பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, March 26, 2017

27. கெகிறாவ ஸஹானா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.12.03

கெகிறாவ ஸஹானா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை கெகிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை கம்பளை ஸாஹிறாக் கல்லூரியிலும் கற்றேன். ஆங்கில மொழி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி 1991 இல் பதவியேற்று, இருபது வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியபின் தற்போது சுயவிருப்பின் பேரில் ஓய்வு பெற்றிருக்கின்றேன்.


02. இலக்கியம் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

எனது வீட்டில் அனைவரும் தீவிர வாசகர்கள். பத்திரிகைகள் படிப்பார்கள்ளூ தொடர்கதைகளைப் பற்றி விமர்சிப்பார்கள்ளூ உலக விவகாரங்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். வீட்டில் தொடர்ந்து வாங்கிய மித்திரன் பத்திரிகையில் வந்த தொடர்கதைகளைப் படித்து அவற்றின் அடுத்த கட்டம்பற்றி யோசிப்பேன். வானொலியும், நல்ல சினிமாக்களும் எனது ஆற்றல்களை வளர்த்தன. எனது ஆசிரியர்களும் அதற்கு உதவினார்கள். பின்னாளில் சிறந்த எழுத்தாளர்களுடைய எழுத்துகளைப் படித்தேன். எனது சிந்தனைகள் பரந்தன.


 03. உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வெளிவந்தது?

15 வயதில் எழுதத் தொடங்கினேன். வானொலியில் பீ.எச். நடத்திய ஒலி மஞ்சரிக்கு எழுதிய முதல் கவிதை அவர் குரலில் ஒலிபரப்பானது. அந்நிகழ்ச்சிக்கு சிறுகதைகளும் எழுதினேன். அதற்கு முன்னர் சிறு துணுக்குகள் எழுதியுள்ளேன். 1989இல் முதல் பிரசுரம் மல்லிகையில். அடுத்தடுத்த இதழ்களில் கவிதைகளும் பிரசுரம் கண்டன.


04. ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்? புதுக் கவிதைக்கும், மரபுக் கவிதைக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?

கவிதையாக இருக்கவேண்டும். மனதைத் தொடலாம் அல்லது சுட்டெரிக்கலாம். ஆனால், கவிதைப் பண்பு இருக்க வேண்டும். அதுவே மரபுக் கவிதைக்கும், புதுக் கவிதைக்கும். ஆனால், புதுக் கவிதையின் நெகிழ்ச்சித் தன்மையும், வளைந்து கொடுக்கும் போக்கும் பலரைக் கவர்ந்திருக்கின்றது. அத்துடன், அதன் எளிமை எல்லோருக்கும் எழுதலாம் என்ற ஆசையைக் கொடுத்திருக்கின்றது. அதன் காரணமாக புதுக்கவிதை மிகப் பிரபலமாக ஆகிவிட்டது.


05. உங்களது சிறுகதைகளின் கருப்பொருட்கள் பற்றி?

எதையும் வரையறுத்து நான் எழுத முயலவில்லை. மனதில் பட்டதையும், மனதைப் பாதித்ததையும் அதிகம் எழுதியிருக்கிறேன். பெண்கள், குழந்தைகள், ஆண்கள், மிருகங்கள் என்று உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறேன். தனியாக ஒரு கருப்பொருளைத் தெரிவுசெய்து கொள்வது இக்கால எழுத்தாளன் ஒருவனுக்கு மிகச் சிரமமானது. அவன் அன்றாடம் காணுகின்ற, முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் இன்று ஏராளமாக உள்ளன. அத்துடன் அவன் சக மனிதனையும் எப்போதும் அவதானிக்கின்றவனாகவும், அவனில் தன்னைக் காண்பவனாகவும் இருப்பதனால் வரையறுத்து எழுதுவது கடினமானது.


06. இதுவரை நீங்கள் எழுதி வெளியிட்ட நூல்கள் எவை? நூல் வெளியீடுகளை எப்படி மேற்கொள்கிறீர்கள்?

இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளேன். அவையாவன:-

1. ஒரு தேவதைக் கனவு - சிறுகதை
2. இன்றைய வண்ணத்துப் பூச்சிகள் - கவிதை
3. ஒரு கூடும் இரு முட்டைகளும் - குறுநாவல்
4. சூழ ஓடும் நதி - ஆய்வு
5. மான சஞ்சாரம் - சுயசரிதை
6. இருட்தேர் - கவிதை
7. முடிவில் தொடங்கும் கதைகள்
8. அன்னையின் மகன் - நாவல்
9. ஊமையின் பாஷை - சிறுகதை

இந்த நூல்களை வெளியிட நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை மற்றும் வட மத்திய மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன அனுசரணை புரிந்துள்ளன. தனி முயற்சியாகவும் வெளியிட்டிருக்கிறேன்.


07. உள்ளுர், சர்வதேச எழுத்தாளர்களுடனான உங்களது தொடர்புகள், உறவுகள் எப்படியுள்ளது?

அனைத்து எழுத்தாளர்களது நூல்களையும் வாசிப்பேன். பொதுவாகக் கூறுவதாயின் சகல எழுத்தாளர்களுடனும் ஒரு சுமுகமான உறவு உள்ளது என்றே கூறிக் கொள்ளலாம்.


08. தற்போது வெளிவரும் பத்திரிகைகளின் இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றி யாது கூறுவீர்கள்?

தேர்ந்த வாசகன் ஒருவனைத் திருப்திப்படுத்துமளவிற்கு இல்லாவிட்டாலும், ஓரளவு நன்றாகவே செய்கின்றன. புதிய தலைமுறை ஆக்க கர்த்தாக்களுக்கு எழுதுவதற்கு அதிக வாய்ப்புகளும், இடங்களும் கொடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. சுருக்கமாகச் சொன்னால், எப்போதுமே இலக்கிய வளர்ச்சிக்கான ஆதரவு பத்திரிகைகள் மூலமாக கிடைப்பது உண்மையே.


09. இணையத் தளங்களின் வருகையினால் வாசிப்பு மட்டத்தின் நிலை பற்றிய உங்கள் கருத்தை கூறுங்கள்?

வாசிப்பையும், தகவல் பரிமாற்றத்தையும் வேகமான வளர்ச்சித் திசைக்கு நகர்த்தியுள்ளன. ஆழ்ந்த சிந்தனையையும், சுய கல்வி வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளன. புத்தகங்களைத் தேடித் திரிய வேண்டிய அவசியமின்மை பெரும் ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆசைப்படுகின்ற ஒன்றை விரல் நொடிப்பொழுதில் தேடிப் படித்துவிடலாம் என்பது எவ்வளவு சௌகரியமானது! எனினும், அதிலும் சில வரையறைகள் பேணப்படல் நன்று. வேகமும் மட்டுப்பட வேண்டும்.

10. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யாவர்?

தரம் பிரிக்கத் தெரியவில்லை. சொல்லும் பாணியில், சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொருவரைப் பிடிக்கின்றது. பிடிக்காததும் இருக்கின்றது. எப்போதும் என்னை வியப்பிலாழ்த்தும் எழுத்தே என்னைக் கவர்கின்றது. நாம் இதுகாறும் சொல்ல நினைக்காத ஒன்றை, சொல்லத் தெரியாமல் தவித்த ஒன்றை இவர் எப்படி இவ்வளவு அழகாகச் சொன்னார் என்ற வியப்பு அதுளூ எவ்வாறு இவ்வளவு நீளமாகச் சொன்னார் என்பதும் அதுவேளூ எவ்வளவு தைரியமாகச் சொன்னார் என்பதும் அதுவே.


11. எதிர்காலத்தில் எவ்வகையான இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்?

நாவல்கள். எப்போதும் நாவல்கள் என்னைப் பிரமிக்க வைக்கின்றன. அன்றைய வயதில் பொன்விலங்கு, குறிஞ்சிமலர் முதலாக இன்றுவரை படித்துள்ள எராளமான நாவல்கள் ஒவ்வொரு விதத்தில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. சிறிய உருவத்தில் இருந்தாலும், நாகம்மாள் சொன்ன செய்தியும் ஒரு பிரமிப்பே. மோகமுள் மிகப் பெரிய பிரமிப்பு. இலங்கையில் வீரகேசரிப் பிரசுரங்கள் பலவற்றைச் சிறு வயதில் படித்திருந்தாலும், இன்று அவற்றை உரிய பழைய வடிவத்தில் காணக்கிடைக்கவில்லை. அதை எண்ணும்போதும், அவை தற்போது கையில் அதே வடிவத்தில் கிடைத்தால் எவ்வளவு பரவசமாக இருக்கும் என்று எண்ணும்போதும், நாவல்களே எட்டாத கனியாக என்னை ஈர்க்கின்றன.


12. உங்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

* சிறுகதைக்கான தகவம் பரிசு

* தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கவிதைக்கான பரிசு

* மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது

* அரச சாகித்திய விழா சான்றிதழ்

* யாழ். கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ்

* பாராட்டப்படும் இளங்கலைஞர் - அகில உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய        மாநாடு (2002)


13. இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு என்ன கூறுவீர்கள்?

அதிகம் வாசியுங்கள்ளூ சிந்தியுங்கள். எழுதுங்கள். எழுதியதைச் சிறிது காலத்தின் பின்பு மீண்டும் படித்துப் பாருங்கள். திருத்தங்கள் இருப்பின் செம்மைப்படுத்துங்கள். பின்னர் பிரசுரியுங்கள். நிதானமாகப் புத்தகங்களை வெளியிடுங்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். மூத்த எழுத்தாளர்களது படைப்புகளையும், அவர்களது பணிகளையும் அறிந்து உணர்ந்துகொள்ளுங்கள். எல்லோருடனும் கலந்துரையாடுங்கள். கலந்துரையாடல்கள் பல தேடல்களுக்கு வழிவகுக்கும். தேடல் மூலமாகக் கண்டடைவதற்கு இலக்கியத்தில் நிறைய உண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் உண்டு. வசதிகளும் உண்டு!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment