பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, September 7, 2014

18. திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த திகதி - 2015.03.28

திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்கள் பிறந்த இடம், கல்லூரி வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவள். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றேன். பாடசாலைக் காலங்களில் நடனம், நாடகம், விளையாட்டு, பேச்சு, கவிதை என பல துறைகளிலும் பங்களிப்புச் செய்தேன்.

02. உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுங்கள்?

எனது குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். எனது கணவர், இரண்டு பெண் பிள்ளைகள் நான் மற்றும் உறவினர்கள் சேர்ந்ததே என் குடும்பம்.

03. உங்கள் குடும்பத்தினருக்கும் கலைத் துறையில் ஈடுபாடு உண்டா?

எனது கணவர், மகள்மார் இருவர், நான் நால்வருமே கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்தாம். எனது கணவர் நாடகத்துறையில் பங்குகொண்டு மேடை நாடகங்களில் நடித்தவர். அதேபோன்று மகள்மார் இருவருமே வீணை வாசிப்பதிலும் பரத நாட்டியத்திலும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். நானும் கல்லூரிக் காலத்தில் பல ஆங்கில நாடகங்களில் நடித்து, பரிசும் பெற்றிருக்கிறேன்.  மேலும் சில மேலைத்தேய இசைக்கருவிகள் இசைக்கும் பயிற்சியும் உண்டு. அந்த ஈடுபாடு தான் என்னால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நுண்கலைக்குழுச் செயலாளராக இருந்து சிறப்பான இசை விழா ஒன்றை நடத்த உந்து சக்தியாக அமைந்தது

04. உங்களது இலக்கியத் துறை ஈடுபாடுகள் பற்றி விளக்கமாகக் கூறுவீர்களா?

எனது இலக்கியத்துறை ஈடுபாட்டைச் சொல்வதானால் இயல்பாகவே என்னிடம் இலக்கிய ஆர்வம் இருக்கிறது. அவ்வார்வத்தை ஈடுபாடாக மாற்ற துணை இருந்தது எனது கணவரின் அதீத இலக்கிய ஈடுபாடும் இலக்கியத்தேடலும் தான். எனது தொழிற்துறை வேலைப்பளுவால் நான் சோர்ந்து போகும்போதெல்லாம் இலக்கியத்தேடலும் இரசனையும் தான் என்னைப் புத்துணர்வு பெறச்செய்கின்றன. எனது வீட்டில் இருக்கும் ஏறத்தாழ ஐயாயிரம் பல்துறை நூல்களைக் கொண்ட நூலகம் துணையாக இருக்கிறது.

05. இலக்கிய உலகில் மறக்க முடியாதவர்கள் யாராவது உண்டா? 

இலக்கிய உலகில் மறக்க முடியாதவர்கள் யாராவது உண்டா என்றால் எல்லோருமே மறக்க முடியாதவர்கள் தான். மனிதன் இதயம் என்றும் மாசுபடாதிருக்க உள்ளத்துக் கறைகளைக் களையும் வண்ணம் இலக்கியம் படைத்தோரெல்லாம் மறக்க முடியாத மாணிக்கங்கள்தான்.

06. எப்படி சட்டத் துறைக்குள் வந்தீர்கள்? அதற்கான காரணகர்த்தா யார்?

பாடசாலைக்காலத்தில் உயர்தரக்கல்வி பயின்று கொண்டிருக்கும் போதே சட்டத்துறையில் நுழைய வேண்டுமென்ற வேட்கை இருந்தது. அவ்விருப்பம் அவ்வேளை நிறைவேறவில்லை. ஆசிரியப் பணியில் இணைந்து சிலகாலம் கடமையாற்றினேன். ஆயினும் எனது சட்டத்துறை வேட்கை தணலாகவே இருந்தது. அதனை கொழுந்து விட்டெரியும் தீயாக என்னால் மாற்ற முடிந்தது எனது திருமணத்தின் பின்னர்தான். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னர் சட்டம் பயின்று சட்டத்தரணியானேன்.



07. சட்டத் தொழில், இலக்கிய நிகழ்வுகளில் ஈடுபாடு, எழுத்தாற்றல், நல்ல பேச்சாற்றல் நிறைந்த உங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் என்ற திரைப்பாடல் வரிகளுக்கொப்ப பல்வேறுபட்ட இன்பமான  தளர்வான இரண்டும் கலந்த மனநிலைகளைத் தோற்றுவித்த அனுபவங்கள் நிறையவே உண்டு. சட்டத்தொழில் சமூகத்துக்குப் பணியாற்ற வாய்ப்புத் தந்தாலும் அவ்வப்போது மனச்சோர்வு தரும். அவ்வேளைகளில் என் சோர்வைப் போக்கி எழுச்சி தருவது இலக்கிய நிகழ்வுகளில் எனது ஈடுபாடுதான். சட்டத்தரணி ஒருவரின் மூலதனமே பேச்சாற்றல் தான். இப்பேச்சாற்றல் பள்ளிக்காலத்தில் இருந்து எனது அன்னையாரின் தூண்டுதலால் எனக்கு வாய்க்கப் பெற்றது.

08. உங்கள் ஆக்கங்கள் மேடைப் பேச்சுக்களாக மாத்திரம் அமைந்ததா? அவற்றை நூலுருவாக்கும் எண்ணம் உண்டா?

மேடைப் பேச்சுக்களை நூலுருவில் கொண்டுவர மிகுந்த ஆசை. ஆயினும் செயற்படுத்துவதில் இருக்கும் சிக்கலால் தள்ளிக்கொண்டே போகிறது.



09. உங்கள் நினைவில் நீங்காத சம்பவம் இருப்பின் குறிப்பிடுங்கள்?

சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்ததைக் கூறலாம்.

10. உங்கள் ஓய்வு நேரங்களில் எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை நீங்கள் அதிகமாக வாசிக்கிறீர்கள்? காரணம் என்ன?

ஓய்வு நேரங்கள் என்பதைவிட எனது சட்டத்தொழிற் கடமைகள் முடிவடைந்து மீதியாக இருக்கும் நேரங்கள் என்பதே பொருத்தமானதாயிருக்கும். அவ்வேளைகளில் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த புதிய சிந்தனை எழுத்தாளர்களின் படைப்புக்கள், டாக்டர் சாலினி, ஆண்டாள் பிரியதர்சினி, பிரேமா போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் எஸ். இராமகிருஷ்ணனின் கட்டுரை நூல்கள் என்பவற்றை ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு.

11. இலக்கிய படைப்பில் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை இவற்றுள் அதிக ஆர்வத்துடன் நோக்குவது எதை? ஏன்? 

கவிதைகளையும் கட்டுரைகளையும் ஆர்வத்துடன் நோக்குவேன். ஏனெனில் கவிதைகள் தெளிவான ஆழமான சொற்செட்டோடு அமைவதனாலும் கட்டுரைகள் பல நூறு அறிஞர்களின் கருத்துக்களை உசாத்துணை கொண்டு எழுதப்படுவதாலும் நான் விரும்பிப் படிக்கிறேன்.

12. சட்டத் துறையில் கல்வி கற்கும் இளையவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

சட்டத்துறை என்பது ஒரு மனிதனின் அறிவு விரிவாக்கத்துக்குப் பெருந்துணையாக அமைவது. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்கள் இருப்பதாய் கருதுபவள் நான். ஓன்று ஏமாற்றும் வர்க்கம் மற்றையது ஏமாறும் வர்க்கம். சட்டம் ஏமாறும் வர்க்கத்துக்கு தடுப்பு வேலியாகவும் ஏமாற்றும் வர்க்கத்துக்கு எரியூட்டும் தீயாகவும் இருப்பது. சட்டத்துறையில் கல்வி கற்கும் இளைஞர்கள் தமது துறையை வெறுமனே வருவாய்த் துறையாக எண்ணாமல் தம் கூரிய அறிவு மேலும் கூர்மையாக, அறிவை மேம்படுத்திக் கொண்டு சமூக அக்கறையோடு பணியாற்ற முனைதல் வேண்டும். அவர்தம் உழைப்பு வாழ்வில் உறுதியை நல்கும் என்பது திடம்.

13. உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், பாராட்டுக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலைக் காலங்களில் அகில இலங்கை ரீதியாக நடந்த பேச்சுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் நாடகத்தில் சிறந்த நடிகைக்கான பரிசும் கிடைத்தது.

14. சட்டம், இலக்கியம் தவிர்த்து வேறு என்ன துறைகளில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

இசை, நடனம் என்பவற்றிலும் ஈடுபாடுண்டு.

15. புத்தகம், இணையம், பேஸ்புக் என்பன இலக்கியத்தை எவ்விதம் வளர்க்கின்றன?

இவை மூன்றுமே இலக்கியப் பங்களிப்பைச் செய்கின்றன என்றால் அது மிகையல்ல. புத்தகம் வெளியிடுவதில் சிக்கல்களை எதிர்கொள்வோர் இணையம் முகநூல் வழி இலகுவாக பலநூற்றுக்கணக்கான வாசகர்களை தம்வசம் கொண்டுள்ளனர். உடனடியாகவே அவர்களின் ஆக்கங்களுக்கான விமர்சனத்தையும் அவர்களால் இதன்வழி பெற்றுக்கொள்ள முடிகிறது.

16. தற்காலத்தில் இலக்கிய வளர்ச்சி எந்த அளவில் இருக்கின்றது என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

நான் ஒன்றும் இலக்கிய விற்பன்னம் படைத்தவளல்ல. ஆனால் வளர்ந்துள்ளது என்று மட்டும் சொல்ல முடியும்.

17. இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்கும் புதிய எழுத்தாளர்கள் பற்றி அல்லது எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

சமூக அக்கறையோடு எழுதுங்கள்.

18. தலைநகரில் இன்று நிறையவே நூல் வெளியீடுகள் நடைபெறுகின்றன. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

ஒருவகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் அனைத்து நூல்களும் சமூகத்துக்குப் பயனுள்ளனவா என்ற வினாவும் எழாமல் இல்லை.

19. ஆண், பெண் ஒழுக்க விழுமியத்தை இலக்கியம் மூலம் எப்படி கட்டிக்காக்கலாம்?

உலகம் தழுவிய அமைதிக்கும் இன்பத்துக்கும் ஒழுக்க விழுமியங்களே அச்சாணியாக அமைகின்றன. இன்றைய பல இலக்கியங்கள் ஒழுக்க விழுமியத்தை வெளிப்படுத்துவதில் மெத்தனப் போக்கையே கையாள்கின்றன. யதார்த்தம் நடைமுறை என்ற சொற்பதங்கள் மூலம் விழுமியங்களின் வீரியம் நீர்க்கச் செய்யப்படுகிறது. எனவே மனித ஒழுக்க விழுமியம் குறித்து இலக்கியங்கள் வரையறை செய்து வரம்புகளிடுதல் அவசியம். இச்செயற்பாடுகள் மூலம் மாந்தரின் ஒழுக்க விழுமியங்கள் கட்டிக் காக்கப்படலாம்.

20. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment