பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, May 6, 2015

20. திருமதி தாமரைச் செல்வி அவர்களுடனான நேர்காணல்

திருமதி தாமரைச் செல்வி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்கள் பிறந்த இடம், குடும்பச் சூழல்  பற்றிக் கூறமுடியுமா?

நான் வன்னிப் பிரதேசத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியிலுள்ள  குமரபுரம் என்ற மிகவும் சிறிய கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தின் மூத்த பெண்ணாக 1953 ஆம் ஆண்டு பிறந்தேன். எமது குடும்பம் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டது. என் தந்தை  யாழ் மாவட்டம் தென்மாராட்சியிலிருந்து நாற்பதுகளின் இறுதியில் இங்கே வந்து குடியேறியவர். பெரிய அளவில்  விவசாயம் செய்தவர். நெல்லின் வாசனையை முகர்ந்து கொண்டே எனது வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. 1974ம் ஆண்டு எனது திருமணம் நடந்தது. எனது கணவரும் இலக்கிய ஆர்வம் மிக்கவர். எழுபதுகளில் `வரணியூர் சி. கந்தசாமி' என்ற  பெயரில் வீரகேசரியில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இரண்டு பெண்களும் வைத்திய கலாநிதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகிவிட்டது. நான்கு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.


02. உங்கள் கல்வி தொழில் அனுபவம் பற்றி?

நான் எனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டேன். அப்போது பரந்தனிலிருந்து யாழ் சென்று கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தேன். அதன் பின் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் விடுதியில் தங்கி ஆறு மாதங்கள் தையல் பயின்றேன். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக வீட்டில் தங்கிவிட்டேன். வீடும் வீட்டுப் பணிகளும் என் உலகமாகிவிட்டது.


03. உங்களது வளர்ச்சிக்கு அல்லது முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனக்கு சிறுவயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம்  இருந்தது. படிக்கும் காலத்திலேயே எழுதும் ஆர்வமும் இருந்தது. படித்த நேரங்களில் சிறு சிறு நாடகங்கள் எழுதி நடித்தும் இருக்கிறேன். பின்னர் சிறுகதைகள் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

எமது உறவினராகவோ எமக்குத் தெரிந்தவராகவோ எந்த எழுத்தாளரும் இருக்கவில்லை. அதனால் நானாகவே முயற்சி செய்ய வேண்டியதாக இருந்தது. எழுத வேண்டும் என்ற எண்ணம்  எழுந்தபோது 1973 ஆம் ஆண்டில் முதலில் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு எழுதத் தொடங்கினேன். அப்போது பல நிகழ்ச்சிகளில் எனது ஆக்கங்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகி வந்தன. பத்திரிகைகளுக்கும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அப்போது வீரகேசரி நிறுவனம் மாதம் ஒரு நாவல் வெளியிட்டு வந்தது. அதற்கு 'தீக்குளிப்பு' என்ற நாவலை எழுதி அனுப்பி வைத்தேன். அதைப் படித்துப் பார்த்த நிர்வாகி கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள்  என்னை நேரில் அழைத்து கதைகள் எழுதுவது பற்றி பல ஆலோசனைகளை வழங்கினார். அந்நாவல் அன்று பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
எனினும் எதிர்பாராமல் கிடைத்த அவரின் வழிகாட்டல் தொடர்ந்து வந்த என் எழுத்துப் பணிக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதை நான் எப்போதும் நன்றியோடு நினைத்துப் பார்ப்பதுண்டு. அவரது ஊக்குவிப்புத்தான் ஷசுமைகள்| என்ற நாவலை எழுதி அது வீரகேசரி பிரசுரமாக 1977 ஆம் ஆண்டு வெளிவர காரணமாகியது. நான் பத்திரிகைகளுக்கு எழுதிய முதலாவது சிறுகதை 1974 ஆம் ஆண்டு வீரகேசரியில் பிரசுரமாகியது. அதன் பிறகு இலங்கையில் வெளிவந்த அநேக பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எனது படைப்புக்கள் பிரசுரமாகின. அவற்றின் ஆசிரியர்கள் என்னைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல் என் கதைகளின் தரம் பார்த்து தமது பத்திரிகைகளில் பிரசுரித்து என்னை ஊக்குவித்தார்கள்.


04. சமகால இலக்கியங்கள்  மீதான தங்களது பார்வை எப்படி இருக்கிறது?

காலங்கள் மாறி வரலாம். காலங்களுக்கேற்ப சூழ்நிலைகளும் மாறலாம். இலக்கியங்கள் என்பது காலங்களின் கண்ணாடிதான். அந்தந்த கால நிகழ்வுகளின் பதிவுகள்தான அந்தந்த காலங்களின் இலக்கியமாகிறது. இன்றைய நிகழ்வுகளை அதாவது போர் முடிந்த பின் மக்களிடம் எஞ்சியிருக்கும் வாழ்வுகளை - வலிகளை இப்போதைய இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. மக்களின் சமகால வாழ்வு பற்றிய பதிவைச் சுமந்து பல சிறுகதைகள் வருகின்றன. அவற்றில் பல தரமானவையாகவும் இருக்கின்றன.
05. பல்வேறுபட்ட இலக்கியத் துறைகளில் (கவிதை, சிறுகதை. நாவல், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து) தங்களுக்கு பிடித்த துறை எது?

நான் விரும்பி ஈடுபட்டது சிறுகதை, நாவல் ஆகிய இரண்டு துறைகளிலும்தான். என்னைச் சுற்றி நடப்பவைகளையும் என் மனதைப் பாதித்தவைகளையும் சொல்லக் கூடிய துறைகளாக இவை இரண்டும் இருப்பதாகத்  தோன்றியது. அதனால் சம நேரத்திலேயே சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வந்தேன். தவிர ஓவியம் வரைவதிலும் எனக்கு ஆர்வம் இருந்ததால் ஓவியமும் கற்றிருக்கிறேன். எனது கதைகளை நான் வரைந்த ஓவியங்களுடன் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகள் சுடர் சஞ்சிகை ஆகியன பிரசுரித்திருந்தன. தமிழக சஞ்சிகையான குங்குமத்திலும் எனது கதைகள், ஓவியங்கள் வந்திருக்கின்றன.


06. உங்கள் ஓய்வு நேரங்களில் எவ்வகையான அல்லது யாருடைய புத்தகங்களை வாசிக்கின்றீர்கள்?

எனக்குக் கிடைக்கும் எல்லாப் புத்தகங்களையும் நான் வாசிப்பதுண்டு. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு எழுத்து நடை, எழுத்தாற்றல் இருக்கும். வௌ;வேறு அனுபவங்களையும் பாதிப்புக்களையும் அந்த எழுத்துக்கள் எமக்குத் தரும்.


07. இலங்கையில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெண் எழுத்தாளர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு கால கட்டங்களிலும் நிறையப் பெண்கள் எழுதிக் கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஆண் எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் போது இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாமே தவிர அவர்களின் பல படைப்புக்களின் தரம் உயர்வாகவே இருக்கிறது. அலுவலகப் பணிகள், குடும்பப் பணிகள் என்று எத்தனையோ சுமைகளின் மத்தியிலேயே இவர்களின் இலக்கியப் பங்களிப்பு இருந்து வருகிறது.


08. தற்காலப் பெண் படைப்பாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் என்று எதனைக் கருதுகிறீர்கள்?

வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான நேரங்களைத் தேடிக் கொள்வது தான் இவர்களுக்கான பெரும் சவாலாக அமைகிறது. எத்தனை பெண் எழுத்தாளர்களுக்கு குடும்பத்தவரின் ஆதரவு கிடைக்கிறது? அப்படி ஆதரவு கிடைத்தால் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்தலாம்.


09. சமூகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பெண் பற்றிய படிமங்கள் எவ்வாறு உடைக்கப்பட்டு வருகிறது?

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை, பல ஒடுக்குமுறைகளை இச்சமூகம் காலங்காலமாக பெண்கள் மீது திணித்தே வந்திருக்கிறது. ஆனால் காலப் போக்கில் பெண் தனது கல்வி அறிவினாலும் தைரியத்தினாலும் ஆண்களுக்குச் சமமான அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டு உயர் பதவிகளிலும் அதிகாரங்களிலும் தன்னை அமர்த்திக்கொண்டு வருகையில் பெண் பற்றி சமூகம் உருவாக்கிய படிமங்கள் உடைபட்டு அவளை வேறொரு  உயர்ந்த தளத்துக்கு மாற்றம் பெற வைத்திருக்கிறது. இது ஒரு பெண் தன் அறிவாலும் ஆற்றலாலும் சாதிக்க முடிந்த சாதனை ஆகும்.


10. இலக்கியப் பணி சார்ந்த தங்களது கொள்கை என்ன?

இலக்கியம் படைப்பவர் எல்லாம் போதகர்கள் இல்லை என்று சொல்வார்கள். ஆனாலும் சமூகத்தின் நன்மை சார்ந்தே என் படைப்புக்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். போரின் தாக்கத்தால் துயரை அனுபவித்த மக்களுக்குள் ஒருத்தியாக வாழ்ந்தவள் நான். இடப் பெயர்வுகளால் ஏற்பட்ட அத்தனை இழப்புக்களையும் துன்பங்களையும் அனுபவித்தவள் நான். அந்த மக்களின் துயர் வாழ்வை என் படைப்புக்கள் மூலம் வெளியுலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். ஒரு படைப்பாளியாக அது எனது கடமை என உணர்ந்திருக்கிறேன். தமிழில் வெளிவரும் சிறுகதைகள் பிறமொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருவதும் ஆரோக்கியமான விடயமே.

என்னுடைய ஐந்து சிறுகதைகள் சி. சிவசேகரம், ஏ.ஜே. கனகரட்ணா,  எஸ். இராஜசிங்கம். கே.எஸ். சிவகுமாரன் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. மூன்று சிறுகதைகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த விதமான மொழிபெயர்ப்புக்கள் பரந்துபட்ட வாசகர்களிடையே எங்கள் வாழ்வின் வலிகளைக் கொண்டு சேர்க்கும் என நம்புகிறேன்.


11. மொழி - கருத்து ஆகியவற்றில் இலக்கியத்தில் முக்கிய பங்கு பெறுவது எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்?

எந்த ஒரு இலக்கியப்படைப்பிலும் கருத்துக்கும் மொழியாள்கைக்கும் முக்கிய இடம் உண்டு. நல்ல கருத்தொன்றைத் தேர்ந்தெடுத்து அதைச் சொல்ல முனையும்போது நல்ல மொழி நடை கைகொடுக்க வேண்டும். மொழியைச் சிறப்பாகக் கையாண்டால் சொல்ல வந்த கருத்தும் சிறப்புப் பெறும்.


12. உங்கள் சுய படைப்புக்களான சிறுகதைகளுக்கு கருப்பொருட்களை எங்கிருந்து பெற்றுக்கொள்கிறீர்கள்?

என்னைச் சுற்றியுள்ள சமூகத்திடமிருந்துதான் கதைக்கான கருக்களைப் பெற்றுக்கொள்கிறேன். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் எத்தனையோ மக்களின் பிரச்சினைகள் கதைகளின் கருக்களாக எம் மனதைப் பாதிக்கும். அந்தப் பாதிப்புக்களின் விளைவுகள்தான் ஒவ்வொரு படைப்புகளாகப் பதிவு செய்யப்படுகிறது.


13. நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள்  பற்றிக்குறிப்பிடுங்கள். நூல் வெளியீட்டு முயற்சிகளில் வெற்றி  பெற்றிருக்கிறீர்களா?

இதுவரை எனது ஒன்பது நூல்கள் வெளிவந்திருக்கின்றன. எனது முதலாவது நாவல், சுமைகள் 1977 ஆம் ஆண்டு வீரகேசரி பிரசுரமாக வந்தது. யாழ் மீரா பிரசுரங்களாக விண்ணில் அல்ல விடிவெள்ளி நாவல் 1992 ஆம் ஆண்டிலும் வேள்வித்தீ குறுநாவல் 1994 ஆம் ஆண்டிலும் தாகம் நாவல் 1993 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக ஒரு மழைக்கால இரவு சிறுகதைத் தொகுதி 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது.

சுப்ரம் பிரசுராலய வெளியீடுகளாக 2002 ஆம் ஆண்டு அழுவதற்கு நேரமில்லை சிறுகதைத் தொகுதியும் 2004 ஆம் ஆண்டு பச்சை வயல் கனவு நாவலும் வெளிவந்தன. கொழும்பு மீரா பதிப்பக வெளியீடுகளாக 2003 ஆம் ஆண்டு வீதியெல்லாம் தோரணங்கள் நாவலும் 2005 ஆம் ஆண்டு வன்னியாச்சி சிறுகதைத் தொகுதியும் வெளிவந்தன. எமது சொந்த நிறுவனமான சுப்ரம் பிரசுராலயம் மூலமாக இரண்டு நூல்கள் வெளியிட்டோம். நூல் வெளியீட்டு முயற்சியில் வெற்றி பெறுவது என்பது  மிகவும் கடினமான விசயம். சிலரால்தான் இதில் வெற்றி பெற முடிந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நூல்களை விற்பனை செய்து கொள்ளமுடியாமல் இருப்பது. புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை வரவர குறைந்து கொண்டே வருவது இதற்கு முக்கிய காரணமாக எனக்குத் தோன்றுகிறது. விற்பனை செய்ய முடியாவிட்டால் ஒரு படைப்பாளியால் நூல்களை வெளியிட இயலாது. இந்த சிரமங்களை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.


14. எதிர்காலத்தில் எவ்வகையான நூல்களை வெளியிட உத்தேசம் கொண்டிருக்கிறீர்கள்?

நான் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் முப்பத்தேழு சிறுகதைகளைத்தான் மூன்று தொகுப்பாக வெளியிட முடிந்தது. ஆரம்ப காலங்களில் எழுதிய சிறுகதைகளின் பிரதிகள் எல்லாம் போர்க்கால வாழ்வின் போது அழிந்துவிட்டன. அவைகளைத் தேடி எடுத்து தொகுத்து நூல்வடிவில் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகுமோ தெரியவில்லை.


15. இலக்கியவாதிகளின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

ஒவ்வொரு இலக்கியவாதியும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஒவ்வொருவரினது படைப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கவும் கூடும். இல்லாமலும் இருக்கக் கூடும். அது அவர்கள் தனிப்பட்ட விசயம்.


16. இலக்கியத்தினூடாக நல்ல கருத்துக்களை வெளிக்கொணர்ந்து சமூகத்தில் எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறீர்கள்?

இலக்கியத்தினூடாக நல்ல விடயங்களைக் கூறுவதன் மூலம் சமுதாயத்தில் நல்ல பலனை ஏற்படுத்தலாம் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. ஒரு நல்ல இலக்கை நோக்கியே சிறந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. மக்களின் பிரச்சினைகளே பரந்துபட்ட அளவில் இலக்கியங்கள் மூலம் மீண்டும் மக்களிடம் போய்ச் சேர்கின்றன. இவ் இலக்கியங்கள் சில மன மாற்றங்களையும் வாழ்வு பற்றிய புரிதல்களையும் மனிதாபிமான உணர்வின் பெறுமதிகளையும் மக்களின் மனங்களில் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.


17. தற்கால இலக்கிய வளர்ச்சி எந்தளவில் உள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

புதிது புதிதாய் சமூகம் தோற்றம் பெற்றுக்கொண்டு வரும்போது புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள், புதிய வடிவங்கள் காணப்படுவது தவிர்க்க முடியாதது. கதை சொல்லும் முறைமையில் நவீனத்துவம் பின்பற்றப்படுகிறது. சமீப காலங்களில் வந்த படைப்புக்கள் இதனை நிரூபிக்கின்றன.


18. இன்றைய எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

எழுத ஆர்வமுள்ளவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். இன்றைய நாளில் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் காரணமாக வாசிப்பு என்பது குறைந்து விட்டது. வாசிப்பின் மூலம் நிறைய விடயங்களை நாம் கிரகித்துக் கொள்ளலாம். இன்றைய சமூக இலக்கிய மாற்றங்களை வாசிப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். சுற்றிலும் உள்ள மனிதர்களின் பிரச்சினைகளை மனதுக்குள் உள்வாங்கி அவற்றை நல்ல மொழிநடையில் படைப்புக்களில் பதிவு செய்ய வேண்டும்.


19. இதுவரை நீங்கள் பெற்ற பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய சிறுகதைகளில் 19 சிறுகதைகள் பல்வேறு போட்டிகளிலும் பரிசுகள் பெற்றிருக்கின்றன. `அவர்கள் தேவர்களின் வாரிசுகள்' குறுநாவல் 1983 ஆம் ஆண்டு கலாவல்லி சஞ்சிகை நடாத்திய போட்டியில் பரிசு பெற்றது. `வேள்வித்தீ' எனும் குறு நாவல் 1986 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. வடகிழக்கு மாகாண சபை விருது 1998 ஆம் ஆண்டு `ஒரு மழைக் கால இரவு' சிறுகதைத் தொகுப்பிற்கும் 2003 ஆம் ஆண்டு `வீதியெல்லாம் தோரணங்கள்' நாவலுக்கும் கிடைத்தது. யாழ் இலக்கியப் பேரவை பரிசு 1992 ஆம் ஆண்டு ஷவிண்ணில் அல்ல விடிவெள்ளி| நாவலுக்கும் 1993 ஆம் ஆண்டு `தாகம்' நாவலுக்கும் 2004 ஆம் ஆண்டு `பச்சை வயல் கனவு' நாவலுக்கும் கிடைத்தது. கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது 1993 ஆம் ஆண்டு `தாகம்' நாவலுக்கு கிடைத்தது. அரச சாகித்திய விருது 2004 ஆம் ஆண்டு `பச்சை வயல் கனவு' நாவலுக்கு கிடைத்தது. தகவம் இலக்கிய அமைப்பின் பரிசுகளையும் எனது சிறுகதைகள் பெற்றிருக்கின்றன.

விருதுகள், கௌரவிப்புக்கள் என்று பார்த்தால் வடகிழக்கு மாகாண சபையின் ஆளுனர் விருது பெற்றிருக்கிறேன். கிளிநொச்சி அக்கராயன் மகளிர் அமைப்பு இலக்கிய சமூகப் பணிக்காக சிறந்த பெண்மணி விருது தந்து கௌரவித்தது. கிளிநொச்சி தமிழ் சங்கம் 2002 ஆம் ஆண்டு இலக்கிய மணி பட்டமும் தங்கப் பதக்கமும் தந்து கௌரவித்தது. இலக்கியப் பணிக்கான விருதை 2003 ஆம் ஆண்டு இலங்கை கலைக் கழகமும் 2010 ஆம் ஆண்டு தமிழ் நாடு சின்னப்பாரதி அறக்கட்டளையினரும் வழங்கியிருந்தனர். 2011 ஆம் ஆண்டு கண்டாவளை கலாசார பேரவை கலை ஒளிர் விருது தந்தது. 2012 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் தமிழியல் விருது தந்தது.

என்னுடைய  `பசி' சிறுகதை தமிழ்நாடு ஜே.டி. இமயவர்மன் என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு லண்டனில் நடந்த ஷவிம்பம்| தமிழ்க் குறும்பட திரைப்பட விழா 2009 இல் பார்வையாளர் தேர்ந்தெடுத்த சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றது.


20. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக இந்த எழுத்துத் துறையில் இருக்கிறேன். போன வருடம் வரை சிறுகதை எழுதியிருக்கிறேன். இந்த இலக்கியப் பணி எனக்கு மன நிறைவாகவே இருக்கிறது. நான் சார்ந்த மண்ணில் வாழும் மனிதர்களின் துன்பியல் வாழ்வை என்னால் இயன்ற வரை பதிவு செய்திருக்கிறேன். அந்த வாழ்வை மற்றவர்களின் பார்வைக்கு அடையாளம் காட்டியிருக்கிறேன். இலக்கியப் பதிவுகள் காலம் கடந்தும் நிற்கும் வல்லமை வாய்ந்தவை. எனது நீண்ட இலக்கியப் பணியில் எனக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் எனது பெற்றோர், சகோதரர்கள், கணவர், பிள்ளைகள். இவர்கள்தான் எப்போதும் என்னை எழுத வைப்பவர்கள். இவர்களால்தான் ஒரு எழுத்தாளராய் நின்று நிலைக்க என்னால் முடிந்திருக்கிறது. அதற்காக இறைவனுக்கு எனது நன்றி!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்