பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

06. திருமதி. நயீமா சித்தீக் அவர்களுடனான நேர்காண

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.07.28

திருமதி. நயீமா சித்தீக் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




இலங்கையின் மலையகத்தில் பதுளை - ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் பண்டாரவளை சாஹிராக் கல்லூரி, ஹப்புத்தளைத் தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி, பசறை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக் கலைமாணிப் பட்டத்தையும், கல்வித் துறை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

1960 களில் 7ஆம் வகுப்பிற் கற்கும்போது கல்வி எனும் தலைப்பில் இவர் எழுதிய முதல் ஆக்கத்தை தினகரன் பிரசுரித்தது. அதனைத் தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள், குட்டிக்கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டார்.

இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு நயீமா ஏ. பஷீர் என எழுதிவந்த இவர் திருமணத்தின் பின்பு நயீமா சித்தீக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். 1970 ஆம் ஆண்டில் ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ளார். அவரிடமிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களை பூங்காவனம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.


இலங்கையின் முன்னணி முஸ்லிம் பெண் சிறுகதை எழுத்தளரான உங்களின் குடும்பச்சூழல், வாழ்வுநிலை பற்றி கூறுங்கள்?

அழகிய இயற்கை எழில் கொஞ்சும் ஹப்புத்தளை என்ற பிரதேசமே எனது ஊராகும். எனது தாயார் தாஜ் பீபி. தந்தை அப்துல் பஷீர் மரிக்கார். கணவர் முஹம்மத் சித்தீக். பிள்ளைகள் பாத்திமா சியாமா, பாத்திமா ஷகீமா, பாத்திமா ஸஹ்ரானா. எனது பாட்டி, தாய் இருவருமே நிரம்பிய வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள். பாட்டியின் சேமிப்பாக இருந்தவை பல்வேறு வகைப்பட்ட இஸ்லாமிய இலக்கியங்கள். மிகவும் கவனமாகவும் பயபக்தியுடனும் அவர் அவற்றைப் பாதுகாத்தார். தாய், பாட்டி இருவருமே வாராந்த, மாதாந்த தமிழ் சஞ்சிகைகள் அனைத்தையும் வாங்கி, தவறாது வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

கல்கி, அகிலன், ந. பார்த்தசாரதி, லக்ஷ்மி, கி.வா. ஜகன்னாதன், சாண்டில்யன், ஜெயகாந்தன், மு.வ என்று எல்லோரது நாவல்களையும் வாசிப்பதோடு நின்றுவிடாமல் சிறந்த விமர்சகராவும் எனது தாய் இருந்ததை நினைத்து நான் வியப்பதுண்டு. ஏனென்றால் அதிகம் வெளியே செல்லாத, எட்டாம் வகுப்பு வரையே அதுவும் ஆங்கில மொழி மூலம் கற்ற அவரால் இவற்றை எப்படிச்செய்ய முடிந்தது என்பதுதான்.


எழுத்துத்துறைக்குள் தாங்கள் காலடி எடுத்து வைக்க முன்னோடியாக இருந்தவர்கள் பற்றி?

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நான் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றதும் தமிழ் மீதுள்ள ஆசை துளிர்க்க இறைவன் வழிவகுத்தான். (அல்ஹம்துலில்லாஹ்) தொடர்ந்து பசறை மத்திய கல்லூரியின் விடுதி வாழ்க்கை, அங்கே சிந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, நல்ல நூலகம் ஆகியனவும் என் எழுத்துத் துறையில் பாரிய பங்களிப்புச் செலுத்தியுள்ளன. அத்துடன் பசறை மத்திய கல்லூரியின் தமிழ் ஆசிரியர் மதிப்பிற்குரிய அமரர் ஐ.சாரங்கபாணி அவர்களும் என் எழுத்துத் துறையின் முன்னோடியாவார்.

அவரது சொந்த நூல்களை வாசிக்கக் கொண்டு வந்து தருவார். அடிக்கடி போட்டிகளை நடாத்தி அவரது சொந்தப் பணத்தில் பரிசுப் புத்தகங்களை வாங்கித்தருவார். அவரால் தரப்பட்ட ஏராளமான தரமான புத்தகங்கள் இன்றும் என்னிடம் உள்ளன.

இந்த உதவும் கரங்களையும், வழிகாட்டிகளையும் இறைவன் எனக்கு அளித்தான்.


சிறுகதைத் துறை, நாவல் துறைகளில் ஈடுபட்டுவரும் நீங்கள் இதுவரை எத்தனை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள்? அவை யாவை?

எனது சிறுகதைகளை பொதுவாக இலங்கையின் எல்லாத் தமிழ் வெளியீடுகளும் பிரசுரித்தன. கட்டுரைகள் பல நூற்றுக் கணக்காக வெளிவந்தன. அவ்வப்போது கவிதைகளையும் எழுதினேன். நான் இதுவரை எழுதிவெளியிட்ட நூல்கள் பின்வருமாறு:-

1. வாழ்க்கைப் பயணம் (1975) - நாவல்
(வீரகேசரி பிரசுர வெளியீடு)

2. வாழ்க்கைச் சுவடுகள் (1989) -
01 ஆவது சிறுகதைத் தொகுதி
(கல்ஹின்னை தமிழ் மன்ற வெளியீடு)

3. வாழ்க்கை வண்ணங்கள் (2004) -
02 ஆவது சிறுகதைத் தொகுதி
(உடதலவின்னை சிந்தனை வட்ட வெளியீடு)

4. வாழ்க்கை வளைவுகள் (2005) -
03 ஆவது சிறுகதைத் தொகுதி
(மணிமேகலைப் பிரசுரம்)

5. ஆயிரம் வினாக்களும் விடைகளும்
(தமிழ் பாட நூல்)

6. சீறாப்புராணம் நபி அவதாரப் படலம்
(தமிழ் பாட நூல்)


வானொலித் துறையில் உங்களது பங்களிப்பு பற்றி?

தரம் 9 படிக்கும் போது வானொலி கலைஞர் தேர்வில் தெரிவானேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினேன். பின்னர் பிரதிகளை எழுதினேன். மாதர் மஜ்லிஸ் உரைச் சித்திரங்கள், நாடகங்கள் என்பவற்றை எழுதினேன். பல வானொலி கவியரங்குகளில் பங்குபற்றினேன்.

சாதாரண தரம் படிக்கும்போது வானொலிக்காக நான் எழுதியனுப்பிய முதல் பேச்சுப் பிரதி பாத்திமா நாயகியின் அடிச்சுவட்டில் என்பது. அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பேசுவதற்கான நேரம், திகதி, கொடுப்பனவு என்பன குறிக்கப்பட்டு அழைப்புக் கடிதம் வந்ததையும் எனதுயிர் பாட்டியுடன் சென்று ஒலிப்பதிவு செய்ததையும் மறக்கத்தான் முடியுமா? அல்ஹாஜ் கபூர், இஸட்.எல்.எம். முஹம்மத், குத்தூஸ் போன்ற பெரியார்கள் எனக்கு வழிகாட்டியதை இப்போதும் நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன். தொடர்ந்து வானொலிக் கதவுகள் எனக்காகத் திறந்துவிடப்பட்டன.



சிறந்த மேடைப் பேச்சாளராக இருக்கும் நீங்கள் அந்த அனுபவங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பொது மேடைகளைப் பொறுத்தவரையில் எனது முதல் பேச்சு நான் ஆண்டு ஒன்று படிக்கும் போது ஒரு ஆசிரியரின் பிரியாவிடையின் போது ஒரு வாங்கின் மேல் ஏறி நின்று பேசியதுதான். நான் கற்ற பாடசாலைகள் மேடைகளை விசாலித்துத் தந்தன. பசறை மத்திய கல்லூரி மாதிரி பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவி என்ற பதவி எனக்கு நிறைய வாய்ப்பைத் தந்தது. அக்கல்லூரியில் அக்காலத்தில் வருடாந்தம் பெரிய அளவில் இயல், இசை, நாடகம் என மூன்று நாட்களுக்கு முத்தமிழ் விழா நடக்கும். எத்தனை பிரமாண்டம்? எத்தனை நிகழ்வுகள்? எத்தனை பெரியோர்களின் வரவுகள்? மர்ஹூம்களான ஈழமேகம் பகீர் தம்பி அ.ஸ. அப்துஸ்ஸமது ஆகியோர்கள் மேடையில் பேசியவை இன்னும் பசுமையான நினைவுகளே.


தாங்களின் ஆரம்பகாலப் படைப்புக்கள் பெருமளவு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை பிண்ணனியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதற்கான காரணம் யாது?

பதினாறாவது வயதில் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் அகில இலங்கை பெண்கள் பிரிவின் தலைவியானேன். பொதுவாக மத்திய மலை நாட்டில் நான் ஏறியிறங்காத தோட்டங்கள் இருக்கவே முடியாது. காங்கிரஸ் கூட்டங்கள் மாத்திரமல்லாது பல்வேறு மன்றங்களின் கூட்டங்களுக்கும் சென்று உரையாற்றி இருக்கிறேன். அரச பாடசாலையில் ஆசிரியராகுமுன் அசோகா கல்லூரி என்று ஒரு பாடசாலையை நானே ஆரம்பித்தேன். தோட்டப்புறத்து மாணவர்கள் இதில் கல்விகற்றனர். இவ்வாறான அனுபவங்கள்தான் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்வியலை படைப்புகளுக்கூடாக சொல்ல காரணமாக இருந்தது எனலாம்.



ஊடகத்துறையில் உங்களுக்கிருந்த தொடர்பு பற்றியும், இதுவரை உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றியும் குறிப்பிடுவீர்களா?

ஆரம்பத்தில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஹப்புத்தளை பிராந்திய நிருபராக கடமை புரிந்துள்ளேன்.

இதுவரை கிடைத்த விருதுகள்...

1. நஜ்முல் அதீப் (இலக்கியத் தாரகை)
1991 முஸ்லிம் சமயக் கலாசாரத் திணைக்களம்
2. சிறுகதை செம்மணி - 2004 சிந்தனை வட்டம்
3. கலாபூஷணம் - 2005 இலங்கை அரசு

அவ்வப்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு, அரசுசார்பற்ற அமைப்புக்களால் பொன்னாடை, பொற்கிழி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளேன்.



இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எமது பணி ஒரு அற்பத்துளியாக இருந்தாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதும், எழுத்தும் பேச்சும் எவ்வழிகளிலாவது மக்களுக்கு உதவ வேண்டுமென்பதுமே எனது நோக்கம். நமது எந்தச் செயல் சுயநலமில்லாததாக இருக்கிறதோ நிச்சயமாக அதற்கு சமூக அங்கீகாரம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நல்லது செய்தோம் என்ற மனநிறைவு கிடைக்கும்!!!



நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment