பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, April 7, 2020

46. ராஹிலா ஹலாம் உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.08.27

ராஹிலா ஹலாம் உடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது இயற்பெயர் திருமதி. ராஹிலா ஹலாம். நான் இணைய வானொலி அறிவிப்பாளினியாக தொழில் புரிகின்றேன். நான் பிறந்து வளர்ந்தது சென் செபஸ்தியன் வீதி, கொழும்பு – 12. தற்போது புதுக்கடையில் வசித்து வருகிறேன். எனது ஆரம்ப கல்வியை மிஹிந்து மாவத்தை முஸ்லிம் வித்தியாலயத்திலும் (தற்போதைய அல் ஹிக்மா கல்லூரி), எனது உயர் கல்வியை கொழும்பு அல் ஹிதாயாவிலும் கற்றேன். எனது கணவர் கணக்காளராக தொழில் புரிகின்றார். எனது மூத்த மகன் ரகீப் அல் ஹாதி, கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் (2017) தரம் மூன்றில் கல்வி கற்கின்றார். இளைய மகன் ரஷPத் அல் ஹாமி. அவருக்கு 03 வயது. எனது பெற்றோர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். எனக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர். அவர்கள் திருமணம் முடித்து வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.


02. நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது? உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வெளிவந்தது?

சரியாக சொல்வதென்றால் நான் தரம் எட்டில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும்போது மூன்று சிறுகதைகள் எழுதினேன். அவைதான் நான் எழுதிய முதலாவது ஆக்கங்கள். ஆனால் அவை எப்படியோ தொலைந்து விட்டன. அதேநேரம் அவற்றைப் பாதுகாப்பதற்கும் போதியளவு அறிவும் வழிக்காட்டுதலும் இருக்கவில்லை. பின்னர் 1997 ஆம் ஆண்டு 'பாவம் பாட்டி' என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதையை எனது தமிழ் மொழிப்பாட ஆசிரியை திருமதி. அன்வர்தீன் அவர்களின் தூண்டுதலின் பேரில் எழுதினேன். அதுதான் நான் எழுதிய முதற் கவிதை. அப்பொழுது அது ஞாயிறு வீரகேசரியில் சிறுவர் பகுதியில் பிரசுரமானது. அதுவே பத்திரிகையில் வெளிவந்த எனது முதலாவது ஆக்கமாகும். அவ்வாக்கம் என்னுடைய இயற்பெயரிலேயே வெளிவந்தது. பிற்காலத்தில் 'ஆஷிகா' என்ற புனைப்பெயரிலேயே எழுத ஆரம்பித்தேன்.


03. இதுவரை எழுதிய உங்கள் ஆக்கங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை நான் எழுதிய ஆக்கங்களில் அதிகமானவை கவிதைகளே. ஏனெனில், வானொலி நிகழ்ச்சிக்காகவும் நான் கவிதைகள் எழுதி சக அறிவிப்பாளர்களுக்கு கொடுத்துள்ளேன். அதேநேரம் கவிதையில் உள்ள ஈடுபாடும், அவை அதிகமாக எழுத காரணமாகும். சில சிறுகதைகளும், கட்டுரைகளும், ஒரு சில நூல் விமர்சனங்களும் எழுதியுள்ளேன். அண்மைக்காலமாக சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாட்டினைக் காட்டி வருகின்றேன்.


04. படைப்பாக்கங்களுக்கு முன்வைக்கப்படும் விமர்சனங்கள், எதிர்மறைக் கருத்துக்களை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

எனது திறமையை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமாகவே நான் அதனை எடுத்துக்கொள்கின்றேன். பலர் உண்மையான அக்கறையோடும் அன்போடும் ஆக்கங்களை விமர்சிப்பார்கள். ஒரு சிலர் எதிர்மறையாக விமர்சிப்பார்கள். ஆனாலும் அவற்றை நான் எனது பயணத்துக்கு துடுப்பாகவே பயன்படுத்துகின்றேன். விக்கிரமாதித்தன் போன்று மனந்தளராது தொடர்ந்தும் எழுதுகின்றேன். ஆரம்பத்தில் இப்படியான மன தைரியம் எனக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் வாழ்க்கைக் கற்றுத் தந்தப் பாடம், மனஉறுதி ஆகியவற்றை எனக்குள் வாங்கிக்கொண்டேன்.



