பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Monday, January 13, 2014

15. திருமதி. சுமதி சுகதாசன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.01.19

திருமதி. சுமதி சுகதாசன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




. உங்களை இலக்கியத் துறையில் ஈடுபட வைத்தது உங்கள் குடும்பப் பின்னணி என்று நினைக்கிறேன். உங்கள் குடும்பம் பற்றியும், நீங்கள் இலக்கியத் துறையில் காலடி எடுத்து வைத்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்வீர்களா?

எனது சிறுபராயத்தின் பின்பு பெற்றோரின் பராமரிப்பை பெருமளவில் நான் கொண்டிருக்கவில்லை. அதனால், முரண்பாடுகளுடன் முட்டி மோதிக் கொள்வதான சூழ்நிலைகளே எனக்கு அதிகம் பரிச்சயமாயின. அந்நிலையில் இலக்கியத்;துறை, அவற்றிலான ஈடுபாடு என்பவை பற்றிய எண்ணம் எதுவும் எனக்கிருந்ததில்லை. ஆனால் படம் பார்ப்பது, புத்தகங்கள், சஞ்சிகைகள் வாசித்தல் என்பவற்றில் ஆர்வம் இருந்தமையால், எனது பெயரும் பத்திரிகையில் வர வேண்டும் என்ற ஆசையில் க.பொ.த. உயர்தரம் படிக்கும் போது 'ஈழநாடு' மாணவர் பக்கத்திற்கு சிறுகதையொன்றை எழுதி அனுப்பினேன். ஆனால் பிரசுரிக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதனை மறந்தும்விட்டேன். திடீரென்று ஒருநாள், தனியார் கல்வி நிலையத்தில் நான் இருந்த போது, இடைவேளைக்கு மதிய நேரம் வீட்டிற்கு சென்றுவிட்டு; வரும் சக மாணவியொருவர் எனது கதை வந்திருப்பதாகக் கூறி அந்த 'ஈழநாடு' வாரமலரை என்னிடம் தந்தார். எனக்கு உடனே சந்தோஷம் வருவதற்குப் பதிலாக ஏனடா வந்தது என்ற படபடப்புத்தான் ஏற்பட்டது. இதனை  இலக்கியத் துறையில் காலடி எடுத்து வைத்த அனுபவமாகச் சொல்லலாம்.

ஆனால், சிறுவயதில் இருந்து எனது தந்தையை அவதானித்தோ அல்லது அவரது மரபு என்பதாலோ உண்மையில் அரசியல் ஈடுபாடே எனக்கு அதிகம். அந்த ஈடுபாட்டையும் எண்ணப்பாட்டையும் வெளிப்படுத்தும் ஆவலில்தான் இப்போது எழுத விரும்பினேனே தவிர இதனை இலக்கியத் துறை நாட்டம் என்று குறிப்பிட முடியாது. ஆரம்பத்தில் இருந்தது போன்று பத்திரிகையில் பெயர் வரவேண்டும் என்ற ஆசையும் இப்போது கிடையாது.

2. கவிதைத் துறையில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகின்றீர்கள். அது பற்றி குறிப்பிடுங்கள்?

வாசிப்புப் பழக்கம் இப்போது நம்மிடையே குறைந்து வரும் பண்பாக காணப்படுவதாலும், அதே சமயம் விளக்கமான உரைநடைகளை எழுதுவதற்கான பொறுமையும், சக்தியும் தற்போது என்னிடம் முன்னரைப்போல் இல்லையென்பதாலும் திடீரென்று எடுக்கப்பட்டதே இக்கவிதை வடிவமும், அதன் மூலம் கிடைக்கப்பெற்ற கவிஞர் அவதாரமும். இவை தற்செயலான விடயங்கள் மாத்திரமே.

3. கவிதைகளினூடாக நீங்கள் சமூகத்துக்கு சொல்ல விளைவது என்ன? எவ்வகையான கருக்களைக் கையாண்டு உங்கள் கவிதைகளை படைக்கின்றீர்கள்?

ஒருவரது மனதுக்குள் தனது கருத்துக்கள் இருக்கும் வரை என்பது வேறு. அதை வெளிப்படுத்தும் போது அது விரும்பியோ விரும்பாமலோ சமூகத்துக்குச் சொல்வதாகி விடுகிறது. அதனால் எனது ஆக்கங்களை வெளியிடுவதான எனது விருப்பையும், முயற்சிகளையும் இவ்வாறான மனப் போராட்டங்களினூடு தள்ளிப்போட்டு வந்தேன்.

நான் சமூகத்துக்கு எதுவும் சொல்ல முயலவில்லை. ஒரு தனியாளாக அனுபவித்து அதனூடாகச் சிந்தித்து பெற்றவற்றின் மூலம், நான் எதனை பெறுவதற்காக வேண்டுகிறேன் அல்லது எண்ணுகிறேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளேன். நானாக இருந்தாலென்ன, யாராக இருந்தாலென்ன, மூன்று வேளைகளும் உண்ண, உடுக்க, உறைய என்பதுடன் ஆரோக்கியமும், சுகாதாரமும், கல்வியறிவும் கொண்டிருக்கத்தக்கதாக மிகச் சுருக்கமான குடும்பத்தையாவது நடாத்தக்கூடிய, சராசரி நிறைவானதாகவாவது எமது உழைப்புக்குரிய வருமானம் கிடைக்க வேண்டும் என்பதையே வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறேன். அது கிடைக்காத பட்சத்தில் அரசியலைச் சேர்க்க வேண்டி வருகிறது. அவ்வளவு தான்.

4. உங்கள் நூல் வெளியீடுகள் பற்றி குறிப்பிடுங்கள்?

எனது இரு கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. முதலாவது நூலான 'தளிர்களின் சுமைகள்' முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினால் வெளியிடப்பட்டது. இரண்டாவது நூலான 'எதனை வேண்டுவோம்?' கவிதை தொகுதியை கடந்த ஒக்டோபரில் வெளியிட்டேன்.

5. ஏனைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

என்னைப் போலவே ஒவ்வொரு எழுத்தாளர்களும் தத்தமது நோக்கங்களுக்காக ஆக்கங்களைப் படைப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரதும் நோக்கங்கள் நிறைவடைவதுடன் நிறைந்த வெற்றிகளைப் பெறவும் வாழ்த்துகிறேன். இதற்கு மேல் விமர்சனமோ அல்லது கருத்துக்களோ சொல்வதற்கான தகுதியை நான் கொண்டிருக்கவில்லை என்றே கருதுகிறேன்.

6. இன்று நிறையவே பெண் எழுத்தாளர்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களது எழுத்துக்களை பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்?

'பெண் எழுத்தாளர்கள்| என்று எழுத்தாளர்களுக்குள் ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்துவதாகவே இக்கேள்வி எனக்குத் தோன்றுகிறது. இதனை ஷஎழுத்தாளர்களுள் பெண்களாக இருப்பவர்கள்' என்று சொல்வது மேலானதாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்தே. பெண்களுக்கு வீட்டுக் கடமைகள் மட்டுமே என்றிருந்த சமூகக் கண்ணோட்டம் ஓரளவு வேகமாக மாறி வருவது இதற்குக் காரணமாக இருக்கலாம். உருவிலும், குரலிலும், பெயரிலும் பெண்ணென்ற அடையாளம் காணப்படுவது இயல்பு. அதற்காக அறிவு, சிந்தனை, திறமை என்பவற்றில் இவ்வடையாளம் வெளிப்படுத்தப்படுவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை.

7. பெண்ணிய சிந்தனை பற்றிய உங்கள் எண்ணப்பாடு யாது?

நான் முன்பு குறிப்பிட்ட, தனியாளின் அடிப்படைத் தேவைகள் தான் இருபாலாருக்கும் பொதுவானவையே தவிர, இருபாலாருக்கும் தனிப்பட்ட வௌ;வேறு தேவைகளும் பிரச்சினைகளும் இருக்கவே செய்கின்றன. இந்த வகையில் பெரும்பாலாக பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் எனினும், ஆணிய சிந்தனை பற்றிய எண்ணப்பாடும் அதற்கான முக்கியத்துவமும் ஏற்படுவதற்கான வகையிலேயே குடும்ப நிலைமைகள் இப்போது மாறத் தொடங்குகின்றன. ஆனால் பொது வாழ்க்கை என்று வரும்போது, பெண்கள் பெரும்பாலான ஆண்களின் மேலாதிக்கத் தனத்துக்கு உள்ளாகின்றனர் என்பது மறுக்க முடியாதது. இவையெல்லாவற்றுக்கும், பால் வேறுபாடின்றி ஒவ்வொரு தனி நபருக்கும் முதலில் பொருளாதார ஸ்திரத்தன்மையும், பொருளாதார சுதந்திரமும் அவசியம் இருக்க வேண்டும். அவ்வாறெனின் குடும்ப அலகின் ஸ்திரத்தன்மை என்னாவது என்ற கேள்வி எழக்கூடும். எனவே இந்த விடயமானது, பாலியல் விடயங்களையும் எதிர்காலச் சந்ததியினரின் நன்மைகளையும் கருத்திற்கொண்டு கலாசார விழுமியங்களுக்கு அப்பாற்படாத வகையில் ஆராயப்பட வேண்டியதொன்றாகவே உள்ளது.

8. கவிதைத் துறையில் ஈடுபட்டு வரும் நீங்கள் எதிர்காலத்தில் வேறு துறைகளில் ஈடுபடும் எண்ணம் உண்டா?

இல்லை.

9. உங்கள் இலக்கிய முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்பவர்கள் குறித்து?

குறிப்பாக எனது தந்தையுடன் தோழமை கொண்டிருந்தவர்களைத்தான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்களித்த ஊக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதைவிட எனது குடும்பத்தையும் எனது பெறா மக்களையும் குறிப்பாகச் சொல்லலாம்.

10. எழுத்துலக வாழ்வில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவங்கள் இருந்தால் அதை பகிர்ந்து கொள்ளுங்கள்?

நான் தாள்களில் எழுதிக் காட்டிய கவிதைகளுக்கு எதிர்பாராதவிதமாக பலரால் கிடைக்கப்பெற்ற அங்கீகாரங்களே மறக்க முடியாத அனுபவங்களாக என்றும் என்னுள் இருக்கும்.

11. இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

நாங்கள் இவ்விதமாக எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் உலக அரசியல், பொருளாதார நடவடிக்கைகளானது, இன்று மனித வாழக்கைக்கு சுரண்டல், இலஞ்சம், திருட்டு, ஏமாற்று போன்றவை கூட இன்றியமையாதன என்பதான வழிமுறைகளையே அனைத்து மட்டத்;தினரிடம் விஸ்தரிக்க முனைகின்றன. இதனால் எம் போன்றவர்கள் தனிமைப்படுதப்படுவது போல் தோன்றுகிறது.

எனினும் நமது நிலைப்பாட்டில் இன்று போல் என்றும் உறுதியைப் பேணுவோம் என்ற நம்பிக்கையுண்டு. எனக்கு இச்சந்தர்ப்பத்தை வழங்கிய பூங்காவனம் சஞ்சிகைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment