பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, March 16, 2016

22. திருமதி சுகிலா ஞானராசா அவர்களுடனான நேர்காணல்

திருமதி சுகிலா ஞானராசா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்கள் குடும்பப் பின்னணி, கல்லூரி வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?

என் அப்பா துரைராசா, அம்மா ஞானேஸ்வரி நாங்கள் மூன்று பெண் பிள்ளைகள் (அக்கா, நான், தங்கை) எல்லோரும் ஒரே பாடசாலையில் படித்தோம். ஒரே மாதிரி உடை, சப்பாத்து போட்டு மூவரும் அப்பா, அம்மாவுடன் வெளியில் கூட்டிச் செல்லும் அழகும் சந்தோசமும் சொல்லில் வடிக்க முடியாது. அக்கா, தங்கை முன்பள்ளி ஆசிரியையாக யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெற்று அங்கு கடமையாற்றினார்கள். தற்போது அக்கா அமரர். தங்கை திருமண பந்தத்தில் இணைந்து வெளிநாடு சென்றுவிட்டார். நானும் உயர்தரம் முடித்துவிட்டு வெளிநாடு செல்ல இருந்தபோது நாட்டின் சூழ்நிலை காரணமாக தொண்டராசிரியராக 1985.03.09 இல் கலைமகள் வித்தியாலயத்தில் நுழைந்தேன். அதிபராக திரு. சிவப்பிரகாசம் ஐயா (அமரர்) முதன் முதல் எவ்வாறு வகுப்பில் நுழைவது, கற்பிப்பது, வகுப்பறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்றெல்லாம் என்னை வழிப்படுத்தினார். அன்றே ஆசிரியத் தொழிலில் எனக்கு பிடிப்பு ஏற்பட்டது. அவரையும் நன்றியுடன் நினைத்து அவர் காட்டிய வழியில் அவரது குடும்பத்தாருக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன்.

1988 இல் பரீட்சை மூலம் நாடாளவிய ரீதியில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. நானும் அதில் உள்வாங்கப்பட்டேன். கலைமகள் வித்தியாலயத்தில் சந்தோசமான பணி மனதுக்கு  நிறைவைத் தந்தது. 1990 - 1991 காலப்பகுதியில் ஆசிரிய பயிற்சிக்கு சென்றபோது இனி இல்லையென்ற சந்தோசம். வீட்டு நினைவு அடிக்கடி எட்டிப் பார்க்கும். திடீரென கூறாமல் வீட்டுக்கு வந்து விடுவோம். காலச்சூழல் பிழைத்தபோது திடீரென கலாசாலை மூடப்பட்டது. நாம் திக்குமுக்காடியே போனோம். ஆனால் ஒரு தலைவரின் கீழ் அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒன்றிணைந்து பிரியாமல் சந்தோசமாக ஒத்துப்போவோம். முகம் கோணுவது, புறம் கூறுவது ஒன்றும் கிடையாது. அந்தக் காலம் என் அப்பா என்னை அடிக்கடி வந்து பார்ப்பார். அம்மாவின் கடிதம் கிழமைக்கு 03 க்கு குறையாமல் ஒழுக்கம், படிப்பு பற்றியே புத்தி கூறி வரும்.

மீண்டும் கலைமகள் வித்தியாலயம். திரு. என் இராஜநாதன் அதிபர். அவரிடம் ஆசிரியத் தொழில் பற்றி நிறையவே கற்றேன். எல்லாவற்றுக்கும் விளக்கம் தருவார். நிர்வாகத்திற்குள் நிறைய விடயங்களை சொல்லி வழிப்படுத்தி பொறுப்புகளைத் தருவார். அவரிடம் கற்ற விடயங்களை அனுபவத்தில் கண்டு கொண்டேன். அவரையும் அன்புடன், நன்றியுடன் நோக்குகின்றேன். தொழில் தேடல், கற்றல், கற்பித்தல் எல்லாம் என் கணவர் அதிபராக இருந்தமையினால் கற்றுக்கொண்டேன். பொறுமையே இல்லாத நான் பொறுமையை அவரிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். அவரும் நிறையவே வாசிப்பார். புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவார். புத்தகங்கள் எழுதுவார். இதனால் என் வாசிப்பு தேடல் நின்று போகாமல் தொடர்வதற்கு எனக்கு முழு உதவியும் ஒத்தாசையும் புரிந்தவர் என் கணவர்தான்.

தொடர்ந்து என்னை கற்க வைத்து, பட்டம் பெற வைத்ததும் அவருடைய வழிகாட்டல்தான். இன்னும் படிக்கவேண்டும் என்று வழிப் படுத்துவதும் அவர்தான். சில நேரங்களில் பாடசாலை, வீட்டு, வெளி என பல வேலைகள் இருக்கும்போதும், பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போதும் படிக்க முடியாது என்றுகூறி மறுத்துவிடுவேன். அந்த நேரங்களில் என் கணவர் தாயாக, தந்தையாக, சேவகனாக இருந்து என்னைக் கவனிப்பார். இன்று  வரைக்கும் எல்லாமே அவர் வழிப்படுத்தல்தான். இந்த இடத்தில் நான் உண்மையாகவே நன்றி உணர்வுடன் அவரை நினைத்துப் பார்க்கிறேன்.

என் தாய், தந்தை தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி, என் பிள்ளைகளையும் கவனித்து நான் முன்னேற வழி விட்டுத் தந்தவர்கள். இன்றுவரை அவர்களிடம் உதவிகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறேன். என் தந்தை விடுமுறை எடுக்க விடமாட்டார். அவருக்கு ஏதாவது சுகயீனம் என்றால் நான் தான் அழைத்துப் போக வேண்டும். அதனால் தனது சுகயீனத்தை வெளியில் காட்டமாட்டார். இங்கு ஒரு முக்கிய விடயம் என்னவெனில் அம்மாவின் முன்பெயரும் (ஞானேஸ்வரி) அப்பாவின் பின் பெயரும் (துரைராசா) சேர்ந்ததே என் கணவர் பெயர் ஞானராசா ஆக அமைந்திருக்கிறது. மாதா, பிதா சேர்ந்துதான் என் கணவர். இறைவன் தந்த கொடை. என் தாய், தந்தையையும் நன்றியோடு நோக்கி இறையாசியை வேண்டி நிற்கின்றேன்.

தந்தையின் தொழில் காரணமாக பல இடங்கள் சுற்றியுள்ளோம். அந்த வகையிலே மட்டக்களப்பிலே சந்திவெளி அ.த.க. பாடசாலை வீட்டிற்கு அருகில் இருந்தது. தற்காலத்து முன் பள்ளி போல் அங்கு பதிவில்லாது கல்வி ஆரம்பித்தது. அதன் பின் ஓட்டமாவடி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த நான் பலவாறு சுற்றி திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் என் உயர்தர பரீட்சையில் சித்தியுடன் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தேன்.

சண்முகா இந்து கல்லூரியில் கடமையாற்றிய அதிபர் செல்வி. விஸ்வலிங்கம் அம்மையார் (அமரர்) தமிழ் சார்ந்த விடயங்களை பெரியார் வழிகாட்டல்கள் போன்றவற்றை தேடிக் கற்க எம்மை வழிப்படுத்தினார். பாடசாலை நூலகத்தில் புத்தகம் இல்லை என்றேன். வேறு எங்கு நூலகம் இருக்கின்றது என்று கூறமாட்டேன்.. உன் அப்பாவிடம் கேட்டு கூறியதை தொகுத்து எடு என்று கூறினார். இந்த பழக்கம் காலப்போக்கில் நூலகத்தில் எல்லாவிதமான புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது. இன்று வரையும் வாசிக்காது அல்லது எழுதாது தூங்கியது கிடையாது.  இன்று இந்த அளவுக்கு பதப்படுத்தி நெறிப்படுத்திய அம்மையாரை நன்றியுடன் நினைத்து அவரது ஆத்ம சாந்திக்காக வேண்டி நிற்கின்றேன்.

சிந்தாமணி ஆசிரியை எங்களுக்கு இந்து நாகரிகம் படிப்பித்தார். ஒழுக்கம், நடை, உடை, நேர்த்தி போன்ற விடயங்களை தெளிவாக நேரடியாக எமக்குக் கூறுவார். கல்லூரி வாழ்க்கையில் நண்பியாக இணைந்து பயணித்தவர், தொடர்ந்து கொண்டும் இருப்பவர் நாராயணசாமி சாரதாதேவி தான். கள்ளம் கபடம் இல்லாத அவரது போக்கு என்னை கவர்ந்தது. அந்தக் குடும்ப உறுப்பினரையும் நேசிக்கிறேன்.

02. பல வருடங்களாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் தொழில் அனுபவம் பற்றி?

ஆம்! தரம் ஒன்றில்  பல மாணவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாது. அவர்களுக்கு மா, பலாப் பழம் ஒவ்வொரு துண்டைக் கொடுத்து மடியில் வைத்து சொல்லிக்கொடுத்து எழுதப் பழக்கியதை இன்னும் மறக்க முடியவில்லை. எங்கிருந்தாலும் என்னை நினைப்பதையும், என் சுக துக்கத்தில் பங்கு கொள்வதையும், விசேட தினங்களில் வாழ்த்துத் தெரிவிப்பதையும் பழக்கமாகவும் வழக்கமாக வைத்துள்ள அவர்களில் பலர்  ஆசிரியர்களாக, வைத்தியர்களாக நன்றியோடு இருக்கிறார்கள்.

தற்போதைய பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எந்த எதிர்பார்ப்பும், விழப்புணர்வும் ஒரு துளியேணும் இல்லை. எவ்வளவு கூறினாலும் அவர்களுக்கு உணர்வே வர மறுக்கிறது. அவர்களது வீட்டுச் சூழலும், சமூகமும் தான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன். சந்தோசங்களை சுமந்த நான் இப்போதுள்ள மாணவர்களை நினைத்து வேதனையுடன் இருக்கிறேன். எப்படியாவது என்னால் திருத்த முடியும் என்று நம்பிக்கை விதையை விதைத்துள்ளேன்.

03. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

ஆம்! அப்பா, அம்மா நன்றாக நிறையவே வாசிப்பார்கள். இன்று வரை வாசிப்பு பழக்கம் குறையவே இல்லை. கல்வி கற்கும் காலத்தில் கட்டுரைகளை அம்மா எழுதித் தருவார். பலமுறை வாசித்த பின் அதனை மீண்டும் வாங்கிக்கொண்டு வாசித்ததை யோசித்து எழுத வைப்பார். கதைகளை வாசித்தால் விமர்சிப்போம். அப்படி இருந்தால் நல்லது இப்படி இருந்தால் நல்லது என்று அப்பா சொல்லுவார்.


04. சிறுவர் இலக்கியத் துறைக்குள் நுழைவதற்காக முதற் காரணி எது?

எனது ஆசிரியப் பணி, பாட்டுக்களை புதுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவா. மற்றது குறிப்பிட்டதொரு விடயம் பற்றி எழுதித் தரும்படி கணவரிடம் கேட்டால் நீங்கள் எழுதுங்கள் வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன் என்பார். அவர் எழுத்தாளராக, கவிஞராக இருப்பதால் எந்நேரமும் எதையாவது எழுதுவார். எழுத அமர்ந்து விட்டால் கதைக்கமாட்டார். அவர் எழுதும் நேரம் பார்த்து நானும் எழுதுவேன். பின் இருவரும் வாசித்துக் காட்ட மகள் ஸர்வினாவும், மகன் ஜனகனும் தீர்ப்பு வழங்குவார்கள். நிறைய எழுத எழுதத்தான் சொற்கள் வந்து குவியும் என கணவர் வழிப்படுத்துவார். மகளும் எழுதுவாள். மகன் நல்ல கருப்பொருள் எடுத்துத் தருவான். நான் எழுதுவதற்கு வீட்டுச் சூழலே காரணியாக அமைந்தது.

05. சிறுவர் இலக்கியத் துறையில் நீங்கள் வெளியிட்ட நூல் பற்றி குறிப்பிடுங்கள்?

இதுவரை சின்னச் சிட்டுக்குருவி என்ற தலைப்பில் அமைந்த நூல், கல்வி அமைச்சின் இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் 2010 ஆம் ஆண்டு சான்றிதழுக்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த நூலுக்கான வெளியீட்டு விழாவினை 2012 ஆம் ஆண்டில் செய்தேன். பொருளாதார வசதியின்மையும் வேலைப்பளுவும் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட இடந்தரவில்லை. ஆனால் இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறேன். சின்னச் சிட்டுக்குருவி பற்றிய இரசனைக் குறிப்பை பூங்காவனம் சஞ்சிகை துணை ஆசிரியை செல்வி எச்.எப். ரிஸ்னா தினகரன் பத்திரிகையில் சிறப்பாக எழுதியிருந்தார். பின்னர் அவரால்; தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்ட திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற நூலில் 181 - 184 வரையான பக்கங்களில் இதனையும் பதிவு செய்திருந்தார். எழுத்தாளர்களை மனம் திறந்து பாராட்டி, எழுதி உற்சாகப்படுத்தும் ரிஸ்னாவினதும், ரிம்ஸாவினதும் முயற்சி போற்றத்தக்கது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்னை இலக்கிய உலகிற்கு பூங்காவனம் சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்திய பெருமை மேற்கூறிய இருவரையுமே சாரும் என்பதில் மனநிறைவு பெறுகிறேன்.

06. உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?

கேட்டவுடனே ஆம் என்று கூறி அஸ்ரா பிறின்டஸ் உரிமையாளர் திரு. எஸ். சிவபாலன் உதவி செய்தார். அந்த உதவி கிடைக்காது போயிருந்தால் நான் நூல் வெளியீடே செய்திருக்கமாட்டேன். அவர்களை ஒருபோதும் நான் மறக்க முடியாது நன்றியுடன் இருக்கிறேன். நீண்ட ஆயுளில் சுகதேகியாக வாழ வாழ்த்தி இறையாசி வேண்டி நிற்கின்றேன்.

07. நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

திருகோணமலை அஸ்ரா பதிப்பகம் உரிமையாளர் திரு. எஸ் சிவபாலன் அவர்களின் எழுத்தாளர் ஊக்குவிப்புத் திட்ட அனுசரணையால் ஓரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்பது உண்மை. ஆயினும் முற்று முழுதாக வெற்றிபெற முடியவில்லை. அநேகமான எழுத்தாளர்களுக்கு உள்ள இன்னலும் இடையூறும் எனக்கும் உண்டு.

08. தற்போது சிறுவர் இலக்கியத் துறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் பற்றிய தங்களது கணிப்பு எவ்வாறு உள்ளது?

சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் சிறுவர்களுக்கு பொருத்தமில்லாத பலவற்றையும் சிறுவர்களால் புரிந்து கொள்ள முடியாதவற்றையுமே பலர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். கற்பனையில் அற்புதம் காணும் இவர்கள்; உண்மையில் விழித்துக்கொள்ளாமல் உறங்கி விடுகிறார்கள். இன்றும் பேய்க் கதைகளையும் தேவலோகக் கதைகளையும் எழுதி பழமையை விட்டு வெளிவர முடியாதவர்களாக இருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. காலாகாலம் எழுதிவரும் விலங்குகளோடும் பறவைகளோடும் உரையாடுவதை விட்டுவிட்டு மனிதர்களோடு உறவாட வேண்டும், உரையாட வேண்டும். சிறுவர் இலக்கியத் துறையில் புதுமையும் புரட்சியும் இடம் பெற வழி ஏற்படுத்த வேண்டுமென விரும்புகின்றேன்.

09. சிறுவர் இலக்கியம் தவிர்ந்த வேறு துறைகளில் ஈடுபடும் எண்ணம் உண்டா?

ஆம்! கவிதை, கட்டுரை, திறனாய்வு போன்றவற்றில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது.

10. இனி வெளிவரும் உங்கள் படைப்புக்கள் எப்படி அமைய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் இளைஞர், முதியோர் என சமூகத்தின் பல தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய படைப்புக்களாக இருக்க வேண்டுமென ஆக்க முயற்சிகளை முன்னெடுக்க நினைத்துள்ளேன். உதாரணமாக கவிதை, கட்டுரை, உரையாடல், கதை முதலியன எழுத எண்ணியுள்ளேன். அதற்கான காலம் கனிந்தால் என் எண்ணம் ஈடேறும்.

11. உங்கள் ஆசிரியப் பணி அனுபவத்தில் இன்றைய மாணவர்களின் இலக்கியப் போக்கு, எழுத்துத் துறை நாட்டம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

இன்றைய மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ளது. தமிழில் பிழையின்றி எழுத முடியாத மாணவர், கைப்பேசியினூடாக குறுஞ் செய்தியில் தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்யும் திறமையை வளர்த்துள்ளனர். திரையில் படங்களுடன் வரும் சொற்களை மட்டுமே இரசிக்கின்றனர். வாசிப்பதை கேட்டல் மூலம் கிரகித்துக் கொள்கின்றனர். இது எழுத்துத் துறைக்கு சவாலாகிறது. இந்நிலை மாற்றப்பட்டு வாசிப்பு முயற்சியில் பலர் ஈடுபட வேண்டும். இதற்கு வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் தமது பங்களிப்பை சிறந்த முறையில் நல்க வேண்டுமென வினயமுடன் கேட்டு நிற்கின்றேன்.

12. உங்களைக் கவர்ந்த பெண் எழுத்தாளர்கள் யாவர்?

திருமதி மனோன் மணி சண்முகதாஸ், திருமதி. சித்திரலேகா மௌனகுரு, வெலிகம  ரிம்ஸா முஹம்மத், வசந்தி தயாபரன் போன்ற இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இன்றும் இலக்கிய முயற்சிகளில் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இலங்கையர், இலங்கை எழுத்தாளர்களை நேசிப்போம்.

13. தற்கால ஆசிரியர்களிடையே இலக்கிய ஆர்வம் எந்த அளவில் உள்ளது?

இளம் ஆசிரியர்கள் இலக்கியத்திலும், விளையாட்டிலும் ஆர்வமுடன் உள்ளனர். அதனை வளத்தெடுக்க அவர்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நேரம் இல்லை என்பது பொய். நாங்கள் தான் நேரத்தை ஒதுக்க வேண்டும். தேடலை மேம்படுத்த வேண்டும். பொருளாதார நிலை கடினமாக இருக்கும். அதற்காக ஆர்வத்தினை கைவிடக்கூடாது. திறமைக்கு முன்னுரிமை இல்லாது போகலாம். திறமையில்லாதது முன்னுக்கு வரலாம். சற்று கவலை, மனச்சோர்வு வரத்தான் செய்யும். அதனை மறந்து பயணித்தால் என்றோ ஒரு நாள் வெல்லுவோம், உயர்வோம் என்பதில் ஒரு துளியேனும் எனக்கு ஐயமில்லை. இதையே எல்லோரும் சிந்தித்தால்  வெற்றி நிச்சயம்.

14. இந்த நேர்காணல் மூலம் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ஒன்றை பல தடவை வாசியுங்கள், நல்ல கருத்துக்களை சிந்தியுங்கள், நல்ல விடயங்களை மனதில் பதியுங்கள். சரி பிழைகளை நீங்களே நீதிபதியாக இருந்து தீர்ப்பினை எடுங்கள். மனசாட்சிக்கு விரோதமில்லாது வாழப் பழகுங்கள். ஏனெனில் மனிதனாகப் பிறந்துவிட்டோம். நாம்தான் நமது வாழ்க்கையை சோலையாக்க வேண்டும். கவலை வரும், நோய்கள் வரும். இவற்றிலிருந்து விடுபட நிறைய வாசியுங்கள்.  நிறைய எழுதுங்கள். தீர்ப்பு உங்கள் மனமே பேசட்டும். இறைவனை நினைத்து என்னால் முடியும் என்ற நம்பிக்கை விதையை விதையுங்கள்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment