பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, July 15, 2023

57. கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பக் கல்வியை தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக மலேசியா சென்றேன். அதுதான் என் வெளிநாட்டு வாழ்க்கையின் தொடக்கப் புள்ளி. இப்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறேன்.


உங்களது குடும்பத்தவர்களுக்கும் இலக்கியத் துறையில் நாட்டம் உண்டா?

இலக்கியத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள் யாரும் என் குடும்பத்தில் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், என் வாசிப்பை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். என் எழுத்துப் பயணத்துக்கான பாதையைச் செப்பனிட்டுத் தந்தார்கள். என் தந்தை மர்ஹூம் இல்யாஸ் அவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். ஆனால் தமிழ் மொழியையும் காதலித்தார். என் எழுத்துக்களை நேசித்தார். நான் கேட்கும் புத்தகங்களை எனக்கு வாங்கித் தந்தார். எனது தாய் மாமனாரும், மத்ரஸத்துன்  நயீமியாவின் ஸ்தாபகருமான பிரபல சமூக சேவையாளர் மர்ஹூம் நயீம் ஹாஜியார் அவர்கள் என் ஆக்கங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்குப் பரிசுகள் வாங்கித் தந்து, என்னை மேலும் எழுதத் தூண்டினார். திருமணத்தின் பின்னர் என் கணவர் எம்.வை.எஸ். ஷாபி அவர்கள் என் இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.


நீங்கள் எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? 

1980 களில் தான் எனது இலக்கியப் பயணம் ஆரம்பமாகியது. நான் எட்டாம் ஆண்டில் கல்வி கற்கும் போது தினகரன் பத்திரிகையின் சிறுவர் உலகம் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். 1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எமது பாடசாலை என்ற தலைப்பிலேயே எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. அதன் பிறகு கவிதை, சிறுகதைத் துறையில் மெது மெதுவாகக் காலடி எடுத்து வைத்தேன். என் முதல் கவிதை, முதல் சிறுகதை எல்லாமே தினகரன் பத்திரிகையில் தான் வெளியாகின. 1982 இல் எனது முதலாவது சிறுகதை 'வெதும்புகின்ற ஊமைகள்' என்ற தலைப்பில் வெளிவந்ததாகவே எனக்கு நினைவு. 

அத்துடன் தினகரன், சிந்தாமணி, நவமணி, மித்திரன், வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களில் எல்லாம் எனது பல்வேறு வகையான ஆக்கங்கள் வெளியாகின. வானொலியிலும் நான் நிறையவே எழுதினேன். சஞ்சிகைகள் பலவற்றிலும் எனது பல படைப்புகள் வெளியாகி உள்ளன. 


சமூகம் சார்ந்த பிரச்சனைகளை உங்கள் படைப்புகளில் எப்படிக் கொண்டு வருகின்றீர்கள்? உங்கள் படைப்புகளை பொதுவாக எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்?

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆற்றலைக் கொடுத்துள்ளான். அதை சமூகத்துக்குப் பயனளிக்கும் விதத்தில் உபயோகிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அதனால் நான் பொழுது போக்குக்காக எதையும் எழுதுவதில்லை. அன்றாட வாழ்வில் எனக்குக் கிடைக்கின்ற அனுபவங்களும், அவதானிப்புகளும் என் படைப்புளின் கருவாகின்றன. கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு மாய உலகை உருவாக்குவதில் எனக்கு இஷ்டமில்லை. இரத்தமும் சதையும் கொண்ட அன்றாட மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்களைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதில் எனக்கு அதிக அக்கறை இருக்கிறது.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. குமுறுகின்ற எரிமலைகள் - சிறுகதைத் தொகுதி (1998)

02. தென்னிலங்கை முஸ்லிம்களின் தமிழ்ச் சிறுகதைகள் - ஓர் ஆய்வு (1998)

03. இரவைக் காக்கும் இமைகள் - கவிதைத் தொகுப்பு (2022)

04. என் சிறகில் சிக்கிய வானம் - பயணக் கட்டுரைகள் (2023)

ஆகிய 04 நூல்களையே இதுவரை நான் வெளியிட்டுள்ளேன்.


குமுறுகின்ற எரிமலைகள் என்ற உங்களது சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் மற்றும் அதன் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இந்தத் தொகுதியில் எனது ஆரம்ப கால 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அநேகமான சிறுகதைகள் நான் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது எழுதியவை. இந்த நூலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தே நான் அதிகம் பேசி இருக்கிறேன். 




உங்களது இரண்டாவது நூல் வெளியீடான தென்னிலங்கை முஸ்லிம்களின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு நூல் பற்றி என்ன சொல்வீர்கள்?


நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது எழுதிய ஆய்வு நூல் இது. எழுத்தாளர் திக்குவல்லை ஸும்ரியின் அறிமுகம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. அவரின் ஒத்துழைப்புடன் தான் இந்த நூலை எழுதினேன். தகவல் திரட்டுவதற்காக ஒரு தடவை திக்குவல்லைக்குச் சென்றேன். அப்போது அவர் திக்குவல்லையின் மூத்த எழுத்தாளர்கள் பலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். திக்குவல்லை ஷம்ஸ், திக்குவல்லை கமால், திக்குவல்லை ஸப்வான், திக்குவல்லை எஸ்.ஐ.எம். ஹம்ஸா என்று நிறையப் பேரிடம் தகவல் சேகரித்து வந்து இந்த ஆய்வை மேற்கொண்டேன். பின்னர் கல்ஹின்னை தமிழ் மன்றம் அதை வெளியிட முன்வந்த போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

என் சிறுகதைத் தொகுப்பையும் கல்ஹின்னை தமிழ் மன்றமே வெளியிட்டது. இதில் விசேடம் என்னவென்றால், இந்தப் புத்தகத்துக்கான அறிமுக விழாவும் கூட திக்குவல்லையில் தான் நடந்தது. என் பங்களிப்பு எதுவுமே இல்லாமல், திக்குவல்லைக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நான் ஒரு விருந்தாளியைப் போல விழாவுக்குப் போய் வந்தேன்.


நீங்கள் இதுவரை எழுதியுள்ள கவிதைகள் பற்றிக் குறிப்பிட முடியுமா? எவ்வகையான கருப்பொருட்களை மையமாக வைத்து உங்களது கவிதைகளை எழுதுகின்றீர்கள்?

நான் நியூஸிலாந்துக்குப் புலம் பெயர்ந்து வந்தபின் கொஞ்ச நாட்கள் எழுத்துலகில் இருந்து ஒதுங்கி இருந்தேன். ஒரு விபத்தில் சிக்குண்டு அப்போது நான் சக்கர நாட்காலியில் இருந்தேன். நண்பர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்னைத் தெரிந்தவர்கள் நான் யாரென்று கேட்டார்கள். அப்போது கோபத்திலும் விரக்தியிலும் பல கவிதைகள் எழுதிக் கிழித்துப் போட்டேன். என் உடல் நிலை தேறிய பின்புகூட எழுத்துத் துறையில் நான் ஈடுபடவில்லை. ஆனால், முகநூல் கணக்குத் திறந்த பிறகு, எழுதச்  சொல்லி என் பேனா அடம் பிடித்தது. 

முகநூல் மூலம் அவுஸ்திரேலியா வானொலி முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர் முஹம்மது முஹுசீன் அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. வானொலி நிகழ்ச்சிகளுக்காக அவர் என்னைத் எழுதத் தூண்டினார். என் இலக்கியப் பயணத்தில் ஏற்பட்ட இடைவெளியை அப்போது நிரப்ப ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் விளைவாகவே 'இரவைக் காக்கும் இமைகள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. இந்தத் தொகுப்பில் இருக்கும் பாதிக் கவிதைகள், ஓர் இளம் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு நான் ஆரம்ப காலத்தில் எழுதியவை. மீதிக் கவிதைகள் வானொலியிலும் முகநூலிலும் எழுதியவை. என் கவிதைக்கான கருவும் நடைமுறை வாழ்க்கையில் கிடைப்பதுதான். காதல், வீரம், துணிவு,  ஏமாற்றம், சவால்கள்,  அடக்குமுறைக்கு எதிரான குரல், யுத்த காலச் சூழல் என்று வெவ்வேறு கருப்பொருளில் என் பேனா பேசுகிறது.


சிலரை கவிதை எழுதத் தூண்டுவதே காதல் என்று சொல்கிறார்களே. இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

என்னைக் கவிதை எழுதத் தூண்டிய காரணிகள் பல. அதில் வாசிப்பும் ஒன்று. இரண்டாவது காரணி நான் வாழ்க்கையில் அனுபவித்த வலிகள், வேதனைகளை அனுபவித்து எழுதும் கவிதைகளில் வார்த்தைகள் வசப்பட்டு விடும். பிறரின் வலிகளை உணர்ந்த தருணங்களிலும் கவிதை எழுதுவேன். அதற்காக நான் காதல் கவிதைகள் எழுதவில்லை என்று சொல்ல வரவில்லை. இளமையில் காதலைப்  பாடினேன். அது ஒரு குறுகிய பார்வையில் தெரிந்த காதல் - ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்  இடையிலான காதல் அது. இப்போது காதல் என்ற சொல் வானத்தைப் போல விரிந்து தெரிகிறது. தந்தையை, தாயை, இயற்கையை, இலட்சியங்களை.. என்று எல்லாவற்றையும் நான் காதலிக்கிறேன். அந்த உணர்வுகளைக் கவிதையில் வடிக்கிறேன். அன்று எழுதிய காதல் கவிதைகளுக்கும் இன்று எழுதும் காதல் கவிதைகளுக்கும் வித்தியாசம் இதுதான்.


கடைசியாக வெளியிட்ட உங்களது என் சிறகில் சிக்கிய வானம் என்ற பயணக் கட்டுரைகளடங்கிய நூலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி என்ன கூறப் போகின்றீர்கள்?

இது என் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. 2019 டிசம்பர் 14 முதல் நியூசிலாந்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 2022 ஜனவரி 24 வரை 40 நாட்களாக ஆறு நாடுகளில் பயணித்த அனுபவங்களை இந்த நூலில் கட்டுரைகளாகப் பகிர்ந்திருக்கிறேன். கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களையும் புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.  

நான் பயணங்களை முடித்து விட்டு நாடு
திரும்பியபோது, கொரோனாத் தொற்று தலைகாட்ட ஆரம்பித்திருந்தது. சில வாரங்களுக்குள் நாடு முடக்கப்பட்டு வீட்டுக்குள் அடைபட்டிருந்த நிலையில், எனது பயண அனுபவங்களை முகநூலில் தொடராக எழுதி வந்தேன். இந்தக் கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றன என்பதற்கு அவர்களின்  பின்னூட்டங்கள் சாட்சியாயின. இந்தக் கட்டுரைகள் நூலுருப் பெறவேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் ஊக்கம் காரணமாகவே இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.


இத்தனை நூல்களையும் வெளியிடுவது எப்படி சாத்தியமானது? 

இத்தனை நூல்கள் என்று பெருமைப்படும் அளவுக்கு என்னிடம் நீண்ட பட்டியல் ஒன்றுமில்லை. மொத்தம் நான்கு நூல்கள்தான். முதல் இரண்டு நூல்களையும் வெளியிடும் போது ஒரு மாணவியாக இருந்தேன். 

என் புத்தகத்தை சிலர் வெளியிட வேண்டும் என்று வலிந்து வந்து கேட்கிறார்கள் என்று அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு பாரிய கடன் சுமை என் தோளில் ஏறப்போகிறது என்பதை உணராத அப்பாவியாக எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினேன். அந்த அனுபவம் தந்த பாடம்தான் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக புத்தக வெளியீடு பற்றிய சிந்தனையை என்னிலிருந்து தூக்கியெறிந்துவிட்டது. ஆனால், பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்த எனது கவிதைகள், சேர்த்து வைத்திருந்த  பத்திரிகை நறுக்குகள் எல்லாம் காலத்தால் அழிந்து போவதை நினைக்க மிகவும் கவலையாக இருந்தது. எஞ்சியிருந்த சில பத்திரிகைத் துண்டுகளை சேர்த்தெடுத்து இன்னும் கொஞ்சம்  முகநூல் கவிதைகளையும் சேர்த்து 'இரவைக் காக்கும் இமைகள்' என்ற எனது கவிதை நூலை வெளியிட்டேன். அப்போது, கொரோனாத் தொற்றில், பயணிக்க முடியாத நிலை, கூட்டங்கள் கூட முடியாத நிலையில் வெளியீட்டு விழா கூட இணைய வசதியுடன் ஸூம் (ZOOM) மூலமே நடைபெற்றது.


தற்போது நீங்கள் வெளி நாட்டில் வசித்து வருகின்றீர்கள். அங்கிருந்து கொண்டு உள் நாட்டில் நூல்களை வெளியிடுவது சிரமமாகத் தோன்றவில்லையா?

அது மிகவும் சிரமமான காரியம் என்பதால்த்தான் நூல் வெளியீட்டில் நான் அக்கறை காட்டாமல் இருந்தேன். வெளிநாட்டில் இருப்பதால் நியாயமான விலைக்கு புத்தகம் அடிப்பதுகூட கஷ்டமாக இருக்கிறது. 


ஏனைய எழுத்தாளர்களோடு உங்களுக்கு எவ்வகையான இலக்கிய நட்பு இருக்கிறது?

வெளிநாட்டில் வசிப்பதால் உள்நாட்டு எழுத்தாளர்களுடனான தொடர்பை முகநூல் வழியாக மட்டுமே பேண முடிகிறது. அதைத்தவிர, ஆற்றலுள்ள முஸ்லிம்  பெண்களின் அமைப்பான 'ஸ்ரீ லங்கா பென் கிளப்' அமைப்பின் போஷகராக இணைந்திருக்கிறேன். அதன் மூலம் பல எழுத்தாளர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.


கவிதை, சிறுகதைத் துறை தவிர வேறு எந்தெந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? அத்துறை பற்றியும் குறிப்பிடலாமே?

நாடகத் துறையில் எனக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களே, மக்கள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம். 

அண்மைக் காலமாக மொழிபெயர்ப்புத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன். 'ஸ்ரீ லங்கா பென் கிளப்' அமைப்பின் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிக்காக மாதம் ஒரு கவிதையை மொழிபெயர்த்து வருகிறேன். இதற்காக, 'பென் கிளப்' அமைப்பின் உறுப்பினர்களின் சிறந்த கவிதைகளைத்  தெரிவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். 

பத்தி எழுத்திலும் எனக்கு ஆர்வம் அதிகம். ஆங்கிலத்தில் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். ஒரு நாவலும் தயாராகி வருகிறது. மேடைப் பேச்சுக்களில் கலந்து கொள்வதும் எனக்குப் பிடிக்கும். தொடர்ச்சியாக வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. உலக சமாதான தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம், இன மத நல்லிணக்கக் கூட்டங்கள் போன்ற பல நிகழ்வுகளில் விசேட பேச்சாளராக கலந்து கொண்டுள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் உரையாற்றி இருக்கிறேன். 


நாடகத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நான் நிறைய நாடகங்கள் எழுதி உள்ளேன். அதில் பாறையில் பூத்த மலர் என்ற தொடர் நாடகமும் அடங்கும். அதன் பின்பு அவுஸ்திரேலியா வானொலியின் 'வளர்பிறை' முஸ்லிம் நிகழ்ச்சிக்காக நாடகங்களை எழுதி, நானே பல குரல்களில் நடித்தும் இருக்கிறேன். உரைச்சித்திரம் நிகழ்ச்சிகளிளும் நானே எழுதி நடித்திருக்கின்றேன்.


வானொலிக்கு ஆக்கங்களை எழுதிய காலத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

சமூக வலைத்தளங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், வானொலி நேயர்கள் தங்கள் கருத்துக்களையும், பாராட்டுக்களையும் கடிதங்கள் மூலமாவே பகிர்ந்து வந்தார்கள்.  வானொலியில் நாடகங்கள் ஒலிபரப்பாகினால், தொடர்ந்தும் இரண்டு, மூன்று வாரங்களுக்குக் கடிதங்கள்  வந்து கொண்டே இருக்கும். எங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றாலும் நாடகங்கள் பற்றிய பேச்சு கட்டாயமாக இருக்கும். 

என் தந்தையின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அவரைக் காணும் போதெல்லாம் உங்கள் மகளின் நாடகத்தைக் கேட்டு மகிழ்ந்தோம் என்று நாடகம் பற்றி கருத்துப் பரிமாறுவார்களாம். வாப்பா வீட்டுக்கு வந்து அந்தக் கருத்துக்களை என்னிடம் எத்திவைத்து விட்டு, என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து 'உங்கள் எழுத்துக்கள் நிறைய மக்களைச் சென்றடைகிறது. அதனால் எப்போதும் சமூகத்துக்கு பயனுள்ள விடயங்களையே எழுதுங்கள்' என்று சொல்வார். நாடகத்தைக் கேட்கத் தவறியவர்கள் நான் ஒலிப்பதிவு செய்து வைத்த, ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு வருவார்கள். அது கை மாறி மாறி எங்கெல்லாமோ போகும். ஆனால் அபூர்வமாகவே திரும்பி வரும்.

நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களை எல்லாவற்றையும் மிகவும் ஆசையுடன் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால், கறையானுக்குப் பொறுக்கவில்லை. என் நாடோடி வாழ்க்கையும் அதற்குக் கைகொடுக்கவில்லை. இப்போது அந்த இனிய நினைவுகள் மட்டுமே என்னிடம் மீதமிருக்கின்றன.


சிறுவர் படைப்புகளை வெளியீடு செய்வதில் உங்களுக்கு நாட்டம் இல்லையா?

சிறுவர்களுக்காக வானொலியில் உரைச் சித்திரங்கள் எழுதி உள்ளேன். சிறுவர்களின் உள நல மேம்பாட்டுக்கான நிகழ்ச்சிகளை நேரில் நடாத்தி வருகிறேன். சிறுவர் படைப்புக்களில் நாட்டமில்லை என்று சொல்வதற்கில்லை. அதற்கான நேரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


உங்களது இலக்கியப் பங்களிப்புகளுக்காக இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுக்கள், பட்டங்கள், கௌரவங்கள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

விருதுகள் விற்கப்படும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். பட்டங்கள் மலிந்து அதன் உண்மையான பெறுமதியை இழந்துவிட்டன. பணம் தந்தால் பாராட்டு விழா நடத்துவோம் என்று நிறைய இயக்கங்கள் கிளம்பி இருக்கின்றன. இவற்றை விட்டும் தூரப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி.

நான் முகநூலை என் எழுத்துக்களுக்கு சிறந்ததோர் களமாகப் பயன்படுத்தி வருகிறேன். என் எழுத்துக்கள் பரந்துபட்ட வாசகர்களைச் சென்றடைய முகநூல் உதவுகிறது. வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களை மிகவும் மதிக்கிறேன். அவைகள் தாம் என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த கௌரவங்கள். 

இதுதவிர, விரைவில் ஒரு சர்வதேச நிகழ்வொன்றில் நேர்மையான முறையில் கௌரவிக்கப் படவுள்ளேன் என்று மட்டும் இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?

நான் சிறுமியாக இருக்கும்போது எனக்குக் களம் தந்து கை கொடுத்தது தினகரன் பத்திரிகைதான். நான் புலம்பெயர்ந்த பின்பும், என் நேர்காணல்கள் பலமுறை தினகரனில் வெளியாகி இருக்கின்றன. தினகரன் ஆசிரியருக்கும், என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்