பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, December 22, 2017

30. கோகிலா மகேந்திரன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.09.03

கோகிலா மகேந்திரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் பிறந்த கிராமம் விழிசிட்டி. தெல்லிப்பழையின் தென்மேற்குப் பகுதியில் அமைந்த வாழையும் கமுகும் வெற்றிலையும் நிறைந்த அழகிய சிறு கிராமம். மழைக்கால அருணோதயம் போன்றிருந்த இளமைக்காலம். யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் அமைவது தெல்லிப்பழை. எனது தந்தையார் சிவசுப்பிரமணியம். தமிழாசிரியர், பண்ணிசையாளர், புராண படனம், இசை நாடகம் செய்பவர். நீண்டகாலம் தெல்லிப்பழை சைவப் பிரகாச வித்தியாசாலையின் அதிபராகப் பணிபுரிந்தவர். வெள்ளை வாத்தியார், புது வாத்தியார் என்று தெல்லிப்பழை மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். தாயார் செல்லமுத்து. அதிகம் படிக்காதவர். ஆயினும் கிராமத்தில் அனைவரிடமும் மிகுந்த அன்புடன் பழகுபவர். அவர்களது பிரச்சினைகளைத் தனிப்படக் கேட்டு தனக்குத் தெரிந்த வகையில் தீர்வு சொல்லும் பழக்கமுடையவர். நான் இவர்களுக்கு ஒரே பிள்ளை.



உங்கள் பாடசாலைக்காலம், தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

எமது கிராமத்துப் பாடசாலையாகிய விழிசிட்டி சிவஞான வித்தியாசாலையில் (இப்போது இது பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை என வழங்கப்படுகிறது) ஆரம்பக் கல்வியைத் தொடங்கி இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பெற்றேன். எனது ஆளுமை வளர்ச்சியில் பெரும்பங்கை வகித்தவர்கள் (குடும்பத்தினர் உட்பட) மகாஜனக் கல்லூரியின் சில ஆசிரியர்கள். அப்போதைய கல்லூரி அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அவர்களிடம் ஆங்கிலமும், கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை அவர்களிடம் தமிழும், ச.பொ. கனகசபாபதி அவர்களிடம் விலங்கியலும், பார் மாஸ்டரிடம் (திரு. ப. சுப்பிரமணியம்) இரசாயனவியலும் கற்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமையாது. சிறுகதை, கவிதை, நாடகம், விளையாட்டு, பேச்சு, விவாதம், தலைமைத்துவம் என்று வாழ்வின் பல பகுதிகளிலும் சிறப்படையத் தேவையான உரத்தைப் போட்டது மகாஜனா. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மதுரைப் பண்டிதர் க. சச்சிதானந்தம் அவர்களிடம் தமிழும் உளவியலும் கற்க முடிந்தது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடுமையாக என்னைக் கவரவில்லை.

தொழில் என்று பார்த்தால், நான் எந்தப் பதவியில் இருந்தாலும் அடிப்படையில் ஆசிரியர்தான். 1974 இல் விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்றேன். 1989 இல் அதிபர் தரப் பரீட்சையில் சித்தியெய்தி அதிபரானேன். 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமை புரிந்தேன். இடையில் விஞ்ஞான பாடச் சேவைக்கால ஆலோசகராக, ஆசிரியர் பயிற்சியின் வருகை விரிவுரையாளராக, பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்துக்கான வருகை விரிவுரையாளராக என்று பலமுகம் கொண்டேன்.  உளவளத்துணைப் பயிற்சி முடித்து உளவளத்துணையாளரானேன். அனர்த்த காலத்தில் வடக்குக் கிழக்கில் 150 இற்கும் மேற்பட்ட ஆசிரிய உளவளத்துணையாளர்களைப் பயிற்றுவிக்கும்  பொறுப்பை ஏற்று செம்மையாகச் செய்தேன். ஓய்வுபெற்று கொழும்பில் இருந்தபோது உளவைத்திய நிபுணர் எஸ். சிவதாஸ் அவர்களுடன் இணைந்து ஒரு உளவளத்துணை நிலையத்தில் வழிகாட்டல் செய்தேன். பின்னர் அவுஸ்திரேலியா சென்று சிட்னி நகரில் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்பித்தேன். அரச பாடசாலைகள் இரண்டில் இந்து சமயம் (ஆங்கிலமொழி மூலம்) கற்பித்தேன். வயதானவர்களுக்கு உளவளத்துணை வழங்கினேன். மீண்டும் 2013 இல் இங்கு வந்து தனியார் பாடசாலையில் ஆங்கிலமும் விஞ்ஞானமும் கற்பித்தேன். இப்போது ஒரு வருடத்துக்கு மேலாக  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உளசமூக வள நிலையத்தின் ஒரு செயற்றிட்டத்துக்கான ஆலோசகராகப் பணிபுரிகின்றேன். ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளில் வளவாளராக இருக்கிறேன். இப்படியாகப் பரந்த தொழில் அனுபவம் இருக்கின்றது.


உங்களது இலக்கியப் பிரவேசம் எந்த ஒரு பின்புலத்தைக் காரணமாகக்கொண்டு நிகழ்ந்தது?

விழிசிட்டி கிராமத்தவர் அநேகம்பேர் சைவ உணவுக்காரர்கள். மென்மையான கலை உள்ளம் படைத்தவர்கள். தேவாரங்களைப் பண்ணோடு இசைப்பதில் புகழ்பெற்றவர்கள். எமது உறவினர்கள் பலர் பிள்ளை மரபுப் பண்டிதர்கள் (கதிரிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை) எனது தந்தையார், சி. கதிரிப்பிள்ளையின் மாணவர். பாரம்பரிய இலக்கியங்களிலும் புராணங்களிலும் அறிவு மிகுந்தவர்.
சிறுவயதில் நாள்தோறும் கிணற்றடியில் குளிக்கும்போது எனக்குத் திருக்குறள் பாடம் நடக்கும். துவா மிதித்து இறைக்கும்போது அவரும் சிறிய தந்தையாரும் பாடும் தேவாரங்களும், இசை நாடகப் பாடங்களும் இலக்கியப் பாடங்களும் காதில் விழும்.

பாரம்பரிய மரபணுச் செல்வாக்கானது மொழி பற்றிய நுண்மதியில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். சிறு பராய அனுபவங்கள் தூண்டியாக அமைந்திருக்கலாம். மகாஜனாவில் கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை, நாகலிங்க மாஸ்டர், வித்துவான் வேந்தனார் போன்ற நல்ல தமிழ் அறிஞர்களிடம் கற்றபோது அந்த வளர்ச்சி சிறப்பாக அமைந்திருக்கலாம். கற்றல் பொதுவில் மகிழ்வானது. கலைகள் உள நலத்தை வளர்ப்பவை. கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை அவர்களின் நாடகங்களில் நடித்து அகில இலங்கை ரீதியில் முதற் பரிசுகளைப் பெற்றபோது கலை, இலக்கிய மகிழ்வு பிடிபட்டது. கவிஞரது நாடகப் பிரதிகள் ஒவ்வொன்றும் சிறந்த இலக்கியங்கள். அவற்றை நான் மனனம் செய்ய நேர்ந்தது எனது அதிர்ஷ்டம்.

க.பொ.த சா.தரம் கற்ற காலத்தில் ஷமலர்களைப் போல் தங்கை| என்ற ஒரு குறுநாவல் எழுதினேன். அது எங்கேயும் பிரசுரமாகவில்லை. எனது நண்பிகள் வாசித்துப் பாராட்டியதோடு சரி. ஆயினும் அது ஒரு நல்ல பிரவேசம் என்று நம்புகிறேன்.


கல்வித்துறையிலும், இலக்கியத்துறையிலும் சரிசமமாக உயர்வடைவதற்கான  காரணங்கள் யாவை?

கல்வித்துறையோ, இலக்கியத்துறையோ, கலைத்துறையோ, உளவியல்துறையோ எதில் ஈடுபடும்போதும் அதை முழு மனதுடனும் விருப்புடனும் செய்வது எனது இயல்பு. நேர்மையாக உழைப்பேன். அதிலே ஒரு மனநிறைவு இருக்கிறது. ஆiனெ குரடநௌள என்று உளவியல் கூறும். எனது மன நிறைவுக்காகவே நான் அப்படிச் செய்வேன். அது எனக்கு உயர்வைத் தந்ததா என்பதை மற்றவர்கள் கூற வேண்டும்.


இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் கூறுங்கள்?

சிறுகதைத் தொகுதிகள்

01. மனித சொரூபங்கள் - 1982
02. முரண்பாடுகளின் அறுவடை - 1983
   அறிமுகவிழா - 1984 ( புலோலியூர் ஆ. இரத்தினவேலோனின் சிறுகதைகளும் சிறுகதை விமர்சனங்களும் கொண்டது)
03. பிரசவ வலிகள் - 1986
04. வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் - 1997
05. முகங்களும் மூடிகளும் - 2003
06. மனதைக் கழுவும் மகா சமர்த்தர்கள் - தொகுப்பாசிரியர் - 2008
07. வரிக்குயில் - 2016 - ஒன்பது சிறுகதையும் விமர்சனமும்)

நாவல்கள்

01. துயிலும் ஒரு நாள் கலையும் - 1986
02. தூவானம் கவனம் - 1989

நாடகங்கள் 

01. குயில்கள் - 2001 (இரண்டாம் பதிப்பு 2005)
02. கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு - 1997
03. அரங்க கலையில் ஐம்பதாண்டு - 2003

விஞ்ஞானப் புனைகதை

விஞ்ஞானக் கதைகள் - 2000

தனி மனித ஆளுமை

01. தங்கத் தலைவி (கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றியது)
02. விழிமுத்து (தாயார் பற்றியது) - 1999
03. விழிசைச்சிவம் (தந்தையார் பற்றியது) - 2009
04. கனக சபைக்குச் சென்ற கனகசபை (பதிப்பாசிரியர்)

உளவியல்

01. சிறுவர் உளநலம் (பதிப்பாசிரியர்களில் ஒருவர்) 2002 (மறுபதிப்பு 2005. ஆங்கில சிங்கள மொழியாக்கம் 2003, மூன்றாம் பதிப்பு 2017)
02. மகிழ்வுடன் வாழ்தல் (பதிப்பாசிரியர்களில் ஒருவர்) 2003
03. சின்னச் சின்னப் பிள்ளைகள் (பதிப்பாசிரியர்களில் ஒருவர்)  - 2005
04. உள்ளக் கமலம் - பதிப்பாசிரியர் - 2006
05. முற்றத்தில் சிந்திய முத்துக்கள் - பதிப்பாசிரியர் - 2006
06. சுனாமியில் சிதறிய சித்திரங்கள் - பதிப்பாசிரியர் - 2006
07. எங்கே நிம்மதி - 2000
08. மகச்சோர்வு - 2006
09. மனமெனும் தோணி - 2008
10. உள்ளம் பெருங் கோயில் - 2009
11. உள்ளத்துள் உறைதல் - 2011

பெண்ணிய உளவியல்

நேர்கொண்ட பார்வை - 2015

புனைவு இலக்கியம் 

புலச் சிதறல் - 2013

நீங்கள் இதுவரை கல்வி, இலக்கியத் துறைகளில் செய்த பங்களிப்பு பற்றிக் கூறுங்கள்?

ஒரு ஆசிரியராக ஆயிரக்கணக்கணக்கான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும், கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், உளவளத்துணை மாணவர்களுக்கும் கற்பித்துள்ளேன். விஞ்ஞானம், கணிதம், சுகாதாரமும் உடற்கல்வியும், மனைப்பொருளியல், உளவளத்துணை, நாடகமும் அரங்கியலும், தமிழ், ஆங்கிலம், சைவ சமயம், தலைமைத்துவம், விழுமியம் என்று கற்பித்த பாடப்பரப்புகள் மிக அதிகம். சிறுகதை, கவிதை, நாடகம் பட்டறைகள் பல செய்துள்ளோம். எனக்குத் தெரிந்ததை மிகத் தாராளமாய் மற்றவர்களுக்குக் கொடுத்த இந்தப்பணி இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் நடைபெற்றது. இதுதான் நான் செய்த பங்களிப்பு. கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறவும் பரிசில்கள் வழங்கவும் உதவியுள்ளேன்.

நாடகங்கள் பலவற்றை எழுதினேன். நடித்தேன். நெறியாழ்கை செய்தேன். தயாரித்தேன். வட இலங்கைச் சங்கீத சபை நடத்தும் பரீட்சைகளுக்கு நாடகமும் அரங்கியலும் துறைக்குள் பல மாணவர்களைத் தயார்படுத்தினேன். அத்துடன் பல வருடங்கள் கலாவித்தகர் பட்டம் வரை பரீட்சகராக இருக்கிறேன்.

தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தின் இணைச் செயலாளராய் 1986 முதல் இன்றுவரை பணிபுரிகிறேன். சோலைக்குயில் அலை காற்றுக் களத் தலைவராக 1988இல் இல் இருந்து இன்றுவரை பணிபுரிகிறேன். இந்த அமைப்பு நாடகங்கள் செய்வதோடு உளவளத்துணை வழங்குதலில் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது.

வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகள் பலவற்றில் எமது நாட்டில், இங்கிலாந்தில், அவுஸ்திரேலியாவில் பங்குபற்றியுள்ளேன். கட்டுரைகள், கவிதைகள், உருவகங்கள் பலவும் எழுதியுள்ளேன்.


உங்கள் இலக்கிய, கல்வி வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவமொன்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

சம்பவங்கள் இல்லாத வாழ்வு இல்லை. சம்பவங்களே சரித்திரமாகின்றன. மானிட அநீதிகள் ஒவ்வொன்றும் சம்பவங்கள்தான். உள ஆரோக்கியமுள்ளவர்கள் அவற்றை மடைமாற்றம் (ளுரடிடiஅயவழைn) செய்கின்றனர். நானும் பலவற்றை எனது ஆக்கங்களில் வெளிப்படுத்தி உள்ளேன். எவ்வளவு கற்பனை, எவ்வளவு உண்மை, எது சொந்த அனுபவம், எது பார்த்த கேட்ட அனுபவம் என்று பிரித்துக்கூறுவது அழகில்லை.

இன்று கல்வியில் நாட்டம்கொண்ட மாணவர்களுக்கு இலக்கிய நாட்டம் வர என்ன செய்யலாம்?

இலக்கியத்தில் ஈடுபடுவதால் வரும் நன்மைகளைப் பற்றி பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களின் சிறு வயதில் இருந்தே சொல்லி வரலாம். இலக்கிய இன்பத்தை நுகர உதவலாம். நாம் அவர்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டலாம். அவர்கள் நல்ல நூல்களை வாசிக்கும்போது, சிறந்த கற்பனை வளத்துடன் எழுதும்போது நேர் மீள வலியுறுத்தல் செய்யலாம். பாராட்டலாம். பரிசு தரலாம். உலகளாவிய ரீதியில் நல்ல எழுத்தாளர்கள் அதிகளவு பொருட்செல்வத்தை ஈட்டிக்கொள்கிறார்கள் என்பதுபற்றி எடுத்துரைக்கலாம். இணையத்தளங்களில் அவைபற்றிய செய்திகளைப் பார்க்கத் தூண்டலாம்.


உளவியல் துறையில் உங்களது பங்களிப்பு பற்றிக் கூறுங்கள். இத்துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

எமது உடல் உறுப்புகளில் முற்றுமுழுதாய் புரிந்துகொள்ள முடியாதது மனம். அதனால் படிக்கும் காலத்திலேயே மனம் பற்றி நிறையவே வாசிப்பேன். அதற்கு மகாஜனக் கல்லூரி நூலகம் உதவியது. பின்னர் தோழிகளுடன் கூடி விவாதிப்போம். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது உளவியல் கட்டுரை எழுதும் வழக்கம் ஏற்பட்டது. எமது பிரதேசத்தில் அனர்த்தம் ஏற்பட்ட பிறகு அதைப்பற்றி வரன்முறையாகப் படித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பினேன். படித்தேன்.


உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

டேல் கானேகி - Dale Carnegie


சிறுகதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களில் நீங்கள் எதனை இலக்காகக் கொள்கின்றீர்கள்?

அப்படியெல்லாம் பெரிதாகத் திட்டமிடுவதில்லை. பல நல்ல எழுத்தாளர்களால் எனது ஆளுமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. எனது சிநேகிதிகளில் ஏற்பட்டது. அதேபோல யாராவது ஒருவராவது மாறுவார் என்ற எதிர்பார்ப்பு. அவ்வளவுதான்.


உங்கள் முயற்சிகளுக்கு வழிகாட்டிகள் யாரும் இருக்கிறார்களா?

சிறுபராயத்தில் தந்தையார் இருந்தார். மாணவப் பருவத்தில் ஆசிரியர்கள். அதற்குப் பிறகு நல்ல விமர்சகர்களும், வாசகர்களுமே வழிகாட்டினர். நல்ல விமர்சகர்களை ஆரோக்கியமான விமர்சகர்களை (ஊழளெவசரஉவiஎந ஊசவைiஉள) நானே தேடிப் போய்க் கேட்பதுண்டு. அவர்கள் சொல்லும் அபிப்பிராயங்களுக்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்வதுண்டு.


உங்கள் படைப்புகளுக்குக் கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலக்கியத் துறையில் தேசிய மட்ட சாகித்திய விருது
அ) இந்து சமய தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சின் சாகித்திய விருது    - பிரசவங்கள் (சிறுகதைத் தொகுதி) 1986
ஆ) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் சாகித்திய விருது - வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி) 1997

இலக்கியத் துறையில் சர்வதேச மட்டப் பிரிவு
நோர்வே தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி - 1986

இலக்கியத் துறையில் மாகாண மட்டப் பரிசு
  வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் இலக்கிய நூற் பரிசு - வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் - 1997
 வடக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பரிசு - மனம் எனும் தோணி உளவியல் நூலுக்கு (பல்துறை) 2008
  இலங்கை பல்கலைக்கழகம் பேராதனை தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறந்த நடிகைக்குரிய விருது - 1973
  சுடர் சஞ்சிகைப் பரிசு - 1979
  சுடர் சஞ்சிகைப் பரிசு - 1980 (முரண்பாடுகளின் அறுவடை)
  நீர்பாசனத் திணைக்களம் நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு - 1985
  இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய சிறுகதை, கவிதைப் போட்டிப் பரிசு - 1982
  தாரகை நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு - 1984
  முரசொலி நடத்திய குறுநாவல் போட்டிப் பரிசு - 1987
  தகவம் சிறுகதைப் பரிசு - 1987
யாழ். இலக்கிய வட்டம் நடத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டிப் பரிசு - 1989
  மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சித் திணைக்களம் - இலக்கிய வித்தகர் பட்டம் பெற்றமைக்கான பாராட்டும் பரிசும் - 1991
  மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் கௌரவம் - 1994
  தெல்லிப்பழைக் கோட்டம் நடத்திய சர்வதேச ஆசிரியர் தினப் போட்டியில் கவிதைப் போட்டிப் பரிசு - 1997
  குயில்கள் நாடகத் தொகுதிக்கு இலக்கியப் பேரவைச் சான்றிதழ் - 2000
  தகவம் - நாலாம் காலாண்டு சிறப்புப் பரிசு - 2007
  இலக்கியப் பேரவைச் சான்றிதழ் - முகங்களும் மூடிகளும் - 2008
- மனம் எனும் தோணி - 2009
  இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணி ஆற்றியமைக்கான கொடகே தேசிய விருது - 2009
  கொழும்புத் தமிழ்ச்சங்கம் - பெண்கள் தின மாண்புறு மகளிர் கௌரவம் - 2016
 இரா. உதயணன் இலக்கிய விருது - ''நேர்கொண்ட பாவை'' - 2016
 தகவம் - மூத்த எழுத்தாளர் கௌரவம் - 2014

கௌரவப் பட்டங்கள் 
இலக்கிய வித்தகர், கலைச்சுடர், சமூக திலகம், கலைப் பிரவாகம்


வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

நிகழும் கணத்தில் வாழுங்கள். நிறைய வாசியுங்கள். தேர்ந்த வாசிப்பாக இருக்கட்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

29. மாத்தளை ஜெஸீமா ஹமீட் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.0121

மாத்தளை ஜெஸீமா ஹமீட் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? 

நான் ஜெஸீமா ஹமீட். தந்தை ஹமீட். தாய் கதீஜா பீபி. மாத்தளை மாவட்டத்தின், அழகிய தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த சின்ன செல்வகந்தை எனும் சிற்றூரில் பிறந்த எனக்கு, 4 சகோதரரிகள், 3 சகோதரர்கள். க
டைக்குட்டி நான்.


02. உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

பிட்டகந்த, கந்தேனுவர தமிழ் வித்தியாலயங்களில் கல்வி பெற்று மாத்தளை ஆமினா மகளிர் பாடசாலையில் உயர்தரம் கற்றேன். பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2003 இல் வரலாற்று துறையில் சிறப்பு பட்டம் பெற்றேன். அதே பல்கலைக்கழகத்தில் 2003 - 2005 வரை துணை விரிவுரையாளராக இருந்த போதே வரலாற்று துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டேன். 2006 இல் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்தேன். தற்போது மாஃகுரிவெல ஹமீதியா கல்லூரியில் வரலாற்று ஆசிரியையாக கடமையாற்றுகின்றேன்.


03. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் துணை விரிவுரையாளராகக் கடமையாற்றிய போதும், தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றும் போதும் என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?

ஆம் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் எதையும் ஆழமாக கற்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. காரணம் அது தேடல் கல்வி. ஆனால் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அத்தனை விடயங்களையும் கற்பிக்க வேண்டும். காரணம் உயர்தர பரீட்சை ஒவ்வொரு மாணவனதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய தடைதாண்டல். எனவேதான் ஆசிரியராகவிருந்து பலரது பல்கலைக்கழக வாய்ப்புக்கு வழிகாட்டுவதை பெரும்பேறாகக் கருதுகிறேன்.


04. இலக்கியத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்த சூழ்நிலைகள் எவை?

சிறுவயதிலேயே நான் துடுதுடுவென பேசுவதை என் தந்தை வியந்து பாராட்டுவார். ஊக்குவிப்பார். பின் பாடசாலை காலங்களில் பெற்ற பயிற்சியும் எனது வாசிப்பு ஈடுபாடும் எனக்குள் ஏதோ இருப்பதை உணர்த்தின. அத்தோடு பல்கலைக்கழக சஞ்சிகை வெளியீடுகளும், சங்கப்பலகையும் என் எழுத்துக்கும் சிந்தனைக்கும் களமமைத்தன. சமூகத்தின் அவலங்களையும் பெண் படும் துயரங்களையும் இலக்கிய பங்களிப்பினூடாக தட்டிக் கேட்க முடியுமென்ற என் துணிச்சலுமே என் இலக்கிய பங்களிப்புக்கான சூழலை வடிவமைத்தது.


05. கவிதைகள் எழுதுவதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

என் ஊரின் அழகும் ஆச்சரியமும் எனை ரசிக்கத் தூண்டியமை. கந்தேனுவரை தமிழ் வித்தியாலய தமிழ்ப்பாட ஆசிரியை திருமதி பாக்கியலட்சுமி அவர்களின் தூண்டல். ஆமினா மகளிர் பாடசாலையின் என் உயர்தர வகுப்பு ஆசிரியர் திருமதி ஆயிஸா நோனா அவர்கள் எனை கவிதைப் போட்டிகளில் பங்குபெறச் செய்தமை. என்னுயிர்த் தோழி ரீஸா தந்த கவிதைப் பயிற்சி. உயர்தர வகுப்புத் தோழிகளின் ஒத்துழைப்பு என்பனவே என் கவிதை வாழ்க்கையை தீர்மானித்தன.

06. நீங்கள் வெளியிட்ட நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை 5 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை:-

01. நிழலின் காலடியோசை (கவிதைத் தொகுப்பு)
02. இலங்கையின் ஆட்சியாளர்கள் (வரலாறு)
03. வரலாற்று தேசப்படங்களும் பயிற்சிகளும் (தரம் 06 - 13 வரை)
04. இலங்கை வரலாறு (உயர்தர வகுப்பு பரீட்சை வழிகாட்டி நூல்)
05. ஐரோப்பிய வரலாறு (உயர்தர வகுப்பு பரீட்சை வழிகாட்டி நூல்)


07. அண்மையில் நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்று கூறுங்கள்?

இரக்கமற்ற சகலருக்கும்!

இரக்கமென்பது
வரட்டு கௌரவமில்லை
அதுவொரு வாஞ்சை..
நேசிப்பவர்களுக்கு
இன்முகம் காட்டும் நேர்மை..
வாசிப்பவர்களுக்கும் கூட
வசந்தம் தூவும் புத்துணர்வு..

இந்த யுத்த பூமியை
சாந்தி இல்லமாய்
மாற்ற  விழையும்
ஒரு சாத்வீக ஆயுதம்..

அதைக்கூட இம்சையாய்ப் பார்த்து
இழித்துரைத்துப் பேச
ஏனிந்த சனக்கூட்டம்
இப்படி முண்டியடிக்கிறது?

அன்புதான்
அமைதி தேசத்துக்கான
முதல் விதை..
அதிலும் நாம் விசம் கலந்தால்
எப்படித்தான் விடியும்  அகிலம்?

கருணையற்ற உலகமதில்
பேய்களும் பிசாசுகளும்
இராஜாங்கம் நடத்த
மனிதம் என்பது மட்டும்
ஆவியாகக் கூட
அலைய இடமின்றி
அலைக்கழித்துத் திணரும்
அற்புத உலகொன்றிலா
நாம் வாழப் போகிறோம்?


08. நாடகத் துறையில் உங்களது ஈடுபாடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்? இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் எத்தனை அவை பற்றியும் குறிப்பிடுங்கள்?

சிறுவயதிலிருந்தே எமதூரில் நடைபெறும் நாடக கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். கந்தேனுவரை பாடசாலையில் படிக்கும்போது எனது தமிழ்ப்பாட ஆசிரியை தயாரித்த ஷஷகடவுளைக் காட்டிய சிறும|| எனும் நாடகத்தில் ஒரு இளவரசராக தோன்றி அனைவரதும் பாராட்டையும் பெற்றேன். அப்போதிருந்தே துளிர்த்த நாடக ஈடுபாடு ஆசிரியையான பின் தமிழ்த்தின, மீலாத் போட்டிகளுக்கான நாடகங்களை எழுதத் தொடங்கினேன்.

01. கவ்வாத்து மலைக் கனவுகள்
02. கல்யாண ஊர்வலம்
03. ஸ்கைப் கல்யாணம்

என நானெழுதிய மூன்று நாடகங்களுமே அகில இலங்கை ரீதியாக முதலிடத்தை பெற்றுக்கொண்டன.

எனது நாடகத்துறை வெற்றியில் மறைந்த அரபு எழுத்தணிக் கலைஞர், உக்குவளை இஸ்லாமிய எழுத்தாளர் அமைப்பு தலைவர் ரைத்தலாவெல அஸீஸ் அவர்களுக்கும் பங்குண்டு. காரணம் அவரால் தயாரிக்கப்பட்டு கந்துரட்ட வானொலி பதிவு செய்த ஷஷகனம் கோட்டார் அவர்களே|| எனும் நாடகத்தில் ஒரு பெண் வழக்கறிஞராக குரல் கொடுக்கும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி, நாடக தயாரிப்பு பற்றிய அறிவுரைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம் வானொலியின் சஞ்சாரம் நிகழ்ச்சி எனது ஷஷதிருமண ஊர்வலம்|| நாடக பிரதியை இரு முறை ஒளிபரப்பியது. திக்வல்லை ஸப்வான் அவர்கள் அடிக்கடி நாடக பிரதியை அனுப்புமாறு கேட்டபோதும் எனது வேலைப்பளு காரணமாக முடியாமல் போனது. இன்ஷா அல்லாஹ் எழுதுவேன்.

09. தொழில் மற்றும் வீட்டுப் பொறுப்புக்களுக்கு மத்தியில் இலக்கியப் பங்களிப்புக்கள் செய்வது சிரமம் என்று நினைக்கவில்லையா?

வீட்டு பொறுப்புக்களுக்கு மத்தியில் இலக்கிய பங்களிப்பு செய்வது சிரமமான காரியம் என்ற காரணத்தினால்தான் இன்று அதிகமான முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் களத்திலிருந்து காணாமல் போயிருக்கிறார்கள். எனவே குடும்பமும், தொழிலும் எந்தளவுக்கு முக்கியமானதோ அதுபோலவே சமூக பொறுப்பும் முக்கியம் எனக் கருதி அதற்கேற்றாற் போல எனது செயற்பாடுகளை ஒழுங்கு படுத்துகிறேன். அவற்றை இலகுபடுத்திக் கொள்வதில் எனது கணவர் (கலீல்) எப்போதும் முன்னிற்கிறார். அதனால் என் இலக்கிய பயணம் தொடர்ந்து செல்லுமென்றே எதிர்பார்க்கின்றேன்.

10. கவிதை, நாடகம் தவிர வேறு எந்தத் துறைகளில் ஈடுபாடு உள்ளது?

கவிதை, நாடகம் என்பனவற்றோடு பேச்சு, ஆய்வு, மாணவர்களுக்கான நூல் வெளியீடு, சமூகப்பணி, முஸ்லிம் பெண்கள் விழிப்புணர்வு செயற்பாடுகள் என என் துறைகள் விரிவடைந்துகொண்டே செல்கிறது.

11. உங்கள் படைப்புக்களுக்கான ஊடகங்களின் உதவி எந்தளவில் உள்ளது?

பாடசாலை காலத்திலிருந்தே எழுதி வருகிறேன். அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு எதை அனுப்பினாலும் பிரசுரமாவதில்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஞானம் சஞ்சிகை என் கவிதைகளுக்கு களம் தந்தது. எனினும் இன்று சமூக வலைதளங்களில் நாங்களாகவே முன் வந்து எங்களது திறமைகளை வெளிக்காட்டத் தொடங்கிய பின்னரே ஏனைய அச்சூடகங்களும் எம்மை வரவேற்கத் தொடங்கியிருப்பதாக கருதுகிறேன்.


12. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

எனக்கு பிடித்த இந்திய எழுத்தாளர்களாக கல்கி, மு.வரதராஜன், ஜெயகாந்தன், அகிலன், பார்த்தசாரதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இலங்கையில் மாத்தளை மலரன்பன், அல் அஸுமத், லறீனா அப்துல் ஹக், தி.ஞானசேகரன், அந்தனி ஜீவா ஆகியோர் என்பேன். என்னைப் பாதித்த கவிஞர்கள் மு.மேத்தா, பஹீமா ஜஹான் போன்றோராவார்.

13.  இதுவரை கிடைத்துள்ள பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அதிகமான சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்றுள்ளேன். தேசிய ரீதியாக 45 ஆவது முஸ்லிம் கல்வி மகாநாடு நடத்திய திறந்த ஆய்வு கட்டுரை போட்டியில் முதலிடம், 2002 இல் உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மகாநாடு நடத்திய ஆய்வு கட்டுரை போட்டியில் மூன்றாமிடம் பெற்றேன். சாகித்திய கலையிலக்கிய போட்டிகளில் கவிதை, பாடலாக்கம், கட்டுரைகளுக்கு பல முதலிடங்களைப் பெற்றுள்ளேன். 2011 இல் மலேசியாவில் இடம் பெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. 2014 மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான விபுலானந்தர் மன்றம் ஷஷமலையக தமிழருவி' விருது வழங்கி கௌரவித்தது. 2016 டிசம்பரில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மகாநாட்டிலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். புகழனைத்தும் இறைவனுக்கே.

14. எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலை மாணவர்களுக்கான மூன்று நூல்களை அச்சில் வைத்துள்ளேன். சில சிறுகதைகள் எழுதும் ஆர்வத்திலுள்ளேன். ஒரு கவிதை நூல் வெளியீடு செய்யும் எண்ணமும், ஒரு குறுந்திரைப்பட முயற்சியில் இறங்கும் எண்ணமும் உள்ளது.


15. புதிதாக எழுதத்துவங்கும் எழுத்தாளர்களுக்கு என்ன கூறுவீர்கள்?

ஒரு புத்தகம் நூறு மனிதர்களுக்கு சமம் என்பார்கள். யார் எழுத வந்தாலும் வாசிப்பில் ஈடுபாடு இல்லையெனில் அவ்வெழுத்துக்கள் எதுவித சமூக அங்கீகாரத்தையும் பெறப்போவதில்லை. எனவே இந்த சமுதாயத்தை வாசிப்புடைய சமுதாயமாக மாற்ற வேண்டுமெனில் வாசிப்பு நிறைந்த எழுத்தாளர்கள் உருவாதல் அவசியம். எழுதுதல் என்பது ஓர் இறைப்பணி அதனால்தான் ஒரு பேனா முனை கூரிய வாளைவிட வலிமையானது எனப்படுகிறது. எனவே எழுதத் தொடங்குபவர்கள் எந்த சூழ்நிலை வந்தாலும் எழுதுவதை கைவிடமாட்டேன் என்ற துணிச்சலோடு வாருங்கள் வெற்றி நிச்சயம்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Wednesday, July 5, 2017

28. ஹாஜியானி மர்ளியா சித்தீக் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.02.12

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தளராது சமூக சேவையாற்றும் ஹாஜியானி மர்ளியா சித்தீக்


 சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஹாஜியானி மர்ளியா சித்தீக் 'சேவை ஜோதி', 'சேவையின் செம்மல்' போன்ற பட்டங்கள் சூட்டி கௌரவிக்கப்பட்டவர். பெண் குலத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழும் இந்த மாதர் சிரோன்மணி ஆசிரியையாக, அதிபராக பல பதவிகளை வகித்து மாணவச் சிறார்களுக்கு மகத்தான சேவைகள் செய்தவர். தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் தன் பணிகளிலிருந்து ஓயாது செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர் கொழும்பு லெயார்ட்ஸ் புரோட்வேயைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவை சொய்ஸாபுரயை வசிப்பிடமாகவும் கொண்டவர்.


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

'நான் மருதானை கிளிப்டன் பாலிகா வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றேன். எஸ்.எஸ்.சீ. பரீட்சையில் சித்தியடைந்ததுமே எனக்கு ஆசிரியர் நியமனமும் கிடைத்துவிட்டது. அப்போது எனக்கு வயது இருபது.

1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பிரபல கல்விமானான ஏ.எம். சமீமின் சகோதரரான ஏ.எம். சித்தீக் என்பவரை கரம் பிடித்தேன். எனக்கு ஒரு மகனும் நான்கு மகள்மாரும் பிறந்தனர். பின்னர் அளுத்கமையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றேன். பயிற்சி முடிந்ததும் கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையிலுள்ள பாத்திமா மகளிர் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியராக நியமனம் கிடைத்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சுமார் 21 வருட கால சேவையை அடுத்து நான் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள அல் இக்பால் வித்தியாலய அதிபராக பதவி உயர்வு பெற்றேன். அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த காலஞ்சென்ற ஜாபிர் ஏ. காதரின் அயராத முயற்சியினால் இப்பாடசாலை ஒரு மகளிர் பாடசாலையாக மறுசீரமைக்கப்பட்டது. அதன்பின்னர்  இப்பாடசாலையின் முதலாவது பெண் அதிபராகப் பதவியேற்று சுமார் 16 வருடங்கள் கடமை புரிந்து ஓய்வு பெற்றேன்.

1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி என் கணவர் திடீரென மாரடைப்பினால் காலமானார். என் வாழ்வில் நான் சந்தித்த பேரிழப்பு இதுதான். கணவர் காலமான போது எனது பிள்ளைகள் ஐவரும் சிறியவர்கள். இவர்களை எப்படி வளர்ப்பது? இவர்களுக்கு நல்ல கல்வியை எங்ஙனம் வழங்குவது? வாழ்க்கை எனும் வண்டியை எப்படி செலுத்துவது? என்றெல்லாம் நான் தவித்த நாட்கள் எத்தனை எத்தனையோ? இக்காலகட்டத்தில் நான் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்கா. அவற்றை இன்று நினைத்தாலும் கண்கள் குளமாகின்றன. எனினும் நான் மனம் தளரவில்லை. என்னால் முடிந்தவரை முயன்று என் அன்புச் செல்வங்களுக்கு கல்வியை நன்கு புகட்டினேன். கல்வி கலங்கரை விளக்கல்லவா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனது பிள்ளைகள் எல்லோரும் நன்கு படித்து, பட்டம் பெற்று அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். என்னையும் நன்கு பராமரிக்கிறார்கள். இது எனது நெஞ்சுக்கு நிம்மதியைத் தருகின்றது.



02. அதிபராக பதவியேற்ற பின்னர் நீங்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் பற்றி?

பல்வேறு அழுத்தங்களை சந்திக்க நேர்ந்தது. 1983 ஆம் ஆண்டு ஜுலை வன்செயல் இடம் பெற்ற கால கட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனது பாடசாலையில் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியைகளும் கடமையாற்றினர். இவர்களை சந்தேகித்து பொலீஸார் கைது செய்ய வந்தனர். அவர்களைப் பாதுகாக்க நான் பட்டபாடு பெரும்பாடுதான். எனது உடன் பிறந்த சகோதரிகளாக நான் அவர்களை கவனித்தேன். பராமரித்தேன்.


03. சமூக சேவையில் உங்களுக்கு எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது?

முன்னாள் சுகாதார அமைச்சரான ஜாபீர் ஏ. காதரின் துணைவியார் தலைமையில் இயங்கிய முஸ்லிம் மாதர் கல்வி வட்டம் மூலம் எமது பாடசாலையில் மாணவிகளுக்கு சுறுக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து வகுப்புகளும், கேக் தயாரிக்கும் முறைகள் பற்றிய வகுப்புகளும் நடைபெற்றன. இவற்றுக்கெல்லாம் பக்க பலமாக நான் செயல்பட்டேன். இதன் மூலமே எனக்கும் சமூக சேவையில் நாட்டம் ஏற்பட்டது. படிப்படியாக பல சங்கங்களில் அங்கத்தவராக இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டேன்.


04. நீங்கள் அங்கம் வகிக்கும் மாதர் சங்கங்கள் பற்றி குறிப்பிடுங்களேன்?

இளம் முஸ்லிம் மாதர் சங்கம் ; (Young Women’s Muslim Association - YWMA)> முஸ்லிம் மாதர் கல்வி வட்டம் (Muslim Ladies Study Circle)> All Ceylon Muslim’s Womens Conference, Srilanka House Wives Association, Srilanka – Pakistan Friendship Association, All Ceylon Moors Ladies Union போன்ற அமைப்புகளில் எல்லாம் பல்வேறு பதவிகளை வகிக்கின்றேன்.

இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் பொதுச் செயலாளராக சுமார் 12 வருடங்கள் கடமை புரிந்தேன். தற்சமயம் அச்சங்கத்தின் உப தலைவியாக உள்ளேன்.


05. மனம் தளராமல் சமூக சேவை செய்கிறீர்கள். சுறுசுறுப்பாக இயங்குகிறீர்கள். இதன் இரகசியம் என்ன?

எனக்கு தற்சமயம் 75 வயதாகிறது. எனினும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நான் இன்னும் திடகாத்திரமாகவே இருக்கிறேன். சமூக சேவையில் எனக்குள்ள ஆர்வத்தின் காரணமாகவோ என்னவோ  நான் எப்போதும் திடமான மனதுடன் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். எனவே அந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தியவளாக தொடர்ந்தும் மன வலிமையை வரவழைத்துக் கொண்டு எனது சேவையைத் தொடருகிறேன். எனது உடன் பிறந்த சகோதரர்கள் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். அவர்கள் மூலமும் மற்றும் தனவந்தர்கள் மூலமும் வலது குறைந்தோருக்கு சக்கர நாற்காலிகளை எமது அமைப்பின் மூலமாக வழங்கி வருகிறேன்.

விதவையருக்கு உதவி புரிதல், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்குதல், அப்பியாசக் கொப்பிகளை வழங்குதல், ரமலான் மாதத்தில் வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் எமது சங்கங்களுடன் இணைந்து என்னாலான பங்களிப்பைச் செய்துகொண்டு வருகிறேன். இத்தகைய சமூக சேவைகளில்தான் நான் இன்பம் காண்கிறேன்.


06. சமூக சேவையில் ஒன்றிப்போன உங்களின் சேவைகளைப் பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபற்றி?

அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் எனக்கு 'சாமஸ்ரீ', 'தேசமான்ய', 'தேச சக்தி', 'தேச கீர்த்தி', 'ஜபருல் அமல்' (சேவை இரத்தினம்) ஆகிய பட்டங்கள் கிடைத்துள்ளன. மனித உரிமை மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் 'சேவை ஜோதி' என்ற பட்டமும், தடாகம் கலை இலக்கிய வட்டம் கல்வி கலை கலாசார பண்ணாட்டு அமைப்பினால் ''தன்னம்பிக்கைச் சுடர்'' என்ற பட்டமும் எனக்கு வழங்கப்பட்டன.


07. இன்று எடுத்ததுக்கெல்லாம் பொன்னாடைகளும் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. ஒரு ஐயாயிரம் ரூபாவை  கொடுத்தால் தமக்கு வேண்டிய பட்டங்களையும், விருதுகளையும் வழங்க எத்தனையோ அமைப்புகள் இன்று புற்றீசல் போல் முளைத்துள்ளதாக குற்றஞ் சாட்டப்படுகின்றதே? இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?


தகுதி பெற்றவர்களுக்கு, சேவை செய்பவர்களுக்கு இந்த கௌரவங்களை வழங்கினால்தான் அதற்கொரு அர்த்தம் இருக்கும். வருபவர் போவோருக்கெல்லாம் பணத்துக்காக பொன்னாடைகளை போர்த்தி, பட்டங்கள் சூட்டுவது பொருத்தமற்ற செயலாகும். சேவை செய்யாமல் - தகுதி இல்லாமல்- ஆற்றல் இல்லாமல் - பணத்தைக் கொடுத்து பட்டங்களையும், விருதுகளையும் வாங்குவது அகௌரவமான செயலாகும். எனவே பொருத்தமானவர்களுக்கு மட்டுமே இத்தகைய கௌரவங்களை வழங்குமாறு நான் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தாழ்மையாய் கேட்டுக் கொள்கிறேன்.


08. இலக்கியத் துறையில் உங்களது பங்களிப்புகள் என்ன?

நான் ஒரு இலக்கிய ஆர்வலர். இலங்கையில் நடந்த உலக தமிழ் இலக்கிய மாநாடுகள் மட்டுமன்றி மலேசியாவிலும், தமிழ்நாடு காயல்பட்டணத்திலும் நடைபெற்ற உலக தமிழ் இலக்கிய மாநாடுகளில் பங்குபற்றி தமிழ் தேனை அள்ளிப் பருகியவள் நான். இதுவரை எந்த ஒரு புத்தகத்தையும் நான் எழுதி வெளியிடவில்லை. எனினும் இலக்கிய உலகில் வெளிவரும் அனைத்து புத்தக வெளியீட்டு வைபவங்களுக்கும் சென்று ஒரு புத்தகத்தை வாங்கி அந்த எழுத்தாளரை ஊக்கப்படுத்துவது என் வழக்கம். அவ்வாறே தாய்மொழி தமிழ் என்பதால் தமிழ் மொழியை நேசிப்பவள். எனவே கையில் கிடைக்கும் எல்லாப் புத்தகங்களையும் வாசிப்பேன்.


09. புத்தக வெளியீடுகளுக்கு செல்லும் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தானும் எழுத வேண்டும் என்ற ஆசை வரவில்லையா?

ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆசை நெடுநாளாக என் உள்ளத்தில் துளிர்விட்டது. எனவே எனது சுயசரிதையை ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். அந்தக் கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தற்சமயம் எனது வாழ்க்கையில், நான் சந்தித்த அனுபவங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் நான் எழுதும் இந்நூலை ரூபவாஹினி முன்னாள் பணிப்பாளரான பிரபல ஒளி - ஒலிபரப்பாளர் ரஷீத். எம். ஹபீல் தமிழ் மொழியாக்கம் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அல்லாஹ் நாடினால் விரைவில் எனது இந்நூல் இலக்கியவாதிகளின் கைகளில் தவழும்.

'சேவை செய்வதே ஆனந்தம்' என்ற பாடல் வரிகளுக்கேற்ப சமூக சேவையிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள இவர் நீண்ட காலம் வாழ்ந்து சமூகத்துக்கு மென்மேலும் சேவை செய்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு தேகாரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும்  கொடுக்க வேண்டும் எனவும், சமூக சேவைக்கான அதி உயர் அரச விருதும் இவருக்கு கிடைக்க  வேண்டும் எனவும்  நாமும் உளமார வாழ்த்துகிறோம்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

குறிப்பு - இந்த நேர்காணலை எடுக்க உதவி செய்த கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.


Sunday, March 26, 2017

27. கெகிறாவ ஸஹானா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.12.03

கெகிறாவ ஸஹானா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை கெகிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை கம்பளை ஸாஹிறாக் கல்லூரியிலும் கற்றேன். ஆங்கில மொழி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி 1991 இல் பதவியேற்று, இருபது வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியபின் தற்போது சுயவிருப்பின் பேரில் ஓய்வு பெற்றிருக்கின்றேன்.


02. இலக்கியம் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

எனது வீட்டில் அனைவரும் தீவிர வாசகர்கள். பத்திரிகைகள் படிப்பார்கள்ளூ தொடர்கதைகளைப் பற்றி விமர்சிப்பார்கள்ளூ உலக விவகாரங்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். வீட்டில் தொடர்ந்து வாங்கிய மித்திரன் பத்திரிகையில் வந்த தொடர்கதைகளைப் படித்து அவற்றின் அடுத்த கட்டம்பற்றி யோசிப்பேன். வானொலியும், நல்ல சினிமாக்களும் எனது ஆற்றல்களை வளர்த்தன. எனது ஆசிரியர்களும் அதற்கு உதவினார்கள். பின்னாளில் சிறந்த எழுத்தாளர்களுடைய எழுத்துகளைப் படித்தேன். எனது சிந்தனைகள் பரந்தன.


 03. உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வெளிவந்தது?

15 வயதில் எழுதத் தொடங்கினேன். வானொலியில் பீ.எச். நடத்திய ஒலி மஞ்சரிக்கு எழுதிய முதல் கவிதை அவர் குரலில் ஒலிபரப்பானது. அந்நிகழ்ச்சிக்கு சிறுகதைகளும் எழுதினேன். அதற்கு முன்னர் சிறு துணுக்குகள் எழுதியுள்ளேன். 1989இல் முதல் பிரசுரம் மல்லிகையில். அடுத்தடுத்த இதழ்களில் கவிதைகளும் பிரசுரம் கண்டன.


04. ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்? புதுக் கவிதைக்கும், மரபுக் கவிதைக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?

கவிதையாக இருக்கவேண்டும். மனதைத் தொடலாம் அல்லது சுட்டெரிக்கலாம். ஆனால், கவிதைப் பண்பு இருக்க வேண்டும். அதுவே மரபுக் கவிதைக்கும், புதுக் கவிதைக்கும். ஆனால், புதுக் கவிதையின் நெகிழ்ச்சித் தன்மையும், வளைந்து கொடுக்கும் போக்கும் பலரைக் கவர்ந்திருக்கின்றது. அத்துடன், அதன் எளிமை எல்லோருக்கும் எழுதலாம் என்ற ஆசையைக் கொடுத்திருக்கின்றது. அதன் காரணமாக புதுக்கவிதை மிகப் பிரபலமாக ஆகிவிட்டது.


05. உங்களது சிறுகதைகளின் கருப்பொருட்கள் பற்றி?

எதையும் வரையறுத்து நான் எழுத முயலவில்லை. மனதில் பட்டதையும், மனதைப் பாதித்ததையும் அதிகம் எழுதியிருக்கிறேன். பெண்கள், குழந்தைகள், ஆண்கள், மிருகங்கள் என்று உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறேன். தனியாக ஒரு கருப்பொருளைத் தெரிவுசெய்து கொள்வது இக்கால எழுத்தாளன் ஒருவனுக்கு மிகச் சிரமமானது. அவன் அன்றாடம் காணுகின்ற, முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் இன்று ஏராளமாக உள்ளன. அத்துடன் அவன் சக மனிதனையும் எப்போதும் அவதானிக்கின்றவனாகவும், அவனில் தன்னைக் காண்பவனாகவும் இருப்பதனால் வரையறுத்து எழுதுவது கடினமானது.


06. இதுவரை நீங்கள் எழுதி வெளியிட்ட நூல்கள் எவை? நூல் வெளியீடுகளை எப்படி மேற்கொள்கிறீர்கள்?

இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளேன். அவையாவன:-

1. ஒரு தேவதைக் கனவு - சிறுகதை
2. இன்றைய வண்ணத்துப் பூச்சிகள் - கவிதை
3. ஒரு கூடும் இரு முட்டைகளும் - குறுநாவல்
4. சூழ ஓடும் நதி - ஆய்வு
5. மான சஞ்சாரம் - சுயசரிதை
6. இருட்தேர் - கவிதை
7. முடிவில் தொடங்கும் கதைகள்
8. அன்னையின் மகன் - நாவல்
9. ஊமையின் பாஷை - சிறுகதை

இந்த நூல்களை வெளியிட நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை மற்றும் வட மத்திய மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன அனுசரணை புரிந்துள்ளன. தனி முயற்சியாகவும் வெளியிட்டிருக்கிறேன்.


07. உள்ளுர், சர்வதேச எழுத்தாளர்களுடனான உங்களது தொடர்புகள், உறவுகள் எப்படியுள்ளது?

அனைத்து எழுத்தாளர்களது நூல்களையும் வாசிப்பேன். பொதுவாகக் கூறுவதாயின் சகல எழுத்தாளர்களுடனும் ஒரு சுமுகமான உறவு உள்ளது என்றே கூறிக் கொள்ளலாம்.


08. தற்போது வெளிவரும் பத்திரிகைகளின் இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றி யாது கூறுவீர்கள்?

தேர்ந்த வாசகன் ஒருவனைத் திருப்திப்படுத்துமளவிற்கு இல்லாவிட்டாலும், ஓரளவு நன்றாகவே செய்கின்றன. புதிய தலைமுறை ஆக்க கர்த்தாக்களுக்கு எழுதுவதற்கு அதிக வாய்ப்புகளும், இடங்களும் கொடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. சுருக்கமாகச் சொன்னால், எப்போதுமே இலக்கிய வளர்ச்சிக்கான ஆதரவு பத்திரிகைகள் மூலமாக கிடைப்பது உண்மையே.


09. இணையத் தளங்களின் வருகையினால் வாசிப்பு மட்டத்தின் நிலை பற்றிய உங்கள் கருத்தை கூறுங்கள்?

வாசிப்பையும், தகவல் பரிமாற்றத்தையும் வேகமான வளர்ச்சித் திசைக்கு நகர்த்தியுள்ளன. ஆழ்ந்த சிந்தனையையும், சுய கல்வி வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளன. புத்தகங்களைத் தேடித் திரிய வேண்டிய அவசியமின்மை பெரும் ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆசைப்படுகின்ற ஒன்றை விரல் நொடிப்பொழுதில் தேடிப் படித்துவிடலாம் என்பது எவ்வளவு சௌகரியமானது! எனினும், அதிலும் சில வரையறைகள் பேணப்படல் நன்று. வேகமும் மட்டுப்பட வேண்டும்.

10. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யாவர்?

தரம் பிரிக்கத் தெரியவில்லை. சொல்லும் பாணியில், சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொருவரைப் பிடிக்கின்றது. பிடிக்காததும் இருக்கின்றது. எப்போதும் என்னை வியப்பிலாழ்த்தும் எழுத்தே என்னைக் கவர்கின்றது. நாம் இதுகாறும் சொல்ல நினைக்காத ஒன்றை, சொல்லத் தெரியாமல் தவித்த ஒன்றை இவர் எப்படி இவ்வளவு அழகாகச் சொன்னார் என்ற வியப்பு அதுளூ எவ்வாறு இவ்வளவு நீளமாகச் சொன்னார் என்பதும் அதுவேளூ எவ்வளவு தைரியமாகச் சொன்னார் என்பதும் அதுவே.


11. எதிர்காலத்தில் எவ்வகையான இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்?

நாவல்கள். எப்போதும் நாவல்கள் என்னைப் பிரமிக்க வைக்கின்றன. அன்றைய வயதில் பொன்விலங்கு, குறிஞ்சிமலர் முதலாக இன்றுவரை படித்துள்ள எராளமான நாவல்கள் ஒவ்வொரு விதத்தில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. சிறிய உருவத்தில் இருந்தாலும், நாகம்மாள் சொன்ன செய்தியும் ஒரு பிரமிப்பே. மோகமுள் மிகப் பெரிய பிரமிப்பு. இலங்கையில் வீரகேசரிப் பிரசுரங்கள் பலவற்றைச் சிறு வயதில் படித்திருந்தாலும், இன்று அவற்றை உரிய பழைய வடிவத்தில் காணக்கிடைக்கவில்லை. அதை எண்ணும்போதும், அவை தற்போது கையில் அதே வடிவத்தில் கிடைத்தால் எவ்வளவு பரவசமாக இருக்கும் என்று எண்ணும்போதும், நாவல்களே எட்டாத கனியாக என்னை ஈர்க்கின்றன.


12. உங்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

* சிறுகதைக்கான தகவம் பரிசு

* தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கவிதைக்கான பரிசு

* மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது

* அரச சாகித்திய விழா சான்றிதழ்

* யாழ். கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ்

* பாராட்டப்படும் இளங்கலைஞர் - அகில உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய        மாநாடு (2002)


13. இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு என்ன கூறுவீர்கள்?

அதிகம் வாசியுங்கள்ளூ சிந்தியுங்கள். எழுதுங்கள். எழுதியதைச் சிறிது காலத்தின் பின்பு மீண்டும் படித்துப் பாருங்கள். திருத்தங்கள் இருப்பின் செம்மைப்படுத்துங்கள். பின்னர் பிரசுரியுங்கள். நிதானமாகப் புத்தகங்களை வெளியிடுங்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். மூத்த எழுத்தாளர்களது படைப்புகளையும், அவர்களது பணிகளையும் அறிந்து உணர்ந்துகொள்ளுங்கள். எல்லோருடனும் கலந்துரையாடுங்கள். கலந்துரையாடல்கள் பல தேடல்களுக்கு வழிவகுக்கும். தேடல் மூலமாகக் கண்டடைவதற்கு இலக்கியத்தில் நிறைய உண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் உண்டு. வசதிகளும் உண்டு!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Friday, January 27, 2017

26. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2016.06.26

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


 உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இயற்கை வண்ண எழில் கொஞ்சும் தியத்தலாவையை பிறப்பிடமாகக் கொண்டவள். எனது தந்தை கே.எம். ஹலால்தீன் அவர்கள். தாயார் பீ.யூ. நஸீஹா அவர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்). நான் கஹகொல்லை அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம், பண்டாரவளை சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் எனது கற்றல் செயற்பாடுகளைத் தொடர்ந்தேன். தனியார் நிறுவனங்களில் கணினிப் பயிற்சிப் பாடநெறிகளை நிறைவுசெய்து, பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் இதழியல்துறை பாடநெறியைப் பயின்றேன். தற்போது கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணி புரிகின்றேன்.


கவிதை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது? இந்த ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

இயற்கை அழகு என்னில் பல கற்பனைகளை விதைத்துவிட்டதாலும், இயல்பிலேயே வாசிப்புப் பழக்கம் எனக்குள் அதிகரித்துக் காணப்பட்டதாலும் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அதற்கான ஆரம்பகால முயற்சியாக எனது பாடசாலை பாடக்கொப்பிகளின் கடைசிப் பக்கங்களில் நான் சின்னச் சின்ன கவிதைகளை எழுதியிருக்கின்றேன். அவற்றை எதேச்சையாக கண்டுவிடும் நண்பர்கள் அவற்றைப் பாராட்டும்போது உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கிறேன். அதுவரை எனது வீட்டார் அறியாதிருந்த இறைவன் தந்த இந்த ஆற்றலை நான் பாடசாலை மட்டங்களில் கவிதை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில் மற்றும் சான்றிதழ்களைக் கொண்டுவந்து காட்டியபோது அறிந்துகொண்டார்கள். வாழ்த்தினார்கள். பத்திரிகைகளுக்கு அனுப்புமாறு சொன்னார்கள். பத்திரிகையில் முதன்முதலாக நான் எழுதியனுப்பிய கவிதை பிரசுரிக்கப்பட்டதைக் கண்டு மிக மகிழ்ந்தேன். அதிலிருந்தே என் எழுத்துப் பயணம் ஆரம்பமானது.


உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளிவந்தது?

2004 ஆம் ஆண்டு மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் காத்திருப்பு என்ற தலைப்பில் எனது முதலாவது கவிதை வெளியானது. அந்த அனுபவம் கூட அலாதியானது. ஏனெனில் வழமை போல நான் வாசிப்பதற்காகவே பத்திரிகையைப் புரட்டினேன். கவிதைகள் கருப்பு எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தன. கவிதைப் பக்கத்தை ஆழ்ந்து வாசிப்பதற்கு முதல் ஏனைய பக்கங்களையும் பார்த்துவிட்டு இறுதியில் கவிதைகளை என் கண்கள் மேய்ந்துகொண்டிருந்தன. அப்போதுதான் கறுப்பு பெட்டியில் வெள்ளை எழுத்துக்களாக என் கவிதை பிரசுரிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். கனவா என்று எண்ணினேன். அந்தத் தருணம் மறக்க முடியாதது.


படைப்பிலக்கியத் துறையில் சுமார் எத்தனை வருட காலம் பணியாற்றி வருகின்றீர்கள்? இதுவரை எத்தனை நூல்களை வெளியீடு செய்துள்ளீர்கள்? 

சுமார் 12 வருடங்களாக எனது எழுத்துப் பயணம் தொடர்கின்றது. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதுபோல் எனது வாசிப்பும் குடும்பத்தாரின் ஒத்தாசையும் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தபோதிலும், இன்று புத்தகங்களை வெளியிட்டு அறியப்பட்ட எழுத்தாளராக மாறிய ஒரு தருணம் இருக்கின்றது. அந்தத் தருணத்தை ஏற்படுத்தித் தந்தது (ரிம்ஸா முஹம்மத்) நீங்கள்தான். உங்களுக்கு என் முதற்கண் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டியது என் கடமையாகும். இதுவரை 09 நூல்கள் வெளியிட்டிருக்கின்றேன். அவை:-

01. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை) - 2012
02. வைகறை (சிறுகதை) - 2012
03. காக்கா குளிப்பு (சிறுவர் கதை) - 2012
04. மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) - 2012
05. வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை) - 2012
06. இதோ! பஞ்சு காய்கள் (சிறுவர் கதை) - 2012
07. திறந்த கதவுள் தெரிந்தவை (விமர்சனம்) - 2013
08. நட்சத்திரம் (சிறுவர் பாடல்கள்) - 2014
09. மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) - 2016


மெல்லிசைத் தூறல்கள் நூல் உங்கள் பாடல்களை மாத்திரம் உள்ளடக்கி வெளியிடப்பட்ட நூலா? மெல்லிசைத் தூறல்கள் என்ற உங்கள் பாடல் நூல் பற்றி சொல்லுங்கள்?

ஆம். எனது 36 பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை நூலாக வெளியிட்டேன். இப்பாடல்கள் ஆன்மீகம், சமூக அக்கரை, மனித நேயம், பெற்றோரின் பெருமை, காதல் ஆகியவற்றுடன் இன்னும் பல பாடுபொருள்களில் எழுதப்பட்டுள்ளன. மெல்லிசைத் தூறல்கள் என்ற இந்ந நூலுக்கு அணிந்துரையை பேராசிரியர் துரை மனோகரன் அவர்களும், வாழ்த்துரையை திருமதி. ரதி தேவசுந்தரம் அவர்களும் வழங்கியிருக்கின்றார்கள். அத்துடன் பின்னட்டைக் குறிப்பை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். நூலை வாசித்தவர்கள் பாடல்கள் குறித்து மிகவும் பாராட்டிப் பேசினார்கள். இந்தப் பாடல் துறையினூடாக நான் பல எழுத்தாளர்களது அறிமுகங்களைப் பெற்றிருக்கின்றேன். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகும்.


பாடல் துறையில் உங்களுக்கு எற்பட்ட ஆர்வம் பற்றி?

எனது தாயார் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளுக்காக இஸ்லாமிய பாடல்களை இயற்றுவார். அதை நான் நன்கு அவதானித்திருக்கின்றேன். அதே போல பாடசாலைத் தோழிகளுடன் சேர்ந்து சில பாடல் மெட்டுக்களுக்கு நான் பாடல் வரிகளை எழுதிருக்கின்றேன். அதன் பிறகு அண்மையில் ரூபவாஹினி அலைவரிசையில் இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு பாடல் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்தோடு மண்வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற 11 பாடலாசிரியர்களின் பாடல்களடங்கிய இறுவட்டிலும் எனது பாடல் இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. மேலும் பல இசையமைப் பாளர்களின் பார்வைக்கு எனது பாடல்களை அனுப்பியிருக்கின்றேன். நேரம் கூடிவருகையில் வரிகள் இசையைப் பெற்று பாடலாக வெளிவரும்.


கவிதையை எழுதுவதற்கும், பாடல்களை எழுதுவதற்கும் எம்மாதிரியான வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

கவிதைகள் ஒரு சீரான நடையில் எழுத வேண்டும் என்ற வரையறைக்குள் அடங்குவதில்லை. உணர்வுகளை வெளிப்படுத்தி கருத்துச் செறிவுடன் புதுக் கவிதையாகவோ மரபுக் கவிதையாகவோ எழுதப்படுகின்றது. பாடல்களைப் பொறுத்தளவில் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகியன ஒன்றுக்கொன்று ஒத்த கருத்துடையனவாகவும் முதலாம் சரணமும் இரண்டாம் சரணமும் வார்த்தைப் பிசகின்றி ஒரே தாள லயத்துடன் பாடக்கூடிய விதத்திலும் அமைந்திருத்தல் அவசியமாகும். அத்துடன் இவை ரசிகர்களின் முணுமுணுப்புக்கு ஏற்றாற்போன்ற வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டும், அழகிய கற்பனைகளைக் கொண்டும் அமைந்திருப்பது அவசியமாகும்.


தொலைக்காட்சி, வானொலிகளில் உங்கள் பாடல்கள் ஒளி, ஒலிபரப்பப்பட்டள்ளனவா?

இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற எனது பாடல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தானத்தின் நேத்ரா அலை வரிசையில் திரு. டோனி ஹஸன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்டது. அத்துடன் மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற பாடல் ஈழத்து இசை முரசு பாடகர் கலைக்கமல் அவர்களாலும் இசையமைத்து பாடப்பட்டுள்ளதுடன் அவர் வெளியிட்ட மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற பாடல் இறுவட்டிலும் வெளிவந்துள்ளது. இப்பாடல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.


நீங்கள் எழுதிய பாடல் வரிகளை பாடகரின் குரலில் கேட்கும் போது உங்களது மனநிலை எப்படியிருக்கும்?

அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாது. நாம் எழுதிய வரிகளின் இன்னொரு கலைஞரின் இசைக்கும், குரலுக்கும் உட்பட்டு ஒரு பாடலாக வெளிவருகின்றபோது அதை ரசிக்கும் முதல் ரசிகனாக பாடலாசிரியரே காணப்படுவார் என்பது என்னளவில் நிஜமானது.


கவிஞர்கள் சிலர் மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதில் அக்கரை காட்டுவது ஏன்?

கவிஞர்கள் பொதுவாக இளகிய மனம் படைத்தவர்கள். அவர்களுக்கு கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் படைப்பாக்கம் செய்யும் திறன் அவர்களிடம் காணப்படுகின்றது. அந்தவகையில் மெல்லிசைப் பாடல்களுக்கான இலகுவான வரிகளை எழுதிவிட அவர்களது உள்ளம் துடிக்கின்றது. அதேபோல இசையமைப்பாளர்கள் பாடல் எழுதுவதற்காக அநேகமாக கவிஞர்களையே நாடுகின்றார்கள். இதன் காரணமாக இத்துறையிலும் ஈடுபாடு காட்ட கவிஞர்களால் முடியுமாக இருக்கிறது எனலாம்.


இதுவரை எத்தனை பாடல்களை எழுதியிருக்கிறீர்கள்?

இதுவரை 70 தொடக்கம் 80 வரையான பாடல்களை எழுதியிருக்கின்றேன். இவை தவிர பல பாடல்கள் இன்னும் முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்றன. தொழில் நடவடிக்கைகளின் காரணமாகவும், ஏனைய துறைசார்ந்த படைப்புக்கள் காரணமாகவும் முழுதாக இத்துறையில் ஈடுபட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றமை இந்தப் பின்னடைவுக்குக் காரணம். எனினும் ஓய்வுநேரங்கள் கிடைக்கும் வரை காத்திருக்காமல் நேரம் ஒதுக்கிக்கொண்டு என் பாடல்களை வெகு சீக்கிரம் அழகாக செதுக்கிக்கொள்வேன்.


நீங்கள் பாடல்கள் எழுதும் போது கூடுதலாக எதனை மையப்படுத்தி எழுதுகிறீர்கள்?

இசையமைப்பாளர்கள் பல்வேறுபட்ட சூழ்நிலைகளைச் சொல்லி பாடல் வரிகள் எழுதித் தருமாறு கேட்டபார்கள். சில அமைப்புக்கள் பாடல் போட்டிகள் குறித்த தலைப்புக்களைத் தந்து பாடல்களை எழுதுமாறு பணித்திருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவிர, என் மனதுக்கு  குதூகலமளிக்கக் கூடிய எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி நான் பாடல்களை எழுதியிருக்கின்றேன். எழுதி வருகின்றேன்.


ஒரு பாடலை வழி நடத்துவது இசை அல்லது மெட்டு என்றால் அங்கே பாடலாசிரியரின் பங்களிப்பு எப்படி அமைகிறது?

சில பாடலாசிரியர்கள் இசைக்கு பாட்டெழுதுவார்கள், சிலர் பாடலாசிரியர்கள் தாம் ஏற்கனவே எழுதி வைத்த பாடல் வரிகளை இசையமைப்பாளர்களிடம் கொடுப்பார்கள். சில இசையமைப்பாளர்கள் தேவைப்பட்டால் தமக்கு ஏற்றாற்போல சொற்களை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சிலர் இசையமைப்பாளருடன் ஒன்றாக இருந்து பாடலை உடனே எழுதுவார்கள். எந்த வகை என்றாலும் பாடலாசிரியர் தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு பாட்டெழுதும் சூழ்நிலையே காணப்படுகின்றது. வரியோ, இசையோ தனித்து நின்று பாடலை வழிநடத்துவது இயலாத காரியம். வரியும் இசையும் நன்றாக இருந்தால் பாடல் சிறப்பாக அமையும்.


தற்காலப் பாடல்களுக்கு ஆயுள் குறைவு. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

இத்தகைய மனப்போக்கு சிலரிடம் காணப்பட்டு வருவது உண்மை. அதற்கான காரணம் பழைய பாடல்கள் கருத்து செறிவுள்ளதாக அமைந்திருந்ததுடன் மக்களும் பாடல்களை விரும்பி ரசித்தமையாகும். அதுபோல அவை காலத்தால் அழியாத இசையைப் பெற்றிருந்தமையுமாகும். இன்று பல இசையமைப்பாளர்கள் உருவாகியதன் பின்னணியில் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய இசையமைப்புக்கள் மிகவும் அரிதாகக் காணப்படுவதுடன் அநேக பாடல்கள்; இரட்டை அர்த்தம் தரக்கூடிய, கிளர்ச்சியூட்டக் கூடியனவாக இருப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடல் கேட்பதற்கும் பாடுவதற்கும் அனுமதிப்பதில்லை. அதுதவிர இன்று சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடும் பலர் ஒரு கலைஞனின் படைப்புக்களை பார்ப்பதைவிட வீணாக நேரம் கழிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.


உங்களுக்கு கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பரிசுகள்

2011 ஆம் ஆண்டில் ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், புத்தகப் பரிசும்

2011 ஆம் ஆண்டில் யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்

2011 ஆம் ஆண்டில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்

2012 ஆம் ஆண்டில் யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டும் பத்திரமும், பணப்பரிசும், பதக்கமும்

2014 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கம்பன் கழக கவிதைப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமைக்கான சான்றிதழும் வெள்ளிப் பதக்கமும்

2015 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கம்பன் கழக கவிதைப்போட்டியில் முதலாம் இடம் பெற்றமைக்கான சான்றிதழும் தங்கப் பதக்கமும்

2016 ஆம் ஆண்டு தெல்லிப்பளை கலை இலக்கியக் களம் தேசிய ரீதியில் நடத்திய திறந்த மட்ட கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்றமைக்காக சான்றிதழும் பணப்பரிசும்

விருதுகள்

 சிறந்த பாடலாசிரியர்
 சிறந்த சிறுகதை எழுத்தாளர்
 காவிய பிரதீப
 எழுசுடர்


எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இன்னும் இரண்டு கவிதை நூல்களும், ஒரு பாடல் நூலும், சிறுவர் பாடல் நூலும் கைவசம் இருக்கின்றன. அவற்றையும் வெளியிட வேண்டும் என்பதே தற்போதைய திட்டம்.


உங்களுக்கென்று வலைத்தளங்கள் இருக்கின்றனவா?

ஆம். எனது கவிதைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், பாடல்கள், சிறுவர் படைப்புக்கள் ஆகியவற்றுக்காக நான் 05 வலைத்தளங்களை உருவாக்கி அதில் பதிவேற்றி வருகின்றேன். அவை பின்வருமாறு:-


புதிய எழுத்தாளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

எழுத்தாளராக பரிணமிக்க விரும்புபவர்கள் ஏனைய காத்திரமான எழுத்தாளர்களின் படைப்புக்கள் யாவற்றையும் வாசிக்க வேண்டும். எடுத்த எடுப்பில் ஒருவர் பிரபலமாக வேண்டும் என்றோ முகப்புத்தகத்தில் மூழ்கிக் கிடப்பதனாலோ அல்லது பலர் லைக் இடுகின்றார்கள் என்பதற்காகவோ தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்று எண்ணும் எண்ணத்தைக் கைவிட்டு, யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். கவிதைகளை மாத்திரம் எழுதுவதால் எழுத்தாளராக முடியாது. இலக்கியத்தின் ஏனைய பக்கங்களையும் புரட்டிப் பார்க்க வேண்டும். வாசிப்பில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்