எழுத்தாளர் நஸீரா எஸ். ஆப்தீன் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகம், பாடசாலை வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?
எனது பிறப்பிடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரமாகும். எனது தந்தை ஏறாவூரின் உயர் குடியெனக் கருதப்பட்ட பெரிய ஆலிம் குடும்பத்தின் முகம்மது ஹஸன் ஆலிம் என்பவரின் ஆண் மக்களில் இரண்டாமவரான செயினுலாப்தீன் என்பவராவார். எனது தாயின் பெயர் அலியார் ஆயிஷா உம்மா. எனது பெற்றோருக்கு நான் இரண்டாவது பிள்ளை. எனது தந்தை ஏறாவூரின் பிரபல பாடசாலைகள் அனைத்திலும் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். எனது தாய், தந்தை இருவரும் தற்போது இவ்வுலகில் இருந்து விடைபெற்று விட்டார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). எனது கணவர் சேகு இப்றாகிம் முகம்மட் மஹ்சூர், வாகன திருத்துனராகப் பணி புரிந்தவர். 1988 ஆம் ஆண்டில் ஏறாவூரில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஷஹீதாக்கப்பட்டார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). எனக்கு இரண்டு பெண் மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் முகாமைத்துவ உதவியாளர்களாகக் கடமை புரிகின்றார்கள்.
நான் ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் (தற்போதைய அலிகார் மத்திய கல்லூரி) ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரை கல்வி கற்றவள். க.பொ.த. உயர் தரத்தில் நான் வணிகப் பிரிவில் கற்று 1980 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தி பெற்றேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வி மூலம் எனது கலைமாணிப் பட்டப் படிப்பையும் முதுகலைமாணிப் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளேன்.
உங்கள் தொழில் அனுபவம் பற்றியும் கூறுங்கள்?
நான் 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தெரிவுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று மனையியல் உதவி ஆசிரியையாக 1982 ஏப்ரலில் முதல் நியமனம் பெற்று, வாழைச்சேனை அன்னூர் மகா வித்தியாலயத்தில் (அன்னூர் தேசிய பாடசாலை) கடமையேற்றேன். அதன் பின்னர் எனது பாடத் தகுதிகளின் அடிப்படையில் சமூகக் கல்விப் பாட நெறிக்காக அழுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு உள்வாங்கப்பட்டு, பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியினைப் பூரணப்படுத்தினேன். அதனைத் தொடர்ந்து ஏறாவூர் றகுமானியா வித்தியாலயம், ஏறாவூர் அறபா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியையாகக் கடமை புரிந்துள்ளேன்.தொடர்ந்து இலங்கை கல்வி நிருவாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று, 1999 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கல்குடா கல்வி வலயம், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பணி புரிந்து 2018 ஆம் ஆண்டில் 55 வயதில் எனது கடமையிலிருந்து ஓய்வு பெற்றேன்.
உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான உங்களது குடும்பப் பின்னணி, இளமைப் பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்?
நான் ஆரம்ப வகுப்புகளில் கற்றுக் கொண்டிருந்தபோது அந்த சிறு வயதிலிருந்தே ஏராளமான நூல்களை வாசிக்கும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தது. எனது தந்தை வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி நூலகமொன்றை வைத்திருந்தார். அதுபோன்று எனது தந்தை பொது நூலகங்களிலிருந்தும் பல நாவல்கள், சிறு கதைகள் போன்ற நூல்களை வீட்டிற்குக் கொண்டு வருவார்.
இவைகளில் எந்த நூல்களையும் நான் படிக்காமல் விட்டதில்லை. மிகப் பெரிய நாவல்களைக் கூட ஓரிரு தினங்களில் வாசித்து முடிப்பேன். எனது தந்தை தொடர்ச்சியாக தினசரிப் பத்திரிகைகளை எடுப்பதுண்டு. வார இறுதிப் பத்திரிகைகளுக்காக மிக ஆவலுடன் காத்திருந்து அதில் வரும் தொடர் கதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்றவற்றைத் தவறாமல் வாசிப்பேன். அவ்வாறான வாசிப்புப் பழக்கம்தான் எனது மொழியாற்றலை விருத்தி செய்ததுடன் எனது பாடசாலைக் கல்விக்கும் காத்திரமாக அமைந்தது என்றே கூற வேண்டும். அதுவே எனது இலக்கியப் பயணத்திற்கும் உறுதுணையாக அமைந்தது எனலாம்.
உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக எப்போது ஆரம்பித்தது?
நான் ஆசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் பல கவிதைகளையும் சிறுகதை, உருவகக் கதைகளையும் எழுதியுள்ளேன். அவை வானொலி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களில் வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள், வழிகாட்டல்கள் எனக்குக் கிடைக்கவில்லை. பாடசாலை சஞ்சிகைகளில் நூலாக்கக் குழுவில் இடம் பெற்று சில தொகுப்புப் பணிகளுக்கு ஒத்தாசையாக இருந்துள்ளேன்.
நீங்கள் எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகின்றீர்கள்?
நான் பல்வேறு வகையான கவிதைத் துறைகளில் ஈடுபட்டு அவற்றுக்கான இலக்கண விதிகளைக் கற்று அறிந்து அவற்றை எழுதி வருகின்றேன். புதுக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள் எனப் பலவற்றையும் எழுதி வெற்றியடைந்துள்ளேன். அவற்றை நூல்களாகவும் வெளியிட்டுள்ளேன். அதுபோன்று மரபுக் கவிதைகள், வெண்பாக்கள் போன்றவற்றையும் தற்போது கற்றறிந்து அவற்றிலும் முயற்சி செய்து வருகின்றேன். இவைதவிர கவிஞர்கள் புதிய வடிவக் கவிதைகளையும் படைக்க வேண்டுமென ஊக்குவித்து, மணிக்கூ கவிதைகள், புத்தொளிக் கவிதைகள், கூம்புக் கவிதைகள் எனப் பல புதிய வடிவக் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கவிஞர்களை அவற்றின்பால் ஊக்குவித்து வருவதுடன் அக் கவிதை வகைகளில் நூல்களையும் வெளியிட்டுள்ளேன். தற்போது சிறுகதைகள், நாடகங்களை எழுதுவதில் முயற்சித்து வருகின்றேன்.
இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் மற்றும் தொகுப்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
நான் இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளேன்.
02. வானும் மண்ணும் நம் வசமே
03. பாரதிக்கு பதில் மடல்
04. மகுடம் சூடும் மணிக்கூகள்
05. புத்தொளிக் கவிதைகள்
06. மண்ணில் தவழும் விண்மீன்கள்
07. பெயர் பதிக்கும் தகைகள்
"ஹைக்கூவில் கரைவோமா?" எனது முதலாவது நூல் 2020 பெப்ரவரி 02 ஆம் திகதி சென்னை எழும்பூரில் வெளியிடப்பட்டது. எனது இரண்டாவது நூல் "வானும் மண்ணும் நம் வசமே.." என்ற தன்முனைக் கவிதைகள் நூலாகும். மூன்றாவது நூல் "பாரதிக்கு பதில் மடல்" என்ற புதுக் கவிதைகள் மற்றும் கிராமியக் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகும். நான்காவது நூல் "மகுடம் சூடும் மணிக்கூகள்" என்ற மணிக்கூ கவிதைகள் அடங்கிய நூலாகும். இவை நான்கும் எனது தனிப்பட்ட படைப்புகளாக இருக்கின்றன.
அத்தோடு "புத்தொளிக் கவிதைகள்", 'மண்ணில் தவழும் விண்மீன்கள்" ஆகிய இரண்டு உலகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல்களையும் நான் வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து "பெயர் பதிக்கும் தகைகள்" என்ற ஏறாவூரின் முக்கிய நபர்களின் விபரங்களடங்கிய வரலாற்றுத் தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளேன். இந்த நூல் சுமார் 640 பக்கங்களைக் கொண்டது.
உங்களது முதலாவது நூலான 'ஹைக்கூவில் கரைவோமா? ' நூல் பற்றி விசேடமாகச் சொல்ல விரும்புவது என்ன?
"ஹைக்கூவில் கரைவோமா?" என்ற நூல் ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய ஆய்வுடன் இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஹைக்கூவின் தோற்றம், வளர்ச்சி, திரிபடைந்த ஹைக்கூகள் போன்றவற்றை விரிவாக உதாரணங்களுடன் அதில் விளக்கியுள்ளேன். பேராசிரியர் செ. யோகராசா, பாவேந்தல் பாலமுனை பாறூக் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்த இந்நூலை முக்கியமான 03 பகுதிகளாக நோக்கவேண்டியுள்ளது. முதல் பகுதி ஹைக்கூ பற்றிய ஆய்வும், அடுத்த பகுதி மணிக்கூ கவிதைகளின் அறிமுகம், மூன்றாம் பகுதியாக எனது சொந்த ஹைக்கூ கவிதைகளையும் காணக்கூடியதாகவுள்ளது.
நீங்கள் இங்கு மணிக்கூ கவிதைகள் என்று குறிப்பிடுகின்றீர்களே! அது பற்றி விளக்க முடியுமா?
தற்காலத்தில் எத்தனையோ கவிஞர்கள் ஹைக்கூ கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நூற்றுக்கணக்கான ஹைக்கூ நூல்கள் தமிழிலே வெளிவந்துள்ளன. ஆனால் இந்நூல்கள் ஹைக்கூ விதிமுறைகளை மீறிய வகையில் அமைந்துள்ளன. அதில் ஹைக்கூ என்ற பெயரில் வெளிவருகின்ற ஏராளமான கவிதைகள் மூன்று வரிகளைத் தாங்கியதாக வெளிவருகின்றன. பலர் ஹைக்கூ கவிதைகளை எவ்வாறு எழுதுவதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மேலும், 'ஹைக்கூ|| என்ற பெயரானது தமிழுக்கு உகந்த பெயரும் அல்ல. அதனால்தான் மணிக்கூ என்ற பெயரில் மூன்று வரிக் கவிதைகளை எழுதுமாறு நான் எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். மணிக்கூ கவிதைகளை ஏன் எழுத வேண்டும்?; எப்படி எழுத வேண்டும்? போன்ற விளக்கங்களை நான் "ஹைக்கூவில் கரைவோமா?" என்ற எனது நூலில் விபரித்துள்ளேன்.
இந்த மணிக்கூகள் அடங்கிய "மகுடம் சூடும் மணிக்கூகள்" என்ற நூலையும் நான் 2022.08.20 இல் வெளியிட்டுள்ளேன். அத்தோடு "மணிக்கூ மகுடம்" என்ற காலாண்டு மின்நூலையும் தற்போது ஆரம்பித்து, அதன் இதழ் - 01 ஆனது 2022.08.20 இல் தமிழ் நெஞ்சம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
நீங்கள் வெளியிட்ட ஏனைய நூல்கள் பற்றி விளக்க முடியுமா?
"வானும் மண்ணும் நம் வசமே" என்ற எனது இரண்டாவது நூல் தன்முனைக் கவிதைகள் நூலாக அமைந்துள்ளது. தன்முனைக் கவிதைகள் என்பது தெலுங்கில் "நானிலு" என அழைக்கப்பட்ட நான்கு வரிக் கவிதைகளின் தமிழ் வடிவமாகும். அவ்வாறே உலகக் கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் அடங்கிய "மண்ணில் தவழும் விண்மீன்கள்" என்ற நூலையும் 2022 ஆகஸ்ட் மாதத்தில் நான் வெளியிட்டேன்.
அத்தோடு 'பாரதிக்கு பதில் மடல்|| என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளேன். இந்த நூலானது புதுக்கவிதை, கிராமியக் கவிதை, சந்தப் பாக்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் 'புத்தொளிக் கவிதைகள்|| என்ற உலகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளேன். இந்நூல் புத்தொளிக் கவிதைகள், கூம்புக் கவிதைகள் போன்றவற்றையும் பெண்ணுக்கான விழிப்புணர்வுக் கவிதைகளையும் உள்ளடக்கியது.
அதோடு "பெயர் திக்கும் தகைகள்" என்ற 640 பக்கங்கள் கொண்ட ஏறாவூர் தகைகளின் வரலாற்றுத் தொகுப்பு நூலின் அலர் - 01 இனை 2022.08.13 இல் வெளியிட்டேன். இந்நூல் தொகுப்புப் பணிக்காக ஒரு நூலாக்கக் குழுவினரை இணைத்து சுமார் இரண்டரை வருட கால முயற்சியின் பெறுபேறாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்நூலை வெளியிட முடிந்தது.
அதாவது 2019 தொடக்கம் 2022 வரை நான் ஏழு நூல்களை வெளியிட்டுள்ளேன். தற்போது "பெயர் பதிக்கும் தகைகள்" நூலின் அலர் - 02 வெளியிடுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதுவரை நான் வெளியிட்ட நூல்களின் மென் பிரதிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் 0771962247 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
சமூக ஊடகங்களில் எழுதப்படுகின்ற கவிதைளைப் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
தற்காலத்தில் சமூக ஊடகங்களை நோக்குகின்ற போது ஆண்களைவிட ஏராளமான பெண் எழுத்தாளர்கள் எழுத்துலகில் பிரகாசிப்பதை அவதானிக்க முடிகின்றது. பெண்ணியம் சார்ந்த, பெண்களுக்கான விழிப்புணர்வுக் கவிதைகள் ஏராளமாக உலா வருகின்றன. பெண்களின் மேம்பாட்டுக்கான அமைப்புகளும் ஊக்குவிப்புகளும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் காரணமாக பெண் எழுத்தாளர்கள் துணிந்து எழுத்துலகில் பிரகாசித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
கவிதை தவிர வேறு எவ்வகையான இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?
ஆசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் பாடல்களை இயற்றி மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளேன். அவ்வப்போது பிரதேச செயலகங்களில் வெளியிடப்படுகின்ற சஞ்சிகைகளில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளேன். நான் எழுத்துலகுக்குள் பிரவேசித்து சுமார் ஐந்து ஆண்டுகளே ஆகின்றன. இக்குறுகிய காலப் பகுதிக்குள் ஏழு நூல்களை வெளியிட்டுள்ள காரணத்தினால் இந்நூல் தொகுப்புப் பணிகளில் அதிக காலத்தைச் செலவிட்டுள்ளேன். நான் இன்னும் என்னை வளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. மரபுக் கவிதைகள், வெண்பாக்களின் இலக்கண விதிமுறைகளை ஓரளவு கற்று தற்போது எழுதி வருகின்றேன். மரபுகளில் இன்னும் அதிகமதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
சில ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவை சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு குடும்பப் பொறுப்புகளை உதாசீனம் செய்ய முடியாத நிலையில், அத்தகைய குடும்ப பொறுப்புக்களுடன் இலக்கியத்திலும் பயணிப்பது சற்று சிரமமாகவே உள்ளது. எனினும் எதிர்வரும் காலங்களில் சிறுகதைத் தொகுதியொன்றையும் நாவல் ஒன்றையும் வெளியிட அவாக் கொண்டுள்ளேன். நான் இதுவரை வெளியிட்ட நூல்கள் ஏழும் ஒன்றுடனொன்று ஒத்தவையல்ல. ஒவ்வொன்றும் வௌ;வேறு வகையானவை. அவ்வாறே இன்னும் வௌ;வேறு வகையான நூல்களை வெளியிடுவதற்கான யோசனைகள் உள்ளத்தில் தேங்கியுள்ளன. அதற்கான கால அவகாசம் மட்டும் எனக்குக் கிடைத்தால் போதுமானதென்று நம்புகின்றேன். அதனிடையே வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், பாடசாலை மாணவர்களிடையே எழுத்தாற்றலை வளர்ப்பதற்கான வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புகளையும் வழங்கவும் திட்டமிட்டுள்ளேன்.
வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்குத் தாங்கள் கூறும் செய்தி என்ன?
படைப்பாளிகளைப் பொறுத்த வரைக்கும் இன்று அவர்கள் நவீன தொழில்நுட்பங்களையும் சமூக ஊடகங்களையும் சிறப்பாகப் பயன்படுத்தி அதி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே இளம் படைப்பாளிகள் பலரின் திறமைகள் வியக்கத் தக்கதாக உள்ளது. அவர்களிடமிருந்து என் போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாகவே நான் கருதுகின்றேன். பல்வேறு சமூக செயற்பாட்டுக் குழுமங்கள், இலக்கியக் குழுமங்கள் போட்டி போட்டுக் கொண்டு படைப்பாளிகளை ஊக்குவித்து வருவதையும் நாம் காண்கின்றோம். இங்கு நான் படைப்பாளிகளுக்குக் கூற விரும்பும் செய்தி சமூக வலைத்தளங்களை வீணான பொழுது போக்கு வகைகளில் கழித்து விடாமல் அவற்றை ஆக்கபூர்வமான விடயங்களில் பயன்டுத்தி உங்கள் துறைகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்பதாகும்.
நீங்கள் இலக்கியத்தில் தடம் பதித்து சுமார் ஐந்து ஆண்டுகள் என்கிறீர்கள். இக்காலப் பகுதிக்குள் பட்டங்கள், விருதுகள் ஏதேனும் பெற்றிருக்கிறீர்களா?
கல்வித் துறையிலும் முகநூல் குழுமங்களில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன். விசேடமாக நான் "மணிக்கூ கவிதை" என்ற கவி வடிவத்தை அறிமுகப்படுத்தியதால் பிரான்ஸ் நாட்டின் தமிழ் நெஞ்சம் இலக்கிய அமைப்பும் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றமும் இணைந்து "மணிக்கூ கவி" என்ற விருதினை வழங்கினார்கள். இந்த வகையில் எனக்குக் கிடைத்த பட்டங்கள் மற்றும் விருதுகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.
கல்வித் துறையில் பெற்ற விருதுகள்:-
• 2011.06.26 இல் சாமஸ்ரீ வித்தியா ஜோதி விருது - அகில இன நல்லுறவு ஒன்றியம்
• 2014.05.17 இல் கல்விச் சுடர் விருது - ஏறாவூர் சமூக உறவு ஒன்றியம்
இலக்கியத் துறையில் பெற்ற விருதுகள்:-
• 2019 இல் பட்டுக்கோட்டை கண்ணதாசன் விருது - கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் (சென்னை)
• 2019 இல் கவி அலரி விருது - தேடல் கலை இலக்கிய அமைப்பு (இலங்கை)
• 2020.02.01 இல் மணிக்கூ கவி விருது - தமிழ் நெஞ்சம் இலக்கிய அமைப்பு (பிரான்ஸ்)
• 2020.02.02 இல் கவி இமயம் விருது - கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் (சென்னை)
• 2020.02.02 இல் பேரறிஞர் அண்ணா விருது - கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் (சென்னை)
• 2022.03.17 இல் கவிச் சாரல் விருது - தமிழ்ச்சாரல் இலக்கியக் குழுமம் (ஏறாவூர்)
• 2021 இல் கவி மின்னல் விருது - ஊ...ல...ழ...ள... இலக்கியக் குழுமம் (சென்னை)
• 2021 இல் கவிக் கேசரி விருது - தேடல் கலை இலக்கிய அமைப்பு (இலங்கை)
விருதுச் சான்றிதழ்கள்:-
• 2019.04.10 இல் கனல்கவி பட்டம் - நிலா முற்றம் இலக்கியக் குழுமம்
• 2019.08.05 இல் கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா
• 2019.11.14 இல் இசைக்கவி விருது - ஊ...ல...ழ...ள இலக்கியக் குழுமம்
இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உங்கள் கற்பனைகளை, சிந்தனைகளை எவ்வடிவத்திலேனும் எழுத்தில் வடியுங்கள். அவை கதை வடிவமாக, நாடகமாக, மரபுக் கவிதைகளாக, புதுக் கவிதைகளாக அல்லது புதிய வடிவங்களாக அமையட்டும். எதுவாக இருப்பினும் அவற்றைத் தொகுத்து நூல் வடிவமாக்குங்கள். நூல்களை அச்சுப் பிரதிகளாக்க உங்களால் முடியவில்லையெனில் அவற்றை மின்நூல்களாக வெளியிடுங்கள். நீங்கள் எழுத்துலகில் ஒளிர்வீர்கள்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment