பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

08. திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.02.16

திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கலாபூசணம் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்

அறிமுகம்

1975 முதல் இலக்கிய உலகில் செல்வி ரஷீத் நூருல் அயின் என்ற பெயரோடு அறிமுகமான இந்த பெண் எழுத்தாளர் நாமெல்லாம் நன்கு அறிந்த பிரபல சிரேஷ்ட பெண் பத்திரிகையாளர், எழுத்தாளர். ஊடகத்துறையில் விரல்விட்டு குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர். மலையகம் தந்த கலை அகம் என்றும் இவரைக் குறிப்பிடலாம்.

ஆம்! இவர்தான் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களாவர்.

மலையகத்தைச் சேர்ந்த உடுதெனிய என்பது இவர் பிறந்த கிராமமாகும். மர்ஹும் அல்ஹாஜ் எம்.எம். ரஷீத், திருமதி உம்மு ஸல்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியான இவர் உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயம், மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றதோடு, கொழும்பு திறந்த பல்கலைக் கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார். கணணித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் பிரதி தயாரிப்பாளராக பல ஆண்டு காலமாக எழுதி வந்த இவர் வானொலி சிறப்புக் கவியரங்கங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கு பற்றி வருகிறார்.

1980 இலிருந்து 1990 வரை 'தினபதி - சிந்தாமணி' ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி' என்ற ஜனரஞ்சக பத்திரிகையிலும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் 'திங்கள்' என்ற மாதாந்த சஞ்சிகையிலும் இணை ஆசிரியராகவும் திகழ்ந்தார். திணைக்களத்தின் 'தெசதிய' என்ற சிங்கள சஞ்சிகையின் சிறப்புக் கட்டுரை எழுத்தாளராகவும் திகழ்ந்து சிங்களத்திலும் இலக்கியம் படைக்கிறார்.

தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer)பணிபுரிந்து வரும் இவர் 'கொழம்ப புவத்' (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரிலான சிங்களமொழி மூல காலாண்டுப் பத்திரிகையின் பிரதம ஆசிரியையாகவும் கடமையாற்றி வருகிறார். 'பண் பாடும் பெண்' என்ற நூலின் ஆசிரியையான இவர், இன்னும் பல நூற்களை வெளியிட காத்திருக்கிறார்.

அகில இலங்கை சமாதான நீதவானாகவும் ,கொழும்பு உயர் நீதிமன்ற ஜூரர் சபை உறுப்பினராகவும் இருக்கும் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், அண்மையில் நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அரச மொழிப்பெயர்ப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகைத்துறையில் வெள்ளி விழாவைக் கடந்திருக்கும் இவர், இலங்கையிலேயே ஊடகத்துறையில் முஸ்லிம் பெண் ஊடக அதிகாரியாக மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக பணியாற்றி வரும் ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரியவர்.
பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட இந்தப் பெண் படைப்பாளியை இம்முறை எமது வாசகர்களுக்காக மகளிர் தினத்தில் பூங்காவனத்துக்கு அழைத்து வந்துள்ளோம்.



இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

உடுதெனிச்செல்வி, பின்த் ரஷீத், பின்த் ஸல்மா, கண்ணொளி ஆகிய புனைப்பெயர்களில் எழுதி வந்த நான், இலக்கிய உலகில் மட்டுமல்ல ஊடகத்துறையிலும் கரடுமுரடான பாதையைத்தான் கடந்து வந்திருக்கிறேன். இத்துறையில் கடந்து வந்த பாதை காபட் பாதையல்ல. கற்களும், முட்களும் நிறைந்த பாதை. இன்றைய எழுத்தாளர்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் எதுவுமே அன்று இருக்கவில்லை. இன்று ஒரு பத்திரிகை இல்லையென்றால் இன்னும் எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. ஒரு வானொலி அலை வரிசையில் ஒலிபரப்பாகாவிட்டால் இன்னும் எத்தனையோ வானொலி அலைவரிசைகள். ஆனால் அன்று அப்படியல்ல. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே பத்திரிகைகள், வானொலி அலைவரிசைகள் இருந்தன.

வானொலியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே. எனவே ஓர் ஆக்கத்தை எழுதி அனுப்பிவிட்டு அது பிரசுரமாக, ஒலிபரப்பாக பல வாரங்கள் ஏன் மாதங்கள்கூட பொறுமை காக்க வேண்டும். அனுப்பிய ஆக்கம் பிரசுரமாகவில்லை, ஒலிபரப்பாகவில்லை என நாம் சோர்ந்து போயிருந்தால் இன்று நாமெல்லாம் முகவரி இல்லாத எழுத்தாளர்களாய் எங்கோ ஒதுங்கிப் போயிருப்போம்.

எழுத்தாளர்களை பொறுத்தவரை விடாமுயற்சி மிகவும் முக்கியம். பத்திரிகை அலுவலகத்திற்கு காலடி எடுத்துவைத்த முதல் மாதத்திலேயே ஒரு சகோதரர், சிஸ்டர், கழுத்தறுப்புக்கள், குத்துவெட்டுக்கள் நிறைந்த பொல்லாத இடத்துக்கே வந்துள்ளீர்கள். ஓரிரு மாதங்களாவது இங்கு நீடிப்பீர்களோ தெரியாது என்றார்.

ஆனால், அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எழுத்துத் துறையிலும், ஊடகத் துறையிலும் பல சவால்களை முறியடித்து வெள்ளி விழாவையும் தாண்டி இன்று பொன்விழா நோக்கி நகர்கின்றேன் என்ற நற்செய்தியைக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கிராமப்புரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நகர வாழ்க்கை புதிய அனுபவம்தான். கொழும்புக் கோட்டைக்கும், புறக்கோட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் நான் பட்ட பாடு பெரும்பாடுதான். அந்த ஆரம்ப கால அனுபவங்களை மீட்டிப் பார்த்தால் ஒரு புத்தகமே எழுதிவிடலாம்.

ஊடகத் துறையிலும், இலக்கியத் துறையிலும் இன்னோரன்ன சிரமங்கள் பட்டே படிப்படியாக முன்னேறினேன். இது இத்துறையில் காலடி வைக்கும் இளசுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்.



திருமணம் எழுத்தாளர் பலருக்கு (கை) விலங்கு போட்டது என்கிறார்கள். உங்களுக்கு எப்படி?

திருமணம் பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு தாழ்ப்பாள் போட்டது என்னவோ உண்மையாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை பூவிலங்கு போட்டது என்பேன். எனது திருமணம் எனது எழுத்துகளுக்கு நீர் வார்த்து உரமிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வெற்றியின் பெருமை முதலில் எனது பத்திரிகையுலகத் தந்தை எஸ்.டி. சிவநாயகம் ஐயா அவர்களையே சாரும்.

நான் இல்லறத்தில் நுழைந்த போது எனது கணவரை அலுவலகத்துக்கு அழைத்த ஐயா அவர்கள், ஷநண்பரே உங்கள் மனைவி ஊடகத் துறையில், எழுத்துத்துறையில் நன்கு ஜொலிப்பவர். இத்துறையில் அவருக்கு சிறந்ததோர் எதிர்காலமுண்டு. எனவே அவரை தொடர்ந்தும் அலுவலகம் அனுப்பி வையுங்கள் என்று கூறி ஆசியுரை பகர்ந்தார். அவரது எதிர்வு கூறலை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.


இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கிய போக்கு பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி என்று நோக்கும்போது பெரிதாக திருப்தியடைய முடியாதுள்ளது. நல்ல ஆளுமைமிக்க பெண் எழுத்தாளர்கள் பலர் இன்று தலைமறைவாகி விட்டார்கள் என்ற செய்தி ஜீரணிக்க முடியாததொன்று. வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்தகால சூழ்நிலையினால் பெண் படைப்பாளிகள் பலர் இடம்பெயர்ந்து சென்றனர். எனினும் 1985, 1990 களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகளில் பெண் எழுத்தாளர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தது. இக்காலப் பகுதியில் இடையிடையே பெண்கள் தொடர்பான காத்திரமான கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற்றன.

யோகா பாலச்சந்திரனின் கொழும்பு கலைக் கழகம், கலைமகள் ஹிதாயாவின் தடாகம், புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்டம், செல்வி திருச்சந்திரனின் பெண்கள் கல்வி ஆய்வு மையம், ஜெசீமா இஸ்மாயிலின் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்ணணி, ஜயந்தி வினோதனின் வினோதன் மன்றம், சூர்யா ஆய்வு மையம் போன்றவற்றின் அனுசரணையுடன் இந்தக் கருத்தரங்குகள் நடைபெற்றன.

மலையக பெண்களின் அவலங்கள் குறித்து கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் அடிக்கடி கருத்தரங்குகள் நடைபெற்றன. ஆனால் ஏனோ அவை யாவும் அருகிவிட்டமை கவலைக்குரிய விடயமே.

இன்று உங்களைப்போன்ற இளம் எழுத்தாளர்கள் பலர் சஞ்சிகைகளின் மூலமும், வலைப்பின்னலூடாகவும் வலம் வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த இலத்திரன் தொழில் நுட்பத்தைக் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்துவது இன்று காலத்தின் தேவையாகிவிட்டது.

எனவே தமிழ் - முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர்கள் அனைவரும் இந்த நவீன தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்தி தமது படைப்புக்களை உலகறியச் செய்ய வேண்டும். அத்தோடு பெண்கள் எழுத்தாளர்கள் வலைப்பின்னலினுடாக ஓர் அமைப்பை ஏற்படுத்தி ஓரணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

பலமான ஒரு பெண் படைப்பாளர் அமைப்பு ஒன்று உருவாக வேண்டும், பெண் எழுத்தாளர்களின் சுயவிபரங்கள்; ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பன எமது நீண்ட நாள் கனவாகும். இத்துறையில் தேர்ச்சி பெற்ற உங்களைப்போன்ற பெண் படைப்பாளிகள் முன்வருவார்களா?


ஊடகம் இலக்கியத்தில் வகிக்கும் பங்கு பற்றி யாது கூறுவீர்கள்?

ஊடகமும், இலக்கியமும் இரண்டறக் கலந்த ஓர் கலவை என்பேன். ஊடகம் இல்லாத இலக்கியம் இல்லை. இலக்கியத்தை, இலக்கியவாதிகளை வாழ வைப்பதே ஊடகங்கள்தானே. ஊடகங்கள் இல்லாவிட்டால் எழுத்தாளர்களின் ஆளுமைகள் அவர்களது உள்ளத்திலேயே உறங்கிக்கிடக்கும். எழுத்தாளர்களது உள்ளக் கிடக்கைக்கு உயிர் கொடுப்பதே ஊடகங்கள்தானே. எனவே இலக்கிய வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது.



தாங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் பல சவால்களைச் சமாளித்து ஆரம்பம் முதல் இன்று வரை ஊடகத்துறையை தொழிலாகக் கொண்டியங்குவதே ஒரு பெரிய சாதனை என்பேன். நான் தினபதி - சிந்தாமணி பத்திரிகையில் ஆசிரியபீடத்தில் கடமை புரிந்த காலப்பகுதி அது. அப்பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், எனது குருவுமான பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்கள் பத்திரிகைகளில் புதுமைகளைப் புகுத்துபவர். சிந்தாமணிப் பத்திரிகையிலும் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தவர்.

மாதர் பகுதியினை விவாத மேடையாக ஆக்குவோம் எனத் தீர்மானித்தார். பெண்கள் தொழில் புரிவதால் குடும்ப நிர்வாகம் பாதிக்கப்படைகிறதா? இல்லையா?, பிள்ளைகளின் வளர்ச்சியில் பிதாவுக்கும் பங்குண்டா? இல்லையா? போன்ற தலைப்புகளில் சுவையான விவாதப் பேட்டிகளை நடத்தியுள்ளேன். அவை வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அவ்வாறே பெண்கள் மத்தியில் அன்றாடம் ஏற்படும் தவறுகளை, நிகழ்வுகளை உரையாடல்களாகச் சித்திரித்து படிப்பினையூட்டும் வகையில் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு வழங்குவேன். பத்திரிகைகளுக்கும் எழுதுவேன். இதனால் நான் பழகிய பெண்களில் பெரும்பாலானோர் என்னிடம் பிறரைப் பற்றிய குறைகளை கதைக்கவே அஞ்சினார்கள். ஐயோ உங்களிடம் கதைக்க பயமாக இருக்கிறது. அப்புறம் நீங்க இதையெல்லாம் பேப்பர்ல, ரேடியோவில போட்டிடுவீங்க என்று வெளிப்படையாகச் சொல்லியதுமுண்டு.

சமகால பிரச்சினைகளையே கவிதையாக, கட்டுரையாக, கதையாக, உரைச்சித்திரமாக நான் வடிப்பதுண்டு. இவை வாசகர், நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதனை ஒரு சாதனையாக நான் கருதாவிட்டாலும் எனது எழுத்துகளுக்கு கிடைத்த பெருவெற்றியாகக் கருதுகிறேன். எமது எழுத்துக்களை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தினால் அவை கூட வல்ல அல்லாஹ்விடம் நற்கிரியைகளாகவே அங்கீகரிக்கப்படுகின்றன.

எனவே எமது பேனாக்களை நாம் நல்லவற்றுக்கே பயன் படுத்த வேண்டும் என்ற நற்செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வரம்பு மீறாமல் ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்தால் எல்லா கௌரவமும் தன்னாலே கிட்டும்.


பண்பாடும் பெண் என்ற நூலுக்கு பிறகு வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளீர்களா?

பண்பாடும் பெண் என்ற நூலுக்கு பிறகு இன்னும் இன்னொரு நூலை வெளியிட முடியவில்லையே என்ற ஏக்கம் எனது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் நான் ஏற்கனவே கூறிய வேலைப்பளுதான் காரணம். வானொலியில் நான் பாடிய கவிதைகள், நூல்; வெளியீட்டு விழாக்களில் நான் பாடிய கவிதைகள் அனைத்தையும் தொகுத்து ஷபூஞ்செண்டு| என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை வெளியிடவுள்ளேன். அவ்வாறே நான் பல்கலைக் கழக பத்திரிகைத் துறை டிப்ளோமா பாடநெறிக்காக சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான எய்ட்ஸ் நோயும் பெண்களும், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக எழுதப்பட்ட முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு என்ற ஆய்வுக் கட்டுரை மற்றும் ஏட்டிலிருந்து ஏற்றதோர் படிப்பினை, சஹாபாப் பெண்களின் சரித்திரப் பின்னணி போன்ற பல நூல்கள் பிரசுரத்திற்காக தயாராக உள்ளன.

எனது கணவருக்கோர் நப்பாசை. எம்மிருவரினதும் நூல் வெளியீட்டு விழாவும் ஒரே மேடையில் நடைபெற வேண்டும் என்று. ஆனால் இருவருமே காலையில் வேலைக்குப் போனால் மாலையிலேயே வீடு திரும்புபவர்கள். எங்களுக்குத் தெரியாமலேயே காலம் ஓடிவிடுகிறது. அதை எண்ணி தினம் தினம் மனம் கடிந்துகொள்கிறோம். கடிகாரம் ஓடுமுன் ஓடு என்பார்கள். ஆனால் நாமோ கடிகாரத்தின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டிலாவது நம் இருவரினதும் நூல்களின் பிரசவம் நிகழ வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும். நாமிருவர் மட்டுமல்ல நமது ஒரே மகள் நூருஸ் ஷப்னா கூட கவிதைத் துறையில் ஆர்வம் காட்டி வருபவர்தான். சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவியாகத் திகழும் எனது மகள் சட்டக் கல்லூரி இந்து மகா சபை நடாத்திய கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார்.


சிறுகதைகள், நாவல்கள் போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்களா?

சிறுகதைகள், குறுங்கதைகள் போன்றவற்றை அவ்வப்போது எழுதியுள்ளேன். எனது பல சிறுகதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. ஆனால் நாவல் துறையில் நாட்டம் செலுத்தவில்லை.

எனினும் எனது அபிமான அன்புச் சோதரிகளான நயீமா சித்தீக், மாத்தளை பர்வீன், சுலைமா சமி இக்பால், ஜரீனா முஸ்தபா ஆகிய நம் நாட்டு நாவலாசிரியைகளின் நாவல்களை விரும்பிப் படிப்பதுண்டு. அத்தகையோரின் இத்தகைய பணி நீடிக்க வேண்டும் என நித்தமும் ஆசிப்பதுண்டு. முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் நாவல்துறை பட்டியலில் மேலும் பலர் இணைய வேண்டும் என விரும்புகிறேன்.


தங்களுடைய தொழில்துறை, இலக்கிய வளர்ச்சிக்கு கை கொடுப்பதாய் அமைந்திருக்கிறதா?

எனது தொழில்துறை இலக்கிய வளர்ச்சிக்கு கை கொடுப்பதாய் அமைந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கு மிகவும் சங்கடமான பதிலைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. தொழில்துறை வேலைப்பளு காரணமாகவே எனது இலக்கிய முயற்சிகள் எல்லாம் முடங்கிப்போய்விட்டன என்றே சொல்ல வேண்டும்.

ஊடகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியில் இருப்பதால் காலத்தோடு போராடும் காரிகையாகி விட்டேன் என்றே சொல்லத் தோன்றுகிறது.

கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட 13 பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த 13 செயலகப் பிரிவுகளிலும் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்ந்து அச்சக மற்றும் இலத்திரன் ஊடகங்களுக்கு மட்டுமன்றி எமது திணைக்களத்தின் தகவல் வெப் தளத்திற்கும் செய்திகளைத் தொகுத்தளிப்பது, மாவட்ட வளங்கள் குறித்த தரவுகளை கணணி மயப்படுத்துவது, தேசிய, மாவட்ட, பிரதேச ரீதியான நிகழ்வுகளுக்கு ஊடக இணைப்பாளராகச் செயல்படுவது எல்லாம் எனது அன்றாட கடமைகளாகும். தினசரி இவற்றை நிறைவேற்றவே நேரமும் காலமும் சரியாகிவிடுகிறது. மாலையில் வீட்டுக்குப் போனால் வீட்டு நிர்வாகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் எனது தொழில்துறை எனது இலக்கிய பணிகளுக்கு இடையூறு இழைக்காவிட்டாலும், வளர்ச்சியில் படிக்கட்டாகவல்ல, தடைக்கல்லாகவே உள்ளது. சுருங்கக் கூறின் இலக்கிய பணிகளை மேற்கொள்ள நேரம் கிடைப்பதில்லையே என்ற ஆதங்கம் தான். உள்ளத்தில் நிறைந்துக் கிடக்கும் கற்பனை கருக்களுக்கு எழுத்து மூலம் எப்போதுதான் உருகொடுக்க கிடைக்குமோ? என்ற இலக்கியத் தாகம், தணியாத தாகமாக உள்ளது. உத்வேகம் உண்டு. அவற்றை வெளிப்படுத்த நேரம்தான் இல்லை.



உங்கள் கணவர் கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் உங்களது இலக்கிய வாழ்வில் உந்து சக்தியாக இருக்கிறார். இதைப் பற்றி என்ன சொல்வீர்கள்?



இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இல்லறத்திலும்கூட என் உந்து சக்தியும், என் உயிரும் உரமும் எனது கணவர்தான். எனது எழுத்துலக பிரவேசத்திற்கு திருமணத்துக்கு முன்னர் எனது சகோதரர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்தான் எனக்கு பக்கபலமாக திகழ்ந்தார். தினபதி - சிந்தாமணி ஆசிரியப் பீடத்துக்கு முதன் முதலாக என்னை அழைத்துச் சென்றது முதல் என் வளர்ச்சிப் படிக்கட்டுகள் அனைத்துக்கும் காரணமானவர் என் சகோதரர்;தான். திருமணத்துக்கு முன்னர் எனது முன்னேற்றங்களின் முதுகெலும்பு என்னுயிர் பெற்றோரும், எனது உடன்பிறப்புகளும் தான்.

ஆனால் திருமணத்திற்குப் பின்னர் எனது முன்னேற்றத்தின் முதுகெலும்பு எனது கணவர்தான். எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் எனக்கு ஏணியாக, தோணியாக, அச்சாணியாக, கொழுகொம்பாகத் திகழ்கிறார். அதனால்தான் எம். நஜ்முல் ஹுசைன் என்று பன்மையில் அழைக்கப்பட்ட அவரை நான் என். நஜ்முல் ஹுசைன் என்று உரிமையுடன் அழைத்தேன். இன்று அதுவே அவரது இனிஷியலாகிவிட்டது என்றால் பாருங்களேன் எங்களது இணக்கப்பாட்டினை. ஒரு ஆணின் வெற்றியின் பின்னணியில் பெண் இருக்கிறாள் என்பார்கள். அதுபோலவே எனது வெற்றியின் பின்னணியில் எனது கணவரும் இருக்கிறார் என்பதில் நான் பேருவகையடைகிறேன். அவரில்லாமல் நானில்லை.



சிங்கள மொழியிலும் நீங்கள் இலக்கியம் படைக்கிறீர்கள். அது பற்றி சற்று விளக்குவீர்களா?

சிங்கள மொழியில் நான் முத்திங்கள் வெளியீடு ஒன்றை பிரசுரிக்கிறேன் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 2007ம் ஆண்டு முதல் இன்றுவரை கொழம்ப புவத் (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரில் சிங்கள மொழி மூல காலாண்டு பத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றேன். கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கலை, கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வெளிவரும் இப் பத்திரிகையின் பிரதம ஆசிரியையாக நானே இருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் பத்திரிகையில் நான் எழுதும் ஆசிரியத் தலையங்கள்; கூட பலரது பாராட்டைப் பெற்றன. அதிலும் குறிப்பாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூட இந்த ஆசிரியத் தலையங்கத்தைப் பாராட்டியுள்ளார். அதற்காக எனது முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் எனக்கு பாராட்டுப் பத்திரங்களைத் தந்து கௌரவித்தமை சிங்கள மொழியுடனான எனது இலக்கியப் பணிக்;குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறேன்.

அது மாத்திரமின்றி எமது திணைக்களத்தின் தெசதிய என்ற சிங்கள சஞ்சிகைக்கு நான் வழங்கிய அரசியல் பேட்டித் தொடர் ஒன்றுக்கு அரச கரும மொழிகள் திணைக்களம் இன ஐக்கியத்துக்கான ஊடக பங்களிப்பு என்ற பெயரில் எனக்கு விருதும், பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது. சிங்கள மொழியிலும் எனது நூலொன்று வெளிவர வேண்டும் என்ற வேட்கையும் எனக்குண்டு. அத்தோடு எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் நான் சிங்களத்தில் மொழிபெயரப்புச் செய்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் நாடினால் அந்த சிங்கள மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப்பும் நூலாக வெளிவரும்.



இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?

இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள் காய்தல், உவத்தல் இன்றி இருக்க வேண்டும். எழுத்தாளர்களின் உணர்வுகளை மதித்து அவரை அத்துறையில் மேம்படுத்துவதாக விமர்சனங்கள் அமையவேண்டுமே தவிர, அந்த எழுத்தாளர்களை மட்டந்தட்டும் ஆயுதங்களாக அமையக்கூடாது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். குறித்த எழுத்தாளர்களிடம் குறைபாடுகள் இருந்தால் அவற்றை மிகவும் பக்குவமாக, பவ்வியமாக எடுத்துச் சொல்லும் வகையில் விமர்சனங்கள் அமைந்தால்தான் அந்த எழுத்தாளர் மேலும் வளர, வாழ வழி பிறக்கும்.

அவ்வாறே எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் சிறந்த டொனிக்காகத் திகழ்வதும் நல்ல விமர்சனங்களும், விருதுகளும்தான். ஒரு சிறந்த படைப்பாளியைப் பாராட்டி, விருது வழங்கிக் கௌரவித்தால் அவர் மென்மேலும் நல்ல படைப்புகளைத் தருவதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். எனவே வரப்புயர நீருயர்வது போல் விருதுகள், நல்ல விமர்சனங்களால் எழுத்தாளரும் வாழ்வர், வளருவர் என்பதே என் கருத்து. ஆனால் இன்று தடியெடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரர்களாகி விட்டனர். அவ்வாறே எடுத்ததற்கெல்லாம் இன்று பொன்னாடையும் பட்டங்களும் என்றாகிவிட்டமை தான் கவலைக்குரிய விடயம். பொருத்தமானவர்களுக்கு மட்டும் உரிய கௌரவத்தை கொடுத்தால் மட்டுமே அந்த கௌரவம் சிறப்புப் பெறும்.



இதுவரை தாங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி?

கலாசார அமைச்சினால் 2006ஆம் கலாபூஷணம் விருது பெற்றமையும், 2009ம் ஆண்டு மகளிர் விவகார அமைச்சின் சர்வதேச மகளிர் தின விழாவின் போது இலங்கையின் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவினால் கௌரவம் பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அவ்வாறே அகில இன நல்லுறவு ஒன்றியம், இலக்கியத் தாரகை என்றும் தகவல் ஜோதி என்றும் இசைக்கோ நூர்தீன் ஹாஜியின் முஸ்லிம் கலைஞர் முன்னணி ஊடகத் தாரகை என்றும், பட்டமளித்து என்னை கௌரவித்தன. மலையக கலை கலாசாரப் பேரவை, ரத்னதீபம் விருதும், அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவினர், இளம் படைப்பாளர் விருதும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் மாக்கான் மாக்கார் விருதும், மத்திய மாகாண கல்வி அமைச்சு எழுத்தாளர் விருதும், கொழும்பு கலை வட்டம், சாய்ந்தமருது தடாகம், சிந்தனை வட்டம், இலங்கை சமுர்த்தி அதிகார சபை ஆகியனவும் எனக்கு விருதுகளையும் பட்டங்களையும் வழங்கி என்னை கௌரவித்தன. இந்த அமைப்புக்களுக்கு என் நன்றிக் கடன் என்றுமுண்டு.


பூங்காவனம் சஞ்சிகை பற்றிய உங்கள் கருத்து யாது?

பல மலர்கள் மலர்ந்து மணம் பரப்பும் இடம்தான் பூங்காவனம். இங்கே பெரும்பான்மையான பெண் எழுத்தாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சிறந்த அரசி பவுண்டேஷன் (Best Queen Foundation) மூலம் மகுடம் சூட்டுவது போலவே நான் உங்களின் இந்த முயற்சியை இனம் காண்கிறேன். அதிலும் குறிப்பாக இரண்டு பெண் படைப்பாளிகளே இச் சஞ்சிகையின் இணை ஆசிரியைகளாக இருப்பதுவும் தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போல மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

ஒரு நூல் பிரசவம் ஒரு குழந்தை பிரசவத்தை ஒத்தது. இங்கே நீங்கள் சஞ்சிகை வெளியிடுகிறீர்கள். குழந்தை பத்து மாதச் சுமை. நீங்களோ மூன்று மாதங்களில் சஞ்சிகையை பிரசவிக்கிறீர்கள். அதனை தொடர்ச்சியாக பிரசுரிப்பது என்பது இலங்கையைப் பொறுத்தவரை இமாலயச் சாதனைதான். உங்கள் இருவரின் இந்தப் பெரு முயற்சிக்கு முதலில் ஒரு சபாஷ் போட வேண்டும்.


பூங்காவனம் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

பூங்காவனத்தின் நறுமணத்தைச் சுவைத்திடத் தவறாதீர்கள். மூத்த படைப்பாளிகளை மதித்து நடங்கள். அவர்களது படைப்புகளைத் தேடிப் படியுங்கள். தலை குனிந்து படிப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே என்ற தாரக மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். பணிவு, கனிவு நிறைந்த ஒருவரிடம் சமுதாயம் விரும்பும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கலாம். எனவே வாசகர்களாகிய நீங்களும் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக மிளிரலாம்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment