இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.02.12
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தளராது சமூக சேவையாற்றும் ஹாஜியானி மர்ளியா சித்தீக்
சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஹாஜியானி மர்ளியா சித்தீக் 'சேவை ஜோதி', 'சேவையின் செம்மல்' போன்ற பட்டங்கள் சூட்டி கௌரவிக்கப்பட்டவர். பெண் குலத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழும் இந்த மாதர் சிரோன்மணி ஆசிரியையாக, அதிபராக பல பதவிகளை வகித்து மாணவச் சிறார்களுக்கு மகத்தான சேவைகள் செய்தவர். தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் தன் பணிகளிலிருந்து ஓயாது செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர் கொழும்பு லெயார்ட்ஸ் புரோட்வேயைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவை சொய்ஸாபுரயை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
'நான் மருதானை கிளிப்டன் பாலிகா வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றேன். எஸ்.எஸ்.சீ. பரீட்சையில் சித்தியடைந்ததுமே எனக்கு ஆசிரியர் நியமனமும் கிடைத்துவிட்டது. அப்போது எனக்கு வயது இருபது.
1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பிரபல கல்விமானான ஏ.எம். சமீமின் சகோதரரான ஏ.எம். சித்தீக் என்பவரை கரம் பிடித்தேன். எனக்கு ஒரு மகனும் நான்கு மகள்மாரும் பிறந்தனர். பின்னர் அளுத்கமையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றேன். பயிற்சி முடிந்ததும் கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையிலுள்ள பாத்திமா மகளிர் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியராக நியமனம் கிடைத்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சுமார் 21 வருட கால சேவையை அடுத்து நான் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள அல் இக்பால் வித்தியாலய அதிபராக பதவி உயர்வு பெற்றேன். அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த காலஞ்சென்ற ஜாபிர் ஏ. காதரின் அயராத முயற்சியினால் இப்பாடசாலை ஒரு மகளிர் பாடசாலையாக மறுசீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் இப்பாடசாலையின் முதலாவது பெண் அதிபராகப் பதவியேற்று சுமார் 16 வருடங்கள் கடமை புரிந்து ஓய்வு பெற்றேன்.
02. அதிபராக பதவியேற்ற பின்னர் நீங்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் பற்றி?
பல்வேறு அழுத்தங்களை சந்திக்க நேர்ந்தது. 1983 ஆம் ஆண்டு ஜுலை வன்செயல் இடம் பெற்ற கால கட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனது பாடசாலையில் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியைகளும் கடமையாற்றினர். இவர்களை சந்தேகித்து பொலீஸார் கைது செய்ய வந்தனர். அவர்களைப் பாதுகாக்க நான் பட்டபாடு பெரும்பாடுதான். எனது உடன் பிறந்த சகோதரிகளாக நான் அவர்களை கவனித்தேன். பராமரித்தேன்.
03. சமூக சேவையில் உங்களுக்கு எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது?
முன்னாள் சுகாதார அமைச்சரான ஜாபீர் ஏ. காதரின் துணைவியார் தலைமையில் இயங்கிய முஸ்லிம் மாதர் கல்வி வட்டம் மூலம் எமது பாடசாலையில் மாணவிகளுக்கு சுறுக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து வகுப்புகளும், கேக் தயாரிக்கும் முறைகள் பற்றிய வகுப்புகளும் நடைபெற்றன. இவற்றுக்கெல்லாம் பக்க பலமாக நான் செயல்பட்டேன். இதன் மூலமே எனக்கும் சமூக சேவையில் நாட்டம் ஏற்பட்டது. படிப்படியாக பல சங்கங்களில் அங்கத்தவராக இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டேன்.
04. நீங்கள் அங்கம் வகிக்கும் மாதர் சங்கங்கள் பற்றி குறிப்பிடுங்களேன்?
இளம் முஸ்லிம் மாதர் சங்கம் ; (Young Women’s Muslim Association - YWMA)> முஸ்லிம் மாதர் கல்வி வட்டம் (Muslim Ladies Study Circle)> All Ceylon Muslim’s Womens Conference, Srilanka House Wives Association, Srilanka – Pakistan Friendship Association, All Ceylon Moors Ladies Union போன்ற அமைப்புகளில் எல்லாம் பல்வேறு பதவிகளை வகிக்கின்றேன்.
இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் பொதுச் செயலாளராக சுமார் 12 வருடங்கள் கடமை புரிந்தேன். தற்சமயம் அச்சங்கத்தின் உப தலைவியாக உள்ளேன்.
05. மனம் தளராமல் சமூக சேவை செய்கிறீர்கள். சுறுசுறுப்பாக இயங்குகிறீர்கள். இதன் இரகசியம் என்ன?
எனக்கு தற்சமயம் 75 வயதாகிறது. எனினும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நான் இன்னும் திடகாத்திரமாகவே இருக்கிறேன். சமூக சேவையில் எனக்குள்ள ஆர்வத்தின் காரணமாகவோ என்னவோ நான் எப்போதும் திடமான மனதுடன் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். எனவே அந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தியவளாக தொடர்ந்தும் மன வலிமையை வரவழைத்துக் கொண்டு எனது சேவையைத் தொடருகிறேன். எனது உடன் பிறந்த சகோதரர்கள் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். அவர்கள் மூலமும் மற்றும் தனவந்தர்கள் மூலமும் வலது குறைந்தோருக்கு சக்கர நாற்காலிகளை எமது அமைப்பின் மூலமாக வழங்கி வருகிறேன்.
விதவையருக்கு உதவி புரிதல், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்குதல், அப்பியாசக் கொப்பிகளை வழங்குதல், ரமலான் மாதத்தில் வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் எமது சங்கங்களுடன் இணைந்து என்னாலான பங்களிப்பைச் செய்துகொண்டு வருகிறேன். இத்தகைய சமூக சேவைகளில்தான் நான் இன்பம் காண்கிறேன்.
06. சமூக சேவையில் ஒன்றிப்போன உங்களின் சேவைகளைப் பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபற்றி?
அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் எனக்கு 'சாமஸ்ரீ', 'தேசமான்ய', 'தேச சக்தி', 'தேச கீர்த்தி', 'ஜபருல் அமல்' (சேவை இரத்தினம்) ஆகிய பட்டங்கள் கிடைத்துள்ளன. மனித உரிமை மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் 'சேவை ஜோதி' என்ற பட்டமும், தடாகம் கலை இலக்கிய வட்டம் கல்வி கலை கலாசார பண்ணாட்டு அமைப்பினால் ''தன்னம்பிக்கைச் சுடர்'' என்ற பட்டமும் எனக்கு வழங்கப்பட்டன.
07. இன்று எடுத்ததுக்கெல்லாம் பொன்னாடைகளும் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. ஒரு ஐயாயிரம் ரூபாவை கொடுத்தால் தமக்கு வேண்டிய பட்டங்களையும், விருதுகளையும் வழங்க எத்தனையோ அமைப்புகள் இன்று புற்றீசல் போல் முளைத்துள்ளதாக குற்றஞ் சாட்டப்படுகின்றதே? இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
தகுதி பெற்றவர்களுக்கு, சேவை செய்பவர்களுக்கு இந்த கௌரவங்களை வழங்கினால்தான் அதற்கொரு அர்த்தம் இருக்கும். வருபவர் போவோருக்கெல்லாம் பணத்துக்காக பொன்னாடைகளை போர்த்தி, பட்டங்கள் சூட்டுவது பொருத்தமற்ற செயலாகும். சேவை செய்யாமல் - தகுதி இல்லாமல்- ஆற்றல் இல்லாமல் - பணத்தைக் கொடுத்து பட்டங்களையும், விருதுகளையும் வாங்குவது அகௌரவமான செயலாகும். எனவே பொருத்தமானவர்களுக்கு மட்டுமே இத்தகைய கௌரவங்களை வழங்குமாறு நான் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தாழ்மையாய் கேட்டுக் கொள்கிறேன்.
08. இலக்கியத் துறையில் உங்களது பங்களிப்புகள் என்ன?
நான் ஒரு இலக்கிய ஆர்வலர். இலங்கையில் நடந்த உலக தமிழ் இலக்கிய மாநாடுகள் மட்டுமன்றி மலேசியாவிலும், தமிழ்நாடு காயல்பட்டணத்திலும் நடைபெற்ற உலக தமிழ் இலக்கிய மாநாடுகளில் பங்குபற்றி தமிழ் தேனை அள்ளிப் பருகியவள் நான். இதுவரை எந்த ஒரு புத்தகத்தையும் நான் எழுதி வெளியிடவில்லை. எனினும் இலக்கிய உலகில் வெளிவரும் அனைத்து புத்தக வெளியீட்டு வைபவங்களுக்கும் சென்று ஒரு புத்தகத்தை வாங்கி அந்த எழுத்தாளரை ஊக்கப்படுத்துவது என் வழக்கம். அவ்வாறே தாய்மொழி தமிழ் என்பதால் தமிழ் மொழியை நேசிப்பவள். எனவே கையில் கிடைக்கும் எல்லாப் புத்தகங்களையும் வாசிப்பேன்.
09. புத்தக வெளியீடுகளுக்கு செல்லும் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தானும் எழுத வேண்டும் என்ற ஆசை வரவில்லையா?
ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆசை நெடுநாளாக என் உள்ளத்தில் துளிர்விட்டது. எனவே எனது சுயசரிதையை ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். அந்தக் கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தற்சமயம் எனது வாழ்க்கையில், நான் சந்தித்த அனுபவங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் நான் எழுதும் இந்நூலை ரூபவாஹினி முன்னாள் பணிப்பாளரான பிரபல ஒளி - ஒலிபரப்பாளர் ரஷீத். எம். ஹபீல் தமிழ் மொழியாக்கம் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அல்லாஹ் நாடினால் விரைவில் எனது இந்நூல் இலக்கியவாதிகளின் கைகளில் தவழும்.
'சேவை செய்வதே ஆனந்தம்' என்ற பாடல் வரிகளுக்கேற்ப சமூக சேவையிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள இவர் நீண்ட காலம் வாழ்ந்து சமூகத்துக்கு மென்மேலும் சேவை செய்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு தேகாரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் எனவும், சமூக சேவைக்கான அதி உயர் அரச விருதும் இவருக்கு கிடைக்க வேண்டும் எனவும் நாமும் உளமார வாழ்த்துகிறோம்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
குறிப்பு - இந்த நேர்காணலை எடுக்க உதவி செய்த கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
No comments:
Post a Comment