பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, March 8, 2024

58. அஷ்வினி வையந்தி அவர்களுடனான நேர்காணல்

கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி விரிவுரையாளர் அஷ்வினி வையந்தி அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் சிவரூபினி. 'அஷ்வினி வையந்தி' என்ற புனைப் பெயரில் எழுதிக்கொண்டிருக்கும் நான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட உதவி விரிவுரையாளராக தமிழ்க் கற்கைகள் துறையில் கடமையாற்றி வருகின்றேன். என்னுடைய அம்மா என்னைப் படிக்க வைப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். சிறுவயதில் நானும், அண்ணாவும், அம்மாவும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தோம். ஆனாலும் அந்த வறுமை நிலையிலிருந்து மேலே வர வேண்டும் என்ற நோக்கோடு படிக்கத் தொடங்கினேன். படித்தால் மாத்திரம் போதாது. கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கின்ற அம்மாவையும், அண்ணாவையும் பெருமைப்படுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அதற்காக நான் தெரிவு செய்த துறைதான் இலக்கியம். இத்துறையில் நான் சாதிக்க வேண்டும் என்பதற்காக அஷ்வினி என்ற எனது வீட்டுப் பெயரையும், எனது அம்மாவின் பெயரையும் சேர்த்து அஷ்வினி வையந்தி என்ற புனைப் பெயரை வைத்துக்கொண்டு இலக்கியத் துறைக்குள் காலடி வைத்தேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை ஆகியன இலக்கிய ஈடுபாட்டுக்கு எந்தளவில் உதவியாக அமைந்தது?

சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் மீது எனக்கு அலாதி விருப்பம். ஆனால் புத்தகங்கள் வாங்கி படிப்பதற்கான வசதிகள் இருந்ததில்லை. குறிப்பிட்ட ஒரு வயதில் அதாவது நான் உயர் தரம் படித்த காலத்தில் திஃ கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் உள்ள நூல் நிலையத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். நான் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் நானும் ஒரு புத்தகம் எழுதினால் என்ன? என்ற எண்ணம் வரத் தொடங்கியது. அதன் ஆரம்ப கட்டமாக உயர் தரம் படித்துக்கொண்டிருக்கும்போது கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பின்னர் பல்கலைக்கழகம் சென்ற பின்னர் கற்றல் நடவடிக்கைகளோடு சேர்த்து இலக்கியத்திலும் எனது ஆர்வத்தைச் செலுத்தினேன். புத்தகங்கள் வாசித்தது மட்டுமன்றி புத்தகங்களை வாங்கிப் படிக்கவும் செய்தேன். எனது இலக்கிய ஆக்கங்களுக்கு எனது நண்பர்கள் ஆதரவினைத் தந்தார்கள். அதுமட்டுமன்றி எனது வீட்டிலும் பெரிய ஆதரவு இருந்தது. அத்தோடு எனது பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரும் என்னை வழிநடத்திச் சென்றார்கள். அவர்களின் வழிகாட்டுதல் என்னை ஒரு எழுத்தாளராக உருவாக்கியது எனலாம்.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

முதன்முதலாக உயர் தரம் படிக்கும்போது கவிதை எழுதத் தொடங்கினேன். அந்தக் கவிதைதான் என்னை எழுத்துத் துறைக்குள் அறிமுகம் செய்து வைத்தது. அத்துடன் நண்பர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. மட்டுமல்லாமல் எனது வீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. எனது வீட்டாரும், நண்பர்களும் தந்த உற்சாகம் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. 


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எப்படியிருந்தது?

எனக்கு எனது அம்மா மீது அளவுகடந்த பாசம் உண்டு. ஆனால் அதை அவரிடம் வெளிப்படுத்தியது கிடையாது. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் ஓடிய ஓட்டத்தில் பல துயரங்களை கடந்து வந்ததால் பாசத்தை வெளிப்படையாகக் கட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் அம்மா மீது கோபப்பட்டுக் கொண்டே இருப்பேன். ஆனாலும் என்றேனும் ஒருநாள் என் அம்மாவைப் பற்றி வெளியுலகம் பேச வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டே இருந்தேன். அந்த ஓட்டத்தின் ஆரம்பப் புள்ளிதான் எனது கவிதைக்கான அடித்தளமாக இருந்தது. முதன்முதலாக நான் எழுதிய கவிதை பாசத்தின் வெளிப்படாகத்தான் அமைந்தது. அதாவது முதன்முதலாக நான் எனது அம்மாவைப் பற்றித்தான் கவிதை எழுதினேன். இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் மனதில் தோன்றிய முறையில் எழுதிய கவிதைதான் அது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது? எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

எனது முதலாவது ஆக்கமாக கவிதைதான் வெளிவந்தது. அதாவது நான் உயர் தரம் படிக்கும்போது எனது முதலாவது கவிதை 2014 இல் பள்ளிக் கூடம் என்ற தலைப்பில் வானவில் என்ற சஞ்சிகையின் ஒக்டோபர் மாத இதழில் வெளிவந்தது.


இதுவரை எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்? அந்த நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை "யாவும் ஆனந்தமே" என்ற கவிதை நூலை மட்டுமே வெளியிட்டுள்ளேன். இந்நூலில் பாசம், தன்னுணர்வு போன்ற கருப்பொருட்களுடன் பொதுவான சில விடயங்கள் பற்றியும் கவிதைகளை எழுதியுள்ளேன். இப்படித்தான் கவிதை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் எனக்குத் தோன்றிய வரையறைகளைக் கொண்டு கவிதையின் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய கவிதைகள்தான் இந்நூலில் காணப்படுகின்றன.


உங்களது முதல் பிரசவமான "யாவும் ஆனந்தமே" என்ற உங்களது கவிதைத் தொகுதியின் தலைப்பு குறித்துக் கூறுங்கள்?

உண்மையில் இந்தத் தலைப்பு பற்றி எங்கேனும் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அதற்கான சந்தர்ப்பத்தை இவ்விடத்தில் ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி. நாம் வாழும் உலகத்தில் நாம் காணுகின்ற எல்லாப் பொருட்களும் நமக்கு ஆனந்தத்தை தரத்தான் செய்கின்றன. ஆனால் நாம் அவை தருகின்ற கெட்ட விடயங்களை மாத்திரம் பேசிக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கின்றோம். அதனால் பல கெட்ட விளைவுகள் உருவாகின்றன. ஆனால் ஒரு விடயத்தில் இருக்கின்ற நல்ல விடயங்களை எடுத்து நோக்கினால் வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக அமையும். எனவே நாம் காணுகின்ற அனைத்திலும் ஆனந்தம் உண்டு. அதை நாம் பார்க்கத் தவறுகின்றோம். அவ்வளவுதான். எனவே எல்லாமே நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் செய்கின்றன. அதனால்தான் யாவும் ஆனந்தமே என்ற தலைப்பை எனது முதல் கவிதை நூலுக்கு வைத்துள்ளேன். அத்தோடு அத்தலைப்பில் கவிதை ஒன்றையும் எழுதியுள்ளேன். அக்கவிதை எனது கவிதைப் புத்தகத்தில் முதலாவது கவிதையாக இடம் பிடித்துள்ளது.


உங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் யாவை? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

எனது கவிதை நூலில் தாய்ப் பாசம், பெண்களின் அடிமைத்தனம், தனிமை, மத நல்லிணக்கம், தனிமனிதனுக்கு நடைபெறுகின்ற சில விடயங்கள் போன்ற விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். இக்கவிதைகள் மூலம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் பேசியுள்ளேன். 

குறிப்பாக பெண்களுக்கு நடைபெறுகின்ற பிரச்சினைகளில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும். சமூகத்தில் நடக்கின்ற அடிமைத்தனங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் போன்ற சிந்தனைகளைப் பற்றிப் பேசியுள்ளேன். அத்தோடு மனிதர்களிடத்தில் நல்ல சிந்தனைகளை வலுப்படுத்த வேண்டியும் சில கவிதைகளை எழுதியுள்ளேன். 


மதம், இனம், மொழி போன்ற பாகுபாட்டை வைத்துக்கொண்டு மனிதன் தங்களுக்குள்ளே முரண்படும் நிலை இல்லாது போக வேண்டும், மனிதம் என்ற சொல்லால் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும், ஒரு கட்டுப்பாட்டிற்குள் நின்றுகொண்டு மனிதன் என்னும் பெயரில் அரக்கர்களாக வாழ்ந்தது போதும் எல்லோரையும் சக மனிதனாக மதித்து நடக்க வேண்டும் போன்ற கருத்துக்களை எனது கவிதைகளுக்கூடாக வலியுறுத்துகின்றேன்.


நீங்கள் இதுவரை அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள், இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

அப்படி சொல்வதற்கில்லை. நான் கவிதைகள் மாத்திரமில்லை. புத்தக விமர்சனம், சிறுகதை, அனுபவக் கட்டுரைகள் போன்ற இலக்கியத் துறைகளிலும் ஈடுபாடு காட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன். அத்தோடு பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்படும் ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து கொண்டும் இருக்கின்றேன். எனது சிறுகதைகள் பல "சிறுகதை மஞ்சரி" என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. 


மித்திரன், ஜீவநதி, எங்கட புத்தகங்கள் போன்ற சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் எனது புத்தக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இவைற்றையெல்லாம் சேர்த்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அவை எல்லாம் இதழ்களில் வந்த ஆக்கங்களாகவே உள்ளன. என்றேனும் ஒருநாள் இத்தகைய ஆக்கங்களும் புத்தகமாக வெளிவரும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கின்றேன்.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

ஆரம்ப காலத்தில் அதாவது 80, 90 காலப் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் சிலர் குறிப்பிட்ட மரபுக்குள் கவிதை நின்றுவிட வேண்டும் எனவும் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அப்படி எதிர்பார்ப்பவர்கள் எனது கவிதைகளைவிட புத்தக விமர்சனங்கள் நன்றாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ வித்தியாசமான முறையில் எழுதுகிறேன் எனவும் தொடர்ந்து எழுதுமாறும் குறிப்பிடுகின்றார். 


பேராசிரியர் யோகராசா, பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் போன்றோர் எனது கவிதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்கள்தான். பேராசிரியர் யோகராசா அவர்கள் வித்தியாசமான முறையில் எழுதுகிறேன் எனவும் தொடர்ந்து எழுதுமாறும் கூறி வருகின்றார். இதைத் தவிர்த்து இன்றைய கால கட்டத்தில் உள்ள பலர் எனது கவிதைகளை விரும்பிப் படிக்கின்றார்கள். நான் எனது வாசகர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளேன். அவர்களை நான் நேசிக்கின்றேன். அவர்களை திருப்திப்படுத்த வேண்டி எழுதிகொண்டிருக்கின்றேன். என் எழுத்துக்களும் அவர்களை திருப்திப்படுத்தும் என்றே நம்புகின்றேன். அதை நான் நேரடியாகக் கண்டும் இருக்கின்றேன்.


நீங்கள் எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்வீர்களா? 

அவள் ஒரு சிறந்த தாய் என்ற தலைப்பில் அம்மாவிற்காக ஒரு கவிதை எழுதினேன். உண்மையில் அந்தக் கவிதையில், எனது அம்மா நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியே எடுத்துக்கூறியுள்ளேன். அந்தக் கவிதை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. இந்தக் கவிதையை எனது நூலில் வாசகர்கள் வாசித்துப் பார்க்கலாம்.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞரின் தாக்கம் காணப்படுகின்றது?

உண்மையைச் சொல்லப்போனால் நான் ஈழத்து படைப்புக்களைப் படிப்பதைவிட தென்னிந்திய படைப்புக்களையும், உலக படைப்புக்களையும் படிப்பது அதிகம். குறிப்பாக நா. முத்துக்குமார், யுகபாரதி, வைரமுத்து ஆகியோரின் கவிதைகளை நிறையவே படித்துள்ளேன். அவர்களுடைய கவிதைகளின் தாக்கம் என்னுடைய கவிதைகளில் இருக்கின்றது என்று சொல்வதற்கில்லை. எனக்குத் தோன்றிய விதத்தில் எனது கவிதைகளை எழுதுகிறேன். அவ்வளவுதான்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

ஆம் நிச்சயமாக. எனது கவிதைகளை வாசிக்கும் வாசகர்கள் பலரைப் பார்த்துள்ளேன். குறிப்பாக பெண் வாசகர்கள் பலர் என்னைப் போல் வர வேண்டும் எனவும், எனது கவிதைகள் தங்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் நேரடியாகவே என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். அது மாத்திரமின்றி சாதி, மத கட்டுக்கோப்புக்களில் இருந்து விடுபட்டு எல்லோரையும் சக மனிதனாக மதிக்கும் நிலையை எனது கவிதைகள் வற்புறுத்துகின்றன. எனவே என்னுடைய கவிதைகள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.


இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள்? உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது?

குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். எனது அம்மாவை வைத்து கற்பனையுடன் கூடிய சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளேன். அத்தோடு நடைமுறையில் நான் சந்தித்த பல மனிதர்களின் பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டும் சில சிறுகதைகளை எழுதியுள்ளேன்.


உங்களது இலக்கிய வாழ்வில் உங்களுக்கு உதவியவர்கள் அல்லது மறக்க முடியாதவர்கள் இருப்பின்?

நான் இலக்கிய உலகிற்கு வருவதற்கு பலர் உதவி செய்துள்ளார்கள். குறிப்பிட்டு இவர்தான் அந்த நபர் எனச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் எனக்கு உதவியவர்களாகப் பலர் இருக்கிறார்கள். 


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

நிச்சயமாக. பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பலதைப் பற்றியும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனவும் முடிந்தவரை குறிப்பிட்டுள்ளேன். 


கவியரங்குகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்கள்?

படிப்பில் கவனம் செலுத்திய காரணத்தால் கவியரங்குகளில் கலந்து கொண்ட நிகழ்வுகள் குறைவுதான். ஒரே ஒரு தடவை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித் தினத்தில் நடைபெற்ற கவியரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அந்தக் கவியரங்கு தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியதாக இருந்தது. அந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தார்கள். குறிப்பிட்ட கவியரங்கில் கலந்து கொண்டமையால் அவர்கள் முன்னிலையில் என்னைக் கவிதைத் துறையிலும் அடையாளப்படுத்திக்கொண்டேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவம் என்றால் எனது கவிதை நூல் வெளியீட்டு விழாதான். என்றேனும் ஒருநாள் புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கானக் களம் அமையவில்லை. திடீரென அதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. இருபத்தியெழு வருட ஆசை நிஜமாகப் போவதை எண்ணி மகிழ்ந்துகொண்டேன். அத்தோடு அன்றைய நிகழ்வுக்கு மட்டக்களப்பில் இருந்து பேராசிரியர் யோகராசா அவர்கள் மிகுந்த விருப்பத்தோடு வருகை தந்திருந்தார். அது எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியை அளித்திருந்தது. அன்றைய நாள் எனது அம்மாவும், எனது அண்ணாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. எத்தனை நாள் எதற்காக ஓடிக்கொண்டிருந்தேனோ அதை அடைந்த தருணம் அது. அன்றைய நாளை என்னால் மறக்கவே முடியாது.


இதுவரை நீங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் குறித்தும் குறிப்பிடுங்கள்?

நான் கட்டுரைகளைக் குறைவாகவே எழுதியுள்ளேன். நான் சேகரித்த புத்தகங்கள் பற்றி எங்கட புத்தகங்கள் என்ற சஞ்சிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதினேன். அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாட்டுக்காக 2022 ஆம் ஆண்டு எனது ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியை எழுதி அனுப்பினேன். அக்கட்டுரை மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. முகநூலில் எனது நூல் தொடர்பான விமர்சனங்களைப் பார்த்து பல எழுத்தாளர்கள் என்னை நூல் விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டு எனக்குப் புத்தகங்கள் பலவற்றை அனுப்பி வைத்துள்ளார்கள். ஈழத்து, தமிழக, புலம்பெயர் நாடுகளில் உள்ள பல எழுத்தாளர்களின் ஆதரவும் எனக்கு உள்ளது.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

தொடர்ந்து எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அத்தோடு சொந்தமாக எனக்கென்று ஒரு நூலகத்தையும் உருவாக்க வேண்டும். இந்தக் கனவுகளோடு சேர்த்து பல கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனம் என இலக்கிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன். அத்தோடு எனது அம்மாவின் வாழ்க்கை வரலாற்றினை நாவலாக எழுத வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.


உங்களது படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எங்கட புத்தகங்கள் நடத்திய இலக்கியப் போட்டியில் எனது சிறுகதை மூன்றாம் இடத்தையும், கட்டுரை முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்தோடு சிறுகதை மஞ்சரியில் மாதம் மாதம் வெளிவருகின்ற சிறுகதைகளில் இருந்து சிறந்த சிறுகதை ஒன்று தெரிவு செய்யப்படடு 1000 ரூபாய் பணப் பரிசு வழங்கப்படும். அவ்வாறு எனது சிறுகதை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. அச்சிறுகதையின் தலைப்பு ஷபிறகு சொல்கிறேன்| என்பதாகும். 

இதைத் தவிர்த்து எனக்கு அறிவுச் சுடர் விருது (2021), கலைஞருக்கான பாராட்டு விருது (2023) போன்ற சில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அறிவுச் சுடர் விருது 2021 இல் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறந்த மாணவராக செயல்பட்டமையைப் பாராட்டி அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தினால் (இந்தியா) வழங்கப்பட்டது. மற்றது கலைஞருக்கான பாராட்டு விருது அகத்தியர் கலைமா மன்றத்தினால் 2023 தை மாதம் 17 ஆம் திகதி வழங்கப்பட்டது.


சக இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன? 

நந்தினி சேவியர் என்னும் இலக்கியப் படைப்பாளி ஒரு நேர்காணலில் இளந்தலை முறையினருக்கு சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், சிறந்த நூல்களை வாசியுங்கள் அவற்றை பற்றி விமர்சனம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கருத்துக்களையே இளம் படைப்பாளிகளுக்கு நானும் முன்வைக்கின்றேன். நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். அவற்றைப் பற்றி கலந்துரையாடுங்கள். வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள். புதுப்புது விடயங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருங்கள். காலம் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே ஓரிடத்தில் தேங்கிக் கிடக்காமல் ஓடிக்கொண்டே இருங்கள். 

பிரச்சினைகள், சவால்கள் வாழ்வில் வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருங்கள். சவால்கள் உருவாகும்போதுதான் வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கும். எனவே தேங்கி நிற்காமல் உங்கள் திறமையின் மேல் நம்பிக்கை கொண்டு பயணித்துக்கொண்டே இருங்கள். என்றேனும் ஒரு நாள் வெற்றி என்னும் இலக்கை அடையலாம்.


இந்த நேர்காணல் மூலமாக விசேடமாக ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

எனது ஓட்டத்தில் நான் பல வலிகளைக் கடந்து வந்தேன். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். எந்த இடத்தை அடைய வேண்டும் என நினைத்துக்கொண்டேனோ அந்த இடத்திற்கு வந்துவிட்டேன். வெற்றியின் சுவை எப்படி இருக்கும் என்பதை நுகர்ந்துவிட்டேன். ஆனாலும் இது வெற்றியில்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

வெற்றியை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டு வரும்போது விமர்சனங்களை முன்வைப்போர் ஏராளம். அவர்களை எதிர்த்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களை விட்டு விலகி முன்னோக்கி வாருங்கள். வாழ்வின் வெற்றி என்பது சக மனிதனை நேசித்தல், சக மனிதனோடு அன்புடன் நடத்தல் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே ஒவ்வொரு நபரைக் கடக்கும் போதும் புன்னகையோடு கடப்போம். என்னைப் பொறுத்தவரை இதுதான் வெற்றி. 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment