பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Thursday, April 18, 2013

13. திருமதி பவானி வேதாஸ் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.11.17

திருமதி பவானி வேதாஸ் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கண்டி நகரில்தான். படித்தது கண்டி நல்லாயன் மகளிர்க் கல்லூரியில். எனது தகப்பனார் றேல்வேயில் புகையிரத நிலைய பிரதம அதிபராகப் பணியாற்றியவர். எனது தாயாரின் ஊர் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருவாடானை. தகப்பனாரின் தகப்பன் சிவகங்கையில் இருந்து இலங்கை வந்தவர். பெற்றோரின் தகப்பனார்கள் பெரிய கங்காணிகளாக இருந்தவர்கள். படிப்பறிவற்ற இருதரப்பு தாத்தாமாரும் தம் பிள்ளைகளை அக்காலத்திலேயே ஆங்கில மொழி மூலம் கல்வியைக் கற்க வைத்திருந்தமை வியப்பான உண்மை.

 உயிரியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி கிட்டாததில் நான் விஞ்ஞான ஆசிரியையானேன். கலைப்பிரிவில் பட்டத்தையும், பட்டப் பின் படிப்பையும் தொடர்ந்து பூரணப்படுத்தினேன். எனது கணவர் கந்தப்பளை சிமிர்னா ஆலயத்தின் தலைமைப் போதகர். ஸிந்து கன்யா என்பது என் அன்பு, ஆசை, ஆஸ்தி அனைத்துக்கும் சொந்தமான என் ஒரே மகள்.

நீங்கள் இலக்கியத்தில் நுழைந்த முதல் தருணம் பற்றி?

2003 ஆம் ஆண்டு 83 இனக்கலவரம் முடிந்த இருபதாவது ஆண்டு. சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்த கோர அட்டுழியங்களை எல்லாரும் மறுப்பு எழுதி, பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு தெரிந்த ஒரு சிங்கள இளம் பெண், தான் பணியாற்றிய வடபுலத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்தாரின் உடமைகளைக் காப்பற்ற முயன்றாள். முடியாமல் போனதில் புகைவண்டி முன்னே பாய்ந்து உயிரையே விட்டு விட்டாள். வெறும் 17 வயதுப் பெண். கள்ளமே இல்லாத அந்த சிங்கள யுவதியின் தியாகத்தை எழுதுவது என் கடமை என எண்ணினேன். பிரசுரமாகும் என எதிர்பார்க்கவில்லை. சிங்களவர்களின் கெட்டதையே எல்லாரும் பேசும் போது, இல்லை தமிழர்கள் பொருட்டு தம் உயிரையும் கொடுக்கும் அளவு சிங்களவர்களில் நல்லவர்கள் உண்டு என நான் கண்ட விடயத்தை எழுதத் துணிந்தேன். `நீத்தா' என்ற அப்பெண்ணை இட்டு நினைவில் நீங்காதவள் என்ற தலைப்பில் உண்மைச் சம்பவத்தை எழுதினேன். வீரகேசரியில் திருமதி. ரேணுகா பிரபாகரன் அதை பிரசுரித்தது முதல் பவானி என்ற என் மூன்று எழுத்துப் பெயரும் சின்னதாக, மிகச் சின்னதாக எழுத்துத் துறையில் மின்ன ஆரம்பித்தது.

இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் வெற்றிகராமானதாக இருந்ததா?

இல்லவே இல்லை. என் எழுத்துக்கள் எவையுமே அச்சாகிடவே இல்லை. 87 ஆம் ஆண்டளவில் அல்பிரட் கிருஷ்ணப் பிள்ளையைப் பற்றி `கிறிஸ்தவ கம்பர்' என எழுதிய ஆக்கம் ஒன்று `சிந்தாமணி' பத்திரிகையில் புகைப்படத்துடன் பிரசுரமானது. அவ்வளவேதான்! `ஏன் என் ஆக்கங்கள் பிரசுரமாவதே இல்லை' என எனக்கும் புரியவே இல்லை. சில ஆக்கங்களை வாசிக்கையில் `இதைவிட நன்றாகத் தானே எழுதுகிறோம்' என சுய பச்சாதாபமும் தோன்றும். காலஞ்சென்ற ரூபராணி ஜோசப் அவர்கள் சாகித்திய விருதுகள், உட்பட பல உயரிய பட்டங்களை, எழுத்து, பேச்சு, கவிதை என்பவற்றுக்காக ஈட்டியவர். அவர் என் குரு. அவர் என்னைக் காணும் போதெல்லாம் ஷஎழுதும், எழுதும் நீர் பாடசாலைக் காலங்களிலும் எழுதியவர்தானே| என ஊக்குவித்தார். `எதுவுமே பிரசுரமாகவில்லையே மிஸ்' என நான் நொந்து சொன்னேன். 'அப்படி சொல்லாதேயும். அறிஞர் அண்ணாவைப் பாரும்' என புள்ளி விபரங்கள் வழங்கி வழிப்படுத்தினார்.

ஏன் இப்போதும்கூட வீரேகேசரியைத் தவிர வேறெதிலுமே என் சிறுகதைகள் வெளிவராதது வருத்தம்தான்.

நீங்கள் எழுத்துலகில் செய்த பணிகள் பற்றி குறிப்பிடுவீர்களா?

இலங்கை வேதாகமக் கல்லூரி பேராதனை, சில ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்யும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். விஞ்ஞான ஆசிரியை என்பதால் விவசாய காடாக்கம், எச்.ஐ.வி என்பவற்றை மிகவும் ஆர்வமாக செயலாற்ற முடிந்தது.

விசுவாசிகளுக்கு வழிகாட்டி, சமாதான உருவாக்கம் போன்ற சமய சார்பான நூல்களையும் மொழிபெயர்த்து உள்ளேன். முரண்பாடுகளுக்கு மத்தியில் பெண்கள் என்ற புத்தகம், என் மொழி பெயர்ப்பில் என்னை மிகவும் பாதித்த நூல். சிங்கள மிஷனரிப் பெண்மணி ஒருவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பெண்களுக்காக பரிந்து எழுதி இருந்தார். தானியேல் என்பது இலங்கையில் பிரபல கிறிஸ்தவ ஊழியரின் நூல். இவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திட தேவன் என்னைத் தெரிந்துக் கொண்டதற்காக தாழ்மையுடன் நன்றி சொல்கிறேன். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வேறு பணிகள் எழுத்தளவில் ஆற்றவில்லை.

சிறுகதை சார்ந்த உங்களது நிலைப்பாடு என்னவென்று சொல்லுங்கள்?

`உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லை என்றும் சொல்ல வேண்டும்' என வேதாகமத்தில் ஒரு வசனம் இருக்கிறது. சமூகத்தில் நாம் சந்திப்பவற்றில், நாம் காணாது தவறுகிற பக்கங்களும் இருக்கின்றன. அதைக் கண்டுகொள்ளும் போது `அச்சச்சோ! பாவமே!' என மனம் தயவு பண்ணும். அதைச் சுட்டிக் காட்டி மற்றவர்களை நெகிழ்வாக்கி உணரப் பண்ண வேண்டும்.

உதாரணமாக நான் அறிந்த ஒரு பெண்மணி, எல்லாருமே அவளிடம் கணிசமான உதவிகளைப் பெற்றுக் கொண்டே, ஷபிழையானவள்| என அவள் இல்லாத இடத்தில் தூற்றுவார்கள். ஒரு வெசாக் தினம் அவள் குடியிருந்த தெருவில் நான் நடந்துபோன போது அவள் தன் பலகை வீட்டில் இருந்துகொண்டு படைத்தவரிடம் கண்ணீருடன் வாய்விட்டு மன்றாடும் சத்தம் பாதைக்கே கேட்டது. பலரும் காணத் தவறிய அவள் பக்தியை என் எழுத்து மூலம் பறைசாற்றிச் சொல்ல வேண்டும். ரசனைக்காக மிகைப்படுத்தவும் கூடாது. குறைத்திடவும் கூடாது. ஏனெனில் என் எழுத்துக்கள் நிஜ நபர்கள். நனவு சம்பவங்கள்.
 
சிறுகதைகளினூடாக சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விளைவது என்ன?

சமூகம் எனக்கு சொன்னவற்றை, தந்தவற்றை நான் அப்படியே எழுத்தாக்குகிறேன். சமூகத்துக்கு சொல்லும் அளவுக்கு எனக்கு ஆற்றல், சக்தி கிடையாது. வாழ்க்கை எனக்கு தந்த நோவுகள், அந்த வலிகளின் ஊடாகவும் நான் ரசித்தவைகள், இழப்புகள், இழப்புகளிலும் சில பூரணத்துவங்கள்... இப்படி பழக்கமாகிவிட்டது. யுத்தம் - வடக்கில், கிழக்கில் விதவைகள் எனும் போது, ஆமாம் இங்கேயும் பாருங்கள் சிங்கள விதவைகள்... என காட்ட முயல்கிறேன். பெற்றவள் புகைப்படத்தை காட்டியபடி ஷகண்டு பிடித்துத் தாருங்கள்| என கதறுகையிலும், அழுதுகொண்டே ஷகாணியை உங்களுக்கே விற்கிறோம். ராணுவத்திற்குப் போய் இறந்து போன எம் இரண்டு மகன்மாரின் கல்லறைகளை மட்டும் தயவு செய்து இடித்து விடாதீர்கள். அதற்காக காணிக்கு உரிய பணத்தை கணிசமாக குறைக்கவும் தயார்| என காது கேளாத தகப்பனும், தளர்ந்த தாயும் நம் பகுதியில் மன்றாட்டமாக கெஞ்சுகையிலும்; அதை எழுத்தில் சொல்ல வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

இன்றைய புதிய எழுத்தாளார்களின் படைப்புகளின் தரம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

புதிய எழுத்தாளர்களில் ஒரு சிலர் அசர வைக்கிறார்கள். நன்றாக இருக்கிறது என வியந்து சிலாகிக்கப் பண்ணி, அவர்களது பெயரைப் பதியப் பண்ணுகிறார்கள். பலர் அயரப் பண்ணுகிறார்கள். மொழி வளம் இல்லை. அரைத்த மாவையே அரைப்பது போல புதிய கற்பனைத் திறன் ஏதுமின்றி... `எப்படி இவை பிரசுரமாகின்றன?' என வியப்பாக இருக்கும்.

நீங்கள் எவ்வகையான கருக்களை கையாண்டு சிறுகதைகளை எழுதுகின்றீர்கள்?


உண்மை சம்பவங்கள்தான் என் கருக்கள். சிறு வயது முதலே டயறி எழுதும் பழக்கம் எனக்கு இருந்தது. மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது இல்லை. அப்படி சொன்னவை கேட்பவர்களால் நிலைமையை மேலும் மோசமாக்கிய அனுபவங்களே நேர்ந்தன. எனவே என்னை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை என பக்கம், பக்கமாக என் உணர்வுகளை எழுதினேன். ஜெயகாந்தன் கதைகள் அவர் மீது பயம் கலந்த மரியாதையை எனக்கு ஏற்படுத்திற்று. வித்தியாசமான நடை முறை சம்பவங்களை எனக்குள் வாங்கிக்கொள்ளவும் எழுத்துக்களில் வெளிப்படுத்தவும் முடிந்தது. கற்பனை பண்ணிக்கொண்டு சிரமப்படவே தேவையில்லை. சுற்றிலும் நம் முன்னே நடமாடும் சகலரும், நிகழும் சகலதும் கதைகளில் கருக்கள்தான்.

இலக்கிய படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

என் அளவில் என் சிறுகதைகளுக்கோ, என் புத்தகத்துக்கோ பிரசுரமான எந்த ஒரு வேளையிலும் விமர்சனம் கிட்டவில்லை. எதை தவிர்த்திருக்கலாம் எவற்றை சேர்த்திருக்கலாம் என்னுடைய எழுத்துகளின் (பிளஸ்) என்ன? - (மயினஸ்) என்ன? என்றெல்லாம் யாரவது ஆக்கபூர்வமாக சொல்ல மாட்டார்களா என்று ஏக்கமாக உணர்வது உண்டு.

விருதுகள் எனும் போது சிலரின் பெயர்கள் மனனமாகும் அளவு மறுபடி, மறுபடி இடம் பெறுகிறது என எண்ணும் படியாக உள்ளது.

சில இலக்கிய அமைப்புக்கள் வசதி குறைந்தவர்களின் நூல்களை பிரிசுரித்து வருகின்றன இவ்வாறு பிரசுரமாகும் நூல்களின் வடிவமைப்பு, தரம் பற்றிய என்ன சொல்வீர்கள்?

என் ஷவிடுமுறைக்கு விடுமுறை| சிறு கதைகளின் தொகுப்பு ஷபுரவலர் புத்தகப் பூங்கா|வினரால் பிரசுரிக்கப்பட்டது. நூல் அமைப்பு, வடிவம், தரம் வெகு நேர்த்தி என்றே எல்லாரும் புகழ்ந்தார்கள். சிலரைப் பொறாமை கொள்ளச்;; செய்யும் அளவிற்கு அமைந்திருந்தது. வேறு பிரசுர நூல் அமைப்பு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை.

அவ்வாறு இலக்கிய அமைப்புகளினூடாக புத்தகம் வெளியிட்டதையடுத்து நீங்கள் இதுவரை இன்னொரு நூலை சுயமாக வெளியிடக்கூடிய நிலைப்பாடு நிலவுகிறதா?

முற்றாகவே இல்லை. யாருமே புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி, வாசிக்க முன் வருவது இல்லை. கதைகள் வாசிக்கும் ஆர்வமும் மிகவும் குறைந்து போய்விட்டது. ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் என்ற மட்டத்தில்கூட என் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியது திலக லோஜினி என்கிற ஒரே ஒரு ஆசிரியைதான். அதே போன்று ஆலயத்தில் போதகர்கள், விசுவாசிகள் என்ற தோதாவில் ஒரே ஒரு இளம் பெண், கிறிஸ்தவ எழுத்தாளர்கள் கருத்தரங்கு ஒன்றின் போது வாங்கிக் கொண்டாள். எல்லோரும் இலவசமாக வாங்கிக் கொள்ளவே எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால்  வாசித்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறார்கள். அடுத்த வெளியீட்டுக்கு பணம் எங்கே கிடைக்கிறது?

விடுமுறைக்கு விடுமுறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டதையடுத்து நீங்கள் இதுவரை இன்னொரு நூலை வெளியிடாமைக்கு காரணம் என்ன?

நூல் வெளியீட்டுக்கு மறு மாதமே நான் ஷஸ்டோரோக்கால்| பாதிக்கப்பட்டு பிழைக்க மாட்டேன் என்கிற அடைமொழியுடன் மருத்துவ மனையில் அனுமதி பெற்றேன். இடது கண் முற்றாக ஷபார்க்க மாட்டேன்| என மூடிக்கொண்டது. காது மடலை எட்டிப் பிடித்திட உதட்டுக் கோணல் முயன்றது. எல்லாருமே அதிசயிக்கும்படி நான் நம்பி நமஸ்கரிக்கிற தேவன் மீள்வதற்கு உதவினார். வகை, வகையாய் மருத்துவ பரிசோதனைகளும், வித விதமான வில்லைகளும்... எனப் போராடும் போது நிரம்ப கஷ்டம், மனதுள்ளும் வெளியிலும். என் ஒரே பெண்னை அடுத்த ஸ்டோரோக்குக்கு முன் ஒழுங்குப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம், கண்டி வீட்டை வாங்கிடும் தேவை, பெண்ணின் திருமணம் என நடுத்தரமான ஒரு நோயாளி ஆசிரியையின் சாதனைகள் ஆகின. வீரகேசரியில் வெளியான பல கதைகள் அடுத்த புத்தக வெளியீட்டுக்கு தாரளமாகவே இருக்கின்றன. கர்த்தர் தம் சித்தப்படி, திட்டத்தின்படி வழி நடத்துவார்.

இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

ஷமலையக தமிழ் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தேவை| என்ற பத்திரிகை விளம்பரம் ஒன்றைக் கண்டேன். வீரகேசரியில் வெளியான
பத்திரிகை சேமிப்பில் இருந்து எனது சிறுகதைகளை அப்படியே அனுப்பி வைத்தேன். தமிழ் நாட்டில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நம் நாட்டு பிரபல எழுத்தாளர் தம் ஆய்வுக்கு அவற்றை பயன்படுத்திக் கொண்டதாக கண்டியிலுள்ள அவர் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். நம் எழுத்து அப்படியெல்லாம் கூட பயன்படுகிறதே! என்பதில் மகிழ்ச்சி. ஆனாலும் என்ன ஏது எப்படி என எதுவுமே தெரியாமலே போய்விட்டமை மிகவும் வேதனை.

கனகசெந்தி கதா விருது கிடைத்த கதைகளை எல்லாம் தொகுத்து மீரா பதிப்பகத்தார் ஒரு புத்தகமாக வெளியிடப் போவதாகச் சொல்லி ஷஎன் இனிய தோழனே| கதையை பிரசுரிக்க அனுமதி கேட்டிருந்தார்கள். என் எழுத்தை புத்தகத்தில் காண ஒரு வாய்ப்பு என வழமைபோல் ஆண்டவருக்கு நன்றி சொன்னேன். பிறகு எந்த தகவலும் இல்லை. பிற்பாடு ஒரு சந்தர்ப்பத்தில் என் வகுப்பு மாணவன், தான் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்த போது என் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அந்தப் புத்தகத்தைத் தன் பணத்தில் வாங்கிக் கொண்டு வந்து காட்டினான். என் கதை உள்ளே இடம் பெற்றிருந்தது.

பத்திரிகையில் விருது விபரத்தோடு சரி. கதைக்கும் பிற்பாடு அந்த புத்தகத்துக்கும்கூட விருது வழங்கப்பட்டதாக தகவல்கள் அறிந்தேன். விருதுகளை விடுங்கள் ஆகக் கடைசியாக ஒரு புத்தகப் பிரதியையாவது எனக்கு அனுப்பியிருக்கக் கூடாதா? 

மலையக பிரபல எழுத்தாளர்கள் ஒரு சிலருடன் தொடர்பு கொண்டேன் என் புத்தகத்தையும், வெளிவராத கதைகளையும்கூட அனுப்பினேன். தினகரன், தினக்குரல் என்றும் கூட கதைத்தும் பார்த்தேன். மலையக சாகித்திய விருதுக்குப்பின் கூட என் எழுத்துக்கு அங்கீகாரம் கிட்டாமல் போனது மிக ஏமாற்றம்.

பூங்காவனம் இதழ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மலையக பெண் எழுத்தாளர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையிலும் எவருமே அல்லது என் சமூகத்தவர் எனக்கு உதவிட முன்வரவில்லை. வீரகேசரியைத் தவிர விடுமுறைக்கு விடுமுறை சிறுகதை நூல்கூட விமர்சிக்கப்படவே இல்லை.

இந்நிலையில் என்னை தமிழ்ப் பெண் என ஒதுக்காமல் தாங்களாகவே சகல உபகாரங்களை பூங்காவனம் இதழ் ஊடாகவும், அதற்கும் மேலாகவும் செய்கிறீர்கள். பிரதியாக என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆயினும் சஞ்சிகையைப் போலவே பூங்காவனமாக தங்கள் வாழ்வின் சகலமும் அமைய வாழ்த்துகளும் - பிரார்த்தனைகளும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment