பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

10 திருமதி. ஸக்கியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.04.06

திருமதி. ஸக்கியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மாவனல்லை தெல்கஹகொடயை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பீ.ஏ பட்டதாரியாவார். இதுவரை 04 நூல்களை வெளியிட்டுள்ள இவர் அகில இலங்கை சமாதான நீதிவான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூங்காவனம் பத்தாவது இதழுக்காக அவரை நேர்கண்டபோது பகிர்ந்துகொண்ட விடயங்களை வாசகர்களுக்கு தருகிறோம்.



உங்கள் இலக்கியப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

எனது தந்தை தினமும் பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ளவர். சிறு வயதிலிருக்கும் போதே என்னையும் பத்திரிகை வாசிக்கத் தூண்டினார். விடுமுறை நாட்களில் தந்தையின் முன்னால் இருந்து பத்திரிகை வாசித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. தினகரன் வார இறுதியில் வெளியாகும் சிறுவர் மலர் என்ற பகுதியை விரும்பி வாசிப்பேன். அதிலுள்ள ஆக்கங்களை வாசிக்கும்போது எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

வெண்ணிலாவே என்று தலைப்பிட்டு ஒரு சிறு பாடலையும், கிராமக் காட்சி என்ற ஆக்கத்தையும் எழுதினேன். அதனை தபாலில் சேர்க்க தந்தை உதவினார். அடுத்தடுத்த சிறுவர் மலர்களில் அவை வெளிவந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தேன். எனது தந்தை என்னைப் பாராட்டி ஒரு பேனையை பரிசாக தந்தார். அதுவரை பென்சிலால் எழுதிய எனக்கு பேனாவால் எழுதக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. இதனையே எனது இலக்கியப் பிரவேசமாகக் கருதுகிறேன்.


உங்களது முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள்?

எனது பெற்றோருக்குப் பின் மத்ரஸாவில் எனக்கு குர்ஆனைக் கற்றுத் தந்த ஹிங்குலோயாவைச் சேர்ந்த முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் மிகவும் அழகான முறையில் தலைப் பாத்திஹா, மவ்லூது, பைத்களைச் சொல்லித் தந்தார். அல்குர்ஆனில் காணப்படும் எதுகை, மோனை, சந்தம் என்பன என்னைக் கவர்ந்தன. அத்தோடு எனது கல்விக் கண்களைத் திறந்துவிட்ட எல்லா ஆசான்களும் ஏதோ ஒரு வகையில் எனது முன்னோடிகளாகின்றனர்.


உங்களது இலக்கியப் பணி, எழுத்துப் பணிகளின் வளர்ச்சிப் போக்கு எத்தகையது?

நான் சிறு வயதிலிருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தேன். படிக்கும் காலத்தில் மாணவர் மன்றத்தில் பாடுவேன். பேசுவேன். கதை சொல்வேன். போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளேன். உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்கும் காலத்தில் கலா மன்றத்தால் வெளியிடப்பட்ட தேனருவி என்ற கையெழுத்து சிற்றிதழை எழுத கல்லூரியில் பணிபுரிந்த பண்டிதர் சிவசம்பு என்ற ஆசான் என்னை வழிப்படுத்தினார். ஏனைய ஆசான்களினதும் நெறிப்படுத்தலின் கீழ் எழுதுவதற்கு களமமைத்துக் கொண்டேன்.

1985 களுக்குப்பின் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு பிரதிகள் எழுதவும், பங்கு பற்றவும் சந்தர்ப்பம் கிட்டியது. கொழும்புப் பல்கழைக் கழகத்தில் நான் டிப்ளோமா பட்டப்பின் படிப்பு நெறியை மேற்கொள்ளும்போது சமூகவியல்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்த மதிப்புக்குரிய பூமணி குலசிங்கம் அவர்கள் இன ஐக்கியம் சம்பந்தமான கலந்துரையாடல்களுக்கு என்னை இலங்கை வானொலிக்கு அழைத்துச் சென்றார். அப்போது நிகழ்ச்சிக்கான பிரதிகளையும் எழுதிப் பங்கு பற்றினேன்.

அத்துடன் இலங்கை வானாலி முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் பகுதிக்கு பல வருடங்களாக பிரதிகள் எழுதியதுடன் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியும் வந்தேன். முன்னைய நாள் முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர்களாகப் பணிபுரிந்த எனது அன்புக்குரிய மாணவன் நூராணியா ஹசன், அல்ஹாஜ் எம்.இஸட். அஹமட் முனவ்வர் அவர்களும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சகோதரி புர்கான் பீ. இப்திகார் அவர்களும் இதற்கான சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்தனர். அவர்களை நன்றியோடு ஞாபகப்படுத்துகிறேன்.


இதுவரை நீங்கள் எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள். அதுபற்றி கூறுங்கள்?

இதுவரை 04 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். நான் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில் விழிப்பு என்ற சிற்றிதழை மாணவர் ஆக்கங்களைக் கொண்டதாக வெளியிட்டேன். 


நான் எழுதிய முதலாவது நூல் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற தலைப்பில் எழுதிய ஓர் ஆவண நூலாகும். இந்நூல் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இந்நூலை எழுதுவதற்கு என்னை ஆர்வப்படுத்தியவர் அன்று ஸாஹிராவின் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களாவார். இந்நூலை எனது அறிவுக் கண்களை திறந்துவிட்ட ஆலிம் முஹம்மது லெப்பை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

எனது இரண்டாவது நூல் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், கஷ்டங்களைப் பிரதிபலிக்கும் 16 சிறுகதைகளைத் தொகுத்துள்ளேன். இச் சிறுகதைகளுக்கான கருக்கள் அனைத்தும் யதார்த்தமானவையாகும். இந்நூலை எனது அருமைப் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

மூன்றாவதாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுப்பில் தம்பிக்கு, தங்கைக்கு, தோழிக்கு போன்ற தலைப்பிட்ட சில கவிதைகளோடு சமாதானம், தாலாட்டு, அகதி, தேயிலைத் தோட்டப் பெண் என்ற தலைப்பில் கவிதைகளும், மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கு ஓர் அஞ்சலிக் கவிதையும், எனது அன்புக்குரியதொரு மாணவனுக்கு ஓர் அஞ்சலிக் கவிதையுமாக எழுதி இத்தொகுப்பை பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முதலாவது அதிபர் ஆயிஷா ரவூப் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். 

முதிசம் என்ற தலைப்பிட்ட எனது நான்காவது நூல் நான் கணவனை இழந்து இத்தா அனுஷ்டிக்கும் காலப் பகுதியில் எழுதியதாகும். இது 2500க்கும் மேற்பட்ட மொன்மொழிகளை உள்ளடக்கியதொரு தொகுப்பாகும். இதனை எனது அன்புக் கணவர் அப்துர் ரஸாக் பரீத் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.

ஐந்தாவது நூலாக பொது அறிவுக் களஞ்சியம் என்ற தலைப்பில் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது. 


நூல்களை வெளியிடும்போது நீங்கள் சந்தித்த சவால்கள்?

எல்லோரும் சொல்வார்கள் ஒரு நூலை வெளியிடுதல் என்பது, ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போன்று கஷ்டமானது என்று. அதைத்தான் நானும் சொல்ல வேண்டும். நான் ஒரே மேடையில் மூன்று நூல்களை வெளியிட்டு வேலையை இலகுவாக்கிக் கொண்டேன். எனது முதலாவது நூல் வெளியீடு கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் 2004ல் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழ்தின விழாவின் ஓர் அங்கமாக நிறைவேறியது. 


அன்று பிரதமராக இருந்த மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகவும், இந்தியாவிலிருந்து கவிக்கோ அப்துல் ரஹ்மான், பேராசிரியை பர்வீன் சுல்தானா போன்றோர் சிறப்பதிதிகளாகவும், நாடறிந்த தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் பார்வையாளர்களாகவும் வருகை தந்திருந்த அச்சிறப்பான விழாவில் எனது முதலாவது நூலை வெளியிடக் கிடைத்தமையை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்நூல் மூலம் என்னை மிகவும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஸாஹிராக் கல்லூரிக்கு நன்றி பாராட்டுவது எனது கடமையாகும்.

அடுத்த மூன்று நூல்களையும் வெளியிடுவதற்கு நான்z பலரிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது. பெண்களைப் பொறுத்தவரை நூல்களை எழுதலாம். ஆனால் வெளியீடு என்பதில் அலைந்து திரிவது சிரமமான காரியம் என்று நினைக்கிறேன். இறைவனின் கிருபையால் எனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ யின் தலைமைப் பீடம் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஞாபகார்த்த மண்டபத்தை வழங்கி உதவி செய்தது. ஏ.எல்.எம். இப்றாஹிம், என்.எம். அமீன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வை வை.எம்.எம்.ஏ. யின் மாதர் பிரிவாகிய வை.டப்ளியு.எம்.ஏ. யின் தலைவி மக்கியா முஸம்மில், திருமதி ஸித்தீக், பவாஸா தாஹா மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்பாடு செய்து தந்தார்கள்.

இலங்கை முற்போக்கு இஸ்லாமிய இலக்கியச் சங்கத் தலைவர் மருதூர் ஏ. மஜீத், செயலாளர் டாக்டர். தாஸிம் அஹமத், ஊடகவியலாளர் எம்ஏ.எம். நிலாம், கலைவாதி கலீல் போன்ற சகோதரர்கள் விழாவை சிறப்பாக நடாத்தி நூல்களை வெளியீடு செய்து, எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமும் தந்தார்கள் என்பதை நன்றியோடு கூறுகிறேன். மண்டபம் நிறைந்த எனது அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் இப்போதும் என் கண்முன்னே தோன்றுகிறார்கள்.


படைப்புகளுக்கான விமர்சனங்களை எப்படி நோக்குகிறீர்கள்?

விமர்சனங்கள் கட்டாயம் அவசியமானது. விமர்சனங்கள் இருந்தால்தான் படைப்பாளிகளால் முன்னேற முடியும். ஆனால் விமர்சனங்கள் குறை கூறுவதாக மட்டும் இருக்கக் கூடாது. குறைகளோடு நிறைகளும் பேசப்பட வேண்டும். அப்போதுதான் படைப்பாளிகள் மேலும் ஊக்கமடைவார்கள். உதாரணத்துக்கு ஒரு புறாவைப் பறக்கவிட்டு கைகளைப் பலமாக தட்டும் போது புறா மேலே மேலே உயர்ந்து பறப்பதைப் போல கலைஞர்களையும் பாராட்டப் பாராட்ட அவர்கள் உயர் நிலைக்குச் சென்று சமூகத்திற்குப் பயனுள்ள படைப்புக்களை வழங்குவார்கள். அத்தோடு படைப்பாளிகளைப் பொறுத்தவரை போட்டி போட்டு முன்னேறலாம். ஆனால் மற்றொருவரை வீழ்த்துவதற்கு எத்தனிப்பதும், பொறாமைப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டியவைகளாகும்.


எதிர்காலத்தில் எத்தகைய இலக்கிய பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ளீர்கள்? 

சிறுவர் இலக்கியங்களின் வளர்ச்சி போதாது என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் பெண்கள் சம்பந்தமான வலுவூட்டல், சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கப் பணிகளோடு சிறுவர் இலக்கியம் சம்மந்தமாகவும் கவனத்தைத் திருப்ப நினைத்துள்ளேன்.


நீங்கள் பல வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளீர்கள். இன்றைய மாணவர்களின் இலக்கியப் போக்கு? எழுத்துத்துறை பற்றி என்ன கூறுவீர்கள்?

இன்றைய மாணவர்களின் இலக்கியம், எழுத்து, வாசிப்புத் துறைகள் கவலைக்கு இடமானதாகவே காணப்படுகின்றது. வாசிப்பு என்பது மாணவர்களைவிட்டு வெகு தூரமாகி விட்டது. மாணவர்கள் தொலைக்காட்சி, மின்னஞ்சல், சினிமா என்று வீண் பொழுது போக்குகளில் நேரத்தை வீணடிப்பதைக் காண்கிறோம். இலக்கியம் எழுத்துத் துறை வளர்ச்சிக்குப் பதிலாக இன்றைய மாணவர்களிடையே விரும்பத்தகாத மாற்றங்களும், துர்நடத்தைகளும் மலிந்துவிட்டன.

மாணவியர் ஓரளவு இலக்கியம், எழுத்துத் துறைகளில் ஈடுபாடு காட்டினார்கள். அண்மைக் காலங்களில் அவர்களும் கையடக்கத் தொலைபேசிகளோடும், டியூஷன் கலாச்சாரத்தோடும் தமது காலநேரத்தை வீணடிக்கும் போக்கைக் காண முடிகிறது.

பன்முக ஆளுமை கொண்டவர்களாக மாணவ சமுதாயத்தை மாற்ற பெற்றோரும், ஆசான்களும், சமூகமும் முன் வரவேண்டியது அவசரமும் அவசியமுமாகும் எனக் கருதுகிறேன்.


இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?

* நான் பாடசாலையில் கற்கும் காலத்தில் மாகாண, மாவட்ட மட்டப் பரிசில்கள் பெற்றுள்ளேன். நான் கல்வி கற்ற, கற்பித்த உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலய மண்டபத்தில் உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் கீழ் இயங்கும் ப்ரியநிலா இலக்கிய வட்டம் 2005 இல் எனக்கு இலக்கியத் தாரகை என்ற பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.

* 2009 இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய கலை இலக்கிய மகோற்சவத்தின் நிமித்தம் நடாத்திய கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும், நற்சான்றிதழும் கிடைத்தது.

*  இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டிணம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் அனைத்திலும் பங்கு பற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.

* 2006 இல் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆளுனர் சபை நல்லாசிரியர் விருது வழங்கி என்னை கௌரவித்தது. எனது 28 வருடகால ஆசிரியப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அதனைக் கருதி மனத்திருப்தி கொள்கின்றேன்.

* இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தில் தொடர்ந்து 30 வருடங்கள் சேவை புரிந்த என்னை அச்சங்க உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

* 2011 இலங்கை அரசாங்கத்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற கலாபூஷண விருது கலாச்சார அமைச்சால் எனக்கு வழங்கப்பட்டது.

* 2011 இல் அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் மூலம் சாமஸ்ரீ, தேசமான்ய விருதுகள் கிடைத்தன.

* 2012ல் அகில இலங்கை மனித உரிமை அமைப்பின் நான்காவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் சேவைக்கான விருதும், தங்கப் பதக்கமும், நற்சான்றிதழும் கிடைத்தன.

என்னைப் பொறுத்தவரை பட்டம், பதவிகள், கௌரவங்களை விட மேலும் என்னைத் தகுதியாக்கிக் கொள்வதும், சமூகத்திற்குச் சேவை செய்வதுமே எனது நோக்கமாகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment