பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, May 29, 2018

32. மூத்த பெண் எழுத்தாளர் ஆனந்தி அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.03.04

எழுத்தாளர் ஆனந்தி அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

பூங்காவனம் வாசகர் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். நான் ஒரு யுகம் கண்ட பெண் படைப்பாளி ஐம்பது வருடங்களுக்கும் மேலாக கொஞ்சமும் நிலை தளராது இலக்கிய வாழ்விலான எழுத்துலகில் கால் கொண்டு உயிர்த்து நிற்கிற சிரஞ்சீவி சரித்திரம் என்னுடையது. இதில் நான் சந்தித்த சவால்களும் தீக்குளிப்புகளும் கண்ணைக் கட்டி மயக்குகிற ஒரு புறம் போக்கு  நிலைமை தான் எனக்கு. என் தலைக்கு மேலே எப்போதும் ஒளிவானம் தான். என் பெருமதிப்புக்குரிய பூங்காவனம் ஆசிரியை கேட்டுக்  கொண்டதற்கிணங்க, அந்த பிரமாண்டமான ஒளித் திரையை இப்போது விரிக்கிறேன்.

அழகான ஒரு கிராமத்தில், ஒரு பெரிய குடும்பத்தில் நான் பிறந்தேன். ஏழாலையென்றால் எப்போதுமே அதற்கு ஒரு தனிப் பெருமை. மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி அது. அதன் பாமரத்தனமான இயற்கை வளம் கொண்ட உயிர்ப்பு நிலையே என் அக சஞ்சாரமான விழிப்பு நிலைக்கு மூல காரணமாக இன்னும் இருந்து வருகிறது. நான் இப்படி ஆன்மீகப் பார்வை கொண்டு எழுதுவதற்கு இன்னுமொரு முக்கிய உந்து சக்தி, தெளிவாகச் சொல்வதானால்  காரண புருஷர் என் தந்தை. அவர் ஒரு பண்பட்ட ஆசிரிய திலகம் வாழ்க்கையையே  வேதமாக உணர்ந்தவர். எனக்கிருக்கிற ஆன்மீக ஞானமும் உயிர் நிலை பற்றிய அறிவும் அவர் எனக்களித்த பெரும் கொடைகள் மூலமே வாழ்க்கை தரிசனமான உண்மைகளை நான் கற்றுக் கொண்டேன். இருண்ட யுகத்திலிருந்து பிரகாசமாகப் புறப்பட்டு வரும் ஒரு ஒளித் தேவதை போல என் இருப்பு நிலை.


02. உங்களது இலக்கியப் பின்னணி குறித்து கூறுங்கள்?

நான் இலக்கிய உலகில் கால் பதித்து எழுதத் தொடங்கிய போது வயது பத்தொன்பது. எனக்குத் தமிழ் நன்றாக எழுத வரும் மிகச் சிறு வயதிலேயே கதைகள் வாசிக்கும் பழக்கம் இருந்ததால் அப்படி ஒரு எழுத்தாற்றால் எனக்குத் தானாகவே வந்தது. இராமநாதன் கல்லூரியில் தான் நான் படித்தேன். படிக்கிற காலத்திலேயே நான் எழுதும் கட்டுரைகளுக்கு ஒரு தனி மதிப்பு. ஆசிரியை தான் அதை படித்து மகிழ்வதோடு, படிக்கும் மாணவிகளுக்கும் வாசித்துக் காட்டிய சந்தர்ப்பங்களுமுண்டு. நான் எஸ்.எஸ்.ஸி மட்டும் தான் படித்தேன்.  படிப்பு முடிந்து வீட்டிலிருந்த போது தான் எழுதும் கலை எனக்குள் கண் திறந்து கொண்டது.

ஆரம்பத்தில் நான் ஆண் புனைப் பெயரில் தான் எழுதினேன். ஷஷதமிழ் குடி கொண்டான்|| என்ற புனைப் பெயர் அப்போது எனக்கு. முதலில் நான் அரசியல் கட்டுரைகள் தான் எழுதினேன். அந்தக் காலத்தில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்காகத் தமிழன் என்றொரு பத்திரிகை வெளிவந்தது. அதில் தான் நான் முதன் முதலாக எழுதினேன். ஆக இரு அரசியல் கட்டுரைகள் மட்டும் தான் எழுதினேன். அதில் ஒரு கட்டுரை கல்கண்டு  என்ற தமிழ் நாட்டுப் பத்திரிகையில் மறுபிரசுரமாக வெளிவந்தது. அதில் எனது பெயர் குறிப்பிடும் போது தனிப் பெரும் தமிழ் எழுத்தாளர் தமிழ் குடிகொண்டான் என்று ஓர் அடைமொழியை அதன்   ஆசிரியர் தமிழ்வாணன் போட்டிருந்தார்.
எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. ஏனென்றால் இன்னும் நான் நிறைய எழுத வேண்டி இருந்தது. ஒரு சிறுகதை கூட எழுதாத நிலையில், இந்தப் பட்டத்தை ஏற்க என் மனம் விரும்பவில்லை.  பின்னர் தான் நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இது ஒரு கசப்பான அனுபவம் எனக்கு. நான் எழுதத் தொடங்கிய போது நிறையச் சறுக்கல்கள். சவால்கள். சிலர் என் கதைகள் கனம் குறைந்தவை என்று தூக்கியும் எறிந்திருக்கிறார்கள்.  இது எனக்கு விழுந்த அடியல்ல. தமிழுக்கே விழுந்த அடியே என்று நான் மனம் வருந்தினேன். என்றாலும் நான் சளைக்கவில்லை. அதன் பிறகு ஈழநாடு பத்திரிகையில் எனது கதைகள் பிரசுரமாயின. கல்யாணத்துக்குப் பிறகு தான் நான் ஆனந்தியானேன். கல்யாணத்துக்கும் பிறகு வாழ்க்கை அனுபவம் நிறைய எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதை வேதமாகவே உணர்ந்து, இப்போது அதற்கமைவாகவே நான் கதை எழுதுகிறேன். என் கதைகளை ஊன்றிப் படிப்பவர்களுக்கு இது புரியும். நான் வித்தியாசமான நடையில் எழுதுவதாகச் சொல்கிறார்கள். எழுத்து நடையிலிருந்தே எனது கதை தான் என்பதைக் கண்டு பிடிக்க முடியுமென்று இலக்கியவாதி ஒருவர் சொன்னார்.


03. இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

சிறுகதைகளாக நான் நிறைய எழுதியிருக்கிறேன். ஆரம்பத்தில் பெரிய பத்திரிகைகளில்  எனது கதைகளுக்கு, அங்கீகாரம் கிடைக்காமல் போனதால் நான் என்ற ஓர் உளவியல் சஞ்சிகையில் நான் எழுத நேர்ந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து அந்தப் பத்திரிகை இன்னும் வெளிவருகிறது. அதில் எனது கதைகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அது ஒரு கிறிஸ்தவப் பத்திரிகையாக இருந்தாலும், என் இலக்கியத் தாகத்துக்கு வடிகால் தேடியே அதில் நான் எழுத நேர்ந்தது. அவர்களும் இந்த முரண்பாடு வேற்றுமைகளைக் களைந்து,  எனது கதைகளை ஏற்றுக் கொண்டார்கள் அது எனக்கு ஒரு சகாப்த வெற்றி மாதிரி. இதுவே எனது எழுத்து யுகத்தின் ஆரம்ப நிலை.

கொழும்புக்கு வந்த பிறகு தான் மல்லிகை மூலம் இலக்கிய உலகுக்கு நான் அறிமுகமானேன். ஆசிரியர் டொமினிக் ஜீவா ஐயா அவர்களுக்கு என் எழுத்தின் மீது தனி மதிப்பு. அதைத் தொடர்ந்து இன்றும் நான் எழுதி வருகிறேன். வயதாகி விட்டாலும் வாழ்க்கையை ஆழ ஊடுருவி வேதமாகவே உணர்ந்து எழுதும் ஆற்றலின் உயிர்ப்பு மாறாத நிலையிலேயே எனது இந்த எழுத்து யுகம் தலை சாயாமல் நிற்கிறது. எனது கதைகளைப் படிப்பவர்களுக்கு இது புரியும். ஜீவநதி பத்திரிகையிலும் நான் நிறைய எழுதியிருக்கிறேன். எனது குறு நாவல்கள் இரண்டும் அதில் தான் பிரசுரமாயின.


04. நீங்கள் இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் இவ்வளவு கதைகள் எழுதியிருந்தும் ஆக இரு நூல்களை மட்டும் தான் என்னால் வெளியிட முடிந்தது. ''துருவ சஞ்சாரம்'' என்ற சிறுகதைத் தொகுதி மல்லிகைப் பந்தல் வெளியீடாகவும் மற்றைய நூலான ''ஆனந்தியின் இரு குறுநாவல்கள்'' என்ற நூல் ஜீவநதி வெளியீடாகவும் வெளிவந்தன. இது எனது இரு குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பு.

இதன் முதல் கதையான புது வீடு பற்றி இப்போது கூறுகிறேன். 1986 ஆம் ஆண்டு தான் நான் என்ற உளவியல் சஞ்சிகையில் குறுநாவலாக ஐந்து இதழ்களில் தொடர்சியாக வெளிவந்தது. அதன் முதல் அத்தியாயம் வெளிவந்தது. ஓர் ஆண்டு மலரில் அதன்  வெளியீட்டை ஒரு விழாவாக அவர்கள் கொண்டாடினார்கள். அதற்கு நானும் போனேன். நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் அது அரங்கேற்றம் கண்டது. அந்த விழாவில் பேசிய காலஞ் சென்ற பிரபல எழுத்தாளர் திரு செம்பியன் செல்வன் அவர்கள் என் குறு நாவல் பற்றிக் குறிப்பிடும்போது கைதேர்ந்த எழுத்தாளர்களின் கதை போல் என் கதையின் எழுத்து நடை இருப்பதாக அவர் பேசிய போது எனக்குப் புல்லரித்தது. இதை ஒரு புகழுக்காக நான் கூறவில்லை. அப்போது அவர் என்னை ஒரு அனுபவமற்ற இளம் எழுத்தாளராகவே எண்ணியிருக்கக் கூடும். நான் நீண்ட காலமாக எழுதி வருவதை அவர் அறியாத நிலையிலேயே அவர் அதைச் சொல்ல நேர்ந்தது. அப்போது அப்படித்தான் என் நிலைமை இருந்தது. இலை மறை காயாக நான் இருக்க நேர்ந்தது காலத்தின் கொடுமை.  இருந்தாலுமென்ன என் எழுத்து யுகம் இன்று களை கட்டி நிற்கிறது. இப்போது இணையத்திலும் என் கதைகள் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிர்வது நான் செய்யும் எழுத்துத் தவத்தின் இனிய பெரும் பேறு. சிறுகதைகளுக்கான ஒரு வலைத்தளத்தில் என் கதைகளைப் பதிவேற்றியுள்ளேன். அதில் பார்வையிடலாம்.


05. நீங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

ஆரம்ப நிலையில் நான் எதிர் கொள்ள நேர்ந்த தோல்விகளுக்கு நடுவே மனம் தளராது   எழுத்து யுகத்தின் உச்சிக்குப் போய் நான் இன்னும் எழுதிக் கொண்டிருப்பதே ஒரு பெரும் சாதனை தான். அதிலும் வயதான பின்னும் எழுத்தூக்கமான பார்வை ஒளி கொண்டு பிரகாசிக்க நான் இன்னும் உயிர்த்து நிற்பதே அதைவிடப் பெரும் சாதனையல்லவா.


06. இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி யாது கூறுவீர்கள்?

இப்போதுள்ள பெண் எழுத்தாளர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தனித்து எவரையும் அடையாளம் கண்டு சொல்வதற்கு அவர்களுடைய படைப்புக்களை நிறையவே வாசிக்க வேண்டும் நான்.


07. சிறுகதை, நாவல் குறித்த உங்கள் பார்வை என்ன?

சிறுகதை குறுகிய வட்டத்தினுள் இடம் பெறும் ஒரு குளம் மாதிரி. நாவலோ சமுத்திரம் போல ஆழத் தோண்டினால் தான் முத்துக் கிடைக்கும். இதற்கு மனிதர்களை மட்டுமல்ல  வாழ்வையும் ஒரு வேதமாகக் கற்க வேண்டும்.


08. எழுத்துத் துறை சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

வாழ்வியல் மாற்றங்களினூடே அசைவற்ற பிரம்மமான ஆன்மீக தேடல் வழியாகவே  எதிர்மறையான நிழல்களைப் புறம் தள்ளி மனிதர்களுக்குப் பயன் தரக் கூடிய நிஜ தரிசனமான பார்வை மூலம் நன்மைகளை வாழ்விக்கவே எனது நீண்ட கால இலக்கிய யாத்திரை. இதுவே தடம் மாறாத என் எழுத்துத் தவத்தின் இனிய குறிக்கோள். இதை ஓர் இறை பணியாகவே  நான் செய்து வருகிறேன். மனிதர்கள் புடம் கண்டு எழுதுவதன் மூலமே இறைவனையும் காண முடியும்.


09. புதிய சிறுகதை, நாவல் வெளியீடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்றைய கால கட்டத்தில் எங்கள் எழுத்தாளர்களும் நிறைய எழுதுகிறார்கள். புத்தக வெளியீடும் செய்கிறார்கள். இது தமிழுக்குப் பெருமை சேர்க்கிற ஒரு நல்ல காரியம் தான். இதன் மூலம் தமிழ் தன் சாஸ்வத உயிர்ப்பு நிலை மாறாமல் களை கொண்டு பிரகாசித்தால்  மகிழ்ச்சியே. ஆனால் ஒரு கேள்வி. நவீன வாழ்க்கை மாற்றங்களில் காசு, பணம் புரள்வதால் வாசித்து அறிவைப் பெற வேண்டுமென்ற நிலை மாறி எல்லாம் தடம் புரண்ட போக்கில் இது எடுபடுமா என்று எனக்குத் தெரியவில்லை. காலம் தின்ற கரிக்குஞ்சுகள் மாதிரித் தான் பெரும்பாலானோர் நிலையும்.


10. வேறு எந்தத் துறைகளில் தற்போது ஆர்வங்காட்டி வருகிறீர்கள்?

இப்போது நன்றாக கவிதை எழுத வருகிறது.  முகநூலில் இறை கவிதையாக நிறைய எழுதி வருகிறேன். தினமும் கவிதை தான். விடியும் போதே என் கவிதை ஊற்றுக் கண் திறக்கும். என் கவிதையை வாசித்து விருப்பம் தெரிவிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. சுவாமி நித்யானந்தா அவர்ளை மனம் ஒன்றி வழிபடத் தொடங்கிய பிறகே எனக்கு இது வரமாகக் கிடைத்தது. என் கவிதையைப் படிக்கிற சிலர் கேட்பதுண்டு இவ்வளவு ஆழமாக அழகாகத் தமிழ் எழுதுகிறீர்களே எப்படி என்று கேட்கிறார்கள். இது நானாக எழுதுவதில்லை. ஆழமாக யோசிக்காமலே இப்படி எழுதுகிறேனென்றால் அது வேறொன்றுமிலை இறைவன் கொடுத்த வரம் தான்.


11. நீங்கள் எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கின்றீர்கள்? என்ன காரணம்?

சிறுவயதிலிருந்தே வாசித்து வருபவள் நான். தத்துவ நூல்கள், சமய நூல்களென்றால் மிகவும் பிடிக்கும். அந்தக் காலத்திலேயே நாவல்களும் நிறைய வாசித்திருக்கிறேன். கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் நூலை நூறு தடவைகளாவது வாசித்திருப்பேன். ஜெயகாந்தனின் கதைகள், அகிலன் கதைகள், லஷ்மி கதைகள் எல்லாம் படித்திருக்கிறேன்.


12. இதுவரை உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

விருதுகள் என்று பெரிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. 2009 இல் மூத்த எழுத்தாளர் என்று கௌரவித்து எனக்கு விருது தந்தார்கள். இது ஒன்று மட்டும் தான் எனக்கு கிடைத்த பெரிய விருது.


13. இலக்கிய உலகில் நிகழ்ந்த உங்களுக்கு மறக்க இயலாத சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

மறக்க முடியாத சம்பவங்களாய் நிறைய உண்டு. ஒன்றை மட்டும் சொல்கிறேன். கல்யாணத்துக்கு முன் இது நடந்தது. அப்போது நான் தமிழ் குடிகொண்டான், இதே பெயரோடு ஈழநாடு பத்திரிகையில் நான் முதன் முதலாக எழுதிய குறுநாவல் ஒன்று பிரசுரமானது, ஏனோ எதிர்பாராதவிதமாக அதை இடையில் நிறுத்தி விட்டார்கள்.

பின்னர் விசாரித்தபோது தகவல் சொன்னார்கள். எனது உறவினர்களில் எவரோ போய்ச் சொன்னார்களாம்.. இது தங்களையே தாக்கி எழுதப்பட்டிருப்பதாகவும் ஆகவே அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே தாங்கள் நிறுத்திவிட்டதாகவும். எனினும் ஷஷஅது மிகவும் நல்ல கதையாக இருந்ததால் முடிக்கவும் மனம் வரவில்லை|| என்று அவர்கள் சொன்ன போது எனக்கு எப்படியிருந்திருக்கும்.

கனம் இல்லை என்று தூக்கி எறியப்பட்ட என் கதைக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்தது வெற்றியே. ஆனால் ஒரு சின்ன மனவருத்தம், நிழலைப் பார்த்து மயங்கும் புத்தி எனக்கில்லை நிஜம் தலைகீழானால் வாழ்வின் கொடுமைகள் குறித்து தரிசனம் கண்டு எழுதக் கூடிய தர்மாவேசத்தின் தார்மீகக் கடமையின் விளைவாகவே என் எழுத்தும் இருக்கும். நான் பொதுப்பட எழுதியதை அவர்கள் ஏன் தலையில் சுமக்க நேர்ந்தது. இது குற்றமல்லவா?


14. இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது? 

இது ஒரு சிக்கலான கேள்வி மனம் திறந்து உண்மையைக் கூற நேர்ந்ததற்காக வருந்துகிறேன். என்னுடைய சொந்த அனுபவம் குறித்த கசப்பான உண்மை இது. விருதுகள் வழங்கும் ஒரு பெரிய நிறுவனம் அதன் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு சமயம் அதன் விருதுத் தேர்வுக்காக நானும் என் முதல் நூலை அனுப்பி வைத்திருந்தேன். விருது எனக்குக் கிடைக்கவில்லை. பின்னர் நெடுநாள் கழித்து அதன் தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு இலக்கியவாதியை நான் சந்திக்க நேர்ந்தது. முன்பே எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். என் நூல் வெளியீடு பற்றிக் கூறிய போது தான் அதை வாசிக்க வேண்டும் தருமாறு அவர் கேட்டுக் கொண்ட போது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. தேர்வுக்குழுவின் கண்ணில் படாமல் மறை பொருளானதா என் கதை? அங்கு அதையும் வாசித்தல்லவா ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். இதைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார் நன்றாக எழுதக் கூடியவர்களின் கதை பார்த்துத் தான் நாங்கள் தேர்ந்தெடுகிறோம். இந்தச் சறுக்கலுக்கு ஒரு சமாதானம் வேறு உலகம் எப்போதும் இருட்டில் தான் இருக்கிறது.


15. இறுதியாக வாசகர்களுக்காக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எனது சொந்த இருப்பிலிருந்தே இதை சொல்கிறேன். எங்கள் மக்களிடையே வாசிக்கும் பழக்கம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். அதுவும் குப்பை கூளங்களையல்ல. ஆன்மாவை உயிரை தரிசனம் காட்டுவதற்கென்றே அறிவு சார்ந்த நூல்களைக் கதைகளை வாசித்தாலொழிய மாற்றம் நேராது. சுபீட்சம் தழைக்காது. வெறும் பணத்தினால் ஆவது வெறும் சலன மிதப்புகள் தாம். அதை மறந்து விட்டு வாழ்க்கையைத் தரிசனம் காண்பதொன்றே நிஜத்தின் வெற்றியாக அமையும். இதற்கு நல்ல வாசிப்பும் ஒரு சிறந்த மார்க்கமே இன்றைய இளைய தலை முறையினருக்கு இது விளங்க வேண்டுமென்பதே எனது பிராத்தனையுமாகும். நான் ஒரு யுகமாக எழுதி வருகிறேன். இதுவரை எந்தப் பத்திரிகையிலும் எனது நேர்காணல் இடம் பெறவில்லை. ஆனால் மிகவும் பெருந்தன்மையுடன் முதல் முறையாக என்னைக் கௌரவித்துப் பேட்டி கண்டு பத்திரிகையில் பிரசுரிக்க முன் வந்த உங்களுக்கு என்  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment