பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, April 7, 2020

48. மின்னும் தாரகைகள் எனும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலைத் தந்த நூலாசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுடனான நேர்காணல்

'மின்னும் தாரகைகள்' என்ற நூல் வெளியீட்டை முன்னிறுத்திய விசேட நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.11.11

மின்னும் தாரகைகள் எனும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலைத் தந்த நூலாசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் 

அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரியும் படைப்பிலக்கியவாதியும் இலங்கையின் சிரேஷ்ட முஸ்லிம் பெண் பத்திரிகையாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்;, மலையகத்தைச் சேர்ந்த ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியிலுள்ள உடுதெனிய என்ற சிற்றூரில் பிறந்தவர். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை "தினபதி - சிந்தாமணி" ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி' என்ற  பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசார அதிகாரியாக நியமனம் பெற்ற இவர், அத்திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer) பதவி பெற்றார். தகவல் திணைக்களத்தின் "திங்கள்" என்ற மாதாந்த சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் அத்திணைக்கள மாதாந்த "புத்தொளி" என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், திணைக்களத்தினால் சுமார் 35 வருடகாலமாக தொடர்ச்சியாக வெளிவரும் "தெசதிய" என்ற சிங்கள சஞ்சிகையின் சிறப்புக் கட்டுரையாசிரியராகவும் கடமை புரிந்தார்.

1975 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர் அன்று முதல் இன்று வரை கவிதையாக கட்டுரையாக ஆய்வு நூலாக கவிதை நூலாக என எழுத்துலகிற்கு தனது பங்களிப்பை நல்கி வருகின்றார். ஏற்கனவே 'பண்பாடும் பெண்', 'பூஞ்செண்டு' என்று தனதான இரண்டு நூல்களைத் தந்த இவர், தற்சமயம் இலங்கை இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கும் ஒரு முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். இலங்கை இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஓர் ஆய்வு நூலை 460 பக்கங்களுடன் கூடியதாக ஷஷமின்னும் தாரகைகள்|| என்ற பெயரில் வெளியிடவிருக்கிறார். எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி (2018.11.11) கொழும்பில் இந்த சிறப்புமிக்க நூல் வெளியிடப்படவுள்ளது. எனவே இந்த காத்திரமான நூலை ஆக்கிய நூலாசிரியர் கலாபூஷணம் திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களை 'ஞாயிறு தினக்குரல்' பத்திரிகைக்காக நாம் சந்தித்து உரையாடினோம்.

அவருடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இதோ:-


"தகவல் அதிகாரி"யாக பணியாற்றிய உங்கள் அநுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

"தகவல் அதிகாரி"யாகப் பணியாற்றிய எனது அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு சொல்வதாயின் தகவல் திணைக்களத்தினால் புதிதாக உள்வாங்கப்பட்ட பதவி தான் 'அரசாங்க தகவல் அதிகாரி' பதவி. போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 24 அதிகாரிகள் மாவட்ட தகவல் அதிகாரிகளாக நியமனம் பெற்றனர். இவர்களுள் நான் 'கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரி'யாக நியமிக்கப்பட்டேன். மூன்று மொழிகளிலும் கடமையாற்றக்கூடிய ஓர் அதிகாரியே கொழும்புக்கு நியமிக்கப்பட வேண்டும் என எமது திணைக்களம் என்னை இப்பதவிக்கு அமர்த்தியது. மாவட்ட செயலகங்கள் தோறும் தகவல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அந்த பிரிவுகளுக்கு கணனி, தொலைபேசி, தொலைகாட்சி, புகைப்படக்கருவி மற்றும் அலுவலக உபகரணங்கள் அடங்களாக அனைத்து வளங்களையும் எமது தகவல் திணைக்களமே வழங்கியது.

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 பிரதேச செயலங்கள் இருக்கின்றன. இந்த 13 பிரதேச செயலகங்களினூடாக அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கை குறித்து மக்களை விழிப்பூட்டுவதே எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளாகும். மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்கள், மாவட்ட விவசாய கமிட்டி கூட்டம், மாவட்ட சூழல் பாதுகாப்புக்கமிட்டி கூட்டம், டெங்கு ஒழிப்புக் கூட்டம், மாதாந்த வீடமைப்பு கமிட்டி கூட்டம் இப்படி பல்வகையான கூட்டங்கள் இடம்பெறும். இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வதுடன் அதில் பிரஸ்தாபிக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அச்சக மற்றும் இலத்திரன் ஊடகங்களுக்கு தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதுதான். எமக்கிருந்த பாரிய பொறுப்பாகும்.

அத்தோடு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளமான றறற.நெறள.டம என்ற இணையத்தளத்துக்கும் உடனுக்குடன் எமது தகவல்களை வழங்குதல், மாவட்ட வளங்கள் குறித்த தரவுகளை கணனி மயப்படுத்தல், மாவட்டத்தில் நிகழும் அரச மட்ட தேசிய நிகழ்வுகளுக்கு ஊடக இணைப்பாளராக செயல்படுவது போன்றவையும் எமது பணிகளாகும். மாவட்ட செயலகத்தில் தகவல் அதிகாரியாகக் கடமை புரிந்த காலப்பகுதி உண்மையிலேயே எனது அரச சேவையின் பொற்காலம் என்றே கூறத்தோன்றுகிறது. வேலைப் பளுவும் அதிகம் தான். ஆனால் எனக்கு எவ்வளவோ அனுபவங்களையும் அறிவுசார் உயர் அதிகாரிகள் வட்டத்தையும் பெற்றுத் தந்தது இந்த சேவை என்றால் அது மிகையாகாது.

அதுமட்டுமல்ல இந்த அரசாங்க தகவல் திணைக்களத்தில் மிக நீண்ட காலமாக (சுமார் 20 வருட காலமாக) தகவல் அதிகாரியாக கடமையாற்றிய ஒரேயொரு முஸ்லிம் பெண் என்ற பெருமையும் எனக்குண்டு என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும் படியாக இருக்கிறதா?

எனது இந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலுக்காக பெரும் எண்ணிக்கையான முஸ்லிம் படைப்பாளர்களின் நூல்களை பார்க்கும், படிக்கும் அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இதன்படி நோக்கும் போது இந்தத் தேடலின் போது நான் சந்தித்த பல பெண் இலக்கிய ஆளுமைகளைக் கண்டு உண்மையிலேயே நான் பிரமித்துப்போனேன். மும்மொழிகளிலும் ஆக்கங்கள் படைக்கும் ஆற்றல் உடையோர், சிறந்த கவி ஆளுமையுடையோர், சிறந்த சிறுகதை புனைவோர், நல்ல நாவல்களை எழுதுவோர் என பல்துறை ஆளுமைகொண்ட பெண்கள் பலரையும் சந்தித்தேன். இந்த நூலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவரிடத்திலும் வௌ;வேறு திறமைகள் இருப்பதைக் கண்டு நான் வியந்து போனேன். இவர்கள் எல்லோரும் நம்நாட்டின் வளங்கள் (சுநளழரசஉநள). இவர்களை நான் "மின்னும் தாரகைகள்" எனப் பெயர் சூட்டியது பொருத்தம் என உணர்கிறேன். இவர்களில் சிலர்  மின்னும் தாரகைகளாக மட்டுமல்ல சுடர் விடும் சூரியனாகவும்  பிரகாசிக்கிறார்கள்  என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

அதேநேரம் இன்னுமொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும் இலக்கிய ஆளுமையுள்ள ஒரு சில பெண் படைப்பாளிகளிடையே மற்றவர்களையும் அரவணைத்துப்போகும் இணக்கப்பாடு சற்று குறைவாகக் காணப்படுவதுதான் கவலைக்குரியதாக உள்ளது. பெண் எழுத்தாளர்கள் என்ற வகையில் அனைவரும் பரஸ்பரம் இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து ஓரணியாய் செயல்பட்டால் எவ்வளது சிறப்பாக இருக்கும். அனைவரிடத்திலும் அந்த ஒற்றுமை மலர வேண்டும் என்று ஆசிக்கிறேன்.


உங்கள் எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

நான் சமகால பிரச்சினைகனை வைத்து வானொலிக்கும் பத்திரிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதுவது வழக்கம். இந்த வகையில் நான் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு எழுதும் பிரதியாக்கங்களும் கூட சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவே இருந்தன என்பதற்கு நிகழ்ச்சியைக் கேட்போர் கூறும் விமர்சனங்களே சான்று பகர்கின்றன. குறிப்பாகக் கூறுவதாயின் எனது உறவுக்கார மாமியார் ஒருவர் எனது முன்னிலையில் பேசும் போது ஷஷஐயோ மகளே! உங்கள் முன் ஏதும் பேச பயமாக இருக்கிறது. அப்புறம் நீங்க அதுபற்றி ரோடியோவிலையோ பேப்பரிலையோ எழுதி விடுவீங்க|| என்பார். இன்று அந்த மாமி உயிருடன் இல்லை. ஆனால் அவர் கூறிய ஆணித்தரமான வரிகள் என் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவே எனது ஆக்கங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்துக்கு ஒரு சிறு உதாரணம் தானே?

மற்றுமொரு சிறு சம்பவத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வழமையாக மீன் வியாபாரிகளாக பெரும்பாலும் ஆண்களைத்தான் காண்பதுண்டு. ஆனால் ஒரு பெண் தள்ளுவண்டியில் எமது வீடுகளுக்கு மீன் விற்பனை செய்ய வருவதுண்டு. மீனை வெட்டுவதற்காக இவர் எடுக்கும் பிரயத்தனம் தள்ளு வண்டியை தள்ளித் தள்ளி வரும் பரிதாபம் என் மனதை வருத்தியது. ஒரு நாள் அந்த பெண்மணியிடம் நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாய்? என்று அவரது சகல விபரங்களையும் பெற்று உடனே அவரது புகைப்படத்தையும் எடுத்து லங்காதீப என்ற சிங்கள பத்திரிகையில் அவர் பற்றிய சோகக் கதையைப் பிரசுரித்தேன். அதற்கடுத்த வாரம் அந்த பெண் மீன் வியாபாரி ஆட்டோ வண்டியில் மீன் வியாரம் செய்ய வந்தார். எனக்கும் அவரைக் கண்டதும் தூக்கி வாரிப்போட்டது. அவரும் தான் வந்த வண்டியை நிறுத்திவிட்டு ஓடோடி வந்து தனது கைகளை கூப்பி எனக்கு நன்றி கூறினார். நான் ஏன் எனக் கேட்க அவர் சொன்ன பதில் என்னை மெய்ச்சிலிர்க்கச் செய்தது.

"நோனா நீங்கள் எனது சோகக் கதையை பத்திரிகையில் பிரசுரித்தீர்களல்லவா? உடனே எங்கள் குடும்ப உறவினர் ஒருவர் தள்ளு வண்டியைவிட்டு இதில் போய் வியாபாரம் செய்யுமாறு இந்த ஆட்டோவைத் தந்தார். அவ்வாறே தொண்டர் நிறுவனம் ஒன்றும் வந்து எங்களுக்கு உதவ முன்வந்துள்ளது. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும் நோனா" என்றார். எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த இந்த வெற்றி குறித்து மனம் குளிர்ந்தது.

இவ்வாறு பல சம்பவங்கள் உண்டு. மனித உணர்வுகளை மதித்து அவலங்களை போக்குவதற்காக நாம் எம் பேனாiவை பயன்படுத்துவது ஒரு நற்கிரிகையாகவே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தாரக மந்திரத்தை உள்வாங்கியவளாகவே நான் எனது பேனாவைப் பயன்படுத்துகிறேன். அதனால் நான் மனத்திருப்தியுமடைகிறேன்.


"மின்னும் தாரகைகள்" நூலின் உள்ளடக்கம் பற்றி குறிப்பிட முடியுமா?

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி சிறிய சிறிய பதிவுகள் வந்த போதிலும் இதுவரை காலமும் பரந்த அளவில் ஆராயப்படவில்லை என்பதை எனது நூலுக்கு அணிந்துரை தந்த பேராசிரியர் அனஸ் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் யார்? அவர்கள் எழுதி வெளியிட்ட நூல்கள் எவை? போன்ற விபரங்கள் யாராலும்; பரந்த அளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடைபெறும் வேளைகளில் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. ஆனால் அந்த மாநாடுகள்  முடிவடைந்ததும் அதைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அதனை ஆராயத் துணியவுமில்லை.

2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சமர்ப்பிப்பதற்;காக "இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினேன். இந்த ஆய்வுக்காக தகவல்களைத் திரட்டும் போதுதான் "இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்" பற்றிய ஆய்வு நூல் ஒன்றையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் துளிர்விட்டது.

சுமார் பதினொரு வருட கால எனது இந்த நீண்ட நாள் கனவை நனவாக்க கடந்த பல மாதங்களாகப் பாடுபட்டேன். இப்போதுதான் அக்கனவு நனவாகிறது. நான் இந்த ஆய்வு நூலை எழுத எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தவர் எனது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய சகோதரியான மலையக இலக்கிய படைப்பாளி நயீமா சித்தீக் அவர்கள்தான். எனவே அன்னாரையும் இங்கு நன்றியுடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய எனது ஆய்வு நூலான "மின்னும் தாரகைகள்" நூல் மூன்று அத்தியாயங்களை கொண்டதாக 460 பக்கங்களுடன் கூடிய ஒரு காத்திரமான நூலாக வெளிவருகிறது. "நூல்களை தந்த நூலாசிரியர் இவர்கள்..", "புத்தகம் வெளியிடாவிட்டாலும் இலக்கியத்தில் வித்தகம் புரிந்த பெண்மணிகள்.." மற்றும் "பேனா வாகனமேறி வானொலியில் வலம் வந்த வனிதையர்" போன்ற தலைப்புகளில்தான் இந்த மூன்று அத்தியாயங்களும் இடம்பெறுகின்றன. இந்த மூன்று அத்தியாயங்களிலிலும் சுமார் 140 பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆராய்ந்துள்ளேன். கோடிட்டுக் காட்டக்கூடிய பல தகவல்களையும் ''மின்னும் தாரகைகளிலிருந்து சிதறிய ஒளிக்கீற்றுக்கள்'' என்ற தலைப்பில் அவற்றைச் சுருக்கமாக  சுட்டிக் காட்டியுள்ளேன்.

அதுமாத்திரமல்ல இந்த ஆய்வு நூலுக்குப் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் சிறப்பான ஆழமான ஒரு அணிந்துரையையும் இந்தியப் பேராசிரியர் சேமுமு. முகம்மதலி அவர்கள் மன நிறைவான மதிப்புரையையும் தந்துள்ளனர்.

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் தனது அணிந்துரையில் ஷஷபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷமின்னும் தாரகை| என்ற ஆய்வு நூல் நம் கைகளுக்குக் கிடைத்துள்ளது. ஆவணப்படுத்தல் மதிப்பீடு செய்தல் என்பவற்றிற்கு மூலாதார எழுத்து வடிவம் ஒன்று தேவை. நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் 'மின்னும் தாரகை' அவ்வாறான ஒரு தேவையை நிறைவேற்றுகிறது.

இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான தரவுகளைத் தருவதற்கு நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எடுத்த நீண்டகால முயற்சியின் இலக்கிய அறுவடையாக இந்த 'மின்னும் தாரகையை' தயக்கமின்றிக் குறிப்பிட முடியும்.

இலங்கையில் எழுத்துத் துறையில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்புக்களின் வரலாறு மற்றும் தனி நபர் ரீதியில் ஒவ்வொருவரினதும் இலக்கிய வெளியீடுகள் இலக்கிய முயற்சிகள் பற்றி அறிவதற்கு ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இருந்த ஆவலை நூருல் அயினின் "மின்னும் தாரகை" ஆய்வு நூல் ஓரளவாவது நிறைவு செய்கிறது. ஒரு பெண்ணின் முயற்சியாக இப்பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒரு நிகழ்வாகும்" எனக் குறிப்பிடுகிறார்.

தென் கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித்துறைப் பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்கள் இந்நூலைப் பற்றிக் குறிப்பிடுகையில் இந்நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு உசாத்துணை நூலாகத் திகழும் என்றும் ஒவ்வொரு வீடுகளில் இருக்க வேண்டிய புத்தகம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியப் பேராசிரியர் சே.மு.மு. முகம்மதலி அவர்கள் தந்த மதிப்புரையில் எனது இந்த ஆய்வு நூல் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு செம்மைமிகு வகையில் முழுமையாக இன்னமும் ஆவணப்படுத்தப்படாமை நெஞ்சில் ஒரு முள்ளாகவே வலி தந்து கொண்டிருக்கிறது. எண்ணிலடங்காப் படைப்பாளர்கள் பவனி வரும் இலங்கைத் தீவினில் ஆய்வு கொண்டெழுதப் பல்கலைக்கழக வசதிகள் இருந்தும் காலம் இன்னும் கனியாதது பெற்ற பேற்றினில் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் பெண்மணிகளின் பங்கினை எடுத்துரைக்கும 'மின்னும் தாரகைகள்' நூலைத் தந்ததன் மூலம் நூருல் அயின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளாரென்றே கூறவேண்டும்.

இலங்கையின் முதலாம் முஸ்லிம் பெண் பண்டிதர் எனும் பெருமை பெற்ற 86 வயது நிந்தவூர் மைமூனா ஜெயினுலாப்தீன் முதல் 18 வயது இளம் படைப்பாளி ருஸ்தா பின்த் ஜவ்ரியா முடிய 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண் எழுத்தாளர்களைக் குறித்த தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்துள்ள இந்த ஆய்வு நூல், நூலாசிரியரின் பெரும் முயற்சிக்கும் உழைப்புக்கும் அச்சாரமாக அமைந்துள்ளதோடு இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு பொன்னேடாகவும் சிறந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும்மொழிகளிலும் படைப்பாற்றல் பெற்றிருந்த முஸ்லிம் பெண்மணிகளை - சிறுகதை, கவிதை, புதினம், கட்டுரை எனப் பல்வேறு தளங்களிலும் சுவடுகள் பொறித்துள்ள முஸ்லிம் பெண்மணிகளை - நூலாசிரியர் தக்க வகையில் தமிழ்கூறு நல்லுலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளார். நூலக அளவில் காரோட்டாமல் களம் சென்று நேர்காணல் கண்டு உணர்வு ஏர் உழுது சாதனைப் பெண்மணிகள் தம்மை வெளிக் கொணர்ந்திருக்கும் நூலாசிரியரின் திறன் போற்றுதற்குரியதாகும்."
இவ்வாறு தொடர்கிறது இந்தியப் பேராசிரியர் சேமுமு. முகம்மதலி அவர்களது மதிப்புரை.  இத்தகைய பெருந்தகைகளின் ஆசி உரைகள் கிடைத்தமை எனதிந்த ஆய்வு நூலுக்குக் கிடைத்த பெரும் பரிசாக கருதுகிறேன். இவ்வாறு இன்னும் பல சிறப்பம்சங்களும் நூலில் உண்டு.


பண்பாடும் பெண் (1997) என்ற நூல் வெளிவந்து சுமார் 21 வருடங்கள் கழிந்தே "மின்னும் தாரகைகள்" (2018) எனும் நூல் வெளிவருகிறது. இவ்வளவு கால இடைவெளியை ஒரு நூல் வெளியீட்டுக்கு எழுத்துக் கொண்டதற்கான விசேட காரணங்கள் ஏதும் உண்டா? 

நான் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தகவல் அதிகாரியாக கடமை புரிந்த கால கட்டத்தில் தமிழ்மொழி மூல அதிகாரிகள் ஒரு சிலரே அங்கு கடமையாற்றினோம். மும்மொழிகளிலும் சேவையாற்றும் ஆற்றல் இருந்ததால் எமது அன்றாட கடமைகளுக்கு மேலதிகமான வேலைகள் பலவற்றைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதுண்டு. எனவே அலுவலகம் சென்றால் அங்குள்ள வேலைகளைச் செய்யவே நேரம் பற்றாக்குறை. வீட்டுக்கு வந்தால் வீட்டு வேலைகள், குடும்பப் பொறுப்புக்கள் என்றே காலம் கடந்தன. ஓய்வாக இருந்து எமது தனிப்பட்ட வேலைகளைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. வாரத்தில் இரு நாள் விடுமுறையில் இரண்டாயிரம் கடமைகளைச் செய்ய வேண்டிய நிலை. இதுவே எனது நூலாக்க தாமதங்களுக்குக் காரணம்.

அண்மையில் நான் எனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்துதான் தேங்கிக் கிடந்த எனது இலக்கிய முயற்சிகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் தான் வீடு முழுவதிலும் நிரம்பிக் கிடந்த எனது கணவர் நஜ்முல் ஹுசைனின் கவிதைகளையெல்லாம் திரட்டி "நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்" என்ற ஒரு தொகுப்பை கடந்த ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி வெளியிட்டேன். அத்தோடு நான் வானொலியில் பாடிய மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த எனது கவிதைகளை "பூஞ்செண்டு" என்ற பெயரில் தொகுத்துள்ளேன். அந்த வேலைகள் முடிந்த உடன் தான் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய எனது இந்த ஆய்வு நூலான "மின்னும் தாரகைகள்" நூலை எழுத ஆரம்பித்தேன். சுமார் ஒரு வருட கால முயற்சிதான் இந்த ஆய்வு நூல். எனவே தேக்க நிலையில் இருந்த எனது இலக்கிய படையல்களை தற்சமயம் ஊக்கத்துடன் வெளியிடக் கிடைத்தமை குறித்து உள்ளம் பூரிப்படைகிறேன்.


"மின்னும் தாரகைகள்" நூலின் நூலின் வெளியீடு பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது ஒரு வருட கால  அயராத முயற்சியினால் உருவான எனதிந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி (2018.11.11) கொழும்பு ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள அல் ஹிதாயா கல்லூரி பஹார்தீன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மலையக முன்னணி எழுத்தாளரான கலாபூஷணம் நயீமா சித்தீக் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகவும் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பௌஸி விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மூஷான் இன்டர்நெஷனல் தலைவரான அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹுத்தீன் எனது ஷஷமின்னும் தாரகை|| நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவிருக்கிறார்.  சிறப்பதிதிகள் ஊடக அதிதிகள் மற்றும் பிரமுகர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அத்தோடு  முக்கியமாக ஒரு விடயத்தைக் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த விழாவின் கதாநாயகி நான் மட்டுமல்ல இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள "மின்னும் தாரகை" களாக என்னால் வர்ணிக்கப்பட்ட அனைத்து எழுத்தாளர்களும் கதாநாயகிகள்தான். எனவே அவர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என் வேணவா! அதனால் "மின்னும் தாரகை"களான எல்லாப் பெண் எழுத்தாளர்களும் இவ்வெளியீட்டு விழாவில் கட்டாயமாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என நான் அவர்களை வினயமாய் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு எனது அபிமான அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள்  அனைவரும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.


சிங்கள மொழியில் நீங்கள் செய்த இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தமிழில் ஒரு சஞ்சிகை வெளியிடப்படவுள்ளதாகவும் அதற்காக தமிழ் உத்தியோகத்தர் தேவை என்ற விளம்பரம் ஒன்றை அடுத்தே நான் தகவல் திணைக்களத்துக்குக் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் விளம்பரத்தில் இருந்த படி தமிழ் சஞ்சிகை வெளியிடும் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் இடம்பெற்றன. அப்போது தான் அந்த திணைக்களத்திலிருந்து சுமார் 35 வருடங்களாக தொடர்ச்சியாக வெளிவரும் "தெசதிய" என்ற சஞ்சிகையின் ஆசிரியரான காலஞ்சென்ற வின்சன்ட் பெரியப்பெரும அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. என்னைக் கண்ட உடனேயே அவர் "உங்களுக்கு சிங்கள மொழி தெரியும் தானே? எங்கள் சஞ்சிகைக்கும் உதவலாமே?" என்று என்னை முதன்முதலாகத் தட்டிக்கொடுத்தார். அவர் தந்த உற்சாகத்தினால்தான் சிங்களத்தில் ஆக்கங்கள் படைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டேன். ஆக்கங்களை எழுதிக் கொடுத்துவிட்டதுடன் எனது கடமை முடிந்துவிட்டதாக நான் கருதுவதில்லை. நான் எழுதிய சிங்களப பிரதியை எவ்வாறு எடிட் பண்ணியுள்ளார்கள்? அதில் நான் எங்கு பிழை விட்டுள்ளேன்? என்றெல்லாம் ஆராய்வேன். ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளை - சஞ்சிகைகளை  வாசிக்கும் போது  அதில் எனக்குத் தெரியாத சிங்கள சொற்கள் இருந்தால் அதுபற்றி இவர்களிடம் கேட்டு விளக்கங்களை பெற்றுக்கொள்வேன். இவ்வாறுதான் நான் எனது சிங்கள மொழித் திறனை வளர்த்துக்கொண்டேன்.

இச்சந்தர்ப்பத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தினால் அரச அதிகாரிகளுக்கான சிங்கள உயர் கல்வி பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பாடநெறியை மேற்கொள்வதற்கும் திணைக்கள அதிகாரிகள் எனக்கு அலுவலக விடுமுறை தந்தார்கள். இச்சலுகைகளை முறையாக பயன்படுத்தி சிறந்த முறையில் பரீட்சை எழுதினேன். அந்தக் கால கட்டத்தில் பரீட்சை எழுதிய திணைக்களத்தின் ஏனைய உத்தியோகத்தர்களை விட நான்தான் அதிக புள்ளிகளைப்பெற்று சிறந்த முறையில் சித்தியடைந்தேன். எனது இந்த பெறுபேறுகளைக் கண்ட திணைக்களத்தின் நிருவாக அதிகாரி கூட "இனி சிங்கள இலக்கணங்களைப் பற்றி ஹுசைன் மிஸ்ஸிடம் தான் நீங்கள் கேட்டுப் படிக்க வேண்டி வரும்" என்று கூறி சக சிங்கள உத்தியோகத்தர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகக் கூறினார்.

இவ்வாறு சிங்கள இலக்கணத்தையும் நன்கு புரிந்து கொண்டதால் சிங்களத்தில் ஆக்கங்களை எழுதுவது எனக்கு மேலும் இலகுவானது. ஷஷதெசதிய|| சஞ்சிகையின் ஆசிரியர் வின்சன்ட் பெரியப்பெரும அவர்கள்  எனக்கு ஒவ்வொரு தலைப்பில் எழுதுமாறு பணிப்பார். நானும் மிகவும் விருப்பத்துடன் எழுதுவேன். மாதா மாதம் வெளிவரும் "தெசதிய" சஞ்சிகையில் எனது கட்டுரைகளும் வெளிவரும். அத்தோடு அச்சஞ்சிகையின் சிரேஷ்ட சிறப்புக் கட்டுரையாளர்களின் பெயர்ப் பட்டியலிலும் எனது பெயரையும் குறிப்பிட்டு  என்னை கௌரவப்படுத்தினார்.

சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சில சொற்களிடையே நிலவும் ஒற்றுமைகள் குறித்து (உதாரணமாக படிக்கம - படிக்கம், இலக்கம - இலக்கம், இடியப்ப - இடியப்பம்) ஆராய்ந்து ஒரு புத்தகம் வெளியிடுவோம் என்று என்னை சதா ஊக்கப்படுத்திய "தெசதிய" சஞ்சிகை ஆசிரியர் வின்சன்ட் பெரியப்பெரும திடீரென காலமானார். அதனால் அந்த முயற்சி கைக்கூடவில்லை. அவரின் மறைவையடுத்து வசந்தப்பிரிய ராமநாயக்க அவர்கள் ஷஷதெசதிய|| சஞ்சிகையின் ஆசிரியரானார். ஏற்கனவே என்னை நன்கு தெரிந்து வைத்திருந்த அவரும் எனக்கு அச்சஞ்சிகையில் நிறையவே எழுதுவதற்குச் சந்தர்ப்பம் தந்தார்.

தீவிரவாதம் தலைவிரித்தாடிய கால கட்டத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்கல் திட்டம் குறித்து இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் கட்சி தலைவர்களினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து அரசியல் பேட்டித்தொடர் ஒன்றை செய்யுமாறு "தெசதிய" சஞ்சிகையின் ஆசிரியரான வசந்தப்பிரிய ராமநாயக்க என்னைப் பணித்தார். அதற்கிணங்க டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், டீ. சந்திரசேகரன், பீ.பீ. தேவராஜ், இரா சம்பந்தன். சுரேஸ் பிரேமசந்திரன், ஈரோஸ் தலைவரான சங்கர் ராஜ் போன்றோரை நான் பல்வேறு அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பேட்டி கண்டு சிங்கள சஞ்சிகையில் பிரசுரித்துள்ளேன். அன்றைய யாழ் மேயராக இருந்த பொன்னுத்துரை சிவபாலன் குண்டுவெடிப்புக்கு இலக்காகுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவரை கடைசியாக பேட்டி கண்டது நான்தான்;. எமது சிங்கள சஞ்சிகையில் அவரது பேட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்.

அது மட்டுமல்ல. ஈரோஸ் தலைவரான சங்கர் ராஜை நான் இச்சஞ்சிகைக்கான பேட்டி கண்டுக்கொண்டிருந்த வேளைதான் கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. நாம் இருந்த அந்த அலுவலக சுவர்களில் கூட அதிர்வு ஏற்பட்டது. இதைக் கண்ணுற்ற எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரும் என்னை வாகனத்தில் அழைத்து வந்த வாகன சாரதியும் "{ஐயோ மிஸ்!.. இப்படியான இடங்களுக்கு எம்மை அழைத்து வர வேண்டாம். எங்களுக்குப் பிள்ளை குட்டிகள் உண்டு. நாங்கள் காப்புறுதி செய்துமில்லை. எனவே எங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் எங்கள் பிள்ளைகள் அனாதையாகி விடுவர்" என அங்கலாய்த்தார்கள். இவ்வாறான பயங்கர அனுபவங்களை எனது ஊடகப் பணியிலே எதிர்கொண்டுள்ளேன். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரான பிராகரனைத்தவிர ஏனைய தமிழ் கட்சித் தலைவர்கள் அனைவரையும் நான் இச்சஞ்சிகைக்காக பேட்டி கண்டுள்ளேன்.


ஏன் பிரபாகரனையும் சந்தித்திருக்கலாமே?

ஆமாம் பிரபாகரனையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பீ.பீ.சீ. வானொலியின் தமிழ் சேவையில் கடமையாற்றிய ஆனந்தி சூரியகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் தங்கியிருக்கும் பங்கருக்குச் சென்று பேட்டி காண விருப்பதாகக் கூறி அதற்கான அனுமதியைப் பெற எமது திணைக்களத்துக்கு வந்தார். அச்சமயம் தான் "தங்கச்சி என்னோடு வாரும்" என்று என்னையும் கூட வருமாறு அழைத்தார். ஆனால் எனது கணவர்தான் அதற்குச் சம்மதிக்கவில்லை. இல்லையேல் அவரையும் பேட்டி கண்டிருப்பேன்.

இவ்வாறு கடும் போராட்டங்களுக்கும் பீதிகளுக்கும் மத்தியில் நான் எழுதிய அந்த அரசியல் பேட்டித்தொடருக்காக அரச கரும மொழித் திணைக்களம் "இன ஐக்கியத்துக்கான ஊடக பங்களிப்பு" என்ற மகுடத்தில் எனக்கு சான்றிதழும் பொற்கிழியும் வழங்கி கௌரவித்தது. இவை தவிர, எமது திணக்களத்தின் வாராந்த வெளியீடான 'தொரத்துரு' என்ற பத்திரிகைக்கும் மற்றும் 'பொதுஜன' என்ற பத்திரிகைக்கும் நான் நிறையப் பங்களிப்புக்களைச் செய்துள்ளேன்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer) பதவி உயர்வு பெற்ற நான் கொழும்பு மாவட்ட செயலக தகவல் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாகவும் சுமார் பத்தாண்டு காலம் கடமை புரிந்;தேன். இக்காலப் பகுதியில் (2007 ஆம் ஆண்டு முதல்) 'கொழம்ப புவத்' (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரில் சிங்கள மொழி மூல காலாண்டு பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டேன். கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கலை, கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வெளிவந்த இப்பத்திரிகை; உயர் அதிகாரிகளினால் மட்டுமன்றி அன்றைய பொது நிர்வாக அமைச்சரின்  பாராட்டையும் பெற்றது.

சிங்கள மொழிபெயர்ப்பாளர் பரீட்சையிலும் சித்தியடைந்த எனக்கு அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மொழிபெயர்ப்பாளராகவும் நியமனம் கிடைத்தது. நான் உடுவை தில்லை நடராஜாவின் கடற்கன்னி, மந்திரக்கண்ணாடி, பேசும் பேனா ஆகிய மூன்று சிறுவர் நூல்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளேன். அத்தோடு எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் சிங்களத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். அது மாத்திரமன்றி அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள எனது "மின்னும் தாரகைகள்" என்ற ஆய்வு நூலையும் "திலென தரு" என்ற அதே பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் உத்தேசம் உண்டு. காலம் கனிந்தால் பார்ப்போம்.


உங்கள் நினைவுகளில் இடம்பிடித்து இன்னும் மறக்க முடியாத ஏதாவது சம்பவம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது ஊடகத்துறை, எழுத்துத்துறை வாழ்வில் மறக்க முடியாத நிறைய சம்பவங்கள் உண்டு. நான் ஏற்கனவே குறிப்பிட்ட மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவம் எனது ஊடக வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அவ்வாறே கடந்த ஆண்டு நான் இந்தியா சென்றிருந்த வேளை கவிக்கோ அப்துர் ரகுமான் அவர்களை பனையூரிலுள்ள அன்னாரின் இல்லத்துக்கே போய்ச் சந்தித்து உரையாடிய இந்த இனிய காலைப்பொழுதும் என் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நினைவுதான். அவ்வாறே டென்மார்க் சிவமீரா அறக்கட்டளை நிறுவனமும் தமிழ்நாடு வளரி சஞ்சிகையும் இணைந்து நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் நான் எழுதிய ஷஷமலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப்போது?|| என்ற என் கவிதைக்கு முதலாம் இடம் கிடைத்தமையும் அதற்காகக் கிடைத்த சிவமீரா ஞாபகர்த்த விருதும் பொற்கிழியும் எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வேயாகும்.


வானொலி, தொலைக்காட்சிகளிலும் நீங்கள் இலக்கியப் பங்களிப்புக்கள் செய்ததுண்டா?

வானொலியில் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளேன். சுமார் 17 வருட காலங்களாக முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் என்ற நிகழ்ச்சிக்கு பிரதித் தயாரிப்பாளராக இருந்துள்ளேன். பெருநாள் தின விசேட கவியரங்குகளில் மூத்த கவிஞர்கள் தலைமையில் கவிபாடியுள்ளேன். அன்றைய காலகட்டத்தில் அதிகாலை வேளை ஒலிபரப்பாகும் இஸ்லாமிய நற்சிந்தனை நிகழ்ச்சிகளிலும் எமக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளன. தமிழ் சேவையில் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சிக்கும் நிறைய ஆக்கங்கள் எழுதியுள்ளேன். அவ்வாறே தொலைக்காட்சியில் அவ்வப்போது நேர்காணல்கள் பலவற்றிலும் கலந்தரையாடல்களிலும் கலந்துக்கொண்டுள்ளேன். நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான கவியரங்குகளிலும் பங்குபற்றியுள்ளேன். அவுஸ்திரேலிய தமிழ் வானொலியின் வளர்பிறை நிகழ்ச்சியிலும் எனது கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.


'தற்போது கிடைக்கும் இலக்கிய விருதுகள் பொருத்தமானவர்களுக்குத் தான் கிடைக்கிறது' என்று கருத முடியுமா?

பொருத்தமற்றவர்களுக்கு கிடைப்பது தான் பிரச்சினை. அதுபற்றி காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இன்று இலக்கியவாதிகளுக்கான பட்டங்கள் விருதுகள் என்பன ஒரு சில அமைப்புகளினால் மலினப்படுத்தப்பட்டுவிட்டன. எனவே முகநூலில் ஓரிரு கவிதை எழுதியவர்களுக்கெல்லாம் பெரும் கவி பட்டங்கள். சில விழாக்களில் பார்வையாளர்களை விட விருது பெற்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுவதாக சபையோர் சிலர் அங்கலாய்த்த சந்தர்ப்;பங்;களும் உண்டு. இதுமட்டுமல்ல அரச மட்டத்தில் வழங்கப்படும் ஒரு சில உயர் பட்டங்களைக் கூட சில அமைப்புகள் வழங்கி அந்த பட்டங்களை கொச்சைப்படுத்துகின்றன. இவற்றை அரசாங்க அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் வியப்பைத் தருகிறது. இதுபற்றி வேறென்ன சொல்வது?


எழுத்துத் துறையில் உங்களது குடும்பத்தவர்களது ஊக்குவிப்புப் பற்றியும் அதிலும் விசேடமாக உங்களுடைய கணவரின் ஊக்குவிப்புப் பற்றியும் குறிப்பிடுங்கள்?

அன்றைய காலங்களில் எனது ஆக்கங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தால் அதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தப் பத்திரிகையை வாங்க என்னுயிர் தந்தை கடை கடையாக அலைவார். எனது பிறந்த ஊர் உடுதெனிய என்ற ஒரு கிராமமாகும். அங்கே ஓரிரு கடைகளில் மட்டுமே தமிழ் பத்திரிகைகள் கிடைக்கும். எனவே அந்தக் கடைகளைத் தேடிச்சென்று பத்திரிகை வாங்கி வருவார். முதலில் என் தந்தையே அதனை வாசித்து விடுவார்;. பின்னர் என் தாயாருக்கு அதை வாசித்துக் காட்டுமாறு கேட்பார். அப்போதெல்லாம் நான் என் தந்தையின் பெயரை முன்னிறுத்தி ரஷீத் நூருல் அயின் என்று தான் எழுதுவேன். எனது தந்தை சகலரையும் பகிடி பண்ணி சிரிக்க வைப்பதில் வல்லவர். எனது தாயாரைப் பார்த்து, "இதோ என்னுடைய பெயர் தான் மகளுடைய பெயருடன் வந்திருக்கிறது. உங்களுடையதல்லவே?" என்று கூறி தாயாரைச் சீண்டி விட்டுச் சிரிப்பார்கள். அந்த நினைவுகள் என்னுள்ளத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. எனது முன்னேற்றத்தின் முதற்படியே என்னுயிர் பெற்றோர்கள்தான்.

அதையடுத்து எனதன்புச்சோதர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்தான் என் எழுத்துலக வழிகாட்டி என்பேன். என்னை முதன்முதலாக தினபதி - சிந்தாமணி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதே இந்தத் தம்பி தான். எனவே எனது எழுத்துலக வளர்ச்சியில் பெற்றோரையடுத்து இந்த தம்பிக்கு பெரும் பங்குண்டு. அவ்வாறே காலஞ்சென்ற என்னுயிர் தம்பி மௌலவி ரஷீத் எம். ராஸிக் அவர்களும் எனது ஆக்கங்களை விரும்பிப் படிப்பவர். பத்திரிகையில் ஏதும் ஆக்கங்கள் பிரசுரமானால் குடும்பத்தினர் அனைவருக்கும் அதுபற்றி தகவல் கொடுத்து மகிழ்பவர் அவர்தான். ஏனைய எனது உடன் பிறப்புக்களும் எனது இலக்கிய வளர்ச்சியில் இன்பம் காண்பவர்கள்தான்.  அவ்வாறே வானொலியில் முதன்முதலாக நேரில் பங்கு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர் எனதன்பு மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம். சுபைர் மாமா மற்றும் மௌலவியா மலீஹா சுபைர் மாமி ஆகியோராவர். கொழும்பில் நான் தொழில் புரிவதற்காக தங்குமிடவசதி தந்து நான் இவ்வளவு தூரம் பயணிக்க வழி சமைத்ததே அவர்கள் தந்த ஒத்துழைப்புத்தான். எனவே அவர்களை இங்கு நான் நன்றியுடன் நினைவுபடுத்துகிறேன்.

அத்தோடு நான் தொழில் நிமித்தம் கொழும்புக்கு வருமுன்னர் 1979 ஆம் ஆண்டளவில் "ஐன் கல்வி வட்டம்" என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தேன். இந்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவ மணிகளுக்கு வானொலி முஸ்லிம் சேவையில் ஷஷபிஞ்சு மனம்|| என்ற சிறுவர் நிகழ்ச்சியில் அன்றைய நிகழ்ச்சி தயாரிப்பாளரும் முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளருமான அல்ஹாஜ். எம்.இஸட். அஹமட் முனவ்வர் அவர்கள் சந்தர்ப்பம் தந்தார். அந்த அரிய சந்தர்ப்பத்தை என்னால் என்றும் மறக்கவே முடியாது. கிராமபுற சிறுவர் சிறுமிகளுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை அன்றைய காலகட்டத்தில் ஊரிலேயே பெரும் மகிழ்ச்சிப் பிரவாகமாக இருந்தது. எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கி சகோதரர் அஹமட் முனவ்வர் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமணம் பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு கை விலங்கு போட்டது என்கிறார்கள். ஒருசில பெண் எழுத்தாளர்களை பொறுத்தவரை அது நிதர்சனமான உண்மைதான்.  ஆனால் என்னைப் பொருத்தவரை திருமணம் எனக்கு பூவிலங்கு போட்டது என்பேன்;.  திருமணத்தையடுத்து எனது முன்னேற்றத்தின் முதுகெலும்பே என் கணவர்தான். எனது இல்லறத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலும் எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது வாழ்க்கை துணைவரின் துணையை எண்ணி மகிழ்கிறேன். ஒரு ஆணின் வெற்றியின் பின்னால் பெண் இருக்கிறாள் என்பார்கள். அதுபோலவே எனது வெற்றியின் பின்னால் எனது கணவரும் இருக்கிறார் என்பதில் நான் பேருவகையடைகிறேன். அவரில்லாமல் நானில்லை. எனவே எழுத்துத்துறை வளர்ச்சியிலும் ஊக்குவிப்பிலும் என்னுயிர் கணவரின் பங்களிப்பு அபரிமிதமானது.

எனது கணவர் தனது பெற்றோரைப் பற்றி எழுதிய கவிதையொன்றில் ஷஷநான் பறப்பதற்காய் அவர்கள் சிறகடிக்கிறார்கள்|| என்று குறிப்பிட்டிருந்தார். என் மனதைக் கவர்ந்த அதே கவி வரிகளை இன்று நான் பாடுகிறேன். ஷஷஇலக்கிய வானிலே நான் பறப்பதற்காய் அவர் சிறகடிக்கிறார்|| என்றே சொல்லத் தோன்றுகிறது. துறைசார் துணைவர் கணவராக வாய்க்கப் பெற்றமை குறித்து இறைவனுக்கு நன்றி பாராட்டுகிறேன்.


இதுவரை உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புக்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கிடைத்த விருதுகள் பட்டங்களை குறிப்பிட்டால் பட்டியல் நீண்டு விடும். சுருக்கமாக கூறுகிறேன்.

2006 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் கலாபூஷணம்  அரச விருது
2009 ஆம் ஆண்டு மகளிர் விவகார அமைச்சின் சர்வதேச மகளிர் தின கௌரவம் (இலங்கையின் அப்போதைய முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது)
அகில இன நல்லுறவு ஒன்றியத்தால் "இலக்கியத் தாரகை" - "தகவல் ஜோதி"
முஸ்லிம் கலைஞர் முன்னணியினால் "ஊடகத் தாரகை"
மலையக கலை கலாசாரப் பேரவையினால் இரத்தினதீபம் விருது
அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், படைப்பாளர் விருது
சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தினால்  மாக்கான் மாக்கார் விருது
மத்திய மாகாண கல்வி அமைச்சினால்  சிறந்த எழுத்தாளர் விருது
கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி தமிழ் தின விழாவின் போது கௌரவ விருது
டென்மார்க் சிவமீரா அறக்கட்டளை நிறுவனமும்  தமிழ்நாடு வளரி சஞ்சிகையும் இணைந்து நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் "மலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப்போது?" என்ற எனது கவிதைக்கு முதலாம் இடம் கிடைத்ததையிட்டு சிவமீரா ஞாபகர்த்த விருதும் பொற்கிழியும் கிடைத்தது.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னால் முடிந்த வரை முயன்று எனது படைப்புளை நூலாக்கம் செய்வதே எனது எதிர்கால நோக்கமாகும்.  பல்கலைக்கழக பத்திரிகைத்துறை டிப்ளோமா பாடநெறிக்காக நான்  சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான "எய்ட்ஸ் நோயும் பெண்களும்", உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக என்னால் எழுதப்பட்ட "இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு" ஆகிய எனது ஆய்வுக் கட்டுரைகள் இரண்டும் நூலுருப் பெற தயாரான நிலையில் உள்ளன. அவ்வாறே எனது கணவர் எழுதியுள்ள கவிதைகள் அனைத்தையும் கூட கணனி மயப்படுத்தி முடித்துவிட்டேன். இறைவன் நாடினால் அவற்றையும் நூலுருப்படுத்துவதுடன் என்னால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வரும் எனது கணவரின் கவிதை தொகுதி ஒன்றையும், "மின்னும் தாரகைகள்" என்ற  ஆய்வு நூலையும் சிங்கள மொழியில் வெளியிட வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன். காலம் கனிந்தால் பார்ப்போம்.


இளம் எழுத்தாளர்களுக்கு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் கூறும் ஆலோசனைகள் யாவை?

மூத்த எழுத்தாளர்களை மதிக்கும் பக்குவம் அவர்களுக்கு வர வேண்டும். அத்தோடு மூத்த படைப்பாளிகளின் எழுத்துக்களை படிக்க வேண்டும்இ நிறைய நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பை நேசிப்பதன் மூலமே இளம் எழுத்தாளர்கள் தமது ஆளுமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். இன்று நவீன தொழில் நுட்பம் இளசுகளை ஆட்கொண்டுவிட்டது. பால் குடிக்கும் குழந்தை கூட கையடக்க தொலைபேசியின் அலறலை அறிந்துகொள்கிறது. "உலகமே ஒரே கூரையின் கீழ்" என்பார்கள். எனவே எங்களது காலத்தைப்போல பத்திரிகைகளையோ புத்தகங்களையோ தேடித்தேடி அலையத் தேவையில்லை. தமது கையடக்க தொலைபேசியிலேயே இவை அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஓடும் பஸ்ஸிலும் சரி நடக்கும் பாதையிலும் சரி, வீட்டிலும் சரி இந்தக் கையடக்க தொலைபேசிகளை (ஸ்மார்ட் போன்களை) நவீன தொழில் நுட்ப  கருவிகளையும் இளசுகள் தேவையற்ற விடயங்களுக்கு பயன்படுத்தாமல் புத்தகங்களை வாசிப்பதற்கு பயன்படுத்தினால் நல்ல  புத்தி ஜீவிகளாக நாளைய சமூகத்தை கட்டியெழுப்பலாம். இளம் எழுத்தாளர்களுக்கு அடியேன் கூறும் அறிவுரை இது தான்.


இறுதியாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? 

அகில இலங்கை ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி சுமார் 140 முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது படைப்புகள், பங்களிப்புகள் பற்றியும் இந்நூலில் பதிவு செய்துள்ளேன். அதுமாத்திரமன்றி இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கடல் கடந்த நாடுகளில் வாழும் ஒரு சில பெண் எழுத்தாளர்களையும் இந்த ஆய்வில் உள்வாங்கியுள்ளேன். எனினும் எனது இந்த ஆய்வு நூலில் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியுள்ளேன் என்று எனக்கு உறுதியாக கூற முடியாது. ஒரு சிலர் விடுபட்டிருக்கலாம். இன்னும் சிலர் தமது தகவல்களை தருவதில் அசமந்தப் போக்கை கடைபிடித்தனர். இந்த நூலை அச்சகத்துக்கு ஒப்படைத்த பின்னர் கூட இரண்டு நூலாசிரியர்களின் தகவல் எனக்குக் கிடைத்தன. அவற்றை இந்த நூலில் சேர்த்துக்கொள்ள முடியாமற் போனதையிட்டு வருந்துகிறேன்.
எனினும் எனது சக்திக்கு ஏற்றவரை இந்த ஆய்வுகளின் மூலம் 140 முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை இனங் கண்டுள்ளேன். எந்த ஓர் ஊடக விளம்பரமுமின்றி மேற்கொண்ட எனதிந்த ஆய்வு நடவடிக்கை இவ்வளவு பெருவெற்றியை தந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அத்தோடு தகவல்கள் கிடைக்காத மேலும் பலரின் பெயர் பட்டியலையும் இணைத்துள்ளேன். எனினும் இந்த நூலில் விடுபட்டுள்ள ஏனைய பெண் எழுத்தாளர்கள் தத்தமது தகவல்களை தாமதியாது எனக்குத் தந்துதவினால் இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த பதிப்பிலாவது அவற்றை சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா? எனவே இத்தகையோர் தயவு செய்து என்னோடு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக இதனைத்தான் நான் கூற விரும்பினேன்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

47. பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.11.04

பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப் பிடமாகக் கொண்ட நான் குடும்பத்தின் மூத்த மகள். எனது தந்தை சு.சி. கதிர்வேலு அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றியவர். மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் கூடப் பிறந்தவர்கள். தொழில் ரீதியாக நான் ஓர் ஆங்கில ஆசிரியை. கல்வித் துறையில் முப்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளேன். தற்போது வெள்ளவத்தை சாந்த. கிளேயர் கல்லூரியில் பிரதி அதிபராகக்க கடமையாற்றி வருகிறேன். நான், கணவன், மகள் என்ற மூவர் அடங்கிய சிறிய குடும்பம் என்னுடையது. எனது கணவர் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர். எனது மகள் விஞ்ஞானப் பட்டதாரி. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.


உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

1995 இல் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற காலத்தில் அக்கல்லூரியின் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதன்முதல் பங்கேற்றேன். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்ற அப்போட்டியில் (1995 இல்) எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவ்வாறுதான் எனது எழுத்துலக பிரவேசம் நிகழ்ந்தது.


சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பரிசுக் கதைக்குப்  பின்னர் பன்னிரெண்டு வருடங்கள் நான் எழுதவே இல்லை. நம்புங்கள். இதன்பின்னர் வீரகேசரி பவள விழா விளம்பரம் பார்த்து எழுதினேன். நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அப்போட்டியில் எனது கதை தெரிவு செய்யப்பட்டது. பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் என் கதைகளுக்கு பரிசில்கள் கிடைத்ததால் என் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் இருப்பதாய் உணர்ந்தேன். இதுவே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவலை என்னுள் விதைத்தது.


இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

சிறுகதைத் துறையில் மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய், நிஜங்களின் தரிசனம் எனும் மூன்று சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். மரம் வைத்தவன் எனும் என் முதல் நூலுக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது.


உங்கள் சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. யதார்த்தம் படைப்பாகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என எண்ணுகின்றீர்களா?

நிச்சயமாக. யதார்த்தம் இல்லாத எந்த இலக்கியமுமே முழுமை அடைவதில்லை. சிறுகதைகளின் பண்புகளில் ஒன்று, தான் சார்ந்த சமூகத்தை அது பிரதிபலிப்பது தான். நான் பார்த்த, கேள்வியுற்ற, என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதித்த சம்பவத்தை கதை வடிவில் வெளிக்கொணர்கிறேன். நாம் அங்கம் வகிக்கும் சமூகத்தை இவை பிரதிபலிப்பதால் இவ்வாறான கதைகளையே வாசகர்களும் விரும்புகிறார்கள்.

நீங்கள் எழுதி வெளியிட்ட சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கதைகள் எது? ஏன்?

நான் எழுதியவை எல்லாமே எனக்கு பிடித்தவைதான். குறிப்பாக இலவு காக்கும் கிளிகள், புதை மணலா நீ டானியலா?, வெளிச்ச வீடு, விலகும் மழை மேகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

"இலவு காக்கும் கிளிகள்" ஒரு ஆபிரிக்க போராளியைப் பற்றியும் அவனைச் சூழ்ந்துள்ள அவலத்தைப் பற்றியும் பேசுகிறது. கதை இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஊர்கள், பெயர்கள் போன்றவற்றை இன்டர்நெட் ஊடே பெற்றேன்.

இதுபோல் "புதை மணலா நீ டானியலா?" ஒரு நாட்டில் நடந்த கதையை ஐரோப்பிய நாடொன்றில் நடப்பதாய் எழுதுவது போல சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. இதில் நான் வெற்றி கண்டிருப்பதாய் நினைக்கிறேன்.

ஊருக்கெல்லாம் வெளிச்சம் கொடுத்து இன்று ஒளியிழந்து நிற்கும் வெளிச்ச வீட்டை ஒரு பெண்ணுக்கு ஒப்பிட்டு எழுதப்பட்ட கதை "வெளிச்ச வீடு" ஆகும். "விலகும் மழை மேகம்" ஒரு கூத்துக் கலைஞன் பற்றியது. ஒரு கலையை மையமாக வைத்து எழுதப்பட்டது. இதற்கு சரியான முறையில் பாடல் வரிகள் இடம் பெற வேண்டும் என்பதற்காக கூத்துக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்களைவிலைகொடுத்து வாங்க வேண்டி இருந்தது. நூலுருவில் இன்னும் வெளிவராத எனக்குப் பிடித்த கதைகள் இருக்கின்றன.

எனது சிறுகதைகள் பற்றிய பின்வரும் ஆய்வுகளும் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

* "பவானி சிவகுமாரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு"
   திருமதி. லதாமணி அருந்தவச் செல்வம்
   தமிழ் முதுகலைமாணித் தேர்வு (ஆ.யு)
   2011 யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

* "பவானி சிவகுமாரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு"
  செல்வி. சுதர்சினி நாகரட்ணம்
  தமிழ் சிறப்புக் கலைமாணி
  2014 சப்ரகமுவ பல்கலைக்கழகம்


உங்கள் படைப்புகளுக்குக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

நான் கதை எழுதி முடிந்தவுடனேயே என் ஆசிரியர் குழாமிடமிருந்து சுடச்சுட விமர்சனங்கள் கிடைத்துவிடும். உலகளாவிய ரீதியில் எனக்கு முதற் பரிசை ஈட்டித் தந்த "அற்ற குளத்துப் பறவைகள்" என்ற கதையைப் போட்டிக்கு அனுப்ப முன்பே அதை வாசித்த ஆசிரியர் ஒருவர் நிச்சயம் இதற்குப் பரிசுண்டு என்று சொன்னார்.

என் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட பேச்சாளர்கள், வெளிச்ச வீடு, இலவு காக்கும் கிளிகள், தேடலே வாழ்க்கையாய் போன்ற பல கதைகளை சிலாகித்துப் பேசினார்கள். என் கதைகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எல்லாம் உற்சாகமூட்டும் டொனிக் என்றுதான் சொல்ல வேண்டும்.



சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?

முதலில் நல்ல கரு அமைய வேண்டும். அதன் பின் அதனைச் சுற்றிப் பின்னப்படும் இசைவான சம்பவங்கள், சம்பவத்தின் துணையோடு அவற்றைக் கொண்டு செல்லும் ஆற்றொழுக்கமான நடை, பிரதேசப் பேச்சு, வழக்கிலமைந்த கதைக்கு வலுவூட்டும் உரையாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கதாசிரியரின் மொழியாட்சி. இவை யாவும் நல்லதொரு சிறுகதைக்கு அவசியம்.


உங்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?

* பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தமிழ்ச்சங்கம் சிறுகதைப் போட்டியில் "பார்வைகள்! மனிதர்கள்!" என்ற கதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. (1995)

* பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கப் பரிசுக் கதை  "கருணை இன்னும் சாகவில்லை" (2000)

* வீரகேசரி பவளவிழாப் போட்டி பரிசுக் கதை "உறவைத் தேடும் தீவுகள்" (2005)

* உலகளாவிய ரீதியில் பூபாள ராhகங்கள் நடாத்திய சிறுகதைப் போட்டி "அற்ற குளத்துப் பறவைகள்" என்ற கதைக்கு முதற் பரிசு கிடைத்தது. (2006)

* முதல் சிறுகதைத் தொகுதியான "மரம் வைத்தவன்" தொகுதிக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது. (2007)

* தகவம் சிறப்புப் பரிசு நாலாம் காலாண்டு "விலகும் மழை மேகம்" - தினக்குரல் (2007)

* அமரர் செம்பியன் செல்வன் ஞாபகர்த்தப் போட்டி பரிசுக் கதை "சீண்டச் சீண்டத் தொடரும்" (2007)

* பூபாள ராகங்கள் போட்டிப் பரிசு "மரணங்கள் நடுவே ஜனனம்" (2007)

* தகவம் சிறப்புப் பரிசு இரண்டாம் காலாண்டு "கனவுலகின் வெளியே" - தாயகம் (2008)

* பூபாளராகங்கள் பரிசுக் கதை "குடை பிடிக்கும் நினைவுகள்" (2008)

* கலாபூஷணம் புலோலியூர் சதாசிவம் ஞாபகர்த்தப் போட்டியில் "நம்மவர்கள்'' சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது. (2009)

* மேல் மாகாண சாகித்திய விருது (2010)

* தகவம் சிறப்புப் பரிசு - இரண்டாம் காலாண்டு "நிழல் கொஞ்சம் தா" - ஜீவநதி (2010)

* தகவம் சிறப்புப் பரிசு - மூன்றாம் காலாண்டு "மீண்டும் புதிதாய்ப் பிறப்போம்" - வீரகேசரி (2010)


எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறீர்கள்? ஏன்?

கையில் கிடைக்கும் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பது வழக்கம். இருந்தும் எனது துறை சிறுகதை என்பதால் சிறுகதைகளைத் தேடி வாசிப்பேன். பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை அதிகம் வாசிப்பேன். ஈழத்து எழுத்தாளர்களில் அன்னலட்சுமி ராஜதுரை தொடக்கம் தாமரைச் செல்வி, கோகிலா மகேந்திரன், தாட்சாயிணி என்பவர்களுடன் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை இப்பட்டியல் நீளும்.

தமிழ் நாட்டு எழுத்தாளர்களில் சிவசங்கரி, வாசந்தி, அனுராதா ரமணன் இவர்களுடைய கதைகளை அதிகம் வாசிப்பேன். பெண் எழுத்தாளர்களின் பார்வைகள், ஆண் எழுத்தாளர்களில் நின்றும் பல விடயங்களில்  வேறுபடுகின்றன. குறிப்பாக ஒரு குடும்பத்தில் நிகழும் சிறு சம்பவங்களைக் கருவாக்கி கதை சொல்வதில் இவர்கள் ஆண் எழுத்தாளர்களைவிட ஒரு படி மேல்.


வளர்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் என்று இவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. சிறு துணுக்குகளைக்கூட கதையாக்கி விடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இதற்கு இவர்கள் எழுதும் பல கதைகள் சாட்சி. ஒரு கட்டுக்குள்ளும் சிக்காமல் எழுதும் இவர்களை கரு, சம்பவம், மொழியாட்சி... என்று பயமுறுத்த விரும்பவில்லை. ஒன்று சொல்லலாம்.

இப்போதுதான் இன்டர்நெட் இருக்கிறதே. ஒன்றைப்பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அதனூடாகப் பெறலாம். இதிலிருந்து பல தரமான படைப்புக்களைத் தர முடியும். நூல் நிலையத்தில் புத்தகங்களை தேடிப் புரட்டும் சிக்கல்கள் இன்றில்லை. சிறிய வசனங்களில் கதையை நகர்த்துவது, கதைக்கு வேகத்தையும், சுவாரசியத்தையும் தரும். குறிப்பாக வாசகனுக்கு தலையிடியைத் தராது!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

46. ராஹிலா ஹலாம் உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.08.27

ராஹிலா ஹலாம் உடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது இயற்பெயர் திருமதி. ராஹிலா ஹலாம். நான் இணைய வானொலி அறிவிப்பாளினியாக தொழில் புரிகின்றேன். நான் பிறந்து வளர்ந்தது சென் செபஸ்தியன் வீதி, கொழும்பு – 12. தற்போது புதுக்கடையில் வசித்து வருகிறேன். எனது ஆரம்ப கல்வியை மிஹிந்து மாவத்தை முஸ்லிம் வித்தியாலயத்திலும் (தற்போதைய அல் ஹிக்மா கல்லூரி), எனது உயர் கல்வியை கொழும்பு அல் ஹிதாயாவிலும் கற்றேன். எனது கணவர் கணக்காளராக தொழில் புரிகின்றார். எனது மூத்த மகன் ரகீப் அல் ஹாதி, கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் (2017) தரம் மூன்றில் கல்வி கற்கின்றார். இளைய மகன் ரஷPத் அல் ஹாமி. அவருக்கு 03 வயது. எனது பெற்றோர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். எனக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர். அவர்கள் திருமணம் முடித்து வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.


02. நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது? உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வெளிவந்தது?

சரியாக சொல்வதென்றால் நான் தரம் எட்டில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும்போது மூன்று சிறுகதைகள் எழுதினேன். அவைதான் நான் எழுதிய முதலாவது ஆக்கங்கள். ஆனால் அவை எப்படியோ தொலைந்து விட்டன. அதேநேரம் அவற்றைப் பாதுகாப்பதற்கும் போதியளவு அறிவும் வழிக்காட்டுதலும் இருக்கவில்லை. பின்னர் 1997 ஆம் ஆண்டு 'பாவம் பாட்டி' என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதையை எனது தமிழ் மொழிப்பாட ஆசிரியை திருமதி. அன்வர்தீன் அவர்களின் தூண்டுதலின் பேரில் எழுதினேன். அதுதான் நான் எழுதிய முதற் கவிதை. அப்பொழுது அது ஞாயிறு வீரகேசரியில் சிறுவர் பகுதியில் பிரசுரமானது. அதுவே பத்திரிகையில் வெளிவந்த எனது முதலாவது ஆக்கமாகும். அவ்வாக்கம் என்னுடைய இயற்பெயரிலேயே வெளிவந்தது. பிற்காலத்தில் 'ஆஷிகா' என்ற புனைப்பெயரிலேயே எழுத ஆரம்பித்தேன்.


03. இதுவரை எழுதிய உங்கள் ஆக்கங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை நான் எழுதிய ஆக்கங்களில் அதிகமானவை கவிதைகளே. ஏனெனில், வானொலி நிகழ்ச்சிக்காகவும் நான் கவிதைகள் எழுதி சக அறிவிப்பாளர்களுக்கு கொடுத்துள்ளேன். அதேநேரம் கவிதையில் உள்ள ஈடுபாடும், அவை அதிகமாக எழுத காரணமாகும். சில சிறுகதைகளும், கட்டுரைகளும், ஒரு சில நூல் விமர்சனங்களும் எழுதியுள்ளேன். அண்மைக்காலமாக சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாட்டினைக் காட்டி வருகின்றேன்.


04. படைப்பாக்கங்களுக்கு முன்வைக்கப்படும் விமர்சனங்கள், எதிர்மறைக் கருத்துக்களை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

எனது திறமையை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமாகவே நான் அதனை எடுத்துக்கொள்கின்றேன். பலர் உண்மையான அக்கறையோடும் அன்போடும் ஆக்கங்களை விமர்சிப்பார்கள். ஒரு சிலர் எதிர்மறையாக விமர்சிப்பார்கள். ஆனாலும் அவற்றை நான் எனது பயணத்துக்கு துடுப்பாகவே பயன்படுத்துகின்றேன். விக்கிரமாதித்தன் போன்று மனந்தளராது தொடர்ந்தும் எழுதுகின்றேன். ஆரம்பத்தில் இப்படியான மன தைரியம் எனக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் வாழ்க்கைக் கற்றுத் தந்தப் பாடம், மனஉறுதி ஆகியவற்றை எனக்குள் வாங்கிக்கொண்டேன்.



05. உங்களுக்குக் கிடைத்த கருவை எப்படி படைப்பாக்குகிறீர்கள்?

முதலில் கவிதையாக வடிப்பேன். சில காட்சிகள் சட்டென மனதில் தோன்றி கவி வரிகளை எழுதிவிடும். பின்னரே அது ஏட்டுக்குள் ஏறுகிறது. இன்னும் சில சம்பவங்கள், கண்முன் நடப்பவை, ஒருவர் மூலம் கேட்டவை என்பன சிறுகதைகளாகவும் கட்டுரைகளாகவும் உருவெடுக்கின்றன. மிக அண்மைக்காலமாக நாவல் ஒன்று எழுத வேண்டும் என்ற ஆவலும் என்னுள் எழுந்துள்ளது. இறைவன் நாடினால், எமது நாவலாசிரியர்களின் அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு எழுதலாம் என எண்ணியுள்ளேன்.


06. பெண்ணியக் குரல் பற்றிய உங்கள் கருத்து எப்படியுள்ளது?

பெண்ணியம் என்பது பெண்களைச் சாடாது அவர்களின் உரிமைகளை முழங்குவதாய் இருக்க வேண்டும். பெண்ணியம் பேசிக்கொண்டே அவர்களை அடக்குவதாக இருக்கக் கூடாது. பெண்களுக்கு சமஉரிமை வழங்காவிடினும் அவர்களை மதிக்கத் தெரியாதவர்களும் இன்னும் இருக்கின்றனர்.


07. உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்களின் பங்களிப்பு எந்தளவில் உள்ளது?

நிறையவே உள்ளது. அன்று தொட்டு இன்று வரை ஒரு எழுத்தாளன் எவ்வளவுதான் எழுதினாலும் இலக்கிய உலகுக்கு அவனை அடையாளப்படுத்துவது ஊடகங்கள்தான். அது இலத்திரனியல் ஊடகமாக இருக்கலாம். அல்லது அச்சு ஊடகங்களாகக்கூட இருக்கலாம். அதே போன்றே நான் பல வருட காலங்கள் எழுதி வந்தாலும் என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியதும், மூத்த அனுவமிக்க எழுத்தாளர்கள் பலரை அறிந்துகொள்ள ஏதுவாயிருந்ததும் ஊடகங்கள்தான். உங்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் இந்த ஊடகம்தான். இன்று வரையும் எனது எழுத்துக்களை பிரசுரித்துக்கொண்டும் பதிவேற்றிக்கொண்டும் இருப்பவை ஊடகங்கள்தான். எனவே எப்பொழுதும் ஊடகங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.


08. யாருடைய படைப்புக்களை மிகவும் ஆர்வமாக வாசிப்பீர்கள்?

அவ்வாறு குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. எனது சிறுவயது முதல் என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. யார் எழுதிய புத்தகம் என்று பார்க்க மாட்டேன். வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிப்பேன். அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. யாருடைய எழுத்து சாயலும் என்னிடம் வரக்கூடாது என்பதால் இப்பொழுது அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன். இதையேதான் நான் என்னுடைய அறிவிப்புத் துறையிலும் கடைப்பிடிக்கின்றேன். எனக்கென்ற ஒரு தனிப்பாணியில் அறிவிப்பு செய்கின்றேன். யாருடைய எழுத்தையும் பின்பற்றாது எழுதுகின்றேன்.


09. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யாவர்?

தென்னிந்திய எழுத்தாளர்கள் அகிலன், ரமணிச்சந்திரன், சுஜாதா, பாலகுமாரன், இந்திரா சௌந்திரராஜன் போன்றவர்கள். கல்கியில் அகிலன் எழுதிய தொடர்கதையை சேர்த்து எனது தந்தை புத்தகமாக செய்து வைத்திருந்தார். அவற்றை வாசிப்பதற்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவை 60களில் வெளிவந்தவை என நினைக்கின்றேன்.


10. புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்கள் குறித்து?

புலம் பெயர் எழுத்தாளர்கள் பலர் இப்பொழுது பரவலாகக் காணப்படுகின்றனர். அவர்களின் எழுத்துக்கள் அதிகமாக யுத்த சூழலை மையமாகவே வைத்தே வருகின்றன. அதையும் தாண்டி அவர்களது இரசனைமிக்க பல படைப்புகளையும் காணலாம்.


11.  உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?

எனக்கு மறக்க முடியாத முதல் அனுபவம், 'தட்டி தட்டி' என்ற கவிதை பத்திரிகையில் வெளிவந்தபோது நான் முகமறியாத பலர் என்னைப் பாராட்டி இன்னும் எழுத ஊக்குவித்தார்கள். பின்னர் முகநூலில் பதிவேற்றிய என்னுடைய கவிதைகளைப் பார்த்து எனக்கு மூத்த எழுத்தாளர்கள் பலரின் பாராட்டு கிடைத்தமை மற்றும் 2012 ஆம் ஆண்டளவில் எனது கவிதைகள் சிலவற்றை வாசித்து கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர் கபிலன் வைரமுத்து அவர்கள் என்னைப் பாராட்டி, மேலும் நான் எழுத ஊக்குவித்தமை மறக்க முடியாத அனுபவங்களாகும். மேலும் மிக அண்மையில், கடந்த டிசெம்பர் மாதம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாட்டில் என்னுடைய இலக்கிய பணிக்காக விருது வழங்கி கௌரவித்தனர். இது நான் மேடையேறிப் பெறும் முதல் விருதாகும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.


12.  இலக்கியத் துறை சார்ந்த உங்களது எதிர்பார்ப்புக்கள் அல்லது இலட்சியங்கள் எவை?

இலக்கியத்துறை சார்ந்த எனது இலட்சியங்கள் என்றால் கவிதை நூல் வெளியிட ஆர்வமாய் உள்ளேன். என்னுடைய எண்ணம் என்னவென்றால் எழுதப் படிக்கத் தெரியாத மற்றும் எழுத்துக் கூட்டி வாசிக்கும் ஒரு சாதாரண நபர் அல்லது ஒரு கூலித் தொழிலாளி பத்திரிகை எடுத்து வாசித்தால் புரிந்துக் கொள்ளக்கூடியதாக என்னுடைய படைப்பு இருக்க வேண்டும். அவ்வாறான சாதாரண மொழி நடையிலும் இலகு சொற்களைக் கொண்டே எனது ஆக்கங்களைப் படைக்கிறேன். அதனை வாசிப்பதைக் கொண்டு மற்றவர்கள் ஏதேனுமொரு விதத்தில் பயன்பெற வேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கின்றேன்.

13. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அன்பென்ற ஒன்றாலே
அடிபணிவீர்..
பிறரை அதிகாரத்தாலே
ஆளாதீர்..
உற்றாரும் உறவினரும்
ஒன்றென்பீர்..
அயலாரை ஊராரை
ஒதுக்காதீர்..
சமத்துவமும் சகோதரத்துவமும்
ஊற்றாவீர்..
பகைகொள்ளும் வஞ்சகத்தை
புதைத்திடுவீர்..
வன்சொல்லும் கடும்போக்கும்
வேண்டாதீர்..
இன்சொல்லும் நல்லுளமும்
கொண்டிடுவீர்..

என்றுகூறி, உங்களுக்கு எனது உளம்நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன்!!!

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்





45. எழுத்தாளர் த. எலிசபெத் (ராஜ் சுகா) அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2016.11.13

எழுத்தாளர் த. எலிசபெத் (ராஜ் சுகா) அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் தலவாக்கலையை பிறப்பிடமாக கொண்டவள். எனது  கல்லூரி வாழ்க்கை கா.பொ.த சா/த வரை புனித பத்திரிசியார் கல்லூரியிலும் க.பொ.த உ/த தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கழிந்தது. தற்போது கொழும்பு யசோதரா வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

தொழில் அனுபவம் எனும்போது தினம் தினம் பல நல்ல அனுபவங்களினூடாக கடந்து செல்ல முடிகின்றது. நான் இரண்டாம் மொழி தமிழ் கற்பிப்பவள். சகோதரமொழி பேசுபவர்களுடனேயே அதிகமான நேரத்தைக் கழிக்கின்றேன். இனம் மதம் மொழி ரீதியிலான வேறுபாடுகளை காணும்போதெல்லாம் எனக்குள் கோபமும் ஆத்திரமும் மேலெழும். ஏன் இவர்களுக்குள் இத்தனை பேதமை, வேற்றுமை, குரோதம் என மனங் கசந்து போகும். உண்மையில் இதற்கொரு முக்கிய காரணியாக என்னால் காணமுடிந்தது ஒருவர் பேசும் மொழி மற்றவருக்கு புரிந்துகொள்ளா முடியாத நிலையே.

பல்லின சமூகம் வாழும் இத்தேசத்தில் பிரதான இரு  மொழிகளும் சரளமாக காணப்படுமிடத்து பல பிரச்சனைகள்  எமைவிட்டு கடந்து போயிருக்கும். ஒருவரின்  மனம் உணர்வுகள் பிரச்சனைகள் மற்றவருக்கு புரியும். அந்த வகையில் இன்று  ஷஷஇரண்டாம் மொழி|| எனும் விடயம் தமிழ் சிங்கள மொழிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சிங்கள சகோதரர்களிடம் தமிழ்மொழி ஆர்வமும் ஆசையும் அதிகரித்து காணப்படுகின்றது. தமிழ் மொழியுடன் தமிழர்களின் கலை கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், பிரச்சனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை பல புத்திஜீவிகள் மத்தியில் மாற்றங்களாக நிகழ்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இதில் ஒரு சிறு பங்களிப்பை என்னாலும் வழங்க முடிந்ததையிட்டு  பெருமிதமடைகின்றேன்.


02. உங்களது படைப்புலகப் பிரவேசம் குறித்து கூறுங்கள்?

படைப்புலக பிரவேசத்திற்கு அடித்தளமிட்டது எனது சிறுவயது வாசிப்பு பழக்கமே. வாசிப்பு..  வாசிப்பு..  என்று எனது எல்லா ஓய்வு நேரத்தையும் பத்திரிகை புத்தகங்களுக்குள் புதைத்து விட்டிருப்பேன். பிற்பட்ட  காலங்களில் எனது அப்பப்பா தந்த ஊக்குவிப்பும் வழிகாட்டலையும் கூறலாம். அதாவது வானொலியின் சிறுவர் நிகழ்ச்சி, தொடர் நாடகங்கள், போட்டி  நிகழ்ச்சிகள், செய்தி என எல்லாவற்றையும் நேரத்திற்கு  கூப்பிட்டு கேட்கச் செய்வார். அவ்வாறு பத்திரிகை, வானொலி, புத்தகங்களென பழக்கப்பட்ட என் கண்களும் செவிகளும் எனது விரல்களுக்கு வலிமை சேர்த்தது.

பள்ளிக்காலத்தில் பல வானொலி நிகழ்ச்சிகளுக்கு ஆக்கங்களை எழுதி அனுப்பினேன். 2003 இல் அதே விதமாக பத்திரிகைக்கும் எழுதினேன். ஆனால் கவிதைப் பிரவேசமாக 2004 இல் வீரகேசரி  வாரவெளியீட்டில் 'வரமாட்டாயா?|| என்ற கவிதையினூடாக உதயமானது.


03. இலங்கிய உலகில் உங்களது பங்களிப்புக்கள் பற்றிக் கூற முடியுமா?

கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள், சிறுகதை மற்றும் படைப்பாளிகளை இணங்கண்டு அவர்களின் நேர்காணலை கல்குடா நேசன் இணையத்திலும் மித்திரன் வார இதழிலும் (ஏலவே துருவம் இணையத்திலும்) பிரசுரித்து வருகின்றேன்.


04. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் நீங்கள் உங்களது நூல்களை எப்போது வெளியிட உத்தேசித்திருக்கிறீர்கள்?

இறைவனுக்கு சித்தமென்றால் இவ்வருட இறுதிக்குள்.


05. கவிதைத் துறையில் உங்களது பிரவேசம் நிகழ உந்து சக்தியாக எது இருந்தது?

தனிமை என்று சொல்லலாம். அதிகம் பேச பயப்படும், கூச்சப்படும் எனக்கு பேனை சிறந்த கருவியாக இருந்தது. என் நாவினால் பேச முடியாததை பேனாவினால் பேசிக்கொண்டேன். எல்லா உணர்வுகள், சொந்த அனுபங்கள், சமூக அவலங்கள், பிரச்சனைகள் என எழுதிக் கொண்டேயிருப்பேன். இவ்வாறு எழுதத்; தொடங்கியதே நாளடைவில் கவிப் பிரவேசத்திற்கு உறுதுணையாக இருந்தது.


06. ஒரு சிறந்த கவிதை எப்படி இருக்க வேண்டும்? கவிதையின் முக்கிய கூறுகள் பற்றிக் கூறுங்கள்?

கவிதை வாசகனுக்கு புரியவேண்டும். அத்துடன் இரத்தினச் சுருக்கமாக கவித்துவத்துடன் இருப்பதே சிறப்பு. வெறுமனே வார்த்தைகளைக் கோர்த்து கட்டுரைபோல நீளுமாயின் அது கவித்தன்மையை இழந்துவிடும். நீளும் கவியிலும் கவித்துவம் வேண்டும். இதுபோன்ற கவிதைகளே புதுக்கவிதையென வெற்றியடைகின்றது. கவிதையானது உடைத்து சுவைக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென்பதே என்  அபிப்பிராயம். அழகும் சுவையும் மிக்க மாதுளையைப்போல.


07. புதிதாக கவிதை எழுதுபவர்களுக்கு மரபுக் கவிதை குறித்த தேடல் அவசியமில்லை என்று நினைக்கின்றீர்களா?

நிச்சயமாக இல்லை. கட்டாயமாக தேடல் வேண்டும். பொதுவாக கவிதையுலகில் பிரவேசிக்கும் பலர் தமிழ்ப் புலமையோடு உள் நுழைவதில்லை. தமது தாய் மொழி பரீச்சயத்தையும் உணர்வுகளையும் கலந்து  படைப்பதே  கவிதையாகின்றது. இவை பட்டைத் தீட்டப்பட்டு பல விமர்சனங்களுக்கு உட்பட்டு நல்ல படைப்பாக பிரவசமாகிறது. ஆக எமது படைப்பின் முதிர்ச்சி, அழகு, காத்திரம் மேலோங்க, வழிகாட்டியாக அமைய  வேண்டுமாயின் மரபுக்கவிதை குறித்த தேடலும் அவசியமாகின்றது.


08. இதுவரை சுமார் எத்தனை சிறுகதைகளை எழுதியிருக்கிறீர்கள்? அக்கதைகளுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக் கொள்கின்றீர்கள்?

சிறுகதைகள் எண்ணிக்கையில் மிகக்குறைவே. 20 சிறுகதைகளுக்குள் மட்டுப்பட்டே  காணப்படுகின்றது. கவிதைபோல சிறுகதையினை தொடுவதில் சிறு அச்சம். எனது கதையின் கருவை நான் அறிந்தவர்களின் அநுபவங்களைக் கொண்டும், சந்திக்கும் பல சம்பவங்களினூடாகவுமே பெற்றுக்கொள்கின்றேன்.


09. இன்றைய இலக்கிய உலகில் பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது?

பெண்ணியக் கருத்துக்கள் மிக அதிகமாக பரவலாக பேசப்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது. பெண்களின் பிரச்சனைகள் அவற்றுக்கெதிரான குரல் கொடுப்புக்களுக்கு இன்னும் அதிகமாக  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வெறுமனே பெண்ணுடல் பற்றியும் கலாச்சார  சீர்கேடுகளுக்கு வித்திடும் விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவற்றுக்காக வாதாடுவதை விடுத்து சமூகத்தில் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறைகள், கொடுமைகள், அடிமைப்படுத்தல்கள் போன்றவற்றுக்கு எதிரான குரல்கொடுப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்தலுமே பெண்ணியம் என்ற பதத்திற்கு வலிமை சேர்க்கும். அதன் நோக்கம் நிறைவேறும் என நினைக்கின்றேன்.


10. பல்வேறு இலக்கியத் துறைகளில் ஆர்வம் காட்டி வரும் நீங்கள் சவாலான துறையாக எதை நோக்குகிறீர்கள்?

சவாலாக சிறுகதைகளையே கூறலாம். எத்தனையோ பல நல்ல சமூகம் சார்ந்த, பெண்ணியம் சார்ந்த கருக்களை  என்னகத்தே  வைத்திருப்பினும் அவற்றை கவிதைகளாக வடித்தெடுக்கும் லாவகம் சிறுகதைகளில் புகுத்த முடியவில்லையென்பதில் சிறு மனவருத்தம். அதாவது சிறுகதை வடிவத்துக்குரிய  பண்புகளை நான் பெரிதாக பார்க்கின்றேன். சொல்லவருகின்ற விடயம், பாத்திர அமைப்பு, சம்பவ நகர்வு என்பவற்றில் சிதைவு ஏற்படுமிடத்து அதன் தரம் கெட்டு சலிப்புத் தன்மை வந்துவிடும் அதனால் இதனை சவாலாக நினைக்கின்றேன்.


11. வாசகர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமானது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றிய உங்கள் கருத்து யாது?

சிலநேரங்களில் எனக்கும் சலித்துவிடும் ஒரு விடயமிது. வார்த்தைகளை ஒடித்தும் நீட்டியும் ஒழுங்கின்மையில் சிதறிக்கிடக்கும்  படைப்பை  வாசிக்கும்போது வாசகனுக்கு எரிச்சலேற்படும். படைப்பின் புலமை வாசகனாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு நல்ல வாசகன்  நிராகரிக்குமிடத்து அந்த படைப்பு செயலிழந்து போகின்றது என்பதனை பலர்  உணர்வதில்லை. அத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டுமிடத்து அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெருந்தன்மை இல்லாமையே இதற்கான காரணம் என நினைக்கின்றேன். 'விளக்கமில்லா இலக்கியம் விழலுக்கிறைத்த நீர்தான்'.


12. படைப்புகளுக்குக் கிடைக்கும் விமர்சனங்களை, விருதுகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

விமர்சனமில்லா படைப்பு வெறும் கானல்நீரைப் போன்றது. எவ்வித சுவையோ சுவாரஸ்யமோ  தேவையோ பயனோ இல்லாத ஒன்றாகிவிடும். நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு படைப்பு விமர்சிக்கப்படும்போது அது  வெற்றிபெற்ற படைப்பாகின்றது. படைப்பாளி கவனிக்கப்படுகின்றான் என்பது எனது கருத்தாகும்.

அத்துடன் விருதைக் குறித்து கூறுவதாயின் ஆரம்ப காலங்களில் காத்திரமான படைப்புக்கள் விருதை பெற்றுக்கொண்டன. அதற்கு ஒரு மதிப்பும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் காணப்பட்டது. ஆனால் இன்றுகளில் யார் வேண்டுமானாலும் விருது வழங்கலாம், வாங்கலாம் என்ற நிலைமை வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக விருதினை குறைகூறவில்லை. படைப்பாளனை தட்டிக்கொடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அவன் வளர்ச்சியிலும் விருதும் பங்குவகிக்கின்றது. நல்ல திறமைசாலிகள் விருதுகளால் கௌரவிக்கப்படுவது மகிழ்ச்சியே. ஆனால் அவை மலிந்துபோகும்போது அதன் பெறுமதியும் மதிப்பும் குன்றிப் போய்விடுகின்றது.


13. இதுவரை உங்களுக்கு கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

* 2012ல் தேசிய கவிஞர்கள் சம்மேளனம் நடாத்திய விருது வழங்கலில் 'காவ்ய சிறீ' என்ற நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* 2013ல் தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 'கவித்தீபம்' எனும் நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* 2015ல் தடாகம் கலை இலக்கிய வட்டமும் கனடா படைப்பாளிகள் உலகமும் இணைந்து நடாத்திய  விருது வழங்கள் விழாவில் 'கவியருவி' எனும் நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* 2016ல் புதுமைத்தென்றல் முகநூல் குழும கவிதைப் போட்டியில் 03ம் இடம் கிடைத்தது.
* 2016ல் தமிழ்மிரர் பத்திரிகை நடாத்திய கவிதைப் போட்டியில் பணப் பரிசும் கிடைத்தது.


14. இலக்கியத் துறையில் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எவை?

இலக்கியம் காலத்தின் கண்ணாடி எனப்படுகின்றது. எமது படைப்புக்களை எதிர்கால சந்ததியினர் புரட்டிப் பார்க்கும்போது உபயோகமாக எதையாவது நாம் விட்டுச்செல்ல வேண்டும். அப்படி ஒரு படைப்பென்றாலும் காத்திரமாக வெளியிட்டுவிட வேண்டும் என்பதே எனது திட்டமும் விருப்பமும்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

44. இராகலை தயானியுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2016.12.11

இராகலை தயானியுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? 

முதலில் இந்நேர்காணலுக்கு என்னை அழைத்ததற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வனப்புமிகு மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில், வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட இராகலை நகருக்கு அண்மித்த புறூக்சைட் எனும் சிற்றூரினை வசிப்பிடமாகக்கொண்டுள்ளேன்.  ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த என் பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளை நான். இலக்கிய உலகிற்கு தயானி விஜயகுமார், இராகலை தயானி, மலைமகள் எனும் பெயர்களில் ஆக்கங்களை எழுதி வருகின்றேன். எழுத்துலகிற்கு தத்தித் தத்தி தவழ்ந்து வரும் சிறு குழந்தை நான்.


02. உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்? 

ஆரம்ப மற்றும் கனிஷ்ட பிரிவிற்கான  கல்வியை  பது/கனவரல்லை தமிழ் வித்தியாலயத்திலும், பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் கற்றதோடு சாதாரண மற்றும் உயர்தர கல்வியை நு/வ/இராகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன். சாதாரண மற்றும் உயர்தர பிரிவில் பாடசாலை மட்டத்தில் முதல்தர சித்தியினைப் பெற்றுக்கொண்டதோடு மாத்திரமின்றி உயர் தரத்தில் மாவட்ட மட்டத்தில் நான்காவது நிலையினை பெற்றுக்கொண்டேன். என் பாடசாலை வாழ்க்கைப் பயணத்தில் வறுமையும் என்னுடன் சேர்ந்து பயணித்தது. மின்சார வசதிகள் கூட இல்லாத குப்பி லாம்புகளோடு போராடி கல்வி கற்றேன். நிலா வெளிச்சத்தில் கற்ற நாட்களும் நினைவில் உண்டு. நான் வாழ்ந்த வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் 'மாடமாளிகை' என்ற கவிதையை எழுதினேன். (என் கவிதைத் தொகுப்பில் அக்கவிதை இடம்பெற்றுள்ளது)

2010ஆம் ஆண்டு பேரதானைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து அரசறிவில் சிறப்புக் கலை மாணி பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்து தற்போது முதுமாணி பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருகின்றேன். அத்துடன்  பேராதனை பல்கலைக்கழக்கத்திலே மனித உரிமைகள் டிப்ளோமா கற்கை நெறியினையும் பூர்த்தி செய்துள்ளேன். இவை மாத்திரமின்றி பல்கலைக்கழககத்தில் கற்ற காலத்தில் இருபத்தியைந்துக்கு மேற்பட்ட குறுங்கால கற்கை நெறிகளை மேற்கொண்டு  சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன். (மனித வள முகாமைத்துவம், தலைமைத்துவம்  உள்ளடங்களாக)


03. இலக்கியத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்த சூழ்நிலைகள் எவை?

இலக்கிய தடத்தில் பாதம் பதிக்க முதல் காரணமாக இருந்தது நான் வாழும் சூழல் தான். தூரத்துப் பச்சை பார்ப்பதற்கு அழகாகத்தான்; தெரியும். அருகில் வந்து பார்த்தால் தான் மக்கள் அனுபவிக்கும் அவலங்களும் வேதனைகளும் கண்ணுக்குத் தென்படும். அட்டைக்கடியும், கொழுந்து கொய்து வெடித்துப் போன விரலிடுக்கு வேதனையும் புரியும். நான் பச்சை பூமியை பக்கத்தில் இருந்து பார்த்தவள். ஆகையால் கற்பனை வளங்களுக்கு அப்பால் மலையக மண்ணவர் படும் துன்பங்களை இலக்கியமாக படைக்க முயல்கின்றேன். அத்துடன் வாசிப்பின் மீதிருந்த நேசமும் தமிழ் மீதுக்கொண்ட மோகத்தின் காரணமாகவும்  இலக்கிய உலகத்திற்கு தானாக ஈர்த்துவரப்பட்டேன்.


04. எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?

எழுதுவதையும் வாசிப்பதையும் சிறு வயதிலிருந்தே பழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆனால் என் எழுத்துக்களை என்னைத்தவிர யாரும் வாசிக்க அனுமதி கொடுத்ததில்லை. இதற்கு முக்கிய காரணம் எனக்குள் இருந்து கறையானாக அரித்துக் கொண்டிருந்த தாழ்வு மனப்பாங்குதான். இத்தாழ்வு மனப்பாங்கு காரணமாக பல வருட இலக்கியப் பயணத்தை இருளுக்குள் தள்ளிவிட்டேன். விரல்விட்டு எண்ணக்கூடிய இலக்கியங்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தேன். ஆனால் பெரும்பாலான இலக்கியங்களை வெளியிடாமலே தாழிட்டு வைத்திருந்தேன். இவ்வாறான நிலையில் எனக்குள் இருந்த எழுத்தாற்றலை வெளியுலகிற்கு கொண்டுவர முயற்சி செய்தவர் கால்நடை வைத்தியர் கிருபானந்தகுமாரன் அவர்கள்தான். என்னை அதிகளவு ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டியதோடு மட்டுமல்லாமல் பத்திரிகைகளில் என் படைப்புக்கள் வெளிவர களம் அமைத்துக்கொடுத்தார். அவர் மாத்திரமின்றி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி எஸ். பாஸ்கரன் அவர்களும் என்னை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டியவர். இவர்கள் இருவரும் இல்லையென்றால் என் எழுத்துலக வாழ்வு என்று ஒன்று இருந்திருக்காது என்று கூறலாம்.


05. கவிதைகள் எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

கவிதை எழுதுவதில் நாட்டம் ஏற்பட முக்கிய காரணம் எனது நண்பி சிவதர்ஷினி தான். அவள் மிகச்சிறப்பாக கவிதை எழுதுவாள். அவளைப் போல நானும் ஏன் கவிதைகள் எழுதக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியபோது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை சொற்களாக கோர்த்து எழுதத் தொடங்கினேன். அவ்வாறு எழுதத் தொடங்கிய காலத்தில் பாடசாலை மட்டங்களில் நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் கவிதை எழுதுவதற்கு என் பெயர் பரிந்துரைக்கப்படும். போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவும் கவிதை எழுத முயற்சித்தேன்.

அத்தோடு உணர்வுகள் கொதித்தெழும் போது பேனைக்கு பசியேற்றி ஏடுகளை தின்னும் வகையில் எழுத்துக்கள் தானாக பிரசவிக்கத் தொடங்கின. பொதுவாக புரட்சிகர கவிதைகளை எழுதுவதற்காகவே என் பேனை முனை அதிகமாக தலைகுனியும். நான் அனுபவித்த, பார்த்த, பிறர் பகிர்ந்த உணர்வுகளை கவிதையாக வடிப்பதிலே ஆர்வம் அதிகம்.


06. மரபுக் கவிதைகளை எப்படி நோக்குகின்றீர்கள்?

இலக்கண வரம்பினுள் நின்று இலக்கியம் படைப்பதை மரபுக கவிதைகள் தன்னகத்தே கொண்டுள்ளன. யாப்பு எனும் சட்டகத்தினுள் நின்று மொழியை திணித்து கவி படைப்பது மரபுக் கவிதையின் சிறப்புப் பண்பு. ஆனால் இத்தகைய மரபுக் கவிதைகளை படித்தோர் கூட கையகராதியைக் கொண்டு பொருள் தேடிக்கொள்ள வேண்டிய சிரமம் இருக்கின்றது. ஓசை, யாப்பு, அணிகள், எதுகை, மோனை என்பவற்றுக்கு முதன்மை கொடுத்து தமிழின் சிறப்பை எடுத்தியம்பினாலும் இலக்கியம் என்பது படைப்போருக்கும் அதனை படிப்போரும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பது  நல்லது எனும் வகையில் மரபுக் கவிதைகளை காலம் கடந்த இலக்கியம் என்று சில தமிழறிஞர்கள் கூறுகின்றனர். ஆனாலும் சொற் சுருக்கம், பொருட் பெருக்கம் கொண்ட மரபுக் கவிகள் பற்றிய அறிவு புதுக் கவிதை படைக்கும் படைப்பாளிக்கு இருந்தால் தனது கவியாற்றலை வளர்த்துக்கொள்ள உந்துசக்தியாக அமையும்.


07. அண்மையில் நீங்கள் வெளியிட்ட நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

தாயாக முன்பே தமிழை பேனையில் சுமந்து பெற்றெடுத்த என் பிஞ்சுக் குழந்தைக்குப் பெயர்தான் 'அக்கினியாய் வெளியே வா'. இவ் அக்கினியாய் வெளியா வா கவிதைத் தொகுதி மொத்தமாக 57 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலான கவிதைகள் மலையகச் சமூகம் சார்பாக எழுதப்பட்டது. மாற்றம் கொண்ட மலையகத்திற்கான ஆணிவேர்களைக்கூட கவிதை வடிவில் கூறியுள்ளேன். அத்துடன் அடிப்பட்ட மக்களின் அவலங்களுக்கு வரிவடிவம் கொடுத்துள்ளேன். இக்கவிதைத் தொகுதியில் காதல், வர்ணனை என்பவற்றைவிட சமூக அவலங்களுக்கே முதல் இடம் கொடுத்துள்ளேன்.

எனது கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள்தான். இலைமறைக்காயாக இருக்கும் படைப்பாளிகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் உன்னதமான சேவையை செய்து வருகின்றார். பணம் படைத்தவர்கள் எல்லாம் தானுண்டு தன் வேலையுண்டு என்று சமூகப் பணியின் பக்கம் கண் பார்க்காத இந்த இயந்திர உலகில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் ஒரு மகத்தான மனிதர்தான். அவ்வகையில் புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக என் 'அக்கினியாய் வெளியே வா' அகில வாசலுக்குள் நுழைந்தது.

வளர்ந்து வரும் ஒரு இளம் படைப்பாளியை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்ற விடயத்தின் இலக்கணத்தைக் கொண்டவர்களாக மேமன்கவி மற்றும் தென்னிந்திய வளரி இதழரசிரியர் அருணா சுந்தரராசன் ஆகியோர் விளங்குகின்றனர். என் கவி நூல் வெளிவருவதற்கு முன்னின்று உழைத்தவர்களும் இவர்களே. இந்த மூன்று மாமனிதர்களின் உதவியால்தான் என் கன்னிக் கவி நூல் வெளிவந்தது. இம்மூவருக்கும் இவ்விடத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்தும் கவிதை எழுத என்னை ஊக்கப்படுத்திய, ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர்களான யோ. புரட்சி, முல்லைத்தீபன், ராஜ்சுகா, காவியா, ரிம்ஸா முஹம்மத் ஆகியோருக்கும் இவ்விடத்தில் நன்றிகூற கடமைபட்டுள்ளதோடு என் கவிதைகளை தொடர்ந்து பிரசுரித்துவரும் அச்சு ஊடகங்களுக்கும் என்னை ஊக்கப்படுத்தி ஒரு நூலை வெளியிடுமளவுக்கு துணையாக இருந்த முகப் புத்தக நண்பர்களுக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன்.


08. கவிதை தவிர்த்து வேறு எவற்றையெல்லாம் எழுதுகிறீர்கள்?

கவிதைகளைத் தவிர்த்து ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் மலையக சமூகம் சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுகின்றேன். அண்மையில் சிறுகதை எழுதவும் தொடங்கியுள்ளேன்.


09. படைப்புக்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

செய்யுளுக்கு பொருள் என்பதைப்போல படைப்புக்கு விமர்சனம் இன்றியமையாதது ஆகும். விமர்சனம் இல்லையென்றால் படைப்பாளியின் படைக்கும் ஆற்றல் சூனியப் பிரதேசத்திற்குள் சென்றுவிடும். இருப்பினும் சொல்லப்படும் விமர்சனங்கள் படைப்பாளியை அதிகம் புகழ்வதாகவோ அதிகம் இகழ்வதாகவோ இல்லாமல் நடுநிலைமை அடிப்படையில் நோக்கப்பட வேண்டும். ஒரு நூலை அல்லது ஒரு படைப்பினை விமர்சனம் செய்பவன் நடுநிலையில் இருந்து படைப்பினை நோக்க வேண்டியது அவசியம்.

சிலரின் விமர்சனங்கள் படைப்பாளியை கீழ்த்தரமாக சாடுவதாகவும் அமைகின்றது. அவ்வாறான நிலையில் அந்த படைப்பாளி அடுத்த கட்ட இலக்கிய நகர்வினை நோக்கிச் செல்வது சிரமமாக இருக்கும். படைப்புக்களை விமர்சிக்கும் போது படைப்பாளி குறிப்பிட்ட விடயத்தை எவ்வாறு அணுகினான் என்ற அவன் பக்க சார்பு கருத்துக்களையும் விமர்சனத்தின் போது கவனம் எடுக்க வேண்டியதும் அவசியமாகும். சமகாலத்தில் மூத்த படைப்பாளிகள் வளர்ந்துவரும் படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கியங்களே இல்லை என மறைமுகமாக சாடுகின்றார்கள். அவ்வாறு சாடுகின்றவர்கள் சாடுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல் இளைய படைப்பாளிகளை கரம்பற்றி எழுப்பிவிடும் முயற்சிகளை செய்ய வேண்டியதும் அவசியம் என்பது என் கருத்து.


10. உங்களுடைய அடுத்தகட்ட இலக்கிய முயற்சிகள் யாவை?

காத்திரமான இலக்கியப் படைப்புக்களை படைக்க முயற்சி செய்கின்றேன். கவிதையோடு மாத்திரம் நின்றுவிடாமல் சிறுகதை, ஆய்வுக் கட்டுரைகள் என்பவற்றையும் எழுதி நூல் வடிவில் வெளியிட வேண்டும் என எண்ணுகின்றேன். அத்துடன் இலக்கியம் படைப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் சமூக நலன் சார் செயற்பாடுகள், சமூக விழிப்புணர்வு சார் செயற்பாடுகள் என்பவற்றினையும் மேற்கொள்ள வேண்டுமென எண்ணுகிறேன்.


11. பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது பற்றிக் குறிப்பிடுங்கள்? 

நான் அரசறிவியலை விசேட பாடமாக கற்றதால் இலக்கிய உலகிற்கும் எனக்குமான இடைவெளி அதிகமாக காணப்பட்டாலும் அவ்வப்போது பல்கலைக்கழக சஞ்சிகைகளுக்கு ஆக்கங்களை எழுதுவேன். கவியரங்கம், வானொலி நிகழ்ச்சிகளிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பங்குபற்றியிருக்கின்றேன். 2013 ஆம் ஆண்டு கண்டி தமிழ்ச் சங்கத்தில் 'ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு' என்ற தலைப்பில் பாடிய கவியரங்க கவிதை அதிக வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அத்துடன் பல்கலைக்கழக 'இளங்கதிர்' சஞ்சிகைக்கு எழுதிய 'சபிக்கப்பட்ட சனங்கள் நாங்கள்' என்ற கவிதையும் அதிக பாராட்டினை பெற்றுக்கொடுத்தது. இவை மாத்திரமின்றி பல்கலைக்கழக மட்டத்தில் நடக்கும் இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி பல சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறேன். இருப்பினும் பல்கலைக்கழக வாழ்வில் என் இலக்கியப் பயணம் என்பது மிகவும் மந்தமானதொரு வேகத்திலே நகர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


12. நீங்கள் இதுவரை வாசித்த நூல்களில் உங்களைக் கவர்ந்த நூல் எது? ஏன்?

வாசித்ததோடு புத்தகத்தை மூடிவைக்காது மறுபடி வாசிக்க வாசிக்க தூண்டக்கூடிய பல நூல்களை என் மனதில் விருப்பக் கோடிட்டு வைத்துள்ளேன். ஆனால் நான் உயர் தரம் படிக்கும் போது முதல் முதலாக படித்த கவிப்பேரரசின் 'தண்ணீர் தேசம்' நாவல் தான் அடிமனதை வருடிப்போன நாவல். இந்நாவலுக்கு நான் அடிமையாக முதல் காரணம் கவிநயம் கொண்ட கதை நடை தான். அத்தோடு காதல் ஜோடிகளான கலை வண்ணம், தமிழ் போன்றோரின் காதல் லயத்தை வாசகர்கள் லயித்துவிடும் சொற்களை கோர்த்து நூல் மாலை கட்டியுள்ளதோடு பல அறிவியல் கருத்துக்களை கூறி விஞ்ஞானக் காவியமாகவும் தண்ணீர் தேசத்தை வடிவமைத்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் வாசித்த இந்நாவல் இன்று வரை கடலுக்குள் தத்தளித்த அந்த காதல் ஜோடிகளின் கதையை ஓயாத அலையாக இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.


13. இலக்கியப் பணிகளினூடாக எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?

இலக்கியப் பயணத்தினூடாக ஒரு சமுதாய விடியலை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன். குறிப்பாக மலையக சமுதாயத்தின் எதிர்காலத்தை இலக்கியம் படைப்பதன் மூலமாக மாற்றியமைக்க முடியும் என்பது என் கணிப்பு. குறிப்பாக மாணவ பருவத்திலிருந்து மாற்றம் கொண்ட மலையகத்திற்கான விதையினை விதைக்க முடியும். ஏட்டில் இலக்கியங்களை படைப்பதோhடு மாத்திரமின்றி நடைமுறை உலகிற்கு அதனை எடுத்துக்கூறி சமுதாய விடியலை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன். எதிர்கால மாற்றங்களை நிகழ்காலத்தில் விதைக்க இலக்கியம் எனும் ஊடகத்தையும் பயன்படுத்த முடியும் என்பது எனது கருத்து.


14. உங்களைப் போன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு என்ன கூறப் போகிறீர்கள்?

வளர்ந்து வரும் படைப்பாளிகள் முதலில் தன்னிடம் எத்துறையில் திறமை காணப்படுகின்றது என்பதை அடையாளம் காண வேண்டும். அவ்வாறு அடையாளம் கண்ட பிறகு அதற்கான வழிவகைகளை சிறப்பாக அமைத்து இலட்சிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். வறுமை உட்பட பிற காரணங்களைக் கூறி இலட்சியப் பாதையை காய் நகர்த்தல் தவறு. என்னைப் பொறுத்தவரை வறுமைதான் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற சிறந்த களம். அத்துடன் தாழ்வு மனப்பாங்கை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கை விதையினை விதைக்க வேண்டும். எம் எண்ணங்களுக்கு சக்தி உண்டு அதனால் உயர்ந்த, ஆக்கப்பூர்வமான எண்ணங்களை மனதில் புகுத்த வேண்டும்.

'முடியாதென்ற மடைமையை முடிச்சிட்டுக் கொளுத்துவோம்
முடியுமென்ற நம்பிக்கையை நெஞ்சினில் விதைப்போம்
எழுவோம் எழுதுவோம் பிறரை எழுப்புவோம்
வளர்வோம் வாழ்வோம் பிறரை வளர்ப்போம்'

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

43. இன்ஷிராஹ் இக்பால் உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.03.05

இன்ஷிராஹ் இக்பால் உடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



1. உங்கள் பிறப்பிடம், குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடுங்கள்?

சப்ரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத்தில் மலைநாட்டின் நுழைவாயில் என்றழைக்கப்படும் எழில் மிகு மாவனல்லை நகரில்தான் நான் பிறந்தேன். நான்; பிறந்தது ஒரு இலக்கியச் சூழலில்தான் என்று கூற வேண்டும். எனது தந்தை மௌலவி. அலஹாஜ் ஏ.சீ.எம். இக்பாhல் மாவனல்லையைச் சேர்ந்தவர். அவர் ஒரு இலக்கிய ஆர்வலர். எனது தாயார் தர்காநகரைச் சேர்ந்த சுலைமா சமி இக்பால். இவர் இது வரை ஐந்து இலக்கிய நூல்களைத் தந்த சிறுகதை, நாவலாசிரியர். இவர்களின் சிரேஷ்ட புதல்வியான எனக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள்.


2. உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வந்தது?

சிறு வயதிலேயே தினகரன் வாரமஞ்சரியில் சிறுவர் பகுதியில் எனது சிறு ஆக்கங்கள் வந்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி எனது ஷமலையை அசைத்த மலர்| என்ற சிறுகதை நவமணியில் பிரசுரமானது. அப்போது எனக்குப் பதினான்கு வயது. அந்தச் சிறுகதை 2004 ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் போட்டியில் முதலிடம் பெற்ற கதையாகும்.


3. இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை நான் 02 நூல்களை வெளியிட்டிருக்கிறேன். எனது முதலாவது நூலான 'பூ முகத்தில் புன்னகை' என்னும் சிறுகதைத் தொகுதி 2009 இல் வெளியானது. அப்போது நான் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்றுக் கொண்டிருந்தேன். அந்த நூலில் அதுவரை தேசிய, மாகாண ரீதியில் பரிசு பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருந்தேன். எனது இரண்டாவது படைப்பான 'நிழலைத் தேடி' சமூக நாவல் 2014 இல் எனது பல்கலைக்கழகக் காலத்தில் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளியானது. இந்நாவல் உயர் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட கவிதா டெலன்ட் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடமும் விருதும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


4. புதிதாக கவிதை எழுத வருபவர்களுக்கு மரபுக்கவிதை பற்றிய அறிவு அவசியம் என்று நினைக்கின்றீர்களா?

மரபுக் கவிதை எழுதுவதற்கு மொழிப் பயிற்சி அவசியம். ஏனென்றால் அது பொதுவாக ஒரு இலக்கணக் கட்டமைப்புக்குள் அமைந்தது. மொழியில் தனக்கிருக்கும் தேர்ச்சி, மொழிப்புலமை, மொழியின் அழகியல், ஓசை நயம் என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தே மரபுக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. ஆனால் நவீன கவிதை என்னும் போது அது ஒரு கட்டமைப்புக்குள் அடங்காதது. கவிதை என்பது ஒரு தூய கலை. அதனை தர்க்க ரீதியாக அணுக முடியாது. நவீன கவிதைகளின் பேசுபொருள் பொதுவாக நவீன வாழ்வியல் ஏற்படுத்திய சிக்கல்கள், பிரச்சினைகள், தாக்கங்கள் என்பவை சார்ந்த உணர்வின் வெளிப்பாடுகளாகவே நோக்கப்படுகின்றன. எனவே புதிதாக கவிதை எழுத வருபவர்கள் மரபுக் கவிதைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றே நான் கருதுகின்றேன்.


5. இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள்? சிறுகதைகள் பற்றிய உங்கள் எண்ணப்பாடு எவ்வாறு உள்ளது?

நான் இதுவரை ஏறத்தாழ 30 சிறுகதைகள் எழுதியிருப்பேன். சிறுவயதிலிருந்தே எனக்கு கதை கேட்பதிலும் கதை சொல்வதிலும் நிறைய ஆர்வம் இருந்தது. எனது தாயார் ஒரு சிறுகதை எழுத்தாளர் என்பதால் என் கதைப் பசிக்கு வீட்டிலேயே நல்ல தீனி இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏராளமான சிறுகதை நூல்களை வாசித்திருக்கிறேன். சிறுகதை பற்றிக் கூறப் போனால் அது இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்திற்கு வழங்கிய கொடை என்றுதான் கூற வேண்டும். சிறுகதைகளுக்கு கதைக்கரு என்பது முக்கியம். இந்தக் கதைக்கரு எங்கேயிருந்து உருவாகின்றது என்று நோக்கினால் அது மனித வாழ்விலிருந்தே உருவாகின்றது. மனிதர்களின் அனுபவமும், எண்ணங்களும் சுதந்திரமாக வெளிப்படும் போது தோன்றும் படைப்பிலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என்பவற்றுள் மனித வாழ்க்கைக்கு மிக நெருங்கிய வடிவமாக நான் சிறுகதையைக் கருதுவேன். சிறுகதைகள் எதிலிருந்தும் தோன்றலாம். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், சம்பவங்கள், அனுபவங்கள், கற்பனைகள் சிறுகதைகளாக மலரலாம். ஒரு சிறுகதையானது முடிவடையும் போது அதனைப் பற்றிய சிந்தனைகள் முடிந்து விடுவதில்லை. கதை முடிந்த பிறகும் அதன் சிந்தனைகள் நீண்டு கொண்டு சென்றால் அதை நான் ஒரு வெற்றிகரமான சிறுகதையாகக் கருதுவேன்.


06. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

எழுத்தாளர்களைவிட எழுத்துக்களை அதிகமாக வாசிப்பவள் நான். எனது வாசிப்பில் சிறுகதை, நாவல் என்பவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருந்தேன். நான் முதன் முதலில் வாசித்த படைப்புக்கள் எனது தாயாரின் படைப்புக்கள். தாயின் வழியிலிருந்தே எனக்குள் இலக்கிய ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக எனக்கு அறிமுகமான படைப்புக்கள் தென்னிந்திய எழுத்தாளர் ஹிமானா செய்யத் அவர்களுடையது. அவரின் சிறுகதை நாவல்களைப் படித்த பின்புதான் எனக்குள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. சாதாரண ஒரு விடயத்தை சுவாரஷ்யமாக சொல்லும் பாணி அவருடையது. அதன் பின்பு எனது வாசிப்புத் தளம் விரிந்து கொண்டே சென்றது. என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் என்று சொல்வதானால் ஒரு பெரிய பட்டியல் இருக்கின்றது. எல்லோரையும் இங்கே குறிப்பிட முடியாது என்பதால் நான் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை.


07. ஒப்பீட்டளவில் அதிக நேரகாலத்தை எடுத்து நாவல் எழுதுவது சிரமமாகத் தோன்றவில்லையா?

நாவல் எழுதுவதற்கு ஒப்பீட்டளவில் அதிக நேரகாலம் எடுத்தாலும் உண்மையில் அது எனக்குச் சிரமமாகத் தோன்றவில்லை. இதுவரை 02 நாவல்கள் எழுதியிருக்கின்றேன். (ஒன்று இன்னும் வெளியிடப்படவில்லை) அந்த அனுபவத்தில் சொல்கிறேன். நாவல் எழுதும் போது அதை நான் ஒரு எழுத்துப் பணியாகவே எண்ணவில்லை. அது என் வாழ்வுடன் ஐக்கியமாகி விடுகின்றது. அந்த நாவலைப் படைக்கும் காலகட்டத்தில் நான் அளவளாவுவது, பழகுவது, பேசுவது எல்லாம் அதில் வரும் கதாபாத்திரங்களுடனேயே.

ஒரு நாவல் வாசகனின் மனதில் பல்வேறுபட்ட உணர்ச்சிப் பேரலைகளை உண்டாக்கி விடும். ஒரு இடத்தில் மெல்லிய புன்னகையையும், இன்னொரு இடத்தில் மனதிற்குள் பேரிடரின் தாக்கமொன்றையும் உருவாக்கிவிடும். அதே போன்றதே நாவல் எழுதும் என் மனநிலையும். எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நாவலுடன் நானும் நகர்ந்து கொண்டிருப்பேன். அதன் பாத்திரங்களாகவும், பாத்திரங்களுடன் வாழ்ந்தும் விடுவேன். அதனால் எனக்கு நாவல் எழுதுவதென்பது மனதுக்கு நேசமான ஒரு விடயமாகவே இருக்கின்றது. சிரமத்தைத் தரவில்லை. எனது ஆசையெல்லாம் காலத்தின் நகர்வுடன் பல ஆண்டுகள் எடுத்தேனும் ஒரு நல்ல நாவலைப்படைக்க வேண்டும் என்பதே.


08. ஈழத்து இலக்கியப் போக்கு பற்றி என்ன சொல்வீர்கள்?

இன்று இலங்கையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நிறைய இளம் படைப்பாளிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான விடயமே. ஆனால் தம்மை ஒரு தரமான படைப்பாளியாக அடையாளப்படுத்துபவர்கள் இலங்கையின் இலக்கியப் போக்கில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றார்கள் என்பதே முக்கியமானது. இவர்களின் படைப்புக்கள் பெரும்பாலும் சமகாலப் பிரச்சினைகள் அல்லது புனையப்பட்ட கற்பனை வடிவங்களாக பல்வேறு தரநிலைகளில் வெளிப்படுகின்றது. இவ்வாறு ஒரே பாணியிலான படைப்புக்களை வெளியிடும் ஈழத்து இலக்கிய உலகம் அதன் பாரம்பரியக் கட்டுக்களை உடைத்துக் கொண்டு புதிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புக்களைத் தர வேண்டும்.


09. புதிதாக எழுத ஆரம்பிப்பவர்கள் பொதுவாக கவிதைத் துறையிலேயே ஈடுபாடு காட்டுவார்கள். நீங்கள் விதிவிலக்காக சிறுகதை, நாவல் துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்கள். இதற்கான விஷேட காரணங்கள் ஏதும் உண்டா?

நான் ஏற்கனவே கூறிய காரணம்தான். சிறுவயதிலிருந்தே கதைகளின் மீது நான் கொண்ட காதல்தான் காரணம். என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் எனக்குள் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குகின்றார்கள். ஒரே பாத்திரம் பல வகையான கதைகளை உருவாக்கும். நிஜ வாழ்க்கையைவிட கற்பனையில் வாழும் போது மகிழ்ந்து போகிறேன் நான். கற்பனையில் எனக்குப் பிடித்த பாத்திரமாக பல கதைகளில் உலாவுவேன் நான். இதுவே காரணம்.


10. வாசகர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமானது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து யாது?

இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. உண்மையிலேயே தனது மொழிப் புலமையையும், ஆற்றலையும் வெளிக்காட்ட மற்றவர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவதே வித்துவத்தனமானது என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்கள். இரண்டாவது படைப்பாளியின் படைப்பிற்கும் வாசகனின் புரிந்துணர்வுக்கும் இடையிலான முரண்பாடுகள்.

முதலாவது வகையான படைப்புக்கள் உண்மையில் இலக்கியத்திற்கு எந்த விதமான பிரயோசனமும் அற்றவை. ஏனென்றால் இந்த வகைப் படைப்புக்கள் இலக்கியத்தின் நோக்கத்தைத் திருப்தி செய்வதில்லை. இரண்டாவது வகையை எடுத்தால், படைப்பாளி என்பவன் சுதந்திரமானவன். அவனின் சிந்தனைகளைச் சிறைப்படுத்த முடியாது. குறிப்பாக கவிதையை எடுத்துக் கொண்டால் அது கட்டுரை, சிறுகதை, நாவல் போல நேரடியான இலக்கிய வகையல்ல. கவிதையில் உருவகங்கள், உவமைகள் முக்கியமானவை. அவை கவிஞனின் சூழலைப் பொறுத்து வேறுபடும். வாசகனுக்கு வாசிப்பு போதாத போது, புரிதலில் குறைபாடுகள் இருக்கும் போது அப்படைப்பு ஒரு விளங்காத தன்மையை ஏற்படுத்தும் இது படைப்பாளியின் பிழையல்ல.


11. தொண்ணூறுகளுக்குப் பின் தோன்றிய பெண் எழுத்தாளர்கள் குறிப்பாக நாவல் எழுதும் முயற்சிகளில் ஈடுபடுவது மிக மிக அரிது. இதற்கு என்ன காரணம் கூறுவீர்கள்?

முக்கியமாகக் கூறப்போனால் நாவல் எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவை. ஒரு சீரான நீரோட்டம் போல நகர வேண்டும் என்றால் அதைப் படைக்க நேரமெடுக்கும். இன்றைய அவசரச் சூழலின் வேலைப் பளுக்கள் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்ததாக இன்றைய இலத்திரனியல் சூழலில் நிறைய வாசகர்கள் காட்சி இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு விட்டார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.


12. பெண்ணியம் சார்ந்த உங்கள் கொள்கை என்னவென்று கூறுங்கள்?

இன்று உலகில் மிகவும் தவறாக விளங்கப்பட்ட வார்த்தை பெண்ணியம். என்னைப் பொருத்தவரையில் எல்லா விடயங்களிலும் பெண்கள் சம உரிமை கோருவது பொருத்தமில்லை. ஏனென்றால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உடலியல், உளவியல் ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் சில விடயங்களில் சம உரிமை வேண்டும் என்றே கருதுவேன்.

பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் தரப்பட வேண்டும். ஒரு தவறு செய்யும் போது பெண்ணின் தவறு பாரதூரமானதாகவும் ஆணின் அதே தவறு சாதாரணமானதாகவும் கருதப்படும் நிலை மாற வேண்டும். யார் செய்தாலும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். பெண்ணானவள் திருமணத்திற்குப் பின்பு எதையும் சாதிக்க முடியாது. ஆணானவன் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்ற சமூகத்தின் கட்டுக்கோப்புக்கள் உடைத்தெறியப்பட வேண்டும்.


13. உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலையில் கற்கும் போதே நான் நிறைய தமிழ்த்தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகள், மீலாத்தினப் போட்டிகள், சாகித்திய விழாப் போட்டிகள், இதர போட்டிகளில் கலந்து கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை, விவாதம் போன்ற பிரிவுகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்வதானால் எட்டாந் தரத்தில் கல்வி பயின்ற போது பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நடாத்திய தேசிய ரீதியான சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடமும், 2006 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகம் நடாத்திய உலக சிறுவர் தின சிறுகதைப் போட்டியில் முதலாமிடமும், 2008 இல் சாகித்திய விழாப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடமும், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய தேசிய மீலாத் போட்டிகளில் முதலாமிடமும் பெற்றேன். அதுமட்டுமில்லாமல் உயர் கல்வி அமைச்சு 2012 ஆம் ஆண்டு நடாத்திய கவிதா டெலன்ட் போட்டியில் எனது ஷநிழலைத் தேடி| நாவல் முதலிடமும் விருதும் பெற்றது எனக்கு மறக்க முடியாத நிகழ்வு. 2014 இல் அதே நிகழ்வில் எனது சிறுகதைத் தொகுப்புக்கு ஆறுதல் பரிசும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


14. இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

பலரும் சொல்வது போல ஒரு படைப்பாளியின் சிந்தனை பரந்ததாக இருக்க வேண்டும். பேசப்படாத நிறைய விடயங்கள் பேசப்பட வேண்டும். எழுதப்பட வேண்டும். வாசிப்புத்தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும். 'நிறைய வாசியுங்கள். குறைவாக எழுதுங்கள்'!!!


நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்