பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, July 15, 2023

57. கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பக் கல்வியை தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக மலேசியா சென்றேன். அதுதான் என் வெளிநாட்டு வாழ்க்கையின் தொடக்கப் புள்ளி. இப்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறேன்.


உங்களது குடும்பத்தவர்களுக்கும் இலக்கியத் துறையில் நாட்டம் உண்டா?

இலக்கியத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள் யாரும் என் குடும்பத்தில் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், என் வாசிப்பை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். என் எழுத்துப் பயணத்துக்கான பாதையைச் செப்பனிட்டுத் தந்தார்கள். என் தந்தை மர்ஹூம் இல்யாஸ் அவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். ஆனால் தமிழ் மொழியையும் காதலித்தார். என் எழுத்துக்களை நேசித்தார். நான் கேட்கும் புத்தகங்களை எனக்கு வாங்கித் தந்தார். எனது தாய் மாமனாரும், மத்ரஸத்துன்  நயீமியாவின் ஸ்தாபகருமான பிரபல சமூக சேவையாளர் மர்ஹூம் நயீம் ஹாஜியார் அவர்கள் என் ஆக்கங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்குப் பரிசுகள் வாங்கித் தந்து, என்னை மேலும் எழுதத் தூண்டினார். திருமணத்தின் பின்னர் என் கணவர் எம்.வை.எஸ். ஷாபி அவர்கள் என் இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.


நீங்கள் எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? 

1980 களில் தான் எனது இலக்கியப் பயணம் ஆரம்பமாகியது. நான் எட்டாம் ஆண்டில் கல்வி கற்கும் போது தினகரன் பத்திரிகையின் சிறுவர் உலகம் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். 1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எமது பாடசாலை என்ற தலைப்பிலேயே எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. அதன் பிறகு கவிதை, சிறுகதைத் துறையில் மெது மெதுவாகக் காலடி எடுத்து வைத்தேன். என் முதல் கவிதை, முதல் சிறுகதை எல்லாமே தினகரன் பத்திரிகையில் தான் வெளியாகின. 1982 இல் எனது முதலாவது சிறுகதை 'வெதும்புகின்ற ஊமைகள்' என்ற தலைப்பில் வெளிவந்ததாகவே எனக்கு நினைவு. 

அத்துடன் தினகரன், சிந்தாமணி, நவமணி, மித்திரன், வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களில் எல்லாம் எனது பல்வேறு வகையான ஆக்கங்கள் வெளியாகின. வானொலியிலும் நான் நிறையவே எழுதினேன். சஞ்சிகைகள் பலவற்றிலும் எனது பல படைப்புகள் வெளியாகி உள்ளன. 


சமூகம் சார்ந்த பிரச்சனைகளை உங்கள் படைப்புகளில் எப்படிக் கொண்டு வருகின்றீர்கள்? உங்கள் படைப்புகளை பொதுவாக எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்?

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆற்றலைக் கொடுத்துள்ளான். அதை சமூகத்துக்குப் பயனளிக்கும் விதத்தில் உபயோகிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அதனால் நான் பொழுது போக்குக்காக எதையும் எழுதுவதில்லை. அன்றாட வாழ்வில் எனக்குக் கிடைக்கின்ற அனுபவங்களும், அவதானிப்புகளும் என் படைப்புளின் கருவாகின்றன. கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு மாய உலகை உருவாக்குவதில் எனக்கு இஷ்டமில்லை. இரத்தமும் சதையும் கொண்ட அன்றாட மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்களைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதில் எனக்கு அதிக அக்கறை இருக்கிறது.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. குமுறுகின்ற எரிமலைகள் - சிறுகதைத் தொகுதி (1998)

02. தென்னிலங்கை முஸ்லிம்களின் தமிழ்ச் சிறுகதைகள் - ஓர் ஆய்வு (1998)

03. இரவைக் காக்கும் இமைகள் - கவிதைத் தொகுப்பு (2022)

04. என் சிறகில் சிக்கிய வானம் - பயணக் கட்டுரைகள் (2023)

ஆகிய 04 நூல்களையே இதுவரை நான் வெளியிட்டுள்ளேன்.


குமுறுகின்ற எரிமலைகள் என்ற உங்களது சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் மற்றும் அதன் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இந்தத் தொகுதியில் எனது ஆரம்ப கால 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அநேகமான சிறுகதைகள் நான் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது எழுதியவை. இந்த நூலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தே நான் அதிகம் பேசி இருக்கிறேன். 




உங்களது இரண்டாவது நூல் வெளியீடான தென்னிலங்கை முஸ்லிம்களின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு நூல் பற்றி என்ன சொல்வீர்கள்?


நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது எழுதிய ஆய்வு நூல் இது. எழுத்தாளர் திக்குவல்லை ஸும்ரியின் அறிமுகம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. அவரின் ஒத்துழைப்புடன் தான் இந்த நூலை எழுதினேன். தகவல் திரட்டுவதற்காக ஒரு தடவை திக்குவல்லைக்குச் சென்றேன். அப்போது அவர் திக்குவல்லையின் மூத்த எழுத்தாளர்கள் பலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். திக்குவல்லை ஷம்ஸ், திக்குவல்லை கமால், திக்குவல்லை ஸப்வான், திக்குவல்லை எஸ்.ஐ.எம். ஹம்ஸா என்று நிறையப் பேரிடம் தகவல் சேகரித்து வந்து இந்த ஆய்வை மேற்கொண்டேன். பின்னர் கல்ஹின்னை தமிழ் மன்றம் அதை வெளியிட முன்வந்த போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

என் சிறுகதைத் தொகுப்பையும் கல்ஹின்னை தமிழ் மன்றமே வெளியிட்டது. இதில் விசேடம் என்னவென்றால், இந்தப் புத்தகத்துக்கான அறிமுக விழாவும் கூட திக்குவல்லையில் தான் நடந்தது. என் பங்களிப்பு எதுவுமே இல்லாமல், திக்குவல்லைக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நான் ஒரு விருந்தாளியைப் போல விழாவுக்குப் போய் வந்தேன்.


நீங்கள் இதுவரை எழுதியுள்ள கவிதைகள் பற்றிக் குறிப்பிட முடியுமா? எவ்வகையான கருப்பொருட்களை மையமாக வைத்து உங்களது கவிதைகளை எழுதுகின்றீர்கள்?

நான் நியூஸிலாந்துக்குப் புலம் பெயர்ந்து வந்தபின் கொஞ்ச நாட்கள் எழுத்துலகில் இருந்து ஒதுங்கி இருந்தேன். ஒரு விபத்தில் சிக்குண்டு அப்போது நான் சக்கர நாட்காலியில் இருந்தேன். நண்பர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்னைத் தெரிந்தவர்கள் நான் யாரென்று கேட்டார்கள். அப்போது கோபத்திலும் விரக்தியிலும் பல கவிதைகள் எழுதிக் கிழித்துப் போட்டேன். என் உடல் நிலை தேறிய பின்புகூட எழுத்துத் துறையில் நான் ஈடுபடவில்லை. ஆனால், முகநூல் கணக்குத் திறந்த பிறகு, எழுதச்  சொல்லி என் பேனா அடம் பிடித்தது. 

முகநூல் மூலம் அவுஸ்திரேலியா வானொலி முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர் முஹம்மது முஹுசீன் அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. வானொலி நிகழ்ச்சிகளுக்காக அவர் என்னைத் எழுதத் தூண்டினார். என் இலக்கியப் பயணத்தில் ஏற்பட்ட இடைவெளியை அப்போது நிரப்ப ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் விளைவாகவே 'இரவைக் காக்கும் இமைகள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. இந்தத் தொகுப்பில் இருக்கும் பாதிக் கவிதைகள், ஓர் இளம் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு நான் ஆரம்ப காலத்தில் எழுதியவை. மீதிக் கவிதைகள் வானொலியிலும் முகநூலிலும் எழுதியவை. என் கவிதைக்கான கருவும் நடைமுறை வாழ்க்கையில் கிடைப்பதுதான். காதல், வீரம், துணிவு,  ஏமாற்றம், சவால்கள்,  அடக்குமுறைக்கு எதிரான குரல், யுத்த காலச் சூழல் என்று வெவ்வேறு கருப்பொருளில் என் பேனா பேசுகிறது.


சிலரை கவிதை எழுதத் தூண்டுவதே காதல் என்று சொல்கிறார்களே. இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

என்னைக் கவிதை எழுதத் தூண்டிய காரணிகள் பல. அதில் வாசிப்பும் ஒன்று. இரண்டாவது காரணி நான் வாழ்க்கையில் அனுபவித்த வலிகள், வேதனைகளை அனுபவித்து எழுதும் கவிதைகளில் வார்த்தைகள் வசப்பட்டு விடும். பிறரின் வலிகளை உணர்ந்த தருணங்களிலும் கவிதை எழுதுவேன். அதற்காக நான் காதல் கவிதைகள் எழுதவில்லை என்று சொல்ல வரவில்லை. இளமையில் காதலைப்  பாடினேன். அது ஒரு குறுகிய பார்வையில் தெரிந்த காதல் - ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்  இடையிலான காதல் அது. இப்போது காதல் என்ற சொல் வானத்தைப் போல விரிந்து தெரிகிறது. தந்தையை, தாயை, இயற்கையை, இலட்சியங்களை.. என்று எல்லாவற்றையும் நான் காதலிக்கிறேன். அந்த உணர்வுகளைக் கவிதையில் வடிக்கிறேன். அன்று எழுதிய காதல் கவிதைகளுக்கும் இன்று எழுதும் காதல் கவிதைகளுக்கும் வித்தியாசம் இதுதான்.


கடைசியாக வெளியிட்ட உங்களது என் சிறகில் சிக்கிய வானம் என்ற பயணக் கட்டுரைகளடங்கிய நூலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி என்ன கூறப் போகின்றீர்கள்?

இது என் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. 2019 டிசம்பர் 14 முதல் நியூசிலாந்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 2022 ஜனவரி 24 வரை 40 நாட்களாக ஆறு நாடுகளில் பயணித்த அனுபவங்களை இந்த நூலில் கட்டுரைகளாகப் பகிர்ந்திருக்கிறேன். கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களையும் புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.  

நான் பயணங்களை முடித்து விட்டு நாடு
திரும்பியபோது, கொரோனாத் தொற்று தலைகாட்ட ஆரம்பித்திருந்தது. சில வாரங்களுக்குள் நாடு முடக்கப்பட்டு வீட்டுக்குள் அடைபட்டிருந்த நிலையில், எனது பயண அனுபவங்களை முகநூலில் தொடராக எழுதி வந்தேன். இந்தக் கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றன என்பதற்கு அவர்களின்  பின்னூட்டங்கள் சாட்சியாயின. இந்தக் கட்டுரைகள் நூலுருப் பெறவேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் ஊக்கம் காரணமாகவே இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.


இத்தனை நூல்களையும் வெளியிடுவது எப்படி சாத்தியமானது? 

இத்தனை நூல்கள் என்று பெருமைப்படும் அளவுக்கு என்னிடம் நீண்ட பட்டியல் ஒன்றுமில்லை. மொத்தம் நான்கு நூல்கள்தான். முதல் இரண்டு நூல்களையும் வெளியிடும் போது ஒரு மாணவியாக இருந்தேன். 

என் புத்தகத்தை சிலர் வெளியிட வேண்டும் என்று வலிந்து வந்து கேட்கிறார்கள் என்று அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு பாரிய கடன் சுமை என் தோளில் ஏறப்போகிறது என்பதை உணராத அப்பாவியாக எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினேன். அந்த அனுபவம் தந்த பாடம்தான் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக புத்தக வெளியீடு பற்றிய சிந்தனையை என்னிலிருந்து தூக்கியெறிந்துவிட்டது. ஆனால், பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்த எனது கவிதைகள், சேர்த்து வைத்திருந்த  பத்திரிகை நறுக்குகள் எல்லாம் காலத்தால் அழிந்து போவதை நினைக்க மிகவும் கவலையாக இருந்தது. எஞ்சியிருந்த சில பத்திரிகைத் துண்டுகளை சேர்த்தெடுத்து இன்னும் கொஞ்சம்  முகநூல் கவிதைகளையும் சேர்த்து 'இரவைக் காக்கும் இமைகள்' என்ற எனது கவிதை நூலை வெளியிட்டேன். அப்போது, கொரோனாத் தொற்றில், பயணிக்க முடியாத நிலை, கூட்டங்கள் கூட முடியாத நிலையில் வெளியீட்டு விழா கூட இணைய வசதியுடன் ஸூம் (ZOOM) மூலமே நடைபெற்றது.


தற்போது நீங்கள் வெளி நாட்டில் வசித்து வருகின்றீர்கள். அங்கிருந்து கொண்டு உள் நாட்டில் நூல்களை வெளியிடுவது சிரமமாகத் தோன்றவில்லையா?

அது மிகவும் சிரமமான காரியம் என்பதால்த்தான் நூல் வெளியீட்டில் நான் அக்கறை காட்டாமல் இருந்தேன். வெளிநாட்டில் இருப்பதால் நியாயமான விலைக்கு புத்தகம் அடிப்பதுகூட கஷ்டமாக இருக்கிறது. 


ஏனைய எழுத்தாளர்களோடு உங்களுக்கு எவ்வகையான இலக்கிய நட்பு இருக்கிறது?

வெளிநாட்டில் வசிப்பதால் உள்நாட்டு எழுத்தாளர்களுடனான தொடர்பை முகநூல் வழியாக மட்டுமே பேண முடிகிறது. அதைத்தவிர, ஆற்றலுள்ள முஸ்லிம்  பெண்களின் அமைப்பான 'ஸ்ரீ லங்கா பென் கிளப்' அமைப்பின் போஷகராக இணைந்திருக்கிறேன். அதன் மூலம் பல எழுத்தாளர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.


கவிதை, சிறுகதைத் துறை தவிர வேறு எந்தெந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? அத்துறை பற்றியும் குறிப்பிடலாமே?

நாடகத் துறையில் எனக்கு அதிக ஈடுபாடு இருக்கிறது. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களே, மக்கள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம். 

அண்மைக் காலமாக மொழிபெயர்ப்புத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன். 'ஸ்ரீ லங்கா பென் கிளப்' அமைப்பின் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிக்காக மாதம் ஒரு கவிதையை மொழிபெயர்த்து வருகிறேன். இதற்காக, 'பென் கிளப்' அமைப்பின் உறுப்பினர்களின் சிறந்த கவிதைகளைத்  தெரிவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். 

பத்தி எழுத்திலும் எனக்கு ஆர்வம் அதிகம். ஆங்கிலத்தில் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். ஒரு நாவலும் தயாராகி வருகிறது. மேடைப் பேச்சுக்களில் கலந்து கொள்வதும் எனக்குப் பிடிக்கும். தொடர்ச்சியாக வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. உலக சமாதான தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம், இன மத நல்லிணக்கக் கூட்டங்கள் போன்ற பல நிகழ்வுகளில் விசேட பேச்சாளராக கலந்து கொண்டுள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் உரையாற்றி இருக்கிறேன். 


நாடகத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நான் நிறைய நாடகங்கள் எழுதி உள்ளேன். அதில் பாறையில் பூத்த மலர் என்ற தொடர் நாடகமும் அடங்கும். அதன் பின்பு அவுஸ்திரேலியா வானொலியின் 'வளர்பிறை' முஸ்லிம் நிகழ்ச்சிக்காக நாடகங்களை எழுதி, நானே பல குரல்களில் நடித்தும் இருக்கிறேன். உரைச்சித்திரம் நிகழ்ச்சிகளிளும் நானே எழுதி நடித்திருக்கின்றேன்.


வானொலிக்கு ஆக்கங்களை எழுதிய காலத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

சமூக வலைத்தளங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், வானொலி நேயர்கள் தங்கள் கருத்துக்களையும், பாராட்டுக்களையும் கடிதங்கள் மூலமாவே பகிர்ந்து வந்தார்கள்.  வானொலியில் நாடகங்கள் ஒலிபரப்பாகினால், தொடர்ந்தும் இரண்டு, மூன்று வாரங்களுக்குக் கடிதங்கள்  வந்து கொண்டே இருக்கும். எங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றாலும் நாடகங்கள் பற்றிய பேச்சு கட்டாயமாக இருக்கும். 

என் தந்தையின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அவரைக் காணும் போதெல்லாம் உங்கள் மகளின் நாடகத்தைக் கேட்டு மகிழ்ந்தோம் என்று நாடகம் பற்றி கருத்துப் பரிமாறுவார்களாம். வாப்பா வீட்டுக்கு வந்து அந்தக் கருத்துக்களை என்னிடம் எத்திவைத்து விட்டு, என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து 'உங்கள் எழுத்துக்கள் நிறைய மக்களைச் சென்றடைகிறது. அதனால் எப்போதும் சமூகத்துக்கு பயனுள்ள விடயங்களையே எழுதுங்கள்' என்று சொல்வார். நாடகத்தைக் கேட்கத் தவறியவர்கள் நான் ஒலிப்பதிவு செய்து வைத்த, ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு வருவார்கள். அது கை மாறி மாறி எங்கெல்லாமோ போகும். ஆனால் அபூர்வமாகவே திரும்பி வரும்.

நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களை எல்லாவற்றையும் மிகவும் ஆசையுடன் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால், கறையானுக்குப் பொறுக்கவில்லை. என் நாடோடி வாழ்க்கையும் அதற்குக் கைகொடுக்கவில்லை. இப்போது அந்த இனிய நினைவுகள் மட்டுமே என்னிடம் மீதமிருக்கின்றன.


சிறுவர் படைப்புகளை வெளியீடு செய்வதில் உங்களுக்கு நாட்டம் இல்லையா?

சிறுவர்களுக்காக வானொலியில் உரைச் சித்திரங்கள் எழுதி உள்ளேன். சிறுவர்களின் உள நல மேம்பாட்டுக்கான நிகழ்ச்சிகளை நேரில் நடாத்தி வருகிறேன். சிறுவர் படைப்புக்களில் நாட்டமில்லை என்று சொல்வதற்கில்லை. அதற்கான நேரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


உங்களது இலக்கியப் பங்களிப்புகளுக்காக இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுக்கள், பட்டங்கள், கௌரவங்கள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

விருதுகள் விற்கப்படும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். பட்டங்கள் மலிந்து அதன் உண்மையான பெறுமதியை இழந்துவிட்டன. பணம் தந்தால் பாராட்டு விழா நடத்துவோம் என்று நிறைய இயக்கங்கள் கிளம்பி இருக்கின்றன. இவற்றை விட்டும் தூரப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி.

நான் முகநூலை என் எழுத்துக்களுக்கு சிறந்ததோர் களமாகப் பயன்படுத்தி வருகிறேன். என் எழுத்துக்கள் பரந்துபட்ட வாசகர்களைச் சென்றடைய முகநூல் உதவுகிறது. வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களை மிகவும் மதிக்கிறேன். அவைகள் தாம் என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த கௌரவங்கள். 

இதுதவிர, விரைவில் ஒரு சர்வதேச நிகழ்வொன்றில் நேர்மையான முறையில் கௌரவிக்கப் படவுள்ளேன் என்று மட்டும் இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?

நான் சிறுமியாக இருக்கும்போது எனக்குக் களம் தந்து கை கொடுத்தது தினகரன் பத்திரிகைதான். நான் புலம்பெயர்ந்த பின்பும், என் நேர்காணல்கள் பலமுறை தினகரனில் வெளியாகி இருக்கின்றன. தினகரன் ஆசிரியருக்கும், என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, May 14, 2023

56. டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்

எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியை

Dr. ஜலீலா முஸம்மில் (MBBS / SL)

ஏறாவூர்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

அருளாளன் அன்பாளன் எல்லாம் வல்ல இறையோன் எமை ஆளும் நல்லோன் வல்லோன் அல்லாஹுத்தஆலாவை முதற்கண் பணிந்தவளாக, அடுத்து தினகரன் செந்தூரம் இதழ் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தவளாக, நான் ஜலீலா முஸம்மில். இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் மர்ஹும் யூ.எச். முகம்மது (முன்னாள் அதிபர் மட்ஃஅலிகார் தேசிய பாடசாலை, ஏறாவூர்) சித்தி பௌசியா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக பணிபுரிகிறேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்வு, இலக்கிய ஈடுபாடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபா வித்தியாலயம் மற்றும் அல் முனீரா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் பயின்றேன். மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தேன். தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை அனுபவம் உண்டு.

சிறு பராயம் முதலே வாசிப்பிலே எனக்கு ஆர்வம் அதிகம். எப்போதும் வாசிப்பு, எதிலும் வாசிப்பு என்று தணியாத தாகமாய் தமிழிலே எனக்கு அப்படியொரு பற்று. வாசிப்போடு உறவு கொண்டிருந்ததாலேயே தமிழிலே விருப்பு வந்தது என்றால் அது மிகையாகாது. எனது தந்தை ஹயாத்து முஹம்மது அவர்கள் கணித ஆசிரியராக இருந்த போதிலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அத்துடன் மரபுக் கவிதை புதுக்கவிதை போன்றவற்றை இயற்றக் கூடியவர்களாகவும் இருந்தார். செய்யுள்களையும் காவியங்களையும் கதைகளையும் தமிழ் ஊற, தமிழ் சொட்டச் சொல்லித் தருவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். எனவே எனது தமிழின் ஆஸ்தான குரு தந்தை என்று தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.


எதை எழுதினாலும் அவரிடமே முதலில் அதைச் சமர்ப்பித்து, பாராட்டுக்கள் வாங்குவது எனது வழக்கமாய் இருந்தது. தமிழ்ப் பாடத்தைச் சுவைபடக் கற்பித்த தமிழ் ஆசான்களும் எனது தமிழ் வளரக் காரணமானவர்கள்தாம். இவ்விடத்தில் அவர்களை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன். 

கல்வியிலே திறமையைக் காட்டினாலும் எழுத்துலகம் எனது இன்னொரு கண்ணாகவே இருந்தது. எழுத்தும் வாசிப்பும் நான் மிகவும் நேசிக்கும் துறைகளாகும். கற்றலின் ஊடே கவிதை எழுதுவதையும் வாசிப்பதையும் விடாமல் தொடர்ந்தேன். அந்தக் காலங்களில் எனது தமிழ்ப் பசிக்கு பல்வேறுபட்ட நூல்களை வாசிப்பது தீனியாக அமைந்தது. இப்போதும் அதைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறேன். பள்ளிப் பருவத்திலே கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, பட்டிமன்றம், குறுக்கெழுத்துப் போட்டி போன்றவற்றைத் தயார் செய்வது மட்டும் அல்லாமல் அந்தப் போட்டிகளிலும் நான் பங்கு பற்றினேன். அதுமட்டுமல்லாது பாடசாலைக் கலை நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராகவும் பங்கேற்றுள்ளேன். பாடசாலைகளில் வெளியிடப்பட்ட நூல்களிலும் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன். இவ்வாறு தமிழோடு இழைந்து இணைந்து பயணித்தது எனது இலக்கியத் தாகத்திற்கு வித்திட்டது எனலாம். சொல்லோடிணைந்த பொருளாய் என்னோடு தமிழ் ஒட்டிக்கொண்டுவிட்டது என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். சிறுவயதில் ஆரம்பித்த எனது இலக்கிய மோகம் காலம் செல்லச் செல்ல வளர்ந்து கொண்டே இருந்தது. தொழில் வேறு துறையில் என்றாலும் அடிமனதில் ஆழப் பதிந்துவிட்ட தமிழை ஆராதிக்கும் வண்ணத்தில் சிறிது எழுத ஆரம்பித்துள்ளேன்.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அநுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

நீண்ட காலமாக எழுத்துத் துறைக்குள் வர வேண்டும் என்ற ஆசை மனதிலே இருந்து வந்தது. சிறுவயதிலே பள்ளிக் காலங்களில் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள், கதைகள் போன்றவற்றை எழுதி அனுப்புவேன். அவை வெளிவந்தனவா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. அந்தக் கனவு, அந்த ஆசை இவ்வளவு நாள்பட்டதன் பிறகு நிறைவேறி இருக்கிறது. பள்ளிக் காலம் தொட்டு எழுதத் தொடங்கி இருந்தாலும் அவை எனக்குள்ளே புதைந்துவிட்டன என்றும் சொல்லலாம். அப்போதுகளில் அதற்கான களமும் காலமும் அமையவில்லை என்றே நினைக்கிறேன். சிலவற்றைச் சேமித்து வைத்துள்ளேன். சில படைப்புகள் காலப்போக்கில் காணாமலே போய்விட்டன. நண்பி ஒருவர் மூலம் எழுத்துத் துறைக்குள் வருவதற்கான ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் புலனக் குழுமங்களில் எனது கவிதைகளைப் பதிவேற்றம் செய்து வந்தேன். அதன் பிறகு படிப்படியாக முகநூல் குழுமங்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளில் பங்குபற்றினேன். பத்திரிகைகளுக்கும் எனது ஆக்கங்களை எழுதத் தொடங்கினேன். இவ்வாறே எழுத்துத் துறைக்குள் எனது பயணம் சென்று கொண்டிருக்கிறது.


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எது?

முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் என்றால் 1995 இல் அதாவது தரம் நான் ஒன்பதில் கற்கும் போது எனது நண்பிக்காக நட்பு பாராட்டி எழுதியது என்று நினைக்கிறேன். அது மனதை வருடிய ஒரு சுகமான தென்றலாக என் நினைவில் இப்போதும் நிறைந்திருக்கிறது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

முதன் முதலாக எனது ஆக்கமான ஷஷநான் எழுதுகிறேன்' எனும் தலைப்பிலான கவிதையானது பிரான்சு நாட்டில் இருந்து வெளியாகும் தமிழ் நெஞ்சம் மின்னிதழில் 2021 அக்டோபர் முதலாம் திகதி வெளிவந்தது. அது எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமானதும் நெகிழ்ச்சியானதுமான ஒரு சம்பவமாக இருக்கிறது. அந்தத் தருணத்தில் மனதில் ஏற்பட்ட உவகைப் பட்டாம்பூச்சிகளை சொல்லில் வடிக்க முடியாது. என வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான தருணமாக அது இருக்கிறது.


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? அந்த நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிதைத் தொகுப்பு நூல்கள் பலவற்றில் எனது கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவிலும் இலங்கையிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. எனது தனிப்பட்ட படைப்பான ஷஷசிறகு முளைத்த மீன்' எனும் கவிதை நூலைக் கடந்த 2022 ஆம் வருடம் வெளியீடு செய்தமையிட்டு பெருமிதமும் பேருவகையும் அடைகிறேன். இக்கவிதைத் தொகுதி கடந்த 2022.02.27 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணிக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (YMCA, NANDANAM) எழிலினிப் பதிப்பகத்தால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. கன்னி வெளியீடான இந்நூலினை தமிழ் நாடு அரசு மாநில திட்டக் குழு உறுப்பினர், தமிழிசை நடனக் கலைஞர், முனைவர் பத்மசிறீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் வெளியிட்டு வைத்ததுடன் நூலின் முதற் பிரதியை முனைவர் கவிஞர் கூடல் தாரிக் அவர்கள் பெற்றுக்கொண்டார். அத்துடன் பேராசிரியரும் பிரபல பேச்சாளருமான முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களும் விழாவினை அலங்கரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கவிதை நூல் வெளியீடு இலங்கையிலும் கடந்த 2022.10.01 அன்று சனிக் கிழமை ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. 

எனது இரண்டாவது நூல் தொகுக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஹைக்கூ கவிதை நூலாக அது வெளிவரப் போகிறது. இன்ஷா அல்லாஹ் ஓரிரு மாதங்களில் வாசகர்களான உங்களின் கைகளில் தவழும் என்பதை மகிழ்வுடன் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்களுடைய முதல் பிரசவமான சிறகு முளைத்த மீன் என்ற கவிதைத் தொகுதியின் தலைப்பு குறித்துக் கூறுங்கள்?

கவிதை நூலுக்குள் இருக்கும் ஒரு நேச வெளிப்பாடாகும் கவிதை ஒன்றின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது. ஆழ்கடலில் அமிழ்ந்திருந்த மீன் ஒன்று கவிதைச்சிறகு முளைத்து வான் வெளியில் எம்பி உற்சாகத்தோடு, உத்வேகத்தோடு பறக்கத் தயாராகி விட்டதையும் அது குறிப்பிடுவதாக அமைகிறது. ஆழ்கடலுக்குள் யாருமே அறியாதிருந்த அந்த மீன் வான்வெளியெனும் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்க வந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


உங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

சிறகு முளைத்த மீன் பல்சுவை அம்சங்களோடு பல்வேறுபட்ட கவிப் பூக்களின் கதம்பமாக வெளிவந்து இருக்கிறது. அதிலே ஒரு வரிசைக் கிரமத்தை நீங்கள் அவதானிக்கலாம். இறைவன், நபிகளார், தந்தை, தாய், கணவன் மனைவி, மகள், நண்பர்கள், உழவர் போன்ற தலைப்பில் அமையக்கூடிய கவிதைகள் ஒவ்வொன்றாக இடம் பெறுவது இன்னூலின் சிறப்பம்சம் என்று நான் நினைக்கிறேன். அத்தோடு ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள், நாட்டார் பாடல், கிராமியக் கவிதைகள், காதல் கவிதைகள், ஊக்கக் கவிதைகள், இயற்கை சம்பந்தமான கவிதைகள் மற்றும் மகாத்மா காந்தி, பாரதி, ஆண் தேவதை போன்ற தலைப்பிலான கவிதைகளும் உள்ளடங்கலாக ஒரு கவிதைத் தொகுதியாக இருக்கிறது. 


இறைவனின் மகத்துவத்தையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் காதலின் இரசனையையும் இயற்கையின் வருடலையும் உலகில் வாழ்ந்து மறைந்த சில தலைவர்களைப் போற்றியும் புகழ்ந்தும் நேர்மறை சிந்தனைகளைத் தூண்டித் துவண்டவர்களைத் தூக்கி எழுப்பிவிடும் ஊக்கக் கவிதைகளுமென எனது கவிதை நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புளகாங்கிதத்தோடு உங்களிடம் தெரிவிக்கிறேன்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

இந்தியாவில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூல் சென்ற வருடம் வெளியீடு செய்த பின்னர் எப்போது இலங்கையில் வெளியிடப்படப் போகிறது என்று இலங்கை நண்பர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் இருந்தனர். அந்தவகையில் இலங்கையிலும் வெளியீடு செய்து அதனை நான் வாசகர்கள் கையில் தவழவிட்டிருந்தேன். அதிலிருந்து நான் எனது நூலுக்கான வரவேற்பை வாசகர்கள் எவ்வாறு வழங்கியிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். நிச்சயம் எனது கவிதைகள் வாசிப்பவரின் மனதில் புதுத் தெம்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வரவழைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என்றும் நினைக்கிறேன். அந்தவகையில் எல்லாம் வல்ல இறைவனுக்கே அனைத்துப் புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்.


நீங்கள் எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வீர்களா?

ஆமாம். நிச்சயமாக. நேயம் என்றொரு கவிதை என் நினைவுக்கு வருகின்றது. இயற்கையோடு ஒன்றி வாழும் உயிர்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழும் போது மனிதர்கள் மட்டும் வேற்றுமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வாழ்வதனைக் கோடிட்டுக் காட்டுகிறது அந்தக் கவிதை. ஆரம்ப காலத்தில் நான் எழுதிய ஒரு கவிதை அது. அக்கவிதையும் நூலாக்கத்திற்கு உட்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இது எனது மனதில் பதிந்த கவிதையாகவும் இருக்கிறது.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞரின் தாக்கம் காணப்படுகின்றது?

எல்லாக் கவிஞர்களும் எனக்குப் பிடித்த கவிஞர்கள்தான். கவிதைகளையே நான் கூடுதலாக விரும்பி படிப்பேன். சுப்ரமணிய பாரதி, மஹாகவி, அப்துல் ரகுமான், வைரமுத்து, மு. மேத்தா, நா. முத்துக்குமார் போன்றவர்களின் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. எனது கவிதைகளில் யாருடைய தாக்கம் அதிகமாக இருக்கின்றன என்பதை வாசகர்கள் தான் எனக்குக்கூற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

நிச்சயமாக. ஆயுதங்களின் முனையைவிட பேனா முனைக்கு சக்தி அதிகம் என்று நினைக்கிறேன். ஊக்கமிக்க கவிதைகளை வாசிப்பவர்கள் அதனால் தூண்டப்பட்டுப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். சிறு துளி விழுந்து பெருவெள்ளம் வருவது போல, சிறு அக்கினிக் குஞ்சொன்று ஒரு காட்டையே எரித்து விடுவது போல, சிறு கவிதையொன்று சமூக மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்பதற்கான சான்றுகள் நமது வரலாற்றில் நிறையவே உண்டு. அந்தவகையில் எனது கவிதைகளும் அவ்வகையான ஒரு மாற்றத்தைத் தரும் என்று உறுதியாக நம்புகின்றேன். 


இதுவரை எத்தனை சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள்? உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது? சிறுகதைகளுக்கான உங்களது பாத்திரப் படைப்பு எப்படிப்பட்டது?

சிறுகதை எழுதியது மிகக் குறைவு. அதற்கான காரணம் நேரமின்மை என்று நினைக்கிறேன். எழுதிய சிறுகதை ஒன்று பிரதேச செயலக இலக்கிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதை இவ்விடத்தில் நான் நினைவுகூர்கிறேன். சமூகத்தில் ஒரு பெண்ணின் கஷ்டங்கள் மற்றும் அவளுடைய துயரங்களின் பிரதிபலிப்பே பெரும்பாலும் என்னுடைய சிறுகதைகளில் இடம்பெறுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எம்மைத் தாக்குகின்ற, மனதில் சலனத்தை ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு விடயமும் சிறுகதைக்கான ஒரு கருவாகவே அமைந்து விடுகின்றது என்பது உண்மையான விடயம். எனது சிறுகதைகளும் இவ்வாறான கருக்களிலே துளிர்த்து உருவானது எனலாம்.


நீங்கள் அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள். இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

கவிதையே எனக்கு மிகவும் விருப்பமான ஒரு துறையாக இருக்கிறது. புதுக் கவிதை எனும் போது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இருப்பதில்லை. நினைத்த விடயத்தை நாம் வித்தியாசமாக சொல்கின்ற விதமே புதுக் கவிதைக்கான ஒரு பாணியாக இருக்கிறது. நிச்சயமாக இலக்கியத்தின் ஏனைய துறைகளிலும் ஈடுபாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆயினும் பணி நிமித்தமாகவும் நேரமின்மை காரணமாகவும் அதில் கூடுதலான கவனம் எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ளேன். இனிவரும் காலங்களில் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். வல்ல இறைவன் அதற்குத் துணை புரிய வேண்டும். இன்ஷா அல்லாஹ்.


உங்களது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாதவர்கள் யாவர்?

நான் இலக்கியத் துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் இன்று வரைக்கும் என்னோடு பயணித்து எனக்கு உதவி புரிந்தவர்கள் அனைவரும் எனது வாழ்வில் உண்மையிலேயே மறக்க முடியாதவர்கள்தான். அதற்கு முதற்கண் இறைவனையும் அதன் பிற்பாடு எனக்கு உபகாரம் புரிந்த அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

ஆமாம். ஒரு இலக்கியப் பெண் தனது படைப்புகளில் நிச்சயமாக பெண்களின் பிரச்சனைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசக்கூடியவளாகவே இருப்பாள். அவளது படைப்புகள் சமூகத்தை நோக்கி எழுப்பப்பட்ட ஒரு சுட்டு விரலாகவே காணப்படும். சமூகத்தைச் சாடி அவளுக்கு எதிரான பிரச்சினைகளைப் பேசக்கூடியனவாகவே அவளது ஆக்கங்கள், படைப்புகள் பரிணமிக்கின்றன. ஆம். அந்தச் சிங்கப் பெண்களின் கர்ஜனைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.


திருமணமான பெண்கள் எழுத்துத் துறையிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில், உங்களின் இலக்கியப் பயணத்திற்குப் பின்னணியானவர்களைக் கூற முடியுமா?

ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கை எனும் நாடகத்தில் நிறைய வேடங்கள் உண்டு. மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கல்வியிலே தேர்ந்து வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்வது அவளது முதல் வெற்றி என்று சொல்லலாம். திருமணம் என்ற ஒன்றில் அவள் காலடி எடுத்து வைக்கும் போது அவளின் பொறுப்புக்களும் சுமைகளும் இரண்டு மடங்காகிவிடுகின்றன என்பதே உண்மை. சிறந்த குடும்பத் தலைவி என்பவள் குடும்பத்தையும் வீட்டையும் மிகவும் சாமர்த்தியத்துடன் நிர்வகிப்பவளே. அவளது நிர்வாகம் ஒரே சீராகச் செல்ல வேண்டும். சூழ்நிலைக்கேற்ப வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒரே ஓட்டத்தில் செல்ல வேண்டும். 

வைத்தியத் தொழில் என்பது மிகவும் பொறுப்பு மிக்கதும் வேலைப் பளு மிக்கதுமான ஒரு தொழிலாகும். மிக அவதானத்துடனும் நோயாளர் நலனில் அக்கறை கொண்டும் செய்யக் கூடிய சமூக சேவையாக அது இருக்கிறது. ஒரு பெண் என்ற ரீதியில் வேலைக்குச் செல்லுதலும் குடும்பப் பொறுப்புகளும் இரட்டைச் சுமையாக அழுத்தினாலும் அதைத் திறம்படச் செய்வதில் நாள் மிகவும் கவனம் எடுக்கிறேன். 

இவ்விடத்தில் நேரமுகாமைத்துவம் என்பது மிக அத்தியாவசியமாகிறது. நேரத்தைச் சிக்கனப்படுத்திச் செலவழிப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது. அந்தவகையில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்துத் துறையில் செலவழிப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? தமிழ் என்பது எனக்கு ஒரு போதையாக இருக்கிறது. அதைத் தருவதிலும் சுகிப்பதிலும் ஆவலுடன் இருக்கிறேன். எனது எல்லா வகையான முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் எனது அன்புக் கணவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 

முற்கூட்டியே திட்டமிட்டு பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்யப் பழகிக் கொண்டேன். இவ்வாறான திட்டமிடலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் எனது தந்தையே. இவ்விடத்தில் இதைக் குறிப்பிடுவதில் பேரானந்தம் அடைகிறேன். நேர முகாமைத்துவமே எல்லா வகையான வெற்றிக்கும் அடிப்படையாக அமைவது என்பது அனைவரும் அறிந்த உண்மையாக இருக்கிறது. எனது இலக்கியப் பயணம் திருமணத்தின் பின்னரே ஆரம்பித்தது. அதற்குப் பின்னணியாக இருக்கின்ற அன்புக் கணவர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் கடந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுதான். உண்மையிலேயே எனக்கு அந்த வேளையில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த நிகழ்வு எனது வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக, மறக்க முடியாத ஒரு இன்ப அனுபவமாக இருக்கின்றது. அந்த மகிழ்ச்சியில் எனது மனம் இன்பச் சிறகுகளை கட்டிக்கொண்டு மேலெழுந்து பறந்ததென்றே சொல்லலாம். 

ஒரு படைப்பாளிக்கு சந்தோசம் என்பது என்ன? அவனுடைய ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவரும்போது அல்லது ஒரு நூலாக உயிர் பெறும்போது அவன் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லாது இருக்கிறது. அவன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இன்னும் இன்னும் நிறையக் கவிதைகளாய்ப் பூத்துக் கொண்டிருக்கிறான். படைப்புகளின் நந்தவனமாக மாறிக் கொண்டிருக்கிறான் என்பது நிதர்சனம்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது இரண்டாவது படைப்பான ஹைக்கூ கவிதை நூலென்று மிக விரைவில் வெளிவர இருக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் தன்முனைக் கவிதை நூல் ஒன்றை உருவாக்குவதற்கு எண்ணி உள்ளேன். மேலும் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளிவந்த ஊக்கப் பதிவுக் கட்டுரைகள் மற்றும் மருத்துவக் கட்டுரைகள் அனைத்தையும் தனித்தனியாக தொகுத்து இரு நூற்களாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் நிச்சயம் வெளியிட ஆசை. இன்ஷா அல்லாஹ் இறைவனின் அருளால் இவை அனைத்தும் ஈடேற வேண்டும் என்று அவனைப் பிரார்த்திக்கிறேன். அதற்குரிய எல்லா வகையான உதவிகளும்  கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1) 2021.03.26 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை) 

2) 2021.12.18 இலக்கியச் சேவைக்கான விருது - சிறீலங்கா பென் கிளப் - முதலாம் மாநாடு 

3) 2022.01.23 கவிச்சூரியன் விருது - தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் 

4) 2022.03.17 கவிச்சாரல் விருது - தமிழ்ச் சாரல் கலை இலக்கிய மன்றம் (இலங்கை) 

5) 2022.05.29 தமிழ் வேள் விருது - தமிழ்நாடு மதுரமொழிக் கவிச் சங்கம் 

6) 2022.07.15 செம்மொழிக் கவிமாமணி விருது - திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேஷன், குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி என்ட் பவுண்டேஷன்  

7) 2022.10.01 கவி முகில் விருது - தமிழ்ச் சாரல் கலை இலக்கிய மன்றம் (இலங்கை)  

8) 2022.11.29 கலைத்தாரகை விருது - ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதேசக் கலை இலக்கிய விழா 

9) 2022.12.24 அவிழ்தம் மருத்துவ சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருது மற்றும் இலக்கியச் சேவைக்கான விருது - சிறீலங்கா பென் கிளப் இரண்டாவது மாநாடு 

10) 2023.01.21 ழகரச் சிற்பி விருது - தமிழ்நாடு கோவை ஊலளழ இலக்கியக் குழுமம் 

இவைதவிர பல புத்தகப் பரிசுகள், பணப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் என்று இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காகக் கிடைத்துள்ளன என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.


புதிய படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன?

புதிய படைப்பாளிகளுக்கு நான் வழங்கும் ஆலோசனையானது நன்றாக வாசிப்பதுதான். உங்கள் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் போது உங்கள் மொழித் திறன் ஆளுமை அடைகிறது, வீரியமடைகிறது. ஆகவே நன்றாக வாசியுங்கள். கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்ற வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் எழுத்து இன்னும் வளம் பெறும். மனதில் தோன்றும் எண்ணக் கருக்களை அப்படியே எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். காலத்தின் போக்கினில் அதனை மெருகேற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்களும் நல்லதோர் படைப்பாளுமையாக மாறலாம்.

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் இறைவனின் திருப்பொருத்தத்திற்கு அமைவாக செய்யும்போது நிச்சயம் வெற்றி காணலாம். தொடர்முயற்சி ஒருபோதும் வீண் போவதில்லை. அது விஸ்வரூப வெற்றியை உங்கள் முன் கொண்டு வரும்.

"நான் இன்று எதையெல்லாம் என்னுடைய ஒரே இதயத்தால் சொல்கின்றேனோ அது நாளை ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தால் சொல்லப்படும்" என்ற கலில் ஜிப்ரானின் கூற்றை இங்கு கூற விளைகிறேன்.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

இந்த நேர்காணல் வாய்ப்பினை வழங்கிய தினகரன் செந்தூரம் இதழ் குழுவினருக்கும் என்னை நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் விசேட நன்றிகள் தெரிவித்தவளாக,


"தமிழ்

தமிழ் மொழியாய்

தமிழ்த் தாயாய் 

தமிழ் நாடாய்

நாட்டு மக்களாய்

மக்களின் வாழ்வாய்

வாழ்வின் மலர்ச்சியாய்


வழிந்து ஓட வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்" என்ற கா. அப்பாத்துரையின் தமிழ் வாழ்த்தோடு விடைபெறுகிறேன். மகிழ்வுடனான நன்றிகள். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, April 23, 2023

55. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுடனான நேர்காணல்

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

(ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர்)


தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும், பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா.


இலங்கையின் முன்னோடி பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தவறாது இடம்பிடித்த ஒரு பெயர் தான் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்ற பெயராகும். இவர் குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் தனது ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார். பாடசாலைக் காலம் தொட்டு இலக்கியத் துறையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், இதுவரை 11 நூல்களை வெளியிட்டு இலக்கியத்தின் பல துறைகளிலும் கால் பதித்துள்ளார். கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், மெல்லிசைப் பாடல், சிறுவர் இலக்கியம், நாவல் ஆகிய துறைகளில் தன் பங்களிப்பை நல்கியுள்ளார். இவருக்குள் காணப்படுகின்ற இலக்கிய ஆர்வத்தால் நூற்றுக் கணக்கான நூல்களை வாசித்து, அவற்றின் மூலம் தன்னை மென்மேலும் புடம் போட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பாடநெறியை சிறப்பாக நிறைவு செய்துள்ளதுடன், இலங்கைக் கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலும் பணியாற்றியுள்ளார். அத்தோடு காலாண்டு சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம் என்ற சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இவர் காணப்படுகிறார். தமிழ் நெஞ்சம் சஞ்சிகையின் ஊடாக அவரை நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.


தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


வாசிப்பு மீதான நாட்டம் உங்களுக்கு எந்த வயதில் ஏற்பட்டது?

எனது சிறுவயது பிராயத்திலேயே நான் வாசிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். தினமுரசு பத்திரிகையில் பாப்பா முரசு பகுதியைத் தரம் மூன்று கற்கும் காலம் தொடக்கம் சேகரித்து வைத்து, வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதுமட்டுமன்றி அந்தக் காலப் பகுதியில் வெளிவந்த பூங்கா, பிஞ்சு போன்ற சிறுவர் பத்திரிகைகளிலும் எனது ஆக்கங்கள் களம் கண்டுள்ளன.



இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பின்வரும் 11 நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். 

01. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை) 2012 - புரவலர் புத்தகப் பூங்கா

02. வைகறை (சிறுகதை) 2012 - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

03. காக்காக் குளிப்பு (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

04. வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

05. இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

06. மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) 2013 - ரூம் டு ரீட்

07. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (நூல் விமர்சனம்) 2013 - கொடகே பதிப்பகம்

08. நட்சத்திரம் (சிறுவர் பாடல்) 2014 - ஸ்பீட்மார்க் பதிப்பகம்

09. மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) 2015 - கொடகே பதிப்பகம்

10. மழையில் நனையும் மனசு (கவிதை) 2017 - பூங்காவனம் இலக்கிய வட்டம்

11. மான் குட்டி (சிறுவர் பாடல்) 2021 - பூங்காவனம் இலக்கிய வட்டம்





உங்களது இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூல் குறித்து விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

ஆரம்ப காலங்களில் நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்தே இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலை வெளியீடு செய்தேன். புரவலர் புத்தகப் பூங்கா மூலமாக வெளிவந்த இந்த நூலே இலக்கிய உலகில் என்னை எழுத்தாளராக முதன் முதலில் அடையாளப்படுத்தியது. அதுவரை காலமும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வந்த நான் ஒரு எழுத்தாளராக பரிணமித்த தருணம் இந்த நூல் வெளியீட்டின் மூலமே கிடைத்தது. இந்த நூலில் 56 கவிதைகள் காணப்படுகின்றன. காதலின் ஏக்கம், காதல் தந்த ஊக்கம் மற்றும் காதல் தோல்வி போன்ற இளம் பருவத்தினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை இந்தக் கவிதைத் தொகுதி அதிகமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவு சமூகக் கவிதைகளையும் இந்த நூலில் உள்ளடக்கியுள்ளேன். 2012 இல் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டை என்னால் மறக்கவே முடியாது. காரணம் எனது முதலாவது நூல் வெளியீட்டுக்கு ஊரிலிருந்து எனது பெற்றோர்களும் சகோதரர்களும் ஒரு சில உறவினர்களும் நண்பர்களும் கலந்து சிறப்பித்து, இந்த நிகழ்வின் மூலம் மறக்க முடியாத அலாதியான இன்பத்தைத் தந்தார்கள்.


மழையில் நனையும் மனசு என்ற உங்களது கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் குறித்தும், இந்தத் தலைப்பை நூலுக்குச் சூட்டியமைக்கான காரணி குறித்தும் கூறுங்கள்?

மழையில் நனையும் மனசு என்ற எனது கவிதை நூலில் 77 கவிதைகளுடன் ஒரு சில கவிதைத் துளிகளும் காணப்படுகின்றன. இதில் சமூக அக்கறை சார்ந்த கவிதைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு கவிதைத் தொகுதியைத் தொட்டுப் பிரித்து, அந்த நூல் வாசனையோடு கவிதைகளையும் வாசிக்கும் போது ஏற்படும் உணர்வு சொர்க்கமாகும். அது ஆன்மாவை ஈரமாக்கும். அந்த இன்பம் வாசித்து உணர்ந்தவர்களுக்கே புரியும். அத்தகைய ஒரு இன்பமான உணர்ச்சிக் கலவையை வார்த்தைகளில் வடிக்க முற்பட்டேன். அதனாலேயே என் கவிதைத் தொகுதிக்கு மழையில் நனையும் மனசு என்று பெயரிட்டேன். இத்தலைப்பு பெரும்பாலானவர்களைக் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் இருந்து விந்தை உலகம் (பக்கம் 23) என்ற கவிதையை வாசகர்களின் இரசனைக்காகத் தருகிறேன்.


விந்தை உலகம்


.....................

பசுக்களிடம் பால் கறந்து

பாலிலே நீர் கலந்து

வியாபாரம் செய்கின்ற

விந்தையான உலகமிது!


பாம்பிடம் நலம் கேட்டு

பன்றியிடம் கைகுலுக்கி

அப்பாவி முயல்களை

அறுக்கின்ற உலகமிது!


தீயவனின் தலை தடவி

குடிகாரனைக் கும்பிட்டு

ஏழைகளை மிதிக்கின்ற

ஏமாற்று உலகமிது!


காமுகனின் கால் பிடித்து


கயவனிடம் ஆசி பெற்று

கற்றவரை அவமதிக்கும்

கபடமான உலகமிது!


குயவனிடம் அரிசி கேட்டு

தச்சனிடம் பானை கேட்டு

விவசாயியை விலை பேசும்

விசித்திர உலகமிது!


அரசனிடம் அடிவாங்கி

அமைச்சரிடம் பல்லிளித்து

ஆங்கிலம் பேசித் திரியும்

அறிவற்ற உலகமிது!


மனைவியை விட்டு விட்டு

மதுவிடம் சரணடைந்து 

வேறு பெண்ணை தேடுகின்ற 

வேஷமான உலகமிது!


கற்பினை பறித்தெடுத்து

காதலியை சந்தேகித்து

புதுக் காதல் தேடுகின்ற

புனிதமற்ற உலகமிது!!!


இந்த நூலின் கவிதைத் தலைப்புகளையும் கவித்துவமாகவே கையாண்டு இருக்கிறேன். இந்த நூல் வெளியீட்டின் போது கவிஞர் தமிழ்த் தென்றல் அலி அக்பர் அவர்கள், உள்ளடக்கத்திலுள்ள கவிதைத் தலைப்புகள் அனைத்தையும் வாசித்துக் காட்டி, இந்தத் தலைப்புகளின் கோர்வையே ஒரு தனிக் கவிதையாக இருப்பதாக தனது உரையின் போது சிலாகித்துப் பேசினார்.


உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றன? உங்களது வைகறை என்ற சிறுகதை நூலின் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? 

அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழ்பவற்றைக் கூர்ந்து அவதானித்தாலே எமக்குத் தேவையான கதைக் கரு கிடைத்துவிடுகிறது. அல்லது சில பொழுதுகளில் நாம் செய்திகளின் ஊடாக கேட்கின்ற, வாசிக்கின்ற, நாம் அன்றாடம் கேள்விப்படுகின்ற விடயங்களில் கூட கதைக் கரு காணப்படலாம். அவற்றில் தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து அதை ஒரு சிறுகதையாக மாற்றுவதில் தான் எமது திறமை காணப்படுகிறது. எனது நூலில் காணப்படுகின்ற பல சிறுகதைகள் நான் கேள்வியுற்றவையும் வாசித்து அறிந்தவையும் பற்றியதான சம்பவங்களை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளன. ஓரிரு சிறுகதைகளில் மட்டுமே நேரில் கண்ட அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது வைகறை என்ற சிறுகதை நூலில் 21 சிறுகதைகள் காணப்படுகின்றன.

உதாரணமாக அழகன் என்ற சிறுகதையானது உண்மையில் மூன்று வயது நிரம்பிய ஒரு ஆண் குழந்தையைப் பற்றியதாகும். எனினும் நான் அதனை எனது நண்பர்களிடம் சொல்லும் போது ஒரு வாலிபனைப் போல சித்தரித்துச் சொன்னேன். இறுதியில்தான் அது ஒரு மூன்று வயதுக் குழந்தை என்று சொன்னபோது அவர்கள் செல்லமாகக் கோபித்து, என்னைக் கடிந்து கொண்டார்கள். அந்த அனுபவத்தையே எனது கதையில் பதிவு செய்துள்ளேன்.

மாற்றம் என்ற சிறுகதை ஒரு ஏழை மாணவன் பற்றியதாகும். தன் வகுப்பில் கற்ற ஏழைச் சிறுவனான முரளி என்ற மாணவனை சித்ரா டீச்சர் வார்த்தைகளால் துன்புறுத்துகிறார், அவமானப்படுத்துகிறார். நன்றாகக் கற்று பல்கலைக்கழகம் வரை சென்ற போதும் ஏழை என்ற காரணத்தால் முரளி ஏனைய மாணவர்களால் அங்கும் நிராகரிக்கப்படுகின்றான். அதையெல்லாம் தாண்டி அவன் நன்கு கற்று, சிறப்பாகச் சித்தியடைந்து, இறுதியில் ஒரு வைத்தியராக மிளிர்கின்றான். ஏழை முரளிதான் தற்போது வைத்தியர் முரளி என்று அறியாத சித்ரா டீச்சர் தன் மகளுக்கு முரளியை மணமகனாக்க எண்ணுகிறார். இறுதியல் என்ன நடந்தது என்பதே கதையின் சுவாரசியமான நகர்வாகும். 


உங்களுக்குப் பிடித்த சிறுகதையாசிரியர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் ஆகியோரின் படைப்புகள் குறித்து? 

சொல்ல வந்ததை பிசறின்றி சொல்லும் பாங்கும் பிரதேச வழக்கும் வட்டார மொழிகளும் சிறுகதையின் ஸ்தீரத் தன்மையைத் தீர்மானிக்கின்றன. திக்குவல்லை கமாலின் முட்டைக் கோப்பி, உ. நிசாரின் கால சர்ப்பம், பவானி சிவகுமாரனின் மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய், நிஜங்களின் தரிசனம், மரீனா இல்யாஸ் ஷாஃபியின் குமுறுகின்ற எரிமலைகள், நீர்வை பொன்னையனின் காலவெள்ளம், நிமிர்வு, நினைவுகள் அழிவதில்லை மற்றும் வந்தனா, திக்குவல்லை ஸப்வானின் உம்மாவுக்கு ஒரு சேலை, வாப்பாவுக்கு ஒரு சால்வை, சூசை எட்வேடின் இவன்தான் மனிதன் போன்ற சிறுகதை நூல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

அதேபோல நாவலைப் பற்றி சொல்வதானால் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உணர்வும் விறுவிறுப்பும் நாவலில் இருந்து மீள முடியாத தன்மையும் கொண்டனவாக அமைதல் வேண்டும். இந்தவகையில் நயீமா சித்தீக்கின் வாழ்க்கைப் பயணம், மல்லவப்பிட்டி சுமைரா அன்வரின் விடியலில் ஓர் அஸ்தமனம் மற்றும் வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும், ஸனீரா காலிதீனின் அலைகள் தேடும் கரை, இரா. சடகோபனின் கசந்த கோப்பி மற்றும் உழைப்பால் உயர்ந்தவர்கள், சுலைமா சமி இக்பாலின் ஊற்றை மறந்த நதிகள், மா.பா.சி. பாலசிங்கத்தின் தழும்பு (இரு குறுநாவல்கள்), திக்குவல்லை கமாலின் பாதை தெரியாத பயணம் மற்றும் வீடு, உ. நிசாரின் கோதுமைக்கனி, மைதிலி தயாபரனின் வாழும் காலம் யாவிலும் மற்றும் சொந்தங்களை வாழ்த்தி, ஆனந்தியின் இரு குறுநாவல்கள், கெக்கிறாவ ஸஹானாவின் ஒரு கூடும் இரு முட்டைகளும் ஆகிய நாவல்களை வாசித்த சுகானுபவம் இன்னும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.


ஒருவர் ஏன் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்?

வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதனூடாகத்தான் எமது சிந்தனைத் திறனை பரந்துபட்டதாக ஆக்கிக்கொள்ள முடியும். அன்றாட நிகழ்வுகள், உலகில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகள் அதேபோன்று மனித அவலங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். தற்போது பத்திரிகையை விடுத்து ஃபேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் தகவல்களை வாசித்து உடனுக்குடன் அறிந்துகொள்ளக் கூடிய வசதி காணப்படுகின்றது.


பாடல்களை எழுதும் போது பாடலாசிரியர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் என்ன?

பாடல்களை எழுதுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஓசை நயம், சந்தம், படிமம் ஆகியனவாகும். கற்பனைக் குதிரையில் அமர்ந்து பயணம் செய்கின்ற செயலை ஒத்ததே பாடல் எழுதும் கலையாகும். பாடல்களின் அருமையையும் பெருமையையும் அறிய வேண்டுமெனில் பழங்காலப் பாடல்களையும் தற்காலத்தின் ஒரு சில பாடல்களையும் உதாரணங்களாகக் கொள்ளலாம். பல பொழுதுகளில் பாடல் வரிகளைவிட இசை முதலிடம் பெறுவதால் பாடல் வெற்றி பெறும் சூழ்நிலையும் உருவாகின்றமை கண்கூடு.


உங்களது மெல்லிசைத் தூறல்கள் என்ற நூலில் உள்ள பாடல்கள் குறித்தும் கூறுங்கள்?

மெல்லிசைத் தூறல்கள் என்ற எனது நூலில் 36 பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருந்து இப்பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற எனது பாடல்; பிரபல இசை அமைப்பாளரும் பாடகருமான திரு. டோனி ஹஸன் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்டு ஒரு ஹஜ் பெருநாள் தினத்தில் நேத்ரா அலை வரிசையில் ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரபல பாடகர் கலைக்கமல் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்ட மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற எனது பாடல் மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற பெயரில் வெளிவந்த இறுவட்டிலும் சேர்கக்கப்பட்டுள்ளது. இந்த இறுவட்டு வெளியீட்டு நிகழ்வின் போது பாடகர் கலைக்கமல் அவர்கள் விருது வழங்கி என்னை கௌரவித்தார். மேலும் எனது நூல் வெளியீட்டின் போதும் இந்தப் பாடல் மேடையில் ஒலிபரப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


நீங்கள் சிறுவர் இலக்கியத் துறைக்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். அந்தவகையில் அண்மையில் வெளியிட்ட மான் குட்டி என்ற சிறுவர் பாடல் நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இந்நூல் தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் அனுசரணையில் வெளியிடப்பட்டது. இதில் 13 சிறுவர் பாடல்கள் காணப்படுகின்றன. பாலர் வகுப்பு மாணவர்களின் சிந்தனைக்கு விருந்தான பாடல்களும் கண்ணுக்கு விருந்தான சித்திரங்களும் இதில் உள்ளடக்கம் பெற்றுள்ளன. இந்நூலுக்கான அணிந்துரையை பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் வழங்கி இருக்கிறார். சிறுவர் இலக்கியப் படைப்பில் இது எனது ஆறாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த விரும்பும் பெற்றோர்கள் ஆரம்பத்தில் எவ்வாறான புத்தகங்களை தமது குழந்தைகளுக்கு தெரிவு செய்து கொடுக்க வேண்டும்?

தற்காலத்தில் சிறுவர் இலக்கிய நூல்கள் பல வெளிவந்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றது என்று தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் அனுமதிக்கப்பட்ட சிறுவர் நூல்கள் மற்றும் ஏனைய சிறுவர் நூல்களையும் பெற்றுக் கொடுப்பது மிகவும் சிறந்தது. பாடல்; பாணியிலான வாசிப்பை அல்லது சிறுகதைப் பாணியிலான வாசிப்பை விரும்பும் சிறுவர்களை இனங்கண்டு அவர்களது இரசனைக்கேற்ற நூல்களை அவர்களது பிறந்த நாள் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் பரிசாகக் கொடுக்கலாம். 


உங்கள் எழுத்துக்களில் எவ் ஆளுமையின் தாக்கம் காணப்படுகின்றது?

எனது படைப்புகளில் குறிப்பாக இன்னாரின் தாக்கம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. காரணம் நான் பல்வேறுபட்ட புத்தகங்களையும் வாசிப்பேன். இந்திய இலக்கியங்கள், இலங்கை இலக்கியங்கள், ஜனரஞ்சக படைப்புகள், கம்யூனிசம் சார்ந்த நூல்கள், இஸ்லாமிய வரலாற்று நூல்கள், சங்க கால செய்யுள்கள் போன்ற அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே எனது படைப்புகளில் இவற்றின் சாயல் எனக்குத் தெரியாமலேயே வந்துவிடக் கூடும். எனினும் நான் எனது பாணியில் தனித்துவமாக எழுதுவதிலேயே பேரவா கொண்டுள்ளேன்.


இலக்கியப் பணி சார்ந்த உங்கள் கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

இலக்கியப் பணி என்பது சமூகப் பணியாகும். படைப்புகளின் மூலம் வாசகர்கள் கொஞ்ச நேரமாவது திருப்தியாகவும் ஆசுவாசமாகவும் மனக் கவலைகளுக்கு ஒரு மருத்துவமாகவும் எமது எழுத்துகளைக் கொண்டால் அதனைவிட வேறு சிறப்பு கிடையாது. எழுத்து வாண்மையால் சரித்திரங்களை உருவாக்க முடியும். கல்வெட்டுகளைப் பதித்திட முடியும். பிளவுபட்ட குடும்பங்களை ஒன்று சேர்க்க முடியும். உறவுகளைப் பலப்படுத்த முடியும். ஊர் நிர்வாகத்தை திறம்பட உதவி செய்ய முடியும். பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவிட வழி செய்ய முடியும். இவ்வாறான பல விடயங்களை எழுத்துக்கள் மூலம் நடாத்த முடியும். எனவே எழுத்தாளர்கள் எல்லோரையும்; என் மரியாதைக்கும் கௌரவத்துக்கும் நேசத்திற்கும் உரியவர்களாகவே நான் பார்க்கிறேன்.


வாசிப்புக்கு உகந்த நேரம் எது? அதை எவ்வாறு திட்டமிட்டு வினைத்திறனான முறையில் பயன்படுத்திக் கொள்வது?

என்னைப் பொருத்தவரை வாசிப்பதற்கு உகந்த நேரம் இதுதான் என்று வரையறை செய்ய முடியாது. நம்மை நாம் சுதந்திரமாக உணர்ந்து கொள்ளக்கூடிய ஏதுவான தனிமையான சந்தர்ப்பங்களையெல்லாம் வாசிப்பதற்கு சிறந்த நேரங்களாகக் கொள்ளலாம். பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளைக் குறித்த நேரத்துக்குள் செய்வது போன்று இலக்கியம் படைக்க முடியாது. எப்போது தோன்றுகிறதோ அப்போது  வாசித்துவிட வேண்டும். எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதிவிட வேண்டும். ஜனரஞ்சக நூல்கள், செறிவான இலக்கிய நூல்கள் என்று எல்லா நூல்களையும் வாசித்து அறிந்தால் சிறந்த இலக்கிய நூல்களைப் படைக்க முடியும்.


மலையக முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி விசேடமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

மலையக முஸ்லிம்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களின் இலக்கிய பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் அமைந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதற்காக மலையக எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான முஸ்லிம் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் உருவாகி தொடராக இயங்க வேண்டும். முஸ்லிம் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவ் அமைப்பானது ஒன்றிணைத்து செயற்பட வேண்டும். குழு விவாதங்களை, இலக்கியக் கூட்டங்களை மலையகத்தில் தொடர்ந்து இடம்பெறச் செய்தால் எழுத்தாளர்களின் பங்களிப்பானது தொடரக் கூடிய நிலை ஏற்படும். 

கிழக்கு மாகாணத்தில் இலக்கிய அமைப்புகள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன. அவை எழுத்தாளர்களின் நூல்களைக் கொள்வனவு செய்கின்றன. எழுத்தாளர்களை அங்கீகரிக்கின்றன. நூல் வெளியீடுகளை செய்து கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துகின்றன. ஆளுமையான  பல எழுத்தாளர்களையும் கௌரவிக்கின்றன.

இதுபோன்று மலையகப் பிரதேசங்களிலும் அமைப்புகள் உருவாகி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆக்கபூர்வமான நிகழ்வுகள் இடம்பெறுமாயின் எழுத்தாளர்களின் பங்களிப்பும் அதிகமாகக் காணப்படும். 


இலக்கிய உலகில் கற்றுக்கொண்டவற்றில் நீங்கள் வாசகர்களுக்குக் கூற விரும்புவது என்ன?

இலக்கிய உலகம் என்பது நீச்சல் தடாகம் போன்றது. நீச்சல் தெரிந்தவர்கள் அழகாக நீந்தி கரையேற முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் எங்களை நாங்களே செதுக்கிக் கொள்ள வேண்டும். எங்களை நாங்களே பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் பெயர்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். கொஞ்ச நாட்கள் இயங்காவிட்டால் இலக்கிய உலகத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விடுவோம். எனவே எங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் செயற்பாடுகளை நாங்களே செய்து கொள்ள வேண்டும்.


பூங்காவனம் சஞ்சிகையின் துணையாசிரியராக என்ன சொல்வீர்கள்?

இதுவரை பூங்காவனம் சஞ்சிகையின் 38 இதழ்கள் வெளிவந்துள்ளன. இளையோரின் இலக்கியத் தாகத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கும் இந்தச் சஞ்சிகையின் முதலாவது இதழ் 2010 ஆம் ஆண்டு மே மாதம் வெளியீடு செய்யப்பட்டது. இந்தச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழிலும் பெண் ஆளுமைகள் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், மூத்த இலக்கியவாதிகள் என்ற பேதம் இன்றி அனைவரது ஆக்கங்களும் சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளiமை இதன் சிறப்பு எனலாம். ஆக்கங்களைத் திரட்டுதல், அதனை தரம் பிரித்தல், தட்டச்சு, அட்டை வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு போன்ற ஒவ்வொரு விடயத்தையும் துணை ஆசிரியர் என்ற வகையில் நானும் பிரதம ஆசிரியர் என்ற வகையில் எழுத்தாளர் ரிம்ஸா முஹம்மத் அவர்களும் செய்து வருகின்றோம். கொரோனாத் தொற்றின் போது ஏற்பட்ட நிதி முடக்கத்தால் சற்று தடுமாறினாலும் தொடர்ந்து சிறப்பாக வெளியிட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு ஆகும்.


இந்த தலைமுறையினர் வாசிகசாலைகளை சரியாகப் பயன்படுத்துகின்றனரா? வாசிப்புப் பழக்கமானது ஒர் எழுத்தாளர் என்ற வகையில் உங்களுக்கு எந்தளவு கை கொடுத்துள்ளது?

இன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் பெற்றோர்கள் வாசிகசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்து வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களும் வாசிகசாலையைப் பயன்படுத்துகிறார்கள். எனினும்  பொதுவாக நோக்கினால் ஸ்மார்ட் தொலைபேசிகள் இன்று பல இளந்தலைமுறையினரின் வாசிப்பு, வாசிகசாலை என்ற தேவையைப் பூர்த்தி செய்வதாகக் கருதப்படுகிறது. அதாவது வாசிகசாலைக்கு ஏன் நேரம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே வாசிகசாலைகள் இன்று வெறும் சாலைகளாக மாறி வருகின்ற ஒரு சோகம் நிலவுகின்றது. 

எனது எழுத்துத் துறைக்கான ஆரம்பமே வாசிப்பு மீது நான் கொண்ட ஆர்வம் எனலாம். புதிய சொல்லாடல்களை அறிந்துகொண்டது, மொழி வளத்தைப் பெற்றுக்கொண்டது, எதுகை மோனைகளை அறிந்து அதற்கேற்றாற் போல சந்தக் கவிகளை உருவாக்க முடிந்தது போன்ற அனைத்தையும் வாசிப்பின் மூலமாகவே சிறப்பாக நிறைவேற்றிக்கொள்ள முடியுமாக இருந்தது. வாசிப்பின் மீது கொண்ட காதல்தான் எனக்கு எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அடிக்கடி தோற்றுவித்தது. இன்றளவிலும் எனது எழுத்துத்துறை வற்றிப் போய்விடாமல் நீரூற்றிக்கொண்டிருப்பது வாசிப்புத்தான் என்பதே நிதர்சனமாகும்.


எதிர்கால இலக்கிய முயற்சிகள் குறித்து?

தட்டச்சு செய்த நிலையில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய 03 தொகுதிகள் என் கைவசம் இருக்கின்றன. அதனை அச்சிட்டு வெளியிடுவதற்கான சூழ்நிலை தற்போது கைகூடவில்லை. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட  விலைவாசியின் உச்சம், எல்லாத் துறைகளிலும் மந்தகதியை ஏற்படுத்தியிருக்கிறது. அச்சகச் செலவுகள், தபால் செலவுகள், மண்டபச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் என்று எல்லாமே வான் எட்டும் தூரத்தில் காணப்படுகின்றன. இப்படியான இப்போதைய சூழ்நிலையில் ஒரு புத்தகத்தை வெளியீடு செய்வது என்பது பகல் கனவாகவே இருக்கிறது. காலம் கனியட்டும், காத்திருக்கிறேன்.


இதுவரை உங்களுக்கு அல்லது உங்கள் இலக்கியப் பணிகளுக்குக் கிடைத்த விருதுகள் பற்றிக் கூறுங்கள்? 

எனது படைப்புகளுக்கு பல பரிசுகள், பாராட்டுப் பத்திரங்கள், விருதுகள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் எனக்குக் கிடைத்த பல விருதுகளில் பின்வரும் சில விருதுகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவையாகும்.


2013 இல் அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் - காவிய பிரதீப விருது (கவிச்சுடர் விருது) 

2015 இல் ஊவா மாகாண சாகித்திய விழா - ஆக்க இலக்கியவாதிக்கான எழுசுடர் விருது

2016 இல் இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய ஆய்வகம் - எழுத்தாளருக்கான கௌரவ விருது

2018 இல் பாணந்துறை இஸ்லாமியப் பேரவை மற்றும் இலக்கிய வட்டம் - கலையொளி விருது

2021 இல் புதிய அலை கலை வட்டம் - வெற்றியாளர் விருது


என் இலக்கியப் பணிகளுக்கான அங்கீகாரமாக இவ்வாறான விருதுகளைப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன்.

 தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகின்ற விருதுகளானது அவரவரது திறமைகளை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் உந்து சக்தியாகவும் அமைகின்றது. சர்ச்சையாக இருக்கக்கூடிய 'காசுக்கு விருது கொடுத்தல்|| என்ற விடயம், தகுதி இல்லாதவர்களின் தலைக்கனத்தை மென்மேலும் அதிகரிப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகின்றமை கோடிட்டுக் காட்டக்கூடியதாகும்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இலக்கியத்தின் மூலம் தன் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கும் என் சக நண்பர்களை எண்ணி பூரிப்படைகிறேன். ஏனெனில் உடலுக்கு நாம் கொடுக்கும் ஓய்வு போலத்தான் உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். மன நிம்மதிக்கான உற்று என்பது இலக்கியத்தின் மூலம் கிடைத்துவிடுகிறது. துக்கம் யாவும் தொலைந்து போவதற்கு இயற்கையின் அழகைப் பற்றிய ஒரு சிறு கவிதை போதுமாக இருக்கிறது. 

இறுதியாக தமிழ் நெஞ்சம் சஞ்சிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் குழுவினருக்கும் என்னை நேர்காணல் செய்த படைப்பாளி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Sunday, March 26, 2023

54. கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்? அத்துடன் உங்கள் பாடசாலை வாழ்க்கை மற்றும் தொழில் அனுபவங்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது பெயர் உம்மு ஸக்கியா. நான் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லைப் பிரதேசத்தில் உயன்வத்தை என்னும் கிராமத்தில் 1947.11.01 இல் பிறந்தேன். எனது தந்தை தெல்கஹகொட கிராமத்தில் வாழ்ந்த இப்ராஹீம் லெப்பை ஸித்தீக் மற்றும் எனது தாயார் உயன்வத்தை யூசுப் லெப்பை வைத்தியரின் மகள் ஸாலிஹா பீபி என்பவர்களாவார். 


எனது ஆரம்பக் கல்வியை தெல்கஹகொட முஸ்லிம் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலயத்திலும் கற்றேன். எனக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்னரே எனது தாயார் அகால மரணமானதன் காரணமாக, என்னால் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. 18 வயதுப் பூர்த்தியோடு எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. நான் ஆரம்பக் கல்வியைக் கற்ற தெல்கஹகொட முஸ்லிம் வித்தியாலயத்தில் ஒரு வருடம் கற்பித்ததன் பின்னர் அழுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை 1970 - 1971 ஆம் ஆண்டுகளில் முடித்தேன். அதற்குப் பின்னர் 1972 இல் பயிற்சி பெற்ற ஆசிரியராகச் சென்று உயன்வத்தை நூராணியாவில் இரண்டு வருடங்கள் கற்பித்து, எனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தேன்.

1972 இல் மாவனல்லை கிருங்கதெனிய கிராமத்தில் வாழ்ந்த சிங்கள மொழி மூல ஆசிரியர் அப்துல் றஸ்ஸாக் பரீத் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்று, ஒரு கூட்டுக் குடும்பத்தில் 12 ஆண்டுகள் கணவரின் இல்லத்தில் வாழ்ந்து, இரண்டு புதல்வர்களுக்குத் தாயாகிய பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்; பட்டப் படிப்பை மேற்கொண்டு கலைமாணிப் பட்டம் பெற்று எனது தகுதியை சற்று உயர்த்திக் கொண்டேன். பின்னர் எனது புதல்வர்களினதும் எனதும் நலன் கருதி தலைநகருக்கு இடம் மாற்றம் பெற்று 1985 இல் கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் இணைந்தேன். எனது இரண்டு புதல்வர்களுக்கும் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரிகளில் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.


திருமதி. தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் ஜி.சீ.ஈ. உயர்தர வகுப்பிற்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் வெற்றிடம் இருப்பதாக என்னிடம் ஒரு தகவலைக் கூறினார். அதன்படி நான் அக்கல்லூரில் இணைந்து 05 வருடங்கள் உயர்தர வகுப்பிற்குக் கற்பித்தேன். இக்காலப் பகுதியில் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாப் பயிற்சி நெறியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட பகுதி நேரப் பயிற்சியாக மேற்கொண்டு மேலும் எனது தகுதியை உயர்த்திக் கொண்டேன்.


1990 இல் இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டுக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியதில் எனக்குத் திறமைச் சித்தி கிடைத்தது. எனினும் இப்பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாததொரு இக்கட்டான சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. அதாவது எனது கணவரின் திடீர் மாரடைப்புக் காரணமாக இந்தியாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டதால் எனது 40 ஆவது வயதிலேயே ஆசிரியப் பணியைவிட்டு நீங்க நேரிட்டது. எல்லாம் நன்மைக்கே என்று என்னை நானே தேற்றிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதற்குப் பின்னரே எனது திசையை எழுத்துப் பணிக்குத் திருப்பினேன்.

இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்படக் காலாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?

சிறுவயதிலிருந்தே எனது தந்தை, தனது பிள்ளைகளுக்கு வாசிப்பதில் ஆர்வமூட்டும் முகமாக பத்திரிகைகளை வாங்கிக் தந்;தார். அப்போதுகளிலிருந்தே நாங்கள் தினகரன் வாரமலர், சிறுவர் மலரைத் தவறாது வாசிப்போம். நான் ஐந்தாம் வகுப்பில் கற்கும் போது சிறுவர் மலரில் நயீமா பஷீர் என்ற ஒருவர், எனது ஊர் ஹப்புத்தளை என்ற தலைப்பில் ஆக்கம் ஒன்றை பத்திரிகையில் எழுதி இருந்தார். இப்போது அவர் நயீமா சித்தீக் என்ற பிரபல மூத்த பெண் எழுத்தாளராக உள்ளார். அவர்தான் எனது எழுத்துலக முன்னோடி அவரைப்போல நானும் எழுத வேண்டும் என்று நினைத்து எனது ஊர் பற்றி சுமார் 10 வரிகள் எழுதி, பத்திரிகைக்கு அனுப்பினேன். அந்த ஆக்கம் அப்போதுகளில் தினகரன் சிறுவர் மலரில் வெளிவந்தது. இதனைப் பத்திரிகையில் வாசித்துவிட்டு, என்னை விடவும் உண்மையில் எனது தந்தையே மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஆக்கமே நான் பத்து வயதில் எழுதிய என்னுடைய முதலாவது ஆக்கமாக அமைந்தது. அதற்குப் பின்னர் அவ்வப்போது கதைகள் மற்றும் சிறு சிறு ஆக்கங்கள் போன்றவற்றை எழுதினேன்.

இலக்கிய உலகில் நுழைந்த காலம் மற்றும் சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

ஆரம்ப காலங்களில் நூல்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சமும் இருக்கவில்லை. எனது கணவரின் உடல் நிலை தேறிய பின்னர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தமிழ் பிரிவில் இணைப்பாளராக பணியாற்றக் கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. கொழும்பு ஸாஹிராவில் இணைந்த மறுநாள் ஸாஹிராவில் பிரம்மாண்டமான அப்துல் கபூர் மண்டபத்தில் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது. அந்த மண்டபத்துள்குள் நுழையும் போது மண்டபத்தின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த கம்பீரமான தோற்றத்தில் உள்ள புகைப்படங்களைக் கண்டதும் எனது உடம்பெல்லாம் பூரிப்பது போல ஓர் உணர்வு ஏற்பட்டது. ஏற்கனவே அறிஞர் சித்திலெப்பை அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீpஸ் போன்றவர்களின் புகைப்படங்களைப் பார்த்துப் படித்த அனுபவம் எனக்கு இருந்தது.


மற்றவர்கள் யார் என்ற சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. பிரிவுத் தலைவர் என்.எம்.எம். ரெஸீன், உப அதிபர் அப்துல் அஹத், வாசிகசாலைப் பொறுப்பாளர் போன்ற பலரிடம் இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய முற்பட்டேன். ஆர்கேட், எம்.ஐ.சீ.எச். போன்ற பல இடங்களில் தகவல்களைத் தேடினேன். கல்லூரி ஆசிரியர்களான அப்துல் அஸீpஸ், முகமது ஷாதுலி ஆகியோர் எனக்கு மிகவும் உதவி செய்தார்கள். சுமார் ஒரு வருட தேடலுக்குப் பின்னரே ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற எனது முதலாவது நூலை நான் வெளியிட்டேன். 


உங்களுக்குள் படைப்புகள் எவ்வாறு கருக்கொண்டு உருப்பெறுகின்றன?

எனது கவிதைகளைப் பொறுத்தவரையில் அன்றாட வாழ்வில் என்னுடைய மனதைப் பாதித்த விடயங்களை நான் அவ்வப்போது குறித்து வைத்துக்கொள்வேன். அவற்றைத் தனிமையாக இருக்கும் நேரங்களில் கவிதைகளாக வடிவமைத்து, செம்மைப்படுத்தி எழுதிக்கொள்வேன். பின்னாட்களில் அவற்றை மீண்டும் தேவைக்கு ஏற்ப சீர்படுத்தி திருப்தியாக எழுதிக்கொள்வேன். அவற்றையே பின்நாட்களில் நூலாக வெளியிடுவேன்.


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் நீங்கள் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துக்கள் உங்களை அதிகமாகக் கவர்ந்ததாக கருதுகிறீர்கள்?

ஆம். என்னுடைய கையில் எந்த நூல் கிடைத்தாலும் நான் அவற்றை முழுமையாக வாசிப்பேன். வழமையாக கிழமைக்கு ஓரு நாளாவது நூல் நிலையம் ஒன்றுக்குச் சென்று, ஆகக் குறைந்தது மூன்று மணித்தியாலங்களைச் செலவளித்து புத்தகங்களை வாசிப்பேன். அதுபோல நான் செல்லும் நூல் நிலையங்களுக்கு எனது அன்பளிப்பாக சில புத்தகங்களை வழங்கும் பழக்கமும் என்னிடம் உள்ளது. முடிந்தளவு எல்லா எழுத்தாளர்களது நூல் வெளியீடுகளுக்கும் சென்று அவர்களது நூல் வெளியீட்டு முயற்சிகளுக்கு உதவும் வகையில் கரங்கொடுப்பேன்.

மறைந்த எழுத்தாளர் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களின் நூல்கள் எல்லாவற்றை நான் மிகவும் விரும்பி வாசித்ததுண்டு. இஸ்லாமிய நூல்களைப் பொறுத்தவரையில் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாயர் கலாநிதி எம்.ஐ.எம். அமீன், கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்களுடைய எல்லா நூல்களையும் வாசித்துள்ளேன். நளீமிய்யா நூல் வெளியீடுகளைத் தொடர்ந்தும் வாசிக்கும் பழக்கம் என்னிடம் உள்ளது. 

இதுவரை வெளிவந்த உங்களது நூலாக்கங்கள் தொடர்பாகக் கூற விழைவது? அத்துடன்  இலக்கியத் துறையில் உங்களுக்கு ஊக்குவிப்பாய் இருந்தவர்கள் குறித்தும் கூறுங்கள்?

இதுவரை நான் 06 நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த நூல்களுக்கு இலக்கிய உலகில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அந்த 06 நூல்களும் பின்வருவனவாகும். 

01. ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் (ஆவணம்) 2004

02. விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி) 2010

03. இதயத்தின் ஓசைகள் (கவிதைத் தொகுதி) 2010

04. முதுசம் (பொன் மொழித் தொகுப்பு) 2010

05. பொது அறிவுத் தகவல் களஞ்சியம் (தகவல்) 2013

06. இஸ்லாமிய தகவல் களஞ்சியம் (சமயம்) 2016

07. நமது வரலாற்று ஆளுமைகள் (ஆவணம்) 2022


எனது ஒரு வருட தேடலுக்குக் கிடைத்த வெற்றியாகவே ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற முதலாவது நூலை 2004 ஆம் ஆண்டில் கொழும்பு ஸாஹிராவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் வெளியிட்டேன். இவ்விழாவுக்கு முனைவர் பர்வீன் சுல்தானா, காலஞ்சென்ற கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றோர் இந்தியாவிலிருந்து அதிதிகளாக வந்து சிறப்பித்தார்கள். எனது இந்த முதலாவது நூல் தான் என்னை இலக்கிய உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

சுமார் ஏழு வருடங்கள் ஸாஹிராவில் பணிபுரிந்த நான் எனது கணவனின் மரணத்துக்குப் பின்னர் அக்கல்லூரியைவிட்டு நீங்கி எனது மார்க்கக் கடமையான இத்தாவை அனுஷ்டிக்கச் சென்றேன். தனிமைப்பட்டிருந்த அந்த நான்கு மாதங்களில் எனது மார்க்கக் கடமைகளோடு நான் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி திரட்டி வைத்திருந்த பல குறிப்புகளையும் ஒழுங்குப்படுத்தி அவற்றை முறையாகத் நூலுருப்படுத்தினேன்.

விடியலின் விழுதுகள் (சிறுகதை தொகுதி), இதயத்தின் ஓசைகள் (கவிதைத் தொகுதி), முதுசம் (பொன் மொழித் தொகுப்பு), ஆகிய மூன்று நூல்களையும் இத்தாவுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வெளியிட்டேன். வைத்திய கலாநிதி டாக்டர் தாஸிம் அகமது மற்றும் மர்ஹும் மருதூர் ஏ. மஜீத், அகில இலங்கை இளம் மாதர் சங்கத்தினர்களாகிய தேசமானிய மக்கியா முஸம்மில், தேசமான்ய பவாஸா தாஹா, ஓய்வு பெற்ற அதிபர் மர்ளியா சித்தீக், பெண்கள் தொழில் வான்மைச் சங்கத் தலைவி ஷானாஸ் ஹகீம் போன்ற பலர் எனக்கு உதவி செய்தார்கள். இவர்கள் அனைவரையும் இந்த இடத்தில் நன்றியோடு நான் ஞாபகப்படுத்துகின்றேன்.


எனது ஐந்தாவது நூல் பொது அறிவுத் தகவல் களஞ்சியம் ஆகும். இந்த நூல் பாடசாலை மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் நோக்கோடு வெளியானது. இந்த நூலை எனது பிறந்தகமான மாவனல்லையில் 2013 இல் வெளியிட்டேன். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர்களில் ஒருவரான மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், தொழிலதிபர் கமால் தீன் ஹாஜியார், கண்டி ஆயிஷா பெண்கள் அமைப்புகளின் தலைவி திருமதி. ஆயிஷா அஸீஸ் மஃரூப் போன்றவர்கள் முன்னின்று இந்த நூல் வெளியீட்டை நடாத்தித் தந்தார்கள்.


நான் அஹதியாக மாணவர்களுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்பித்துள்ளேன். அஹதியா இறுதி ஆண்டு அரசாங்கப் பரீட்சை, தர்மாச்சரிய பரீட்சை போன்றவற்றில் பரீட்சையிடல், மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட காலங்களில் மாணவர்களுக்கு அடிப்படை இஸ்லாமிய அறிவில் காணப்பட்ட குறைபாடுகளை மதிப்பீடு செய்யக் கூடிய அவகாசம் எனக்குக் கிடைத்தது. இந்த சூழ்நிலையை அவதானித்த நான் இஸ்லாமிய தகவல் களஞ்சியம் என்ற பொது அறிவு நூலைத் தொகுத்து 2016 இல் வெளியீடு செய்தேன்.

எனது ஏழாவது நூல் நமது வரலாற்று ஆளுமைகள் என்ற தலைப்பில் அமைந்த நமது நாட்டுக்குச் சேவை செய்த சேவையாளர்களைத் தேடி அதன் முதலாவது பகுதியை 2022 இல் வெளியிட்டேன். இந்த நூலின் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.


உங்களது முதல் தொகுப்பான ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற ஆவண நூல் குறித்து விசேடமாகக் கூற விரும்புவது என்ன?

ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூலே எனது முதலாவது நூலாகும். இலங்கையின் முஸ்லிம்கள் வியாபாரத்தையே தமது பரம்பரைப் பெருமையாக பேசிக்கொண்டு கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த சந்தர்ப்பத்தில் அறிஞர் எம்.ஸீ. சித்தி லெப்பை, வாப்பிச்சி மரிக்கார், எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்த ஒராபி பாஷா, கொடை வள்ளல் அப்துல் கபூர், ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், கரீம் ஜீ ஜபர் ஜீ, ஸேர் மாகான் மாகார் போன்ற சிர்திருத்தவாதிகள் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மத்ரஸதுல் ஸாஹிராவை நிறுவுவதற்கான முயற்சியை முன்னெடுத்தனர். இவர்களின் புகைப்படங்கள் இன்றும் கொழும்பு ஸாஹிராவின் அப்துல் கபூர் மண்டபத்தில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பெரியவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் 1997 இல் எனக்கு ஏற்பட்டது. அதன் பிரதிபலிப்பே ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூலாக 2004 இல் வெளிவந்தது.



உங்களது ஒவ்வொரு சிறுகதைகளும் சமூக உறவுகளின் போலித் தனத்தை உரித்துக் காட்டி சமூகத்தின் மீதான சாடலாக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்;தவகையில் உங்களது விடியலின் விழுதுகள் சிறுகதை நூலில் உள்ள கதைகள் தொடர்பாகக் கூற விழைவது?

விடியலின் விழுதுகள் என்ற எனது சிறுகதைத் தொகுதியில் 13 சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன. இன்று எமது குடும்பப் பெண்கள், வீடுகளிலும் குடும்பங்களிலும் வேலை செய்யும் இடங்களிலும் வெளிநாடுகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் வயோதிபர் இல்லங்களிலும் பல்கலைக்கழக பகிடிவதைகளாலும் பல்வேறு வகையான கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி மனத் தாக்கங்களோடு வாழ்ந்து வருவதையே எங்கும் காண முடிகின்றது. இந்த அவலங்களை சமூகத்திற்கு முன்வைத்து, இவற்றுக்கான தீர்வு கிடைக்குமா என்ற எனது ஆதங்கத்தையே சிறுகதைகளாக வெளிப்படுத்தியுள்ளேன்.


உங்கள் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன? உங்கள் சிறுகதைத் தொகுதிக்கு விடியலின் விழுதுகள்; என்ற நாமத்தினை ஏன் வைத்தீர்கள்?

சீதனக் கொடுமை, மாமிக் கொடுமை, மதினிக் கொடுமை எனப் பல்வேறு வகையான சமூகக் கொடுமைகளால் பெண்கள் கஷ்டப்படுவதைக் கண்டும், கேட்டும் என் உள்ளத்தை உறுத்திய பாதிப்புகள், அவலங்களைத் தொகுத்து எனது சிறுகதைகளை எழுதினேன். அவற்றுக்கான விடியலை தேடும் நோக்கோடு சமூகத்திற்கு முன்வைப்பதைக் கருத்தில் கொண்டே எனது சிறுகதைத் தொகுதிக்கு விடியலின் விழுதுகள் என்ற நாமத்தைச் சூட்டினேன்.


இதயத்தின் ஓசைகள் என்ற உங்களது கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றியும் கவிதைகள் பற்றியும் கூறுங்கள்?

எனது தேர்ந்தெடுத்த 40 கவிதைகளைத் தொகுத்தே இதயத்தின் ஓசைகள் என்ற கவிதை நூலை வெளியீடு செய்தேன். அதாவது பொதுவாகக் கூறுவதென்றால் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் கருப்பொருட்களை உள்ளடக்கும் வகையிலேயே இந்தக் கவிதை நூலை நான் வெளியீடு செய்துள்ளேன். இனிவரும் காலங்களில்; சமூகப் பிரச்சினைகளை எழுத மிகவும் ஆவல் கொண்டுள்ளேன். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இதுவரை எனது நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றுக்குப் நான் பாராட்டுகளையும் பரிசில்களையும் பெற்றுள்ளேன்.


பொது அறிவு தகவல் களஞ்சியம் என்ற நூல் தொடர்பாகக் கூற விழைவது?

பாடசாலை மாணவர்களையும் அரசாங்கப் போட்டிப் பரீட்சைகளையும் மையமாக வைத்து இலங்கை தொடர்பான பொது அறிவுத் தகவல்கள் பலவற்றையும் திரட்டி பொது அறிவு தகவல் களஞ்சியம் என்ற எனது ஐந்தாவது நூலை 2013 இல் வெளியிட்டேன்.


இறுதியாக வெளியிட்ட நமது வரலாற்று ஆளுமைகள் நூல் வெளியீடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?

ஒவ்வொரு சமூகத்திலும் அவ்வப்போது அறிவாற்றல் மிக்கோர் தோன்றுகின்றனர். அவர்கள் சமூகத்தின் இயக்க சக்தியாக விளங்குபவர்கள். இந்த வகையில் சுமார் 1000 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் சமூகத்திற்கு அறிவாலும் ஆற்றலாலும் சேவை செய்து மறைந்த ஆயிரக்கணக்கான ஆளுமைகளில் 143 நபர்களின் வரலாற்றைத் திரட்டி, 10 அத்தியாயங்களாகப் பிரித்து சுமார் 568 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவண நூலாக நமது வரலாற்று ஆளுமைகள் என்ற தலைப்பில் இந்த நூலை வடிவமைத்துப் பல்வேறு வகையான சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு வெளியீடு செய்தேன்.


இலக்கிய வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

அண்மையில் வெளியீடு செய்யப்பட்ட எனது  ஏழாவது நூலான நமது வரலாற்று ஆளுமைகள் என்ற ஆவண நூலின் முதலாம் பகுதி என்னுடைய ஏழு வருட முயற்சியாகவே அமைகிறது. அதற்காக நான் நாடு முழுவதும் அழைந்து திரிந்து தகவல்களைத் திரட்டி பல கஷ்டங்களை அனுபவித்தேன். இந்த நூலில் தொகுக்கப்பட்ட ஆளுமைகளில் 75 வீதமானவர்கள் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியோடு ஏதாவது ஒரு வழியில் தொடர்புபட்டவர்கள். அதனால் இந்த ஆவண நூலை கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் வெளியிட வேண்டும் என்பது எனது ஒரே ஆவலாக இருந்தது. இருந்தாலும் எனக்கு அங்கு இந்த நூலை வெளியீடு செய்யக் கிடைக்கவில்லை.


இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டு எவ்வாறான பங்களிப்பினை ஆற்றியுள்ளீர்கள்?

இலங்கையில் மட்டுமல்லாமல் மலேசியா, சென்னை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவ்வப்போது நடந்த  தமிழ் இலக்கிய மாநாடுகளில் பேராளராகக் கலந்து சிறப்பித்துள்ளேன். இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு பேராளராக கலந்துகொள்ளச் சென்ற அனைத்து எழுத்தாளர்களோடும் எனக்கு இன்றுவரை தொடர்புகள் உண்டு. அத்துடன் முனைவர் பர்வீன் சுல்தானா, மர்ஹும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தேன். என்னுடைய இல்லத்துக்கு அவர்களை வரவழைத்து விருந்தளித்து மகிழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகளும் எனக்கு உண்டு.  தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் மர்ஹுமா கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் எனக்கு கனடாவில் உள்ள இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தித் தந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் எனக்குப் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி கௌரவித்தார். அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். 

நான் பல பெண்கள் அமைப்புக்களில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றேன். இந்த அமைப்புக்களில் இலங்கை இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தில் நான் ஒரு ஸ்தாபக உறுப்பினராக இணைந்து இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அல் முஸ்லிமாத் நிறுவனத்தில் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை நாட்டின் நாலா புறங்களிலும் உள்ள முஸ்லிம் சிறுமியர்களின் மூன்றாம் நிலைக் கல்வியில் கரிசனை காட்டி வருகின்றேன். நான் எந்தப் பணியைச் செய்தாலும் எனக்கு இறைவன் அமானிதமாக அளித்த கல்விப் பணியை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சுமார் 20 வருடங்கள் தூய்மையான எண்ணத்தோடு செய்துள்ளேன். இதற்கு என்னிடம் கல்வி கற்ற மாணவர்களும் மாணவிகளும் சாட்சி பகர்வார்கள். 


பத்திரிகைத் துறையில் பணியாற்றிய காலம் தொடர்பாக குறிப்பிட விரும்புவது?

நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய கலாபூஷனம் என்.எம். அமீன் அவர்கள் என்னை நவமணிப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் சேர்த்துக்கொண்டார். நான் சுமார் 06 வருடங்கள் இங்கு பணியாற்றினேன். இந்நாட்களில் நமது முன்னோர்கள் என்ற தலைப்பில் ஒரு பத்தியை வாரத்துக்கு ஒன்று என்ற வகையில் எழுதி வந்தேன். சுமார் 50 பேர்கள் பற்றிய பத்திகளைத் தொடராக நவமணிப் பத்திரிகையில் எழுதினேன். 

கோவிட் 19 க்கு பின்னர் நவமணிப் பத்திரிகை நிறுத்தப்பட்டாலும் ஏற்கனவே நான் நவமணிப் பத்திரிகையில் எழுதிய நமது முன்னோர்கள் என்ற ஆக்கங்களுடன் மேலும் 300 நபர்களது தகவல்களைத் திரட்டி ஒரு நூலாக வெளியிட சுமார் ஏழு வருட எனது நேர காலங்களைச் செலவிட்டுள்ளேன். இதன் பொருட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று சேவையாளர்களது குடும்பங்களைச் சந்தித்து, தகவல்களைத் திரட்டி நமது வரலாற்று ஆளுமைகள் என்ற தலைப்பில் அதன் முதலாம் பாகத்தை வெளியீடு செய்தேன். நூலின் இரண்டாம் பகுதிக்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.


உங்களது இலக்கிய மற்றும் சமூகப் பணிகளுக்காக நேர காலங்களை எவ்வாறு ஒதுக்கிக் கொள்கிறீர்கள்?

நேர காலம் கண் போன்றது, பொன் போன்றது என்றெல்லாம் சொல்வார்கள். காலம் உயிர் போன்றது என்று நான் சொல்வேன். பொன்னை இழந்தால் தேடிக்கொள்ளலாம். கண்ணையும் சரி செய்து கொள்ளலாம். உயிர் பிரிந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே நேர காலத்தை மிகவும் சரியாகத் திட்டமிட்டு செலவளிக்க நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். நானும் அவ்வாறே என்னுடைய நேர காலங்களைச் சரியாகத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திக் கருமமாற்றுகின்றேன். 

இலங்கை மனித உரிமை நிறுவனத்தில் ஆறு மாத கால பயிற்சி பெற்று 2003 இல் டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன். 2006 இல் ஐ.நாவின் யூ.என்.டீ.பீ. அமைப்பினூடாக சமாதான தொண்டர் நிறுவனப் பணிகளுக்காக எனக்குச் சான்றிதழ் கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனத்தைப் பெற்றுக்கொண்டேன். அத்துடன் சில வருடங்களாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டுள்ளேன். தெஹிவலைப் பிரதேசக் காரியாலயத்தில் அங்கத்தவராக இணைந்து, பல்வேறு பணிகளை அவர்களோடு சேர்ந்து பணியாற்றி வருகின்றேன். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் சுமார் 15 வருடங்கள் பிரதிகள் எழுதியும் குரல் கொடுத்தும் வந்துள்ளேன். எனக்கு இப்போது 76 வயதாகின்றது. சமூகத்துக்கு இன்னும் ஏதையாவது என்னாhல் செய்ய முடியுமா என்பதைப் பற்றிச் சிந்திக்கிறேன்.


தற்காலங்களில் படைப்புகளுக்குக் கிடைக்கின்ற விருதுகள் தொடர்பாக நீங்கள் எவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளீர்கள்?

எனக்கு பல விருதுகள், பட்டங்கள் கிடைத்த போதும் அதை நான் பெரிதாக அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை விருதுகள் பெறுவது முக்கியமல்ல. பல விருதுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாக நம்மை மாற்றிக் கொள்வதுதான் மிகவும் முக்கியம் என்றே நான் கருதுகின்றேன். இன்று பேருக்கும் புகழுக்கும் பணத்திற்கும் விருதுகள் பெறும் ஒரு காலமாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.


எழுத்திலக்கியத்தில் ஈடுபட்டமைக்காக இதுவரை தங்கள் பெற்றுக்கொண்ட வரவேற்புகள், பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் கூற முடியுமா?

2011.12.17 - கலாபூஷணம் (கலாசார அலுவல்கள் திணைக்களம்)

2011.08.12 - சாமஸ்ரீ தேசமான்ய விருது (அகில இன நல்லுறவு ஒன்றியம்) 

2016 - இலக்கிய தென்றல் (தடாகம் கலை இலக்கிய வட்டம்)

2018.07.21 - ஊடகத்துறைப் பணிக்கான கௌரவ விருது (ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்)

2018 - ஸ்ரீ விபூதி விருது (தெஹிவலை பிரதேச செயலகம்)

2022.08.15 - தீர்த்தகிரியார் வீர விருது (திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன்)

2022.09.17 - எழுத்தொளி சக்ரா விருது (திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன்)

2022.10.24 - பண்கலை ஒளிச் செம்மல் விருது (திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன்)


பொது மற்றும் சமூகப் பணிகளை ஆற்றி வருவதாக அறிகின்றேன். அதுபற்றியும் கூறுங்களேன்?

தலைநகருக்கு வந்த 1985 களிலிருந்து பல பெண்கள் அமைப்புகளிலும், மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனமொன்றிலும் எனது நேரத்தை பிரயோசனமாக்கிக் கொண்டு பணிபுரிந்து வந்தேன். அத்துடன் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கும் பிரதி எழுதுதல், நேரடியாகக் கலந்துகொள்ளுதல், உரையாடல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுதல் போன்ற பங்களிப்புகளுடன் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்டேன். என்னை வானொலிக்கு அறிமுகப்படுத்தியவர்கள் கலாபூஷணம் புர்கான் பீ. இப்திகார், எனது மாணவன் மர்ஹும் நூராணியா ஹஸன், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காலஞ்சென்ற பூமணி குலசிங்கம் ஆகியோர்களாவார். இவர்கள் அனைவரையும் நன்றியோடு ஞாபகப்படுத்துகின்றேன். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்