பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் 13 க்கான ஆக்கங்களைக் கோரல்

பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் 13 க்கான ஆக்கங்களைக் கோரல்

தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Poongavanam Literary Circle முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இச்சஞ்சிகையின் 13 ஆவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும். இச் சஞ்சிகைக்கான கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். 

குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும்.

இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது ஆண்டுச்சந்தா 600 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்து கொள்ளவும்.

இவை எமது Account Number Details ஆகும்.

Commercial Bank,
Mount Lavinia Branch,
M.F. Rimza,
Account Number :- 8930020287.

என்ற இலக்கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rimza) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.

ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

“Poongavanam”
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia.
Mobile:- 077 5009 222

E-mail:- poongavanam100.com
Website:- www.poongavanam100.blogspot.com

12. திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.11.10

திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்கு கூறுங்கள்?

நான் களுத்துரை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையை பிறப்பிடமாகவும், மாவனல்லை கிரிங்கதெனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டுள்ளேன். துந்துவையைச் சேர்ந்த காலம் சென்ற அப்துல் சமி, காலம் சென்ற தர்காநகர் உம்மு தமீமா ஆகியோரின் மகளாக பிறந்த எனக்கு ஐந்து உடன் பிறப்புக்கள். முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அன்வர், முஹம்மது மஃரூப், நூருல் ஐன் (ஆசிரியை) சித்தி நிலோபா ஆகியோரே அவர்களாவார்கள். ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரை தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் (தற்போது தேசிய கல்லூரி) கற்றேன். பின்னர் அதே பாடசாலையில் சில வருடங்கள் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளேன்.



இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

1977 ஆம் ஆண்டு எனது பதினேழாவது வயதில் தினகரன் பத்திரிகையூடாக எனது எழுத்துப் பயணம் ஆரம்பமானது. அதே காலகட்டத்தில் ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய சஞ்சிகைகளிலும் என் ஆக்கங்கள் வெளிவந்தன. அன்று தொடக்கம் இன்று வரை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

1984 தொடக்கம் 1996 வரையிலான பத்தாண்டு காலப்பகுதியில்  இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வந்த நெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கான பிரதி தயாரிப்பாளராக இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதி வந்துள்ளேன். இந்நிகழ்ச்சி மூலம் எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் எனது அபிமான நேயர்களாக இருந்தமை என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்திய விடயமாகும்.


இலங்கையின் பெண் எழுத்தளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி நீங்கள் யாது கூறுவீர்கள்?

இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வரவும், வளர்ச்சியும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாவல் துறையிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.


இலக்கியப் பணி சார்ந்த உங்களது கொள்கை என்ன?

எனது இலக்கியப்பணி இஸ்லாமிய வரையரைகளுக்கு உட்பட்டு அதன் வரம்புகளை மீறாது சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய செய்திகளை, விழிப்புணர்வை எனது எழுத்துக்களினூடாக தெரிவிப்பதாகும்.



இலக்கியப் பணியினூடாக எதை சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

எனது இலக்கியப் பணிகளினூடாக எதைச் சாதிக்க விரும்புகிறேன் என்பதைவிட எதைச் சாதித்துள்ளேன் என்பது மிகவும் பொருந்தும். ஏனெனில் எனது எழுத்தினூடாக பல சந்தர்ப்பங்களில் பல சாதனைகளை அடையக் கண்டுள்ளேன். எனது பல கதைகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிவேன். இன்னும் எனது எழுத்தினூடாக சமூகத்தில் விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என விரும்புகின்றேன். அதிகமாக நாவல்கள் எழுத வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.


நாவல், சிறுகதை துறைகளில் சிறந்த பங்களிப்புக்களைச் செய்து வருகின்றீர்கள். அவற்றிற்காக நீங்கள் பெற்ற பரிசுகள், விருதுகளைப் பட்டியற்படுத்திக் கூறுங்கள்?

எழுத்து வன்மைக்காக மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சுமார் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் பரிசுகளும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளேன். 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்தளை மாவட்ட மத்திய குழு தேசிய ரீதியில் தமிழ், முஸ்லிம் படைப்பிலக்கிய வாதிகளுக்கிடையில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்களினால் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இதைத்தவிர 2006  ஆம் ஆண்டு அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் உண்டியல் என்ற எனது சிறுகதை தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு ஆக்கம்; எனும் கருத்திட்டத்தில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், கவிதைப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டேன்.

மேலும் 2007 ஆம் ஆண்டிற்கான சப்ரகமுவ மாகாண சாகித்திய கலை நிர்மாணப் போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி இரண்டாம் இடத்தையும், 2008 இல் இதே போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 2011 ஆம் ஆண்டிற்கான இதே போட்டியில் மற்றும் சிறுகதைகள் அடங்கிய பிரதி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 2012 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மாகாண அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தையும், கவிதை, பாடல் இயற்றல், சிறுவர் கதை ஆகிய போட்டிகளில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டேன்.

இதைத் தவிர 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் எனது ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்து கொண்ட சகோதரி ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களின் இது ஒரு ராட்சஷியின் கதை என்ற நாவலுக்கும் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. இதே அமைப்புக்கள் 2009 ஆம் ஆண்டு சர்வதேசிய ரீதியில் நடத்திய சிறுகதை, கவிதை போட்டிகளிலும் எனது படைப்புக்களுக்குப் பரிசு கிடைத்தது. மேலும் 2009 ஆண்டு வெளிவந்த படைப்பிலக்கியங்களுக்கான அரச சாகித்திய தெரிவில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று நாவல்களில் ஒன்றான ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

அதே போல் புதிய சிறகுகள் என்ற அமைப்பின் நாவல் தெரிவிலும் விருதுக்காக இதே நாவல் சிபாரிசு செய்யப்பட்டது. இன்னும் 2011 ஆம் ஆண்டு இறுதியில் பாணந்துறையில் இயங்கும் ஜனசங்கதய என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு நடாத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசையும், அதே ஆண்டு மலையக தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளேன். 2011 ஆம் ஆண்டு அல்ஹஸனாத் இஸ்லாமிய சஞ்சிகை நடத்திய நாடளாவிய சிறுகதைப் போட்டியிலும் எனக்கு பரிசு கிடைத்துள்ளது.

இவை தவிர களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, பம்பலப்பிட்டி இஸ்லாமிய செயலகம், தேசிய இளைஞர் சேவை மன்றம், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம், கல்வி அமைச்சு, அரசாங்க கலாச்சார திணைக்களம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளேன். 2002 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையும், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் இணைந்து நடத்திய குறிஞ்சித் தென்னவன் நினைவு இலக்கிய விழாவில் அன்றைய மத்திய மாகாண கல்வி அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டேன். 2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மகாநாட்டில் இஸ்லாமிய இலக்கிய பங்களிப்புக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். அகில இன நல்லுறவு ஒன்றியம் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான பாராட்டு விழாவில் சாமஸ்ரீ கலாஜோதி பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.


இப்படி பரிசுகளும், பாராட்டுக்களும் கிடைத்த நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தன?

உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் எனது படைப்புக்களுக்கு பரிசு கிடைத்தபோது என் உணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. இந்தப் பரிசுகளும், பாராட்டுக்களும் எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்றே நான் கருதுகின்றேன்.


இதுவரை நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988), திசை மாறிய தீர்மானங்கள் (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், ஊற்றை மறந்த நதிகள் (2009) என்ற சமூக நாவலையும் வெளியிட்டுள்ளேன். இந்த அத்தனை வெளியீடுகளும் எனக்கு வெற்றியையே தந்தன. திசை மாறிய தீர்மானங்கள் என்ற சிறுகதைத் தொகுதி மத்திய மாகாண கல்வி அமைச்சினால் சிறந்த நூலுக்காக விருதையும் பொற்கிழியையும் பெற்றுத்தந்ததோடு மேல் மாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கவென முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், இன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நூறு புத்தகங்களும், மிலேனியம் கல்வி ஸ்தாபன தவைலர் எஸ்.எச் மௌலானா அவர்களினால் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் கொள்வனவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


இன்றைய புதிய எழுத்தாளர்களின் இலக்கியப் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதிகமான எழுத்தாளர்கள் காதல் என்ற கருப் பொருளையே பெரும்பாலும் கையாள்கிறார்கள். சமூகத்தில் எம்மைச் சுற்றி எழுதுவதற்கான நிகழ்வுகள் நிறையவே இருந்தும் காதலை மட்டும் சுற்றிச் சுற்றி வருவது அவ்வளவு ஆரோக்கிமானதல்ல.


உங்கள் கணவர் ஏ.சீ.எம். இக்பால் மௌலவி அவர்கள் தங்களின் இலக்கியப் பணிக்கு எவ்வகையில் உதவி செய்கிறார் என்பதை குறிப்பிடுவீர்களா?

திருமணத்தின் பின் ஒரு பெண் எழுத்துத் துறையில் நீடித்து நிற்பதென்பது கேள்விக்குரிய விடயம்தான். பல பெண் எழுத்தாளர்கள் திருமண வாழ்வில் நுழைந்த பின் எழுதுவதையே நிறுத்திவிடுவதுண்டு. ஆனால் என் நிலை இதற்கு மாறாக அமைந்துவிட்டது. என்னை மென்மேலும் எழுதத் தூண்டுவதும், உற்சாகப்படுத்துவதும், என் வெற்றிக்கு துணை நின்று உழைப்பதும் என் கணவர்தான். எனது எழுத்து முயற்சிகளில் அவரது பங்களிப்புப் பற்றி கூறியாக வேண்டும். எனக்காகவே எக்மி பதிப்பகம் எனும் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல நூல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.


உங்கள் மகளான இன்ஷிரா இக்பால் அவர்கள் இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டி வருவது பற்றி?

எனது மகள் இன்ஷிரா இக்பால் சிறு வயதிலிருந்தே இலக்கியத் துறையில் மிகவும் ஆர்வமுடையவள். பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ளார். பூ முகத்தில் புன்னகை என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். இதைத்தவிர அண்மையில் ஒரு சமூக நாவலையும் எழுதியுள்ளார். இவரின் இலக்கியத்துறை ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தந்துள்ளது. இவரைப் போன்றே எனது மற்றொரு மகளான இன்ஷிபா இக்பாலும் எழுத்தார்வம் உள்ளவர். பல கதைகளையும் எழுதியுள்ளார். எனது மகன் அஷ்பாக் அஹமத் சிறந்த ஓவியராவார். அற்புதமாக ஓவியங்களை வரையும் ஆற்றல் உள்ளவர்.


இலக்கியப் படைப்புக்களுக்கு கிடைகின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து?

இலக்கியப் படைப்புக்களுக்கு விமர்சனங்கள் நிச்சயம் தேவை. அந்த விமர்சனங்கள் தான் ஒரு படைப்பாளியை சிறந்த படைப்பாளியாக உருவாக்க உதவும். விமர்சனங்கள் என்ற பெயரில் ஒரு படைப்பாளியை, படைப்பை மட்டம் தட்டி எழுதக்கூடாது.

விருதுகளைப்பற்றி சொல்வதானால், விருதுகள் என்பது ஒரு படைப்பாளிக்கு கிடைக்கின்ற மிகப்பெரிய அங்கீகாரமாகும். இருந்தாலும் இன்று (சில இடங்களில்) வழங்கப்படுகின்ற விருதுகளும், பட்டங்களும் தகுதியானவர்களுக்கு, பொறுத்தமானவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரியவில்லை. ஆள் பார்த்து, முகம் பார்த்து பணத்தைப் பெற்றுக் கொண்டும், பொன்னாடைகளை உரியவர்களிடமிருந்து வாங்கியும் வழங்கப்படுவது ஒரு கேலிக்கூத்தாகும்.


நீங்கள் இனங்களுக்கிடையில் உறவைப் பேணும் வகையில் பல   கதைகளையும், வலது குறைந்தோர் சம்பந்தமான பல கதைகளையும் எழுதியிருப்பதாக அறிகிறோம். அது பற்றிக் கூறுங்கள்?

எமது நாட்டைப் பொறுத்தவரை பல்லின மக்களும் வாழும் நாடு இது. இனங்களுக்கிடையே நல்லுறவும், புரிந்துணர்வும் இருந்தால்தான் நாடும், மக்களும் நன்றாக இருக்க முடியும். எனவே தான் இனங்களை இணைக்கின்ற சிறுகதைகளையும் எழுதி வருகிறேன். அவற்றிற்காக பரிசுகளும் பெற்றுள்ளேன்.

மேலும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் விழிப்புலன் இழந்த மாணவர்களுக்கு ஆசிரியப்பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த நிலையத்தின் ஸ்தாபகரும், அர்ப்பணிப்போடு பணி புரியும் ஆயுட்காலத் தலைவருமான சகோதரர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹனிபா அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். அந்த மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய என்னால் அவர்களின் உணர்வுகள், மனக்காயங்கள், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் என்பவற்றை இலகுவில் புரிந்து கொள்ள முடிந்தது. அவற்றை வைத்து பல சிறுகதைகளையும் எழுதியுள்ளேன்.


இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவங்கள் இருப்பின் குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவங்கள் சில இருந்த போதும் ஓரிரண்டைக் குறிப்பிடலாம். 1983 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவை மன்றம் களுத்துறை மாவட்டத்தில் நடத்திய ஹஜ் விழா போட்டிகள் நான்கில் (இஸ்லாமிய கீதம், கவிதை, அறபு எழுத்தணி, கட்டுரை) நானும் கலந்து கொண்டேன். அந்த நான்கு போட்டிகளிலுமே எனக்கு முதலிடம் கிடைத்தது. மேடையில் பரிசு வாங்கிவிட்டு கீழே இறங்க முன் அடுத்த பரிசுக்காக அழைக்கப்பட்டேன். இப்படி நான்கு தடவைகளும் அழைக்கப்பட்ட போது அந்தப் பரிசுகளை பார்வையாளரின் கரகோசத்துக்கு மத்தியில் வாங்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தேன். இது மறக்க முடியாத அனுபவம். 2003 ஆம் ஆண்டில் திசை மாறிய தீர்மானங்கள் வெளியீட்டு விழாவிற்கு தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். என் அழைப்பை மதித்து என்னை கௌரவப்படுத்திய அன்றைய நிகழ்வை என்றும் மறக்க மடியாது.

ஏற்கனகவே நான் கூறிய முஸ்லிம் காங்கிரஸ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசாக தங்கப் பதக்கம் கிடைத்தது. இரண்டரைப் பவுண் எடையுள்ள தங்கப் பதக்கத்தை அன்றைய நிகழ்வில் தலைவர் அஷ்ரப் அவர்களின் கரங்களால் பெற்றுக் கொண்டேன். இந்த பரிசை, கௌரவத்தை என்றும் மறக்க முடியாது. இவை தவிர நான் பல போட்டிகளில் கலந்து பரிசு பெற்ற போதும் 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தென் இந்தியாவில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட சர்வதேச நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசு கிடைத்தமை மறக்க முடியாத அனுபவமாகும்.


பூங்காவனம் இதழ் பற்றிய உங்கள் கருத்து என்ன? 

பூங்காவனத்தின் பன்னிரண்டாவது இதழ் இது. தொடர்ந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான். இதழ் ஆசிரியருக்கும், ஆசிரிய குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். பூங்காவனத்தில் பூத்திருக்கின்ற ஆக்கங்கள் அனைத்தும் தரம் வாய்ந்தவைகளாக உள்ளன. இதற்கு முன்னும் பெண்களால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள், இலக்கிய இதழ்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இருப்பினும் அவற்றோடு ஒப்பிடும் போது பூங்காவனம் தரமானதொரு இலக்கிய இதழாக இருக்கிறது!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

பூங்காவனம் 11 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

பூங்காவனம் 11 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். 

இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.  மல்லிகை, ஞானம் போன்ற முன்னணி சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் குடை நடை கடை, மண்புழு மாமா வேலை செய்கிறார், அழகிய ஆட்டம், பச்சை உலகம் என நான்கு சிறுவர் கதை நூல்களையும்,  காலமாம் வனம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். குடை நடை கடை என்ற சிறுவர் இலக்கிய நூல் தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான பாலியல் நடவடிக்கைகளால் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள்  நோய்வாய்ப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். எனவே ஒழுக்க சீர்கேடின்றி மனதாலும் உடலாலும் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 01 திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு தினத்தை சுட்டிக்காட்டி வாசகர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
த. எலிசபெத், நிந்தவூர் ஷிப்லி, ஜுமானா ஜுனைட், ரொஷான் ஏ. ஜிப்ரி, பதுளை பாஹிரா, வெலிப்பண்ணை அத்தாஸ், பி.ரி. அஸீஸ், வி. விஜயகாந்த், மன்னார் அமுதன், சீனா உதயகுமார், ஏறாவூர் தாஹிர் ஆகியோரின் கவிதைகளும், எஸ்.ஆர். பாலசந்திரன், றாபி எஸ். மப்றாஸ், எம்.பி.எம். நிஸ்வான், சூசை எட்வேட் ஆகியோரின் சிறுகதைகளும் மருதூர் ஜமால்தீனின் உருவகக் கதையொன்றும் இடம்பெற்றுள்ளன. வழமை போல கவிஞர் ஏ. இக்பால் தனது இலக்கிய அனுபவங்களில் ஒரு பகுதியை இந்த இதழிலும் தந்திருக்கிறார். அதேவேளை நுணாவிலூர் கா. விசயரத்தினம் சிறந்த இலக்கிய கட்டுரை ஒன்றினைத் தந்திருக்கிறார். எம்.எஸ்.எம். ஸப்ரி, ரிம்ஸா முஹம்மத் ஆகியோர் நூல் மதிப்புரைகளை செய்திருக்கிறார்கள். 
மேலும் நூலகப் பூங்காவில் வௌ;வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினாறு நூல்களைப் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்கள் இந்த இதழிலும் இடம்பெற்றிருக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் 48 பக்கங்களில் குறுகிய உள்ளடக்கத்தில் வாசகர்களுக்குத் தேவையான சகல அம்சங்ளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது பூங்காவனம் 11 ஆவது இதழ். 
சஞ்சிகை - பூங்காவனம் இதழ் 11
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poongavanam100@gmail.com
விலை - 80 ரூபாய்


http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1244:-11-&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை


பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை

எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை


மூத்த பெண் எழுத்தாளர்களில் முகப்புப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம்இ இம்முறையும் வழமை போல் தனது பத்தாவது இதழில் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி ஸகியா சித்தீக் பரீத் அவர்களின் புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்னர் வெளியிட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் பூங்காவனப் புகைப்படங்களை உள் அட்டையில் பதித்து இருக்கிறது.

இது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் காலமானபடியால் புகுமுக மாணவர்களுக்கு அறிவுரையாகப் பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர். பகிடிவதை என்றும், ஸ்ட்ரைக் என்றும் வீணான வெறும் காரியங்களில் ஈடுபட்டு தமது கல்விக் காலத்தை வீணே கழிக்கும் மாணவர்களுக்கு அவர்களது அறிவுரைகள் மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

மூன்று சிறுகதைகளையும், ஒன்பது அருமையான கவிதைகளையும், இரண்டு கட்டுரைகளையும், நேர்காணல், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற சகல அம்சங்களையும் 10 ஆவது இதழ் தந்திருக்கிறது. இதில் முகப்புப்பட நாயகி திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இதழாசிரியர்கள் நேர்கண்டிருக்கிறார்கள். பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் மாவனல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஓர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார். கொழும்பு ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள், விடியலின் விழுதுகள், இதயத்தின் ஓசைகள், முதுசம் என்ற தலைப்புக்களில் 04 நூல்களை இவர் இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூல் சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, ஓர் ஆவண நூலாகவும் விளங்குகிறது.

தமது இலக்கியப் பிரவேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தைக் கைக்கொண்டதனால் தனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகவும், தந்தை முதற்கொண்டு பல ஆசான்களுக்கும் அவருக்கு எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடியலின் விழுதுகள் 16 சிறுகதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியாகும். இதயத்தின் ஓசைகள் ஒரு கவிதைத் தொகுப்பாகும். முதுசம் 2500 க்கும் மேற்பட்ட பொன்மொழிகளை உள்ளடக்கிய நூலாகவும் காணப்படுகிறது. பொது அறிவுக் களஞ்சியம் என்ற நூல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு பரீட்சை வழிகாட்டி நூலாகத் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே வேளை, நூல் வெளியீடு என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம் என்பதனால் தனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட்டதாகக் குறிப்பிடும் அவர், படைப்புகளுக்கான விமர்சனங்கள் அவசியம் தேவைப்படும் ஒன்று. அவை குறைகளை மாத்திரம் சுட்டிக் காட்டாமல் நிறைகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். தனது வானொலித் தொடர்பு 1985 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டப் பின் படிப்பை மேற்கொள்ளும் போது விரிவுரையாளர் திருமதி பூமணி குலசிங்கம் அவர்களின் தொடர்பு கிடைத்ததனால் ஏற்பட்டதாகக் கூறும் அவர், வானொலிக் கலந்துரையாடல்கள் உட்பட நிகழ்ச்சிப் பிரதிகள் மூலம் பங்களிப்புச் செய்ய முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயன்வத்தை நூராணியா மகாவித்தியாலயம், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றிலும் ஆசிரியையாகக் கடமையாற்றி 28 வருடங்கள் ஆசிரியப் பணிபுரிந்துள்ளார். இலக்கியத் தாரகை, கலாபூஷணம், சாமஸ்ரீ தேசமான்ய பட்டமும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளிலும் பங்குபற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ள ஒரு பெண் படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தம் சுகம் ஒன்றையே கருதி தவறான வழியை நாடும் ஒவ்வொரு காதலரும், தமக்குப் பிறக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாகி சமூக அந்தஸ்துடன் வாழ நேரும் போது தப்புக்கள் என்றோ ஒரு நாள் வெளியாகி தமது பிள்ளையை ஈட்டியால் குத்தும் என்பதை உணராது தவறுக்கு மேல் தவறு செய்கின்றனர். களவை நாடுமுன் அன்றே அந்தத் தவற்றைத் திருத்திக் கொண்டிருந்தால் பர்சான் போன்ற இபாதத்துடன் (மார்க்கப் பற்றுடன்) வாழும் நல்லவர்கள் வாழ்க்கை நாசமாகிவிடாது என்பதைப் புலப்படுத்துகிறது மருதமுனை றாபி எஸ். மப்ராஸ் எழுதிய என்றோ செய்த விணை என்ற சிறுகதை.

அதே போன்று சிறுபிள்ளைகள் மனதில் விதைக்கப்படுகின்ற எண்ணங்கள் உண்மையானவைகளாகவும், தெளிவானவைகளாகவும் இருக்க வேண்டும். சமாளிப்புக்களாக அவை இருக்கும் பட்சத்தில் அந்தப் பிள்ளையின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்றதொரு கருத்தினைத் தாட்சாயினியின் தொடராத சொந்தங்கள் என்ற சிறுகதை தெளிவுபடுத்துகிறது.

காதல் என்பது வயதின் தேவைதான். என்றாலும் காதலிக்கும் போது அளிக்கப்படும் வாக்குறுதிகள் பாதுகாக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.  பொய் வாக்குறுதிகளை அளிப்பதனால் ஆணோ, பெண்ணோ இருவருமோ பாதிக்கப்பட நேருகிறது. முடிவில் ஏமாற்றம் ஒன்றே மிஞ்சும். அத்தகையதொரு காதல் ஜோடியைச் சிதையாத இதயம் தந்திருக்கிறது. கதையில் வரும் காதலி வீணா தன் மாஜிக் காதலன் பாபுவின் நிலை கண்டு இறுதி நேரத்திலும்இ அவனுக்கு உதவ முன்வந்தது அவளது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் அவளைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் போனது பாபுவின் துரதிஷ்டம்தான் என்பதைத் தனது கதையினூடே பொத்துவில் மனாப் எடுத்துக் காட்டுகிறார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இதிலே பலர் இரவலாகத் தன்னிடமிருந்து எடுத்துச் சென்ற பெருமதி வாய்ந்த புத்தகங்கள் திரும்பி வராததைப் பற்றி ஆதங்கித்து எழுதியிருக்கிறார். அவரது குருகுல சீடர்களில் ஒருவரான பதுளை பாஹிரா அழகான ஒரு கவிதையையும் தந்திருக்கிறார்.

பேரும் புகழும் தேடி அலையும் மனிதனைப் பற்றி லண்டனில் இருந்து நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் திருக்குறள்இ அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் போன்ற சங்க இலக்கிய நூல்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி சிறந்ததொரு கட்டுரையைத் தந்துள்ளார்.

நீலாவணை ம. புவிலக்ஷி, புத்தளம் ஜுமானா ஜுனைட், யோ. புரட்சி, மருதூர் ஜமால்தீன், பூனாகலை நித்தியஜோதி, கலைமகன் பைரூஸ், கிண்ணியா பி.ரி. அஸீஸ், நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரது கவிதைகளும் இதழில் இடம்பிடித்துள்ளன.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலுக்கான மதிப்பீட்டை வெலிகம ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். இன்னும் இன்னும் அந்தக் குரலைக் கேட்கக் கூடாதா? என்ற ஆர்வத்தை அது தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு இலக்கியவாதியும், வாசகனும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வாசகர் கருத்துக்கள், வரப்பெற்ற நூல்களின் விபரங்கள் உட்பட பூங்காவனம் துணையாசிரியர் செல்வி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூல்வெளியீட்டுப் புகைப்படங்கள் பின் அட்டையின் உட்பக்கத்தை அலங்கரித்து பூங்காவனத்தின் பத்தாவது இதழை மணம் கமழச் செய்கிறது!!!

இதழின் பெயர்- பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை
இதழாசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் பதிப்பகம்
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி – 0775009222
விலை - 80 ரூபாய்

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை 08


பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்

- எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை.



பூங்காவனத்தின் 08ஆவது இதழ் பூத்து வாசகர்கள் கைகளில் தவழும் இவ்வேளையில் அதனைப் பற்றிய சில கருத்துக்களை இங்கு பதியலாம் என நினைக்கிறேன். தரமான பெண் படைப்பாளிகள் வரிசையில் இம்முறை இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவராகத் திகழும் திருமதி நூருல் ஐன் பூங்காவனத்தின் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறார். நீண்டதொரு பேட்டியினை திருமதி நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன் அவர்கன் வழங்கியிருக்கிறார். வழமைபோல் இளம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும், இளம் பெண் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் நேர்காணல் செய்திருக்கிறார்கள். இலங்கையிலே ஊடகத்துறை முஸ்லிம் பெண் ஊடக, மற்றும் தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகத் திகழும் நூருல் ஐன் அவர்கள் நீண்ட எழுத்தனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். மகளிர் தினச் செய்தியாகவும், புத்தாண்டுச் செய்தியாகவும் ஆசிரியர் குழு தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. நாகரிகம்தான் பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணிய சிந்தனை வாதிகள் பெண்ணியம் என்றால் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அர்த்தம் பொதிந்தவை.

குடும்பத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோர் தவறான வழியில் நடப்பதனால் பிள்ளைகளும் தவறான வழிக்குப் போவார்கள் என்பதற்கு உதாரணமாக இக்ராம் எம். தாஹா எழுதியுள்ள 'வழிகாட்டி' என்ற சிறுகதையும், தங்கைப் பாசத்தினால் தங்கைக்காக ஒரு தங்கச் சங்கிலியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிழாக்காண அம்மா கொடுத்த பணத்தை ஒரு சதமேனும் வீணாக்காமல் மின்னும் சங்கிலி ஒன்றை வாங்கிய கோபு, ஏனைய தனது நண்பர்கள் தமது காசை வீணாகச் செலவழித்ததன் பின், தான் மாத்திரம் காரியவாதி என்பதை நிரூபித்துவிட்டான் என்பதை சூசை எட்வட்டின் 'காரியவாதி' என்ற சிறுகதையும், காதலுக்காக பெற்றோரின் மனதைப் புண்படுத்திவிடும் பிள்ளைகள் அதன் உண்மை நிலையை அறிந்ததும் தவறை நினைத்து மனம் வருந்த நேரும் என்பதை விளக்கும் எஸ். ஆர். பாலச்சந்திரனின் 'சரசு ஏன் அழுகிறாள்?' என்ற சிறுகதையும், தப்பான சில காரியங்களால் நட்பானது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உயிருக்கு உயிரான நண்பர்கள் வாழ்விலும்கூட அது புகுந்து விளையாடும். ஆரம்பத்திலேயே அதற்குத் தடை போட்டுவிட்டாள் பிரச்சினைகளுக்கு வழிகாணலாம் என்ற உண்மையை 'சமூகமே நீ உணர்வாயா?' என்ற ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதியுள்ள சிறுகதையுமாகச் சேர்ந்து நான்கு சிறுகதைகள் பூங்காவனத்தில் இடம்பிடித்துள்ளன.

பதுளை பாஹிரா, கவிமலர், குறிஞ்சி நிலா, பி.ரி. அஸீஸ், கலைமகன் பைரூஸ் ஆகியோரின் கவிதைகள் இதழைச் சிறப்பிக்கின்றன. இதிலே மறைந்த பல்கலை நாயகன் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் நினைவாக அண்ணாவுக்கொரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார் குறிஞ்சி நிலா.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (லண்டன்) தொல்காப்பியரின் காலத்தை உறுதி செய்யும் கட்டுரை ஒன்றினையும் தந்துள்ளார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இந்தக் காலத்தில் எழுதப்படும் கவிதைகள் எந்த ரகத்தைச் சேர்ந்தன என்பதை இனங்காண முடியாதபடி வாசகனை மயக்கத்துக்கு உள்ளாக்குகிறது என்பதை 'கவிதை ஒரு மறுவாசிப்பு' என்ற கட்டுரையின் வாயிலாக நாச்சியாதீவு பர்வின் விளக்கியிருக்கிறார்.

இறுதியில் விமர்சகரும், திறனாய்வாளருமான 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/ மதிப்பீடுகள் சில' என்ற நூலைப் பற்றிய ரசனைக் குறிப்பை எச்.எப். ரிஸ்னா தந்து பூங்காவனத்தை சிறப்பித்திருக்கிறார். சிறுகதை, கட்டுரை, கவிதை, கருத்துக்கள், ரசனைக் குறிப்புகள் என இன்னோரன்ன இலக்கியச் சிறப்பியல்புகள் கொண்டதாக இம்முறை பூங்காவனம் பூத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது!!!

நூல் - பூங்காவனம் (காலாண்டு சஞ்சிகை)
ஆசிரியர் குழு - ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி - 077 5009222, 0719 200580.
மின்னஞ்சல் - bestqueen12@yahoo.com
விலை - 80 ரூபாய்

இந்த விமர்சனத்தை பதிவுகள் வலைத்தளத்தில் பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=738:2012-04-15-00-14-46&catid=14:2011-03-03-17-27-43

பூங்காவனம் இதழ் 03


பூங்காவனம் இதழ் 03 பற்றி தினக்குரல் பத்திரிகை (2010.12.26)ல் மா.பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட விமர்சனம்

சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்


சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்

சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்

நன்றி - இணுவிலி மாறன்