பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, December 22, 2017

29. மாத்தளை ஜெஸீமா ஹமீட் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.0121

மாத்தளை ஜெஸீமா ஹமீட் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? 

நான் ஜெஸீமா ஹமீட். தந்தை ஹமீட். தாய் கதீஜா பீபி. மாத்தளை மாவட்டத்தின், அழகிய தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த சின்ன செல்வகந்தை எனும் சிற்றூரில் பிறந்த எனக்கு, 4 சகோதரரிகள், 3 சகோதரர்கள். க
டைக்குட்டி நான்.


02. உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

பிட்டகந்த, கந்தேனுவர தமிழ் வித்தியாலயங்களில் கல்வி பெற்று மாத்தளை ஆமினா மகளிர் பாடசாலையில் உயர்தரம் கற்றேன். பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2003 இல் வரலாற்று துறையில் சிறப்பு பட்டம் பெற்றேன். அதே பல்கலைக்கழகத்தில் 2003 - 2005 வரை துணை விரிவுரையாளராக இருந்த போதே வரலாற்று துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டேன். 2006 இல் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்தேன். தற்போது மாஃகுரிவெல ஹமீதியா கல்லூரியில் வரலாற்று ஆசிரியையாக கடமையாற்றுகின்றேன்.


03. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் துணை விரிவுரையாளராகக் கடமையாற்றிய போதும், தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றும் போதும் என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?

ஆம் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் எதையும் ஆழமாக கற்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. காரணம் அது தேடல் கல்வி. ஆனால் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அத்தனை விடயங்களையும் கற்பிக்க வேண்டும். காரணம் உயர்தர பரீட்சை ஒவ்வொரு மாணவனதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய தடைதாண்டல். எனவேதான் ஆசிரியராகவிருந்து பலரது பல்கலைக்கழக வாய்ப்புக்கு வழிகாட்டுவதை பெரும்பேறாகக் கருதுகிறேன்.


04. இலக்கியத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்த சூழ்நிலைகள் எவை?

சிறுவயதிலேயே நான் துடுதுடுவென பேசுவதை என் தந்தை வியந்து பாராட்டுவார். ஊக்குவிப்பார். பின் பாடசாலை காலங்களில் பெற்ற பயிற்சியும் எனது வாசிப்பு ஈடுபாடும் எனக்குள் ஏதோ இருப்பதை உணர்த்தின. அத்தோடு பல்கலைக்கழக சஞ்சிகை வெளியீடுகளும், சங்கப்பலகையும் என் எழுத்துக்கும் சிந்தனைக்கும் களமமைத்தன. சமூகத்தின் அவலங்களையும் பெண் படும் துயரங்களையும் இலக்கிய பங்களிப்பினூடாக தட்டிக் கேட்க முடியுமென்ற என் துணிச்சலுமே என் இலக்கிய பங்களிப்புக்கான சூழலை வடிவமைத்தது.


05. கவிதைகள் எழுதுவதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

என் ஊரின் அழகும் ஆச்சரியமும் எனை ரசிக்கத் தூண்டியமை. கந்தேனுவரை தமிழ் வித்தியாலய தமிழ்ப்பாட ஆசிரியை திருமதி பாக்கியலட்சுமி அவர்களின் தூண்டல். ஆமினா மகளிர் பாடசாலையின் என் உயர்தர வகுப்பு ஆசிரியர் திருமதி ஆயிஸா நோனா அவர்கள் எனை கவிதைப் போட்டிகளில் பங்குபெறச் செய்தமை. என்னுயிர்த் தோழி ரீஸா தந்த கவிதைப் பயிற்சி. உயர்தர வகுப்புத் தோழிகளின் ஒத்துழைப்பு என்பனவே என் கவிதை வாழ்க்கையை தீர்மானித்தன.

06. நீங்கள் வெளியிட்ட நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை 5 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை:-

01. நிழலின் காலடியோசை (கவிதைத் தொகுப்பு)
02. இலங்கையின் ஆட்சியாளர்கள் (வரலாறு)
03. வரலாற்று தேசப்படங்களும் பயிற்சிகளும் (தரம் 06 - 13 வரை)
04. இலங்கை வரலாறு (உயர்தர வகுப்பு பரீட்சை வழிகாட்டி நூல்)
05. ஐரோப்பிய வரலாறு (உயர்தர வகுப்பு பரீட்சை வழிகாட்டி நூல்)


07. அண்மையில் நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்று கூறுங்கள்?

இரக்கமற்ற சகலருக்கும்!

இரக்கமென்பது
வரட்டு கௌரவமில்லை
அதுவொரு வாஞ்சை..
நேசிப்பவர்களுக்கு
இன்முகம் காட்டும் நேர்மை..
வாசிப்பவர்களுக்கும் கூட
வசந்தம் தூவும் புத்துணர்வு..

இந்த யுத்த பூமியை
சாந்தி இல்லமாய்
மாற்ற  விழையும்
ஒரு சாத்வீக ஆயுதம்..

அதைக்கூட இம்சையாய்ப் பார்த்து
இழித்துரைத்துப் பேச
ஏனிந்த சனக்கூட்டம்
இப்படி முண்டியடிக்கிறது?

அன்புதான்
அமைதி தேசத்துக்கான
முதல் விதை..
அதிலும் நாம் விசம் கலந்தால்
எப்படித்தான் விடியும்  அகிலம்?

கருணையற்ற உலகமதில்
பேய்களும் பிசாசுகளும்
இராஜாங்கம் நடத்த
மனிதம் என்பது மட்டும்
ஆவியாகக் கூட
அலைய இடமின்றி
அலைக்கழித்துத் திணரும்
அற்புத உலகொன்றிலா
நாம் வாழப் போகிறோம்?


08. நாடகத் துறையில் உங்களது ஈடுபாடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்? இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் எத்தனை அவை பற்றியும் குறிப்பிடுங்கள்?

சிறுவயதிலிருந்தே எமதூரில் நடைபெறும் நாடக கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். கந்தேனுவரை பாடசாலையில் படிக்கும்போது எனது தமிழ்ப்பாட ஆசிரியை தயாரித்த ஷஷகடவுளைக் காட்டிய சிறும|| எனும் நாடகத்தில் ஒரு இளவரசராக தோன்றி அனைவரதும் பாராட்டையும் பெற்றேன். அப்போதிருந்தே துளிர்த்த நாடக ஈடுபாடு ஆசிரியையான பின் தமிழ்த்தின, மீலாத் போட்டிகளுக்கான நாடகங்களை எழுதத் தொடங்கினேன்.

01. கவ்வாத்து மலைக் கனவுகள்
02. கல்யாண ஊர்வலம்
03. ஸ்கைப் கல்யாணம்

என நானெழுதிய மூன்று நாடகங்களுமே அகில இலங்கை ரீதியாக முதலிடத்தை பெற்றுக்கொண்டன.

எனது நாடகத்துறை வெற்றியில் மறைந்த அரபு எழுத்தணிக் கலைஞர், உக்குவளை இஸ்லாமிய எழுத்தாளர் அமைப்பு தலைவர் ரைத்தலாவெல அஸீஸ் அவர்களுக்கும் பங்குண்டு. காரணம் அவரால் தயாரிக்கப்பட்டு கந்துரட்ட வானொலி பதிவு செய்த ஷஷகனம் கோட்டார் அவர்களே|| எனும் நாடகத்தில் ஒரு பெண் வழக்கறிஞராக குரல் கொடுக்கும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி, நாடக தயாரிப்பு பற்றிய அறிவுரைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம் வானொலியின் சஞ்சாரம் நிகழ்ச்சி எனது ஷஷதிருமண ஊர்வலம்|| நாடக பிரதியை இரு முறை ஒளிபரப்பியது. திக்வல்லை ஸப்வான் அவர்கள் அடிக்கடி நாடக பிரதியை அனுப்புமாறு கேட்டபோதும் எனது வேலைப்பளு காரணமாக முடியாமல் போனது. இன்ஷா அல்லாஹ் எழுதுவேன்.

09. தொழில் மற்றும் வீட்டுப் பொறுப்புக்களுக்கு மத்தியில் இலக்கியப் பங்களிப்புக்கள் செய்வது சிரமம் என்று நினைக்கவில்லையா?

வீட்டு பொறுப்புக்களுக்கு மத்தியில் இலக்கிய பங்களிப்பு செய்வது சிரமமான காரியம் என்ற காரணத்தினால்தான் இன்று அதிகமான முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் களத்திலிருந்து காணாமல் போயிருக்கிறார்கள். எனவே குடும்பமும், தொழிலும் எந்தளவுக்கு முக்கியமானதோ அதுபோலவே சமூக பொறுப்பும் முக்கியம் எனக் கருதி அதற்கேற்றாற் போல எனது செயற்பாடுகளை ஒழுங்கு படுத்துகிறேன். அவற்றை இலகுபடுத்திக் கொள்வதில் எனது கணவர் (கலீல்) எப்போதும் முன்னிற்கிறார். அதனால் என் இலக்கிய பயணம் தொடர்ந்து செல்லுமென்றே எதிர்பார்க்கின்றேன்.

10. கவிதை, நாடகம் தவிர வேறு எந்தத் துறைகளில் ஈடுபாடு உள்ளது?

கவிதை, நாடகம் என்பனவற்றோடு பேச்சு, ஆய்வு, மாணவர்களுக்கான நூல் வெளியீடு, சமூகப்பணி, முஸ்லிம் பெண்கள் விழிப்புணர்வு செயற்பாடுகள் என என் துறைகள் விரிவடைந்துகொண்டே செல்கிறது.

11. உங்கள் படைப்புக்களுக்கான ஊடகங்களின் உதவி எந்தளவில் உள்ளது?

பாடசாலை காலத்திலிருந்தே எழுதி வருகிறேன். அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு எதை அனுப்பினாலும் பிரசுரமாவதில்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஞானம் சஞ்சிகை என் கவிதைகளுக்கு களம் தந்தது. எனினும் இன்று சமூக வலைதளங்களில் நாங்களாகவே முன் வந்து எங்களது திறமைகளை வெளிக்காட்டத் தொடங்கிய பின்னரே ஏனைய அச்சூடகங்களும் எம்மை வரவேற்கத் தொடங்கியிருப்பதாக கருதுகிறேன்.


12. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

எனக்கு பிடித்த இந்திய எழுத்தாளர்களாக கல்கி, மு.வரதராஜன், ஜெயகாந்தன், அகிலன், பார்த்தசாரதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இலங்கையில் மாத்தளை மலரன்பன், அல் அஸுமத், லறீனா அப்துல் ஹக், தி.ஞானசேகரன், அந்தனி ஜீவா ஆகியோர் என்பேன். என்னைப் பாதித்த கவிஞர்கள் மு.மேத்தா, பஹீமா ஜஹான் போன்றோராவார்.

13.  இதுவரை கிடைத்துள்ள பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அதிகமான சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்றுள்ளேன். தேசிய ரீதியாக 45 ஆவது முஸ்லிம் கல்வி மகாநாடு நடத்திய திறந்த ஆய்வு கட்டுரை போட்டியில் முதலிடம், 2002 இல் உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மகாநாடு நடத்திய ஆய்வு கட்டுரை போட்டியில் மூன்றாமிடம் பெற்றேன். சாகித்திய கலையிலக்கிய போட்டிகளில் கவிதை, பாடலாக்கம், கட்டுரைகளுக்கு பல முதலிடங்களைப் பெற்றுள்ளேன். 2011 இல் மலேசியாவில் இடம் பெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. 2014 மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான விபுலானந்தர் மன்றம் ஷஷமலையக தமிழருவி' விருது வழங்கி கௌரவித்தது. 2016 டிசம்பரில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மகாநாட்டிலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். புகழனைத்தும் இறைவனுக்கே.

14. எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலை மாணவர்களுக்கான மூன்று நூல்களை அச்சில் வைத்துள்ளேன். சில சிறுகதைகள் எழுதும் ஆர்வத்திலுள்ளேன். ஒரு கவிதை நூல் வெளியீடு செய்யும் எண்ணமும், ஒரு குறுந்திரைப்பட முயற்சியில் இறங்கும் எண்ணமும் உள்ளது.


15. புதிதாக எழுதத்துவங்கும் எழுத்தாளர்களுக்கு என்ன கூறுவீர்கள்?

ஒரு புத்தகம் நூறு மனிதர்களுக்கு சமம் என்பார்கள். யார் எழுத வந்தாலும் வாசிப்பில் ஈடுபாடு இல்லையெனில் அவ்வெழுத்துக்கள் எதுவித சமூக அங்கீகாரத்தையும் பெறப்போவதில்லை. எனவே இந்த சமுதாயத்தை வாசிப்புடைய சமுதாயமாக மாற்ற வேண்டுமெனில் வாசிப்பு நிறைந்த எழுத்தாளர்கள் உருவாதல் அவசியம். எழுதுதல் என்பது ஓர் இறைப்பணி அதனால்தான் ஒரு பேனா முனை கூரிய வாளைவிட வலிமையானது எனப்படுகிறது. எனவே எழுதத் தொடங்குபவர்கள் எந்த சூழ்நிலை வந்தாலும் எழுதுவதை கைவிடமாட்டேன் என்ற துணிச்சலோடு வாருங்கள் வெற்றி நிச்சயம்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment