பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, March 26, 2023

54. கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்? அத்துடன் உங்கள் பாடசாலை வாழ்க்கை மற்றும் தொழில் அனுபவங்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது பெயர் உம்மு ஸக்கியா. நான் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லைப் பிரதேசத்தில் உயன்வத்தை என்னும் கிராமத்தில் 1947.11.01 இல் பிறந்தேன். எனது தந்தை தெல்கஹகொட கிராமத்தில் வாழ்ந்த இப்ராஹீம் லெப்பை ஸித்தீக் மற்றும் எனது தாயார் உயன்வத்தை யூசுப் லெப்பை வைத்தியரின் மகள் ஸாலிஹா பீபி என்பவர்களாவார். 


எனது ஆரம்பக் கல்வியை தெல்கஹகொட முஸ்லிம் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலயத்திலும் கற்றேன். எனக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்னரே எனது தாயார் அகால மரணமானதன் காரணமாக, என்னால் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. 18 வயதுப் பூர்த்தியோடு எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. நான் ஆரம்பக் கல்வியைக் கற்ற தெல்கஹகொட முஸ்லிம் வித்தியாலயத்தில் ஒரு வருடம் கற்பித்ததன் பின்னர் அழுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை 1970 - 1971 ஆம் ஆண்டுகளில் முடித்தேன். அதற்குப் பின்னர் 1972 இல் பயிற்சி பெற்ற ஆசிரியராகச் சென்று உயன்வத்தை நூராணியாவில் இரண்டு வருடங்கள் கற்பித்து, எனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தேன்.

1972 இல் மாவனல்லை கிருங்கதெனிய கிராமத்தில் வாழ்ந்த சிங்கள மொழி மூல ஆசிரியர் அப்துல் றஸ்ஸாக் பரீத் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்று, ஒரு கூட்டுக் குடும்பத்தில் 12 ஆண்டுகள் கணவரின் இல்லத்தில் வாழ்ந்து, இரண்டு புதல்வர்களுக்குத் தாயாகிய பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்; பட்டப் படிப்பை மேற்கொண்டு கலைமாணிப் பட்டம் பெற்று எனது தகுதியை சற்று உயர்த்திக் கொண்டேன். பின்னர் எனது புதல்வர்களினதும் எனதும் நலன் கருதி தலைநகருக்கு இடம் மாற்றம் பெற்று 1985 இல் கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் இணைந்தேன். எனது இரண்டு புதல்வர்களுக்கும் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரிகளில் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.


திருமதி. தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் ஜி.சீ.ஈ. உயர்தர வகுப்பிற்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் வெற்றிடம் இருப்பதாக என்னிடம் ஒரு தகவலைக் கூறினார். அதன்படி நான் அக்கல்லூரில் இணைந்து 05 வருடங்கள் உயர்தர வகுப்பிற்குக் கற்பித்தேன். இக்காலப் பகுதியில் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாப் பயிற்சி நெறியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட பகுதி நேரப் பயிற்சியாக மேற்கொண்டு மேலும் எனது தகுதியை உயர்த்திக் கொண்டேன்.


1990 இல் இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டுக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியதில் எனக்குத் திறமைச் சித்தி கிடைத்தது. எனினும் இப்பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாததொரு இக்கட்டான சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. அதாவது எனது கணவரின் திடீர் மாரடைப்புக் காரணமாக இந்தியாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டதால் எனது 40 ஆவது வயதிலேயே ஆசிரியப் பணியைவிட்டு நீங்க நேரிட்டது. எல்லாம் நன்மைக்கே என்று என்னை நானே தேற்றிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதற்குப் பின்னரே எனது திசையை எழுத்துப் பணிக்குத் திருப்பினேன்.

இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்படக் காலாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?

சிறுவயதிலிருந்தே எனது தந்தை, தனது பிள்ளைகளுக்கு வாசிப்பதில் ஆர்வமூட்டும் முகமாக பத்திரிகைகளை வாங்கிக் தந்;தார். அப்போதுகளிலிருந்தே நாங்கள் தினகரன் வாரமலர், சிறுவர் மலரைத் தவறாது வாசிப்போம். நான் ஐந்தாம் வகுப்பில் கற்கும் போது சிறுவர் மலரில் நயீமா பஷீர் என்ற ஒருவர், எனது ஊர் ஹப்புத்தளை என்ற தலைப்பில் ஆக்கம் ஒன்றை பத்திரிகையில் எழுதி இருந்தார். இப்போது அவர் நயீமா சித்தீக் என்ற பிரபல மூத்த பெண் எழுத்தாளராக உள்ளார். அவர்தான் எனது எழுத்துலக முன்னோடி அவரைப்போல நானும் எழுத வேண்டும் என்று நினைத்து எனது ஊர் பற்றி சுமார் 10 வரிகள் எழுதி, பத்திரிகைக்கு அனுப்பினேன். அந்த ஆக்கம் அப்போதுகளில் தினகரன் சிறுவர் மலரில் வெளிவந்தது. இதனைப் பத்திரிகையில் வாசித்துவிட்டு, என்னை விடவும் உண்மையில் எனது தந்தையே மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஆக்கமே நான் பத்து வயதில் எழுதிய என்னுடைய முதலாவது ஆக்கமாக அமைந்தது. அதற்குப் பின்னர் அவ்வப்போது கதைகள் மற்றும் சிறு சிறு ஆக்கங்கள் போன்றவற்றை எழுதினேன்.

இலக்கிய உலகில் நுழைந்த காலம் மற்றும் சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

ஆரம்ப காலங்களில் நூல்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சமும் இருக்கவில்லை. எனது கணவரின் உடல் நிலை தேறிய பின்னர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தமிழ் பிரிவில் இணைப்பாளராக பணியாற்றக் கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. கொழும்பு ஸாஹிராவில் இணைந்த மறுநாள் ஸாஹிராவில் பிரம்மாண்டமான அப்துல் கபூர் மண்டபத்தில் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது. அந்த மண்டபத்துள்குள் நுழையும் போது மண்டபத்தின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த கம்பீரமான தோற்றத்தில் உள்ள புகைப்படங்களைக் கண்டதும் எனது உடம்பெல்லாம் பூரிப்பது போல ஓர் உணர்வு ஏற்பட்டது. ஏற்கனவே அறிஞர் சித்திலெப்பை அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீpஸ் போன்றவர்களின் புகைப்படங்களைப் பார்த்துப் படித்த அனுபவம் எனக்கு இருந்தது.


மற்றவர்கள் யார் என்ற சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. பிரிவுத் தலைவர் என்.எம்.எம். ரெஸீன், உப அதிபர் அப்துல் அஹத், வாசிகசாலைப் பொறுப்பாளர் போன்ற பலரிடம் இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய முற்பட்டேன். ஆர்கேட், எம்.ஐ.சீ.எச். போன்ற பல இடங்களில் தகவல்களைத் தேடினேன். கல்லூரி ஆசிரியர்களான அப்துல் அஸீpஸ், முகமது ஷாதுலி ஆகியோர் எனக்கு மிகவும் உதவி செய்தார்கள். சுமார் ஒரு வருட தேடலுக்குப் பின்னரே ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற எனது முதலாவது நூலை நான் வெளியிட்டேன். 


உங்களுக்குள் படைப்புகள் எவ்வாறு கருக்கொண்டு உருப்பெறுகின்றன?

எனது கவிதைகளைப் பொறுத்தவரையில் அன்றாட வாழ்வில் என்னுடைய மனதைப் பாதித்த விடயங்களை நான் அவ்வப்போது குறித்து வைத்துக்கொள்வேன். அவற்றைத் தனிமையாக இருக்கும் நேரங்களில் கவிதைகளாக வடிவமைத்து, செம்மைப்படுத்தி எழுதிக்கொள்வேன். பின்னாட்களில் அவற்றை மீண்டும் தேவைக்கு ஏற்ப சீர்படுத்தி திருப்தியாக எழுதிக்கொள்வேன். அவற்றையே பின்நாட்களில் நூலாக வெளியிடுவேன்.


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் நீங்கள் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துக்கள் உங்களை அதிகமாகக் கவர்ந்ததாக கருதுகிறீர்கள்?

ஆம். என்னுடைய கையில் எந்த நூல் கிடைத்தாலும் நான் அவற்றை முழுமையாக வாசிப்பேன். வழமையாக கிழமைக்கு ஓரு நாளாவது நூல் நிலையம் ஒன்றுக்குச் சென்று, ஆகக் குறைந்தது மூன்று மணித்தியாலங்களைச் செலவளித்து புத்தகங்களை வாசிப்பேன். அதுபோல நான் செல்லும் நூல் நிலையங்களுக்கு எனது அன்பளிப்பாக சில புத்தகங்களை வழங்கும் பழக்கமும் என்னிடம் உள்ளது. முடிந்தளவு எல்லா எழுத்தாளர்களது நூல் வெளியீடுகளுக்கும் சென்று அவர்களது நூல் வெளியீட்டு முயற்சிகளுக்கு உதவும் வகையில் கரங்கொடுப்பேன்.

மறைந்த எழுத்தாளர் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களின் நூல்கள் எல்லாவற்றை நான் மிகவும் விரும்பி வாசித்ததுண்டு. இஸ்லாமிய நூல்களைப் பொறுத்தவரையில் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாயர் கலாநிதி எம்.ஐ.எம். அமீன், கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்களுடைய எல்லா நூல்களையும் வாசித்துள்ளேன். நளீமிய்யா நூல் வெளியீடுகளைத் தொடர்ந்தும் வாசிக்கும் பழக்கம் என்னிடம் உள்ளது. 

இதுவரை வெளிவந்த உங்களது நூலாக்கங்கள் தொடர்பாகக் கூற விழைவது? அத்துடன்  இலக்கியத் துறையில் உங்களுக்கு ஊக்குவிப்பாய் இருந்தவர்கள் குறித்தும் கூறுங்கள்?

இதுவரை நான் 06 நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த நூல்களுக்கு இலக்கிய உலகில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அந்த 06 நூல்களும் பின்வருவனவாகும். 

01. ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் (ஆவணம்) 2004

02. விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி) 2010

03. இதயத்தின் ஓசைகள் (கவிதைத் தொகுதி) 2010

04. முதுசம் (பொன் மொழித் தொகுப்பு) 2010

05. பொது அறிவுத் தகவல் களஞ்சியம் (தகவல்) 2013

06. இஸ்லாமிய தகவல் களஞ்சியம் (சமயம்) 2016

07. நமது வரலாற்று ஆளுமைகள் (ஆவணம்) 2022


எனது ஒரு வருட தேடலுக்குக் கிடைத்த வெற்றியாகவே ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற முதலாவது நூலை 2004 ஆம் ஆண்டில் கொழும்பு ஸாஹிராவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் வெளியிட்டேன். இவ்விழாவுக்கு முனைவர் பர்வீன் சுல்தானா, காலஞ்சென்ற கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றோர் இந்தியாவிலிருந்து அதிதிகளாக வந்து சிறப்பித்தார்கள். எனது இந்த முதலாவது நூல் தான் என்னை இலக்கிய உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

சுமார் ஏழு வருடங்கள் ஸாஹிராவில் பணிபுரிந்த நான் எனது கணவனின் மரணத்துக்குப் பின்னர் அக்கல்லூரியைவிட்டு நீங்கி எனது மார்க்கக் கடமையான இத்தாவை அனுஷ்டிக்கச் சென்றேன். தனிமைப்பட்டிருந்த அந்த நான்கு மாதங்களில் எனது மார்க்கக் கடமைகளோடு நான் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி திரட்டி வைத்திருந்த பல குறிப்புகளையும் ஒழுங்குப்படுத்தி அவற்றை முறையாகத் நூலுருப்படுத்தினேன்.

விடியலின் விழுதுகள் (சிறுகதை தொகுதி), இதயத்தின் ஓசைகள் (கவிதைத் தொகுதி), முதுசம் (பொன் மொழித் தொகுப்பு), ஆகிய மூன்று நூல்களையும் இத்தாவுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வெளியிட்டேன். வைத்திய கலாநிதி டாக்டர் தாஸிம் அகமது மற்றும் மர்ஹும் மருதூர் ஏ. மஜீத், அகில இலங்கை இளம் மாதர் சங்கத்தினர்களாகிய தேசமானிய மக்கியா முஸம்மில், தேசமான்ய பவாஸா தாஹா, ஓய்வு பெற்ற அதிபர் மர்ளியா சித்தீக், பெண்கள் தொழில் வான்மைச் சங்கத் தலைவி ஷானாஸ் ஹகீம் போன்ற பலர் எனக்கு உதவி செய்தார்கள். இவர்கள் அனைவரையும் இந்த இடத்தில் நன்றியோடு நான் ஞாபகப்படுத்துகின்றேன்.


எனது ஐந்தாவது நூல் பொது அறிவுத் தகவல் களஞ்சியம் ஆகும். இந்த நூல் பாடசாலை மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் நோக்கோடு வெளியானது. இந்த நூலை எனது பிறந்தகமான மாவனல்லையில் 2013 இல் வெளியிட்டேன். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர்களில் ஒருவரான மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், தொழிலதிபர் கமால் தீன் ஹாஜியார், கண்டி ஆயிஷா பெண்கள் அமைப்புகளின் தலைவி திருமதி. ஆயிஷா அஸீஸ் மஃரூப் போன்றவர்கள் முன்னின்று இந்த நூல் வெளியீட்டை நடாத்தித் தந்தார்கள்.


நான் அஹதியாக மாணவர்களுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்பித்துள்ளேன். அஹதியா இறுதி ஆண்டு அரசாங்கப் பரீட்சை, தர்மாச்சரிய பரீட்சை போன்றவற்றில் பரீட்சையிடல், மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட காலங்களில் மாணவர்களுக்கு அடிப்படை இஸ்லாமிய அறிவில் காணப்பட்ட குறைபாடுகளை மதிப்பீடு செய்யக் கூடிய அவகாசம் எனக்குக் கிடைத்தது. இந்த சூழ்நிலையை அவதானித்த நான் இஸ்லாமிய தகவல் களஞ்சியம் என்ற பொது அறிவு நூலைத் தொகுத்து 2016 இல் வெளியீடு செய்தேன்.

எனது ஏழாவது நூல் நமது வரலாற்று ஆளுமைகள் என்ற தலைப்பில் அமைந்த நமது நாட்டுக்குச் சேவை செய்த சேவையாளர்களைத் தேடி அதன் முதலாவது பகுதியை 2022 இல் வெளியிட்டேன். இந்த நூலின் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.


உங்களது முதல் தொகுப்பான ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற ஆவண நூல் குறித்து விசேடமாகக் கூற விரும்புவது என்ன?

ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூலே எனது முதலாவது நூலாகும். இலங்கையின் முஸ்லிம்கள் வியாபாரத்தையே தமது பரம்பரைப் பெருமையாக பேசிக்கொண்டு கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த சந்தர்ப்பத்தில் அறிஞர் எம்.ஸீ. சித்தி லெப்பை, வாப்பிச்சி மரிக்கார், எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்த ஒராபி பாஷா, கொடை வள்ளல் அப்துல் கபூர், ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், கரீம் ஜீ ஜபர் ஜீ, ஸேர் மாகான் மாகார் போன்ற சிர்திருத்தவாதிகள் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மத்ரஸதுல் ஸாஹிராவை நிறுவுவதற்கான முயற்சியை முன்னெடுத்தனர். இவர்களின் புகைப்படங்கள் இன்றும் கொழும்பு ஸாஹிராவின் அப்துல் கபூர் மண்டபத்தில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பெரியவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் 1997 இல் எனக்கு ஏற்பட்டது. அதன் பிரதிபலிப்பே ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூலாக 2004 இல் வெளிவந்தது.



உங்களது ஒவ்வொரு சிறுகதைகளும் சமூக உறவுகளின் போலித் தனத்தை உரித்துக் காட்டி சமூகத்தின் மீதான சாடலாக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்;தவகையில் உங்களது விடியலின் விழுதுகள் சிறுகதை நூலில் உள்ள கதைகள் தொடர்பாகக் கூற விழைவது?

விடியலின் விழுதுகள் என்ற எனது சிறுகதைத் தொகுதியில் 13 சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன. இன்று எமது குடும்பப் பெண்கள், வீடுகளிலும் குடும்பங்களிலும் வேலை செய்யும் இடங்களிலும் வெளிநாடுகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் வயோதிபர் இல்லங்களிலும் பல்கலைக்கழக பகிடிவதைகளாலும் பல்வேறு வகையான கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி மனத் தாக்கங்களோடு வாழ்ந்து வருவதையே எங்கும் காண முடிகின்றது. இந்த அவலங்களை சமூகத்திற்கு முன்வைத்து, இவற்றுக்கான தீர்வு கிடைக்குமா என்ற எனது ஆதங்கத்தையே சிறுகதைகளாக வெளிப்படுத்தியுள்ளேன்.


உங்கள் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன? உங்கள் சிறுகதைத் தொகுதிக்கு விடியலின் விழுதுகள்; என்ற நாமத்தினை ஏன் வைத்தீர்கள்?

சீதனக் கொடுமை, மாமிக் கொடுமை, மதினிக் கொடுமை எனப் பல்வேறு வகையான சமூகக் கொடுமைகளால் பெண்கள் கஷ்டப்படுவதைக் கண்டும், கேட்டும் என் உள்ளத்தை உறுத்திய பாதிப்புகள், அவலங்களைத் தொகுத்து எனது சிறுகதைகளை எழுதினேன். அவற்றுக்கான விடியலை தேடும் நோக்கோடு சமூகத்திற்கு முன்வைப்பதைக் கருத்தில் கொண்டே எனது சிறுகதைத் தொகுதிக்கு விடியலின் விழுதுகள் என்ற நாமத்தைச் சூட்டினேன்.


இதயத்தின் ஓசைகள் என்ற உங்களது கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றியும் கவிதைகள் பற்றியும் கூறுங்கள்?

எனது தேர்ந்தெடுத்த 40 கவிதைகளைத் தொகுத்தே இதயத்தின் ஓசைகள் என்ற கவிதை நூலை வெளியீடு செய்தேன். அதாவது பொதுவாகக் கூறுவதென்றால் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் கருப்பொருட்களை உள்ளடக்கும் வகையிலேயே இந்தக் கவிதை நூலை நான் வெளியீடு செய்துள்ளேன். இனிவரும் காலங்களில்; சமூகப் பிரச்சினைகளை எழுத மிகவும் ஆவல் கொண்டுள்ளேன். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இதுவரை எனது நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றுக்குப் நான் பாராட்டுகளையும் பரிசில்களையும் பெற்றுள்ளேன்.


பொது அறிவு தகவல் களஞ்சியம் என்ற நூல் தொடர்பாகக் கூற விழைவது?

பாடசாலை மாணவர்களையும் அரசாங்கப் போட்டிப் பரீட்சைகளையும் மையமாக வைத்து இலங்கை தொடர்பான பொது அறிவுத் தகவல்கள் பலவற்றையும் திரட்டி பொது அறிவு தகவல் களஞ்சியம் என்ற எனது ஐந்தாவது நூலை 2013 இல் வெளியிட்டேன்.


இறுதியாக வெளியிட்ட நமது வரலாற்று ஆளுமைகள் நூல் வெளியீடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?

ஒவ்வொரு சமூகத்திலும் அவ்வப்போது அறிவாற்றல் மிக்கோர் தோன்றுகின்றனர். அவர்கள் சமூகத்தின் இயக்க சக்தியாக விளங்குபவர்கள். இந்த வகையில் சுமார் 1000 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் சமூகத்திற்கு அறிவாலும் ஆற்றலாலும் சேவை செய்து மறைந்த ஆயிரக்கணக்கான ஆளுமைகளில் 143 நபர்களின் வரலாற்றைத் திரட்டி, 10 அத்தியாயங்களாகப் பிரித்து சுமார் 568 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவண நூலாக நமது வரலாற்று ஆளுமைகள் என்ற தலைப்பில் இந்த நூலை வடிவமைத்துப் பல்வேறு வகையான சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு வெளியீடு செய்தேன்.


இலக்கிய வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

அண்மையில் வெளியீடு செய்யப்பட்ட எனது  ஏழாவது நூலான நமது வரலாற்று ஆளுமைகள் என்ற ஆவண நூலின் முதலாம் பகுதி என்னுடைய ஏழு வருட முயற்சியாகவே அமைகிறது. அதற்காக நான் நாடு முழுவதும் அழைந்து திரிந்து தகவல்களைத் திரட்டி பல கஷ்டங்களை அனுபவித்தேன். இந்த நூலில் தொகுக்கப்பட்ட ஆளுமைகளில் 75 வீதமானவர்கள் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியோடு ஏதாவது ஒரு வழியில் தொடர்புபட்டவர்கள். அதனால் இந்த ஆவண நூலை கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் வெளியிட வேண்டும் என்பது எனது ஒரே ஆவலாக இருந்தது. இருந்தாலும் எனக்கு அங்கு இந்த நூலை வெளியீடு செய்யக் கிடைக்கவில்லை.


இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டு எவ்வாறான பங்களிப்பினை ஆற்றியுள்ளீர்கள்?

இலங்கையில் மட்டுமல்லாமல் மலேசியா, சென்னை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவ்வப்போது நடந்த  தமிழ் இலக்கிய மாநாடுகளில் பேராளராகக் கலந்து சிறப்பித்துள்ளேன். இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு பேராளராக கலந்துகொள்ளச் சென்ற அனைத்து எழுத்தாளர்களோடும் எனக்கு இன்றுவரை தொடர்புகள் உண்டு. அத்துடன் முனைவர் பர்வீன் சுல்தானா, மர்ஹும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தேன். என்னுடைய இல்லத்துக்கு அவர்களை வரவழைத்து விருந்தளித்து மகிழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகளும் எனக்கு உண்டு.  தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் மர்ஹுமா கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் எனக்கு கனடாவில் உள்ள இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தித் தந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் எனக்குப் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி கௌரவித்தார். அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். 

நான் பல பெண்கள் அமைப்புக்களில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றேன். இந்த அமைப்புக்களில் இலங்கை இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தில் நான் ஒரு ஸ்தாபக உறுப்பினராக இணைந்து இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அல் முஸ்லிமாத் நிறுவனத்தில் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை நாட்டின் நாலா புறங்களிலும் உள்ள முஸ்லிம் சிறுமியர்களின் மூன்றாம் நிலைக் கல்வியில் கரிசனை காட்டி வருகின்றேன். நான் எந்தப் பணியைச் செய்தாலும் எனக்கு இறைவன் அமானிதமாக அளித்த கல்விப் பணியை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சுமார் 20 வருடங்கள் தூய்மையான எண்ணத்தோடு செய்துள்ளேன். இதற்கு என்னிடம் கல்வி கற்ற மாணவர்களும் மாணவிகளும் சாட்சி பகர்வார்கள். 


பத்திரிகைத் துறையில் பணியாற்றிய காலம் தொடர்பாக குறிப்பிட விரும்புவது?

நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய கலாபூஷனம் என்.எம். அமீன் அவர்கள் என்னை நவமணிப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் சேர்த்துக்கொண்டார். நான் சுமார் 06 வருடங்கள் இங்கு பணியாற்றினேன். இந்நாட்களில் நமது முன்னோர்கள் என்ற தலைப்பில் ஒரு பத்தியை வாரத்துக்கு ஒன்று என்ற வகையில் எழுதி வந்தேன். சுமார் 50 பேர்கள் பற்றிய பத்திகளைத் தொடராக நவமணிப் பத்திரிகையில் எழுதினேன். 

கோவிட் 19 க்கு பின்னர் நவமணிப் பத்திரிகை நிறுத்தப்பட்டாலும் ஏற்கனவே நான் நவமணிப் பத்திரிகையில் எழுதிய நமது முன்னோர்கள் என்ற ஆக்கங்களுடன் மேலும் 300 நபர்களது தகவல்களைத் திரட்டி ஒரு நூலாக வெளியிட சுமார் ஏழு வருட எனது நேர காலங்களைச் செலவிட்டுள்ளேன். இதன் பொருட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று சேவையாளர்களது குடும்பங்களைச் சந்தித்து, தகவல்களைத் திரட்டி நமது வரலாற்று ஆளுமைகள் என்ற தலைப்பில் அதன் முதலாம் பாகத்தை வெளியீடு செய்தேன். நூலின் இரண்டாம் பகுதிக்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.


உங்களது இலக்கிய மற்றும் சமூகப் பணிகளுக்காக நேர காலங்களை எவ்வாறு ஒதுக்கிக் கொள்கிறீர்கள்?

நேர காலம் கண் போன்றது, பொன் போன்றது என்றெல்லாம் சொல்வார்கள். காலம் உயிர் போன்றது என்று நான் சொல்வேன். பொன்னை இழந்தால் தேடிக்கொள்ளலாம். கண்ணையும் சரி செய்து கொள்ளலாம். உயிர் பிரிந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே நேர காலத்தை மிகவும் சரியாகத் திட்டமிட்டு செலவளிக்க நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். நானும் அவ்வாறே என்னுடைய நேர காலங்களைச் சரியாகத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திக் கருமமாற்றுகின்றேன். 

இலங்கை மனித உரிமை நிறுவனத்தில் ஆறு மாத கால பயிற்சி பெற்று 2003 இல் டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன். 2006 இல் ஐ.நாவின் யூ.என்.டீ.பீ. அமைப்பினூடாக சமாதான தொண்டர் நிறுவனப் பணிகளுக்காக எனக்குச் சான்றிதழ் கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனத்தைப் பெற்றுக்கொண்டேன். அத்துடன் சில வருடங்களாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டுள்ளேன். தெஹிவலைப் பிரதேசக் காரியாலயத்தில் அங்கத்தவராக இணைந்து, பல்வேறு பணிகளை அவர்களோடு சேர்ந்து பணியாற்றி வருகின்றேன். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் சுமார் 15 வருடங்கள் பிரதிகள் எழுதியும் குரல் கொடுத்தும் வந்துள்ளேன். எனக்கு இப்போது 76 வயதாகின்றது. சமூகத்துக்கு இன்னும் ஏதையாவது என்னாhல் செய்ய முடியுமா என்பதைப் பற்றிச் சிந்திக்கிறேன்.


தற்காலங்களில் படைப்புகளுக்குக் கிடைக்கின்ற விருதுகள் தொடர்பாக நீங்கள் எவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளீர்கள்?

எனக்கு பல விருதுகள், பட்டங்கள் கிடைத்த போதும் அதை நான் பெரிதாக அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை விருதுகள் பெறுவது முக்கியமல்ல. பல விருதுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாக நம்மை மாற்றிக் கொள்வதுதான் மிகவும் முக்கியம் என்றே நான் கருதுகின்றேன். இன்று பேருக்கும் புகழுக்கும் பணத்திற்கும் விருதுகள் பெறும் ஒரு காலமாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.


எழுத்திலக்கியத்தில் ஈடுபட்டமைக்காக இதுவரை தங்கள் பெற்றுக்கொண்ட வரவேற்புகள், பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் கூற முடியுமா?

2011.12.17 - கலாபூஷணம் (கலாசார அலுவல்கள் திணைக்களம்)

2011.08.12 - சாமஸ்ரீ தேசமான்ய விருது (அகில இன நல்லுறவு ஒன்றியம்) 

2016 - இலக்கிய தென்றல் (தடாகம் கலை இலக்கிய வட்டம்)

2018.07.21 - ஊடகத்துறைப் பணிக்கான கௌரவ விருது (ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்)

2018 - ஸ்ரீ விபூதி விருது (தெஹிவலை பிரதேச செயலகம்)

2022.08.15 - தீர்த்தகிரியார் வீர விருது (திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன்)

2022.09.17 - எழுத்தொளி சக்ரா விருது (திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன்)

2022.10.24 - பண்கலை ஒளிச் செம்மல் விருது (திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன்)


பொது மற்றும் சமூகப் பணிகளை ஆற்றி வருவதாக அறிகின்றேன். அதுபற்றியும் கூறுங்களேன்?

தலைநகருக்கு வந்த 1985 களிலிருந்து பல பெண்கள் அமைப்புகளிலும், மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனமொன்றிலும் எனது நேரத்தை பிரயோசனமாக்கிக் கொண்டு பணிபுரிந்து வந்தேன். அத்துடன் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கும் பிரதி எழுதுதல், நேரடியாகக் கலந்துகொள்ளுதல், உரையாடல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுதல் போன்ற பங்களிப்புகளுடன் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்டேன். என்னை வானொலிக்கு அறிமுகப்படுத்தியவர்கள் கலாபூஷணம் புர்கான் பீ. இப்திகார், எனது மாணவன் மர்ஹும் நூராணியா ஹஸன், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காலஞ்சென்ற பூமணி குலசிங்கம் ஆகியோர்களாவார். இவர்கள் அனைவரையும் நன்றியோடு ஞாபகப்படுத்துகின்றேன். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Wednesday, March 8, 2023

53. எழுத்தாளர் நஸீரா எஸ். ஆப்தீன் அவர்களுடனான நேர்காணல்

 எழுத்தாளர் நஸீரா எஸ். ஆப்தீன் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகம், பாடசாலை வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?

எனது பிறப்பிடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரமாகும். எனது தந்தை ஏறாவூரின் உயர் குடியெனக் கருதப்பட்ட பெரிய ஆலிம் குடும்பத்தின் முகம்மது ஹஸன் ஆலிம் என்பவரின் ஆண் மக்களில் இரண்டாமவரான செயினுலாப்தீன் என்பவராவார். எனது தாயின் பெயர் அலியார் ஆயிஷா உம்மா. எனது பெற்றோருக்கு நான் இரண்டாவது பிள்ளை. எனது தந்தை ஏறாவூரின் பிரபல பாடசாலைகள் அனைத்திலும் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். எனது தாய், தந்தை இருவரும் தற்போது இவ்வுலகில் இருந்து விடைபெற்று விட்டார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). எனது கணவர் சேகு இப்றாகிம் முகம்மட் மஹ்சூர், வாகன திருத்துனராகப் பணி புரிந்தவர். 1988 ஆம் ஆண்டில் ஏறாவூரில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஷஹீதாக்கப்பட்டார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). எனக்கு இரண்டு பெண் மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் முகாமைத்துவ உதவியாளர்களாகக் கடமை புரிகின்றார்கள். 


நான் ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் (தற்போதைய அலிகார் மத்திய கல்லூரி) ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரை கல்வி கற்றவள். க.பொ.த. உயர் தரத்தில் நான் வணிகப் பிரிவில் கற்று 1980 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தி பெற்றேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வி மூலம் எனது கலைமாணிப் பட்டப் படிப்பையும்  முதுகலைமாணிப் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளேன்.


உங்கள் தொழில் அனுபவம் பற்றியும் கூறுங்கள்?

நான் 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தெரிவுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று மனையியல் உதவி ஆசிரியையாக 1982 ஏப்ரலில் முதல் நியமனம் பெற்று, வாழைச்சேனை அன்னூர் மகா வித்தியாலயத்தில் (அன்னூர் தேசிய பாடசாலை) கடமையேற்றேன். அதன் பின்னர் எனது பாடத் தகுதிகளின் அடிப்படையில் சமூகக் கல்விப் பாட நெறிக்காக அழுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு உள்வாங்கப்பட்டு, பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியினைப் பூரணப்படுத்தினேன். அதனைத் தொடர்ந்து ஏறாவூர் றகுமானியா வித்தியாலயம், ஏறாவூர் அறபா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியையாகக் கடமை புரிந்துள்ளேன்.


தொடர்ந்து இலங்கை கல்வி நிருவாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று, 1999 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கல்குடா கல்வி வலயம், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பணி புரிந்து 2018 ஆம் ஆண்டில் 55 வயதில் எனது கடமையிலிருந்து ஓய்வு பெற்றேன்.


உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான உங்களது குடும்பப் பின்னணி, இளமைப் பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்?

நான் ஆரம்ப வகுப்புகளில் கற்றுக் கொண்டிருந்தபோது அந்த சிறு வயதிலிருந்தே ஏராளமான நூல்களை வாசிக்கும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தது. எனது தந்தை வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி நூலகமொன்றை வைத்திருந்தார். அதுபோன்று எனது தந்தை பொது நூலகங்களிலிருந்தும் பல நாவல்கள், சிறு கதைகள் போன்ற நூல்களை வீட்டிற்குக் கொண்டு வருவார்.


இவைகளில் எந்த நூல்களையும் நான் படிக்காமல் விட்டதில்லை. மிகப் பெரிய நாவல்களைக் கூட ஓரிரு தினங்களில் வாசித்து முடிப்பேன். எனது தந்தை தொடர்ச்சியாக தினசரிப் பத்திரிகைகளை எடுப்பதுண்டு. வார இறுதிப் பத்திரிகைகளுக்காக மிக ஆவலுடன் காத்திருந்து அதில் வரும் தொடர் கதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்றவற்றைத் தவறாமல் வாசிப்பேன். அவ்வாறான வாசிப்புப் பழக்கம்தான் எனது மொழியாற்றலை விருத்தி செய்ததுடன் எனது பாடசாலைக் கல்விக்கும் காத்திரமாக அமைந்தது என்றே கூற வேண்டும். அதுவே எனது இலக்கியப் பயணத்திற்கும் உறுதுணையாக அமைந்தது எனலாம்.


உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக எப்போது ஆரம்பித்தது?

நான் ஆசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் பல கவிதைகளையும் சிறுகதை, உருவகக் கதைகளையும் எழுதியுள்ளேன். அவை வானொலி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களில் வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள், வழிகாட்டல்கள் எனக்குக் கிடைக்கவில்லை. பாடசாலை சஞ்சிகைகளில் நூலாக்கக் குழுவில் இடம் பெற்று சில தொகுப்புப் பணிகளுக்கு ஒத்தாசையாக இருந்துள்ளேன். 


பாடசாலை றோனியோ பிரதிகளில் சில ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் எனது வெற்றிகரமான எழுத்து முயற்சி முகநூல் குழுமங்களூடாகத்தான் விருத்தியடைந்தது. பல்வேறு முகநூல் குழுமங்களில் நடத்தப்பட்ட பல்வேறு வகையான கவிதைப் போட்டிகளில் பங்கேற்று அவை எல்லாவற்றிலும் வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றேன். விருதுகளுக்காக நடத்தப்பட்டு, நான் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் எனது படைப்புகள் தெரிவாகி அவற்றுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். உண்மையில் 2018 ஆம் ஆண்டில் நான் கடமையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே எழுத்துலகுக்குள் மிகுந்த ஆர்வத்துடன் பிரவேசித்தேன்.


நீங்கள் எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகின்றீர்கள்?

நான் பல்வேறு வகையான கவிதைத் துறைகளில் ஈடுபட்டு அவற்றுக்கான இலக்கண விதிகளைக் கற்று அறிந்து அவற்றை எழுதி வருகின்றேன். புதுக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள் எனப் பலவற்றையும் எழுதி வெற்றியடைந்துள்ளேன். அவற்றை நூல்களாகவும் வெளியிட்டுள்ளேன். அதுபோன்று மரபுக் கவிதைகள், வெண்பாக்கள் போன்றவற்றையும் தற்போது கற்றறிந்து அவற்றிலும் முயற்சி செய்து வருகின்றேன். இவைதவிர கவிஞர்கள் புதிய வடிவக் கவிதைகளையும் படைக்க வேண்டுமென ஊக்குவித்து, மணிக்கூ கவிதைகள், புத்தொளிக் கவிதைகள், கூம்புக் கவிதைகள் எனப் பல புதிய வடிவக் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கவிஞர்களை அவற்றின்பால் ஊக்குவித்து வருவதுடன் அக் கவிதை வகைகளில் நூல்களையும் வெளியிட்டுள்ளேன். தற்போது சிறுகதைகள், நாடகங்களை எழுதுவதில் முயற்சித்து வருகின்றேன்.

 


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் மற்றும் தொகுப்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

நான் இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளேன். 


01. ஹைக்கூவில் கரைவோமா?

02. வானும் மண்ணும் நம் வசமே

03. பாரதிக்கு பதில் மடல்

04. மகுடம் சூடும் மணிக்கூகள்

05. புத்தொளிக் கவிதைகள்

06. மண்ணில் தவழும் விண்மீன்கள்

07. பெயர் பதிக்கும் தகைகள்

"ஹைக்கூவில் கரைவோமா?" எனது முதலாவது நூல் 2020 பெப்ரவரி 02 ஆம் திகதி சென்னை எழும்பூரில் வெளியிடப்பட்டது. எனது இரண்டாவது நூல் "வானும் மண்ணும் நம் வசமே.." என்ற தன்முனைக் கவிதைகள் நூலாகும். மூன்றாவது நூல் "பாரதிக்கு பதில் மடல்" என்ற புதுக் கவிதைகள் மற்றும் கிராமியக் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகும். நான்காவது நூல்  "மகுடம் சூடும் மணிக்கூகள்" என்ற மணிக்கூ கவிதைகள் அடங்கிய நூலாகும். இவை நான்கும் எனது தனிப்பட்ட படைப்புகளாக இருக்கின்றன.


அத்தோடு "புத்தொளிக் கவிதைகள்", 'மண்ணில் தவழும் விண்மீன்கள்" ஆகிய இரண்டு உலகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல்களையும் நான் வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து "பெயர் பதிக்கும் தகைகள்" என்ற ஏறாவூரின் முக்கிய நபர்களின் விபரங்களடங்கிய வரலாற்றுத் தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளேன். இந்த நூல் சுமார் 640 பக்கங்களைக் கொண்டது.


உங்களது முதலாவது நூலான 'ஹைக்கூவில் கரைவோமா? ' நூல் பற்றி விசேடமாகச் சொல்ல விரும்புவது என்ன? 

"ஹைக்கூவில் கரைவோமா?" என்ற நூல் ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய ஆய்வுடன் இன்னும்  பல  விடயங்களையும்  உள்ளடக்கியுள்ளது.  ஹைக்கூவின் தோற்றம், வளர்ச்சி, திரிபடைந்த ஹைக்கூகள் போன்றவற்றை விரிவாக உதாரணங்களுடன் அதில் விளக்கியுள்ளேன். பேராசிரியர் செ. யோகராசா, பாவேந்தல் பாலமுனை பாறூக் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்த இந்நூலை முக்கியமான 03 பகுதிகளாக நோக்கவேண்டியுள்ளது. முதல் பகுதி ஹைக்கூ பற்றிய ஆய்வும், அடுத்த பகுதி மணிக்கூ கவிதைகளின் அறிமுகம், மூன்றாம் பகுதியாக எனது சொந்த ஹைக்கூ கவிதைகளையும் காணக்கூடியதாகவுள்ளது.


நீங்கள் இங்கு மணிக்கூ கவிதைகள் என்று குறிப்பிடுகின்றீர்களே! அது பற்றி விளக்க முடியுமா?

தற்காலத்தில் எத்தனையோ கவிஞர்கள் ஹைக்கூ கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நூற்றுக்கணக்கான ஹைக்கூ நூல்கள் தமிழிலே வெளிவந்துள்ளன. ஆனால் இந்நூல்கள் ஹைக்கூ விதிமுறைகளை மீறிய வகையில் அமைந்துள்ளன. அதில் ஹைக்கூ என்ற பெயரில் வெளிவருகின்ற ஏராளமான கவிதைகள் மூன்று வரிகளைத் தாங்கியதாக வெளிவருகின்றன. பலர் ஹைக்கூ கவிதைகளை எவ்வாறு எழுதுவதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மேலும், 'ஹைக்கூ|| என்ற பெயரானது தமிழுக்கு உகந்த பெயரும் அல்ல. அதனால்தான் மணிக்கூ என்ற பெயரில் மூன்று வரிக் கவிதைகளை எழுதுமாறு நான் எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். மணிக்கூ கவிதைகளை ஏன் எழுத வேண்டும்?; எப்படி எழுத வேண்டும்? போன்ற விளக்கங்களை நான் "ஹைக்கூவில் கரைவோமா?" என்ற எனது நூலில் விபரித்துள்ளேன்.


இந்த மணிக்கூகள் அடங்கிய "மகுடம் சூடும் மணிக்கூகள்" என்ற நூலையும் நான் 2022.08.20 இல் வெளியிட்டுள்ளேன். அத்தோடு "மணிக்கூ மகுடம்" என்ற காலாண்டு மின்நூலையும் தற்போது ஆரம்பித்து, அதன் இதழ் - 01 ஆனது 2022.08.20 இல் தமிழ் நெஞ்சம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.


நீங்கள் வெளியிட்ட ஏனைய நூல்கள் பற்றி விளக்க முடியுமா?

"வானும் மண்ணும் நம் வசமே" என்ற எனது இரண்டாவது நூல் தன்முனைக் கவிதைகள் நூலாக அமைந்துள்ளது. தன்முனைக் கவிதைகள் என்பது தெலுங்கில் "நானிலு" என அழைக்கப்பட்ட நான்கு வரிக் கவிதைகளின் தமிழ் வடிவமாகும். அவ்வாறே உலகக் கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் அடங்கிய "மண்ணில் தவழும் விண்மீன்கள்" என்ற நூலையும் 2022 ஆகஸ்ட் மாதத்தில் நான் வெளியிட்டேன்.

அத்தோடு 'பாரதிக்கு பதில் மடல்|| என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளேன். இந்த நூலானது புதுக்கவிதை, கிராமியக் கவிதை, சந்தப் பாக்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் 'புத்தொளிக் கவிதைகள்|| என்ற உலகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளேன். இந்நூல் புத்தொளிக் கவிதைகள், கூம்புக் கவிதைகள் போன்றவற்றையும் பெண்ணுக்கான விழிப்புணர்வுக் கவிதைகளையும் உள்ளடக்கியது.


அதோடு "பெயர் திக்கும் தகைகள்" என்ற 640 பக்கங்கள் கொண்ட ஏறாவூர் தகைகளின் வரலாற்றுத் தொகுப்பு நூலின் அலர் - 01 இனை 2022.08.13 இல் வெளியிட்டேன். இந்நூல் தொகுப்புப் பணிக்காக ஒரு நூலாக்கக் குழுவினரை இணைத்து சுமார் இரண்டரை வருட கால முயற்சியின் பெறுபேறாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்நூலை வெளியிட முடிந்தது.

அதாவது 2019 தொடக்கம் 2022 வரை நான் ஏழு நூல்களை வெளியிட்டுள்ளேன். தற்போது "பெயர் பதிக்கும் தகைகள்" நூலின் அலர் - 02 வெளியிடுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை நான் வெளியிட்ட நூல்களின் மென் பிரதிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் 0771962247 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.


சமூக ஊடகங்களில் எழுதப்படுகின்ற கவிதைளைப் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

தற்காலத்தில் சமூக ஊடகங்களை நோக்குகின்ற போது ஆண்களைவிட ஏராளமான பெண் எழுத்தாளர்கள் எழுத்துலகில் பிரகாசிப்பதை அவதானிக்க முடிகின்றது. பெண்ணியம் சார்ந்த, பெண்களுக்கான விழிப்புணர்வுக் கவிதைகள் ஏராளமாக உலா வருகின்றன. பெண்களின் மேம்பாட்டுக்கான அமைப்புகளும் ஊக்குவிப்புகளும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் காரணமாக பெண் எழுத்தாளர்கள் துணிந்து எழுத்துலகில் பிரகாசித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

 

கவிதை தவிர வேறு எவ்வகையான இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?

ஆசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் பாடல்களை இயற்றி மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளேன். அவ்வப்போது பிரதேச செயலகங்களில் வெளியிடப்படுகின்ற சஞ்சிகைகளில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளேன். நான் எழுத்துலகுக்குள் பிரவேசித்து சுமார் ஐந்து ஆண்டுகளே ஆகின்றன. இக்குறுகிய காலப் பகுதிக்குள் ஏழு நூல்களை வெளியிட்டுள்ள காரணத்தினால் இந்நூல் தொகுப்புப் பணிகளில் அதிக காலத்தைச் செலவிட்டுள்ளேன். நான் இன்னும் என்னை வளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. மரபுக் கவிதைகள்,  வெண்பாக்களின் இலக்கண விதிமுறைகளை ஓரளவு கற்று தற்போது எழுதி வருகின்றேன். மரபுகளில் இன்னும் அதிகமதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

சில ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவை சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு குடும்பப் பொறுப்புகளை உதாசீனம் செய்ய முடியாத நிலையில், அத்தகைய குடும்ப பொறுப்புக்களுடன் இலக்கியத்திலும் பயணிப்பது சற்று சிரமமாகவே உள்ளது. எனினும் எதிர்வரும் காலங்களில் சிறுகதைத் தொகுதியொன்றையும் நாவல் ஒன்றையும் வெளியிட அவாக் கொண்டுள்ளேன். நான் இதுவரை வெளியிட்ட நூல்கள் ஏழும் ஒன்றுடனொன்று ஒத்தவையல்ல. ஒவ்வொன்றும் வௌ;வேறு வகையானவை. அவ்வாறே இன்னும் வௌ;வேறு வகையான நூல்களை வெளியிடுவதற்கான யோசனைகள் உள்ளத்தில் தேங்கியுள்ளன. அதற்கான கால அவகாசம் மட்டும் எனக்குக் கிடைத்தால் போதுமானதென்று நம்புகின்றேன். அதனிடையே வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், பாடசாலை மாணவர்களிடையே எழுத்தாற்றலை வளர்ப்பதற்கான வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புகளையும் வழங்கவும் திட்டமிட்டுள்ளேன்.


வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்குத் தாங்கள் கூறும் செய்தி என்ன?

படைப்பாளிகளைப் பொறுத்த வரைக்கும் இன்று அவர்கள் நவீன தொழில்நுட்பங்களையும் சமூக ஊடகங்களையும் சிறப்பாகப் பயன்படுத்தி அதி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே இளம் படைப்பாளிகள் பலரின் திறமைகள் வியக்கத் தக்கதாக உள்ளது. அவர்களிடமிருந்து என் போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாகவே நான் கருதுகின்றேன். பல்வேறு சமூக செயற்பாட்டுக் குழுமங்கள், இலக்கியக் குழுமங்கள் போட்டி போட்டுக் கொண்டு படைப்பாளிகளை ஊக்குவித்து வருவதையும் நாம் காண்கின்றோம். இங்கு நான் படைப்பாளிகளுக்குக் கூற விரும்பும் செய்தி சமூக வலைத்தளங்களை வீணான பொழுது போக்கு வகைகளில் கழித்து விடாமல் அவற்றை ஆக்கபூர்வமான விடயங்களில் பயன்டுத்தி உங்கள் துறைகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்பதாகும்.


நீங்கள் இலக்கியத்தில் தடம் பதித்து சுமார் ஐந்து ஆண்டுகள் என்கிறீர்கள். இக்காலப் பகுதிக்குள் பட்டங்கள், விருதுகள் ஏதேனும் பெற்றிருக்கிறீர்களா?

கல்வித் துறையிலும் முகநூல் குழுமங்களில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன். விசேடமாக நான் "மணிக்கூ கவிதை" என்ற கவி வடிவத்தை அறிமுகப்படுத்தியதால் பிரான்ஸ் நாட்டின் தமிழ் நெஞ்சம் இலக்கிய அமைப்பும் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றமும் இணைந்து "மணிக்கூ கவி" என்ற விருதினை வழங்கினார்கள். இந்த வகையில் எனக்குக் கிடைத்த பட்டங்கள் மற்றும் விருதுகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

கல்வித் துறையில் பெற்ற விருதுகள்:-

2011.06.26 இல் சாமஸ்ரீ வித்தியா ஜோதி விருது - அகில இன நல்லுறவு ஒன்றியம் 

2014.05.17 இல் கல்விச் சுடர் விருது - ஏறாவூர் சமூக உறவு ஒன்றியம் 


இலக்கியத் துறையில் பெற்ற விருதுகள்:-

2019 இல் பட்டுக்கோட்டை கண்ணதாசன் விருது - கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் (சென்னை) 

2019 இல் கவி அலரி விருது - தேடல் கலை இலக்கிய அமைப்பு (இலங்கை)

2020.02.01 இல் மணிக்கூ கவி விருது -  தமிழ் நெஞ்சம் இலக்கிய அமைப்பு (பிரான்ஸ்) 

2020.02.02 இல் கவி இமயம் விருது - கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் (சென்னை) 

2020.02.02 இல் பேரறிஞர் அண்ணா விருது - கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் (சென்னை) 

2022.03.17 இல் கவிச் சாரல் விருது - தமிழ்ச்சாரல் இலக்கியக் குழுமம் (ஏறாவூர்)  

2021 இல் கவி மின்னல் விருது - ஊ...ல...ழ...ள... இலக்கியக் குழுமம் (சென்னை) 

2021 இல் கவிக் கேசரி விருது - தேடல் கலை இலக்கிய அமைப்பு (இலங்கை)  



விருதுச் சான்றிதழ்கள்:-

2019.04.10 இல் கனல்கவி பட்டம் - நிலா முற்றம் இலக்கியக் குழுமம் 

2019.08.05 இல் கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா 

2019.11.14 இல் இசைக்கவி விருது - ஊ...ல...ழ...ள இலக்கியக் குழுமம்


இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உங்கள் கற்பனைகளை, சிந்தனைகளை எவ்வடிவத்திலேனும் எழுத்தில் வடியுங்கள். அவை கதை வடிவமாக, நாடகமாக, மரபுக் கவிதைகளாக, புதுக் கவிதைகளாக அல்லது புதிய வடிவங்களாக அமையட்டும். எதுவாக இருப்பினும் அவற்றைத் தொகுத்து நூல் வடிவமாக்குங்கள். நூல்களை அச்சுப் பிரதிகளாக்க உங்களால் முடியவில்லையெனில் அவற்றை மின்நூல்களாக வெளியிடுங்கள். நீங்கள் எழுத்துலகில் ஒளிர்வீர்கள்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்