஒருவகை காரணம் எனலாம். ஒரு வரியில் சொல்வதென்றால் "களிமண் சிலையான கதைதான் என் கதை" பல தொலைக்காட்சிகளிலில் பணிபுரியாவிட்டாலும் இவ்விரண்டு தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து மேற்கூறியதற்கு சமம். இன்னும் சுருக்கிச் சொல்வதென்றால் பல சுவாரஷ்யங்கள், பற்பல கண்டிப்புகள் எனலாம்.


07. தொலைக்காட்சித் துறையில் ஈடுபடுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், ஆளுமைகள் என்னவென்று கூற முடியுமா?

தொலைக்காட்சித் துறையில் பணிபுரிவோருக்கு இருக்க வேண்டிய ஆளுமைகள் பற்றி குறிப்பிட எனக்கு போதுமான அனுபவம் இல்லை. என்றாலும் எனக்கு தெரிந்தவற்றை நான் குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கின்றேன். ஒரு நிகழ்ச்சியை கமெராவின் முன் நின்று தொகுத்து வழங்குவதற்கு முதலில் கூச்ச சுபாவமும் தயக்கமும் இருத்தல் கூடாது என்பது முதல் தகுதி. ஒரு நிகழ்ச்சி வழங்குனரைப் பார்த்து திடீர் என்று ஒரு விடயத்தை கையில் கொடுத்து இதைப்பற்றி நீங்கள் அவசரமாக ஒரு காணொளி நேரடி நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரால் கூறப்பட்டால் எவ்வித தயக்கமும் தாமதமும் இன்றி அதைச் செய்து கொடுக்கக்கூடிய திறன் ஒவ்வொரு நிகழ்ச்சித்தொகுப்பாளருக்கும் அத்தியவசிய தேவை. அதனால் தான் நாளாந்தம் அரசியல், பொது அறிவு, சினிமா என்ற அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சி வழங்குனரும் தயாராக இருத்தல் வேண்டும். ஒரு நிகழ்ச்சி வழங்குனரை தயாரிப்பாளர் "இதை செய், இது இப்படித்தான் வரவேண்டும், இப்படித்தான் வாசித்தல் வேண்டும்" என்று கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை அடிக்கடி ஏற்பட்டால் அது ஒரு நேர்த்தியான நிகழ்ச்சி வழங்குனருக்கு பொருத்தமாக இருக்காது. ஷஷஎள் என்றால் எண்ணையாக நிற்றல்' என்ற பழமொழி நிகழ்ச்சி வழங்குனர்களாக இருக்கும் ஓவ்வொரு தொகுப்பாளர்களுக்கும் பொருந்தும்.


08. 'ஒரு துளி' நிகழ்ச்சி உட்பட நீங்கள் தயாரித்து அல்லது தொகுத்து வழங்கும் ஏனைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

UTV யில் நான் மொத்தமாக ஐந்து நிகழ்ச்சிகளை தயாரித்தும், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகின்றேன். அவற்றில் "ஒரு துளி" எனும் நிகழ்ச்சி சனிக் கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சியாகும். அரசியல், சினிமா, அறிவியல் என பல துறைகளில் உச்சம் தொட்டவர்களினதும் வரலாறு மற்றும் தற்கால சுவாரஷ்யமான சர்ச்சைக்குரிய விடயங்களையும் தொகுத்து ஆராய்ந்து ஆவணப்படுதலே மேற்கூறிய "ஒரு துளி" நிகழ்ச்சி. 

நான்  தொகுத்து மற்றும் தயாரித்து வழங்கும் மற்றுமொரு நிகழ்ச்சி "சூப்பர் சமையல்" இந்நிகழ்ச்சி UTV யில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். பெண்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் சுவையான மேலைத்தேய, கீழைத்தேய சமையல்களை தொகுத்து வழங்குதலே அந்நிகழ்ச்சி. அதுதவிர்ந்து "World 360" எனும் நிகழ்ச்சியும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு பொது அறிவுசார் நிகழ்ச்சித்தொகுப்பாகும். இதில் வைரலான விடயங்கள், சந்தைக்குப் புதிதாக அறிமுகமாகிய போக்குவரத்து சாதனங்கள், அறிவியல் என பல சுவாரஷ்யமான விடயங்ககளை 30 நிமிடங்களில் வழங்கும் ஒரு நிகழ்ச்சியே இது. அதுதவிர்ந்து ஷஷசினிமா சினிமா' எனும் நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மற்றும் உலக சினிமா பக்கங்களில் நிகழும் முக்கியமான நிகழ்வுகள் திரைப்படங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. அத்துடன் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் "Weekend Chat" எனும் நிகழ்ச்சியையும் தயாரிக்கின்றேன். இது முழுக்க முழுக்க நேயர்களுக்குப் பிடித்தமான பாடல்களைத் தெரிவு செய்து பாடல்கள் வழங்கும் நேரடி நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.


09. தற்போது நீங்கள் பிரதானமாக தயாரித்து அல்லது தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் யாவை?

நான் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

"ஒரு துளி" (ஆவணப்படுத்தல் நிகழ்ச்சி), "சினிமா சினிமா" (சினிமா செய்திகளின் தொகுப்பு), "World 360" (பொது அறிவு சார் மற்றும் அறிவியல், வர்த்தகம் கலந்த வைரல் நிகழ்வுகளின் தொகுப்பு), "Weekend Chat" (பாடல்கள்  வழங்கும் நேரடி நிகழ்ச்சி), "சூப்பர் சமையல்" இது நான் தயாரித்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி போன்நனவாகும்.


10. தொலைக்காட்சித் துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

தொலைக்காட்சித் துறைக்குள் நுழைய வேண்டும் என்றால் நிச்சயமாக நம்மிடம் திறமை எனும் சாவி வேண்டும். அதுதவிர்ந்து பல இடங்களில் அவமானங்களை சந்திக்கும் சமாளிக்கும் திராணி வேண்டும். எந்தவொரு சிகரத்திலும் அவமானம் எனும் சொல்லை தாண்டி வராமல் ஏறி அரியாசனமிட்டு அமர்ந்துவிட முடியாது. இது தொலைக்காட்சிக்கு மிக அதிகமாகவே பொருந்தும். அத்துடன் பெண்ணாக இருந்தால் தைரியமும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் துணிவும் இருத்தலே போதுமானது.


11. ஒரு பெண்ணாக இத்துறையில் தொடர்ந்தும் இருப்பது சவாலானதாகத் தோன்றவில்லையா? இத்துறையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எப்படியானது?

நிச்சயமாக சவால்தான். மேற்கூறியது போன்று வாழ்க்கையில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விடாமல் அதனுடன் வாழ்க்கை நடத்துவது மிகப்பெரும் சவால் தான். இது நம் தொழிலுக்கும் கூட பொருந்தும். பெண் என்பதைத் தாண்டி நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக இருப்பதால் பல அவமானகளையும் பழிச்சொற்களையும் கீழ்த்தரமான வார்த்தைகளையும் வசைகளையும் தாண்டி இத்துறையில் ஆணிவேராய் இறுக்கி பிடித்து நிற்கின்றேன் என்றால் இது என் இமாலய சாதனை என்றே கூறுவேன். சவால்கள் ஒவ்வொரு ரூபத்தில் வரும். சதிகளாகவோ, ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களாகவோ, புதிய ஆண்களது முகவரியற்ற நற்புக்களாகவோ, ஒரு பெண்ணை பல ரூபத்தில் சவால்கள் எதிர்கொள்ளும். ஆனால் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றியது போல் மிகவும் விழிப்போடு இருந்தால் எந்த சவாலையும் அத்திவாரமே இல்லாமல் அழித்து விடலாம்.


12. ஒரு நிகழ்ச்சித் தொகுப்;பாளர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?

மேற்கூறியது போல் ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர் சுறுசுறுப்பாகவும் பொது அறிவுத்திறன் கொண்டவராகவும் இருப்பதோடு சொற்களை மிகவும் தெளிவாக உச்சரிக்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். உதாரணமாக ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர் அவர் பிரதேச மொழியில் நிகழ்ச்சிகளில் பேசுவதைத் தவிர்த்தல் நல்லது. அத்துடன் இன்றய தலைமுறையினர் மத்தியில் அவர்களை சென்றடையும் வண்ணம் எவ்வாறு கூற வந்த விடயத்தை கொண்டு போய் சேர்த்தல் என்பதை ஆழமாக அறிந்திருத்தல் நல்லது. மற்றும் ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர்  தன்னுடைய தோற்றத்தில் அழகில்லாமலோ, நிறக்குறைவாகவோ, வழுக்கை தலையுடனோ இருக்கலாம். ஆனால் அவரது மூளையில் விடயம் இருக்க வேண்டும். நான் இதை கூறக் காரணம், ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளில் முகத்தோற்றத்திற்கும், நிறத்திற்கும், அழகுக்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றனரே ஒழிய திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே தான் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. ஒரு தொகுப்பாளருக்கு இருக்கக் கூடாத விடயங்களை சுருங்கக் கூறினால் வித்யா கர்வம், அவசரம், தடுமாற்றம், உச்சரிப்புப் பிழை, நேர்த்தியற்ற ஆடை அலங்காரம் இவையனைத்தும் இருந்தால் நிச்சயம் ஒரு நேர்த்தியான நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஆக முடியாது. எனவே மேற்கூறியவற்றை தவிர்த்தல் நல்லது.


13. தொலைக்காட்சித துறையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களை எப்படி உணர்கின்றீர்கள்?

உலகமயமாதலின் விளைவில் தொழில் நுட்பம், ஊடகம், கல்வி முறை என அனைத்தும் அசுர வேகத்தில் மாறிக்கொண்டே வருகின்றது. இவற்றில் தொலைக்காட்சித் துறையிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நிகழ்ச்சிகளின் தன்மை, மொழியின் வளர்ச்சி, வௌ;வேறுபட்ட சிந்தனைகள் தற்கால சமுதாயத்திற்கு ஏற்றாற்போல நிகழ்ச்சிகளை வழங்கும் தனித்தன்மை, காட்சிப்படுத்தல் ரீதியாக சுருங்கச் சொல்லும் குறுஞ்செய்திகளுடன் கூடிய குறும்படங்கள் என தொழிநுட்ப ரீதியிலும் காட்சி வடிவமைப்பிலும் செய்திப் பிரிவுகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


14. UTV தொலைக்காட்சிக்கு அண்மைக் காலமாக காத்திரமான பங்களிப்பை நல்கிவரும் உங்களின் தற்போதைய பணிகள் என்ன?

நான் ஒரு தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கும் பட்சத்தில் என் நிகழ்ச்சிகளுக்குரிய அனைத்துப் பணிகளையும் நான் மட்டுமே செய்து முடிப்பது வழக்கம். இதுவரை எனக்கென்று நான் உதவித் தயாரிப்பாளரையோ அல்லது பிரதி எழுத்தாளரையோ வைத்து நான் வேலை செய்ததில்லை. காரணம் தனியாக ஒரு சிந்தனை நின்று பணிபுரிந்தால் மட்டுமே திறம்படவும் நேர்த்தியாகவும் ஒரு வேலையை செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆகையினால் நிகழ்ச்சி செம்மையாக்கம் (Editing) தவிர்ந்து ஆய்வு செய்தல், பிரதி எழுதுதல், தகவல் சேகரித்தல், முன்னோட்டம் பார்த்தல் என அத்தனை பணிகளையும் தினமும் நானே தனியாக செய்து வருகின்றேன்.


15. Confident Group Of Ceylon பேஸ்புக் பக்கத்தில் கூடுதலாக உங்களது எவ்வகையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளது? அதுபற்றியும் பகிர்ந்துகொள்ளலாமே? அதிகமான நேயர்கள் இப்பக்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளார்களே. இதுபற்றி?

ஆம் இப்பக்கம் என்னுடைய முகநூல் பக்கம். இதுதவிர YouTube தளத்திலும் கணக்கு வைத்துள்ளேன். இன்றைய இளைஞர் சமுதாயத்தை சரியான பாதையில் வழிநடாத்திக் கொண்டு செல்ல வேண்டும் மற்;றும்; இனிவரும் தலைமுறை அதீத கல்வியறிவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் ஒரு சில சமூகப் பிரச்சினைகளை இப்பக்கத்தில் பேசி வருகின்றேன். இப்பக்கத்தை பலபேர் விரும்பக் காரணம் நான் குறிப்பிட்ட ஒரு வட்டார மொழிக்குள் நின்றுவிடாமல் இன்றைய தமிழ் மக்களுக்குப் போய் சேரக்கூடிய இலகு தமிழில் நான் உரையாடுவதன் காரணமாவே இலங்கையர்களைவிட இந்தியத் தமிழர்கள் அதிகம் இப்பக்கத்தை ஆக்கிரமித்துள்ளனர்.


16. ஊடகத் துறையில் மறக்க முடியாத அனுபவமாக நீங்கள் எதனைக் குறிப்பிடுவீர்கள்?

மறக்க முடியாத அனுபவங்கள் பல உள்ளன. அவற்றில் நல்லவைகளும் உள்ளன. தீயவைகளும் உள்ளன. பல இடங்களில் அவமானப்பட்டிருக்கின்றேன். நான் பேசும் தமிழை கொச்சைப்படுத்தக் கேட்டிருக்கின்றேன். நான் அதிகமாக பேசுகின்றேன் எனப் பலர் விமர்சனம் செய்ததும், விமர்சனம் செய்து வருவதும் மறக்க முடியாத அனுபவங்கள் தான். சிலவற்றைக் கடந்ததுதான் என் தனித்துவமான ஊடகப் பயணமாக இருக்கிறது.


17. கவிதைகளோடு உங்களுக்கு எவ்வகையான ஈடுபாடு உள்ளது?

கல்வி கற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் கவிதைகள் வாசிப்பது அதிகம். கவிதை எழுதுவதும் அதிகம். ஆனால் தொலைக்காட்சிக்குள் காலடி வைத்த பின்பு புத்தகங்கள்  வாசிப்பதைத் தாண்டி கவிதைகளில் பெருமளவு ஈடுபாடு காட்டுவதில்லை.


18. உங்கள் பலம் என்று எதனை நினைக்கின்றீர்கள்?

எனது பலம் என்று நான் எப்பொழுதும் கூறுவது என் மன தைரியமும் என் கோபமும் மட்டுமே. முன்கோபமும் பெண்ணுக்கென்ற திமிரும் சற்று இருப்பதனால் தான் இதுவரை ஊடகத்துறைக்குள் தாக்குப்பிடித்து நிற்கின்றேன்.


19. இலங்கை ஊடகங்களில் இந்தியப் படைப்புக்கள் அதிலும் குறிப்பாக இந்திய சினிமாப் பாடல்கள் செல்வாக்குச் செலுத்துகின்றதே. தற்காலத்தில் தொலைக்காட்சிகளில் ஈழத்து கலைஞர்களது பாடல்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் நிகழ்ச்சிகளைக் காண முடியாதுள்ளது ஏன்?

அது இலங்கை கலைஞர்களின் பிழையுமல்ல. நம் ஈழத்து இளம் தலைமுறையினரின் பிழையும் அல்ல. ஏனெனில் காலா காலம் தொட்டு வீடுகளில் உள்நாட்டு நிகழ்ச்சிகள் பார்ப்பதைவிட வெளிநாட்டு பாடல்களையும் நம் தாயகம் கடந்த தொலைக்காட்சி நாடகங்களையும் பார்த்துப் பழகியதால் நம் நாட்டுப் படைப்புகள் கண்களுக்கு புலப்படாமல் போனது. முற்றத்து மல்லிகை மனக்காது என்பது உண்மைதான். ஆனால் தற்போதைய கால கட்டங்களில் ஈழத்து படைப்பாளர்களும் திறனான அழகான விடயங்களை படைத்துக்கொண்டு வருவது அதிகமாகி வருகின்றமை சற்று மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவே உள்ளது.


20. உங்களது நேயர்களை அல்லது தொலைக்காட்சி நேயர்களை எவ்வகையில் நோக்குகின்றீர்கள்?

என்னை நம்புபவர்கள். என்னை விமர்சிப்பவர்கள். என்மீது அளவில்லா கண்ணியம் கொண்டவர்கள் என்றே நான் எப்போதும் எனது நேயர்களை நினைக்கின்றேன்.


21. இணைய தொலைக்காட்சிகளின் வருகை பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

இணையத் தொலைக்காட்சிகளின் வருகை ஓரளவு நல்லது தான். தொழிநுட்ப யுகத்தின் வருகை வளர வளர தொழில் நுட்ப ஊடக முறைகளும் மாறிக்கொண்டே வருகின்றன. மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் மட்டுமே மனிதர்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. ஆனால் இன்று தொலைக்காட்சியின் பரிணாம மாற்றம் வெறும் உள்ளங்கைக்குள் புதைந்து கிடக்கிறது. தொடர்பு சாலைகளின் பரிமாற்றம், ஊடக வழிப் பரிமாற்றம், காட்சி வழிப் பறிமாற்றம் என அனைத்தும் கையில் உள்ள ஸ்மார்ட் தொலைபேசி மூலமாகவே அடைந்து கொள்ள முடிகின்றது. தொலைக்காட்சியின் யுகம் தாண்டி இன்று இணைய வழி தொலைக்காட்சிகள் பிறந்திருப்பது அடுத்த தலைமுறையினரின் அபரிமித ஊடக வழிகாட்டிகளாக இருப்பதற்குத்தான். சுருக்கமாகச் சொன்னால் நல்ல விடயம்தான்.


22. இத்துறையில் இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இத்துறையில் கால்பதித்து ஆறு வருடங்கள் தாண்டிவிட்டன. மக்களிடத்தில் அங்ககீகாரமும் ஓரளவு கிடைத்திருக்கின்றது. இன்னும் கற்க வேண்டியவை பல உள்ளன என நம்புகின்றேன். விருதுகள் பற்றிக் கூறினால் 2019 ஆம் ஆண்டுக்கான அரச தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த ஆவணப் படமாக எனது "ஒரு துளி" எனும் ஆவண நிகழ்ச்சி பரிந்துரை செய்யப்பட்டது. ஆயினும் விருது கிடைக்கவில்லை. பரிந்துரைக்கான சான்றிதழ் மாத்திரமே கிடைத்தது. மனதளவில் சிறுகாயங்கள் இருந்தாலும் விருதுகள் பெறவில்லை என்பது பற்றி நான் இதுவரை கவலையடைந்ததில்லை. பார்வையாளர்கள் மற்றும் நேயர்கள் எனது நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு நான் எங்காவது செல்லும் வேலை அதைப்பற்றி மனந்திறந்து பாராட்டுவார்கள். அப்பொழுது கிடைக்கும் அளப்பரிய மகிழ்ச்சி விருதுகளையும்விட மேலானது. அவ்வாறான தருணங்கள் வாழ்வில் நூற்றுக் கணக்குக்கும் மேல் நிகழ்ந்துள்ளன.


23. இறுதியாக உங்கள் தொலைக்காட்சி நேயர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

என்னுடைய  தொலைக்காட்சி நேயர்களுக்கு முதலில் நான் கூற விரும்புவது நன்றிகள் மட்டுமே. அவர்கள் இல்லையென்றால் எனது நிகழ்ச்சிகள் புஸ்வானம் ஆகியிருக்கும். நான் தயாரித்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டுவார்கள். என் குடும்பத்தைத் தாண்டி என் பார்வையாளர்களுக்கு மட்டுமே நான் கோடான கோடி நன்றிகள் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். எனவே அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களின் ஆதரவு என்றும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


 நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்