05. உங்களுக்குக் கிடைத்த கருவை எப்படி படைப்பாக்குகிறீர்கள்?

முதலில் கவிதையாக வடிப்பேன். சில காட்சிகள் சட்டென மனதில் தோன்றி கவி வரிகளை எழுதிவிடும். பின்னரே அது ஏட்டுக்குள் ஏறுகிறது. இன்னும் சில சம்பவங்கள், கண்முன் நடப்பவை, ஒருவர் மூலம் கேட்டவை என்பன சிறுகதைகளாகவும் கட்டுரைகளாகவும் உருவெடுக்கின்றன. மிக அண்மைக்காலமாக நாவல் ஒன்று எழுத வேண்டும் என்ற ஆவலும் என்னுள் எழுந்துள்ளது. இறைவன் நாடினால், எமது நாவலாசிரியர்களின் அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு எழுதலாம் என எண்ணியுள்ளேன்.


06. பெண்ணியக் குரல் பற்றிய உங்கள் கருத்து எப்படியுள்ளது?

பெண்ணியம் என்பது பெண்களைச் சாடாது அவர்களின் உரிமைகளை முழங்குவதாய் இருக்க வேண்டும். பெண்ணியம் பேசிக்கொண்டே அவர்களை அடக்குவதாக இருக்கக் கூடாது. பெண்களுக்கு சமஉரிமை வழங்காவிடினும் அவர்களை மதிக்கத் தெரியாதவர்களும் இன்னும் இருக்கின்றனர்.


07. உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்களின் பங்களிப்பு எந்தளவில் உள்ளது?

நிறையவே உள்ளது. அன்று தொட்டு இன்று வரை ஒரு எழுத்தாளன் எவ்வளவுதான் எழுதினாலும் இலக்கிய உலகுக்கு அவனை அடையாளப்படுத்துவது ஊடகங்கள்தான். அது இலத்திரனியல் ஊடகமாக இருக்கலாம். அல்லது அச்சு ஊடகங்களாகக்கூட இருக்கலாம். அதே போன்றே நான் பல வருட காலங்கள் எழுதி வந்தாலும் என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியதும், மூத்த அனுவமிக்க எழுத்தாளர்கள் பலரை அறிந்துகொள்ள ஏதுவாயிருந்ததும் ஊடகங்கள்தான். உங்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் இந்த ஊடகம்தான். இன்று வரையும் எனது எழுத்துக்களை பிரசுரித்துக்கொண்டும் பதிவேற்றிக்கொண்டும் இருப்பவை ஊடகங்கள்தான். எனவே எப்பொழுதும் ஊடகங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.


08. யாருடைய படைப்புக்களை மிகவும் ஆர்வமாக வாசிப்பீர்கள்?

அவ்வாறு குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. எனது சிறுவயது முதல் என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. யார் எழுதிய புத்தகம் என்று பார்க்க மாட்டேன். வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிப்பேன். அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. யாருடைய எழுத்து சாயலும் என்னிடம் வரக்கூடாது என்பதால் இப்பொழுது அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன். இதையேதான் நான் என்னுடைய அறிவிப்புத் துறையிலும் கடைப்பிடிக்கின்றேன். எனக்கென்ற ஒரு தனிப்பாணியில் அறிவிப்பு செய்கின்றேன். யாருடைய எழுத்தையும் பின்பற்றாது எழுதுகின்றேன்.


09. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யாவர்?

தென்னிந்திய எழுத்தாளர்கள் அகிலன், ரமணிச்சந்திரன், சுஜாதா, பாலகுமாரன், இந்திரா சௌந்திரராஜன் போன்றவர்கள். கல்கியில் அகிலன் எழுதிய தொடர்கதையை சேர்த்து எனது தந்தை புத்தகமாக செய்து வைத்திருந்தார். அவற்றை வாசிப்பதற்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவை 60களில் வெளிவந்தவை என நினைக்கின்றேன்.


10. புலம் பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்கள் குறித்து?

புலம் பெயர் எழுத்தாளர்கள் பலர் இப்பொழுது பரவலாகக் காணப்படுகின்றனர். அவர்களின் எழுத்துக்கள் அதிகமாக யுத்த சூழலை மையமாகவே வைத்தே வருகின்றன. அதையும் தாண்டி அவர்களது இரசனைமிக்க பல படைப்புகளையும் காணலாம்.


11.  உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?

எனக்கு மறக்க முடியாத முதல் அனுபவம், 'தட்டி தட்டி' என்ற கவிதை பத்திரிகையில் வெளிவந்தபோது நான் முகமறியாத பலர் என்னைப் பாராட்டி இன்னும் எழுத ஊக்குவித்தார்கள். பின்னர் முகநூலில் பதிவேற்றிய என்னுடைய கவிதைகளைப் பார்த்து எனக்கு மூத்த எழுத்தாளர்கள் பலரின் பாராட்டு கிடைத்தமை மற்றும் 2012 ஆம் ஆண்டளவில் எனது கவிதைகள் சிலவற்றை வாசித்து கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர் கபிலன் வைரமுத்து அவர்கள் என்னைப் பாராட்டி, மேலும் நான் எழுத ஊக்குவித்தமை மறக்க முடியாத அனுபவங்களாகும். மேலும் மிக அண்மையில், கடந்த டிசெம்பர் மாதம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாட்டில் என்னுடைய இலக்கிய பணிக்காக விருது வழங்கி கௌரவித்தனர். இது நான் மேடையேறிப் பெறும் முதல் விருதாகும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.


12.  இலக்கியத் துறை சார்ந்த உங்களது எதிர்பார்ப்புக்கள் அல்லது இலட்சியங்கள் எவை?

இலக்கியத்துறை சார்ந்த எனது இலட்சியங்கள் என்றால் கவிதை நூல் வெளியிட ஆர்வமாய் உள்ளேன். என்னுடைய எண்ணம் என்னவென்றால் எழுதப் படிக்கத் தெரியாத மற்றும் எழுத்துக் கூட்டி வாசிக்கும் ஒரு சாதாரண நபர் அல்லது ஒரு கூலித் தொழிலாளி பத்திரிகை எடுத்து வாசித்தால் புரிந்துக் கொள்ளக்கூடியதாக என்னுடைய படைப்பு இருக்க வேண்டும். அவ்வாறான சாதாரண மொழி நடையிலும் இலகு சொற்களைக் கொண்டே எனது ஆக்கங்களைப் படைக்கிறேன். அதனை வாசிப்பதைக் கொண்டு மற்றவர்கள் ஏதேனுமொரு விதத்தில் பயன்பெற வேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கின்றேன்.

13. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அன்பென்ற ஒன்றாலே
அடிபணிவீர்..
பிறரை அதிகாரத்தாலே
ஆளாதீர்..
உற்றாரும் உறவினரும்
ஒன்றென்பீர்..
அயலாரை ஊராரை
ஒதுக்காதீர்..
சமத்துவமும் சகோதரத்துவமும்
ஊற்றாவீர்..
பகைகொள்ளும் வஞ்சகத்தை
புதைத்திடுவீர்..
வன்சொல்லும் கடும்போக்கும்
வேண்டாதீர்..
இன்சொல்லும் நல்லுளமும்
கொண்டிடுவீர்..

என்றுகூறி, உங்களுக்கு எனது உளம்நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன்!!!

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்





No comments:

Post a Comment