பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, May 29, 2018

31. கிண்ணியா பாயிஸா அலி அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.02.11

கிண்ணியா பாயிஸா அலி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் பிறந்து வாழ்ந்துவரும் ஊர் கிண்ணியா, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். ஆரோக்கியமான கடற்காற்றும் தென்னை மரங்களும் மா, பலா, வாழையெனப் பழத் தோட்டங்களும் நெல் வயல்களும் சேனைப் பயிர்களுமாய் அழகும் செழுமையும் நிறைந்த வளமான மண் இது. விருந்தோம்பும் உயர் பண்பும் ஒழுக்கமும் இறையச்சமும் நிறைந்த உள்ளங்கள் வாழுமிடம் கிண்ணியா. அத்தோடு அரசியல் சமுக சேவையாளர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்கிய பிரதேசம் இது. இதைவிடவும் மிகவும் பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவெனில் கவிஞர் அண்ணல் தொடங்கி கஹ்ஹார் ஏ.எம்.எம். அலி, அலி அக்பர், பீ.ரீ. அஸீஸ், ராஹிலா மஜித்நூன், ஜெனீரா கைருல் அமான், கஸ்புள்ளா, நஸ்புள்ளா, பெரோஸ்கான், நாஸிக் மஜித், நஸார் இஜாஸ் வரைக்குமான ஏராளமான எழுத்தாளர்களைப் பிரசவித்த ஊர் என்னுடையது.


 குடும்பத்தைப் பற்றிச் சொல்வதென்றால் தந்தை அப்துல் சலாம் இலங்கை போக்குவரத்து சபையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். தீவிர வாசிப்பாளர். தாயார் றைஹானத் பெண்ணாசிரியர் - பெண் அதிபர் வரிசையில் முதன்மையானவராய் 36 வருடங்கள் அரச பணியாற்றியவர். இன்று வரைக்கும் ஒழுக்கம், இறை பக்தி, விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை, மென்மை, கனிவு, கடமையுணர்வு என்ற பதங்களுக்கெல்லாம் என் அன்புத் தாயைத் தவிர்ந்து வேறொருவரை என்னால் உதாரணமாகச் சொல்ல முடியாது. புரிந்துணர்வுடன் கூடிய 2 சகோதரர்கள், 2 சகோதரிகள்.

கணவர் முஹம்மட் அலி கணிதப் பாட ஆசிரியராகப் பணி புரிகிறார். 2 மகள்களும் 1 மகனுமாய்ப் பிள்ளைகள். மூத்த மகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் மகன் களனி பல்கலைக் கழகத்திலும் பொறியியல் கணனி தொழிநுட்ப பிரிவுகளில் பட்டப் படிப்பைத் தொடர்கின்றனர். இளைய மகள் தரம் 9 இல் கற்கிறார். அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ள தெரிந்த அமைதியான குடும்பம் என்னுடையது.


உங்களது பாடசாலைக் காலம், தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

தி/ கிண்/ முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி திஃகுறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரையும் பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரில் உயர் தரத்தை விஞ்ஞான பிரிவிலும் கற்றேன்.

பாடசாலைக் காலங்கள் மறக்கவியலாத பசுமையான நினைவுகளாய் இன்றும் மனதில் நிறைந்துள்ளன. ஆரம்ப வகுப்புக்களில் கற்பித்த கமலா, ராணி, ஜெசிமா, ஆமினா, பாத்துமா, நளிமா (ராணி) ஆசிரியர்களின் அன்பும் பரிவும் சொல்லித் தீராதவை. அதிலும் தரம் 5 இல் கற்பித்த நளிமா (ராணி) ஆசிரியையின் கற்பித்தல் ஆலோசனை வழிகாட்டல் முறை தனித்துவமானது.

கடவுள் அமைத்துவைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை..
இன்னாருக்கு இன்னாரென்று
எழுதிவைத்தானே தேவன் அன்று..

S.P.B. யின் கணீரென்ற குரலில் இந்தப் பாடல் எங்கே ஒலித்தாலும் இன்று வரைக்கும் என் நினைவிற்கு வருவது (ராணி) டீச்சரின் பளிச்சென்ற அழகு முகமும் அவர் பயிற்றுவித்த கலை நிகழ்ச்சிகளும்தான். அதேபோல தரம் 5 புலமைப் பரீட்சைக்காகப் பாடசாலை விட்ட பிறகும் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி வரைக்கும் எங்களுக்காகப் பாடசாலையில் இருந்து மிகுந்த அர்ப்பணிப்போடு கற்பித்து எம்மை சித்தியடையச் செய்தார். (அந்த வருடம் 1983 என நினைக்கிறேன். கிண்ணியாப் பிரதேச மாணவரிடையே நான் மாத்திரமே சித்தியடைந்ததாகச் சொல்லப்பட்டது நினைவிருக்கின்றது) இது தொடர்பில் இறைவனுக்கு அடுத்து எனது பாடசாலையையும் ராணி ரீச்சரையும் இன்று வரைக்கும் நன்றியோடு நினைவுகொள்கிறேன்.

ஆனாலும் ராணி ரீச்சரின் ஆசிரியப் பணி எங்களது வகுப்போடு முடிவுக்கு வந்ததை அறிந்தபோது நானடைந்த கவலைக்கு அளவேயில்லை. முன்பள்ளி முதல் கல்வி கற்றுத் தந்த எல்லா ஆசிரியர்களையும் என்னுடைய பிரார்த்தனைகளில் இணைத்துக்கொள்ள ஒருபோதும் மறப்பதில்லை.

தொழில் அனுபவங்கள் என்னும் போது.. ஆசிரியர் போட்டிப் பரீட்சையொன்றில் சித்தியடைந்து 1998 இல் நியமனம் பெற்றுப் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பணி புரிகின்றேன்.

அப்போதைய இன வன்முறைக் காலப் பதட்டமான சூழல் கல்வியில் ஏற்படுத்திய நேரடித் தாக்கத்தால் எனக்குப் பல்கலைக்கழகத்தினூடாக உள்வாரியாகப் பயிழும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினூடாகப் (B.Sc) பட்டப் படிப்பைத் தொடர்ந்தேன். 2 வருடங்கள் முடிந்த நிலையில் அதனையும் கைவிடவேண்டிய நிர்ப்பந்தம். எனினும் மனந்தளராது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழ் இலக்கியத்தில் இளமாணி, இதழியல் மக்கள் தொடர்பியலில் முதுமாணி வரை கற்றதோடு விசேட தேவைகள் சார் கல்வியில் பட்டமேல் டிப்ளோவைத் தொடர்கிறேன்.

இன்று வரைக்கும் பணியாற்றிய மூன்று பாடசாலைகளிலும் கற்பித்தல் அனுபவங்கள் மன நிறைவு தரும் வகையில் உள்ளன. க.பொ.த. பரீட்சையில் நான் கற்பித்த விஞ்ஞான பாடத்தில் நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன. 2012 இல் க.பொ.த. சாதாரண தரத்தில் விஞ்ஞான பாடத்தில் கிழக்கு மாகாணத்திலேயே எமது பாடசாலை இரண்டாம் இடம் பெற்றது. கற்பித்தல் என்று வரும்போது ஒருபோதும் நான் என்னுடைய திறமையில் மட்டுமே முழு நம்பிக்கை வைத்திருப்பதில்லை. எவ்வளவு இயலுமோ அவ்வளவுக்கு ஏனைய வளவாளர்களின் உதவிகளையும் எமது பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பேன். அந்தவகையில் எமது பிரதேசத்தில் உள்ள தேர்ந்த விஞ்ஞான ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஏனைய பாடசாலைகளில் ஆய்வு கூடங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் என எல்லோரையும் சிறந்த முறையில் திட்டமிட்டு எமது பாடசாலை மாணவரின் விஞ்ஞானப் பாட சிறந்த அடைவுக்காகப் பயன்படுத்தினேன் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இதனை விடவும் விஞ்ஞான வினாப் போட்டிகளில், ஒலிம்பிக் போட்டிகளில், மீலாத் விழா, கலை, இலக்கியப் போட்டிகளில் மாணவர்களைத் தயார் செய்தலிலும் எனது பங்களிப்புகள் கணிசமனான அளவில் உள்ளன. அத்தோடு விஞ்ஞான பாடம் தவிர்ந்த ஆரம்பக் கல்வி ஒன்றிணைந்த பாடங்கள், கணிதம், தமிழ், வாழ்க்கைத் தேர்ச்சி, சுகாதாரம், இஸ்லாம் போன்ற பாடங்களை கற்பித்த அனுபவமும் உண்டு. மேலும் என்ன பாடமாக இருந்தாலும் அதனை மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது கூடவே அதற்காக நாமும் கற்கிறோம். புதிது புதிதாய் நாமும் வளர்கிறோம் என்பது சந்தோசமான விடயம்.


உங்களது இலக்கியப் பிரவேசம் எந்தப் பின்புலத்தைக் காரணமாகக் கொண்டு நிகழ்ந்தது?

பெற்றார் வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள். பலவகையான புத்தகங்கள் வீட்டு அலுமாரியில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தினசரி, சிந்தாமணி, வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளுக்கும் குறைவில்லை. எனது மூத்த சகோதரர் றியாட் அம்புலி மாமா, ரத்னபாலா போன்ற சிறுவர் நூல்களையெல்லாம் நண்பர்களிடம் இருந்து வாங்கி வருவார். உற்சாகமாய் வாசிப்போம். எதை வாசித்தாலும் அதைப்பற்றி ஐந்து வரியாவது விமர்சனம் எழுதுமாறு உம்மா சொல்லுவார். நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு எழுதுவோம். குட்டிக் கதைகள், கவிதைகள், கட்டுரைகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலைப்புத் தந்து எழுதச் சொல்லுவார். சிறப்பான ஆக்கங்களுக்கான பரிசுகளுக்கும் குறைவில்லை. அத்தோடு அந்த ஆக்கங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கும் ஊக்கப்படுத்துவார். இப்படி ஆரம்பித்ததுதான் என்னுடைய இலக்கியப் பிரவேசம். இதைவிடவும் சகோதரர் அஷ்ரப் சிகாப்தீன், நாசிக் மஜீத், ராஹிலா மஜித்நூன், கிண்ணியா அமீரலி, நஸார் இஜாஸ் ஆகியோர் எனது தந்தை வழியில் இரத்த உறவுகள் என்பதையும் நினைவுகூர விரும்புகிறேன்.

பாடசாலைக் காலத்திலேயே பத்திரிகைகளில் சிறுவர் பகுதிக்கு, வானொலி சிறுவர் நிகழ்ச்சிகளுக்கு சின்னச் சின்ன கவிதை, கட்டுரை, கதைத் துணுக்குகள் எழுதியனுப்புவேன். அது பிரசுரமானால் சந்தோசமாயிருக்கும். பாடசாலையின் பெயர் முகவரியோடு வெளிவருவதால் வகுப்பு நண்பர்கள் ஆசிரியர்கள் சந்தோசமாக வாழ்த்துவார்கள், ஊக்கப்படுத்துவார்கள். அந்த உற்சாகத்தில் பாடப் புத்தகங்களோடு இதர வாசிப்பும் எழுத்தும் தொடர்ந்த வண்ணமேயிருந்தது.

கவிதையெனும்போது தரம் 10 இல் (1987 இல்) முதன் முதலில் தினகரனிலும் அடுத்து சிந்தாமணியிலும் கவிதைகள் வெளிவந்தன. அதில் முகவரி குறிப்பிடப்படாததால் யாரும் கண்டுகொள்ளாதது கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனாலும் எனது பெரியப்பாவின் மகள் மஸாகினா சகோதரியின் வீட்டுக்குப் போனபோது பத்திரிகையில் வெளிவந்திருந்த எனது கவிதையை எடுத்துக்காட்டி என்னைப் பாராட்டினார். அன்று வாழ்க்கையிலே எனக்கு மறக்க முடியாத சந்தோச நாளாக இருந்தது. பிறகும் நிறைய மரபுக் கவிதைகள் எழுதினேன். எனினும் அவை தரமாயிருக்குமோ என்ற ஒருவிதத் தயக்கம் காரணமாக பத்திரிகைகளுக்கு அனுப்பவில்லை.

ஒரு தடவை அமீரலி நானா (கிண்ணியா அமீரலி) பாரதியார் கவிதைகள் எல்லாம் உதாரணம் காட்டி எதுகை, மோனை, சந்தம், சீர், அடி என மரபுக் கவிதை இலக்கணம் பற்றி ஏறத்தாள பத்து பக்கங்;களில் எழுதியனுப்பி இருந்தார். அதைக் கவனமாக வாசித்துப் பயிற்சிகள் செய்து பல மரபுக் கவிதைகள் எழுதினேன்.

நான் கற்றது உயர் தரம் விஞ்ஞானத் துறையென்பதால் கவிதைப் பயிற்சிகளை விடவும் பாட ரீதியான பயிற்சிகளுக்கு கூடிய நேரங்களைச் செலவளிக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் வாசிப்பை விட்டுவிடவில்லை. அத்தோடு உயர் தரம் படித்த காலத்திலும் கலை நிகழ்ச்சிகளுக்கான வில்லுப் பாட்டு, நாடகங்கள், இஸ்லாமிய கீதங்கள் தொடர்ச்சியாக எழுதினேன். இயல்பாகவே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் இருந்ததால் என்னாலும் எழுத முடியும் என்பதைப் பிரபலப்படுத்த முடியவில்லை. தற்போது சிறுவர் பாடல், நவீன கவிதை, ஆய்வுகள் தொடர்பில் அதிகம் ஈடுபாட்டோடு இயங்கி வருகிறேன். சிறுவர் இலக்கியத்தில் நற்சிந்தனைகள், மரபு ரீதியான விடயங்களோடு அறிவியல் சார்ந்த சிந்தனைகளையும் சிறுவர் பாடல்களில் புகுத்தி வருகிறேன்.

அதேபோல் கவிதைகளில் முக்கியமாக பெண்கள், சிறுவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். எனது பாடசாலை அனுபவங்களும் இதற்கு வலுச் சேர்த்தன எனலாம். இன்னும் பேச வேண்டிய, வெளிக்கொணர வேண்டிய தீர்வு காண வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன. மேலும் கவிதைக் கட்டமைப்பு, வெளிப்பாட்டு முறைகள் தொடர்பிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்போது வசப்பட்டிருக்கும் முறைகள் மனசுக்குள்ளிருந்து கலைந்து போன பிறகுதான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.


இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. சிகரம் தொடவா                                     (2008) - சிறுவர் பாடல்
02. தங்கமீன் குஞ்சுகள்                                (2010) - சிறுவர் பாடல்
03. எஸ். பாயிஸா அலி கவிதைகள்  (2012) - கவிதை
04. கடல் முற்றம்                                           (2017) - கவிதை

இதுதவிர நான் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் இரு தொகுதிகள் வெளியிடும் அளவுக்கு உள்ளன. ஆனாலும் பொருளாதாரம் மிகப்பெரிய தடையல்லவா?


உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு ஒன்றியம் வழங்கிய சிறுவர் இலக்கியத்திற்கான தமிழியல் விருது (2011) அத்தோடு ரூபா 1000 பணப் பரிசு

02. கிழக்கு மாகாண சாகித்திய விருது (கவிதைத் தொகுதிக்கு) 2012 அத்தோடு ரூபா 10,000 பணப் பரிசும். மேலும் இந்நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருதுக்கான சான்றிதழும் கிடைத்தது.

இதைவிடவும் பிரதேச, மாவட்ட ரீதியான பல்வேறு கௌரவிப்புகளும் கிடைத்தன.


ஊடகத்துறையில் உங்கள் அனுபவங்கள் எப்படி?

பத்திரிகைத் துறையில் நல்ல அனுபவம் உள்ளது. எனது முதுமாணிப் பட்டப் படிப்பைக்கூட இத்துறை சார்ந்துதான் தெரிவு செய்தேன். எங்கள் தேசம் - (கொழும்பு) பத்திரிகையில் பத்தி எழுத்தாளராக 2006 இல் இருந்தே பணியாற்றினேன். கட்டுரைகள், நேர்காணல், கவிதை, நூலாய்வுகள், சிறுகதை என தொடர்ச்சியாக என்னால் எழுத முடிந்தது. அத்தோடு ஷஆரோக்கிய தேசம்| எனும் பக்கத்தையும் மூன்று வருடங்களாகத் தயாரித்து வழங்கினேன்.

இதைவிடவும் உள்ளுர் கல்வி, கலாசாரம் நிகழ்வுகளைப் பல்வேறு ஊடகங்களுக்கும் செய்திக் குறிப்புகளாக அனுப்பியிருக்கிறேன். அத்தோடு பாடசாலை, பிரதேச செயலக நினைவுமலர், நிகழ்காலம் சஞ்சிகை குழுவிலும் இணைந்து பணியாற்றிய அனுபவம் உண்டு.

அத்தோடு உடன் பிறப்புக்கள் முஹம்மட் ரியாட், முஹம்மட் நளீஜ் அப்துல் சலாம் இருவருடனும் இணைந்து கிண்ணியா நெட் (மinnலைய.நெவ) எனும் அரசியல் கலாசாரம் சார்ந்த இணையத் தளத்தினையும் செயற்படுத்தி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் இதனை விரிவுபடுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.


உங்களுக்குப் பிடித்த சிறிய கவிதையொன்றைக் கூறுங்கள்?

எனக்கு பிடித்த சீனக் கவிதையொன்று:-

நான் கேட்கிறேன் மறக்கிறேன்
நான் பார்க்கிறேன் உணர்கிறேன்
நான் செய்கி;றேன் விளங்கிக் கொள்கிறேன்!

வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குக் கூறவிரும்புவது என்ன?

நிறைய வாசியுங்கள். நல்ல எழுத்தாளர்களின் நூல்களைத் தேடி வாசியுங்கள். வாசிப்பு ஒன்றே மனிதனைப் பூரணப்படுத்தும்.


ஒரு ஆசிரியராகக் கூறவிரும்புவது என்ன?

மாணவச் செல்வங்கள் எமது அமானிதங்கள். அவர்களை நமது குழந்தைகளைப் போலவே நடத்த வேண்டும்;. எக்காரணத்திற்காகவும் அவர்களை உடல் ரீதியாகவோ, உளரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. எனது பெற்றார் என்னை ஒரு தடவைகூட அடித்ததில்லை. நானும் எனது பிள்ளைகளை அடித்து வளர்க்கவில்லை. கடினமான சொற்களைவிடப் பக்குவமான அணுகுமுறையினால் பிள்ளைகளைத் திருத்துவது சுலபம். தண்டனைகளால் ஒரு போதும் உலகை மாற்ற முடியாது.

மேலும் பாட ஆயத்தங்கள் இன்றி வகுப்பறைக்குப் போகக்கூடாது. எதனையும் செயன்முறைக்கூடாகக் கற்பிப்பதையே பிள்ளைகள் விரும்புகிறார்கள். உதாரணமாக தமிழ் மொழிப் பாடம் எனும்போது குறித்த அலகை உரையாடலாக, நாடகமாக, பாடலாக என மாணவரோடு மாணவராக நாமும் மாறி கற்பிக்க வேண்டும். நாம் கற்பிற்கும் பாட விடயங்கள் தொடர்பான நிறைவான அறிவைப் பெற்றிருப்பதோடு ஏனைய பாடங்களையும் மற்றும் தற்கால நடைமுறை விடயங்களையும் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இதைவிட அதிமுக்கியம் நாம் கற்பிக்கும் மாணவர்களைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டியது நமது கடமையாகும். அத்தோடு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இறைவனைப் பயந்து கொள்ள வேண்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment