பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, May 29, 2018

33. சந்திரகாந்தா முருகானந்தன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.04.22


சந்திரகாந்தா முருகானந்தன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


பெண்ணிய எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான திருமதி சந்திரகாந்தா முருகானந்தன் பெண்ணியம் தொடர்பான பல கட்டுரைகளையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியவர். மல்லிகை ஆண்டு மலரில் (2003) பிரசுரமான பெண்ணியக் கட்டுரை மூலம் எழுத்துலகில் கால் பதித்தவர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமராட்சி பிரதேசத்தில் பிறந்த இவரும் பெற்றோரைப் போலவே ஓர் ஆசிரியர். வர்த்தக ஆசிரியையான இவர் இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார். மனிதநேய டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், பிரதி அதிபராக இருந்ததுடன் உளவளத் துணை செயற்பாட்டாளராக, உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத் தலைவியாக இருந்து இடர் மிகுந்த போர்க் காலத்தில் மனித நேயப் பணி புரிந்தவர். இவரது கணவர் டாக்டர் ச. முருகானந்தன் நாடறிந்த பல்துறை எழுத்தாளராவார். இவருக்கு இரண்டு மகள்மார் உள்ளனர். மூத்த மகள் அகல்யா சட்டத்தரணியும் கணக்காளருமாவார். இளைய மகள் அனுசுயா பொறியியலாளர்.


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாயைச் சேர்ந்த நான் ஒர் எழுத்தாளர், ஆசிரியை. எனது தந்தை மாணிக்கம்;, தாய் அற்புதம். நான்; ஆரம்பக் கல்வியை வேதாரணியேஸ்வர வித்தியாலயத்திலும் உயர் கல்வியைக் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்று மனித உரிமையில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளேன்.

எனது முதலாவது ஆக்கமான 'இலக்கியப் படைப்புக்களில் பெண்ணியம்|| 2003 ஜனவரியில் மல்லிகை இதழில் வெளியானது. தொடர்ந்து சந்திரகாந்தா, சந்திரா, காந்தா, மகிழ்னன், முருகானந்தன் ஆகிய புனைப் பெயர்களில் 25 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 60 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 150 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். இத்தகைய ஆக்கங்கள் தினக்குரல், வீரகேசரி, தினகரன், நவமணி, சுடரொளி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், வெளிச்சம், ஜீவநதி, பூங்காவனம் ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.


உங்கள் பார்வையில் பெண்ணியம் பற்றிக் கூறுங்கள்?

 பெண்ணியம் என்பதன் உட்பொருள் பல நிலைகளில் நோக்கப்படுகிறது. பெண்ணியம் பற்றிய முழுமையான தெளிவு இன்னும் பெறப்படவில்லை என்று கூறலாம். பால் ரீதியில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்கள் அதிலிருந்து விடுபட்டு சம, சக ஜீவியாக நோக்கப்படும் நிலையை எட்டுவதே பெண்ணிய இலக்காகக் கொள்ளப்படுகிறது. சனத்தொகையில் சரிபாதிக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் பெண்கள் இன்னமும் அடக்குமுறைக்குள் இருப்பதை மறுக்க முடியாது. சமூகத்தில் அடிப்படை உரிமைகளின்றி வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தி மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதையே பெண்ணியம் எனலாம்.


நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் எவை? இவற்றுக்காகக் கிடைத்த பரிசில்கள், விருதுகள் யாவை?

01. பெண் விடுதலையும் சமத்துவமும் (கட்டுரை) 2005
02. விடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள் (கட்டுரை) 2007
03. வேள்வித் தீ (கவிதை) 2008
04. அனுசுயாவின் கரடி பொம்மை (சிறுகதை) 2010

ஆகிய 04 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளேன். எனது சிறுகதைகளுக்காக இரண்டு தடவை தகவம் விருதும், கனக செந்திநாதன் கதா விருதும் கிடைத்துள்ளன. ஷஅனுசுயாவின் கரடி பொம்மை| இலங்கை இலக்கியப் பேரவையினால் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினைப் பெற்றுள்ளது. இதுதவிர 15 தடவைகள் போட்டிகளில் பரிசும் பெற்றுள்ளேன்.


இன்று எமது நாட்டுப் பெண்களின் வாழ்வுநிலை மேம்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எமது பெண்களின் வாழ்நிலை ஏறுமுகமாகி வருவதை மறுக்க முடியாது. பெண்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பே இந்த ஆரோக்கியமான நிலைக்கு வித்திட்டது. காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டவளாய், அடுப்பிலும் நெருப்பிலும் வெந்து கொண்டிருந்த பெண்கள் கணவர்களால் சொத்துடைமையாகவும், பள்ளியறைப் பாவையாயுமே நோக்கப்பட்டு வந்தார்கள். ஒரு கொத்தடிமை போல் அதிகாலை முதல் - இரவு வரை அயராது உழைத்துக் களைக்க வேண்டியிருந்தது. இவை யாவும் அவளுக்கான கடமை என்பதாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான பெண்கள் தாம் அடிமைப்பட்டிருப்பதை அறியாதவர்களாக, இதுவே விதி என்பதுவாய் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். அத்துடன் கணவர்களினதும் குடும்பத் தலைவர்களினதும் சமூகத்தினதும் அடக்குமுறை இவர்கள் உணராதவாறு இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. பிறப்பிலிருந்து இறப்புவரை இந்தச் சோகம் தொடர்ந்து நிலைத்திருந்தது. பெண்கள் சுயமாகச் சிந்தித்துத் தீர்மானம் எடுக்கவோ, சுதந்திரமாகச் செயற்படவோ அனுமதிக்கப்படவில்லை. குடும்ப வன்முறைகளாலும், பாலியல் வன்முறைகளாலும் இவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.


இன்று இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?

முழுமையான மாற்றத்தை இன்னும் எட்டவில்லை. எனினும் மாற்றத்திற்கான திசையில் பயணிக்கிறார்கள். அண்மைக் காலமாகப் பெண்கள் விழிப்படைய ஆரம்பித்திருக்கிறார்கள். தாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதையும் பால் சமத்துவ நிலை பற்றியும் உணர்ந்துகொண்டதே வெற்றிக்கான படிதான். மேற்தட்டு மற்றும் நடுத்தர மேற்தட்டுப் பெண்களிடையே பெண்ணியம் பற்றிய தெளிவு ஏற்பட்டுள்ள அளவு கீழ்தட்டு மக்கள் மத்தியிலும் உழைக்கும் தொழிலான வர்க்கப் பெண்கள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. எனினும் எழுச்சிகள் ஏறுமுகமாக வேகம் கொள்வதை அவதானிக்க முடிகிறது.

கல்வி, அறிவு பெண்களின் கண்களைத் திறந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இதனால் இன்றைய பெண்கள் விழிப்புணர்வு பெற்றுத் தம்மைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். அடிமைத் தனங்களையும் கண்மூடித்தனமான சம்பிரதாய ஒடுக்குமுறைகளையும் பின்தள்ளிவிட்டுச் சுதந்திரமாகவும் முற்போக்காகவும் சிந்தித்துச் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். வேலை வாய்ப்பும் வருமானமீட்டலும் பெண்களின் நிலையை உயர்த்தியுள்ளன. ஆண்களில் முற்று முழுதாகத் தங்கியிருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. சுயமாகச் சிந்திக்கவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் இன்றைய பெண்கள் தொடங்கியுள்ளமை பெண் விடுதலையின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.


சமூகத்தில் பெண்களுக்கெதிராக ஆணாதிக்கம் எவ்வாறு உருவானது என்று நினைக்கிறீர்கள்?

இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த காலத்தில் பெண்களே ஒவ்வொரு கூட்டத்திற்கும் தலைமை தாங்கினாள். நிலவுடைமைச் சமுதாயம் ஆரம்பித்த பின்னரே பெண்களின் நிலை வீழ்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. தாய் வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகத் தோற்றமானது, பெண்ணையும் சொத்துடைமையாகப் பின்தள்ளியது எனலாம். குடும்ப அலகின் வருகைக்குப் பின்னரே பெண்ணின் மீதான ஆதிக்கம் அதிகரித்தது எனலாம். இதனால் உருவானதே ஆணாதிக்கம். இங்கு பாலியல் கட்டுப்பாடுகள் முதலில் பெண்ணுக்கே விதிக்கப்பட்டது. ஒருதலைப் பட்சமான போலிக் கற்பெனும் மாயையின் உருவாக்கமும் இதனாலேயே ஏற்பட்டது. சமூக ஒழுக்க நெறிகள் உருவாக்கப்பட்டபோது பாரபட்சமாக ஆண்களுக்கு சார்புடையதாக உருவாக்கப்பட்டது. மதமும் அதனோடு ஒன்றிய கலாசார பண்பாட்டு உருவாக்கங்களும் பெண்ணுக்குப் பாதகமாக உருவாக்கப்பட்டன.


பெண்ணிய மேம்பாட்டிற்கு மாறாகப் பெண்களே செயற்படுவதைக் காண முடிகிறதே?

மத, கலாசார அம்சங்களில் சிறுவயதிலிருந்தே ஊறி வளர்ந்து வந்த பெண்கள் சிலரிடம் இன்றும் கூட பெண் விடுதலைக்கு எதிரான சிந்தனைகள் இருக்கவே செய்கின்றன. இன்னொரு காரணம் பெண்களிடையே போட்டியும் பொறாமையும் அதிகமாக உள்ளமை. பெண்களில் குறை காண்பதும், ஒழுக்கம் தொடர்பாக அதிகம் விமர்சிப்பதும், விதவைகளை ஒதுக்கி வைப்பதும், சீதனம் கோருவதும், காதலை மறுப்பதும் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள். ஒழுக்கம் தொடர்பான விமர்சனங்களால் பல பெண்களின் வாழ்வு பாதிப்புக்குள்ளாகிறது. ஆனாலும் பெண்கள் பெண்களின் ஒழுக்கம் பற்றியே தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆண்கள் எப்படி நடந்தாலும் அதை அதிகம் தூக்கிப் பிடிப்பதில்லை. கற்பு என்ற ஒழுக்கநெறி இருபாலாருக்கும் இருக்க வேண்டும்.


பெண்ணிய மேம்பாடு பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள்?

காலம் காலமாகப் பெண்ணை வருத்தி சுகம் அனுபவித்து, ஆதிக்கம் செலுத்தி வந்த ஆண்கள் பலர் பெண் விடுதலையை நிராகரிக்கிறார்கள். பெண்ணுக்கு என்ன குறை என்று கேட்கவும் செய்கிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களின் போக்கில் மாற்றம் தெரிகிறது. பெண் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆண்களின் இந்த மனமாற்றம் ஆரோக்கியமானது. பெண்களின் விழிப்புணர்வினாலும் போராட்டத்தினாலும் மட்டும் பால் சமத்துவத்தை எட்டிவிட முடியாது. இளைஞர்களின் புரிதலிலும் மன மாற்றத்திலுமே பெண்ணிய மேம்பாடு பெரிதும் தங்கியிருக்கிறது எனலாம். இன்று படித்த, உயர் பதவி வகிக்கின்ற கணிசமாக வருவாய் ஈட்டுகின்ற பெண்கள், குடும்பத்தில் சொல்லொணாத் துயரை அனுபவிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெண்ணின் குடும்ப, வேலைப் பளு குறைக்கப்பட வேண்டும். பெண்களின் ஆற்றல் ஆளுமைகளுக்குத் தடைபோடலாகாது.

பாலியல் சமத்துவ நிலை ஏற்பட வேண்டுமானால் திருமணத்தில் சுதந்திரம் வேண்டும். ஆண் - பெண் பிள்ளைகளிடையே சிறு வயது முதல் பாகுபாடு காண்பிக்கக் கூடாது. பெண்ணைச் சுமையாகக் கருதும் நிலை மாற வேண்டும். ஷசாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை| என்ற அபத்தங்கள் நீங்க வேண்டும். சொத்துரிமையில் பாகுபாடு இருக்கக் கூடாது. இவ்வாறான பல அம்சங்களில் ஆண்களின் சிந்தனைகளில் அண்மைக் காலமாக நல்ல மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. பெண்ணிய மேம்பாட்டை ஆண்களும் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தணியாமைக்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

வன்முறைகள் என்று நோக்கும்போது குடும்ப வன்முறைகளே அதிகமாக உள்ளன. ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து பெரும்பாலான ஆண்கள் விடுபடவில்லை. அவ்வாறு விடுபட்டு பெண்ணியத்தை ஆதரிக்கும் மனப்போக்கு உள்ளவர்கள் கூட ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. இன்றைய பெண் மேலோங்கி தமக்கு சமமாக வருவதைப் பல ஆண்களால் ஜீரணிக்க முடியவில்லை. குடும்ப வன்முறை தொடர்வதற்கு இதுவே காரணமாக உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதற்கு பெண்கள் ஆண்களை விட வலிமை குன்றியவர்களாக இருப்பதும் ஒரு காரணம். பல சந்தர்ப்பங்களில் பெண்களை அடக்குவதற்கு தாக்குதலைப் பிரயோகிப்பதற்கு இது ஏதுவாக உள்ளது. பெண்கள் மன வலிமை மிக்கவர்களாக இருப்பினும் உடல் ரீதியில் பலம் குன்றியவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் அவ்வாறே கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் பெண்களும் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளை தண்டிப்பதும் கூட குடும்ப வன்முறை தான்.


அண்மைய நாட்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துச் செல்வதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பாலியல் வன்முறைகளில் மிகவும் மிலேச்சத்தனமானது சிறுமிகள் மீது பிரயோகிக்கப்படுகின்ற பாலியல் வன்முறைகளே. வீட்டில் சிறுமிகளை விட்டுவிட்டு பெண்கள் (தாயார்) வெளிநாட்டு வேலைக்குச் செல்லும்போது சிறுமிகள் தனிமையில் விடப்படுகிறார்கள். இதனைப் பயன்படுத்தி பருவ வயதில் உரிய வழிகாட்டலின்றி இருக்கும் சிறுமிகளை காமுகர்கள் வஞ்சகமாக ஏமாற்றி விடுகின்றார்கள்.

இவ்வாறான வன்முறைகளில் பெரும்பாலும் ஈடுபடுவது குடும்பத்தின் நெருங்கிய உறவுகளே. சில சமயங்களில் தந்தை ஸ்தானத்தில் உள்ளவர் கூட இவ்வாறான வன்கொடுமையில் ஈடுபடுகின்றமை மனித நாகரீகத்திற்கு புறம்பான இழி செயலாகும். இதற்கெல்லாம் காரணம் பெண் என்பவள் எப்போதும் உடலாக நோக்கப்படுவது தான். பருவ வயதை எட்டாத பச்சிளம் பாலகர்கள் கூட பலியாக்கப்படுவது கொடுமை. இவ்வாறான கொடுமைகளுக்கு மது, போதைப் பொருள், நீலப் படங்கள், இலத்திரனியல் மற்றும் இணைய சாதனங்களும் இன்னொரு காரணமாக உள்ளது.


இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

இன்றைய பெண்களின் மேம்பாட்டிற்கு ஒரு சில ஆலோசனைகளைக் கூறலாம். பெண்கள் தம்மை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் தான் முன்னேற்றமடைய முடியும். பாம்புகள் விழுங்கி பாதாளத்திற்கு இட்டுச் சென்றாலும் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முன்னேற்றம் பற்றிச் சிந்திக்க வேண்டும். தமது கல்வியறிவு, பதவி நிலை, பொருளாதாரம் என்பவற்றைப் பெற்றுக் கொண்டு ஏறுமுகமாகப் பயணிக்க வேண்டும்.

பெண்கள் தம்மிடையே உள்ள பேதங்களை மறந்து செயற்பட வேண்டும். சாதி, வர்க்கம், பதவி நிலை, பணம் என்ற எல்லைகளைத் தாண்டி ஷபெண்| என்ற அடையாளத்துடன் முன்னேற வேண்டும். ஆண்களுடன் அதிகம் முரண்படாமல் அவர்களைப் புரிய வைப்பதில் வெற்றி காண வேண்டும். குடும்பத்தில் பெண் தனது கடமைகளைப் புறந்தள்ளிவிட்டுச் செயற்பட முடியாது. அதேநேரம் தனக்கு எதிரான பாகுபாடுகளையும் வன்முறைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு சமத்துவத்தை அடைய வேண்டும். இப்பயணத்தில் பெண்களே பெண்களுக்கு எதிராகச் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும். பெண்ணியப் பயணத்தில் ஆண்களையும் இணைந்து செயற்படும் போது பெண்ணிய இலக்குகளை எட்டுவது சாத்தியமாகும். ஒருபோதும் பெண் தனது சுயத்தை இழந்துவிடக் கூடாது!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment