பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, May 14, 2023

56. டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்

எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியை

Dr. ஜலீலா முஸம்மில் (MBBS / SL)

ஏறாவூர்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

அருளாளன் அன்பாளன் எல்லாம் வல்ல இறையோன் எமை ஆளும் நல்லோன் வல்லோன் அல்லாஹுத்தஆலாவை முதற்கண் பணிந்தவளாக, அடுத்து தினகரன் செந்தூரம் இதழ் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தவளாக, நான் ஜலீலா முஸம்மில். இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் மர்ஹும் யூ.எச். முகம்மது (முன்னாள் அதிபர் மட்ஃஅலிகார் தேசிய பாடசாலை, ஏறாவூர்) சித்தி பௌசியா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக பணிபுரிகிறேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்வு, இலக்கிய ஈடுபாடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபா வித்தியாலயம் மற்றும் அல் முனீரா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் பயின்றேன். மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தேன். தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை அனுபவம் உண்டு.

சிறு பராயம் முதலே வாசிப்பிலே எனக்கு ஆர்வம் அதிகம். எப்போதும் வாசிப்பு, எதிலும் வாசிப்பு என்று தணியாத தாகமாய் தமிழிலே எனக்கு அப்படியொரு பற்று. வாசிப்போடு உறவு கொண்டிருந்ததாலேயே தமிழிலே விருப்பு வந்தது என்றால் அது மிகையாகாது. எனது தந்தை ஹயாத்து முஹம்மது அவர்கள் கணித ஆசிரியராக இருந்த போதிலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அத்துடன் மரபுக் கவிதை புதுக்கவிதை போன்றவற்றை இயற்றக் கூடியவர்களாகவும் இருந்தார். செய்யுள்களையும் காவியங்களையும் கதைகளையும் தமிழ் ஊற, தமிழ் சொட்டச் சொல்லித் தருவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். எனவே எனது தமிழின் ஆஸ்தான குரு தந்தை என்று தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.


எதை எழுதினாலும் அவரிடமே முதலில் அதைச் சமர்ப்பித்து, பாராட்டுக்கள் வாங்குவது எனது வழக்கமாய் இருந்தது. தமிழ்ப் பாடத்தைச் சுவைபடக் கற்பித்த தமிழ் ஆசான்களும் எனது தமிழ் வளரக் காரணமானவர்கள்தாம். இவ்விடத்தில் அவர்களை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன். 

கல்வியிலே திறமையைக் காட்டினாலும் எழுத்துலகம் எனது இன்னொரு கண்ணாகவே இருந்தது. எழுத்தும் வாசிப்பும் நான் மிகவும் நேசிக்கும் துறைகளாகும். கற்றலின் ஊடே கவிதை எழுதுவதையும் வாசிப்பதையும் விடாமல் தொடர்ந்தேன். அந்தக் காலங்களில் எனது தமிழ்ப் பசிக்கு பல்வேறுபட்ட நூல்களை வாசிப்பது தீனியாக அமைந்தது. இப்போதும் அதைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறேன். பள்ளிப் பருவத்திலே கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, பட்டிமன்றம், குறுக்கெழுத்துப் போட்டி போன்றவற்றைத் தயார் செய்வது மட்டும் அல்லாமல் அந்தப் போட்டிகளிலும் நான் பங்கு பற்றினேன். அதுமட்டுமல்லாது பாடசாலைக் கலை நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராகவும் பங்கேற்றுள்ளேன். பாடசாலைகளில் வெளியிடப்பட்ட நூல்களிலும் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன். இவ்வாறு தமிழோடு இழைந்து இணைந்து பயணித்தது எனது இலக்கியத் தாகத்திற்கு வித்திட்டது எனலாம். சொல்லோடிணைந்த பொருளாய் என்னோடு தமிழ் ஒட்டிக்கொண்டுவிட்டது என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். சிறுவயதில் ஆரம்பித்த எனது இலக்கிய மோகம் காலம் செல்லச் செல்ல வளர்ந்து கொண்டே இருந்தது. தொழில் வேறு துறையில் என்றாலும் அடிமனதில் ஆழப் பதிந்துவிட்ட தமிழை ஆராதிக்கும் வண்ணத்தில் சிறிது எழுத ஆரம்பித்துள்ளேன்.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அநுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

நீண்ட காலமாக எழுத்துத் துறைக்குள் வர வேண்டும் என்ற ஆசை மனதிலே இருந்து வந்தது. சிறுவயதிலே பள்ளிக் காலங்களில் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள், கதைகள் போன்றவற்றை எழுதி அனுப்புவேன். அவை வெளிவந்தனவா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. அந்தக் கனவு, அந்த ஆசை இவ்வளவு நாள்பட்டதன் பிறகு நிறைவேறி இருக்கிறது. பள்ளிக் காலம் தொட்டு எழுதத் தொடங்கி இருந்தாலும் அவை எனக்குள்ளே புதைந்துவிட்டன என்றும் சொல்லலாம். அப்போதுகளில் அதற்கான களமும் காலமும் அமையவில்லை என்றே நினைக்கிறேன். சிலவற்றைச் சேமித்து வைத்துள்ளேன். சில படைப்புகள் காலப்போக்கில் காணாமலே போய்விட்டன. நண்பி ஒருவர் மூலம் எழுத்துத் துறைக்குள் வருவதற்கான ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் புலனக் குழுமங்களில் எனது கவிதைகளைப் பதிவேற்றம் செய்து வந்தேன். அதன் பிறகு படிப்படியாக முகநூல் குழுமங்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளில் பங்குபற்றினேன். பத்திரிகைகளுக்கும் எனது ஆக்கங்களை எழுதத் தொடங்கினேன். இவ்வாறே எழுத்துத் துறைக்குள் எனது பயணம் சென்று கொண்டிருக்கிறது.


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எது?

முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் என்றால் 1995 இல் அதாவது தரம் நான் ஒன்பதில் கற்கும் போது எனது நண்பிக்காக நட்பு பாராட்டி எழுதியது என்று நினைக்கிறேன். அது மனதை வருடிய ஒரு சுகமான தென்றலாக என் நினைவில் இப்போதும் நிறைந்திருக்கிறது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

முதன் முதலாக எனது ஆக்கமான ஷஷநான் எழுதுகிறேன்' எனும் தலைப்பிலான கவிதையானது பிரான்சு நாட்டில் இருந்து வெளியாகும் தமிழ் நெஞ்சம் மின்னிதழில் 2021 அக்டோபர் முதலாம் திகதி வெளிவந்தது. அது எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமானதும் நெகிழ்ச்சியானதுமான ஒரு சம்பவமாக இருக்கிறது. அந்தத் தருணத்தில் மனதில் ஏற்பட்ட உவகைப் பட்டாம்பூச்சிகளை சொல்லில் வடிக்க முடியாது. என வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான தருணமாக அது இருக்கிறது.


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? அந்த நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிதைத் தொகுப்பு நூல்கள் பலவற்றில் எனது கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவிலும் இலங்கையிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. எனது தனிப்பட்ட படைப்பான ஷஷசிறகு முளைத்த மீன்' எனும் கவிதை நூலைக் கடந்த 2022 ஆம் வருடம் வெளியீடு செய்தமையிட்டு பெருமிதமும் பேருவகையும் அடைகிறேன். இக்கவிதைத் தொகுதி கடந்த 2022.02.27 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணிக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (YMCA, NANDANAM) எழிலினிப் பதிப்பகத்தால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. கன்னி வெளியீடான இந்நூலினை தமிழ் நாடு அரசு மாநில திட்டக் குழு உறுப்பினர், தமிழிசை நடனக் கலைஞர், முனைவர் பத்மசிறீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் வெளியிட்டு வைத்ததுடன் நூலின் முதற் பிரதியை முனைவர் கவிஞர் கூடல் தாரிக் அவர்கள் பெற்றுக்கொண்டார். அத்துடன் பேராசிரியரும் பிரபல பேச்சாளருமான முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களும் விழாவினை அலங்கரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கவிதை நூல் வெளியீடு இலங்கையிலும் கடந்த 2022.10.01 அன்று சனிக் கிழமை ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. 

எனது இரண்டாவது நூல் தொகுக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஹைக்கூ கவிதை நூலாக அது வெளிவரப் போகிறது. இன்ஷா அல்லாஹ் ஓரிரு மாதங்களில் வாசகர்களான உங்களின் கைகளில் தவழும் என்பதை மகிழ்வுடன் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்களுடைய முதல் பிரசவமான சிறகு முளைத்த மீன் என்ற கவிதைத் தொகுதியின் தலைப்பு குறித்துக் கூறுங்கள்?

கவிதை நூலுக்குள் இருக்கும் ஒரு நேச வெளிப்பாடாகும் கவிதை ஒன்றின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது. ஆழ்கடலில் அமிழ்ந்திருந்த மீன் ஒன்று கவிதைச்சிறகு முளைத்து வான் வெளியில் எம்பி உற்சாகத்தோடு, உத்வேகத்தோடு பறக்கத் தயாராகி விட்டதையும் அது குறிப்பிடுவதாக அமைகிறது. ஆழ்கடலுக்குள் யாருமே அறியாதிருந்த அந்த மீன் வான்வெளியெனும் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்க வந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


உங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

சிறகு முளைத்த மீன் பல்சுவை அம்சங்களோடு பல்வேறுபட்ட கவிப் பூக்களின் கதம்பமாக வெளிவந்து இருக்கிறது. அதிலே ஒரு வரிசைக் கிரமத்தை நீங்கள் அவதானிக்கலாம். இறைவன், நபிகளார், தந்தை, தாய், கணவன் மனைவி, மகள், நண்பர்கள், உழவர் போன்ற தலைப்பில் அமையக்கூடிய கவிதைகள் ஒவ்வொன்றாக இடம் பெறுவது இன்னூலின் சிறப்பம்சம் என்று நான் நினைக்கிறேன். அத்தோடு ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள், நாட்டார் பாடல், கிராமியக் கவிதைகள், காதல் கவிதைகள், ஊக்கக் கவிதைகள், இயற்கை சம்பந்தமான கவிதைகள் மற்றும் மகாத்மா காந்தி, பாரதி, ஆண் தேவதை போன்ற தலைப்பிலான கவிதைகளும் உள்ளடங்கலாக ஒரு கவிதைத் தொகுதியாக இருக்கிறது. 


இறைவனின் மகத்துவத்தையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் காதலின் இரசனையையும் இயற்கையின் வருடலையும் உலகில் வாழ்ந்து மறைந்த சில தலைவர்களைப் போற்றியும் புகழ்ந்தும் நேர்மறை சிந்தனைகளைத் தூண்டித் துவண்டவர்களைத் தூக்கி எழுப்பிவிடும் ஊக்கக் கவிதைகளுமென எனது கவிதை நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புளகாங்கிதத்தோடு உங்களிடம் தெரிவிக்கிறேன்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

இந்தியாவில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூல் சென்ற வருடம் வெளியீடு செய்த பின்னர் எப்போது இலங்கையில் வெளியிடப்படப் போகிறது என்று இலங்கை நண்பர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் இருந்தனர். அந்தவகையில் இலங்கையிலும் வெளியீடு செய்து அதனை நான் வாசகர்கள் கையில் தவழவிட்டிருந்தேன். அதிலிருந்து நான் எனது நூலுக்கான வரவேற்பை வாசகர்கள் எவ்வாறு வழங்கியிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். நிச்சயம் எனது கவிதைகள் வாசிப்பவரின் மனதில் புதுத் தெம்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வரவழைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என்றும் நினைக்கிறேன். அந்தவகையில் எல்லாம் வல்ல இறைவனுக்கே அனைத்துப் புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்.


நீங்கள் எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வீர்களா?

ஆமாம். நிச்சயமாக. நேயம் என்றொரு கவிதை என் நினைவுக்கு வருகின்றது. இயற்கையோடு ஒன்றி வாழும் உயிர்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழும் போது மனிதர்கள் மட்டும் வேற்றுமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வாழ்வதனைக் கோடிட்டுக் காட்டுகிறது அந்தக் கவிதை. ஆரம்ப காலத்தில் நான் எழுதிய ஒரு கவிதை அது. அக்கவிதையும் நூலாக்கத்திற்கு உட்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இது எனது மனதில் பதிந்த கவிதையாகவும் இருக்கிறது.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞரின் தாக்கம் காணப்படுகின்றது?

எல்லாக் கவிஞர்களும் எனக்குப் பிடித்த கவிஞர்கள்தான். கவிதைகளையே நான் கூடுதலாக விரும்பி படிப்பேன். சுப்ரமணிய பாரதி, மஹாகவி, அப்துல் ரகுமான், வைரமுத்து, மு. மேத்தா, நா. முத்துக்குமார் போன்றவர்களின் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. எனது கவிதைகளில் யாருடைய தாக்கம் அதிகமாக இருக்கின்றன என்பதை வாசகர்கள் தான் எனக்குக்கூற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

நிச்சயமாக. ஆயுதங்களின் முனையைவிட பேனா முனைக்கு சக்தி அதிகம் என்று நினைக்கிறேன். ஊக்கமிக்க கவிதைகளை வாசிப்பவர்கள் அதனால் தூண்டப்பட்டுப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். சிறு துளி விழுந்து பெருவெள்ளம் வருவது போல, சிறு அக்கினிக் குஞ்சொன்று ஒரு காட்டையே எரித்து விடுவது போல, சிறு கவிதையொன்று சமூக மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்பதற்கான சான்றுகள் நமது வரலாற்றில் நிறையவே உண்டு. அந்தவகையில் எனது கவிதைகளும் அவ்வகையான ஒரு மாற்றத்தைத் தரும் என்று உறுதியாக நம்புகின்றேன். 


இதுவரை எத்தனை சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள்? உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது? சிறுகதைகளுக்கான உங்களது பாத்திரப் படைப்பு எப்படிப்பட்டது?

சிறுகதை எழுதியது மிகக் குறைவு. அதற்கான காரணம் நேரமின்மை என்று நினைக்கிறேன். எழுதிய சிறுகதை ஒன்று பிரதேச செயலக இலக்கிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதை இவ்விடத்தில் நான் நினைவுகூர்கிறேன். சமூகத்தில் ஒரு பெண்ணின் கஷ்டங்கள் மற்றும் அவளுடைய துயரங்களின் பிரதிபலிப்பே பெரும்பாலும் என்னுடைய சிறுகதைகளில் இடம்பெறுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எம்மைத் தாக்குகின்ற, மனதில் சலனத்தை ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு விடயமும் சிறுகதைக்கான ஒரு கருவாகவே அமைந்து விடுகின்றது என்பது உண்மையான விடயம். எனது சிறுகதைகளும் இவ்வாறான கருக்களிலே துளிர்த்து உருவானது எனலாம்.


நீங்கள் அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள். இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

கவிதையே எனக்கு மிகவும் விருப்பமான ஒரு துறையாக இருக்கிறது. புதுக் கவிதை எனும் போது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இருப்பதில்லை. நினைத்த விடயத்தை நாம் வித்தியாசமாக சொல்கின்ற விதமே புதுக் கவிதைக்கான ஒரு பாணியாக இருக்கிறது. நிச்சயமாக இலக்கியத்தின் ஏனைய துறைகளிலும் ஈடுபாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆயினும் பணி நிமித்தமாகவும் நேரமின்மை காரணமாகவும் அதில் கூடுதலான கவனம் எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ளேன். இனிவரும் காலங்களில் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். வல்ல இறைவன் அதற்குத் துணை புரிய வேண்டும். இன்ஷா அல்லாஹ்.


உங்களது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாதவர்கள் யாவர்?

நான் இலக்கியத் துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் இன்று வரைக்கும் என்னோடு பயணித்து எனக்கு உதவி புரிந்தவர்கள் அனைவரும் எனது வாழ்வில் உண்மையிலேயே மறக்க முடியாதவர்கள்தான். அதற்கு முதற்கண் இறைவனையும் அதன் பிற்பாடு எனக்கு உபகாரம் புரிந்த அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

ஆமாம். ஒரு இலக்கியப் பெண் தனது படைப்புகளில் நிச்சயமாக பெண்களின் பிரச்சனைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசக்கூடியவளாகவே இருப்பாள். அவளது படைப்புகள் சமூகத்தை நோக்கி எழுப்பப்பட்ட ஒரு சுட்டு விரலாகவே காணப்படும். சமூகத்தைச் சாடி அவளுக்கு எதிரான பிரச்சினைகளைப் பேசக்கூடியனவாகவே அவளது ஆக்கங்கள், படைப்புகள் பரிணமிக்கின்றன. ஆம். அந்தச் சிங்கப் பெண்களின் கர்ஜனைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.


திருமணமான பெண்கள் எழுத்துத் துறையிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில், உங்களின் இலக்கியப் பயணத்திற்குப் பின்னணியானவர்களைக் கூற முடியுமா?

ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கை எனும் நாடகத்தில் நிறைய வேடங்கள் உண்டு. மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கல்வியிலே தேர்ந்து வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்வது அவளது முதல் வெற்றி என்று சொல்லலாம். திருமணம் என்ற ஒன்றில் அவள் காலடி எடுத்து வைக்கும் போது அவளின் பொறுப்புக்களும் சுமைகளும் இரண்டு மடங்காகிவிடுகின்றன என்பதே உண்மை. சிறந்த குடும்பத் தலைவி என்பவள் குடும்பத்தையும் வீட்டையும் மிகவும் சாமர்த்தியத்துடன் நிர்வகிப்பவளே. அவளது நிர்வாகம் ஒரே சீராகச் செல்ல வேண்டும். சூழ்நிலைக்கேற்ப வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒரே ஓட்டத்தில் செல்ல வேண்டும். 

வைத்தியத் தொழில் என்பது மிகவும் பொறுப்பு மிக்கதும் வேலைப் பளு மிக்கதுமான ஒரு தொழிலாகும். மிக அவதானத்துடனும் நோயாளர் நலனில் அக்கறை கொண்டும் செய்யக் கூடிய சமூக சேவையாக அது இருக்கிறது. ஒரு பெண் என்ற ரீதியில் வேலைக்குச் செல்லுதலும் குடும்பப் பொறுப்புகளும் இரட்டைச் சுமையாக அழுத்தினாலும் அதைத் திறம்படச் செய்வதில் நாள் மிகவும் கவனம் எடுக்கிறேன். 

இவ்விடத்தில் நேரமுகாமைத்துவம் என்பது மிக அத்தியாவசியமாகிறது. நேரத்தைச் சிக்கனப்படுத்திச் செலவழிப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது. அந்தவகையில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்துத் துறையில் செலவழிப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? தமிழ் என்பது எனக்கு ஒரு போதையாக இருக்கிறது. அதைத் தருவதிலும் சுகிப்பதிலும் ஆவலுடன் இருக்கிறேன். எனது எல்லா வகையான முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் எனது அன்புக் கணவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 

முற்கூட்டியே திட்டமிட்டு பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்யப் பழகிக் கொண்டேன். இவ்வாறான திட்டமிடலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் எனது தந்தையே. இவ்விடத்தில் இதைக் குறிப்பிடுவதில் பேரானந்தம் அடைகிறேன். நேர முகாமைத்துவமே எல்லா வகையான வெற்றிக்கும் அடிப்படையாக அமைவது என்பது அனைவரும் அறிந்த உண்மையாக இருக்கிறது. எனது இலக்கியப் பயணம் திருமணத்தின் பின்னரே ஆரம்பித்தது. அதற்குப் பின்னணியாக இருக்கின்ற அன்புக் கணவர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் கடந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுதான். உண்மையிலேயே எனக்கு அந்த வேளையில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த நிகழ்வு எனது வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக, மறக்க முடியாத ஒரு இன்ப அனுபவமாக இருக்கின்றது. அந்த மகிழ்ச்சியில் எனது மனம் இன்பச் சிறகுகளை கட்டிக்கொண்டு மேலெழுந்து பறந்ததென்றே சொல்லலாம். 

ஒரு படைப்பாளிக்கு சந்தோசம் என்பது என்ன? அவனுடைய ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவரும்போது அல்லது ஒரு நூலாக உயிர் பெறும்போது அவன் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லாது இருக்கிறது. அவன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இன்னும் இன்னும் நிறையக் கவிதைகளாய்ப் பூத்துக் கொண்டிருக்கிறான். படைப்புகளின் நந்தவனமாக மாறிக் கொண்டிருக்கிறான் என்பது நிதர்சனம்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது இரண்டாவது படைப்பான ஹைக்கூ கவிதை நூலென்று மிக விரைவில் வெளிவர இருக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் தன்முனைக் கவிதை நூல் ஒன்றை உருவாக்குவதற்கு எண்ணி உள்ளேன். மேலும் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவந்த ஊக்கப் பதிவுக் கட்டுரைகள் மற்றும் மருத்துவக் கட்டுரைகள் அனைத்தையும் தனித்தனியாக தொகுத்து இரு நூற்களாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் நிச்சயம் வெளியிட ஆசை. இன்ஷா அல்லாஹ் இறைவனின் அருளால் இவை அனைத்தும் ஈடேற வேண்டும் என்று அவனைப் பிரார்த்திக்கிறேன். அதற்குரிய எல்லா வகையான உதவிகளும்  கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1) 2021.03.26 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை) 

2) 2021.12.18 இலக்கியச் சேவைக்கான விருது - சிறீலங்கா பென் கிளப் - முதலாம் மாநாடு 

3) 2022.01.23 கவிச்சூரியன் விருது - தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் 

4) 2022.03.17 கவிச்சாரல் விருது - தமிழ்ச் சாரல் கலை இலக்கிய மன்றம் (இலங்கை) 

5) 2022.05.29 தமிழ் வேள் விருது - தமிழ்நாடு மதுரமொழிக் கவிச் சங்கம் 

6) 2022.07.15 செம்மொழிக் கவிமாமணி விருது - திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேஷன், குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி என்ட் பவுண்டேஷன்  

7) 2022.10.01 கவி முகில் விருது - தமிழ்ச் சாரல் கலை இலக்கிய மன்றம் (இலங்கை)  

8) 2022.11.29 கலைத்தாரகை விருது - ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதேசக் கலை இலக்கிய விழா 

9) 2022.12.24 அவிழ்தம் மருத்துவ சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருது மற்றும் இலக்கியச் சேவைக்கான விருது - சிறீலங்கா பென் கிளப் இரண்டாவது மாநாடு 

10) 2023.01.21 ழகரச் சிற்பி விருது - தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் 

இவைதவிர பல புத்தகப் பரிசுகள், பணப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் என்று இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காகக் கிடைத்துள்ளன என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.


புதிய படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன?

புதிய படைப்பாளிகளுக்கு நான் வழங்கும் ஆலோசனையானது நன்றாக வாசிப்பதுதான். உங்கள் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் போது உங்கள் மொழித் திறன் ஆளுமை அடைகிறது, வீரியமடைகிறது. ஆகவே நன்றாக வாசியுங்கள். கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்ற வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் எழுத்து இன்னும் வளம் பெறும். மனதில் தோன்றும் எண்ணக் கருக்களை அப்படியே எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். காலத்தின் போக்கினில் அதனை மெருகேற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்களும் நல்லதோர் படைப்பாளுமையாக மாறலாம்.

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் இறைவனின் திருப்பொருத்தத்திற்கு அமைவாக செய்யும்போது நிச்சயம் வெற்றி காணலாம். தொடர்முயற்சி ஒருபோதும் வீண் போவதில்லை. அது விஸ்வரூப வெற்றியை உங்கள் முன் கொண்டு வரும்.

"நான் இன்று எதையெல்லாம் என்னுடைய ஒரே இதயத்தால் சொல்கின்றேனோ அது நாளை ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தால் சொல்லப்படும்" என்ற கலில் ஜிப்ரானின் கூற்றை இங்கு கூற விளைகிறேன்.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

இந்த நேர்காணல் வாய்ப்பினை வழங்கிய தினகரன் செந்தூரம் இதழ் குழுவினருக்கும் என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் விசேட நன்றிகள் தெரிவித்தவளாக,


"தமிழ்

தமிழ் மொழியாய்

தமிழ்த் தாயாய் 

தமிழ் நாடாய்

நாட்டு மக்களாய்

மக்களின் வாழ்வாய்

வாழ்வின் மலர்ச்சியாய்


வழிந்து ஓட வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்" என்ற கா. அப்பாத்துரையின் தமிழ் வாழ்த்தோடு விடைபெறுகிறேன். மகிழ்வுடனான நன்றிகள். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்