பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

09. திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களுடனான நேர்காணல்

திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களின் குடும்பச் சூழல், வாழ்வுநிலை பற்றி கூறுங்கள்?

எனது தந்தையாரின் பெயர் சின்னத்துரை. தாயாரின் பெயர் கமலாம்பிகை. நான் மலேசியாவில் 1948 ஆம் ஆண்டு பிறந்தேன்;. எனக்கு இரு மகள்மாரும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணமாகி இரு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். நான் மக்கள் வங்கியில் முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன்.


எழுத்துத்துறைக்குள் தாங்கள் காலடி எடுத்து வைக்க முன்னோடியாக இருந்தவர்கள் பற்றி?


சிறு வயதில் கதைகள் கூறி அதில் ஒன்றவைத்த என் பேரனாரைத்தான் முதல் காரணகர்த்தாவாகச் சொல்வேன். அடுத்துப் பல சஞ்சிகைகளை வாங்கி தானும் வாசித்து, என்னையும் வாசிக்கப் பழக்கிய என் தாயார். தமிழில் ஆர்வங்கொள்ள வைத்த எனது தமிழாசிரியர் வித்துவான் நவரத்தினம் அவர்கள். எனது ஆரம்பகால எழுத்துகளை வெளிவரச்செய்து ஊக்கமளித்த திரு. வ.இராசையா, திரு. மனோகரன் மயில்வாகனம், திரு. இ.சங்கர் முதலியோரைக் குறிப்பிடலாம்.


சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

சிறுகதைகளை வாசித்து வந்த எனக்கு நானும் எழுதினால் என்ன என்றோர் எண்ணம் இயல்பாகவே ஏற்பட்டது. வேறு குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நடந்ததாக நினைவில்லை.


சிறுகதைத் துறையில் ஈடுபட்டுவரும் நீங்கள் இதுவரை எத்தனை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள்? அவை யாவை?

இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். தற்போது 'இன்னும் பேசவேண்டும்' என்னும் ஒரு தொகுதியை வெளியிட ஆவன செய்துகொண்டிருக்கிறேன். ஏற்கனவே வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகள் உணர்வின் நிழல்கள் (1997), ஈன்ற பொழுதில் (1999), கணநேர நினைவலைகள், மனம் விந்தையானதுதான் (2006) ஆகியனவாகும்.
இவற்றைவிட அரை நிமிட நேரம் என்னும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி, உனக்கொன்றுரைப்பேன் (2009) என்னும் பெண்களுக்கு அறிவுரை கூறும் கடித இலக்கியம், நடைச்சித்திரத் தொகுப்பான எண்ணிலாக்குணமுடையோர் (2010), சமயம் சார்ந்த முன்னோர் சொன்ன கதைகள் (2011) ஆகிய எனது ஆக்கங்களையும் இருபாலைச் சேனாதிராய முதலியாரின் ஆக்கங்களின் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளேன்.

தாங்களின் ஆரம்பகாலப் படைப்புகளுக்கும், தற்போதைய படைப்புகளுக்கும் இடையில் எவ்வகையான வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?


அதிகமான வித்தியாசங்களை அவதானிக்கிறேன். ஆரம்பகாலக் கதைகளில் சிறுபிள்ளைத்தனமான எழுத்து, வாழ்வின் அனுபவங்கள் குறைவாகப் பிரதிபலிப்பது எனப் பல குறைகளைக் கூறலாம். இன்றைய எனது எழுத்திலும் எனக்கு முழுமையான திருப்தியில்லை. மேலும் சிறப்பாக எழுதியிருக்கலாமே என்றே எண்ணுவேன்.


இதுவரை கிடைத்த விருதுகள் பற்றி?

பெற்ற விருதுகளாக - சார்க் மகளிர் அமைப்பு (ஸ்ரீ லங்கா) சிறுகதை (தமிழ்) முதற்பரிசு

கனகசெந்தில் கதாவிருது, சிரித்திரன் சுந்தர் விருது, தகவம் பரிசு, பூபாள ராகங்கள் பரிசு போன்றவற்றைக் கூறலாம்.


சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள்; உள்ளடக்கப்படுகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என எண்ணுகின்றீர்களா?

நடைபெறுகின்ற நிகழ்வுகள் கருவாக அமையும் வேளையில் யதார்த்தமாக இருக்கவேண்டும் எனக் கூறினாலும் சில அதீத கற்பனைகள் கதைகளாகும் போது அங்கு யதார்த்தத்தைக் காண்பது இயலாது. உதாரணமாக எனது காத்திருப்பு என்ற கதை, இங்கு போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது எழுதப்பட்டது. அதில் போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் வேகமாகப் புனரமைக்கப்படுவதைக் கற்பனை செய்திருக்கிறேன்.

வெளிநாடு சென்றவர்கள் போட்டியிட்டு மீள வருவதாகக் கற்பனை செய்திருக்கிறேன். கற்பனை மெய்ப்படவேண்டும் என்ற கதையிலும் 2000ஆம் ஆண்டிலேயே அற்புதமான ஒரு யாழ்ப்பாணத்தைக் கற்பனை செய்தேன். இன்னும் அவை யதார்த்தமாகவில்லை. எனவே நான் உங்கள் கூற்றை ஒப்புக்கொள்ள முடியாதல்லவா? இதே போன்று விஞ்ஞான ரீதியாக எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வு ஒன்றைக் கருவாகக் கொண்டு எழுதப்படும் கதைகளையும் கூறலாம்.


சிறுகதைகளுக்கான கருப்பொருளை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றீர்கள்?

நாளும் பொழுதும் வாழ்க்கையில் சந்திக்கும் ஏதோ ஒன்று அடிமனதைத் தொட்டு மறக்கமுடியாத ஒன்றாகிப்போய் அதை எழுதித்தானாகவேண்டும் என்ற உந்துதலோடு கதையாகிறது. இப்படியில்லாமல் எழுதிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக எழுதுபவை கனதியற்றுப் போவதாய் நான் உணர்வதுண்டு.


சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?

நான் எழுதும்போதுகூட இந்தக் கதைக்கு இந்த இந்த அம்சங்கள் அமையவேண்டுமென எதையும் வரையறுத்துக்கொள்வதில்லை. இலக்கணத்தின்படி இலக்கியம் அமையவேண்டுமென வரையறுக்கக் கூடாதென்றே நான் நினைக்கிறேன்.



சிறுகதைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்கள் கருத்து யாது?


பல நல்ல சிறுகதைகள் வெளிவருகின்றன. ஆனால் பல்வேறு காரணங்களால் போதிய முதிர்வடையாதவையும் இடம்பிடித்துக் கொள்கின்றன. தேக்க நிலையைவிடப் பின்னோக்கிச் செல்கின்றோமோ என்ற அச்சமும் சிலவேளைகளில் தலை நீட்டுகின்றது.


எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக நீங்கள் வாசிக்கிறீர்கள்? ஏன்?

தற்போது நான் சமய நூல்களையே விரும்புகின்றேன். வயோதிபம் காரணமாகவிருக்கலாம்.



வளர்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

எல்லோரும் கூறும் ஒன்றுதான். முதலில் நிறைய வாசியுங்கள். உங்கள் கதையைப் பட்டை தீட்டி ஒளிரச் செய்யுங்கள். பத்திரிகை பிரசுரிக்காது விடுவதால் உங்கள் கதை தரமற்றது என்றெண்ணி நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். அவர்களாலும் வரும் கதைகள் எல்லாவற்றையும் வெளியிடவியலாதுதானே. தொடர்ந்து முயலுங்கள். வெற்றியடைவீர்கள்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

தாங்கள் என்னைப் பேட்டி காண எண்ணியது எனக்கு வியப்பைத் தந்தது. இச்சந்தர்ப்பத்திற்கு முதலில் நான் நன்றி கூறுகிறேன். அடுத்து சஞ்சிகை நடத்துவது சவால்மிக்கதாக இருக்கும்போது அதில் காலூன்றி இலக்கியப்பணி புரியும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment