பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, September 7, 2014

16. திருமதி ஷானாஸ் பர்வீன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.08.24

திருமதி ஷானாஸ் பர்வீன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் குறிப்பிடுங்கள்?

நான் கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டுள்ளேன். கொழும்பைச் சேர்ந்த எஸ்.எம். அன்சார், காலஞ்சென்ற மெய்தீம் பீபீ ஆகியோரின் மூத்த மகளாகப் பிறந்த எனக்கு நான்கு உடன் பிறப்புக்கள். ஒரு தங்கையும், மூன்று தம்பிமாரும் உள்ளனர். கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். பிறகு பல இடங்களில் தொழில் நுட்பக் கல்வியைக் கற்றேன். இன்று ஒரு தையல் ஆசிரியையாக மாணவிகளுக்கு பல வருடங்களாக தையல் கலையைக் கற்பித்து வருகின்றேன்.

தையல் ஆசிரியையாக மட்டுமல்லாமல் எழுத்துத் துறையிலும் ஈடுபட்டு வருகின்றீர்கள். உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நான் சிறுவயதிலிருந்தே பத்திரிகை வாசிப்பது, வானொலி கேட்பது போன்ற விடயங்களில் அதிக அக்கறை காட்டி வந்தேன். அந்த பழக்கத்தால் காலப் போக்கில் பத்திரிகைகளுக்கும், வானொலிக்கும் நான் பல ஆக்கங்களை எழுதி அனுப்பினேன். அவை பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் களப்படுத்தப்பட்டன.

எவ்வகை சார்ந்த  விடயம் பற்றி பத்திரிகைகளில் நீங்கள் எழுதி வருகின்றீர்கள்?

நான் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், விவாதங்கள், தையல் குறிப்புக்கள், சமையல் குறிப்புக்கள் போன்றவற்றை எழுதியனுப்புவதுண்டு. அவ்வாறு வெளிவந்த ஆக்கங்களை நான் கட்டுக் கட்டாக சேகரித்து கோப்புக்களாக்கி வைத்துள்ளேன். இதுதவிர குறுக்கெழுத்துப் போட்டியிலும் பங்குகொள்வேன்.

என் மனதைப் பாதித்த விடயங்களை கருப்பொருட்களாக வைத்து சிறுகதைகளையும் எழுதியுள்ளேன். இந்த சிறுகதைகள் பூங்காவனம் சஞ்சிகையிலும், மித்திரன் வாரமலரிலும் வெளிவந்துள்ளன.

எழுத்துத் துறையில் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்னோடியாய் இருந்தவர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

எழுத்துத் துறையில் ஈடுபடுவதற்கு முன்னோடியாய் இருந்தவர்கள் நான் கல்வி கற்ற பாடசாலை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் தான்.

உங்கள் குடும்பத்தினருக்கும் கலைத்துறையில் ஈடுபாடு உண்டா?

நாங்கள் சிறுவயதினராக இருக்கும் போது என்னுடைய தாயின் தகப்பனுக்கு (தாத்தாவுக்கு), என்னுடைய தாயார், தாயாரின் சகோதரிகள் எல்லோரும் இரவில் (இஷாத் தொழுகையின் பின்னர்) அந்தந்த நாள் பத்திரிகைகளை வாசித்துக் காட்டுவார்கள். காலப்போக்கில் நானும், எனது தங்கை பரீனாவும்  பத்திரிகைகளை வாசித்துக் காட்டுவோம். அந்தப் பழக்கமே எங்களை பத்திரிகைகள், புத்தகங்கள், நாவல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாசிப்பதற்கு ஊக்குவிப்பாக அமைந்தது என்று கூற வேண்டும்.

எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை நீங்கள் அதிகமாக வாசிக்கிறீர்கள்? காரணம் என்ன?

அந்தக் காலத்தில் எனது தாயார், அவரது சகோதரிகள் அநேகமாக இந்தியப் புத்தகங்களைத்தான் வாங்கி வாசிப்பார்கள். அவர்கள் வாசித்த பின் நாங்கள் அவற்றை எடுத்து வாசிப்போம். ஆனந்த விகடன், கல்கி, ராணி, குமுதம், இத்தியாதி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இது தவிர இந்துமதி, சிவசங்கரி, சுஜாதா, மணியன், ரமணி சந்திரன் ஆகியோரின் புத்தகங்களையும் விரும்பி வாசிப்பதுண்டு.

இப்போதெல்லாம் நிறையவே இலங்கைக் கலைஞர்களின் புத்தங்கள் வாசிக்கக் கிடைப்பதால் எல்லோருடைய புத்தகங்களையும் விரும்பி வாசிப்பேன்.

தையல் கலைகளிலும், சமையல் கலைகளிலும் நீங்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். இத்துறையில் உங்களது பங்களிப்பு பற்றியும் இதற்காக உங்களை ஊக்குவித்தவர்கள் பற்றியும் உதவியவர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனக்கு 12 வயதிலிருந்து தையல் கலையில் ஆர்வம் அதிகம். என்னுடைய தாயார் நன்றாக தைப்பார்கள். அவரின் பக்கத்தில் இருந்து அவர் துணியை வெட்டும் அழகைப் பார்த்து அதே போல் நானும் துணியை வெட்டித் தைப்பேன்.

அந்த ஆர்வத்தில் அரச தையல் பயிற்சி நிலையத்தில், கைத் தையல் வகுப்பில் சேர்ந்து கற்றேன். அதற்குப் பிறகு Scientificial Method  இல் தையல் பயிற்சி பெற்று Diploma சான்றிதழ் பெற்றேன். பிறகு கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தையல், சமையல், கேக் அலங்காரம், பெயின்டிங், சிகை அலங்காரம், பூ வேலைப்பாடு போன்றவற்றையும் சிறப்பாகக் கற்றேன். பிறகு படிப்படியாக எல்லாப் புதிய நுணுக்கங்களுடன் கூடிய தொழில் நுட்ப பாடங்களை முறையாக கற்கத் தொடங்கினேன்.

முதன் முதலாக கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் பாடசாலை முன்னாள் அதிபர் அவர்கள் என்னிடம் சிகையலங்கார வகுப்பை மாணவிகளுக்காக நடாத்தும்படி கேட்டுக் கொண்டார்கள். பல வருட காலமாக சிகை அலங்கார வகுப்பை நான் அங்கு நடாத்தி வந்தேன். தொடர்ந்து வெளியிடங்களிலும் கற்பித்துக் கொண்டே, வீட்டிலும் வகுப்புக்களை நடாத்தினேன். இப்போது வீட்டில் மாத்திரமே எனது எல்லா வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றேன்.

தையல் வகுப்புக்களில் தற்போது Block இல்லாமல்
(Tailoring Method) புடைவையில் கீறி புது முறையில் சொல்லிக் கொடுக்கிறேன்.

தற்போது சமையல் கலை வகுப்புக்களையும் நடாத்தி வருவதாக அறிகின்றேன். அதுபற்றி குறிப்பிடுங்கள்?

நானும் என்னுடன் இணைந்து எனது சகோதரியுமே சமையல் கலை வகுப்புக்களை நடாத்தி வருகின்றோம். இந்தத் துறையிலே எல்லாப் புதுப்புது வடிவங்களிலும் கற்பிக்கின்றோம். General Cookery, Bakery, Cake Icing, Stuctures, Suger Flower  இப்படி பல புதிய விடயங்களை ஒரு நாள் வகுப்புக்களாகவும் நடாத்தி வருகின்றேன்.

உங்களது வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கும் பணியாகத்தான் உங்கள் பணிகளைக் கணிக்கிறீர்களா? ஏன்?

எழுத்துத் துறையை எடுத்துக் கொண்டால் என் சிற்றரிவுக்கு எட்டிய விடயங்களையே நான் எழுதி வருகின்றேன். சமையல் கலை, தையல் கலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் வெறுமனே இருக்காமல் நான் கற்ற கலைகளை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் ஒரு ஆத்ம திருப்தி எனக்குள் ஏற்படுவதை உணர்கின்றேன். அந்த வகையில் என்னுடைய பணியை மிகவும் திருப்திகரமாக செய்து வருகின்றேன்.

என்னிடம் கற்கும் மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக அவர்களின் படைப்புக்களை வருடா வருடம் கண்காட்சி நிகழ்ச்சிகளை செய்து காட்சிப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அவற்றுக்கு சிறந்த கல்விமான்களைக் கொண்டு சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கி வருகின்றேன்.

சமையல் கலைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்களது கருத்து யாது?

இன்றைய இளைய தலைமுறையினர் இன்டர்நெட் மூலம் சமையல் கலைகளைப் பார்த்து, தாமே அதுபோல் செய்து பார்க்கின்றனர். அது பரவாயில்லை. என்ன இருந்தாலும் ஒரு வகுப்பிற்குப் போய் ஆசிரியரிடம் முறையாகக் கற்று, சக மாணவிகளுடனும் பழகி, தனது கைகளினால் செய்முறைப் பயிற்சிகளை முறையாகச் செய்வதுதான் சிறந்த முறையாகும்.

வீட்டில் சமைப்பதைவிட இன்றைய இளைய தலைமுறையினர் பாஸ்ட்புட் கடைகளை நாடி ஓடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. காலப் போக்கில் வீட்டில் சமைத்து உண்பது குறைந்துவிடும் என்று நினைக்கின்றேன்.

மேற்படி துறைகள் தவிர்ந்த வேறு ஏதாவது துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகின்றீர்களா?

எனது தங்கையின் மகளுடன் சேர்ந்து ஒரு முன்பள்ளி பாலர் பாடசாலை நடாத்த ஆர்வமாக இருக்கின்றேன். சிறார்களுக்கான கல்வித் துறையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று எண்ணுகின்றேன். எங்கள் வீட்டிலேயே இந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியும். ஒரே கூரையின் கீழ் எல்லா துறைகளையும் வௌ;வேறாக சிறப்பாக செய்ய முடியும் என்று நினைக்கின்றேன். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் உதவி செய்ய வேண்டும்.

இறுதியாக இளம் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இன்றைய இளம் பெண்கள் ஏதாவது ஒரு தொழில்நுட்ப பாடத்தைக் கற்க வேண்டும். தமது எதிர்கால வாழ்வின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு கைத்தொழில்களை கற்றுக்கொள்ள வேண்டும். நானும் என் மாணவிகளுக்கு நல்லதொரு தரமான சான்றிதழைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்டு அங்கே என் வகுப்புக்களைப் பதிவு செய்து தரமான (T.V.E.C சான்றிதழை வழங்கிக்கொண்டு வருகின்றேன்.

ஆனால் எங்கள் சமுதாய பிள்ளைகளுக்கு அதன் பெறுமதி தெரிவதில்லை. ஒரு கற்கை நெறியை ஆரம்பித்து, அதை முழுமையாக பூரணப்படுத்துவதில்லை. இடையிலேயே அதனை விட்டுச் சென்று விடுகிறார்கள். எந்த ஒரு துறையையும் பூரணமாக நிறைவு செய்தால்தான் பலனைப் பெற முடியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து இக்கால இளைய சமுதாயம் மீண்டும் மீண்டும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதே எனது அவாவாகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment