பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

04. திருமதி. ஸனீறா காலிதீன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.12.08

திருமதி. ஸனீறா காலிதீன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக கூறுங்கள்?

களுத்துறையில் பிறந்து தர்கா நகரில் கல்வி கற்றேன். தற்போது களுத்துறை முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். நான் வளர்ந்த, கல்வி கற்ற சூழல் எனது இலக்கிய வளர்ச்சிக்கு உதவியது. தற்போது நான் வாழுகின்ற சூழல் அதிக இலக்கியப் பரிச்சயமற்றதாயினும் நான் கற்பிக்கும் பாடசாலையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்த துறை என்ற பத்திரிகையை மீண்டும் தொடங்கி நடாத்தி வருகிறேன். தொடர்ச்சியாக என்றில்லாத போதும் துறை வெளிவந்து கொண்டிருக்கிறது. இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பும் ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது.


எழுத்துத் துறைக்கு நீங்கள் வந்தது பற்றி?

எழுத்தில் ஆர்வம் ஏற்படுவதற்கு ஏதுவானதாக எனது ஆரம்ப கால வீட்டுச்சூழல் அமைந்திருந்தது. முதலில் எழுதிய சிறுகதைகள் கதம்பம், ஜும்ஆ பத்திரிகைகளில் பிரசுரமானதைத் தொடர்ந்து பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதினேன். அவ்வாறுதான் எனது எழுதுலக பிரவேசம் ஆரம்பமானது.


நாவல் துறையில் நீங்கள் ஆர்வம் காட்டியதற்கான பின்னனி என்ன? அதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் பற்றியும் சொல்லுங்கள்?

வீரகேசரி பிரசுரம் சிறந்த நாவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளை, அவற்றை ஆர்வத்தோடு வாங்கி வாசித்தேன். அவ்வாறு எனது நாவலும் நூலுருவில் வரவேண்டும் என என்னுள் ஏற்பட்ட ஆசை, நாவல் துறையில் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியதெனலாம். அதுபோல நான் வளர்ந்த சூழலும், கல்வி கற்ற சூழலும், சமூகத்தை நோக்குகின்ற எனது ஆழ்ந்த நோக்கும் இத்துறையில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. எனது இரு நாவல்களும் நூலுருவில் வெளிவருவதற்கு வழியமைத்துத் தந்தவர் நான் கற்பிக்கும் பாடசாலையின் முன்னாள் தமிழாசான் ஆவார்.


பொதுவாக நாவல் எழுதுவது சிரமம் என்ற கருத்து நிலவுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாவல் எழுதுவது சிரமம் என நான் நினைக்கவில்லை. நாவலொன்றை நாம் எழுதும்போது கதை மாந்தரோடு நாமும் ஒரு பாத்திரமாக உலாவுகிறோம். நாவலுக்குள் நாமும், எமக்குள் நாவலும் வாழுகின்றபோது சிரமம் தோன்றுவதில்லை.


நாவல் என்ற வகைமைக்குள் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

எளிய, இனிய மொழி நடை, நாவலை தொடர்ந்து பார்த்து முடிக்கக்கூடிய மனோநிலையைத் தருகின்ற உயிரோட்டமுள்ள கதையம்சம், ஒரே இடத்தில் நிற்காது நகர்ந்து செல்லக் கூடியதான கதைப்போக்கு, அத்துடன் சமூக நாவல்கள் மண்வாசனையுள்ள யதார்த்தத்தைப் பிரதிபலிப்பனவாக அமைதல் வேண்டும். இவ்வாறான அம்சங்கள் காணப்படுமானால் அந்த நாவல் வாசகர்களிடத்தே நல்ல வரவேற்பைப் பெறும்.


உங்கள் படைப்புகள் மீது வாசகர்கள் அபிப்பிராயம் எந்தளவில் உள்ளது?

எனக்குத் தெரிந்தவரை எனது படைப்புகள் மீது வாசகர்களின் அபிப்பிராயம் நம்பிக்கையூட்டக்கூடிய வகையில் அமைந்திருந்தது. ஆரம்பத்தில் பத்திரிகைகளில் சிறுகதை எழுதியபோது நேரிலும் கடிதம் மூலமாகவும் தொடர்ந்து பாராட்டுக்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. ஒரு தீபம் தீயாகிறது என்ற எனது முதல் நாவலைப் படித்தவர்கள் சோகமேயுருவாக என்னிடம் வந்து பேசியபோது, நாவல் அவர்களின் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை உணர்ந்து மகிழ்ந்தேன். இரண்டாவது நாவலுக்கும் மனம் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. வாசகர்களின் அபிப்பிராயம் என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.


அலைகள் தேடும் கரை என்ற நாவலுக்கு கொடகே விருது கிடைத்ததையிட்டு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

விருதுகள் சிலவேளை கிடைக்கலாம். கிடைக்காதும் போகலாம். ஆனால் எனது இரண்டாவது நாவலுக்கு கொடகே விருது கிடைத்தபோது என் ஆக்கங்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை வலுவடைந்தது. தரமான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த படைப்பாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வகையில் மும்மொழிகளிலும் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்குகின்ற கொடகே நிறுவனத்தினரின் பணியும் பாராட்டுக்குரியது.



இலங்கையில் நாவல் வளர்ச்சி பற்றி?

தரமான சமூக நாவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் அதே வேளை பொழுதுபோக்கு நாவல்களை வாசிக்கும் வாசகர் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது. இன்று இலக்கியத்தரம் வாய்ந்த சிறந்த படைப்புகள் தவிர்க்கப்படும் துரதிஷ்ட நிலையும் காணப்படுகிறது. பொழுதுபோக்கு நாவல்கள் இயந்திர உற்பத்தியாக அதிகரித்துக் கொண்டிருப்பதுடன் இளைய சமுதாயம் பெரும்பாலும் அதன் பின்னாடியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

உயர்ந்த படைப்புக்களை உணர்ந்து படிக்கக்கூடிய ரசனைத் திறனுள்ளவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். தரமான படைப்புக்களை புறக்கணித்துவிட்டு பொழுதுபோக்கு நாவல்களை அதிகமானோர் நாடுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். எமது இளைய சமூகம் பயனற்றவைகளை வாசிப்பதைத் தவிர்த்து தரமானவற்றை தேர்ந்து வாசித்து பயனடைய வேண்டும். இதுவே எனது விருப்பமாகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment