பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Monday, September 23, 2013

14. திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.09.08

திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் குறிப்பிடுங்கள்?

கொழும்பைச் சேர்ந்த துவான் தர்மா கிச்சிலான் என்பவருக்கும், கம்பளையைச் சேர்ந்த ஸ்ரோதி டிவங்சொ அஜ்மஈன் அப்பாஸ் ரெழியா பீபிக்கும் சிரேஷ்ட புதல்வியாவேன். எனக்கு மூன்று தம்பிகளும், மூன்று தங்கைகளும் இருக்கின்றனர்.


நாங்கள் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை ஒரு 'காரி'யாகவும் (குர்ஆன் ஓதுபவர்), மார்க்க உபன்னியாசங்கள் செய்யக் கூடியவராகவும் இருந்ததால் ஊர்ப் பள்ளி வாசலுக்கு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். கபூரியா அரபுக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த எனது தம்பிக்கு அரபியில்தான் கடிதங்களை எழுதுவார். அந்தக் காலத்தில் மார்க்கக் கல்வியையும், அரபையும் கற்றுக்கொள்ள சிரமப்பட்டிருக்கிறார். அச்சுத் தொழில்தான் தந்தையின் பிரதான தொழிலாக இருந்தது.

தந்தை மலாயரான போதும் இஸ்லாமியக் கோட்பாட்டில் உறுதியாக இருந்தார். மலாய் மொழியைப் பேசினாலும் இஸ்லாமியக் கலாசாரம் பண்பாடு பழக்க வழக்கங்களைத்தான் மேற்கொள்ள வேண்டும் என தன் குடும்பத்தினருக்கிடையே பிரசாரம் செய்தார். அநேகமாக மறுப்புத்தான் வந்தது. பழக்கத்தை விடுவது கஷ்டம் என்றனர் சிலர். மார்க்கம் சொல்வது சரிதான் என்ற போதும் சிலர் அதனைப் பின்பற்ற முயற்சிக்கவில்லை. இன்னும் சிலர் தாங்கள்தான் நாகரீகமானவர்கள் என்றனர். தந்தையின் முயற்சி தொடர்ந்தாலும் தனது குடும்பத்தை அழைத்து வந்து சோனக முஸ்லிம் மக்களோடு நீர்கொழும்பு பெரிய முல்லையில் குடியமர்த்தினார்.

1950களில் எனது தாயைக் கொண்டு அயலில் உள்ள பெண் பிள்ளைகளுக்கான ஒரு கழகம் அமைத்து ஓதல், சந்தர்ப்ப துஆக்கள், தொழுகை, ஹதீஸ்கள், பேச்சு, இஸ்லாமிய கீதங்கள் இவற்றில் பயிற்சியளித்தல், போட்டிகள் நடத்தல் முதலானவைகளை நடத்தினார். ஆக்கங்களையும் தந்தையே நிர்மாணிப்பார். காலப்போக்கில் வளர்ந்த பெண் பிள்ளைகளுக்காக ஆங்கில, சிங்கள மொழி டியூஷன் வகுப்பையும் தாய் நடத்தி வந்தார். மேலும் அயலவர்களுக்கு இலவசமாக முதலுதவிச் சேவைகளையும் என் பெற்றோர் செய்து வந்தனர். இவ்வாறான குடும்பப் பின்னணியிலிருந்து உருவாகியவள்தான் நான். இத்தகைய பெற்றோர் கிடைக்கப் பெற்றதும் எனது பாக்கியம்தான். எங்கள் இனத்தவர்கள், எங்கள் உடைகளையும் பண்பாடுகளையும் பார்த்து பழித்தனர். ஓரக் கண்ணால் ஏளனத்துடன் பார்த்து ஒதுங்கியும் கொண்டனர். ஆனால் மாஷா அல்லாஹ் இன்று மலாய் சமூகத்தை அல்லாஹ் ஆன்மீக ரீதியில் விழிப்புரச் செய்துகொண்டு வருகிறான். அல்ஹம்துலில்லாஹ். இந்த நிலையைக் கண்டு களிக்க என் பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை.

02. உங்களது இலக்கியப் பணியின் ஆரம்ப காலம் பற்றியும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

இங்கும் எனது பெற்றோரே முதன் முதலாக உறுதுணையாக இருந்தவர்கள்.  பாடசாலையில் இலக்கிய மன்றப் பொறுப்புகள் வாய்க்க முதல், தந்தையின் வழிகாட்டலில் தாயார் நடத்தி வந்த கழகத்தில் களம் அமைத்துத் தரப்பட்டமையே எனது இலக்கியப் பணியின் ஆரம்பமாகும். அடுத்த களம் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி ஆகும். இக் கல்லூரியில் முதல் சிரேஷ்ட மாணவர் தலைவியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இளம் வயதிலிருந்தே இலக்கிய ஆர்வமும், கலையுணர்வும், விளையாட்டுத் திறனும் இயல்பாகக் காணப்பட்டதால் அவற்றை இனங்கண்டு கொண்ட ஆசான்கள் என்னை சரிவர நெறிப்படுத்தினர். இந்த இடத்தில் முக்கியமாக திருமதி பியற்றிஸ் லூக்கஸ் பெர்னாண்டோ ஆசிரியருக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் பாடசாலை நிர்வாகப் பொறுப்பு, 6 - 11 வரையுள்ள வகுப்புக்களுக்கு மொழி, இலக்கிய, கணித பாடங்களைக் கற்பிக்கும் பொறுப்பு விழாக்களின் போதும், இலக்கிய மன்ற நிகழ்ச்சிகளை முன்வைக்கும் போதும் ஹார்மோனியத்தின் உதவியுடன் மெலடி போட்டு இசைப்பார். இசைக்கேற்ப பயிற்சிகளையும் வழங்குவார். இறுதியில் அழகிய பாடலாகவோ, நடனமாகவோ, நாடகமாகவோ, கிராமியப் பாடலாகவோ அரங்கேறும். பெற்றோருக்கடுத்த முன்மாதிரி இவரே. இவ்வாறு பாடசாலை  கலை இலக்கிய மன்ற செயலாளராகவும் 1955 - 1960 வரை மாறி மாறி பத்திராதிபராகவும் இருந்த பொறுப்பு பாடசாலைப் படிப்பு முடியும் வரை நீடித்தது.


இதே காலத்தில் கலை இலக்கிய இரச ஞானத்தை வளர்க்கும் சூழல் இருந்தது. எங்கள் வீட்டுக்கு முன்னால் அக்கால பிஷொப் கார்டினால் குரேயின் பெற்றோரின் வீட்டு வளவில் நீர்கொழும்பு கலைஞர்கள் முதல், சினிமாக் கலைஞர்களும், டொக்டர் ஹியூகோ பெர்ணாந்துவின் தலைமையில் நாடகப் பயிற்சி, இசையமைப்பு முதலானவை இடம்பெறுவது வழக்கம். இந்த சந்தர்ப்பங்களை இரவு எத்தனை மணியானாலும் நானும், என் தம்பியும் தவறவிட்டதில்லை. இதற்கு முந்திய எங்கள் குடியிருப்பு எலோ ஜயமான்னவின் சொந்தக்காரர் வீடு. நடிகை ருக்மணி தேவியின் வீடும் பக்கத்தில்தான். இங்கும் சினிமா நடிகைகள் வருகை, நடனப் பயிற்சி என்பன இடம்பெறும். சிலவேளைகளில் ருக்மணி தேவி என்னை மேசை மீது தூக்கி வைத்து விளையாடுவார். நான்கு வயதில் ஐந்தாம் ஜுஸ்உ ஓதி முடித்ததைக் கண்டு 'இந்தக் குழந்தை அரபு மொழியை அல்லாவா இப்படி கடகடவென வாசிக்கிறது' என்று புதுமைப்படுவார். மேலும் நான் ஏழு வயது முடியும் முன்னே அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தந்தையிடம் ஓதி முடித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியோ விதவிதமான மொழி, கலை, கலாசார, பண்பாட்டுக் கோளங்கள் சூழ்ந்திருந்ததாலோ என்னவோ கலை உணர்வு, இயல், இசை, நாடகத் துறை முதலான சகல துறைகளிலும் கல்லூரி வாழ்க்கை, ஆசிரியப் பணி, ஆலோசகர் சேவை யாவற்றிலும் சிறந்து விளங்கினேன். தவிர சுகயீனமுற்ற பின்னும் என் பணி மெதுவாகவேணும் தொடர்கிறது.

03. நீங்கள் வானொலியிலும், ரூபவாஹினியிலும் அதிகமாகப் பங்களிப்புச் செய்துள்ளீர்கள். அது பற்றிக் குறிப்பிடுவீர்களா?

நான் ரூபவாஹினி, வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் சில முஸ்லிம் நிகழ்ச்சி நாடகங்களாகவும், சில சிங்கள மொழி நிகழ்ச்சி நாடகங்களாகவும் இருக்கும். இன்னும் சில இளைஞர் இதய நிகழ்ச்சி நாடகங்களாகவும் இருக்கும். பொதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படுகின்ற வானொலி நாடகக் கலைஞர் தேர்வுப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஒடிஷன் ஆர்டிஸ்ட்' ஆவேன். கடைசியாக நாடகத்தில் பங்கெடுக்க ஒப்பந்தப் பத்திரம் வந்திருந்தது. பங்குபற்றக் கிடைக்கவில்லை. அந்நேரம் படுத்த படுக்கையிலேயே உயர் இரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதம் கண்டு முழுமையாக செயல் இழந்துவிட்டேன். அதிலிருந்து இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்திலிருந்து தொடர்ந்து என்னுடைய முறை வரும் போது வழமையாக அனுப்புகின்ற ஒப்பந்தப் பத்திரம் அனுப்பப்படவில்லை.  பொறுப்புதாரிகளும், சக கலைஞர்களும் பத்து வருடங்களாக என்னை மறந்து விட்டிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஊனமான நிலையிலும் வானொலி நாடகத்தில் பங்கேற்று நிறைவு செய்யக் கூடிய தகுதி இன்னும் எனக்கு இருக்கிறது. அதனாலன்றோ சர்வதேச அங்கவீனர் தினத்தில் புனருத்தாபன ஆஸ்பத்திரியில் நடந்த ஓரங்க நாடகத்தில் முதலிடம் பெற்றேன். அத்தோடு சிங்களப் பாடலில் இரண்டாம் இடமும் பெற்றேன்.

மேலும் 1986 இல் வானொலி முஸ்லிம் சேவையில் இளைஞர் இதய நிகழ்ச்சி ஒன்றில் ஒன்பது பாத்திரங்கள் கொண்ட பத்து நிமிட நாடகத்தினை  நானே தனி ஒருவராக நின்று 'மிமிக்ரி' முறையில் அந்த ஒன்பது பாத்திரங்களுக்கும் குரல் கொடுத்தேன். இந்நிகழ்ச்சி பற்றி முஸ்லிம் சேவை பணிப்பாளர் இரண்டு முறை வானொலியில் பாராட்டிப் பேசியுள்ளார். இதனைக் கேட்டு ரசித்தவர்களின் பாராட்டுக்களும் நிறையக் கிடைத்தன. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளின் பின் கொழும்புத் துறையில் நடந்த ஆசிரிய ஆலோசகர் பயிற்சிப் பாசறையில் இருவர் இந்த நிகழ்ச்சியை பிரஸ்தாபித்து பாராட்டிக் கொண்டிருந்தனர். அந்தப் பாசறையில் திருமதி. நவாஸ் ஆக இருந்த நான்தான் அந்த மிமிக்ரி கிச்சிலான் என்பது யாருக்கும் தெரியாது. நான் அளவில்h மகிழ்ச்சியோடு காது கொடுத்துக்கொண்டிருந்தேன்.

இது தவிர வானொலிக்காக சிறுகதை, கவிதை, கட்டுரை, உரையாடல்கள், நாடகங்கள் முதலியவற்றுக்கான பிரதிகள் எழுதுவதுடன் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளிலும் இவற்றின் பங்களிப்புக்கள் இடம்பெறும். இச்சமயம் பிரதியமைத்தல், குரல் கொடுத்தல் என பங்களிப்பு நடைபெறும். அவ்வாறே மாணவர் மன்றம், இல்முல் இஸ்லாம், பெருநாள் விசேட நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பிரதி அமைத்து, பயிற்சியுமளித்து ஏனையவர்களையும் பங்கு பெற வைத்ததுடன் நானும் பங்கு பற்றியுள்ளேன். அத்துடன் புதுக் கலைஞர்களை தோற்றுவிப்பதான சிங்கள, தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளேன். மேலும் வானொலி வர்த்தக சேவையில் (விசித்ராங்க கீ)  சிங்கள நிகழ்ச்சியிலும், 'குருகெதர' நிகழ்ச்சியிலும் விசேட நிகழ்சசிகளின் போதும் மெல்லிசை, கிராமிய சஞ்சிகை இளைஞர் இதயத்திலும் பாடியுள்ளேன்.

04. சிங்கள் மொழியில் தேர்ச்சி பெற்றுள்ள நீங்கள் அந்த மொழி மூலம் எத்தகைய பங்களிப்பினை செய்து வருகின்றீர்கள்?

எனது சிங்கள மொழித் தேர்வை விசேட தகைமையாகக் கொண்டே ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெற்றேன். அல் ஹிலால் மத்திய கல்லூரியின் சிங்கள மொழிப் பிரிவு பாடசாலையிலும் கற்பித்துள்ளேன். இந்தப் பிரிவில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும், இஸ்லாமிய விசேட தின விழாக்களின் போதும் சிங்கள மொழி மூலம் நிகழ்ச்சிகளை அமைத்து, பயிற்றுவித்து வழிப்படுத்தல் இடம்பெறும்.

ஒரு காலத்தில் அமைச்சுக்கோ, காரியாலயத்துக்கோ கடிதப் பரிமாற்றங்கள் சிங்களத்திலேயே இடம்பெற வேண்டிய நிலை இருந்தது. இக்காலத்தில் சம்பளப் படிவங்கள் முதற்கொண்டு அவ்வப்போது தேவையான சகல காரியாலயக் கடிதங்களை எழுதும் பொறுப்புக்களை அதிபர், என்னிடமே ஒப்படைத்திருந்தார். சில வேளைகளில் கல்விக் காரியாலயங்களினால் தமிழ், முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள், அறிவித்தல்கள் கொடுக்கும்போது மொழிபெயர்ப்புக்காக என்னையே அழைப்பார்கள்.

19991 இல் 'சஹன' என்ற சிங்களப் பத்திரிகையில் எனது முதல் சிங்களக் கட்டுரை வெளியானது. அதாவது 'வெளிநாட்டுக்கு பணிப் பெண்களாக செல்வோருக்கு பயிற்சிகள் அவசியப்படுவது ஏன்?' என்ற தலைப்பில் அக்கட்டுரை சிங்களத்தில் எழுதப்பட்டது. பொதுவாக என் வாழ்க்கையோடு, தொழிலோடு சம்பந்தப்பட்ட எந்த இடத்திலானாலும் அந்நிய சமூகத்தினர், எம் சமூகத்தைப் பற்றியோ, கலாச்சார பண்பாடுகள் பற்றியோ தவறான கருத்துக்களை வெளியிடும்போது அதை தெளிவுபடுத்த சிங்கள மொழியே எனக்கு உதவியது. மேலும் நான் 'மீப்புர' சிங்கள பத்திரிகையின் எழுத்தாளருமாவேன். அதுபோல இலங்கை ரூபவாஹினியில் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் நடைபெற்றுவந்த 'சிதி ஜய' என்ற சிங்கள நிகழ்ச்சியினூடாக அநேகமான முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகளை சிங்கள மொழி மூலம் முன்வைத்துள்ளேன்.

05. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் சிங்கள மொழியிலும்  ஆயிரக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ள உங்களது நூல் வெளியீட்டு முயற்சிகள் எதிர்காலங்களில் எப்படி இருக்கும்?

அல்லாஹ் தான் அறிவான். எனது பெருளாதார தகுதிகளுக்கு மிஞ்சின ஒன்றாகவே இன்று நடக்கின்ற நூல் வெளியீட்டு விழா சம்பிரதாயங்களை எண்ணுகின்றேன். உடல் நலமற்ற, ஆள் வளமற்ற, தனித்த எனக்கு பண பலத்தை வலிந்து தேடினாலும், அது எட்டாக்கனி போலத் தோன்றுகின்றது. ஆதலால் அதற்காக கொட்டாவி விட்டுக் கொண்டிராமல் எனது ஆயிரக்கணக்கான எழுத்தாக்கங்களை எழுதிக் கொண்டுதான் இருக்கின்றேன். கையெழுத்துப் பிரதிகளாக அவை தூங்கிக் கிடக்கின்றன. புத்தக வெளியீடு அரங்கேறும் நாள் பற்றி அல்லாஹ்வே அறிவான்.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். இலங்கையில் முன்னணியிலுள்ள சுதேச வைத்திய நிபுணர்களால் நடத்தப்பட்டு வருகின்ற ஊனமுற்றோர் சங்கம், விசேட தினங்களில் ஊனமுற்றோரை வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று காட்சிப்படுத்துவதில் உள்ள அக்கறை, ஊனமுற்றோரின் வளம் குறைந்த நிலையிலும், வலுவிழந்த கைகளைப் பயன்படுத்தி ஆக்கங்களை வெளிக்கொண்டு வந்து அவர்களது ஆன்ம பலத்தை மேம்படுத்துவதில் இல்லை.

பாரிசவாதம், புற்று நோய், மாரடைப்பு ஆகிய நோய்களோடு இன்னும் சில நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக என்னைப் பீடித்துக் கொண்டன. இறுதியாக நடந்த சத்திர சிகிச்சைக்கு முன்பு என்னைப் பிழைக்க வைக்க முடியாத சாத்தியக் கூறுகள் இருப்பதால் வைத்தியர்களால் உபதேசிக்கப்பட்டேன். என் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வாங்கினர். குடும்பத்தில் பொறுப்பு தாரியிடமும் கடிதம் வாங்கினர். எனது சிக்கலான நிலையை ஒரு பெண் டாக்டர் நாசூக்காக விளக்க முற்பட்டார். நான் அவரிடம் 'டாக்டர் எனது நிலைமை எனக்குத் தெரியும். நான் விரும்பித்தான் இந்த சத்திர சிகிச்சை பெற்றுக்கொள்ள முனைந்திருக்கிறேன். வைத்திய விஞ்ஞானப்படி உங்களால் முடிந்த மேல்மட்ட முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ளுங்கள். எது நடந்தாலும் சரியே. உங்கள் அனைவராலும் எனது உயிரைப் பிடித்து நிறுத்த முடியாது. அது இறைவன் கைவசம் உள்ளது' என்றேன். டாக்டர் அவரது பெருவிரலை உயர்த்திக் காட்டியமை 'சரியாகச் சொன்னீர்கள்' என்றவாறு இருந்தது. அதிசயமாக நீண்ட நேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் ஆப்ரேஷன் முடிந்ததும் மாரடைப்பால் துடிதுடித்து உயிருக்காகப் போராடியிருக்கிறேன். எனக்கு நினைவு திரும்ப மூன்று நாட்கள் ஆகின. இறைவன் அருளால் மீண்டுவிட்டேன். பாரிசவாதத்தால் 11 வருடங்களாக நடக்க முடியாமல் வலது பக்கங்கள் முற்றாக செயலிழந்த நிலை. இடது பக்க கை, கால்கள் சிறிதளவு இயக்கம் கொண்டுள்ளன. எப்படியோ இறைவனின் சோதனையோ, வேதனையோ என்னை அணுகிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை பாவமன்னிப்பு தேடிக்கொள்ளும் சந்தர்ப்பமாக பொறுமையுடன் ஏற்கிறேன். இப்படியான நிலையில் நான் இருக்கும் போது எனது புத்தகம் வெளியிட வேண்டும் என்ற கனவை எப்படி தனியாக நிறைவேற்றிக்கொள்வது? இறைவன்தான் உதவி செய்ய வேண்டும்.

06. தற்போது இயங்கி வரும் இலக்கிய அமைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம் நினைக்காதிருக்க முடியுமா? மழை பெய்தால்தான் காளான்கள் முளைத்து, மாலையாகும்போது அதன் நிலைமை கெட்டு விடுவதை பார்க்கிறோமல்லவா? இலக்கிய அமைப்புக்களின் நிலையும் அப்படித்தான். விழா என்றால், வெளியீடு என்றால், மாநாடு என்றால் இந்த அமைப்புக்கள் உஷாரடையும். தலையெடுத்தது போக இன்னும் ஒரு காத்திரமான அமைப்பு வீராப்புடன் எட்ட நின்று பார்த்திருக்கும். எல்லாப் பகுதிகளிலும் அமைப்புக்களின் தோற்றப்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். எல்லா அமைப்புகளுக்குள்ளும் ஒற்றுமையான கூட்டமைப்பு உருவாக வேண்டும். இலங்கையில் தேசிய ரீதியாக நடக்கும் கலை இலக்கியப் போட்டிகள், முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடைபெறுகின்ற கலை, கலாசார இலக்கியப் போட்டிகள் பற்றி இந்த எல்லா அமைப்புக்களும் தெரிந்திருத்தல் வேண்டும். விருதுகளும், அவ்விருதுகளை அடைவதற்கான தகைமைகள் பற்றிய தெளிவையும் பெற்றிருக்க வேண்டும்.

நவீன முஸ்லிம் இலக்கியப் படைப்புகள் தோன்றக் கூடியதான கேள்விகளை பிறக்கச் செய்தல், சுய ஆக்கங்களையும் வரவேற்று மதிப்பீடு செய்தல், சிரேஷ்ட கலைஞர்களையும், கல்விமான்களையும் கொண்டு தலைநகரில் மாத்திரமல்ல நாட்டின் எல்லாப் பாகங்களிலும் பயிற்சிப் பாசறை இந்த அமைப்புக்களினூடாக நடத்தப்பட வேண்டும். கலை இலக்கியவாதிகளை பதிவுசெய்து அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் சகோதர சமூகத்தில் காணப்படுவது போல கலைஞர்கள் (சினிமாக் கலைஞர்கள் மாத்திரமல்லர்) மதிக்கப்பட வேண்டும். அவர்களில் வயோதிபக் கலைஞர்கள், குருட்டு, செவிட்டு, முடக் கலைஞர்கள் போன்ற இயலாதவர்களின் ஆக்கங்களை வெளியிட்டுக்கொள்ளவும், நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் கூடியதான கூட்டுறவு நிதியமைப்பின் தேவை தேசிய ரீதியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். தேசிய ரீதியாகவோ, சர்வதேச ரீதியாகவோ விழாக்களை ஆடம்பரமாக்குவதைக் கட்டுப்படுத்தி ஆக்கபூர்வமான செயல்களுக்கு மூலதனம் இட வேண்டியது புத்திசாலித்தனமானதும், காலத்தின் தேவையுமாகும். எந்த விதத்திலும் இவ்வமைப்புக்கள் அரசியலை சார்ந்திருக்கக் கூடாது. இதுவே என் கருத்தாகும்.

07. உங்களுக்குப்பிடித்த எழுத்தாளர்கள் யார்? ஏன்?

சிரேஷ், கனிஷ்ட, புதிய, சிறிய சகல எழுத்தாளர்களையும் மதிக்கின்றேன். அவர்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் எல்லோராலும் எழுத்தாளராக முடியாது. எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பலதரப்பட்டவை. அதன் ரகங்கள், ரசங்கள் பல வகை. கனிகள் பலதரப் பட்டவையானாலும் அனைத்தும் நாவுக்கு ருசியானவையே. அதுபோலவே எழுத்துக்களும். எழுத்துக்களை ஆழ்ந்து படித்தால்தான் அதன் ஆழமும், ரசமும் புரியும். படைப்புக்களைத் தரும் எழுத்தாளர்கள் யாவரும் மதிக்கத்தக்கவர்களே.

08. தற்போதைய இளம் பரம்பரையினர் கலை கலாசார இலக்கிய அம்சங்களில் ஈடுபாடு காட்டுவது மிகக் குறைவு. இந்த நிலை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இளம் பரம்பரையினரின் கலை கலாசார இலக்கிய அம்சங்களின் ஈடுபாடு குறைவதற்கு நான் அவதானித்த வகையில் மொழி வளமின்மை, பெற்றோர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பு இன்மை என்பனவும் காரணமாகும். இவர்கள் இலக்கிய அறிவில் இருந்து தூரமாகிக் கொண்டிருக்கின்றனர். மொழியோடு சம்பந்தப்பட்ட பாடப் புத்தகங்களில் கூட இலக்கிய ரசனை ஊட்டக்கூடிய விடயங்கள் தாராளமாக உண்டு. அவற்றை பிரயோகத்தில் கொண்டு வர சங்டப்படுவது ஏனோ? பாடசாலைச் சூழல் ஒரு இலக்கிய சூன்ய ஸ்தானமாகிவிட்டால் மாணவர் உள்ளங்களில் சுய நிர்மாணங்கள் உதயமாவது எப்படி? 'வாழ்க்கையில் இருந்து தூரமாகிய இலக்கியம் ஒன்றில்லை. இலக்கியம் என்பது ஆகாயத்தில் தொங்குகின்ற எதுவுமில்லை' என யாரோ சொன்னதை நானும் சொல்கின்றேன்.

09. நலன்புரி நிலையத்தில் தாங்கள் புரிந்த சேவைகள் பற்றி குறிப்பிடுங்கள்?

நான் 'பாத்திமா வெல்பெயார் சென்டர்' என்ற நலன்புரி நிலையத்தில் சேவையாற்றினேன். இது அகில இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தினால் நடத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களில் ஒன்றாகும். ஆசிரிய உலகத்திலும், வெளியிலும் பெற்ற அனுபவங்களை எல்லாம் திரட்டிப் பிரயோகித்து பாத்திமா நலன்புரி நிலையத்தினை வளர்த்துச் செல்ல என்னை நான் திருப்தியோடு அர்ப்பணித்துக் கொண்டேன். இறையச்சத்தில் உறுதியற்ற, இறை கட்டளைகளை மீறி நடக்கும் ஒரு சிலரால் பல்வேறு சோதனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. அவற்றுக்கு எல்லாம் சளைக்காது இறைவனிடமே முறையிடுவேன்.

இங்கு எனது கடமைகள் பலவாயின. யாரும் என்னை வற்புறுத்தி வேலைகளை செய்யும்படி சொல்லவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நானாகவே அவசியத் தேவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நிறைவு செய்வேன். எனது பெண் ஊழியர்களை சம்பளத்துக்கான சிரமம் போக, மேலதிக பணிகளைச் செய்ய அவர்களுக்கு மனத் திருப்தி, இறை திருப்தி பற்றி சொன்னமை உதவியாயிற்று. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நானும் இவர்கள் கூடவே இயங்கி வருவதால் யாரும் அலுத்துக் கொள்வதில்லை. இல்லத்தின் உள்ளகப் பொறுப்புக்கள்    இவ்வாறு நிறைவேற்றுவதைக் கண்ட உயர்மட்ட நிர்வாக சபை என் சேவைகளைப் பாராட்டியது.

10. இதுவரை நீங்கள் பெற்றுள்ள பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?

நான் ஒன்பது வயதிலிருந்து இதுவரை பெற்றுள்ள பரிசுகள் ஏராளம். பல துறைகளிலும் நான் பெற்ற பரிசுகளுக்குரிய சான்றிதழ்கள் என்னால் சுமக்க முடியாதளவு உள்ளன. இவற்றில் நான் நடக்க முடியாதபடி, எழுத முடியாதபடி ஊனமானதன் பின்னால் மெல்ல மெல்ல பலமில்லாத இடது கையின் சிறிய அசைவாட்டத்தின் இசைவில் கிறுக்கியவற்றுக்கு பெற்ற இலக்கியப் பரிசுகளையே மிகச் சிறப்பானவையாகக் கருதுகிறேன்.

தற்போதைய கலாசார அமைச்சினால் நடத்தப்படுகின்ற இலக்கிய கலைப் போட்டிகளிலே திறந்த பிரிவில் 2007 இலிருந்து வருடாந்தம் வெற்றிக்குரிய இடங்களைப் பெற்றுள்ளேன்.

* 2009 கலாபூஷண விருது கிடைத்தமை
* 2012 ஞானம் சஞ்சிகை சர்வதே ரீதியில் நடத்திய போட்டியில் 7 ஆம் இடம் பெற்று ஆறுதல் பரிசு கிடைத்தமை
* அல்ஹஸனாத் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு
* ஓசையில் ஆக்கக் கவிதை போட்டியில் சிறப்புச் சான்றிதழ்

இது தவிர பட்டியல் படுத்தி சொல்ல முடியாதளவு இன்னும் பல பரிசுகள், சான்றிதழ்கள் கிடைத்திருக்கின்றன!!!

தொடர்புகளுக்கு:-

Mrs. Kitchilan Amathur Raheem
56/9, Moor Street, Negombo.

Phone – 0772499707, 0314925157


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment