பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, March 8, 2024

59. எழுத்தாளர் கீதா கணேஷ் அவர்களுடனான நேர்காணல்

தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழித் துறை விரிவுரையாளரும் எழுத்தாளருமான கீதா கணேஷ் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


முதலில் உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்வு பற்றியும் குறிப்பிடுங்கள்?

கீதா கணேஷ் என்ற பெயரில் எழுதிவரும் நான், ஈழத்தின் வடக்கே அமைந்த தீவுப் பிரதேசமாகிய வேலணை மேற்கு சிற்பனை எனும் கிராமத்தில் பிறந்தேன். 1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வில் அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் பல்வேறு இடங்களில் வசித்து வந்தோம். எங்கள் குடும்பத்தில் மூன்று சகோதரிகளும் சகோதரனுமாக நாங்கள் ஐந்து பிள்ளைகள். தங்கை முகாமைத்துவப் பட்டதாரி, சகோதரர் பொறியியலாளர். எனது கணவர் திரு. கவாஸ்கர் கணக்காளராகப் பணிபுரிகின்றார். லோககீதா கணேசலிங்கம் எனது இயற்பெயராயினும் கீதா கணேஷ் என்ற பெயரிலேயே நான் திருமணத்தின் பின்னும் சிறுகதைகளை எழுதி வருகிறேன்.

நாங்கள் பாடசாலைக் காலத்திலேயே பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து, பின்னர் வவுனியாவில் எமது பாடசாலைக் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. அதுவரை பல்வகைச் சூழலுக்குள் வாழவேண்டியிருந்தோம். வவுனியா வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரையான கல்வியையும் உயர்தரக் கல்வியை வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரியிலும் கற்றேன். தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானேன். 

பாடசாலைக் கல்வி எனது இணை பாடவிதான செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் அடித்தளமிட்டது. அந்த அடித்தளம் பல்கலைக்கழக வாழ்விலும் தொடர்ந்தது. அதனாலேயே யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றேன். பல்கலைக்கழகக் கல்வி பல்வேறு மாணவர்களுடன் பழகுவதற்கான சூழலையும் பல்வேறு அனுபவங்களையும் பெற்றுத் தந்தது. பல்கலைக்கழக கல்வியின் பின்னர் வீரகேசரிப் தலைமைப் பத்திரிகைக் காரியாலயத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரிவதற்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டு அங்கு பணிபுரிந்தேன். இங்கு பணிபுரிந்துகொண்டிருந்த சிறிது காலத்தில் இலங்கை ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பித்து ஆசிரியராகப் பணிபுரிந்தேன். பாணந்துறை அல் பஹ்றியா முஸ்லிம் வித்தியாலயத்திலேயே எனக்கு முதல் நியமனம் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு மாற்றலாகி கடமையாற்றினேன். அதன் பின்னர் 2017 இலிருந்து இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழித் துறையில் விரிவுரையாளராகப் பதவியேற்று தற்போது வரை அங்கு கடமையாற்றி வருகிறேன்.


இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்படக் காரணமாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?

இலக்கியத்துறை ஈடுபாட்டிற்குக் காரணமாக வாசிப்பு அனுபவம், கேட்டல் மற்றும் அதனூடான தேடலும் பிரதான காரணங்களாக அமைந்தன. பாடசாலைக் காலத்திலிருந்தே வகுப்பறைச் சூழல் வாசிப்பிற்கான களமாக அமைந்தது. இலக்கியத் தேடலை ஆர்வப்படுத்தும் வகையிலான நூல்கள், பத்திரிகைகள் வாசிப்பதற்கான ஊடகங்கங்களாக அமைந்தன. தனியே சுயதேடல் மூலமான வாசிப்பு என்பதற்கப்பால் சில விடயங்களை செவிமடுத்தலின் ஊடாக நாங்கள் வாசித்த அந்த இலக்கியச் சுவையை அனுபவிக்க வேண்டும் என்ற உந்துதல் இலக்கியத்தின் மீதான நாட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

குறிப்பாக எங்களுடைய அம்மா பல வகையான விடயங்களை வாசித்து அவற்றை எங்களோடு பகிர்ந்துகொள்வார். ஆன்மிகக் கருத்துக்களாயினும் சரி, இலக்கியக் கருத்துக்களாயினும் சரி தான் வாசித்தவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அந்தவிடயத் தொற்றுதலுக்கப்பால் ஒரு தேடல், நானும் வாசித்து அறிய வேண்டும், பல விடயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தாகத்தை என்னுள் ஏற்படுத்தியது. அம்மா தான் வாசித்து அறிந்த விடயங்களை மிகச் சாதாரணமாகத்தான் எங்களுக்குக் கூறுவார். இதை நாங்கள் படிக்க வேண்டும் என்ற எந்தவிதமான திணிப்பும் அங்கு இருக்காது. பாடசாலையில் சென்றுதான் எல்லா விடயங்களையும் கற்க வேண்டும் என்ற எண்ணப்பாடுகளுக்கு அப்பால் அம்மாவின் வாசிப்புப் பகிர்வுதான் எனக்குள் தேடலை ஆரம்பித்தது. 

உதாரணமாக நான் சிறுமியாக இருந்த போது அம்மா, அபிராமிப்பட்டரின் அபிராமி அந்தாதி படித்துக் கொண்டிருப்பார். அப்போது அந்தாதி என்ற இலக்கிய வடிவம் பற்றி அம்மா கூறி அந்த பதிகங்களைப் பாடுவார். அதன்பின் நான் பாடசாலையில் உயர்தரத்தில் இலக்கியம் கற்கும் போது அந்தாதி இலக்கிய வடிவம் பற்றி அம்மா கூறிய விளக்கமும் அபிராமிப்பபட்டரின்  பதிக விளக்கமும் எனக்கு அப்படியே பதிந்துகொண்டன. இன்றுரை நான் வியந்து கொள்ளும் விடயம் இதுதான். அம்மா மிகச் சாதாரணமாக எங்களுக்குள் ஏற்படுத்திய வாசிப்பும் தேடலும் பற்றித்தான். அம்மா சமையல் செய்துகொண்டோ இன்னொரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டோ சாதாரணமாகக் கூறுவார். அப்பா வாசிப்பதற்கேற்ற பழைய நூல்கள், பத்திரிகைகள் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வருவார். இன்னொன்று அவரது உரத்து வாசித்தலாலும் பல விடயங்கள் உள்வாங்கப்படும். அவர்களிடம் சாதாரணமாகக் காணப்பட்ட விடயங்கள் எமது நாளாந்த வாழ்விலும் பதிந்துவிட்டன. இத்தகைய சூழல் என்னை அறியாமலேயே என்னுள் இலக்கிய நாட்டத்தையும் தொடர்ந்து எழுத்தார்வத்தையும் தூண்டியது எனலாம். வாசிப்பும் தேடலும் எப்போதும் வாழ்க்கையில் கைவிட முடியாத சொத்துக்கள். 


உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதையாசிரியர் யார்? என்ன காரணம்?

இவர்தான் என தனி ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. பல எழுத்தாளர்களைப் பிடிக்கும். சமூகம் சார்ந்து சிந்தித்து சமூகத்தின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் எப்போதும் வாசகர் மனதிலிருந்து நீங்காதவை. அந்தவகையில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், நந்தி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தட்சாயினி போன்றவர்களின் சிறுகதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.


உங்களை நீங்கள் எப்போது ஒரு எழுத்தாளராக உணர்ந்தீர்கள்?

இப்போதுவரை நான் எழுதும் போது ஒரு எழுத்தாளர் என்ற நிலையை உணர்வதை விடவும் என் சமூகத்தை எழுத்துக்களின் ஊடாக வாசித்த வாசகர்கள் எனது படைப்புக்கள் பற்றிய கருத்துப் பகிர்வின் ஒவ்வொரு தருணங்களிலும் எழுத்தாளராக உணர்வதோடு மேலும் பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்று உணர்வேன்.


சிறுகதைகள் மீதான ஆர்வம் எப்போது இருந்து ஆரம்பித்தது? உங்களது முதலாவது சிறுகதையை எழுதிய தருணம் எப்படியிருந்தது?

பாடசாலைக் காலத்தில் இணை பாடவிதான செயற்பாடுகளுக்காக அவ்வப்போது எழுதியிருக்கிறேன். உயர்தரத்தில் கல்வி கற்கும் போது தமிழ்மொழித் தினப் போட்டியில் சிறுகதை ஆக்கப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றிருக்கிறேன். அப்போதுதான் என்னுள் இருக்கும் திறமையை நான் உணரக்கூடியதாக இருந்தது. பின்னர் பல்கலைக்கழகக் காலத்தில் எழுதிய தொலைபேசி என்ற கதை ஜீவநதி சஞ்சிகையில் முதன் முதலில் பிரசுரமாகியபோது எனக்கு அது பெருமகிழ்வாகவும், என் எழுத்துக்களில் நான் வாழும் சமூகத்தைக் காணுவது வேறுபட்ட அனுபவமாகவும் உணர்ந்தேன். 


எழுத்துத் துறையில் பல்வேறு கூறுகள் இருக்கின்ற போதும் நீங்கள் சிறுகதை; துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான விசேட காரணம் என்ன?

தமிழ் இலக்கியம் சார்ந்து கட்டுரைகளும் சில கவிதைகளும் எழுதியிருக்கிறேன். தான் சார்ந்த சமூகத்தைப் பிரதிபலித்துக் காட்டவேண்டிய மன உந்துதல் எனக்குள் எழுந்தபோது அதற்கு எழுத்து சிறந்த கருவியாக இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். அந்த எழுத்துத் துறைக்குள் பல்வகைமையான வெளிப்பாட்டு ஊடகங்கள் இருந்தபோதிலும் சிறுகதையூடாக என் கருத்தை நிதர்சனமாக முன்வைப்பதற்கு ஏற்றதாக இருந்தது. விடயத்தை அலட்டல் இல்லாமல் இரசனை குன்றாது அதேநேரம் வாசகரின் நேரத்தை அதிகம் பிடித்துக் கொள்ளாமலும் வாசிப்பவர் மனதில் ஒரு நெருடல் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் இருப்பதற்கு சிறுகதை வடிவமே எனக்குப் பொருத்தமாகத் தெரிந்தது. ஆனால் சிறுகதைதான் தொடர்ந்து எழுதுவேன் என்றோ அதுமட்டுமே சிறந்த வடிவம் என்றோ கூறமுடியாது. காலம், வெளிப்படுத்தும் விடயத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடையலாம்.


நீங்கள் வாசித்து இரசித்த முதலாவது சிறுகதை நூல் எது? உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதை நூல் எது?

முதலாவது சிறுகதை நூல் என்பதைவிட நாங்கள் உயர்தரத்தில் கல்வி கற்கும் போது இருந்த சிறுகதைகளைத்தான் நான் மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒருநாள் கழிந்தது, இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம், கனகாம்பரம், பாற்கஞ்சி, பகீரதப் பிரயத்தனம் போன்ற சிறுகதைகளை மீண்டும் வாசித்திருக்கிறேன். இக்கதைகள் எல்லாமே பரீட்சை நோக்கத்திற்கான கற்றலைத் தாண்டி இப்போதும் மனதில் பதிந்து இரசனைக்குரிய சிறுகதைகளாக இருக்கின்றன. இவற்றைவிட நந்தியின் சிங்களத்து மருத்துவிச்சி இன்றுவரை நான் சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் வாசிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் புதிய படைப்பை வாசிப்பதான அனுபவத்தைப் பெற்றுக்கொள்கிறேன்.


இதுவரை வெளிவந்த உங்களது நூலாக்கங்கள் தொடர்பாகக் கூற விழைவது? 

படைப்பாக்கங்களை எழுதிய போதிலும் நூலுருப்பெற்றவை சிறுகதைகள் மட்டுமே. 2012 ஆம் ஆண்டில் எத்தனங்கள் சிறுகதைத் தொகுதியும், 2022 ஆம் ஆண்டில் இருளைக் கிழித்த கோடு என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கின்றன. இவற்றைவிட பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள் பலவும் எழுதி வருகிறேன்.


உங்களது கன்னிச் சிறுகதைத் தொகுப்புக்கு எத்தனங்கள் என்ற நாமத்தினை ஏன் எவ்வாறு வைத்தீர்கள்?

அந்தச் சிறுகதைத் தொகுதி நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது எழுதப்பட்டது. எத்தனங்கள் என்ற தலைப்பில் ஒரு சிறுகதை குறித்த சிறுகதைத் தொகுதியினுள் இடம்பெற்றுள்ளது. எத்தனங்கள் சிறுகதை என் போன்ற ஒரு பெண் பிள்ளையின் எத்தனங்களைக் கொண்டு எழுதியிருந்ததோடு அந்தக் கதைக்குரிய தலைப்பும் எனது முதல் தொகுப்புக்குப் பொருத்தமான தலைப்பாக இருந்தமையால் அப்பெயரையே எனது முதல் சிறுகதைத் தொகுதிக்கு வைத்தேன்.


உங்களது சிறுகதைகளில் பெண் சார்ந்த பாத்திரப் படைப்பு, கதைச் சூழல் போன்றவற்றை எந்தக் கோணத்திலிருந்து எழுதியிருக்கின்றீர்கள்? 

நான் வாழும் சமூகத்திலிருந்து என் மனதை நெருடிய விடயங்களே எனது எழுத்துக்களாகியுள்ளன. பெண்கள் சார்ந்த பிரச்சினைகள் என்று சொல்லும் போது அவர்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவே அவை இருக்கின்றன. 


இருளைக் கிழித்த கோடு சிறுகதை நூல் வெளியீடு தொடர்பாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

எத்தனங்கள் சிறுகதைத் தொகுதி வெளியாகி பத்து வருடங்களின் பின்புதான் இருளைக் கிழித்த கோடு நூலாக்கம் பெற்று வெளிவந்தது. சிறுகதைகளை அவ்வப்போது எழுதியிருந்தாலும் அவ்வாறு எழுதியவற்றுள் தெரிந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் பல பரந்துபட்ட களங்களையும் மையக் கருக்களையும் உள்ளடக்கியவையாகக் காணப்படுகின்றன. இச்சிறுகதைத் தொகுதி தேசிய மொழிகள் பிரிவு, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு சகோதர மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மதிப்புக்குரிய ஜீ.எஸ். சரத் ஆனந்த அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். எமது மக்களின் வாழ்வியல் போராட்டங்களை சகோதர மொழி இனத்தவர்களும் வாசிக்கக் கிடைத்துள்ளதோடு எனது எழுத்து இன்னொரு மொழியாக்கத்தில் வெளிவருகின்றபோது அது இரட்டிப்பு மகிழ்வையும் ஊக்குவிப்பையும் தருகின்றது. 

இந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்பெற்றது. அவ்வாறே நாடு கடந்து புலம்பெயர் தமிழர்களிடத்தில் 2023 இல் இதற்கு அறிமுக விழா இடம்பெற்றமை இரட்டிப்பு மகிழ்ச்சி. இதனை லண்டன் விம்பம் ஏற்பாட்டில் ராஜா அண்ணா என்பவர் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார். 


சிறுகதைகள் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டுமா? பொதுவாக சிறுகதைகளில் வர்ணனைகளும் இடம் பெறலாமா?

கட்டாயமாகப் பிரதிபலிக்கப்படல் வேண்டும். சமூகத்தின் தெரியாத பல பக்கங்களை, மனிதர்களின் பிரச்சினைகளைச் சொல்ல வேண்டும். ஒரு இலக்கியகாரராக, படைப்பாளியாக என் ஆயுதம் எழுத்துத்தான். அதில் யதார்த்தம்; நான் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்பு. என் மக்களின் இன்ப துன்பங்கள் பகிரப்படாதவிடத்து அவற்றின் இருப்பு கேள்விக்குள்ளாவதோடு படைப்பாளி எனச் சொல்லிக்கொள்வதன் பொருள் யாது என்ற கேள்வியும் எழுகின்றது. எல்லாக் கதைகளும் துன்பத்தையும் அழுகையையும்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. மகிழ்ச்சியை, வெற்றியைக் கொண்டாடுபவையாகவும் இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். 

அடுத்து வர்ணனைகள் பற்றிக் கேட்டிருக்கிருக்கிறீர்கள். ஒரு விடயத்தை எப்படி வாசகரிடம் கொண்டு செல்லலாம் எனும் போது இலக்கிய நயம், வர்ணனைகள் முக்கியம் பெறுகின்றன. துன்பியலைக்கூட வாசகர் மனதில் நிலைத்து நிற்கத்தக்கதான வெளிப்படுத்தல், வர்ணனை மூலம் சொல்லலாம். இனிப்பு தித்திப்பாக இருக்கும் என்று அதிகமாகச் சாப்பிட்டால் தெவிட்டுவதைப் போன்றுதான் வர்ணனையும் அளவோடு கச்சிதமாக, ஆனால் கனதியாகச் சொல்லிச் செல்லும் போது வாசகர் எங்கு சென்றாலும் அந்தப் படைப்பும் அவர் மனதோடு கூடவே பயணிக்கும். 


சிறுகதை நூல்களை மட்டுமே நீங்கள் வெளியீடு செய்து வருகின்றீர்கள். அப்படியானால் கவிதைகள் மீது உங்களுக்கு ஆர்வமில்லையா?

கவிதைகள் மீது அதிக ஆர்வமும் விருப்பமும் இருந்தாலும் அவற்றை இரசித்துப் படிப்பேன். கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறேன். ஆனால் இதுவரை நூலாக்கம் இடம்பெறவில்லை. சிறுகதைகளைத்தான் அதிகம் எழுதி வருகின்றேன்.


ஆரம்பகால எழுத்தாளர்களுக்கும் சமகால எழுத்தாளர்களுக்குமிடையே காணப்படும் வேறுபாடு குறித்து உங்களுடைய கருத்து என்ன?

ஆரம்பகால எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் என அடையாளப்படுத்தப்படுவது கடினமாக இருந்தது. அவர்களது படைப்புக்களை வெளிக்கொணர்வதற்கான களங்கள் மிகவும் அரிதாகவே காணப்பட்டன. அவ்வாறே அவர்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வரும்போது, அதில் அவர்கள் சமூகத்திற்கு கையளிக்கும் போது காணப்பட வேண்டிய பொறுப்புணர்ச்சி மற்றும் எழுத்துக்களின் தெளிவு, விடயதானம் என்பன மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும். ஆனால் தற்காலத்தில் எழுத்துக்களுக்கான களங்களும் அதிகம். எவரும் எதுவும் எழுதலாம் என்ற நிலையில் பாலை மட்டும் பருகும் அன்னத்தின் நிலையில் வாசகர்கள். இங்கு வாசகர்கள்தான் வாசிப்பைக் கூர்மைப்படுத்தி சிறந்த எழுத்துக்களை வாசிக்கும் போது சமூகத்தை மாற்ற முனையும் எழுத்தாளர் இனங்காணப்பட்டு நிலைநிறுத்தப்படுவார். இது உடனடியாக நிகழும் என்றில்லை. காலம் கடந்தும் வாழும் எழுத்துக்களே உண்மையான படைப்பாளியை இனங்காட்டும். வாசிப்பைக் கூர்மைப்படுத்தும் எழுத்தாளன் மேலும் தன்னை வளர்த்துக்கொள்ளலாம். அதுவே அவரை எக்காலத்திலும் சிறந்த படைப்பாளராக்கும்.


சமூக ஊடகங்கள் உங்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனவா?

தேவையேற்படுகின்றபோது சமூக ஊடகங்களை எனது படைப்பாக்கத்திற்கும் இலக்கியச் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்துகின்றேன். அவ்வாறே எனது இலக்கிய முயற்சிகளுக்கு தேவையானபோது அவை பங்களிப்பும் வழங்குகின்றன.


ஒரு ஆசிரியராக பணியாற்றிய காலங்களில் மாணவர்களிடையே எவ்வாறு வாசிப்பை ஊக்குவித்தீர்கள்?

பாடவேளையில் மாணவர்களே வாசிப்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவேன். வகுப்பாசிரியையாக கடமையுயாற்றிய காலங்களில் வகுப்பறை நூலகம் என சிறிதளவில் ஒழுங்கமைத்து வைத்திருந்தோம். மாணவர்கள் நேரம் கிடைக்கும்போது தமது வாசிப்பை மேம்படுத்தக் கூடியவகையில் அது உதவியாக இருந்தது. பாடசாலை நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு இயன்றவரை வழிப்படுத்தினேன். மாணவர்களை நேரடியாக வாசிப்பதற்குத் தூண்டுவதைவிடவும் மறைமுகமான கற்றற் செயற்பாடுகள் மூலமாக அவர்கள் வாசிப்பிற்குள் ஈர்க்கப்படும்போது அவர்கள் இயல்பாகவே வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூடியதாக இருக்கும்.


பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகிறதது என்று சொல்ல முடியுமா?

நிச்சயமாக இல்லை, பெண்களாலும் இடம்பெறுகின்றது. குடும்ப வாழ்விலும் சரி, அலுவலகங்களிலும் சரி பெண்கள் மீதான ஒடுக்கு முறை பெண்களாலும் இடம்பெறுகின்றது. குடும்பத்தில் பெண் பிள்ளைகள் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் என்ற பக்குவம் ஆண் பிள்ளைகள் மீதான வளர்ப்பிலும் காட்டப்பட வேண்டும். பெண் பிள்ளைகளோடு எப்படிப் பழக வேண்டும் என்ற பக்குவத்தை, அவர்களது உடலியல் மாற்றங்கள், அவர்களை மதிப்பு மிக்கவர்களாக நோக்கும் பக்குவம் என்பவற்றுடன் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும். திருமண வாழ்விற்கும் அவர்கள் வயதால் மட்டுமல்ல மனதளவிலும் பக்குவப்பட்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும். 

இங்குதான் சில குடும்பங்களில் பாசம் என்ற பெயரில் இடம்பெறும் திணிப்புக்கள் இறுதியில் குடும்ப வாழ்வில் மனைவியை அடிமையாக்குவதாக மாற்றம் பெறுகிறது. அவ்வாறு அடிமையாக்கி வாழ்வதைப் பார்த்து ஷமகன் மனைவியை தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறான்| என்ற எண்ணப் பாங்கு இன்னும் எம் சமூகத்திலிருந்து மாறவில்லை. இதை மாற்றுவதற்கு முதலில்  பெண்களின் மனநிலை மாறவேண்டும். ஒரே ஒரு விடயம்தான். திருமணம் செய்து மனைவியை அடிமையாக்குபவன் அடிமையின் கணவனாகிறான். திருமணம் செய்து மகாராணியாக மனைவியை அழகு பார்ப்பவன் அரசனாகிறான். இவ்வளவுதான். 

அடுத்து பெண்களே தம்மை பலவீனமானவர்களாக தன்னம்பிக்கை அற்றவர்களாக வெளிப்படுத்துவதும் இன்னொரு காரணம். மாற்றம் எங்களுக்குள்ளே இருந்துதான் ஏற்பட வேண்டும். தற்பெருமையும் ஆணவமும் தான் கூடாது. ஆனால் என்னாலும் இயலும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேண்டும். குடும்ப வாழ்வில் பெண்களை மதித்து சம உரிமையுடன் நோக்கப் பழகிக் கொண்டால் தொழிற் துறையில் பெண்களுக்கான சம உரிமைக்கு குரல் எழுப்ப வேண்டிய தேவை இருக்காது.


பாடசாலை மாணவர்களுக்காக நீங்கள் எழுதி வெளியிட்டுள்ள தமிழ்ப் பாட மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள் தொடர்பாக கூற விழைவது? 

நான் ஆசிரியையாகப் பணியாற்றிய காலத்தில் மாணவர்களது கற்பித்தல் தேவைக்காகப் பல விடயங்களைத் தேடிச் சேகரிப்பேன். கற்றல் செயற்பாடுகளுக்கான தயார்ப்படுத்தல்களை சேகரித்து வைத்திருப்பேன். அந்த விடயங்களை மேலும் பல மாணவர்களும் தெரிந்து தமது கற்றலை விருத்தி செய்யலாம் என்ற நோக்கில் தமிழ் மொழியும் இலக்கியமும், இலக்கிய நயம், சைவநெறி ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டி நூல்களை எழுதியிருந்தேன். இவற்றோடு மாணவர்களது மொழி விருத்திக்கான மொழி வளம், கட்டுரைக் கதம்பம், ஆக்கத்திறன் மேம்பாட்டிற்கான இன்பத் தமிழ்; போன்ற நூல்களும் மாணவர்களது மொழியறிவு விருத்திக்குத் துணை நிற்கின்றன. மேலும் சாதாரண தர மாணவர்களுக்காக எனது சுய தயாரிப்பில் எழுதப்பட்ட மாதிரிப் பரீட்சை வினாத்தாள் தொகுப்பானது மாணவர்களுக்கு மிகவும் பயனுடையாத விளங்குகின்ற நூலாகக் காணப்படுகின்றது. இவை இலங்கையின் மிக நீண்டகால வெளியீட்டாளர்களான லங்கா புத்தகசாலை வெளியீடுகளாக வெளியிடப்படுகின்றமை எனக்குப் பெருமையாகவும் இருக்கின்றது.


இலக்கிய மாநாடுகளில் பங்குபற்றிய உங்கள் அனுபவங்கள் குறித்து?

இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெற்ற இலக்கிய மாநாடுகளில் பங்குபற்றி கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறேன். 


ஈழத்துச் சிறுகதையுலக வரலாற்றில் உங்களது சிறுகதைகள் எவ்வாறான இடத்தினைப் பெற்றுள்ளது?

அதை இப்போது தீர்மானிக்க முடியாது. எனது படைப்புகள் வாசகர்களின் மனதைத் தொட்டு நிலைபெறும் காலம் வரை அது வாழும் என்று நினைக்கிறேன். என் படைப்பின் உள்ளடக்கம் எவ்வாறு என் சமூகத்திடம் இருந்து வந்ததோ, அதுபோலவே படைப்பின் ஆயுட்காலமும் என்னால் தீர்மானிக்க முடியாதது. ஆனால் சமூகத்தின் இன்பமும் துன்பமும் என் எழுத்துக்களால் வெளிக்கொணரப்படும்.


உங்களது அடுத்த படைப்பு எது பற்றியதாக அமையும்? எப்போது வெளிவரும் என்று கூற முடியுமா?

இப்போதுவரை சிறுகதைத் தொகுதிகளை வெளியிடுவதற்குத்தான் உத்தேசித்திருக்கிறேன்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புகளுக்காக இதுவரை பெற்றுக்கொண்ட பாராட்டுகள், பரிசுகள் குறித்துக் கூறுங்கள்? 

பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் எப்போதும் எங்களை ஊக்குவிக்கும் சிறந்த விடயங்கள்தான். பாடசாலைக் காலத்தில் நான் பெற்ற பரிசில்கள்தான் என்னை இனங்காட்டின. ஆனால் எழுத்துலகில் நான் பிரவேசித்தபின் விருதுகளுக்காக அனுப்புவதற்கு படைப்புகளை எழுதி வைத்திருப்பதில்லை. எனது சிறுகதைத் தொகுதிகளையும் அனுப்பவில்லை. அவ்வாறு அனுப்ப வேண்டும் என்று நினைப்பதுமில்லை. 

செம்பியன் செல்வன் நினைவாக அண்மையில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு இன்னொரு வ(லி)ழி என்ற எனது சிறுகதையை அனுப்பியிருந்தேன். அதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. படைப்பை எழுதி சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் வாசித்து, பத்திரிகைகளுக்கோ சஞ்சிகைகளுக்கோ நான் அனுப்பிவிடுவேன். விருதுகளுக்காக எனது படைப்புகளை வைத்துக் கொண்டிருப்பதில்லை. வாசகர்கள் மனதில் சிறந்த எழுத்து என்ற இருப்பும் சமூகத்தில் சிறுமாற்றத்தையும் ஏற்படுத்துமாயின் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகும்.


இலக்கிய வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடையாகப் பெறமுடியும். எங்களிடம் இப்போது வற்றிச் செல்வது வாசிப்புப் பழக்கமே. இதை வீட்டில் பெற்றோர் முன்னெடுத்தாலே போதும். பிள்ளைகளுக்கும் இயல்பான பழக்கமாகிவிடும். வாசிக்கச் சொல்லி பிள்ளைக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைவிட பெற்றோர் வாசித்து விடயங்களைப் பகிரும்போது பிள்ளைகளும் இலகுவாகப் பழக்கப்பட்டு வாசிப்பில் மூழ்கிவிடுவார்கள். வாழ்க்கையில் எப்போதும் எங்களுக்கு மன ஆறுதலைத் தருவது, தேடலை ஊக்குவிப்பது நூல்களே. எப்போதும் வாசிப்பைக் கைவிடாது இருக்க வேண்டும். இலக்கியங்கள் மனதுக்கு இதம் தருபவை. ஒவ்வொருவரும் தமது துறைக்கு அப்பால் பல விடயங்களையும் கற்றறிந்தவர்களாக இருக்க வேண்டும். மனிதாபிமானம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் வாழ்ந்தால் உலகம் மாற்றமடையும்.


இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

மகிழ்வான இத்தருணங்களை எனக்குத் தந்த தினகரன் பத்திரிகையின் இணைப்பிதழான செந்தூரம் இதழுக்கும் அதன் பிரதம ஆசிரியர் மற்றும் துணையாசிரியருக்கும் என்னை நேர்காணல் செய்த எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

58. அஷ்வினி வையந்தி அவர்களுடனான நேர்காணல்

கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி விரிவுரையாளர் அஷ்வினி வையந்தி அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் சிவரூபினி. 'அஷ்வினி வையந்தி' என்ற புனைப் பெயரில் எழுதிக்கொண்டிருக்கும் நான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட உதவி விரிவுரையாளராக தமிழ்க் கற்கைகள் துறையில் கடமையாற்றி வருகின்றேன். என்னுடைய அம்மா என்னைப் படிக்க வைப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். சிறுவயதில் நானும், அண்ணாவும், அம்மாவும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தோம். ஆனாலும் அந்த வறுமை நிலையிலிருந்து மேலே வர வேண்டும் என்ற நோக்கோடு படிக்கத் தொடங்கினேன். படித்தால் மாத்திரம் போதாது. கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கின்ற அம்மாவையும், அண்ணாவையும் பெருமைப்படுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அதற்காக நான் தெரிவு செய்த துறைதான் இலக்கியம். இத்துறையில் நான் சாதிக்க வேண்டும் என்பதற்காக அஷ்வினி என்ற எனது வீட்டுப் பெயரையும், எனது அம்மாவின் பெயரையும் சேர்த்து அஷ்வினி வையந்தி என்ற புனைப் பெயரை வைத்துக்கொண்டு இலக்கியத் துறைக்குள் காலடி வைத்தேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை ஆகியன இலக்கிய ஈடுபாட்டுக்கு எந்தளவில் உதவியாக அமைந்தது?

சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் மீது எனக்கு அலாதி விருப்பம். ஆனால் புத்தகங்கள் வாங்கி படிப்பதற்கான வசதிகள் இருந்ததில்லை. குறிப்பிட்ட ஒரு வயதில் அதாவது நான் உயர் தரம் படித்த காலத்தில் திஃ கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் உள்ள நூல் நிலையத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். நான் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் நானும் ஒரு புத்தகம் எழுதினால் என்ன? என்ற எண்ணம் வரத் தொடங்கியது. அதன் ஆரம்ப கட்டமாக உயர் தரம் படித்துக்கொண்டிருக்கும்போது கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பின்னர் பல்கலைக்கழகம் சென்ற பின்னர் கற்றல் நடவடிக்கைகளோடு சேர்த்து இலக்கியத்திலும் எனது ஆர்வத்தைச் செலுத்தினேன். புத்தகங்கள் வாசித்தது மட்டுமன்றி புத்தகங்களை வாங்கிப் படிக்கவும் செய்தேன். எனது இலக்கிய ஆக்கங்களுக்கு எனது நண்பர்கள் ஆதரவினைத் தந்தார்கள். அதுமட்டுமன்றி எனது வீட்டிலும் பெரிய ஆதரவு இருந்தது. அத்தோடு எனது பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரும் என்னை வழிநடத்திச் சென்றார்கள். அவர்களின் வழிகாட்டுதல் என்னை ஒரு எழுத்தாளராக உருவாக்கியது எனலாம்.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

முதன்முதலாக உயர் தரம் படிக்கும்போது கவிதை எழுதத் தொடங்கினேன். அந்தக் கவிதைதான் என்னை எழுத்துத் துறைக்குள் அறிமுகம் செய்து வைத்தது. அத்துடன் நண்பர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. மட்டுமல்லாமல் எனது வீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. எனது வீட்டாரும், நண்பர்களும் தந்த உற்சாகம் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. 


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எப்படியிருந்தது?

எனக்கு எனது அம்மா மீது அளவுகடந்த பாசம் உண்டு. ஆனால் அதை அவரிடம் வெளிப்படுத்தியது கிடையாது. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் ஓடிய ஓட்டத்தில் பல துயரங்களை கடந்து வந்ததால் பாசத்தை வெளிப்படையாகக் கட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் அம்மா மீது கோபப்பட்டுக் கொண்டே இருப்பேன். ஆனாலும் என்றேனும் ஒருநாள் என் அம்மாவைப் பற்றி வெளியுலகம் பேச வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டே இருந்தேன். அந்த ஓட்டத்தின் ஆரம்பப் புள்ளிதான் எனது கவிதைக்கான அடித்தளமாக இருந்தது. முதன்முதலாக நான் எழுதிய கவிதை பாசத்தின் வெளிப்படாகத்தான் அமைந்தது. அதாவது முதன்முதலாக நான் எனது அம்மாவைப் பற்றித்தான் கவிதை எழுதினேன். இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் மனதில் தோன்றிய முறையில் எழுதிய கவிதைதான் அது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது? எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

எனது முதலாவது ஆக்கமாக கவிதைதான் வெளிவந்தது. அதாவது நான் உயர் தரம் படிக்கும்போது எனது முதலாவது கவிதை 2014 இல் பள்ளிக் கூடம் என்ற தலைப்பில் வானவில் என்ற சஞ்சிகையின் ஒக்டோபர் மாத இதழில் வெளிவந்தது.


இதுவரை எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்? அந்த நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை "யாவும் ஆனந்தமே" என்ற கவிதை நூலை மட்டுமே வெளியிட்டுள்ளேன். இந்நூலில் பாசம், தன்னுணர்வு போன்ற கருப்பொருட்களுடன் பொதுவான சில விடயங்கள் பற்றியும் கவிதைகளை எழுதியுள்ளேன். இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் எனக்குத் தோன்றிய வரையறைகளைக் கொண்டு கவிதையின் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய கவிதைகள்தான் இந்நூலில் காணப்படுகின்றன.


உங்களது முதல் பிரசவமான "யாவும் ஆனந்தமே" என்ற உங்களது கவிதைத் தொகுதியின் தலைப்பு குறித்துக் கூறுங்கள்?

உண்மையில் இந்தத் தலைப்பு பற்றி எங்கேனும் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அதற்கான சந்தர்ப்பத்தை இவ்விடத்தில் ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி. நாம் வாழும் உலகத்தில் நாம் காணுகின்ற எல்லாப் பொருட்களும் நமக்கு ஆனந்தத்தை தரத்தான் செய்கின்றன. ஆனால் நாம் அவை தருகின்ற கெட்ட விடயங்களை மாத்திரம் பேசிக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கின்றோம். அதனால் பல கெட்ட விளைவுகள் உருவாகின்றன. ஆனால் ஒரு விடயத்தில் இருக்கின்ற நல்ல விடயங்களை எடுத்து நோக்கினால் வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக அமையும். எனவே நாம் காணுகின்ற அனைத்திலும் ஆனந்தம் உண்டு. அதை நாம் பார்க்கத் தவறுகின்றோம். அவ்வளவுதான். எனவே எல்லாமே நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் செய்கின்றன. அதனால்தான் யாவும் ஆனந்தமே என்ற தலைப்பை எனது முதல் கவிதை நூலுக்கு வைத்துள்ளேன். அத்தோடு அத்தலைப்பில் கவிதை ஒன்றையும் எழுதியுள்ளேன். அக்கவிதை எனது கவிதைப் புத்தகத்தில் முதலாவது கவிதையாக இடம் பிடித்துள்ளது.


உங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

எனது கவிதை நூலில் தாய்ப் பாசம், பெண்களின் அடிமைத்தனம், தனிமை, மத நல்லிணக்கம், தனிமனிதனுக்கு நடைபெறுகின்ற சில விடயங்கள் போன்ற விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். இக்கவிதைகள் மூலம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் பேசியுள்ளேன். 

குறிப்பாக பெண்களுக்கு நடைபெறுகின்ற பிரச்சினைகளில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும். சமூகத்தில் நடக்கின்ற அடிமைத்தனங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் போன்ற சிந்தனைகளைப் பற்றிப் பேசியுள்ளேன். அத்தோடு மனிதர்களிடத்தில் நல்ல சிந்தனைகளை வலுப்படுத்த வேண்டியும் சில கவிதைகளை எழுதியுள்ளேன். 


மதம், இனம், மொழி போன்ற பாகுபாட்டை வைத்துக்கொண்டு மனிதன் தங்களுக்குள்ளே முரண்படும் நிலை இல்லாது போக வேண்டும், மனிதம் என்ற சொல்லால் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும், ஒரு கட்டுப்பாட்டிற்குள் நின்றுகொண்டு மனிதன் என்னும் பெயரில் அரக்கர்களாக வாழ்ந்தது போதும் எல்லோரையும் சக மனிதனாக மதித்து நடக்க வேண்டும் போன்ற கருத்துக்களை எனது கவிதைகளுக்கூடாக வலியுறுத்துகின்றேன்.


நீங்கள் இதுவரை அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள், இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

அப்படி சொல்வதற்கில்லை. நான் கவிதைகள் மாத்திரமில்லை. புத்தக விமர்சனம், சிறுகதை, அனுபவக் கட்டுரைகள் போன்ற இலக்கியத் துறைகளிலும் ஈடுபாடு காட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன். அத்தோடு பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்படும் ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து கொண்டும் இருக்கின்றேன். எனது சிறுகதைகள் பல "சிறுகதை மஞ்சரி" என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. 


மித்திரன், ஜீவநதி, எங்கட புத்தகங்கள் போன்ற சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் எனது புத்தக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இவைற்றையெல்லாம் சேர்த்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அவை எல்லாம் இதழ்களில் வந்த ஆக்கங்களாகவே உள்ளன. என்றேனும் ஒருநாள் இத்தகைய ஆக்கங்களும் புத்தகமாக வெளிவரும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கின்றேன்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

ஆரம்ப காலத்தில் அதாவது 80, 90 காலப் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் சிலர் குறிப்பிட்ட மரபுக்குள் கவிதை நின்றுவிட வேண்டும் எனவும் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படி எதிர்பார்ப்பவர்கள் எனது கவிதைகளைவிட புத்தக விமர்சனங்கள் நன்றாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ வித்தியாசமான முறையில் எழுதுகிறேன் எனவும் தொடர்ந்து எழுதுமாறும் குறிப்பிடுகின்றார். 


பேராசிரியர் யோகராசா, பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் போன்றோர் எனது கவிதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்கள்தான். பேராசிரியர் யோகராசா அவர்கள் வித்தியாசமான முறையில் எழுதுகிறேன் எனவும் தொடர்ந்து எழுதுமாறும் கூறி வருகின்றார். இதைத் தவிர்த்து இன்றைய கால கட்டத்தில் உள்ள பலர் எனது கவிதைகளை விரும்பிப் படிக்கின்றார்கள். நான் எனது வாசகர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளேன். அவர்களை நான் நேசிக்கின்றேன். அவர்களை திருப்திப்படுத்த வேண்டி எழுதிகொண்டிருக்கின்றேன். என் எழுத்துக்களும் அவர்களை திருப்திப்படுத்தும் என்றே நம்புகின்றேன். அதை நான் நேரடியாகக் கண்டும் இருக்கின்றேன்.


நீங்கள் எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வீர்களா? 

அவள் ஒரு சிறந்த தாய் என்ற தலைப்பில் அம்மாவிற்காக ஒரு கவிதை எழுதினேன். உண்மையில் அந்தக் கவிதையில், எனது அம்மா நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியே எடுத்துக்கூறியுள்ளேன். அந்தக் கவிதை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. இந்தக் கவிதையை எனது நூலில் வாசகர்கள் வாசித்துப் பார்க்கலாம்.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞரின் தாக்கம் காணப்படுகின்றது?

உண்மையைச் சொல்லப்போனால் நான் ஈழத்து படைப்புக்களைப் படிப்பதைவிட தென்னிந்திய படைப்புக்களையும், உலக படைப்புக்களையும் படிப்பது அதிகம். குறிப்பாக நா. முத்துக்குமார், யுகபாரதி, வைரமுத்து ஆகியோரின் கவிதைகளை நிறையவே படித்துள்ளேன். அவர்களுடைய கவிதைகளின் தாக்கம் என்னுடைய கவிதைகளில் இருக்கின்றது என்று சொல்வதற்கில்லை. எனக்குத் தோன்றிய விதத்தில் எனது கவிதைகளை எழுதுகிறேன். அவ்வளவுதான்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

ஆம் நிச்சயமாக. எனது கவிதைகளை வாசிக்கும் வாசகர்கள் பலரைப் பார்த்துள்ளேன். குறிப்பாக பெண் வாசகர்கள் பலர் என்னைப் போல் வர வேண்டும் எனவும், எனது கவிதைகள் தங்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் நேரடியாகவே என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். அது மாத்திரமின்றி சாதி, மத கட்டுக்கோப்புக்களில் இருந்து விடுபட்டு எல்லோரையும் சக மனிதனாக மதிக்கும் நிலையை எனது கவிதைகள் வற்புறுத்துகின்றன. எனவே என்னுடைய கவிதைகள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.


இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள்? உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது?

குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். எனது அம்மாவை வைத்து கற்பனையுடன் கூடிய சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளேன். அத்தோடு நடைமுறையில் நான் சந்தித்த பல மனிதர்களின் பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டும் சில சிறுகதைகளை எழுதியுள்ளேன்.


உங்களது இலக்கிய வாழ்வில் உங்களுக்கு உதவியவர்கள் அல்லது மறக்க முடியாதவர்கள் இருப்பின்?

நான் இலக்கிய உலகிற்கு வருவதற்கு பலர் உதவி செய்துள்ளார்கள். குறிப்பிட்டு இவர்தான் அந்த நபர் எனச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் எனக்கு உதவியவர்களாகப் பலர் இருக்கிறார்கள். 


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

நிச்சயமாக. பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பலதைப் பற்றியும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனவும் முடிந்தவரை குறிப்பிட்டுள்ளேன். 


கவியரங்குகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்கள்?

படிப்பில் கவனம் செலுத்திய காரணத்தால் கவியரங்குகளில் கலந்து கொண்ட நிகழ்வுகள் குறைவுதான். ஒரே ஒரு தடவை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித் தினத்தில் நடைபெற்ற கவியரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அந்தக் கவியரங்கு தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியதாக இருந்தது. அந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தார்கள். குறிப்பிட்ட கவியரங்கில் கலந்து கொண்டமையால் அவர்கள் முன்னிலையில் என்னைக் கவிதைத் துறையிலும் அடையாளப்படுத்திக்கொண்டேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவம் என்றால் எனது கவிதை நூல் வெளியீட்டு விழாதான். என்றேனும் ஒருநாள் புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கானக் களம் அமையவில்லை. திடீரென அதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. இருபத்தியெழு வருட ஆசை நிஜமாகப் போவதை எண்ணி மகிழ்ந்துகொண்டேன். அத்தோடு அன்றைய நிகழ்வுக்கு மட்டக்களப்பில் இருந்து பேராசிரியர் யோகராசா அவர்கள் மிகுந்த விருப்பத்தோடு வருகை தந்திருந்தார். அது எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியை அளித்திருந்தது. அன்றைய நாள் எனது அம்மாவும், எனது அண்ணாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. எத்தனை நாள் எதற்காக ஓடிக்கொண்டிருந்தேனோ அதை அடைந்த தருணம் அது. அன்றைய நாளை என்னால் மறக்கவே முடியாது.


இதுவரை நீங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் குறித்தும் குறிப்பிடுங்கள்?

நான் கட்டுரைகளைக் குறைவாகவே எழுதியுள்ளேன். நான் சேகரித்த புத்தகங்கள் பற்றி எங்கட புத்தகங்கள் என்ற சஞ்சிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதினேன். அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாட்டுக்காக 2022 ஆம் ஆண்டு எனது ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியை எழுதி அனுப்பினேன். அக்கட்டுரை மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. முகநூலில் எனது நூல் தொடர்பான விமர்சனங்களைப் பார்த்து பல எழுத்தாளர்கள் என்னை நூல் விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டு எனக்குப் புத்தகங்கள் பலவற்றை அனுப்பி வைத்துள்ளார்கள். ஈழத்து, தமிழக, புலம்பெயர் நாடுகளில் உள்ள பல எழுத்தாளர்களின் ஆதரவும் எனக்கு உள்ளது.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

தொடர்ந்து எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அத்தோடு சொந்தமாக எனக்கென்று ஒரு நூலகத்தையும் உருவாக்க வேண்டும். இந்தக் கனவுகளோடு சேர்த்து பல கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனம் என இலக்கிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன். அத்தோடு எனது அம்மாவின் வாழ்க்கை வரலாற்றினை நாவலாக எழுத வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.


உங்களது படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எங்கட புத்தகங்கள் நடத்திய இலக்கியப் போட்டியில் எனது சிறுகதை மூன்றாம் இடத்தையும், கட்டுரை முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்தோடு சிறுகதை மஞ்சரியில் மாதம் மாதம் வெளிவருகின்ற சிறுகதைகளில் இருந்து சிறந்த சிறுகதை ஒன்று தெரிவு செய்யப்படடு 1000 ரூபாய் பணப் பரிசு வழங்கப்படும். அவ்வாறு எனது சிறுகதை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. அச்சிறுகதையின் தலைப்பு ஷபிறகு சொல்கிறேன்| என்பதாகும். 

இதைத் தவிர்த்து எனக்கு அறிவுச் சுடர் விருது (2021), கலைஞருக்கான பாராட்டு விருது (2023) போன்ற சில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அறிவுச் சுடர் விருது 2021 இல் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறந்த மாணவராக செயல்பட்டமையைப் பாராட்டி அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தினால் (இந்தியா) வழங்கப்பட்டது. மற்றது கலைஞருக்கான பாராட்டு விருது அகத்தியர் கலைமா மன்றத்தினால் 2023 தை மாதம் 17 ஆம் திகதி வழங்கப்பட்டது.


சக இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன? 

நந்தினி சேவியர் என்னும் இலக்கியப் படைப்பாளி ஒரு நேர்காணலில் இளந்தலை முறையினருக்கு சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், சிறந்த நூல்களை வாசியுங்கள் அவற்றை பற்றி விமர்சனம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கருத்துக்களையே இளம் படைப்பாளிகளுக்கு நானும் முன்வைக்கின்றேன். நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். அவற்றைப் பற்றி கலந்துரையாடுங்கள். வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள். புதுப்புது விடயங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருங்கள். காலம் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே ஓரிடத்தில் தேங்கிக் கிடக்காமல் ஓடிக்கொண்டே இருங்கள். 

பிரச்சினைகள், சவால்கள் வாழ்வில் வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருங்கள். சவால்கள் உருவாகும்போதுதான் வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கும். எனவே தேங்கி நிற்காமல் உங்கள் திறமையின் மேல் நம்பிக்கை கொண்டு பயணித்துக்கொண்டே இருங்கள். என்றேனும் ஒரு நாள் வெற்றி என்னும் இலக்கை அடையலாம்.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

எனது ஓட்டத்தில் நான் பல வலிகளைக் கடந்து வந்தேன். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். எந்த இடத்தை அடைய வேண்டும் என நினைத்துக்கொண்டேனோ அந்த இடத்திற்கு வந்துவிட்டேன். வெற்றியின் சுவை எப்படி இருக்கும் என்பதை நுகர்ந்துவிட்டேன். ஆனாலும் இது வெற்றியில்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

வெற்றியை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டு வரும்போது விமர்சனங்களை முன்வைப்போர் ஏராளம். அவர்களை எதிர்த்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களை விட்டு விலகி முன்னோக்கி வாருங்கள். வாழ்வின் வெற்றி என்பது சக மனிதனை நேசித்தல், சக மனிதனோடு அன்புடன் நடத்தல் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே ஒவ்வொரு நபரைக் கடக்கும் போதும் புன்னகையோடு கடப்போம். என்னைப் பொறுத்தவரை இதுதான் வெற்றி. 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்