பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, December 9, 2022

52. கவிச்சுடர் சிவரமணி அவர்களுடனான நேர்காணல்

 கவிச்சுடர் சிவரமணி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

எனது பெயர் சிவரமணி, பிறந்த இடம் யாழ்ப்பாணம், வாழும் இடம் திருகோணமலை. எனது தாயார் சிவஞானவதி, தந்தை இராசரத்தினம். இருவரும் உயிருடன் இல்லை. இன்று இலக்கியத் துறையில் நான் சிறந்து விளங்கக் காரணம் எனது பெற்றோர்களே. என் தாய் மண் ஈழம். அது தந்த உதிரம் தமிழுக்காய் அதுவும் இலக்கியமாய் உயிருள்ளவரை உழைப்பேன். 


சிறுவயது முதல் வாசிப்பே என் நேசிப்பாய் இருந்தது. பாடசாலைக் காலமதில் கவிதை, பேச்சு என்று பல மேடைகளைக் கண்டேன். இன்று பல்துறைக் கலைஞராய் ஒரு படைப்பாளியாய் உங்கள் முன் நிற்கின்றேன். வாழ்க்கை வெள்ளோட்டத்தில் நானும் திக்கு திசைமாறி கவிச்சுடராய், ஒரு கலைப் படைப்பாளியாய் இன்னும் இன்னும் தேடலோடு இன்று நின்று நிதானித்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். தேடல் என்றுமே ஆரோக்கியமானது. அது என்னை செதுக்கும், சீர்படுத்தும். எதிர்காலங்களில் இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை உங்களுக்குத் தரக் காத்திருக்கிறேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அநுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலை வாழ்க்கை சுகமானது. ஆனால் நாம் அப்போது வாழ்ந்தது யாழில். இலங்கை இராணுவ மற்றும் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புகள் நிறைந்த போராட்டமான அந்தக் காலம், இடர்மிகு காலமாக இருந்தது. வலிகள் தந்த கடந்த காலம் ஏட்டுச் சுரக்காய் என்பது போல கல்வி கற்றவள் தான். நானும் உயர் தரம் கலைப் பிரிவில்தான் கற்றேன். பின்னர் எற்பட்ட வாழ்வியல் மாற்றம் காரணமாக உத்தியோகம் பார்க்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில் அதற்கு வீட்டில் அனுமதிக்கவும் இல்லை. அப்போதிலிருந்து இயலாய் இலக்கியம் மட்டும் தான் என் மூச்சாகி நின்றது.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அநுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

சிறுவயதில் கவிதை, கதை எழுதுவேன். அதனைத் தாண்டி முகநூல் தந்தது முதல் சுவாசம். எனது தாயார் 2012 இல் இறையடி சேர்ந்தார். அன்று ஆற்றாமையால் கொட்டத் தொடங்கிய உணர்வூற்று இன்று பரிணாமம் பெற்று நிற்கிறது. முகநூல் வழியாக ஊக்குவித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதன் ஆரம்பமே முதலாவது கவிதைத் தொகுப்பு புலம்பெயர் தேசமொன்றின் படைப்பாளிகள் உலகம் எனும் அமைப்பினால் 2015 இல் செய்து தரப்பட்டது. சிறுவயது அனுபவங்களுக்கு ஆவணமாக தற்சமயம் என்னிடம் எதுவுமே இல்லை. ஆகையால் எனது மறு உயிர்ப்பு கவிதைத் துறையேயாகும்.


உங்களைக் கவிஞராக வளர்த்த பின்னணி என்ன?

வாசிப்பை நேசித்ததால் என்னாலும் படைப்புகளைத் தரமுடியும் என்ற நம்பிக்கை. அதில் குறிப்பிடப்படுகின்ற பின்னணி பல இயலோடு ஒன்றிய தன்மை, வலிகள் மிகுந்த வாழ்க்கையாகும். பலரது செயல்களால் ஏற்படுகின்ற மனத்தாக்கமும் காரணமாகின. அதைவிட சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும், மக்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான். இதையும் தாண்டிக் கூறுவதாயின் தமிழ் தந்த வரம் என்று தான் சொல்ல முடியும்.


நீங்கள் இரசித்து வாசித்த சில கவிதைகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?

கவிதைகளை ஆழமான சிந்தனையோடு வாசிக்கும் பழக்கம் எனக்கு. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைகள் பலவும் எனக்குப் பிடிக்கும். 


ஊரெங்கும் உயர்ந்துள்ள கற்பக விருட்சங்களே!

கண் திறவுங்கள்

வீசும் காற்றுக்கெல்லாம் தலையசைத்து

தாளம் போடுவதை நிறுத்தி அமைதி பெறுக..

உரம் பெற்ற வைர உடல்வாகும்,

குனியோமெனும் வரலாறும்

உமக்குண்டு. 

பகைவனுக்கிதனை உணரச் செய்வீர்.


அத்துடன் மண் பற்றுடன் கூடிய போராட்ட காலக் கவிதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகளும் எனக்குப் பிடிக்கும். உதாரணமாக:-


போராளி

செத்தவனுக்காக

அழுதவன்

நீ

இவன்

அழுதவனுக்காக

செத்தவன்


**************



இயக்கம்

வைக்காதே சிலை

தொளிலாளிக்கு

எங்கும்

செயலற்று

நின்றதில்லை

இவன்

என்றும்!


**************



வல்லாண்மை

பயங்கரவாதி

என்கிறான்

துப்பாக்கி


வைத்திருப்பவனை

அணுகுண்டு

வைத்திருப்பவன்!


இவை சீண்டி சிந்திக்க வைக்கும் கவிதைகளாக இருக்கின்றன. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுமட்டுமில்லாமல் மன வலியை எடுத்தியம்பும் பொதுவானவர்களின் கவிதைகளும் எனக்குப் பிடிக்கும்.


மகாகவி பாரதியாரின் புதுக் கவிதைகளைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

நான் என்ன சொல்வேன் ஏகலைவன் போலத்தான் என் மானசீக குரு. ஆம்! அவரை நினைத்தாலே நினைவில் வருவது அச்சமில்லை அச்சமில்லை என்பதே..


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என் எழுத்துக்களுக்கும் அச்சமில்லை. அடுத்து மனதில் ஒரு எண்ணம் பதிவானது. துன்பம் வரும் போது அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்த்தை வெட்டும் வாளாகிவிடும். ஆம்! உண்மை அருமருந்தான உண்மைதான். இது அனுபவபூர்வமானது. இப்படியான உணர்வில் யதார்த்தத்தைப் புகுத்தி புதுமை எழுச்சி என விதைகளைத் தூவிச் செல்வது எனக்குப் பிடிக்கும். அவரின் சிந்தனை, செயல், இயல் எல்லாமே பாமரரையும் படித்துச் சுவைக்க வைக்கும், கலையை இரசிக்க வைக்கும். அந்தவகையில் அவர் மகா கவியே!


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? அவை பற்றிக் குறிப்பிடுங்கள்?

 இதுவரை 04 நூல்களையே என்னால் வெளியிட முடிந்தது. அவை:-

01. தொடுவானின் சிதறல்கள் (கவிதைத் தொகுதி) - 2015

02. அவள் ஒரு தனித்தீவு (நாவல்) - 2016 இந்த நாவலில் 21 பாகங்கள் உள்ளன. இது கதையும் கவிதையும் அடங்கிய தனிச் சிறப்புமிக்கது.

03. நவீன சீதை (சிறுகதைத் தொகுதி) - 2021 இது கிழக்கு மாகாணம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டது.

04. மனக்குவியல் (கவிதைத் தொகுதி) - 2022 இது இந்தியா தமிழகத்தில் அண்மையில் நிகழ் மீடியாவினால் வெளியிடப்பட்டது.


உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்து, உதவியவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

ஆம். எனது முதலாவது நூலான தொடுவானின் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியைப் படைப்பாளிகள் உலகம் வெளியிட்டுத் தந்தது. அவர்களே என்னை இலக்கிய உலகம் அறியச் செய்த நட்புறவுகள் ஆகும். இரண்டாவது நூலை வெளியிட என் சொந்த முயற்சியும் அத்தோடு சில நட்புறவுகளும் உதவின. சிலரை சொல்லும்போது சிலரின் பெயர் விடுபடலாம் என்பதால் அவர்களது பெயர்ப் பட்டியலை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. மூன்றாவது நூலை வெளியிட கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களம் மற்றும் அச்சகர் எனப் பலர் உதவினர். நான்காவது நூலை வெளியிட இந்திய திரைப்படத் துறையைச் சார்ந்தவரும் நிகழ் மீடியா நிறுவனரும் நாயன்மார் நற்றமிழ்ச் சங்கத் தலைவருமான சிறிகாந்த ராஜா அண்ணன் அவர்கள் உதவினார்.


நீங்கள் வெளியிட்ட நூல்களில் பொதுவாக உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

சிந்திக்க வேண்டியவற்றை எழுத்தாக்குகிறேன். வலிகளைப் பேசுகிறேன். முக்கியமாய் பெண்மையின் ஏக்கங்கள், தாக்கங்கள் போன்றவற்றை எனது எழுத்தில் வடிக்கிறேன். அதுமட்டுமின்றி அனைத்து விடயங்களையும் தொட்டுச் செல்வதே என் எழுத்து என்று சுருக்கமாகக் கூறலாம்.


தொடுவானின் சிதறல்கள் கவிதைத் தொகுதி பற்றி விசேடமாகக் குறிப்பிட விரும்பும் செய்தி என்ன?


எனக்கு முகவரி கொடுத்தது, என் எழுத்தை அச்சுருவாக்கியது, ஆவணப்படுத்தலில் முதன்மையானது, முகாந்திரமாய் வெளியீடு என்று சொல்லலாம். திருகோணமலை பத்ரகாளி ஆலய மண்டபத்தில் ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் ஆசியுடன், தமிழருவி சிவகுமார் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக இந்த நூல் வெளியீடு இடம்பெற்றமை என்னால் இன்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. அக்கவிதைத் தொகுதியானது பல விடயங்களைக் கருப்பொருட்களாக உள்ளடக்கி வகையில் வெளிவந்தது. அதிலும் குறிப்பாக இந்தக் கவிதைத் தொகுதியில் வாழ்வியலே பேசுபொருள் ஆக அமைந்தது.


உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது? 


யதார்த்தம் என்னை எழுதத் தூண்டுகிறது. சிறு பொறி தூண்டலும் கருவாகும், உணர்வால் எழுத்தாகும், உணர்வுகளால் அது பூர்த்தியாகும். எந்த ஒன்றை எடுத்தாலும் அதன் தொடக்கம், அதன் விரிப்பு காலத்தோடு ஒன்றியே முடிவு மட்டும், எனக்கே உரியதாய் மட்டும், அதுவே முத்திரையாய் அமைய முடிவெடுப்பேன். உணர்வே எனக்கு இலக்கியம், உலகமே பாடம்.


ஒரு சிறந்த சிறுகதை எப்படியிருக்க வேண்டும்? உங்களது பாத்திரப் படைப்பு எப்படிப்பட்டது?

ஒரு சிறுகதை வாசகர்களை அதனோடு ஒன்றி வாழ வைக்க வேண்டும். அதன் சம்பவங்கள் மனதோடு பேச வேண்டும். வாழ்க்கையைச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்ட வேண்டும். ஒவ்வொரு பாத்திரமும் தம்மை, தம் உறவுகளைக் காட்டுவதாய் அமைய வேண்டும். அதன் தொடக்கம், முடிவு போன்றவை சிறப்பாய் பெரிய விடயத்தையும் சுருக்கமாக விளக்கிச் சொல்ல வேண்டும் அதுதான் சிறுகதையாக அமையும்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் சிறுகதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

நிச்சயமாக நல்ல வரவேற்பைப் பெறும். நான் எழுதிய பல சிறுகதைகள் தொடராக பிரதேச, மாவட்ட சாகித்திய விழாப் போட்டிகளில் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 2021 சிறுவர் கதை அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால் வாசகர்களை எனது கதைகள் வெல்லும்.


அவள் ஒரு தனித்தீவு நாவல் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? 

2016 ஆம் ஆண்டில் இந்த நூலை நான் மலேசியாவில் வெளியீடு செய்தேன். மலேசிய எழுத்தாளர் சங்கம், இந்திய இனிய நந்தவனம் சந்திரசேகர் தலைமையில் இலங்கை தடாக கலை இலக்கிய வட்ட நிறுவனர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக எனது நூல் வெளியீடு நடந்தேறியது. அதன்பின்னர் நூல் அறிமுக விழாக்கள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. 

இந்நூலின் பேசு பொருள் வலி சுமந்த மண்ணிலிருந்து தடம் பதித்த சுவடுகளாக அமைந்தது. ஆம்! இது எம் மண்ணின் சிறு துளி அவலம். அதுமட்டுமல்லாமல் புது முயற்சியாக ஒரு நாவலைப் புனைந்து அது இருபத்தியொரு பாகமாக அமைத்து ஒவ்வொரு பாகத்தினையும் கவி வடிவில் யாத்திருப்பேன். இதுவும் இந்நூலின் சிறப்பம்சமாகும். அப்போதுகளில் பல பத்திரிகைகள் இந்த நூலுக்கான விமர்சனத்தைத் தாங்கி வெளிவந்தது. அத்தோடு அண்மையில் மறைந்த  ஆளுமையும் திறனாய்வாளருமான கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்கூட மிக அகமகிழ்ந்து, நயந்து  எழுதியமையும் குறிப்பிடத்தக்கது.


அதிகமான காலங்களைச் செலவிட்டு நாவல்களை எழுதுவது சிரமம் என்று நினைக்கவில்லையா?

சிரமம் என்று நினைத்தால் யாவும் சிரமமே. காலம் என்பது அவரவர் எண்ணப் பாங்கு. மனம்  ஒரு நிலையானால் சாத்தியப்படும். எழுத்தில் தளம்பல் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்களின் மனதில் தான் முதலில் தளம்பல் இருக்கக் கூடாது. ஆகவே காலம் பொருட்டல்ல. எந்தச் சிரமமும் அதில் இல்லை.


உங்கள் எழுத்துக்களில் எவ் ஆளுமையின் தாக்கம் காணப்படுகின்றது?

கவிதை என்றால் கண்ணதாசன், பாரதி ஆகியோரின் தாக்கமும் நாவல் என்றால் லட்சுமி, ரமணி சந்திரனின் தாக்கமும் காணப்படுகின்றது.


உங்களுக்குப் பிடித்த சிறுகதையாசிரியர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் ஆகியோவின் படைப்புகள் குறித்து? 

சிறுகதை ஆசிரியர்கள் பலரையும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக குமுதம், ஆனந்த விகடன் என்பவற்றில் எழுதிய எழுத்தாளர்கள் அனைவரினதும் படைப்புகள் யாவுமே என்னைக் கவர்ந்தவைதான். பெயர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் இப்போது என் நினைவுக்கு உடனே வரவில்லை. இன்னுமொரு எழுத்தாளரான பாலேஸ்வரியை எனக்குப் பிடிக்கும். இவர் இலங்கை எழுத்தாளர் என்பதில் எனக்கும் பெருமைதான். அத்துடன் நாவல்;களைப் பொருத்தமட்டில் சாண்டில்யனின் வரலாற்று நாவல்கள், லட்சுமியின் குடும்ப நாவல்கள், ரமணி சந்திரனின் யதார்த்த நாவல்கள் போன்றவற்றை விசேடமாகக் குறிப்பிடலாம். அத்துடன் இன்னும் பலரையும் சொல்லலாம்.


புதிதாக எழுத ஆரம்பிக்கும் இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்புவது என்ன?

தடைகளைத் தாண்டி முன்னேறுங்கள். உங்கள் எழுத்து உங்கள் உரிமை. யாருக்காகவும். எதற்காகவும் மாறாதீகள். ஆனால் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்குங்கள். தெளிவான  சிந்தனை ஆக்கபூர்வமாகும். யாரும் உங்களை தூக்கி நிறுத்தவில்லை என்று ஆதங்கப்படாதீர்கள். அந்த இடத்திற்கு உங்களைக் கொண்டு வாருங்கள். அது உங்கள் எழுத்துகளால் மட்டுமே சாத்தியமாகும். புதிய பரிணாமங்களை உருவாக்குங்கள். எழுத்தால் சிறகடித்து உலகாளுங்கள்.


மனக்குவியல் கவிதைத் தொகுதி பற்றிக் குறிப்பிட்டு, அந்தத் தலைப்பை நூலுக்குச் சூட்டியமைக்கான காரணத்தைக் குறிப்பிடவும்?

இதில் உள்ளடங்கியுள்ள பெரும்பாலான கவிதைகள் முகநூலில் பதிவிடப்பட்ட பொதுவான கருத்துக்களைக் கொண்ட கவிதைகளாகவே அமைந்துள்ளன. பல்;வேறு தலைப்புகளிலும் எழுதப்பட்டுள்ள கவிதைகள் இந்த நூலில் உள்ளடங்கும். ஆகவே என்மனதில் தோன்றியதையும் சில போட்டிகளுக்காக எழுதியதையும் சேர்த்துக் கொடுத்தேன். அது குவியலாய், நூலாய், என் மனக்குவியலாய் வெளிவந்தது. நிகழ் மீடியா நிறுவனர் சிறிகாந்த ராஜா அவர்கள் அதனை புத்தகமாக்கித் தந்தார். இத்தருணம் அவருக்கும் என் நன்றியைப் பகிர்கிறேன்.


உங்களது இலக்கிய வாழ்வில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்?

2016 இல் மலேசியா சென்றமையும், அங்கு எனது நூலொன்றை வெளியிட்டமையும் என்னால் இன்றும் மறக்க முடியாத நிகழ்வாகவே அமைகிறது. அத்துடன் மலேசியா தமிழ்ச் சங்க தலைவரும் மக்கள் ஓசை பத்திரிகை ஆசிரியருமான இராஜேந்திரப் பெருமாள் அவர்கள் பொன்னாடை போர்த்தி என்னை கௌரவப்படுத்தியமையும் அங்குள்ளவர்களின் தமிழ்ப் பற்றை அரிய முடிந்ததும் இன்றும் என்னால் மறக்க முடியாத தருணமாகவே இருக்கிறது.


எதிர்கால இலக்கிய முயற்சிகள் குறித்து?

நாவல் எழுத வேண்டும், சிறுவர் இலக்கியம் படைக்க வேண்டும். பல வளர்ந்து வரும் இளம் படைப்பாளர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் மிளிர வேண்டும். பெண்களின் ஆளுமை திறம்படுதல் மட்டுமின்றி மலினப்படுத்தப்படும் தன்மையிலிருந்து நீங்கி பூரண ஆதரவு வழங்க இந்த சமுதாயம் ஆவண செய்ய வேண்டும்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

விருதுகள் விற்பனைக்கல்ல. நான் விலை கொடுத்து வாங்குபவளும் இல்லை. விருதுகள் என்பது ஒரு சுயத்தை திறமையை அங்கீகரிப்பது மற்றும் ஊக்கத்தை வளர்க்க உந்துகோலாய் இருப்பதாகும். விருதுகளை வழங்கி வைக்க இப்படிப் பல காரணிகள் இருப்பினும் அவை எமக்கானது என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. இந்தவகையில் எனக்குக் கிடைத்த சில பட்டங்கள் மற்றும் விருதுகள் போன்றவற்றை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

2014 இல் இந்தியாவில் இயங்கிய கவிதைப் பட்டறை அமைப்பினரினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 230  பேர் உலகளவில் போட்டியிட, எனது கவிதை முதலாவதாக தெரிவு செய்யப்பட்டு எனக்கு கவியருவி விருதை அறிவித்தார்கள்.

2015 இல் இலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் கவித்தீபம் விருது பெற்றேன்.

2015 இல் மீண்டும் தடாகம் கலை இலக்கிய வட்டம் மலேசிய எழுத்தாளர்களுடன் இணைந்து திருகோணமலையில் நடத்திய விழாவில் கவியருவி விருது பெற்றேன்.

2016 இல் மலேசியா சென்ற போது மலேசிய எழுத்தாளர்கள் முன்னிலையில்; இனிய நந்தவனம் பதிப்பகம் மற்றும் மலேசியா ஸ்ரீ முகவரி அறவாரியமும் இணைந்து கவித்தென்றல் விருது தந்து என்னை கௌரவித்தார்கள்.

2017 இல் இந்திய குழுக்களில் கிடைத்த அமுத சுரபியின் ஈழக்குயில் சங்கத் தமிழ் கவிதைப் பூங்காவின் கவித்திலகம் விருது மற்றும் கவியுலக பூஞ்சோலயின் கவிச்சிகரம் விருது போன்றவற்றைப் பெற்றேன். இந்த விருதுகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு, அப்போது கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹாபிஸ் நசீர் அவர்களின் கரங்களால் எனக்கு வழங்கி வைக்கப்பட்டது.

2018 இல் இந்தியாவில் இருந்து வருகை தந்த நிகழ் மீடியா இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இந்திய இயங்கு நிலை கவிதைப் பட்டறையின் நாயன்மார் நற்றமிழ்ச் சங்கத்தின் நிருவனர் அவர்களால் தமிழ் ஆர்வலர் விருது பெற்றேன்.

2020 இல் இந்தியா நிகழ் மீடியா நடாத்திய விருது விழாவில் நாயன்மார்கள் நற்றமிழ்ச் சங்கத்தின் சாதனை மகளிர் விருதை எனக்கு அனுப்பி வைத்தார்கள்.

2021 இல் கிழக்கு மாகாணம். பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவில் இளங்கலைஞர் விருதும் பெற்றேன். இதற்குரிய பண முடிப்பும் எனக்குக் கிடைத்தது. 

இவற்றைவிடவும் பல முகநூல் குழுமங்கள் நடாத்தும் போட்டிகளில் பங்குபற்றி பல பாராட்டுகள், சான்றிதழ்களுடன் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளேன். அத்துடன் வருடந்தோறும் நடைபெறுகின்ற பிரதேச, மாவட்ட இலக்கியப் போட்டிகள் பலவற்றில் சான்றிதழ்களையும் நினைவுச் சின்னங்கள் பலவற்றையும் பெற்றுள்ளேன். யாழ் நூலக இணையப் போட்டியில் வென்ற ஒரு விருதும் வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்தும் கௌரவிப்பும் இன்னும் பலவும் உள்ளது. அடுத்த அங்கீகாரம் மக்களால் கிடைக்கும் வரை இன்னும் ஆவல் உண்டு.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

ஆம் ஊடகவியலாளரே!  ஊடகங்களின்  அக்கறை, இலக்கிவாதிகள் மீது பக்கசார்பின்றி இருக்க வேண்டும். பலரை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அதேபோல் மூத்த எழுத்தாளர்கள் மூத்தோரை மட்டுமே முன்னுதாரணமாகக் காட்டாமல் பலரையும் பக்குவமாய் எடுத்துக் காட்ட வேண்டும். முக்கியமாக அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்ணியம் பேசும் கண்ணியம் எல்லாம் உதட்டோடு நின்றுவிடாமல் உள்ளத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். இதன் பிரதிபலிப்பாய் அண்மையில் நான் எழுதிய கவிதையோடு விடைபெறுகின்றேன்.


பெண்ணியம் பேசினாள்


பெண் என்றால் இளக்காரமா

பெருமை பேசினால் மதீயீனமா

சாதனைகள் துச்சமா

சாணக்கியமாய் மிதிப்பீர்களா


குறை குடங்களாய் சிலரிங்கே

கூக்குரலிட்டு பார்க்கின்றனராம்

மறைமுகமாய் மறுதலித்து

மாற்றார் குறை சொல்லுவீர்களா


எட்டுப்படி ஏறிய பின்னும்

படிகளையே அகற்றிவிட

பலபேர் துடிக்கினமாம்

பாவம் பசுத்தோல் போர்த்தியவர்கள்


பகுத்தறிவு உள்ளவளையே

பாராத படித்த மேதாவிகளே

பாவம் குண்டுச் சட்டியில் 

குதிரையோடி உங்களைத்

தக்கவைத்துக் கொள்ளுங்கள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment